Thursday, January 18, 2018

.
Breaking News

கல்…புல்…காகம்…8…..நாவல் —- . சங்கர சுப்பிரமணியன்.

கல்…புல்…காகம்…8…..நாவல் —- . சங்கர சுப்பிரமணியன்.
(பிழை திருத்தம் – முந்தைய பகுதியில் மனோன்மணியின் தந்தை உலகநாதன் என்று தவறுதலாக எழுதியுள்ளேன்.
தந்தை உலகநாயகம். அண்ணன் உலகநாதன். திருத்தி வாசிக்கவும்)
விபத்து நடந்து ஒருமாதத்துக்கு மேல் ஆகிவிட்டது. மருத்துவமனையில் இருந்து இரண்டு வாரங்களில் நேராக
மனோன்மணியை சேரன்மாதேவிக்கு அழைத்து வந்து விட்டார் உலகநாயகம்.  வீட்டுக்கு வந்த நாளில் இருந்தே
தன் கணவனைப்பற்றி எல்லோரையும் விடாது கேட்டுவந்தாள். தன்னை ஏன் மதுரைக்கு அனுப்பி
வைக்காமல் இங்கே அழைத்து வந்திருக்கிறீர்கள். அவர் எப்படி இருக்கிறார் என்றெல்லாம் கேட்டு வீட்டிலுள்ள
அனைவரையும் பாடாய்ப் படுத்திக்கொண்டிருந்தாள்.
குணசேகரன் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் மேலும் ஒருவாரகாலம் மருத்துவமனையில் இருந்தே
ஆகவேண்டுமென டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள். கால் முழுமையாக குணமடைய அதிகநாட்கள் மருத்துவ
மனையிலேயே தங்கநேர்ந்தது. ஒருவழியாய் கால் நல்லபடியாக குணமாகிவிட்டது. செயற்கை கால் பொருத்தி
விட்டால் எந்தவித சிரமுமில்லாமல் நன்றாகவே நடக்கமுடியும். ஒருவகையில் குணசேகரனின் பெற்றொருக்கு
சிறிது ஆறுதல் கிடைத்தாலும் அதுவும் நீடிக்காமல் போனது. ஏனென்றால் கால் முழுமையாக குணமடைந்தாலும்
சுயநினைவின்றி மகன் ஏதேதோ பிதற்றிக்கொண்டிருப்பது அவர்களது துக்கத்தை அதிகப்படுத்தியது. இனி இதுதான்
இவனது வாழ்க்கை என்று புரிந்துகொண்ட அவர்கள் மகனை மருத்துவமனையில் இருந்து மதுரைக்கு அழைத்து
வந்து விட்டார்கள்.
எது எப்படி நடந்தாலும் யார் வாழ்வில் என்ன நடந்தாலும் காலச்சக்கரம் சுழல்வதை நிறுத்திவிடுவதில்லை.
அதுபோல் இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன. இதுவும் கடந்துபோகும் என்ற தாரகமந்திரம் என்னமாதிரியான
துன்பங்கள் நடந்தாலும் அதை மனிதர்கள் மனதில் இருந்து அழித்து விடுவதில்லையா? எல்லாம் சிலகாலமே என்று
மனிதர்களும் இயற்கையின் ஓட்டத்தில் இணைந்து ஓட ஆரம்பித்து விடுகிறார்கள். பின் எப்போவாவது அந்த
ஞாபகம் வரும்போது அந்தவலி காயத்தின் வடுவினைப்போல் வந்து போகும். கண்முன்னே உறவுகள் மடிந்து
கிடக்க உறவுகளையும் நண்பர்களையும் பறிகொடுத்து நிலபுலன்கள் சொத்து சுகங்கள் எல்லாவற்றையும் இழந்து
கதறி அழுத நாட்கள் ஆண்டுகள் பல கடந்தும் இன்னும் மனதில் வலித்துக்கொண்டு இருக்கிறதல்லவா?
அந்தவலியையும் கொஞ்சகொஞ்சமாக மறந்து போனாலும் எப்போதாவது அந்தவலி வந்துவிட்டு போகத்தானே
செய்கிறது. அதற்காக முடங்கிவிடாமல் வாழ்க்கையை முன்னெடுத்து செல்கிறோம் அல்லவா? அதுதான் இயற்க
மனிதனுக்கு கொடுத்திருக்கும் ஒரு மாற்றுவழி. அப்படி மறந்துபோக பல ஆண்டுகள் ஆகலாம்.
நேற்றுதான் நடந்ததுபோல் இருந்தாலும் விபத்து நடந்து மூன்று மாதங்கள் போனதே தெரியாமல் நட்கள் நகர்ந்தன.
மனோன்மணி நல்லபடி குணமடைந்து விட்டாள். ஆனால் கணவனை விட்டு மூன்றுமாதங்கள் பெற்றோர் வீட்டில்
இருந்ததுதான் அவளுக்கு எப்படியோ இருந்தது. கணவனைவிட்டு திருமணமான நாளிலிருந்து இவ்வளவு நாட்கள்
பிரிந்திருந்ததில்லை. விபத்தைக் காரணம் காட்டி உடல்நிலை நன்றாக ஆகும்வரை ஓய்வெடுக்கும்படி பெற்றோர்
வற்புறுத்தலை தட்டமுடியாமல் இருந்துவிட்டாள். மனோவும் தாத்தா, பாட்டி, மற்றும் மாமாவின் பாசத்தாலும்
அரவணைப்பலும் தன் அப்பாவையும் மதுரையிலிருக்கும் தாத்தா பாட்டியையைபற்றி ஆரம்பத்தில் கேட்டுக்
கொண்டிருந்தாலும் நாளடைவில் மறந்துவிட்டான். எப்போதாவது ஞாபகம் வரும்போது மட்டும் அப்பாவையும்
தாத்தா பாட்டியைப்பற்றி கேட்பான். அவனுக்கு எதையாவது சாக்கு போக்கு சொல்ல அப்படியே மறந்து போவான்.
அவன் சிறுகுழந்தை அவனை ஏமாற்றிவிடலாம். ஆனால் மனோன்மணி சிறுகுழந்தையல்லவவே. அவளை
சமாளிப்பது தான் உலகநாயகம் தம்பதியருக்கு பெரிய சவாலாக இருந்தது. ஒருநாள் தன்வசமிழந்த மனோன்மணி
தன்னால் இனிமேலும் சமாளிக்கமுடியாது என்ற நிலையில்,
“அப்பா! என்னதான் இங்கு நடக்கிறது? எனக்கு ஒன்றுமே புரியமாட்டேங்கிறது” என்று விரக்தியுடன் அப்பாவிடம்
கேட்டாள்.
“என்னம்மா சொல்கிறாய். எதிர்பாராத விபத்து நடந்துவிட்டது. எல்லாம் கெட்டநேரம் தலைக்கு வந்தது
தலைப்பாகையோடு போனது என்பதுபோல் உயிர்தப்பி பிழைத்திருக்கிறீர்கள்”
“எல்லாம் சரிதான் அப்பா. உயிர்பிழைத்து விட்டோம். ஆனால் இவ்வளவு மாதங்கள் ஆகியும் ஏன் அப்பா என்னை
மதுரைக்கு கொண்டுவிடவில்லை. அவர்களும் யாரும் இங்கு வரவில்லை”
“இப்போதுதான் நீ குணமாகியிருக்கிறாய். மாப்பிள்ளை வீட்டிலிருந்தும் ஒருதடவை வந்துபார்த்தார்கள். அவர்கள்
வந்தசமயம் வெகுநேரம் வலியால் துடித்துக்கொண்டிருந்த நீ டாக்டர் கொடுத்திருந்த மருந்து மாத்திரைகளை
உட்கொண்டபின் ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்தாய். அவர்களும் சாப்பிட்டு முடித்து வெகுநேரரமாகியும் நீ கண்
விழிக்காததால் திருநெல்வேலியில் உறவினரைப் பார்க்கவேண்டும் இன்னொருமுறை வருகிறோம் என்று
சொல்லிச் சென்றார்கள்.”
“அவர் எப்படி அப்பா இருக்கிறார்? நன்றாக குணமடைந்து விட்டாரா? எப்போது வந்து என்னைப் பார்ப்பார்?”
என்று கேள்விமேல் கேட்ட மகளுக்கு என்ன பதில் என்று சொல்வது தெரியாமால் திண்டாடிப்போனார்.
“அவர் நன்றாகத்தான் இருக்கிறார் அம்மா” என்றார்.
“நன்றாக இருப்பவரா என்னை இன்னும் வந்துபார்க்கவில்லை. நேரில் வந்து பார்க்காவிட்டாலும் தொலைபேசியில்
அழைத்தாவது பேசியிருக்கலாம் அல்லாவா?” என்று கேட்டு அப்பாவைப் பார்க்க அவரும் நேரில் வந்து பேசியிருக்கலாம்
தொலைபேசியிலாவது அழைத்திருக்கலாம் என்று அவள் சொன்னதையே திருப்பி அவளிடம் சொன்னார்.
-சங்கர சுப்பிரமணியன்.
(தொடரும்)

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *