Wednesday, December 13, 2017

.
Breaking News

2018 பொதுத் தேர்தலில் ஹபீஸ் சயீது போட்டி

2018 பொதுத் தேர்தலில் ஹபீஸ் சயீது போட்டி

அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் பொதுத் தேர்தலில் சர்வதேச தீவிரவாதி ஹபீஸ் சயீது போட்டியிடுகிறார்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், சர்கோதாவை சேர்ந்தவர் ஹபீஸ் சயீது. அல்-காய்தா அமைப்பில் தீவிரவாத பயிற்சி பெற்ற அவர் கடந்த 1990-ல் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைத் தொடங்கினார். இதற்கு நிதி திரட்ட ஜமாத் உத்-தவா என்ற பெயரில் தொண்டு நிறுவனத்தையும் நிறுவினார்.

இந்திய நாடாளுமன்ற தாக்குதல், 2008 மும்பை தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் இவர் முக்கிய குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த 2008-ம் ஆண்டில் ஐ.நா. சபை இவரை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்தது. அமெரிக்க அரசு இவரது தலைக்கு ரூ.65 கோடி பரிசுத் தொகையை அறிவித்திருக்கிறது.

சர்வதேச நிர்பந்தம் காரணமாக லஷ்கர்-இ-தொய்பா, ஜமாத் உத்-தவா அமைப்புகளுக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்தது. கடந்த ஜனவரியில் ஹபீஸ் சயீதை வீட்டுக் காவலில் அடைத்தது. ஆனால் பாகிஸ்தான் போலீஸார் போதிய ஆதாரங்களை சமர்ப்பிக்காததால் லாகூர் உயர் நீதிமன்றம் அண்மையில் இவரை விடுதலை செய்தது.

ஹபீஸ் சிறையில் இருந்தபோது அவரது ஆதரவாளர்கள் ‘தி மில்லி முஸ்லிம் லீக்’ என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினர். பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் இந்த கட்சி போட்டியிட உள்ளது.

இதுகுறித்து ஹபீஸ் சயீது கூறியபோது, “காஷ்மீர் மக்களுக்காக நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன். இதை யாராலும் தடுக்க முடியாது. வரும் 2018 பொதுத்தேர்தலில் ‘தி மில்லி முஸ்லீம் லீக்’ போட்டியிடும். நானும் தேர்தலில் போட்டியிடுவேன்” என்று தெரிவித்தார்.

ஊழல் குற்றச்சாட்டு காரணமாக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததால் அவரது என்.ஏ.-120 தொகுதிக்கு அண்மையில் இடைத்தேர்தல் நடந்தது. இதில் ஹபீஸ் சயீதின் ஆதரவாளர் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *