Tuesday, November 21, 2017

.
Breaking News

புரியலையே! தெரியலையே!!

என் இனம் அழிந்து கொண்டிருக்க
இறுதி யுத்தம் நடந்து கொண்டிருக்க
வஞ்சகமும் துரோகமும் வலை விரித்தாட
நெஞ்சு பொறுக்காத வேதனைகள் ஓலமிட

போரிட்டே ஆகவேண்டும்
அல்ல செத்து மடிய வேண்டும்
காது செவிடாகும் வண்ணம் பேரிடிச் சத்தம்

திடீரென்று ஒரு கும்மிருட்டு
என்ன ஆயிற்று? ஏது நடக்கிறது?
நினைத்துப் பார்க்க முடியாமல்
நினைவு தடுமாற நிலைமை மாறியது

கண் விழித்துப் பார்க்கையிலே
நானும் கட்டிலில் அசையாது கிடந்தேன்
மனைவி மக்கள் பெற்றோர் எல்லோரையும்
இழந்தாயிற்று இன்னும் என்ன உள
இனி இழப்பதற்கு என்றிருந்த வேளை

அன்பு நண்பன் அருகிலிருந்தான்
கண்ணீர் வடித்து கலங்கி நின்றான்
போர் முனையில் எதையும் கண்டஞ்சா
இரும்பு நெஞ்சன் இளகிப் போனான்

என்ன என்று கண்ணால் கேட்டேன்
கண்ணால் என் கைகளைப் பார்த்துக் கதறினான்
அப்போதுதான் என் கைகளைப் பார்த்தேன்

வலது கையைக் காணவேயில்லை
இடது கையோ பாதி இல்லையே?
அப்போதுதான் வலி உணர்ந்தேன்
உடல் வலியோடும் மன வலியோடும்
நட்களும் மெல்லமெல்ல நகர்கின்றன

இனி எல்லாமே எனக்கு அவன்தான்
தாய்போல் தாலாட்ட மனைவிபோல் சோறூட்ட
உடுக்கை இழந்தவன் கைபோல் என்றான்
என் முப்பாட்டன் வள்ளுவனும்

வள்ளுவன் குறளும் பொய்யாயிற்றோ
உடுக்கை அவிழ்ந்தல்லவோ விழுகிறது
ஓடிவந்து நண்பன் கையல்லவோ
உடையைச் சரி செய்து விடுகிறது

நண்பா உனக்கு நான் என்னதான்
கைமாறாகச் செய்யப் போகிறேனோ
தெரியலையே! புரியலையே!!

-சங்கர சுப்பிரமணியன்.

About The Author

Related posts