Monday, February 19, 2018

.

பத்மாவதி ( பத்மினி) – விமர்சனம்!… அண்டனூர் சுரா.

பத்மாவதி ( பத்மினி) – விமர்சனம்!… அண்டனூர் சுரா.

திரைத்துறையினரின் ஒரே பேசும் பொருள் பத்மாவதி . அப்படத்தில் நடித்த நடிகை ,அப்படத்தை இயக்கிய இயக்குநர் இருவரின் தலைக்கும் பல கோடிகள் பரிசாக அறிவிக்கப்பட்டிருப்பது நாம் அறிந்ததே ! இதற்கிடையில் பழைய நூலொன்று வாசிக்கக் கிடைத்தது. அந்நூல் ராணி பத்மினி. எடுத்து வாசித்தேன். சுவாரசியத்திற்கு குறைவில்லை.

கதை நடப்பது பதினான்காம் நூற்றாண்டு.

மேவார் நாட்டின் தலைநகரம்தான் சித்தூர். மன்னன் பீம்சிங். ராம் சிங் , தன் சிங் மந்திரிமார்கள். பீங் சிங்கின் மனைவி பத்மினி பதினாறு வயதுடைய பேரழகி. அவளது துணைவி பவானி.

தில்லியை ஆட்சி செய்கிறான் அலாவுதீன். அவனை பாதுஷா என்று எல்லாரும் அழைக்கிறார்கள். அவன் சித்தப்பன் ஆட்சியை வஞ்சகத்தால் கவர்ந்து அவனைக் கொன்று ஆட்சி செய்கிறான். அவனது போர்ப்படை தளபதி மாலிக்காபூர். இவன் மங்கோலிய படையெடுப்பின் போது அலாவுதீனையும் அவனது ஆட்சியையும் காத்தவன். அவன்தான் அலாவுதீனிடம் பீம்சிங் மனைவி பத்மினி பற்றிச் சொல்கிறான்.

அலாவுதீன் பீம் சிங்கிற்கு கடிதம் எழுதுகிறான். இந்துஸ்தான் தேசத்தை என் ஆட்சியின் கீழ் கொண்டு வர நீதான் தடையாக இருக்கிறாய். கூர்ஜரம், மாளவம், ராஜபுதனம், தேவகிரி என அத்தனை நாடுகளும் என் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. மேவார் நாட்டினை நீயே ஆண்டுக்கொள். ஆனால் எனக்கு கப்பம் கட்டி விடு என்கிறான். மூன்று மாதத்திற்குள் ஓலை அனுப்பவில்லையென்றால் உன் நாட்டின் மீது படையெடுப்பேன் என்கிறான். படையும் எடுக்கிறான். அலாவுதீன் படை சித்தூர் நகரத்தை முற்றுகையிட்டு கோட்டையைப் பிடிக்கிறது.

பீம்சிங் சமரசம் பேசுகிறான். அலாவுதீன் உன் மனைவியான சித்தூர் ராணியை பார்க்க வேண்டும் என்கிறான். ராஜபுத்திர வம்சத்தில் அப்படியான நடைமுறை கிடையாது என்கிறான் பீம்சிங். அப்படியானால் கண்ணாடி வழியே காட்டு என்கிறான்.

நிலைக்கண்ணாடி வைக்கப்பட்டு பணிப்பெண்கள் படைச்சூழ கண்ணாடி முன் தோன்றும் பத்மினி அழகில் சொக்கிப்போகிறான் அலாவுதீன். அச்சந்திப்பு நடைபெறுவது இரவு என்பதால் பத்மினியைக் கவரும் பொருட்டு பீம்சிங் கைது செய்யப்பட்டு டெல்லிக்கு கடத்தப்படுகிறான்.

அலாவுதீன் பீம் சிங்கை எனக்கு மனைவியாகும் படி கடிதம் எழுத பணிக்கிறான். பீம்சிங் மறுக்கிறான். இதற்கிடையில் பத்மினி அலாவுதீனுக்கு கடிதம் எழுதுகிறாள். உன்னை நான் நேரில் சந்திக்க விருப்பமென்றும் , உன் மடியில் துகில ஆசையென்றும்….

பத்மினி தன் பணிப்பெண்கள் படை சூழ டெல்லி அலாவுதீன் அரண்மனைக்குச் செல்கிறாள். தன் கணவனை காட்டினால் மட்டுமே உன் ஆசைப் படி உன் மடியில் துகில்வேன் என்கிறாள். அலாவுதீன் முதலில் மறுத்து பிறகு சம்மதிக்கிறான்.

பீம்சிங், தன் மனைவி இத்தனைத் தூரம் தனக்காக வந்ததை விரும்பவில்லை. அவளது கற்பின் மீது சந்தேகம் கொள்கிறான். சித்தூர் மக்களின் வசவுச் சொற்களுககு நீ ஆளாகிவிட்டாய் என்கிறான்.

அன்று இரவு அரண்மனையில் வாள் சண்டை நிகழ்கிறது. பத்மினியுடன் வந்த பணிப்பெண்கள் ஆடவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் வேடத்தைக் களைத்து போரிடுகிறார்கள். பத்மினி தன் கணவனுக்காக போரிட்டு, மீட்டு குதிரையில் சித்தூர் செல்கிறாள்.

அலாவுதீன் சித்தூர் மீது படையெடுத்து வருகிறான். பீம்சிங் அலாவுதீன் சண்டையிடுகிறார்கள். சித்தூர் பெண்கள் நெருப்பு மூட்டி அதில் பாய்வதற்காகக் காத்திருக்கிறார்கள். பீம்சிங் சண்டையில் தோல்வியைத் தழுவ பத்மினி மற்றும் பெண்கள் தீயில் இறங்குகிறார்கள். பத்மினி கிடைக்காத ஏமாற்றத்தில் அலாவுதீன் டெல்லி திரும்புகிறான்.

குறிப்பு – இக்கதையில் அலாவுதீனைத் தேடி பத்மினி சொல்வதும் அவனது மடியில் படுத்திருக்க விருப்பம் தெரிவிப்பதும் அவனைத் தோற்கடிக்க அவள் செய்யும் தந்திரமே. ஆனால் ராஜபுத்திர பெண்கள் கற்பில் சிறந்தவர்கள் என்றும் பிற ஆண்களை தலை நிமிர்ந்து பார்க்காதவர்கள் என்றும் கற்பிதம் செய்யப்படுகையில் அவளது அத்தனை நீண்ட பயணமும் அலாவுதீனை நேரில் சந்திப்பதும் இந்து மதத்தைக் கட்டமைப்பவர்கள் விரும்பமாட்டார்கள். இதைவிடவும் மற்றொன்று அலாவுதீன் – பீம்சிங் சண்டையில் பீம்சிங் தோற்கிறான் . அதன் பொருட்டே பத்மினி உட்பட பல பெண்கள் தீக்குழிக்குள் இறங்குகிறார்கள்.

எனது கேள்வி தன் மனைவியை அபகரிக்க நினைத்தவனை தன் மண்ணில் வைத்து பீம்சிங் அலாவுதீன் தலையைக் கொய்திருக்க வேண்டாமா…? .

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *