Sunday, January 21, 2018

.

அடையாளத்தையே இழந்து போய் நிற்கும் அட்டப்பள்ளம் கிராமம்!…. செ.துஜியந்தன்.

அடையாளத்தையே இழந்து போய் நிற்கும் அட்டப்பள்ளம் கிராமம்!…. செ.துஜியந்தன்.

 

“எங்கள இந்தக் கிராமத்த விட்டு அடியோடு விரட்டியடிக்க சதித்திட்டம் நடக்குது. கரையான் புற்றுப்போல கொஞ்சம் கொஞ்சமாக கிராமத்த அரிச்சுப்போட்டாங்க. இப்ப எங்கட சவக்காலைப் பூமியையும் அபகரிக்காங்க. பரம்பரை பரம்பரையாக எங்கட மூதாதையரை அடக்கம் செய்த சவக்காலையை எங்கிருந்தோ வந்த ஒருவர் அது அவரிட பூமியாம் எண்டு அடைச்சு வேலியும் போட்டுத்தார். செத்தவங்கள புதைக்கிறத்துக்கு கூட இடம் இல்லாமப்போகும் போல கிடக்குது. அட்டப்பள்ளம் மக்கள் செத்தா இனி கடல்லதான் தூக்கிப்போட வேணும் போல இருக்குது. எங்கட கிராமத்தையும் சவக்காலை பூமியையும் காப்பாற்றித்தாங்க”

இது அட்டப்பள்ளம் கிராம மக்களின் ஒரு மித்த வேண்டுகோளாய் இருக்கிறது.

இக் கிராமதிலுள்ள சவக்காலை பூமியை நிந்தவூரைச் சேர்ந்த முஸ்லிம் பேராசிரியர் ஒருவர் இது தனது காணி என்று கூறி அங்கிருந்த 12 ஏக்கரை சவக்காலைக்கு நடுவினால் வேலி போட்டு அடைத்து. அதில் கட்டிடங்களை கட்டிவருகின்றார். தற்போது எஞ்சியிருக்கும் இரண்டு ஏக்கர் சவக்காலை பூமியையும் கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதனைக் கண்டு அட்டப்பள்ளம் தமிழ் மக்கள் கொதித்தெழுந்துள்ளனர்.

இப்படித்தான் அம்பாறை மாவட்டத்தில் பல தமிழ் கிராமங்கள் திட்;டமிடப்பட்ட வகையில் கைப்பற்றப்பட்டு கடந்த காலங்களில் முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ள வரலாற்றுச் சம்பவங்கள் நடந்தேறியுள்ளது. தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றி பேசும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரசும் இவ்வாறான சம்பவங்கள் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. குறிப்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு அம்பாறை மாவட்ட தமிழர்களை கைவிட்ட நிலையிலேயுள்ளது. பேரளவில் தேர்தல் காலத்தில் மட்டும் அரசியல் செய்கிறது.

அட்டப்பள்ளத்தில் எல்லாம் பறிபோன பின்னர். இருக்கின்ற சவக்காலையையும் இழக்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு மக்கள் வந்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச செயலகப்பிரிவில் அமைந்துள்ளது அட்டப்பள்ளம் கிராமம். ஒரு காலத்தில் தேனாறும் பாலாறும் தெவிட்டாத தேவார திருவாசகங்களும் ஓங்கி ஒலித்த பழம் பெரும் தனி தமிழ்க் கிராமமாக அட்டப்பள்ளம் கிராமம் இருந்துள்ளது.

தற்போது நாட்டில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இவ் உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் மக்களை இனரீதியாகவோ, மதரீதியாகவோ, மொழி ரீதியாகவோ அந்தந்த மக்களை பலிக்கடாவாக்குகின்ற அல்லது சூடேற்றுகின்ற எந்தவொரு விடயங்களிலும் அரசியல்வாதிகளும், தனிநபர்களும் ஈடுபடக்கூடாது என தேர்தல் ஆணைக்குழு தலைவரும் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த காலங்களில் மக்களை உசுப்பேற்றி உசுப்பேற்றி இந்நாட்டில் பட்ட துன்ப துயரங்கள் போதும். இனியும் அவ்வாறான சம்பவங்கள் நடைபெறக்கூடாது.

எங்கெல்லாம் மக்கள் வாழ்கின்றார்கலோ அங்கெல்லாம் பாரம்பரிய வரலாறுகளைக் கொண்ட கிராமங்களும், அங்குள்ள கலை, கலாசார பண்புகளும் மக்களும் பாதுகாக்கப்படவேண்டும். அவ்வாறான பழமையான கிராமங்கள் அபிவிருத்தியை நோக்கிச் செல்லவேண்டும். அதற்கு நடைபெறப்போகின்ற உள்ளுராட்சிமன்றம் சிறந்த களமாக அமையவேண்டும்.

அட்டப்பள்ளம் கிராமமானது பரம்பரை பரம்பரையாக தமிழ் மக்கள் வாழ்ந்து வரும் பூழியாகும். இக் கிராமம் கடந்த கால வன்செயல்களினால் பெரிதும் பாதிக்கப்பட்ட கிராமமாகும். இன்று கூட இக் கிராமத்தையும் அங்கு குடியிருக்கும் தமிழ் மக்களையும் வெளியேற்றிவிட வேண்டும் என்ற வேட்கையில் சில விசமிகள் குறிப்பாக ஒரு முஸ்லிம் அரசியல்வாதிகள் குறியாக இருந்து செயற்பட்டுவருகின்றனர். அதற்கு துணையாக அதிகாரிகளும் செயற்படுகின்றனர்.

அட்டப்பள்ளம் கிராமத்தின் வரலாறு மிகத் தொன்மையானது. இங்கு வரலாற்றுப் பிரசித்தி பெற்ற சிங்காரபுரி மாரியம்மன் ஆலயம் ஒன்று அமைந்துள்ளது. இவ் ஆலயத்தை இங்கு அமைப்பதற்க்கு அன்றிருந்தவர்கள் எட்டு இடங்களில் பள்ளங்களை தோண்டி அதன் மூலம் பெறப்பட்ட நீரைப்பெற்றே அவ் அம்மன் ஆலயத்தைக் கட்டியுள்ளனர். இதனாலேயே இதற்க்கு அட்டப்பள்ளம் எனப்பெயர்வந்ததாக ஒரு சிலரும் இப் பகுதியில் தோட்டங்கள் செய்வதற்க்hக எட்டு இடங்களில் பாரிய பள்ளங்கள் ஏற்படுத்தப்பட்டு அத் திரவுகள் மூலம் பெறப்பட்ட நீரைக் கொண்டே பயிர்ச்செய்கை, விவசாயம் போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் அதனாலே அட்டப்பள்ளம் எனப் பேர் வந்திருக்கலாம் என ஒரு சிலரும் தங்கள் கருத்துக்களை கூறினார்கள்.

அட்டப்பள்ளம் எனும் பேர் எவ்வாறு வந்தது என்பதற்கப்பால் இக் கிராமத்தை ஆட்சிக்குட்படுத்திய வகையில் சிற்றரசன் ஒருவன் இருந்ததாக வரலாறுகள் கூறுகின்றது.

அட்டப்பள்ளம் என அழைக்கப்படும் இவ் இடம் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு “சிங்காரபுரி” என அழைக்கப்பட்டுள்ளது. இச் சிங்காரபுரியை இராசதானியாகக் கொண்டே பழம்பெரும் தமிழ் மன்னன் வன்னியராச சிங்கன் இப் பகுதி முழுவதையும் ஒரு குடையின் கீழ் ஆட்சி புரிந்துள்ளான்.

வன்னியராச சிங்க மன்னனின் மனைவி கோதை என்பதாகும். இவ் இளவரசி உல்லாசமாக உலாவந்த இடமே கோதையர் மேடு என அழைக்கப்பட்டது. வன்னியராச சிங்கன் இப் பகுதி முழுவதையும் ஆண்டான் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. இன்றும் அட்டப்பள்ளம் கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலுக்கு சிங்காரபுரி மாரியம்மன் கோவில் என்ற பேரே வழங்கப்படுகின்றது.

இதேபோன்றே இப்பிரதேசத்தில் அமைந்துள்ள மடத்தடி ஸ்ரீ மீனாட்சிஅ ம்மன் ஆலயமும் இவ் அரசனாலே பரிபலிக்கப்பட்டது என்பதற்கு வரலாற்று தடயங்களும் அம்மனைப்பற்றிய பல காவியப் பாடல்கள் எடுத்துக்காட்டாகவுள்ளது.

அன்று அட்டப்பள்ளம் கிராமத்தில் பெரும்பான்மையாக தமிழ் மக்கள் வாழ்ந்திருக்கின்றனர். இன்று இங்கு தமிழர்களின் வீதம் குறைந்துவிட்டது. தற்போது தமிழ் முஸ்லிம் ஆகிய இரு இனங்களும் ஒன்று சேர்ந்து வாழும் ஒரு கிராமமாக அட்டப்பள்ளம் திகழ்கின்றது.

இங்கிருந்த தமிழர்கள் பலர் கடந்த கால வன்செயல்களினாலும் பீதியிலும் தங்களுடைய காணிகளை சகோதர இனத்தவர்களுக்கு விற்றுவிட்டும் சிலர் சொத்துக்களை அப்படியே விட்டுவிட்டும் கிராமத்தை விட்டு வேறு இடங்களுக்குச் சென்று குடியேறிவிட்டனர். சொந்த மண்ணை விட்டு போக மனம் இன்றி எது நடந்தாலும் நம் சொந்த மண்ணிலே நடக்கட்டும் என மனத் தைரியத்தோடு சிலர் இங்கு வன்செயலின் பின் மீளக்குடியேறி வசித்து வருகின்றனர்.

இன்று அட்டப்பள்ளம் சிங்காரபுரி மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ள கிராமசேவகர் பிரிவிற்குள் 280 தமிழ் குடும்பங்கள் வசிக்கின்றன. அட்டப்பள்ளம் கிராம மக்களின் முகத்தில் செழிப்பைக் காணவில்லை. கடந்தகால யுத்தம் அவர்களுக்கு கசப்பான பாடங்களையே கற்பித்துக் கொடுத்துள்ளது.

இந் நிலையில் கடந்த சில வாரங்களாக இம் மக்களின் சவக்காலை பூமியைக் கூட விட்டு வைக்காது அதனை நிந்தவூர் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் ஒருவர் அடாவடித்தனமாக வேலி போட்டு அடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அட்டப்பள்ளம் மக்கள் காலம் காலமாக மரணமடைந்தவர்களை புதைத்து வந்த மயான பூமி கூட மெல்ல மெல்லப் பறிபோய்விட்டது. முன்னர்14 ஏக்கர் நிலப்பரப்பாக இருந்த மயான பூமியை ஐந்து வருடங்களுக்கு முன்பு குறித்த பேராசிரியர் 12 ஏக்கர் நிலப்பரப்பை இது தனது காணி என்றும் அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக கூறி அடைத்துள்ளார். அடைத்தது மட்டுமல்ல சவக்காலைக்கு குறுக்கே எல்லையும் போடப்பட்டது. அப் பேராசிரியர் எல்லை போட்டு அடைத்த காணிக்குள் அட்டப்பள்ளம் மக்களை புதைத்த புதைகுழிக்குமேல் கட்டப்பட்ட நினைவு கட்டடங்கள் உள்ளன.

1996 இல் மரணமடைந்த முன்னாள் கிராம சேவகர் விஸ்வலிங்கம், பொலிஸ் சாஐன்ட் நந்தகுமார், பெரியாள் ஆகியோரின் புதைகுழிக் கட்டிடங்களே அங்குள்ளது. சவக்காலை பூமியை ஒரு தனிநபர் எவ்வாறு சொந்தம் கொண்டாட முடியம். அதற்கு உறுதி முடித்து கொடுத்தவர்கள் யார்? என அட்டப்பள்ளம் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஏற்கனவே 12 ஏக்கரை அடைத்த நபர் மீண்டும் மிகுதியாக உள்ள இரண்டு ஏக்கர் மயானக்காணியில் மிகுதி 50.5 பேர்சஸ் காண தனக்கு இருப்பதாக கூறியே அதனை வேலி போட்டு அடைக்க முற்பட்டுள்ளார். இதன்போதே பொறுத்தது போதும் என பொங்கியெழுந்த பொதுமக்கள் குறித்த இனவாத முஸ்லிம் பேராசிரியருக்கு எதிராக ஒன்று கூடி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

கிராமத் தலைவர் கருத்து தெரிவிக்கையில்.. எமது மக்களின் சவக்காலை பூமியை வஞ்சகமான முறையில் அபகரிக்கும் நபர் தொடர்பில் நாம் பலரிடம் முறையிட்டுள்ளோம். எங்கள் சவக்காலை பூமியை அபகரித்த பேராசிரியர் அவரது செல்வாக்கைப் பயன்படுத்தி முதலில் அவர் சென்று பொலிஸில் எமக்கு எதிராக முறைப்பாட்டை செய்துள்ளார். காணி அபகரிப்பையும் செய்து போட்டு அதை நியாயப்படுத்த பொலிசுக்கு போயிருக்கிறார்.

எங்களை பொலிஸிசுக்கு வரச் சொல்லி அழைப்பு வந்தது. குற்றம் செய்யாத எங்களை காலை எட்டு மணிக்கு பொலிசுக்கு வருமாறு கூப்பிட்டார்கள் அங்கு எட்டு மணிக்கு சென்றும் பகல் 12 மணிவரை பொலிசில் இருந்தோம். குறித்த பேராசிரியர் வரவில்லை. எமது பூமியை அபகரித்து விட்டு எம்மை அலைக்கழிக்க வைக்கிறார்கள்.

நாங்கள் கடந்த மார்ச் மாதம் இவ் விடயம் தொடர்பில் பிரதேச செயலாளரிடம் கடிதம் ஒன்றை கொடுத்திருந்தோம். எமது சவக்காலை பூமியை ஒலுவர் அபகரிப்பதாகவும், எமது சவக்காலைக்குரிய அத்தாட்சிப் பத்திரம் ஒன்றை பெற்றுத்தருமாறு கோரியிருந்தோம். இது வரை பிரதேச செயலாளரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசியல் பின்புலமும், அதிகாரிகளின் பின்புலமும், பணமும், செல்வாக்கும், அதிகாரமும் சேர்ந்து அட்டப்பள்ளம் தமிழ் மக்களுக்கு எதிராக சதி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றதோ என்ற சந்தேகம் எமக்கு எழுந்துள்ளது என்றார்.

அட்டப்பள்ளம் கிராமத்தில் வசிக்கும் ஓள்வு நிலை அதிபர் அகிலேசபிள்ளை (75வயது) இப்படிக் கூறுகின்றார். “என்ட அம்மா அப்பாவை அந்தக் காணிக்குள்ளதான் புதைச்சம். காலம் காலமாக சவக்காலை பூமியாக இருந்த இடத்தை ஒருவர் எப்படி தன்னுடைய இடம் என்று சொல்ல முடியும்? செத்தவர்களைக் கூட நிம்மதியா இருக்க விடுறாங்கல்ல”. என்றார்.

ஒரு காலத்தில் 1000 தமிழ்க் குடும்பங்கள் ஒன்று சேர்ந்து வசித்த அட்டப்பள்ளம் கிராமம். இன்று வெறும் 250 தமிழ் குடும்பங்கள் வசிக்கும் இடமாக மாறியிருக்கின்றது. இந் நிலைக்கு யார் பொறுப்பு? என்ற வாதப்பிரதி வாதங்களுக்கு அப்பால் தற்போது அங்கு இருக்கும் குடும்பங்களின் இருப்பை தொடர்ந்து தக்க வைக்கவும் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்கவும் அனைத்து தமிழ் அரசியல் பிரமுகர்களும் கட்சி அரசியலுக்கு அப்பால் ஒன்று சேரவேண்டும்.

அட்டப்பள்ளத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்யும் காணிகளை கூட விட்டு வைக்காது அதனை அபகரிக்க நினைக்கும் இனத்துவேசிகளிடம் இருந்து அதனை மீட்பதுடன் அம் மக்களின் அபிவிருத்திக்கு சரியான அடித்தளம் இடப்படவேண்டும் என்பதே அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் ஆதங்கமாகும்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *