Thursday, January 18, 2018

.
Breaking News

தமிழ் கட்சிகளும் தேர்தல்கால கூத்துக்களும்!… கருணாகரன்.

தமிழ் கட்சிகளும் தேர்தல்கால கூத்துக்களும்!…    கருணாகரன்.

 

தேர்தல் காலங்களில்தான் அதிகமான அரசியல்தரப்புகளின் உண்மையான முகம் வெளித்தெரியும் என்று சொல்வார்கள்.

இது நூறு வீத உண்மை. இந்த அனுபவம் வாசகர்களாகவும் வாக்காளர்களாகவும் இருக்கும் உங்களுக்கும் நிச்சயமாக ஏற்பட்டிருக்கும்.

தேர்தல் அறிவிப்பு வந்த கையோடு ஒவ்வொரு அரசியற் தரப்பினரும் படுகின்ற பாடுகளையும் அடிக்கிற கூத்துகளையும் பார்த்தால், சிரிப்புச் சிரிப்பாகவே வருகிறது. சிரிப்பு மட்டுமல்ல, கோபமும் கூட வருகிறது. ஒரு தேர்தலுக்காக, அது தருகின்ற பதவிகளுக்காக இந்தளவுக்குச் சின்னத்தனமாகச் சீரழிந்திருக்கிறார்களே என்று நினைக்கச் சிரிப்பு வருகிறது.

தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக சனங்களை எப்படியெல்லாம் ஏமாற்றலாம், சனங்களுக்கு எதைப்பற்றியும் எப்படியும் சொல்லலாம், என்று மிகச் சாதாரணமாகவே எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கும் போது கோபம் வருகிறது. அதிலும் மிகப் பெரிய உயிர்த்தியாகங்களைச் செய்த மக்களை இப்படி ஏமாற்ற முற்படுகிறார்களே! சனங்களை முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டே பெரும்பாலான அரசியற் தரப்புகளும் செயற்படுகின்றனவே என்று யோசிக்க ஆத்திரம் பொத்துக் கொண்டு வருகிறது. மெய்யாகவே சனங்களைக் குறித்துச் சிந்திக்கின்ற ஒரு தரப்புண்டு. அந்த வகை விலக்குகள் மிக அபுர்வம்.

மக்கள் சேவைக்காகத்தான் இந்தத் தேர்தல் கில்லாடிகள் இப்படி முட்டி மோதுகிறார்கள் என்று யாருமே சொல்ல முடியாது. அப்படியென்றால், இவ்வளவு நாட்களும் இவர்கள் எங்கே போயிருந்தார்கள்? இப்பொழுது மட்டும் என்ன அப்படி மக்கள் தொண்டுக்கு அவசரம் வந்தது? சனங்களின் மீது ஏன் திடீர்ப்பாசம் பொங்க வேணும்? அதுவும் இவ்வளவு தொகையானோர்?

இவர்களெல்லாம் ஏற்கனவே இவ்வளவு உற்சாகத்தோடு மக்கள் பணியைச் செய்திருந்தால், இந்தச் சமூகமும் இந்த நாடும் பெரும் முன்னேற்றத்தை எட்டியிருக்குமே! இப்பொழுது தடக்கினால், ஏதோ ஒரு அரசியல்வாதியின் முகத்தில்தான் முட்ட வேண்டும் என்ற அளவுக்கு ஊர்கள் எல்லாம் அரசியல்வாதிகளினால் நிரம்பிக் கிடக்கின்றன, அம்மாடியோ, சகித்துக் கொள்ளவே முடியவில்லை. இவர்கள் அடிக்கிற கூத்துகளையும் அளக்கிற அலப்பறைகளையும்.

இப்போது மக்கள் மீது பாசம் பொங்கியதைப்போல, தேர்தலுக்குப் பிறகும் வெற்றி தோல்வியைப் பற்றிக் கவலைப்படாமல், இவர்கள் தொடர்ந்தும் மக்கள் பணியாற்றினால் – முன்வைத்த காலைப் பின்னே எடுக்காமல் பொதுப் பணி செய்தால், இந்த நாடு உலக அரங்கில் பெரு வளர்ச்சியைக் கண்டே தீரும். இலங்கைத் தாய்க்கு இதை விட வேறு பெருமைகள் வேண்டுமோ!

இந்த ஒரு வாரமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஒரு பக்கம் வேட்பாளர் தெரிவுப் போட்டிகள். இன்னொரு பக்கத்தில் வேட்பாளர்களைத் தேடும் படலங்கள். வேறொரு பக்கத்தில் ஆசனப் பகிர்வுப் பிரச்சினைகள். மறுபக்கம், கூட்டுகளை உருவாக்குவதற்கான முனைப்புகள். இதைப்பற்றியே தனித்தனியாப் பல காவியங்களை எழுதக் கூடிய அளவுக்கு பல உப கதைகள், கிளைக்கதைகள், பிரதான கதைகள், நகைச்சுவைகள் என உண்டு. பத்திரிகைகளிலும் இணையத்தளங்களிலும் வந்தவை சில மட்டுமே. திரை மறைவுச் சங்கதிகள் ஆயிரம் பாக்கியாகவே உள்ளன.

ஒரு சமூகத்தின் அறம், அதனுடைய சமூக ஒழுங்கு, எதிர்காலம் குறித்த அதனுடைய நகர்வு போன்றவவை எப்படியுள்ளன என்று அறிவதற்கு இந்த மாதிரியான சந்தர்ப்பங்கள் உதவும். தமிழ்ச் சமூகத்தின் அரசியலும் அதனுடைய சமூக நிலையும் எப்படி இருக்கின்றன என்பதற்கு இந்தக் காலகட்டச் சம்பவங்களும் இதற்குத் தலைமை தாங்கும் தரப்புகளும் துலக்கமாக அடையாளம் காட்டுகின்றன.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் திடீரென ஞானோதயம், அருளோதயம் சிந்தனாதோதயம் பெற்று விட்டதைப்போல, ஊரூராகச் சென்று வீதி அபிவிருத்திப் பணிகளைச் செய்கிறார்கள். குளங்களைப் ஆழப்படுத் வேண்டும். வாய்க்கால்களையும் வடிகால்களையும் சீரமைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். கிராம அபிவிருத்திச் சங்கம், சனசமூக நிலையம் போன்றவற்றைப் புனரமைக்க உதவுகிறார்கள். விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணங்களை வழங்குகிறார்கள். இப்படிப் பல நற்பணிகள் அவசர கதியில் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் ஊரூராகவும் தெருத்தெருவாகவும் நிற்கிறார்கள். பிரதமரின் அமைச்சின் கீழ் கிராம அபிவிருத்தி விசேட செயற்திட்டத்திற்காக  ஒதுக்கப்பட்ட நிதியின் மூலமாக இவற்றில் சில பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

“நாங்கள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கும் அரசியலமைப்பு உருவாக்கத்துக்கும் அபிவிருத்திக்கும் சம நிலையில் இடமளித்திருக்கிறோம்” என்று கூறுகிறார் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர். “அபிவிருத்தியில்லாமல் அரசியல் இல்லை” என்றும் அவர் மேலும் விளக்குகிறார். இப்படி அபிவிருத்தி அரசியல் செய்வதை ஒரு காலம் (இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை) எதிர்த்தும் கேலி செய்தும் வந்தது இந்தத் தரப்பு. “அபிவிருத்தி அரசியல் என்பது சலுகை அரசியலாகும். சலுகை அரசியலுக்காக எமது மக்கள் தங்களுடைய உயிரைக் கொடுக்கவில்லை.  தங்களுக்கு வீதி வேணும் என்று மக்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்யவில்லை. தங்களுக்கு வேலை வாய்ப்பு வேணும் என்று கேட்டு யாரும் கரும்புலியாகி வெடிக்கவில்லை. மின்சாரம் வேணும் என்று கேட்டு யாரும் போராடவில்லை. இதையெல்லாம் செய்ய வேண்டியது, அரசாங்கத்தின் கடமையாகும். இதெல்லாம் போராட்டத்துக்கு முன்பும் இருந்தவைதான். அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையை போராட்டத்தின் ஒரு பகுதியாகவும் இதுதான் அரசியல் உரிமையாகவும் காட்ட முடியாது. மக்கள் தங்களுடைய உரிமைக்காகவே உயிர்களை இழந்தனர். அதற்காகவே தம்மைத் தியாகம் செய்தனர். ஆகவே அதை அபிவிருத்தி என்ற சலுகை அரசியலின் மூலமாகக் கொச்சைப்படுத்த முடியாது” என்றெல்லாம் அன்றைய தேர்தல் மேடைகளில் வலியுறுத்தப்பட்டது. “கொள்கையும் இலட்சியமும் முக்கியமே தவிர, இந்த மாதிரி அரசாங்கக் காசைச் செலவழித்துக் காட்டப்படும் படங்கள் முக்கியமல்ல என்று சொல்லப்பட்டது.

ஆனால், இன்று?

இன்று நிலைமை மாறித் தலை கீழாகி விட்டது. முன்பு, மகிந்த ராஜபக்ஸவின் காலத்தில்தான் இப்படி அதிரடி அபிவிருத்தி வேலைகள் அதிகமாக நடந்தன. யாராலுமே நம்ப முடியாத அளவுக்கு வீதிகளில் திடீரென மின்கம்பங்கள் முளைக்கும். பல நூற்றாண்டுகளாகவே காணாமலே விடப்பட்டிருந்த வீதியில் வந்து ஒரு அமைச்சர் நிற்பார். அல்லது ஒரு முக்கியஸ்தவர் வந்து நின்று கொண்டு, ஒரே நாளில் இந்த வீதியை நிர்மாணித்து விடுகிறேன் என்று வேலைகளைச் செய்விப்பார். “ஆஹா எழுந்தது பார் யுகப் புரட்சி” என்ற மாதிரிக் காரியங்கள் நடக்கும். எல்லாம் ஒரு இரண்டு மூன்று வாரங்கள் வரையிலும்தான். அதற்குப் பிறகு “துண்டைக்காணோம், துணியைக் காணோம்” என்ற கதையே. தேடினாலும் யாரும் கிடைக்க மாட்டார்கள்.

இதைப்போலவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரின் அபிவிருத்திப் பணிகள் இப்பொழுது அசுர வேகத்தில் நடக்கின்றன. ஏதோ இப்பவாவது இந்த வேலைகள் எல்லாம் நடக்கின்றனவே என்று சந்தோசப்படலாம். ஆனால், இப்படித் தேர்தல் காலத்தில் நடக்கின்ற வேலைகள் தேர்தல் நாடகத்தைப்போல தற்காலிகக் கூத்துகளே. இந்த வேலைகள் சரியாக மதிப்பிடப்பட்டு மேற்கொள்ளப்படவில்லை. உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. இந்த நிலையில் இப்படித் தற்காலிகமாகப் புனரமைக்கப்படும் வேலைகளினால், அரச நிதி வீண் விரயமாக்கப்படுமே தவிர, உருப்படியான காரியங்கள் எதுவும் நடக்காது. இப்பொழுது நடக்கும் வேலைகளின் கதியும் இதுதான். இதுதான் பெரும்  பிரச்சினை. இதைப் பார்த்துச் சிரிப்பதா? கோபப்படுவதா? இதைத் தடுப்பதா? அங்கீகரிப்பதா? சனங்கள் உண்மையில் குழம்பிப்போயிருக்கிறார்கள். வேலியே பயிரை மேய்கிறது. நம்முடைய கைகளே நம் கண்ணைக் குத்துகின்றன.

கூட்டமைப்பினரைப்போல கிழக்கில் அரசாங்கத்துடன் இணைந்து  நிற்கும் அமைச்சர்களும் கட்சிகளும் இவ்வாறான திருப்பணிகளில் இறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இப்படியான அவசர கதி வேலைகளைச் செய்ய முற்படுவதால், “தயவு செய்து உள்ளதையும் கெடுக்காதீர்கள்” என்று முகப்புத்தகங்களில் தெரிவிக்கிறார்கள், ஊர்வாசிகள்.

ஆனால், இதையெல்லாம் எவர்தான் பொருட்படுத்தப்போகிறார்கள்? தேர்தல் பிசாசு மூளைக்குள் புகுந்து விட்டால், அத்தனை நரம்புகளும் அதனுடைய கட்டுப்பாட்டுக்குள்ளாகி விடும் போலுள்ளது. இதனால் வெட்கம், மானம், சூடு, சொரணை என்ற எந்த உணர்ச்சியுமே இல்லாமல், தேர்தலின் வெற்றியை மட்டுமே குறி வைத்து எந்த மாதிரியும் நடந்து கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள் போலும்.

ஆனால், அரசாங்கத்துக்கு அப்பால், அதிகாரம் எதுவுமே இல்லாத நிலையில் களத்தில் இறங்கியுள்ள கட்சிகள் முடிந்தளவுக்குத் தங்களுடைய கொள்கைகளை முன்னிறுத்தியே தேர்தல் வேலைகளைச் செய்கின்றன. அவற்றுக்கு வேறு வழியில்லை. ஆகவே சுயாதீனமாகவே தங்களுடைய வேலைகளைச்  வேண்டியுள்ளது. இதைச் செய்வதற்கு இந்தக் கட்சிகளுக்குப் பெரும் நெருக்கடிகள் உண்டு.

உண்மையில் கூட்டமைப்புப் போன்ற அரச ஆதரவுத் தரப்புகளை விட வெளியே நிற்கும் தரப்புகளுக்கே இந்தத் தேர்தல் அதிக வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது. அரசாங்கத்தின் மீதும் அதிகாரத்தில் இருப்போரின் மீதும் எப்போதும் மக்களுக்கு அதிருப்தி ஏற்படுவது இயல்பு. ஆகவே, அரசுக்கு வெளியே உள்ள தரப்புகள், இவ்வளவு காலமும் தங்களைப் பலப்படுத்தும் விதத்தில் மக்களுடன் இணைந்து நின்று பணியாற்றியிருக்கலாம். அதன் மூலமாக மக்களிடம் தங்களுக்குரிய செல்வாக்கைப் பெற்றிருக்க முடியும். இப்படிச் செய்திருந்தால், இன்று தேர்தலில் இவை சிரமங்களை எதிர் கொண்டிருக்க வேண்டியதில்லை. இதைச் செய்யாமல் விட்டதன் தவறுகளையே தற்போது அறுவடை செய்யும் நிலையில் இந்தத் தரப்புகள் உள்ளன.

குறிப்பாக தமிழ்த்தேசிய பேரவை (கஜேந்திரகுமார், பேரவையில் அங்கம் வகித்த சிவில் அமைப்புப் பிரதிநிதிகள் கூட்டு), தமிழ்த்தேசிய விடுதலைக் கூட்டமைப்பு (ஆனந்தசங்கரி – சுரேஸ் பிரேமச்சந்திரன் கூட்டணி) போன்றவற்றுக்கு இந்த நெருக்கடி உண்டு.

ஈ.பி.டி.பி மற்றும் பிள்ளையான் தரப்பு ஏற்கனவே அபிவிருத்திப் பணிகளையும் தங்கள் தளத்திற்கான அரசியற் பணிகளையும் மேற்கொண்டிருப்பதால், அவற்றுக்கு அதிக நெருக்கடிகள் இல்லை. ஏற்கனவே இருக்கின்ற வாக்கு வங்கியை – செல்வாக்கு வலயத்தை விரிவாக்குவது மட்டுமே அவற்றுக்கான சவாலாகும். ஆனால், கடந்த தேர்தலை விட இந்தத் தேர்தலில் இந்த இரண்டு தரப்பும் சற்றுக் கூடுதலான செல்வாக்கைப் பெறக் கூடிய நிலை தென்படுகிறது. இவற்றின் வேட்பாளர் பட்டியல் தேர்வில் இருந்து இவர்களுக்கு மக்களிடத்திலே உருவாகியிருக்கின்ற அபிப்பிராய அலை வரை இதை அவதானிக்க முடியும்.

மற்றத் தரப்பினர், சுயேட்சைகள். இவை பல இடங்களிலும் களமிறங்கியுள்ளன. சில சுயேட்சைக் குழுக்கள் ஏற்கனவே மக்களிடத்திலே செல்வாக்கைப் பெற்றவர்களைக் கொண்டவையாக உள்ளன. மக்களுடன் ஒன்றிணைந்து நின்று வேலை செய்தவர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தக் குழுக்கள் கணிசமான தாக்கத்தை உண்டாக்கக் கூடிய நிலை தெரிகிறது.

குறிப்பாக சனங்களிடம் எதிர்ப்பையும் கேலியையும் சந்திக்காத தரப்பினராக சுயேட்சைகள் காணப்படுகின்றனர். வழமையாகச் சுயேட்சைக் குழுக்களை மக்கள் பெரிதாகக் கண்டு கொள்வதில்லை. இந்தத் தடவை இதில் மாற்றம் தெரிகிறது. இதற்குப் பிரதான காரணம், இது உள்ளுராட்சித் தேர்தலாகும். இதனுடைய வேட்பாளர்கள் பெரும்பாலும் உள்ளுர் வட்டாரங்களைச் சேர்ந்தவர்கள். ஆகவே கட்சிகள் எல்லாம் பிரமுகர்களைத் தேர்வு செய்து கொண்டு போகும் போது, சுயேட்சைகள் மக்கள் பணியாளர்களை தேர்வு செய்திருக்கிறார்கள்.

இதுதான் இந்த மாறுதலாகும். அதாவது, சனங்கள் பெருங் கட்சிகளிலும் பெருந் தலைவர்களிலும் நம்பிக்கை இழந்து சலித்துப் போய் விட்டார்கள். சனங்களைப் பொறுத்தவரை, தங்களைக் கட்சிகளும் கை விட்டு விட்டன. தலைவர்களும் கை விட்டு விட்டார்கள். சின்னங்களும் கை விட்டு விட்டன. ஆகவே, இதற்கு மாறுதலாக எதையாவது செய்ய வேண்டும் என்றே சிந்திக்கிறார்கள். அது என்ன? எப்படியானது? என்று அவர்களுக்கு விளங்கவில்லை. அது வரையில் குழப்பங்கள் நீடிக்கும். குழப்பங்கள் நீடித்தால், தவறுகள் தொடரும்.

எது எப்படியோ எல்லாம் தேர்தல் முடிவுகளில் தெரியும். கெட்டிக்காரன் புளுகும் கூடத்தான்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *