Thursday, January 18, 2018

.
Breaking News

கல்யாணி எனது தங்கச்சி!… ( சிறுகதை ) … ஏலையா க.முருகதாசன்.

கல்யாணி எனது தங்கச்சி!…  ( சிறுகதை ) …  ஏலையா க.முருகதாசன்.
‘அண்னை விதுசாவுக்கு வாற சனிக்கிழமை வீட்டிலை வைச்சு தண்ணி வார்த்து வீட்டோடை சின்ன விழாவாகச் செய்யப் போகிறோம், கட்டாயம் நீங்களும் அண்ணியும் வந்து சந்தோசமாய் தாய்மாமன் மாதிரிச் செய்ய வேண்டும்’ என்று கல்யாணி தொலைபேசியில் சொன்ன வார்த்தைகளை அசைபோட்டபடி வேலைத்தளத்திற்கு காரில் போய்க் கொண்டிருந்தேன்.
இரண்டு நாட்களுக்கு முன் சனிக்கிழமை கல்யாணி தொலைபேசி மூலமாக கதைத்தவள் மனைவியுடனும் கதைத்திருந்தாள்.
கல்யாணிக்கு நான் கூடப்பிறந்த அண்ணனோ அல்லது இரத்த உறவு முறைகளினூடாக வந்த அண்ணனும் இல்லை. ஒரே ஊரும் அல்ல.அவள் கரணவாய் என்ற ஊரையும், நான் கோண்டாவில் என்ற ஊரையும் சேர்ந்தவன்.
ஆனாலும் அவள் என்னை அண்ணை என்று பாசத்தோடு அழைத்து வந்தாள். ஒரு வருடத்திற்கு முன்பு நானும் மனைவியும் கல்யாணி இருந்த நகரத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவிற்கு போயிருந்தோம்.
அப்பொழுது எனது நண்பரின் குடும்பமும் எங்களுக்கருகில் உட்கார்ந்திருந்தனர்.அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது இரண்டு சிறுமிகளுடன் இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு இளம் பெண் வந்து நண்பரின் குடும்பத்துக்கு அருகில் உட்கார்ந்தாள்.
எங்கள் இரண்டு குடும்பத்தினரையும் பார்த்து அந்த இளம்பெண் புன்னகை செய்தார். நண்பர் ‘எப்படியிருக்கிறியள்’ என்று கேட்க ‘இருக்கிறன்’ எனச் சிரித்துக் கொண்டே சொன்னார். அவள் சிரித்தக் கொண்டு சொன்னாலும்’இருக்கிறன்’ என்ற வார்த்தையில் ஏதோ ஒரு வேதனை இருப்பதை நான் கவனித்தேன்.
விருந்து முடிந்து அந்த இளம்பெண் மணமக்களுடன் நின்று படம் எடுப்பதற்காக எழுந்து போனதும் நண்பர்’ இந்தப் பிள்ளைக்கு புருசன் இறந்துவிட்டார், பாவம், வயது குறைவு’ என நெகிழ்வுடன் சொன்னார்.
எனக்கும் மனைவிக்கும் அதிர்ச்சியாக இருந்தது.’புருசனுக்கு என்ன நடந்தது’ என்று கேட்ட போது’இளந்தாரியாக இருந்த போதே நல்ல குடி, குடியாலை உடம்பு கெட்டுப் போச்சுது,இந்தப் பிள்ளையையும் இந்தச் சின்னதுகளையும் தவிக்க விட்டிட்டு அந்தாள் போய்ச் சேர்ந்திட்டுது என்று கவலையோடு சொன்னார் நண்பர்.’காதலித்துக் கல்யாணம் நடந்ததா… இல்லை….’ என்று நான் முடிக்கு முன் ‘ இல்லை பேசித்தான்’ என்றார் நண்பர்.
நண்பர் சொன்னதைக் கேட்டதும் நானும் மனைவியும் அந்த இளம் பெண்ணின் வாழ்க்கையைப் பற்றி  யோசித்தோம். நாங்களும் நண்பரின் குடும்பமும் அவளினதும், அவளின் பிள்ளைகளினதும் எதிர்காலம் பற்றியே அனுதாபத்துடன் பேசிக் கொண்டிருந்தோம்.மணமக்களுடன் சேர்ந்து படம் எடுத்த அவள் மீண்டும் வந்து உட்கார்ந்தாள்.
என்னைப் பார்த்து, உங்களைப் பற்றி அறிந்திருக்கிறன் என்றவள் நீங்கள் கதை எழுதுகிறவர்தானே, உங்கள் கதைகளை வாசித்திருக்கிறன்’ என்றாள்.அவள் சொன்னதைக் கேட்டு என்னால் மகிழக்கூட முடியவில்லை.
ஒரு குறிப்பிட்ட மணித்தியாலங்களுக்குள் அறிமுகமான ஒருத்தியின் வாழ்க்கை, பூஞ்சோலையாக வாழ வேண்டியவள் இருபத்தைந்து வயதில் விதவையாகி நிற்கிறாளே என்ற கவலை என் எழுத்தை நினைத்து மகிழ்ச்சி கொள்ள வைக்கவில்லை.
அவள் யாரோ நான் யாரோ ஆனால் அவளின் ‘இருக்கிறன்’என்ற வார்த்தைக்குள் அவள் தனது வேதனைகளை புதைத்திருப்பதை என்னால் உணர முடிந்தது.
நாங்கள் திருமண நிகழ்விலிருந்து வெளிக்கிடும் முன் அவள் வெளிக்கிட்டு விட்டாள்.வெளிக்கிடும் போது ‘அண்ணை நான் வாறன்’ என்று அவள் பாசமாக என்னிடம் சொன்னது ஒரு கூடப் பிறந்த அண்ணனிடம் பாசமாகச் சொன்னது போல இருந்தது.
எனது மனைவியும், ‘அடிக்கடி சொல்லி கவலைப்படுவியளே கூடப் பிறந்த பெண் சகோதரி இல்லையென்று இப்ப உங்களுக்கு ஒரு தங்கச்சி கிடைச்சிட்டுது போல’ என்றாள்.
திருமண விழா முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும் போது, ‘இந்தச் சின்ன வயதில் இந்தப் பிள்ளைக்கு இப்படி ஆயிட்டுதே’ என நானும் மனைவியும் பேசிக் கொண்டே வந்தோம்.இரண்டு நாளுக்குப் பிறகு ஒரு மாலை நேரம் தொலைபேசி அடிக்க நான் போய் எடுத்தேன்.
மறுமுனையில் ‘அண்ணை நான் கல்யாணி பேசுகிறன் ‘என்று குரலைக் கேட்டதும் எனக்கு  யாரென்று விளங்கவில்லை’ நீங்கள்…என்று நான்  இழுக்க’ கலியாண வீட்டிலை நீங்கள் இருந்த மேசையில் இரண்டு சின்னப்பிள்ளைகளுடன் வந்து இருந்தேனே ஞாபகமில்லையா குமாரண்ணையிடம் கேட்டு ரெலிபோன் நம்பிரை வாங்கினனான்’ என்று கல்யாணி முடிக்க முன் ‘ஞாபாகம் இருக்கு எப்படி இருக்கிறியள’; என்றேன:’இருக்கிறன்’ என்ற அதே பதில் வந்தது.அண்ணை அண்ணியுடன் கதைக்கலாமா என்று உரிமையுடன் கேட்பது போலக் கேட்டாள்.
ஒரு நாள் பழக்கத்திலேயே எனது மனைவியை அண்ணி என அவள் அழைத்தது வியப்பாக இருந்தாலும், அவளுக்கும் எங்களுக்குமிடையில் ஒரு பாசம் ஆரம்பிப்பது போல எனக்குத் தோன்றியது.
கல்யாணியுடன் மாதத்திற்கொருமுறையாவது தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவோம்.அவளும் ஆர்வமுடன் பேசினாள்.ஒரு நாள் தனது பிள்ளைகளுடன் வீட்டுக்கு வந்திருந்தாள்.
தனது அப்பா அம்மா குடும்பம் தனது படிப்பு பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருந்தவள் திடீரன மௌனமாகி சுவரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
கல்யாணி இன்னொரு திருமணத்தை செய்தால் நல்லது என நானும் மனைவியம் எமக்குள் அவள் நிலையை எண்ணிப் பெசிக் கொண்டதை, அவளிடம் கேட்கலாமா விடலாமா எனத் தடுமாறி அவளிடம்’ தங்கச்சி இப்படியே இருக்கப் போகிறாயா’ எனத் தயங்கித் தயங்கிக் கேட்ட போதும்’இதுவரை திருமணம் என்ற பெயரில் வாழ்ந்தது போதும் அண்ணை, இனி என் வாழ்நாள் எனது பிள்ளைகளுக்குத்தான்’எனப் பதிலளித்தாள்.
அதற்குப் பிறகு நானோ மனைவியோ இரண்டாவது திருமணம் பற்றி எதுவுமே கேட்கவில்லை.அவள் வீட்டுக்குப் பலமுறை சென்றிருக்கிறோம் அவளும் எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறாள். ஒரு போதும் இரண்டாவது திரமணம் பற்றி நாங்களிருவரும் வாய் திறக்கவேயில்லை.ஆனால் அவள் கண்களின் கீழ்மடலின் கீழ் ஒரு சோகம் அப்பியிருந்ததை காண முடிந்தது.
இரண்டு வருடங்களாகியும்  எங்களுக்கும் கல்யாணிக்கும் இடையில் பாசத்தோடு கூடிய தொடர்ப நீடித்தது.இந்நிலையில்தான் மூத்த மகள் விதுசாவின் பூப்புனித நீராட்டு விழாவை வீட்டோடு செய்வதாக கல்யாணி அழைப்பு விடுத்திருந்தாள்.
———————————-
வீடு நிறைய நண்பர்களும் உறவினர்களும் நிரம்பியிருந்தார்கள். என்னையும் மனைவியையும் கண்டதும் ‘அண்ணை வாங்கோ அண்ணி வாங்கோ, உங்களுக்காகத்தான் பார்த்துக் கொண்டிருந்தனான் என்று எங்களை உட்கார வைத்தாள்.கல்யாணியின் உறவுக்கார ஒருத்தி எங்களுக்கு தேநீரும் பலகாரமும் தந்த பொழுது ‘கல்யாணியின் பிள்ளைகளுக்கு மாமன் முறையில் இருவர் இங்கிருந்தும், உங்களைக் கொண்டுதான் தன மகளுக்கு எல்லாம் செய்விக்க வேணும் என்று பிடிவாதமாக நிற்கிறாள்’ என்றாள்.
‘அண்ணை வாங்கோ அண்ணியும் வாங்கோ பிள்ளைக்கு பால் வைக்க வேணும் ‘என்று எங்களை எழுப்பிய போது,கொஞ்சம் தயக்கமாக இருந்தது.கல்யாணியை தனியாக அழைத்துச் சென்று’தங்கச்சி உங்களுக்கு அண்ணை முறையில் இரண்டொருவர் இருக்கேக்கிலை எங்களை அழைப்பது சரியில்லை’என்று சொல்ல,கல்யாணியின் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது,அவள்’ அண்ணை நான் இன்று வாழ்விழந்து நிற்கிறதுக்கு காரணம் இந்த அண்ணன்மார்தான். குடியிலை ஈரல் எரிந்து கடுமையான வருத்தத்திலை இருந்த ஓருத்தரை எனது படிப்பையும் குழப்பி, அவர் வருத்தக்காரன் என்பதையும் மூடிமறைத்து கல்யாணம் செய்து வைத்தவர்கள் இந்த அண்ணன்மார்தான். அண்ணன்மார் எனக்கு பிழையான வாழ்க்கையை அமைத்துத் தரமாட்டார்கள் என நம்பினன்.
அவர் இறந்த பின்பு என்னாலைதான் அவர் இறந்தவர் என்றது மட்டுமில்லை என்னுடைய நடத்தையையே தவறாகக் கதைத்தவர்கள் இந்த அண்ணன்மார்தான்.ஏதோ ஒப்புக்கு வந்திட்டு போகட்டும் இனி இவர்கள் உறவுகள் அல்ல, எல்லாம் போதும் நீங்கள்தான் இனி மாமனும் மாமியும்’ என்றவள் எனது கையையும் மனைவியும் கையையும் பிடித்து இழுத்துக் கொண்டு போய் பால் வைக்கச் சொன்னாள்.
பால் வைத்தது, தோய வார்த்தது, கும்பத்தை எடுத்து விதுசாவின் கையில் கொடுத்தது எல்லாவற்றையும் எங்களைக் கொண்டே செய்வித்தாள்.
எங்கள் மீது அவள் காட்டிய பாசம், முற்பிறவியில் நானும் அவளும் அண்ணன் தங்கச்சியாக இருந்திருக்கிறோமோ என்றுகூட எண்ணத் தோன்றியது.
சிலருடன் வருடக்கணக்காகப் பழகுவோம் ஆனால் அவர்கள் மீது எவ்விதமான அக்கறையோ அன்போ தோன்றாது. ஆனால் கல்யாணியுடன் ஒரு நாள் பழகி, அவள்’அண்ணை’ என்று பாசத்துடன் அழைத்ததிலிருந்து இன்றுவரை தொடர்கின்ற தூய்மையான பாசம் எங்களுக்கு வரமாகவே தோன்றுகின்றது.
கூடப்பிறந்த அக்காவோ தங்கச்சியோ எனக்கு இல்லையே என்று ஏங்கிய எனக்கு இப்பொழுது கல்யாணி என்ற  தங்கச்சி கிடைத்துவிட்டாள்.நான் கொடுத்து வைத்தவன்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *