Wednesday, December 13, 2017

.
Breaking News

இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேம்- அமெரிக்காவுக்கு ஜோர்டன் எச்சரிக்கை

இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேம்- அமெரிக்காவுக்கு ஜோர்டன் எச்சரிக்கை

ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க அதிபர் டிரம்ப் அங்கீகரித்தால், “கடுமையான விளைவுகளை” சந்திக்க நேரிடும் என ஜோர்டனின் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.

இஸ்ரேல் – பாலஸ்தீனத்துக்கு இடையே நிலவும் ஜெருசலேம் தொடர்பான அமைதி பேச்சு வார்த்தை முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதற்கான முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. அடுத்த வாரத்தில் இதற்கான அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், டிரம்ப், இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில், ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பது அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என, அமெரிக்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சனிடம், ஜோர்டனின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஐமன் சஃபாடி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால், அவ்வாறு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என டிரம்பின் மருமகனான ஜாரட் கூஷ்னர் கூறியுள்ளார்.

இந்த சர்ச்சை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ஜோர்டனின் அமைச்சர் ஐமன் சஃபாடி, “ஜெருசலேத்தை, இஸ்ரேலின் தலைநகராக அறிவித்தால் ஏற்படும் அபாயகரமான விளைவுகள் குறித்து அமெரிக்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சனிடம் பேசியுள்ளேன். இந்த முடிவு அரபு மற்றும் இஸ்லாம் நாடுகளில் கொந்தளிப்பை ஏற்படுத்துவதோடு, அமைதியை நிலைநாட்டும் முயற்சிகளை பாதிக்கும் வகையில் அமையும்” எனக் கூறியுள்ளார்.

டிரம்ப் இவ்வாறு எந்த முடிவையும் அறிவிக்கக்கூடாது என்பதை வலியுறுத்த சர்வதேச ஆதரவை திரட்டும் முயற்சியில் பாலத்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

1967ம் ஆண்டு மத்திய கிழக்கு போர் நடைபெற்றதிலிருந்து கிழக்கு ஜெருசலேத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளது. சர்வதேச சட்டத்தின் கீழ், அப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசமாக கருதப்படுகிறது.

ஜெருசலேத்தை, பிரிக்க முடியாத தலைநகரமாக இஸ்ரேல் தீர்மானித்துள்ள நிலையில், பாலஸ்தீனியர்கள், கிழக்கு ஜெருசலேத்தை வருங்காலத்தில் அவர்கள் நாட்டின் தலைநகரமாக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த விஷயத்தில், அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான இஸ்ரேலுக்கு ஆதரவாக டிரம்ப் அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *