Thursday, February 22, 2018

.
Breaking News

அன்று: நான்கு குழந்தைகளின் தாய் இன்று: நல்ல மாமியார்!

அன்று: நான்கு குழந்தைகளின் தாய் இன்று: நல்ல மாமியார்!

பிரபல இந்தி நடிகை ரவீணா தாண்டன் ரொம்பவும் வித்தியாசமானவர். அவர் திருமணத்திற்கு முன்பே இரண்டு பெண் குழந்தைகளை தத் தெடுத்து வளர்த்தார். அதன் பிறகு பட விநியோகஸ்தரான அனில் தடானியை திருமணம் செய்து கொண்டார். பின்பு ரவீணாவுக்கு ரஷா என்ற மகளும், ரன்பீர் வர்தன் என்ற மகனும் பிறந்தார்கள். வளர்ப்பு மகள்கள், பெற்றெடுத்த குழந்தைகள் என்று எந்தவித பாகுபாடும் காட்டாமல் அனைவரையும் ஒருசேர வளர்த்து ஆளாக்கிவிட்டார்.

மற்ற நடிகைகள் ஆச்சரியத்தோடு பார்க்கும் விதத்தில் நடிப்பையும், குடும்ப நிர்வாகத்தையும் ஒரு சேர கவனித்து சிறப்பு பெற்ற ரவீணா இப்போது அடுத்த நிலைக்கும் சென்றுவிட்டார். வளர்ப்பு மகளுக்கு திருமணம் செய்துவைத்து மாமியாராகவும் பதவி உயர்வு பெற்றிருக்கிறார். அவர் தனது வித்தியாசமான வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.

“நான் எப்போதுமே குடும்பத்திற்கு தான் முதலிடம் கொடுப்பேன். நான் வகித்த குடும்ப பொறுப்புகளில் அம்மா பொறுப்பே கஷ்டமானது. குழந்தைகளிடம் நல்ல பெயர் வாங்குவது சிரமமானது. அவர்களை வழிநடத்துவதும் சவாலான விஷயம்.

நாம் ஒன்றுக்காக இன்னொன்றை கைவிட வேண்டியதில்லை. குடும்பத்திற்காக நடிப்பை உதறவேண்டிய அவசியமும் இல்லை. வாழ்க்கையில் நமக்கு கிடைக்கும் எல்லாமே ஒரு வரம். சினிமா என் கனவு. இன்றும் நான் சினிமாவை நேசிக்கிறேன். குடும்ப வேலைகளுக்கு நடுவே சினிமாவிலும் நடிக்கிறேன். ஒருபோதும் சினிமாவை கைவிட்டுவிட மாட்டேன்.

சினிமா, குடும்பம் இரண்டையும் இரண்டு கண்கள் போல நினைத்து கடமையை செய்கிறேன். எல்லா வீட்டு வேலைகளும் என் நேரடி கண்காணிப்பில்தான் நடக்கிறது. வீட்டு நிர்வாகம், குழந்தைகள் பராமரிப்பு போன்றவைகளையும் நானே பார்த்துக்கொள்கிறேன். அவர்களுக்கு காலையில் உணவு தயாரித்து கொடுத்து பள்ளிக்கு அனுப்புவது முதல் வீட்டுப்பாடம் எழுத வைப்பது வரை எல்லாமுமே என் வேலைதான். எந்த பொறுப்பையும் நான் தட்டிக் கழிப்பதில்லை.

நான் திருமணத்திற்கு முன்பே இரண்டு குழந்தைகளை தத்தெடுத்தது பற்றி இன்றும் கேள்வி எழுப்பத்தான் செய் கிறார்கள். அதை சமூக சேவையாத்தான் செய்தேன். ஆதர வற்ற அவர்களை என் வாழ்க்கையோடு இணைத்துக்கொண்டேன். அவர்களுக்கு என் முழுமையான அன்பை கொடுத்தேன். அவர்கள் என் வாழ்க்கையை முழுமைப்படுத்திவிட்டார்கள். நான் குழந்தைகளை தத்தெடுக்கும் முன்பு அது பற்றி என் பெற்றோரிடம் பேசினேன். அவர்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால் அது என் திருமணத்தில் பிரச்சினையை உருவாக்கிவிடக்கூடாது என்று பயந்தார்கள்.

அந்த நல்ல செயல் என் திருமணத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. என்னை விரும்பிய அனில், முதலில் என் வீட்டிற்கு வந்து என் பெற்றோரிடம் பேசினார். என் இரண்டு தத்துக் குழந்தைகளிடமும் பேசினார். அவருக்கு என் குடும்பத்தை மிகவும் பிடித்துபோய்விட்டது. ‘உன் சேவையில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன்’ என கூறினார். திருமணம் முடிவானது. இன்றுவரை எந்தப் பிரச்சினையும் எங்களுக்குள் இல்லை. திருமணத்திற்கு பிறகும் என் தத்துக் குழந்தைகள் என்னுடனே வசித் தார்கள்.

எங்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. இன்றுவரை திருமண வாழ்க்கை சிறப்பாகவே சென்று கொண்டிருக்கிறது. அவர் என்னை எதற்காகவும் விட்டுக் கொடுத்ததில்லை. அவர் பரந்த மனம் கொண்டவர். அவருடைய நல்ல மனம் என்னை அவரை ஒரு ஹீரோ போல் காட்டியது. என்னுடைய எண்ணங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருகிறார். திருமண வாழ்க்கை என்பது ஒரு ஒப்பந்தம். ஒருவருக்கொருவர் நிறைய விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். அதனை நாங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து கொண்டிருக் கிறோம்.

நான் அனிலை முதன் முதலில் சந்தித்தபோது பல விஷயங்கள் எங்களுக்குள் ஒத்துப்போனது. அதனால் விவாதம் செய்து முடிவெடுக்க வேண்டிய நிலையில் அன்று எதுவும் எங்களுக்குள் இருக்கவில்லை. நான் தத்தெடுத்த இரண்டு பெண்களையும் அவருக்கு ரொம்ப பிடிக்கும். அவர்களை வளர்ப்பதில் மிகவும் உதவியாக இருந்தார். அவர்களை குளிப்பாட்டுவது, சாப்பாடு ஊட்டுவது என்று எல்லா வேலைகளையும் அவர்தான் செய்தார். நல்ல குடும்பத் தலைவராக இன்று வரை இருக்கிறார்.

அவர் செய்து கொண்டிருக்கும் பட விநியோக பணியிலும் நான் அவருக்கு உதவுகிறேன். புதிய படத்தின் டிரைலர் பார்க்க என்னையும் அழைத்து செல்வார். டிரைலர் பார்த்த உடனேயே முழு படத்தின் மதிப்புத் தெரிந்துவிடும். என்னிடம் கேட்காமல் அவர் எந்த படத்தையும் வாங்க மாட்டார். இன்றுவரை தொழில் நன்றாகவே போய்க் கொண்டிருக்கிறது. நானும் அவருக்கு எல்லா விதத்திலும் துணையாக இருக்கிறேன்.

நாங்கள் கூட்டுக்குடும்பமாக வசிக்கிறோம். மாமனார், மாமியாரும் எங்களோடு இருப்பது எங்களுக்கு பல விதங்களில் உதவியாக இருக்கிறது. அவர்கள் தனியாக வசித் திருந்தால் என்னால் சினிமாவில் நடித்திருக்க முடியாது. பட வெளியீடு வேலையாக நான் ஒன்றரை மாதங்கள் வீட்டை விட்டு வெளியே தங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. அப்போது மாமனார், மாமியார்தான் என் குழந்தைகளை கவனித்துக்கொண்டார்கள்.

ஒரே ஒரு குழந்தையை மட்டும் நான் வளர்த்திருந்தால் கஷ்டப்பட்டிருப்பேன். நான்கு குழந்தைகள் என்பதால் அவர்கள் ஒருவரை ஒருவர் நன்றாக கவனித்துக்கொள்கிறார்கள். எனக்கு உதவியாகவும் இருப்பார்கள். நான் தத்தெடுத்த இரண்டு பிள்ளைகளும், நான் அவர்களுக்கு கற்றுக்கொடுத்ததை நான் பெற்றெடுத்த குழந்தை களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள். அதனால் எனக்கு வேலைப்பளு குறைந்துவிட்டது.

தாங்கள் தத்தெடுத்து வளர்க்கப்படுகிறோம் என்ற குறை ஒருபோதும் அவர்கள் மனதில் ஏற்பட்டதில்லை. அன்பு காட்டவும், அடைக்கலம் கொடுக்கவும்தான் நான் அவர்களை தத்தெடுத்தேன். என் முழுமையான அன்பை கொடுத்தேன். உண்மையான அன்பு வாழ்க்கையை முழுமையாக்கிவிடும்”

ரவீணா தாண்டன் அழகான நடிகை என்பதையும் தாண்டி, அழகான அம்மாவாகவும், நல்ல மாமியாராகவும் திரை உலகில் போற்றப்படுகிறார்!

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *