Monday, February 19, 2018

.

பத்மாவதி திரைப்படத்துக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரத்தை நடத்தும் ஹிந்துத்வா வெறியர்கள், இந்த பழங்கால இளவரசி ஸ்ரீலங்காவைச் (சிங்கள் – தீப்) சோந்தவர் என்பதை அறிவார்களா? லூசியன் ராஜகருணாநாயக்க!

பத்மாவதி திரைப்படத்துக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரத்தை நடத்தும் ஹிந்துத்வா வெறியர்கள், இந்த பழங்கால இளவரசி ஸ்ரீலங்காவைச் (சிங்கள் – தீப்) சோந்தவர் என்பதை அறிவார்களா?   லூசியன் ராஜகருணாநாயக்க!

“தக்கோத் பத்மாவதி ஆலே நொக்கரா பரி” – ‘ஒருவர் பத்மாவதியைப் பார்த்தால் அவரால் அவளைக் காதலிக்காமல் இருக்க முடியாது’.

டவர் மண்டப நாட்களில் இருந்தே பாடப்பட்டு வரும் இந்தப் புகழ்பெற்ற பாடல், ஸ்ரீலங்காவைச் (சிங்கள – தீப்) சேர்ந்த கண்கவர் அழகியான பழங்கால இளவரசி பத்மாவதியை அடிப்படையாகக் கொண்டது, டெல்லி முஸ்லிம் சுல்தான் அலாவுதீன் காலிஜியினால் சவாலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் சமஸ்தானமான சித்தூரின் ஆட்சியாளாரான ரத்தன் சிங் பத்மாவதியை மணம் செய்திருந்தார். அவளது பெயர் இப்போது அரசியல் போட்டி மற்றும் வன்முறை அச்சுறுத்தலுக்கும் மையமாக இருந்து பாலிவுட்டினையும், இந்தியாவின் பரந்த சமாதானத்தையும் பாதிப்பதுடன் மற்றும் ஐக்கிய இராச்சியத்துக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது.

புதிய படமான பத்மாவதியை திரையிடுவதற்கு எதிராக பிரச்சாரம் செய்பவர்களுக்கு, சமீபத்தைய போட்டிகள், மதிப்புமிக்க ஒரு திரைப்பட இயக்குனர் மீது தாக்குதல், ஒரு தலைசிறந்த சினிமா நட்சத்திரத்தின் தலையை வெட்டுவதான அச்சுறுத்தல்;கள், மற்றும் ஏனைய வன்முறைகள் என்பனவற்றுக்கு வழி வகுத்திருக்கும் பெயருக்கும் அழகுக்கும் சொந்தக்காரியான இந்தப் பழங்கால இளவரசி, ஒரு இந்தியர் அல்லாதவர் அநேகமாக சிங்கள் – தீப் அல்லது ஸ்ரீலங்கா என்கிற நாட்டைச் சேர்ந்தவராக இருப்பதற்குச் சாத்தியமுள்ளது என்பதைப் பற்றி ஏதாவது தெரியுமா?

புராணங்கள் வரலாற்றில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இது பாரதத்தின் அயல் நாடான சிங்கள் – தீப் இன் இளவரசியைப் பற்றிய ஒரு புராணக்கதை – இந்தக் கதையானது, அவள் வளர்க்கும் கிளி அவளது மயக்கும் அழகைப்பற்றி அவளது எதிர்காலக் காதலனும் மற்றும் கணவனுமாகப்போகும் இளவரசனிடம் சொன்னதும், மற்றும் பின்னர் அவளது கரம் பற்றுவதற்காக அவன் ஒரு பிரமாண்டமான இராணுவப் போர் தொடுக்க வழிவகுத்ததும் இறுதியில் அவளது காதல் கணவனின் எரியும் சிதையில் தானே சுயமாக வீழ்ந்து உயிர்துறந்ததையும் பற்றியது.

பத்மாவதியின் கதை இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய இரு நாடுகளினதும் நாட்டுப்புறவியலில் ஒரு பகுதியாக உள்ளது, இது வரலாற்று நம்பகத்தன்மை இல்லாத ஒரு அழகிய புராணக்கதை. இன்று இந்தியாவில் உள்ள ஒருவர் காண்பது என்னவென்றால், இந்த அழகிய புராணக்கதை  எவ்வாறு பலரும் பின்பற்றும் ஒரு கொடிய அச்சுறுத்தல் மற்றும் வன்முறைக்கு காரணமாக மாறியது, மேலும் நாட்டின் ஆட்சியாளர்கள் மற்றும் தலைவர்கள் சமாதானம், கலை மற்றும் கலாச்சாரம் என்கிற காரணத்தைக்காட்டி இதில் தலையீடு செய்ய துணிவற்றவர்களாக உள்ளார்கள், ஆனால் வெட்கக்கேடான முறையில் மதத் தீவிரவாதம், கொடூரமான தேசியவாதம் என்பனவற்றுக்கு உந்து சக்தி கொடுத்து, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் ஜனநாயகத்தின் பொருள் பற்றிய மிகப்பெரிய கேள்வியை எழுப்பி உள்ளார்கள் என்பனவற்றையே.

பத்மாவதி பற்றிய புராணக்கதை இந்தியக் கவிஞர் மாலிக் முகமட் ஜெய்சி (கி.பி 1540) யின் காவியக் கவிதைகளில் 14ம் நூற்றாண்டு கதை ஒன்றை அடிப்படையாகக் கொண்டு பெருமளவு வேரூன்றி உள்ளது, அவர் சொல்கிறார், ராணி பத்மினி அல்லது பத்மாவதி அப்போது சிங்கள் இராச்சியம் என அழைக்கப்பட்ட ஸ்ரீலங்காவின் அரசன் கந்தர்வ சென்னின் மகள் என்று. இந்த அரசனைப் பற்றியோ அல்லது அவரது மகளைப் பற்றியோ ஸ்ரீலங்கா எந்தப் பதிவையும் கொண்டிருக்கவில்லை. ஆனால் இந்தப் புராணம் இன்றுவரை இந்தியாவில் தழைத்தோங்கி வருகிறது, அதேவேளை பல நூற்றாண்டுகளாக அந்தப் புராணம் வழங்கிய கீர்த்திமிக்க அழகு மற்றும் மகிழ்ச்சியில் இருந்து அசிங்கமான வெறுப்பை நோக்கி அது வெகுதூரம் நகர்ந்துள்ளது.

அமைதிப் படமான ‘கமோனார் எகெயின்’, தமிழ்படமான ‘சித்தூர் ராணி பத்மினி’ மற்றும் இந்திப் படமான ‘மகாராணி பத்மினி’ உட்பட இந்தக் கதையைத் தழுவி இந்தியாவில் பல படங்கள் உருவாகியுள்ளன. ஆனால் புதிய பத்மாவதி படம் எதிர்நோக்கியுள்ள பெரிய சர்ச்சை என்னவென்றால், ஹரியானாவைச் சேர்ந்த ஒரு மூத்த பிஜேபி தலைவர், முன்னணி நடிகை தீபிகா படுகோனேயின்; மற்றும் அதன் இயக்குனரான சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோரின் தலைகளைத் துண்டிப்பதற்கு 10 கோடி ரூபாய் பணப்பரிசினைத் தருவதாக அறித்துள்ளார். பரிசு பற்றிய இந்த அறிவிப்பு, இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆளும் பாரதீய ஜனதா கட்சியைச் (பிஜேபி)சேர்ந்த ஹரியானா மாநிலத்தின் ஒரு முன்னணித் தலைவரான சுராஜ் பால் அமு என்பவரிடமிருந்து வந்திருக்கிறது. இந்தப் படத்தை எதிர்த்த மற்றொருவர் அறிவித்த 5 கோடி ரூபா பணப்பரிசினை சுராஜ் பால் அமு, இரட்டிப்பாக அதிகரித்துள்ளார். பெரிதாகக் குரலெழுப்பும் இந்து தீவிரவாத குழுவான ராஜ்புத் காரண் சேனா என்கிற அமைப்பு ஜெய்பூரில் வைத்து இயக்குனர் பன்சாலியைத் தாக்கியதுடன் நொய்டாவில் உள்ள ஒரு திரையரங்கினையும் அழித்துள்ளார்கள் அத்துடன் இராமாயண பாரம்பரிய பாணியில் நடிகை தீபிகா படுகோனேயின் மூக்கை அறுத்து அவருக்குத் தீங்கு விளைவிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்து அவரை அச்சுறுத்தி உள்ளார்கள்.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் இப்போது குஜராத் உட்பட ஐந்து இந்திய மாநிலங்கள் தாங்கள் ஆட்சேபிக்கும் பகுதிகள் தணிக்கை செய்யப்படாவிட்டால் எதிர்காலத்தில் பத்மாவதி படத்தை தங்கள் பகுதியில் திரையிடுவதற்கு தடை விதித்துள்ளன, இது தொடர்பாக தெரிவிக்கப்படுவது, படத்தில் ராணி பத்மாவதிக்கும் மற்றும் டெல்லியின் முஸ்லிம் சுல்தானுக்கும் இடையே காதல் காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது என்று, இதை படத்தின் தயாரிப்பாளர்கள் தவறு என்று சொல்கிறார்கள். மேலும் பத்மாவதியின் நடனக்காட்சி ஒன்றில்; அவரது இடுப்பு தெரிகிறது என்று சொல்லியும் எதிர்ப்புத் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் படத்தை யாரும் இதுவரை பார்க்கவில்லை மற்றும் இந்தப்படம் இன்னமும் திரைப்படத் தணிக்கை குழுவிற்கு காண்பிக்கப்படவில்லை ஆயினும்கூட இப்படியான எதிர்ப்புகள் தோன்றியுள்ளன.

கடந்த வாரம் குஜராத் மாநிலத்தில் வெளியான தடை, பத்மாவதி படச் சர்ச்சையில் பாரிய அரசியல் தாக்கம் இருப்பதை வெளிக்காட்டுகிறது, மாநில சட்டசபையின் கட்டுப்பாட்டை பெறுவதற்காக போட்டிபோடும் பிஜேபி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே நடைபெறும் தேர்தல் இப்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. 22 வருடங்களாக குஜராத் பிஜேபியின் கட்டுப்பாட்டில்  உள்ளது, நரேந்திர மோடி பிரதம மந்திரியாக வருவதற்கு முன்னர் குஜராத் முதல் மந்திரியாக இருந்து ஆட்சி நடத்தியுள்ளார். அதனால் போட்டியாளரான காங்கிரஸ் கட்சியும் இந்தப் படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு ஆதரவு தெரிவிப்பது ஆச்சரியம் தரவில்லை. காங்கிரஸ் பேச்சாளர் சக்திசிங் கோஹ்லி, ராஜபுத்திர வரலாற்றுக்கு  எந்த ஒரு திரிபை ஏற்படுத்துவதையோ அல்லது எந்த ஒரு சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்துவதையோ தமது கட்சி சகித்துக் கொள்ளாது எனத் தெரிவித்துள்ளார். “என்ன விலை கொடுத்தாலும் குஜராத்தில் பத்மாவதி படம் திரையிடுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை புரிந்து சாதனை படைத்துள்ள குஜராத்தின் இந்து வெறியர்களிடம் அவர் விண்ணப்பித்துள்ளார்.

இது இந்து மத உணர்வின் ஆழத்தைக் காட்டுவதுடன் பெருமளவு தீவிரவாதம் மற்றும் ஏனையவர்களின் உணர்வுகளில் சகிப்புத்தன்மையற்ற நிலை என்பன இந்திய அரசியல் அதேபோல சமூக வாழ்வு என்பனவற்றில் பாரிய தாக்கத்தை இன்று இந்தியாவில் ஏற்படுத்துகிறது, மற்றும் பல தசாப்தங்களாக இந்தியாவில் வலுவாக நின்ற ஜனநாயகத்தின் மதிப்பு மற்றும் மதச்சார்பற்ற அதன் அரசியலமைப்பின் முக்கிய கொள்கைக்கும் அச்சுறுத்தல் விடுக்கிறது.

சமீபத்தில் பத்மாவதி படத்திற்கு ஆதரவு தெரிவித்து தனது மாநிலத்தில் அதைத் திரையிடும்படி அழைப்பு விடுத்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பனர்ஜி கூட அந்தப் படத்திற்கு எதிரான சக்திகளால் அச்சுறுத்தப் பட்டுள்ளார். ஹரியானாவின் சுராஜ் பல் அமு ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்போது தெரிவித்தது: “மம்தா பனர்ஜி, இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியை கொல்கத்தாவுக்கு வரும்படி வரவேற்றுள்ளதாக நான் அறிகிறேன். மற்றும் இது ராமனின் தம்பி லக்ஷ்மனின் பூமி என்பதை நான் அவருக்குச் சொல்ல விரும்புகிறேன். மற்றும் லக்ஷ்மன் சூர்ப்பனகைக்கு என்ன செய்தார்  என்பதை நான் இங்கு குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை”. இதில் சுவராஸ்யமானது என்னவென்றால் இராமாயணத்தில் சூர்ப்பனகை, சீதையை கவர்ந்து சென்றதாகச் சொல்லப்படும் ராவணனின் சகோதரி, மற்றும் அவளது மூக்கை ராமனின் தம்பி லக்ஷமனன் அறுத்தார் – இதுதான் சூர்ப்பனகைக்கு கிடைத்த தண்டனை! கட்டுக் கதைகள் மதம் மற்றும் இன நம்பிக்கைகளில் ஆபத்தான விளைவுகளைத் தோற்றுவிப்பதால், இப்போது நாங்கள் பத்மாவதியில் காண்பது போல, புராணங்கள் நிஜ வாழ்விலும் அச்சுறுத்தும் விளைவுகளை எற்படுத்துகின்றன.

பத்மாவதியின் தற்போதைய எதிர்ப்பு, இந்தியாவின் மிகப் பெரும் வரலாற்று நினைவுச் சின்னமான தாஜ்மகாலுக்கு இந்துக்களின் குரல்களால் எழுந்துள்ள சமீபத்தைய விமர்சனம் மற்றும் எதிர்ப்பு என்பனவற்றுடன் தொடர்புடையது. ஒக்ரோபர் 2017ல், இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் பிஜேபி அரசாங்கம், இந்துத்துவத்தை முன்னேற்றும் பிஜேபி யின் முயற்சியின் பிரதிபலிப்பாக மாநிலத்தின் சுற்றுலாக் கையேட்டில் இருந்து தாஜ்மகாலை நீக்கியது, இது, இந்து நம்பிக்கை, கலாச்சாரம், மற்றும் வரலாறு என்பனவற்றை முக்கிய இந்திய அடையாளமாக்க இடம்தேடும் சித்தாந்தமாகும், அத்துடன் இந்தியாவின் பல பாகங்களில் பிரித்தானிய காலனித்துவத்துடன் சேர்ந்து முஸ்லிம் ஆதிக்கம் இருந்த காலகட்டத்தை அடிமைத்தனத்தின் காலகட்டமாக காட்டும் நோக்கமும் ஆகும்.

‘த அத்திலாந்திக்’ பத்திரிகையில் ஒரு வர்ணனையாளர் சமீபத்தில் தெரிவித்திருப்பது: “தாஜ்மகாலின் இந்தியத் தன்மைக்கு சவால் விடுத்திருப்பது இந்தியாவிலுள்ள முஸ்லிம்களின் இந்தியத் தன்மைக்கு சவால் விடுவதாகும் – இது பிஜேபி யின் சொல்லாட்சியில் உள்ள  ஒரு உறுதியான கருத்து. ஜூன் மாதம் உத்தரப் பிரதேச முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் குறிப்பிட்டிருப்பது, ”இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டு பிரமுகர்களுக்கு தாஜ்மகாலின் உருவ மாதிரிகள், மற்றும் இந்தியாவின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்காத வேறு ஸ்தூபிகளையுமே பரிசளிப்பது வழக்கமாக உள்ளது” என்று. அதற்குப் பதிலாக பகவத் கீதை, மற்றும் இராமாயணம் போன்ற புனிதமான இந்துமத நூல்களைப் பரிசாக அளிக்கும் மோடியை அவர் புகழந்தார். பிஜேபி அரசியல்வாதியான சங்கீத் சொம், துரோகிகளால் கட்டப்பட்ட தாஜ்மகால் இந்தியாவுக்கு ஒரு கறையாக உள்ளது எனக் குறிப்பிட்டார், அவர் மேலும் குறிப்பிடுகையில் ஷாஜகான் இந்துக்களை அழித்துவிட விரும்பியதால் இந்திய வரலாற்றில் தாஜ்மகாலுக்கு இடம் இல்லை என்றார். “இவர்கள் எங்கள் வரலாற்றில் ஒரு பகுதியாக இருந்தால், அப்போது அது ஒரு துயரமாக இருக்கும் மற்றும் இந்த வரலாற்றை நாங்கள் மாற்றுவோம்” என்று அவர் எச்சரிக்கை கூடச் செய்தார். இந்துத்வா ஆதரவாளர்கள், தாஜ்மகால் உண்மையில் ஜெய்பூர் மகாராஜாவால் கட்டப்பட்ட 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு இந்துக் கோவில், அதன் பெயர் அசல் சமஸ்கிருதத்தில் உள்ள தேஜோ மகாலயா என்பதன் திரிபு என்றும் வாதிடுகிறார்கள். தேஜோ மகாலயா என்பதன் அர்த்தம் “தேஜின் (இந்துக்கடவுள் சிவாவின் ஒரு பெயர்) உறைவிடம்” என்பதாகும். (2017 நவம்பர் 27 – த அத்திலாந்திக்கில் ஹரிசன் அக்கின்ஸின் கருத்து).

பத்மாவதி சர்ச்சை இப்போது  இந்தியப் படங்களுக்கு ஒரு முக்கிய இடமான வெளிநாடான ஐக்கிய இராச்சியத்துக்கும் சென்றுள்ளது. திரைப்படங்களை வகைப்படுத்தும் பிரித்தானிய சபை, 12 ஏ தரம் அளித்து இந்தப்படத்தை ஐக்கிய இராச்சியத்தில் வெளியிடுவதற்கு வகைப்படுத்தி உள்ளது, இந்தியாவுக்கு முன்பு ஐக்கிய இராச்சியம் படத்தை பார்த்துவிடக்கூடும் என்பதை உணர்ந்து உடனடியாகவே இந்திய தேசிய தொலைக்காட்சியில் ஐக்கிய இராச்சிய திரையரங்குகளுக்கு ஒரு எச்சரிக்கை விடப்பட்டது.

எழுத்தாளர் சண்ணி மாலிக் கார்டியன் பத்திரிகையில் (24 நவம்பர்,2017) தெரிவித்திருப்பது, “அது இந்திய தொலைக்காட்சி சேவைகளில் ஒரு முக்கிய செய்தியாக இருந்தது. ஒரு கர்ணி சேனா தலைவர் குடியரசு தொலைக்காட்சி சேவையில் தெரிவித்திருப்பது: “நாங்கள் ஒரு சர்வதேச நீதி மன்றத்துக்குச் சென்று அந்தப் படத்தை தடை செய்யும்படி கோருவோம். ஐக்கிய இராhச்சியத்தில் வசிக்கும் எனது ராஜபுத்திர சகோதரர்களிடம் படத்தை அங்கு திரையிடுவதற்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்கும்படி நான் அழைப்பு விடுக்கிறேன்…. நானே கூட ஐக்கிய இராச்சியத்துக்கு போய்விடுவேன், ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன் அந்த படத்தை திரையிடும் எந்த திரையரங்கும் தீ வைத்து கொளுத்தப்படும்”.

“அது அதிர்ச்சி அளிக்கிறது, நாங்கள் நெருக்கமான நட்புக் கொண்டுள்ள ஒரு நாடு, ஐக்கிய இராச்சிய திரையரங்குகளுக்கும் ஐக்கிய இராச்சிய குடிமக்களுக்கும் எதிராக வன்முறையை தூண்டும் வகையில் அறிக்கை விடுவதை சகித்துக் கொண்டிருக்கிறது, மற்றும் எங்கள் அரசாங்கமும் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை…. ஐக்கிய இராச்சிய அரசாங்கம் இந்திய அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டு இந்த வகையான அச்சுறுத்தல்கள் சகித்துக் கொள்ளப்பட மாட்டாது என்று தெளிவாகச் சொல்ல வேண்டும். அல்லாமலும் இந்தியாவின் உள்நாட்டு அரசியல் காரணமாக ஒரு படத்தை பார்ப்பதற்கு தெரிவு செய்யும் எங்கள் சுதந்திரத்தை விட்டுக்கொடுக்க முடியாது.(சண்ணி மாலிக் ஒரு சுயாதீன ஊடகவியலாளர் மற்றும் லண்டனைத் தளமாகக் கொண்ட சமூக ஊடக முகாமையாளரும் ஆவார், பாலிவூட் படங்கள் மற்றும் இந்திய திரைப்பட நட்சத்திரங்கள் மீது கவனம் செலுத்துபவர்).

வரலாறு மற்றும் புராணம் என்பன மக்கள் மற்றும் சமூகங்கள் தங்களைப் புரிந்து கொள்வதற்கான ஆதாரங்களாக உள்ளன. இவை நினைவுச் சின்னங்களாகவோ, ஆட்களாகவோ மற்றும் நல்லதுக்கான செய்திகளைத் தரும் வரலாற்றைச் சாராத அல்லது புனை கதைகளில் வரும் நபர்களின் படங்களாகவோ இருக்க முடியும். நவீன கதாசிரியர்களால், எழுத்து, நாடகம் அல்லது சினிமா மூலமாக வழங்கப்படும் இத்தகைய கதைகளை நிராகரிப்பது எழுத்தாளர்களுக்கும் மற்றும் புராணத்துடன் தொடர்புள்ளவர்களுக்கும் ஊக்கமளிக்கும் கடந்த கால யதார்த்தங்களை நிராகரிப்பதுக்கு ஒப்பாகும். அது மக்களையும் சமூகத்தையும் வரலாற்று யதார்த்தங்களில் இருந்து பிரிப்பதைப் போன்றது, அது இன்றைய அரசியல் மற்றும் சமூக சுழற்சிக்குள் உட்புகுந்துள்ள குறுகிய தீவிரவாதம் மற்றும் இன அல்லது மத நலன்களை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. பத்மாவதி ஒரு அழகிய புராணமாகவே உள்ளது, அது கடந்த காலத்தின் மகிழ்ச்சி மற்றும் துயரம், யுத்தம் மற்றும் சமாதானம், அன்பு மற்றும் பகைமை ஆகியவற்றை அழகாகச் சித்தரிக்கிறது. இன்று நடப்பவை யாவும் சுட்டிக்காட்டுவது, ஒரு பெரும்பான்மை சமூகம் நாட்டின் வரலாறு மற்றும் அடையாளத்தை பற்றிப் பிடிப்பதற்காக நடத்தும் அரசியல் போராட்டத்தில் இந்திய சமூகம் எதிர்நோக்கும் ஆபத்தினையே. ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கம் என்பனவற்றின் இலட்சியம் நிலவட்டும், சமீபத்தில் கூறியபடி  ஜனநாயகத்தை ஒரு கலங்கரை விளக்கமாக மாற்றுவதற்கு அது சாத்தியப்படும்.

மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *