Wednesday, December 13, 2017

.
Breaking News

இஸ்ரேலின் தலை நகராக ஜெருசலேம்- கூடுகிறது ஐநா சபை

இஸ்ரேலின் தலை நகராக ஜெருசலேம்-  கூடுகிறது ஐநா சபை

சர்வதேச எதிர்ப்பையும் மீறி, ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகரமாக அறிவித்த அமெரிக்காவின் முடிவில் அதிருப்தியடைந்த ஐ.நா சபை, நாளை கூடி இது குறித்து விவாதிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலின்போது தனது தேர்தல் வாக்குறுதியாக ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்த டிரம்ப் , நேற்று வெள்ளை மாளிகையில் உரையாற்றும் போது ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகரமாக அறிவித்தார்.

அமெரிக்காவின் நலனை கருத்தில் கொண்டும் இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்துக்கு இடையே அமைதியை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த முடிவை தான் எடுத்துள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

டிரம்பின் இந்த முடிவுக்கு கத்தார், ஜெர்மனி, ஈரான், பிரட்டன் , சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஐ.நா. சபை மற்றும் ஐரோப்பிய யூனியனும் அமெரிக்காவின் இந்த முடிவுக்கு அதிருப்தி வெளியிட்டுள்ளன. டிரம்பின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்த ஆஸ்திரேலியா , தனது தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றப்போவதில்லை என்று அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஜெருசலேம் பிரச்னை குறித்து ஐ.நா.சபையில் உடனடியாக விவாதம் நடத்த வேண்டும் என பொலிவியா, எகிப்து, பிரான்ஸ், இத்தாலி, செனகல், ஸ்வீடன், பிரிட்டன், உருகுவே ஆகிய நாடுகள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக ஐ.நா. பாதுகாப்பு சபை நாளை கூடுகிறது.

அதன்படி நாளை கூடும் ஐ.நா. பாதுகாப்பு சபையில் சிறப்பு கூட்டம் நடைபெறும் என்றும் இந்த கூட்டத்தில் ஜெருசலேம் பிரச்னை மட்டும்தான் விவாதிக்கப்படும் எனவும் டிசம்பர் மாதத்திற்கான ஐ.நா. சபையின் தலைமையான ஜப்பான் அறிவித்துள்ளது.

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேம் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், அது குறித்து கருத்து தெரிவித்திருந்த போப் ஆண்டவர், ஜெருசலேமின் “அடையாளம்” பாதுகாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். மேலும் என்ன நிலையில் அது இதுவரையில் இருந்ததோ அந்த நிலை தொடர்ந்து நீடிக்கட்டும் என்றும் கூறியிருந்தார் . ஆனாலும் அவருடைய கோரிக்கை மற்றும் பல நாடுகளின் எதிர்ப்பு என அத்தனையையும் மீறி இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அமெரிக்க அதிபர் அறிவித்துள்ளார்.

இதனிடையே, பாலத்தீன தலைவர் அப்பாஸ், தொலைக்காட்சி உரையில் ஒன்றில் ஜெருசலேம்தான் பாலத்தீன அரசின் என்றென்றும் நீடித்து நிலைக்கும் தலைநகர் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இது ஒரு “வரலாற்று சிறப்புமிக்க நாள்” என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவை பாராட்டியுள்ளதோடு, டிரம்பின் இந்த அறிவிப்பு, பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்த அமெரிக்க கொள்கைகளை மாற்றியமைத்துள்ளது என்றார்.

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக வெளியான அமெரிக்காவின் அறிவிப்பு, ஜெருசலேம் தொடர்பான நிலைப்பாட்டின் மீது சர்வதேச சமூகத்தின் பார்வைக்கும், அமெரிக்காவுக்கும் இடையே இடைவெளியை அதிகரித்துள்ளது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *