Monday, February 19, 2018

.

காதல் கவிதா விலாசம்!…. ( சிறுகதை ) மூதூர் மொகமட் ராபி.

காதல் கவிதா விலாசம்!…. ( சிறுகதை )    மூதூர் மொகமட் ராபி.

விலாசினியின் வீடு இருக்கும் கிராமத்தை ஒருவழியாக நான் தேடிக்கண்டு பிடித்தபோது வானம் நன்கு இருட்டி மழை,’இதோ பொழியப்போகின்றேன்’ என்றது.

நிலாவெளிக்குச் செல்லும் வழியில், மூன்றாம்கட்டைச் சந்தியிலிருந்து இடதுபுறமாக ஊருக்குள் பிரிந்து செல்லும் அந்த கொங்கிறீட் வீதியில் பொதுநூலகத்தை தாண்டி அரைகிலோ மீற்றர் செல்வதற்கிடையில் பாயிஸ் கூறியிருந்த முச்சந்திக் கடைத்தெரு வந்து விட்டது. அங்கிருந்து புதிதாக செப்பனிடப்பட்டிருந்த ஒடுக்கமான தார்வீதி மேலேறிச்செல்ல, ஓரமாய் ஒதுங்கி நின்றிருந்த ‘பாடசாலை வீதி’ பாதி துருப்பிடித்திருந்தது.

மோட்டார் சைக்கிளைத் திருப்பி வீதியின் இருபுறமும் பார்த்தவாறு மெதுவாக ஓட்டினேன். செம்மஞ்சள் பெயின்ட் அடித்த சனசமூக நிலையம், அகிலாம்பாள் பாலர் பாடசாலை, காதைச் செவிடாக்கும் ஒரு ‘மிளகாய் அரைத்துத் தரப்படும்’ அதனருகிலே ஓர் அடிபெருத்த வேம்பு விருட்சம், அதன்கீழ் எலுமிச்சம்பழம் குற்றப்பட்டிருக்கும் திரிசூலம், பட்டுத்துணி முடிச்சு, எண்ணெய்ப்பிசுக்குடன் சிறு விக்கிரகம், இடதுபுறம் கீழிறங்கிச் செல்லும் மரங்களடர்ந்த செம்மண்வீதி.. என்று சகல அடையாளங்களும் சரியாக இருந்தன. இந்த வீதியின் முடிவில்தான் விலாசினியின் வீடு இருக்கும்.

நெருப்புவாகை மரத்தின்கீழ் பைக்கை நிறுத்தி கழுத்தில் பூட்டிவிட்டு இறங்கினேன். அந்தத் தெருவே ஏறத்தாழ வெறிச்சோடிக்கிடந்தது. அடுத்த தடவை பாயிஸ் செல்போனில் அழைத்து,’இன்னும் நீ கண்டுபிடிக்கல்லியாடா?’ என்று கேட்பதற்குள் விலாசினியைப் பார்த்துவிட வேண்டும் என்று என் மனம் பரபரத்தது. குளிர்க்கண்ணாடியை கழற்றி மார்பில் செருகியபடி செம்மண் வீதியில் நடந்தேன்.

விலாசினி, திருகோணமலை நகரில் நகைக்கடை வைத்திருக்கும் என்னுடைய பால்ய நண்பன் பாயிஸின் நீண்டகால வாடிக்கையாளினிகளில் ஒருத்தி.அவளுடையதாயார் அண்மையில்தான் மரணமடைந்திருந்தார். மரணச்சடங்கை அடுத்து வந்த முப்பத்தோராம் நாள் சடங்கிற்கு அவசியம்

செல்லவேண்டியவனாகிய பாயிஸ் வியாபாரநிமித்தம் கொழும்பில் தங்கியிருந்த காரணத்தால் தன்னுடைய நகைக்கடை சார்பாக அவளுடைய முகவரியைக் கொடுத்து என்னை அனுப்பியிருந்தான்.

பாயிஸ் என்னுடைய பால்ய நண்பன். பாலர் பாடசாலை முதல் பத்தாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்தவன். அத்தகையோரில் இன்றும் என்னுடன் தொடர்பில் இருந்து வரும் ஒரே ஒருவன். பள்ளிப்பருவம் தீர்ந்ததும் ஆளுக்கு ஒரு திசையில் நாங்கள் பிரிந்து விட்டிருந்தோம்.

நான், உயர்கல்வி.. பல்கலைக்கழகம்.. கிரிக்கட்.. ஆங்கிலசினிமா.. காதல் தோல்வி, கவலைத் தாடி.. சகலமும் தாண்டி இறுதியில் இலங்கை விமானப்படையில் இணைந்துவிட மறுபுறம் பாயிஸ் அரபுக்கல்லூரி.. வெளிநாட்டு வேலை.. தங்கைகளின் திருமணம்..தேங்காய் வியாபாரம்.. என்று பாடுபட்டு கடைசியில் நகை வியாபாரத்தில் நிலைப்பதற்கிடையில் ஏழெட்டு வருடங்கள் தொடர்புகளேதுமின்றி காணாமல் போயிருந்தன.

நான் தியத்தலாவை, இரத்மலானை, பலாலி என்று பெரும்பாலும் வெளியூர்களிலுள்ள படைமுகாம்களிலே பல வருடங்கள் கடமையாற்றி விட்டு கடந்த ஆகஸ்ட் மாதத்தில்தான் ஊருக்கு அண்மையிலுள்ள சீனக்குடா விமானப்படைத்தளத்துக்கு மாற்றலாகி வந்திருந்தேன்.

அப்போதுதான் ஒருநாள் நகரின் கடைத்தெருவில் தற்செயலாக பாயிஸைக் கண்டேன். இல்லை.. பாயிஸ்தான் முதலில் அடையாளங் கண்டான். அவன் மட்டும் என்னைப் பார்த்துத் திகைத்துப்போய் நிற்காதிருந்தால் கூட்டத்தில் ஒருவனாக அவனை நான் கடந்து சென்றிருப்பேன். ஓய்வின்றிய உழைப்பினால் மெலிந்து கண்களெல்லாம் உள்ளோடி தாடி, மீசை, அலட்சிய ஆடை என்று ஆளே மாறிப்போயிருந்தான் பாயிஸ். அடையாளம் உறுதியானதும் கடைத்தெருவென்றும் பாராது இருவரும் கட்டியணைத்துத் தழுவிக் கொண்டோம்.

‘பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமா..?’ என்றுதானே இந்த இடத்தில் எழுதவேண்டும். ஆனால் நாங்கள் நிறையப்பேச வேண்டியிருந்தது. அதனால் கட்டியணைத்து முடிந்ததும் குளிர்பானக்கடையொன்றில் அமர்ந்து பல வருடங்களாக விடுபட்டிருந்த விடயங்களையெல்லாம் இருவரும் மணிக்கணக்கில் பேசித் தீர்த்தோம்.

பாயிஸ் என்னிடம் கேட்ட முதல் கேள்வி, ‘டேய், நீ இன்னும் உயிரோடதான் இருக்கிறியா..?’ என்பதுதான்.

‘இல்லடா, மவுத்தாகி ஆவியுலகத்திலருந்து வந்திருக்கிறன்.. கால் தரையில படுதா பாரு..’ என்றேன் நான் சிரித்துக்கொண்டே.

‘இல்ல.. அந்த கடைசிச்சண்டை நடந்த நேரம் ஊர்ல எல்லாரும் அப்பிடித்தானடா பேசிக்கிட்டாங்க.. நானும் நம்பாமத்தான் இருந்தேன்.. ஆனா அதுக்குப்பொறகு ஒன்ன யாருமே காணவுமில்ல..இத்தின வருசமா ஒன்னப்பத்திய தகவலே கெடையாதே..அதான்..’

‘அடப்பாவிகளா.. ஆளக் காணேல்லன்டா உங்க இஷ்டத்துக்கு மவுத்தென்டே முடிவுகட்டிருவீங்களாடா?’

‘அப்படியில்ல மச்சான்! சிலபேர் நீ ஜேர்மன்லருக்க உங்க நானாக்கிட்டப் போயிட்டியாமென்டும் சொன்னாங்கதான்..’ என்று தொடர்ந்தது அன்றைய எங்கள் சம்பாஷணை.அந்த நாளின் பின்புஇருவரும் மீண்டும் இணைபிரியாத நண்பர்களாகி விட்டோம்.

நெருங்கிய உறவினர்கள் என்று எனக்கு ஊரில் யாருமே இருக்கவில்லை. சிறுவயதிலேயே என் பெற்றோர்கள் இறந்து போய்விட்டதும் குடும்பத்தில் இளையவனான என்னை வளர்த்து ஆளாக்கிய என்னுடைய உடன் பிறப்புகள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக ஐரோப்பிய நாடுகளில் குடியேறிவிட்டமையும் அதற்கு பிரதான மற்றும் உப காரணங்கள். என்னையும் தங்களோடு ஐரோப்பாவுக்கு வந்துவிடும்படி அவர்கள் வருந்தியழைத்தும் நான் இங்கேயேதான் இருக்கவேண்டும் என்று பிடிவாதமாக மறுத்துவிட்டவன்.

ஊரிலே எங்கள் குடும்பச்சொத்து என்று ஓர் இரண்டு ஏக்கர் தென்னந்தோப்பு மட்டுமே மீதமாய் இருக்கின்றது. அதுவும் என் பெயரில்தான் இருக்கின்றது. ஆனால் அதைக்கூட நான் இதுவரை அங்கு சென்று உரிமை கொண்டாடியதில்லை. பாலர் பருவத்தில் நானும் சகோதரர்களும் ஓடியாடித்திரிந்த ஆற்றோரத் தென்னஞ்சோலை அது. என்னுடைய முப்பாட்டன்களும் பாட்டன்களும் மகாவலி நதிக்கிளையோரம் காடுவெட்டி வேலியிட்டு வழி வழியாய் பாடுபட்டு நட்டு வளர்த்த தென்னைகள் அவை.

இப்போது என்னுடைய தாய்வழித் தூரத்து உறவுகள் சிலர் யாரிடமும் கேட்காமல் தென்னைகளை வெட்டியழித்து காணியைப் பொட்டல்

வெளியாக்கி அங்கு வசித்து வருவதாக அறிந்தேன். அதன் பிறகு அங்கு செல்ல எனக்கு ஏனோ மனம் வரவில்லை. நாங்கள்யாருமே இல்லையென்றுதெரிந்ததும்அங்கு வீடுகட்டி,மணமுடித்து குழந்தைகள் பெற்றுகேபிள் டீவியின்நெடுந்தொடர்களுக்கு கண்ணீர் சிந்தி சந்தோசமாக வாழ்ந்துவரும் எங்கள் குடும்பப் பெண்களைப் பொறுத்தவரை நான் இறந்தவனாகவே இருந்துவிட விரும்புகின்றேன். அதனால்தான்சீனக்குடா முகாமிலிருந்து வெறும் 25 கிலோமீற்றர் தூரத்திலிருக்கும் என்னுடைய ஊருக்கு நான் செல்வதற்கு விரும்புதில்லை. பாயிஸுக்கும் இது நன்கு தெரியும்.

நான் இறந்துவிட்டதாக ஊரிலே கதை பரவியதற்கு நியாயமிருந்தது. அது இறுதியுத்தகளத்தில் எதிரிப்படையினர் எங்கள் மீது நடாத்திய ஒரு பாரிய ஊடறுப்புத் தாக்குதல்.அதை இப்போது நினைத்தாலும் வேதனை என் உயிரை வாட்டும்.

2009 ஜனவரியில் கிளிநொச்சி நகரம் படையினரிடம் வீழ்ந்தது. அதற்கு முன்னரே எதிரிப்படையணிகள் யாவும் முல்லைத்தீவை நோக்கி பின்வாங்கத் தொடங்கியிருந்தனர். முல்லைத்தீவில் அவர்கள் நிலைபெற்று விடுவதற்கு முன் அவர்களைவிரட்டிச் சென்று விடாமல் தாக்கியழிக்கும் முனைப்பில் இராணுவத் தரைப்படையினரும் எங்கள் தாக்குதல் விமானங்களும் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.

 

அவ்வேளையில்தான்கூட்டுப்படை தலைமைச் செயலகத்திற்கு மிகமுக்கியமான புலனாய்வுத்தகவல் ஒன்று கிடைத்தது. அதாவது பின்வாங்கிச் செல்லும் எதிரிப்படையணியில் ஒருபகுதியினர் தற்காப்புத் தாக்குதல்களில் ஈடுபட்டவாறிருக்க மறுபகுதியினர் தனித்தனியாகப் பிரிந்து சிதறி பெருநிலப்பரப்பிற்குள் பல திசைகளிலும் இரகசியமாக ஊடுருவுவதற்கு திட்டமிடுவதாகவும் அந்த உளவுத்தகவல் கூறியிருந்தது.

குறித்த செய்தி இரகசியமாக செயற்படும் இராணுவ ஒற்றர்களிடமிருந்து கிடைத்த நம்பிக்கையான தகவல் என்பதால் கட்டுப்பாட்டுச் செயலகம் துரிதகதியில் செயற்படத்தொடங்கியது. அந்தத் தகவல் மட்டும் உரியநேரத்தில் கிடைத்திருக்கவில்லையென்றால்..?யார் கண்டார்கள் இன்றைக்கும் யுத்தம் நிறைவடையாமல் தொடர்ந்து கொண்டிருக்கும். எதிரிகளின் இரகசியத்திட்டத்தை முறியடிப்பதற்காக தரைப்படைக்கு மேலும்

அதிக துருப்புகள் தேவையாக இருந்தது.அதனால் வான்படையினரையும் களத்தில் குதிப்பதற்குத் தயாராக இருக்குமாறு அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.சாதாரண சிப்பாய்கள் மட்டுமன்றி வான்படை பொறியியல் பிரிவுக்குள் பணியாற்றிக்கொண்டிருந்த அதிகாரிகள் உட்படஅனைவரும் களத்தில் இறக்கிவிடப்பட்டோம்.

ஒருபுறம் பின்வாங்கும் எதிரிப்படை அவ்வப்போது தங்களுக்குச் சாதகமான இடங்களில் தரித்து நின்று துரத்திவரும் படையினர் மீது பலத்த தாக்குதல்களைத் தொடுத்தவாறிருக்க அதற்கு பதில் தாக்குதல்களும் நடந்துகொண்டிருந்தன. நாங்கள் புதுக்குடியியிருப்புக்கு வடமேற்காக தரையிறங்கினோம். ஆளில்லா விமானங்களின் உதவியுடன் யுத்தகளத்திலிருந்து வன்னிக்காடுகளுக்குள் ஊடுருவும் எதிரிகளை வேட்டையாடுவதே எங்களது பிரதான பணியாக இருந்தது. இருந்தபோதிலும் சண்டையின் நகர்விலே அவ்வப்போது யுத்த முன்னரங்கப் பகுதிக்குள்ளும் நாங்கள் பிரவேசிக்க வேண்டியிருந்தது.

அவ்வாறான ஒரு சமயத்தில்தான் யாருமே எதிர்பாராத அந்தப் பாரிய ஊடறுப்புத்தாக்குதல் ஒன்றை எதிரிப்படையினர்நடாத்தினார்கள். திடீரென நிகழ்ந்த அந்தக் கோரத்தாக்குதலில் நாங்கள் சகலரும் நிலைகுலைந்து போனோம். அந்தநேரம் பார்த்து ஆனையிறவு இராணுவ முகாமிலிருந்து தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதலும் நடாத்தப்பட எல்லாமே குழப்பமாகிப்போனது. சுற்றிலும் அடர்த்தியான புகையும் இருளும் வெடிமருந்து நாற்றமும் பரவியதில் திசைக்கொருவராய் சிதறி எதிரிகளின் தாக்குதல் குழுவினரோடு கலந்துவிடும்படி ஆனது. யார் எதிரி யார் சக வீரன் என்று புரியாத நிலையில் எதிரிகளோடு சேர்ந்து விமானப்படை வீரர்களாகிய நாங்களும் இராணுவ எறிகணைத்தாக்குதல்களுக்கு இலக்கானோம். எறிகணையிடமிருந்து தப்பிப்பதற்காக மறைவிடத்தை நோக்கி நான் விரைந்த வேளையில் சீறிக்கொண்டு வந்த மற்றுமொரு எறிகணை வீழ்ந்து வெடித்தது மட்டுமேஎனக்குத் தெரியும்.

மயக்கம் தெளிந்து மீண்டும் நான் கண்விழித்தபோது அது பகலா இரவா என்பதுகூட எனக்குத் தெரியவில்லை. உக்கிப்போன இலைச்சருகுகளும் சகதி நீரும் கொண்ட ஆழமான பெரும் சேற்றுக்குழியொன்றுக்குள் வீழ்ந்து கிடப்பதை உணர்ந்தேன். இருளில் பார்வை பழகியதும் என்னையும் சேர்த்து

மேலும் நான்கைந்து உருவங்கள் குழிக்குள் அசைவற்றுக்கிடப்பதைக் கண்டேன். எனது அடிவயிற்றுப்பகுதியிலிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருக்க பசியும் தாகமும் உயிரை வாட்டியது. குண்டுக் காயத்தின் வலியும் சோர்வும் சேர்ந்துகொண்டு அங்கேயே என் உயிர்போனால் பரவாயில்லை என்று தோன்றியது. வலியைத் தாங்கியபடி மெல்லத் தவழ்ந்துபோய் வீழ்ந்து கிடந்த என் சக வீரர்களைப் பரிசோதித்தேன். என்னைத் தவிர இருவருக்கு மட்டுமே உயிர் இருந்தது. அவர்களிருவருக்கும்பெரிய காயங்கள் இல்லாத போதிலும் அதிர்ச்சியில் மயக்கமடைந்து கிடந்தார்கள்.

இறந்துகிடந்த சிப்பாய் ஒருவனின் சீருடையைக் கிழித்து என் அடிவயிற்றைச் சுற்றிக் கட்டுப்போட்டுக்கொண்டு குழியின் ஓரங்களில் மண்ணில் புடைத்திருந்த மரங்களின் வேர்களைப் பற்றியபடி அந்தப் பாரிய குழியைவிட்டு வெளியேற முடியுமாவென்று மேலே பார்த்தேன். வெகுஉயரத்தில் மரங்களின் கிளை நீட்சிகளின் பின்னணியில் துண்டு வானம் நீலமாய்த் தெரிந்தது.

உதவி கேட்டு குரலெழுப்பமுயன்றபோதிலும் வயிற்றுக் காயம் காரணமாக என்னால் முடியவில்லை. ஆயினும் வேறு வழியின்றி சக்தியைத்திரட்டி ஓவென்று மேலே பார்த்துக் கத்தினேன். சிறிது நேரத்தில் அந்தக்குழியின் மேலாக ஏதோ ஒன்று நகருவது போன்ற ஓசையும் அதனைத் தொடர்ந்து யாரோ ஒருவனது தலையும் கைகளும் மேலே அசைவது மங்கலாகத் தெரிந்தது. அவன் எனது படை ஆட்களில் ஒருவனாகத்தான் இருக்கவேண்டும் என்று யூகித்து என்னை வெளியிலெடுக்குமாறு சிங்களத்தில் குரல்கொடுத்தேன். ஆனால் அந்த உருவம் பதிலுக்கு எதுவுமே பேசாது மறைந்து விட்டது. வெகுநேரமாய் குழிக்கு மேலேயுள்ள தரைப்பகுதியில் எதுவித அசைவும் தெரியவில்லை. சிறிதுநேரத்தில் மீண்டும் ஏதோ சரசரக்கும் சப்தம் கேட்டு அண்ணாந்து பார்த்தபோது ஆலமர விழுதுபோன்ற ஏதோ ஒன்று நானிருக்கும் இடத்தைப் பார்த்து கீழ்நோக்கி மெதுமெதுவாய் அனுப்பப்படுவது தெரிந்தது.

அந்த விழுதைப் பற்றிப்பிடித்து வெகுசிரமத்துடன் மெல்ல மெல்ல மேலேறினேன். அந்த மரணக்குழியின் மேல் விளிம்பை அண்மித்ததும் அதுவரையில் எனக்கு உதவி செய்து கொண்டிருந்தவன் யாரென்று

அண்ணாந்து பார்த்ததுதான் தாமதம். அப்படியே அதிர்ச்சியில் திகைத்துப் போனேன்.

ஆம், நாங்கள் அனைவரும் இத்தனை காலமும் யாருக்கு எதிராக உயிரைத்துச்சமாக்கி போராடிக்கொண்டிருந்தோமோ அவர்களில் ஒருவன்தான் குழிக்கு வெளியே அவர்களுக்கேயுரிய குறுக்கு வரிகளைக்கொண்டசீருடை அணிந்தவனாக கழுத்தில் சயனைட் குப்பியுடன் நெடுஞ்சாண் கிடையாய் படுத்திருந்தான். நான் பற்றியேறுவதற்காக தனது வலது கையை நீட்டிக்கொண்டிருந்தான்.

ஒருகணம் விழுதைக் கைவிட்டு மீண்டும் குழிக்குள் வீழ்வோமா என்று கூடத்தோன்றியது.

ஆனாலும் வேறுவழியின்றி அவனுடைய கையைப்பற்றி மேலேறி வந்துவிட்டேன். குழிக்குமேலே வந்ததும் அங்கு நான் கண்ட காட்சிஇதயத்தை உறைய வைத்தது. அந்தக் குழியைச் சுற்றிலும் தசைகளும் குருதியும் தாறுமாறாய்ச் சிதறிக்கிடக்க அந்த இடமே ஒரு மாமிச மடுவம் போலிருந்தது. எனது சக படையினரும் எதிரிகளுமாக இருபதுக்கு மேற்பட்டவர்கள் ஷெல்லடிபட்டு பல்வேறு நிலையில் உடல் சிதறி இறந்து கிடந்தனர். அவர்களில் என்னை மீட்டவன் மட்டுமே உயிரோடு இருந்தான். அவனுக்கு காலிலும் தாடையிலும் பலத்த இரத்தக் காயங்களிருந்தன. அவன் நடக்கவோ பேசவோ முடியாதவனாக இருந்தான். நிற்கக்கூட முடியாத நிலையில் தரையோடு தரையாக தவழ்ந்து சென்றுதான் எங்கோ சற்றுத் தூரத்தில் அறுந்து கிடந்த ஒரு மரவிழுதை எனக்காகத் தேடியெடுத்து வந்திருப்பதற்கான அடையாளங்கள் அவனுடைய சீருடையிலும் தரையிலும் இருந்தன.

அதை நினைத்தபோது எனக்கு மெய்சிலிர்த்தது.

அவன் நினைத்திருந்தால் சிங்கள மொழியில் அபயக்குரலெழுப்பிய என்னை காயத்துடன் ஏறிவரவே முடியாத அந்த மரணக்குழியினுள் அப்படியே கிடந்து சாகவிட்டிருக்க முடியும். தன்னுடைய உயிர் ஊசலாடும் வேளையிலும் இன்னொருவனை அதுவும் தனது பரம வைரிகளில் ஒருவனை காப்பாற்றிவிட நினைத்த அவனுடைய செயலை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. குருதியிழப்பினால் ஏற்பட்ட தாகத்தினாலும் பேய்ப்பசியாலும் என்னுடைய உடல் தளர்ந்து நடுங்கத் தொடங்கியது. அதை அவதானித்த அந்த

இளைஞன் தன்னுடைய கிட்பேக்கினுள்ளிருந்து இறுகிய சொக்லேட்டுகளையும் தண்ணீரையும் தந்துதவினான். எதிரியாகவே இருந்தபோதிலும் அவனுடைய மனிதாபிமானம் என்னை நெகிழச்செய்தது. அதுவரையில் அத்தகையவர்களின் பால் நான் கொண்டிருந்த சில முன்முடிவுகள் பற்றி முதன்முதலாக யோசிக்க ஆரம்பித்தது அப்பொழுதுதான்.

களச்சண்டை வேறுபகுதிக்கு நகர்ந்துவிட்ட காரணத்தால் நாங்களிருந்த பிரதேசம் அமைதியாக இருந்தது. ஆனாலும் வெகுதூரத்தில் எங்கோ இயந்திரத் துப்பாக்கிச் சனியன்களின் விட்டுவிட்ட குரைப்புகள் கேட்டவண்ணமிருந்தன. என்னுடைய சகாக்களின் இறந்த உடல்களிலிருந்த முதலுதவிப் பொருட்களை வெளியிலெடுத்து உடைந்திருந்த அவனுடைய கீழ்தாடை விலகாதிருக்கும் வகையில் மண்டையுடன் சேர்த்துக் கட்டுப்போட்டு விட்டேன். அதேபோல என்னுடைய வயிற்றுக்காயத்திற்கும் மருந்திட்டேன். ஆனால் இருவருக்குமே குருதி தொடர்ந்து கசிந்து கொண்டேயிருந்ததால் அதிகநேரம் தாக்குப் பிடிக்க முடியாதென்பது தெரிந்தது. உயிரிழந்தவர்களைப்பற்றி இப்போதைக்கு யோசிக்க முடியாது. முதலில் என்னையும் அவனையும் காப்பாற்றியாக வேண்டும். அதற்கு உடனடியாக அங்கிருந்து ஏதாவது ஒரு வைத்தியசாலைக்குச் சென்றால் மட்டும்தான் முடியும் என்பதை நான் உணர்ந்தேன்.

அவனோடு நான் தமிழில் பேசினேன். அவனால் புரிந்து கொள்ளமுடிந்தாலும் தாடை உடைந்திருந்ததால் பதிலளிக்க முடியவில்லை. அவனுடைய பெயரை நான் கேட்டுக்கொண்டிருந்தபோது வலது கையால் தனது இடது கைப்பக்கமாக எதையோ காண்பித்து சைகையால் எதையோ சொல்ல முயன்றான். அது எனக்குப் புரியவில்லை. இடதுபுறமாக அவனது ஏகே47 ரக இயந்திரத்துப்பாக்கி கிடந்தது. அது லோட் செய்தநிலையில்இருந்ததைத்தான் சொல்கின்றான் என்று புரிந்து அதை எடுத்து அன்லோட் செய்துவிட்டு அங்கேயே வைத்தேன். ஆனால் அவன் மீண்டும் எதையோ இடது கைப்பக்கமாகக் காண்பித்தான். எதைச் சொல்ல வருகிறான் என்பதை நான் மீண்டும் கேட்பதற்குள் குருதியிழப்பினால் உண்டான அதீத களைப்பு அவனை மயக்கத்திலாழ்த்திவிட்டது.

அதற்கிடையில் சேற்றுக்குழியினுள்ளிருந்து மயக்கம் தெளிந்து விழித்தெழுந்தவர்களின் அபயக்குரல்கேட்டது. எட்டிப்பார்த்தபோது மயங்கிக் கிடந்த சக வீரர்கள் இருவரும் எழுந்து நின்று கொண்டிருப்பது தெரிந்தது. அவர்களிருவருக்கும் ஆலம் விழுதைக் கொடுத்து மேலேறி வருவதற்கு உதவினேன். அவர்கள் இருவரும் தரைப்படையைச் சேர்ந்த இராணுவத்தினர். அவர்களில் ஒருவனின் முதுகில் இருந்த தொலைத்தொடர்புக்கருவி சேதமடையாமல் இயங்குநிலையில் இருந்ததைக் கண்டேன். இவன். இருவரும் பாதிக்குழியைத் தாண்டி மேலேறிவந்து கொண்டிருக்கும்போதே என்னுடைய வயிற்றுக்காயம் பற்றி விபரமாக எடுத்துக்கூறி வெளியே வந்ததும் உடனடியாக விமானப்படை ஹெலிக்கொப்டர் ஒன்றை வரவழைக்குமாறு அவனிடம் கூறினேன்.

அவர்கள் மேலே வந்ததும் என் வயிற்றுக்காயத்தையும் பொருட்படுத்தாது முதலில் வந்தவனுக்கு கையைக்கொடுத்து தூக்கி வெளியிலெடுத்துவிட்டேன். ஆனால் வெளியே வந்தவுடன் அந்த மடையன் யோசிக்காமல் செய்த முதல்வேலை என்ன தெரியுமா? சட்டெனத் தன் துப்பாக்கியை லோட் செய்து, எனக்குப் பின்னால் அப்போதுதான் மயக்கம் தெளிந்து அசைய ஆரம்பித்த அந்த எதிரிப்படை இளைஞனை சரமாரியாகச் சுட்டுச் சல்லடையாக்கி விட்டதுதான்.

நான் சுதாரித்து அவனைத் தடுப்பதற்கிடையில் எல்லாம் முடிந்துவிட்டது.

அவனருகே மண்டியிட்டு கைகளால் அவனுடைய தலையை உயர்த்தியபோது அவன் கண்கள் செருகிவிட்டிருந்தன. உதடுகள் மட்டும் எதையோ சொல்லத் துடித்தன. அவனுடைய வலது கைவிரல்கள் வெகுபிரயாசையுடன் மீண்டும் தன்னுடைய இடது மணிக்கட்டைக் காண்பிக்க முயன்று தோற்றுப்போன கணத்தில் தலை தொங்கிப்போனது.

அவனுடைய இரத்தம் தோய்ந்த இடது மணிக்கட்டின் வயிற்றுப்புறமாக ஏதோ பச்சையாகத் தெரிந்தது. சீருடையின் நீளச்சட்டைக்கையை விலக்கி உள்ளங்கையால் துடைத்துவிட்டு நான் பார்த்தபோது அதிலே’க-வி-தா’ எனும் மூன்று தமிழ் எழுத்துக்கள் பச்சை குத்தப்பட்டிருந்தன.

000

செம்மண் பாதையின் முடிவிலே தென்னங்கிடுகுகளால் ஒழுங்கின்றி அடைக்கப்பட்டிருந்தமுதிரை மரங்களடர்ந்த ஒரு பெரிய காணி தெரிந்தது.

காணியின் இடதுபுறமாக காரைபெயர்ந்த சுவர்களுடன் கூடிய ஒரு பழைய கல்வீடு இருந்தது. அதன் முன்வாசல் தாழ்வாரத்திலிருந்து பாதி தூரம் வரை வரையில் யுனிசெப் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த நீலநிற பிரமாண்டமான படங்குகள் இழுத்துக் கட்டப்பட்டிருக்க அதன் கீழ் பிளாஸ்டிக் கதிரைகள் ஒழுங்கின்றி போடப்பட்டிருந்தன. வேட்டி சட்iயுடன் நெற்றியில் விபூதியும் அணிந்திருந்த நடுத்தர ஆண்கள் பலர் அவற்றிலமர்ந்து சோற்றுப் பீங்கான்களைக் கையிலேந்தியவாறு சுவாரஸ்யமாக சிரித்துப்பேசிச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். கிராமியத் தோற்றமுள்ள பெண்கள் உணவுப்பாத்திரங்களை ஏந்திக்கொண்டு அந்த வீட்டிற்குள்ளிருந்து வருவதும் போவதுமாக இருக்க பல்வேறு வயதுள்ள சிறுமிகளும் குழந்தைகளும்அங்குமிங்கும் ஊடறுத்துத் ஓடித்திரிந்தார்கள். வளவின் ஒருபுறம் பெரிய கல்லடுப்புகள் மூட்டப்பட்டு அதிலே பிரமாண்டமான அலுமினியப்பானைகளில் ஏதோ கொதித்துக்கொண்டிருந்தன. அடுப்புப்புகையின் எரிச்சலைத் தாக்குப்பிடித்தவாறு வயதான பெண்கள் சிலர் நீண்ட கைப்பிடிகொண்டஅகப்பைகளைஅதற்குள் விட்டுக் கிளறிக்கொண்டிருக்க.. ஏதோ பாரதிராஜா, ராஜ்கிரண் வகையறா கிராமத்து திரைப்படத்திற்குள் இறங்கிவிட்டது போலிருந்தது எனக்கு.

நான் உள்ளே செல்லாமல் வாயிலிலேயே நின்று கொண்டிருந்தேன். அங்கு நின்றிருந்தவர்களில் யாரும் என்னைக் கவனித்ததாகவும் தெரியவில்லை. விமானப்படையில் நூற்றுக்கணக்கானோருக்கு கட்டளைகள் பிறப்பிக்கும் உயரதிகாரிகளில் ஒருவன் நான் இங்கே என்னுடைய தரத்திற்கு சிறிதும் பொருத்தமில்லாத கவனிப்பாரில்லாத இடத்தில் நின்றுகொண்டிருப்பதை நினைத்தபோது சிறிது அவமானமாக உணர்ந்தேன்.

பேசாமல் அப்படியே திரும்பிப் போய்விடலாமா என்று நான் யோசித்த தருணத்தில், பாவாடை சட்டை அணிந்திருந்த ஒரு சிறுபெண் என்னைக் கண்டுவிட்டாள். கண்கள் அகல விரிய, ‘சித்தி.. சித்தி யாரோ வந்திருக்காங்க!’ என்று உள்நோக்கி குரல்கொடுத்ததும் சொல்லி வைத்தாற்போல எல்லோரது பார்வையும் ஒரேசமயத்தில் என்மீது விழுந்தது. நான் பார்வையை வேறுபக்கம் திருப்பியவாறு நின்றிருந்தேன்.

சிறிது நேரத்தில், ‘வாங்க! உள்ள வாங்க!’ என்ற ஒரு பெண் குரல்கேட்டது. இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண் சாப்பிட்டுக்கொண்டிருந்த கூட்டத்தைத் தாண்டி வாசலுக்கு வந்து என்னை வரவேற்றாள். நிறத்திலும் தோற்றத்திலும் சிறிது அழகாகவும் கவர்ச்சியான தோற்றப்பொலிவுடனும் இருந்து அந்தச் சூழலுக்கே பொருத்தமில்லாமல் தனியாகத் தெரிந்தாள்.

‘நீங்கதான்.. விலாசினியா..?’ என்றதும் ஒருகணம் திகைத்து பின்பு ‘ஆம்’ என்பதுபோல புன்னகைத்துத் தலையாட்டினாள். ‘நான் பாயிஸ் ஜுவல்லரியிலருந்து..’ என்று ஆரம்பித்ததும், அதுவரை இருந்த திகைப்பு நீங்கி, ‘ஓமோம்.. வாங்க..வாங்க.. பாயிஸ் அண்ணன் இரவே எனக்கு போன்ல சொன்னவர். நீங்கதான் ஆமில இருக்கிற அவர் ஃப்ரெண்டா?’

‘இல்ல.. எயாபோர்ஸ்ல’ என்றபடிமுற்றத்தில் கிடந்த பிளாஸ்டிக் கதிரைகளில் ஒன்றில் போய் உட்காரப்போன என்னை,’இல்லல்ல.. இங்க வேணாம். இப்பிடி இந்தப்பக்கம் என்னோட வாங்க!’ என்று பழைய வீட்டின் பக்கவாட்டில் பின்புறமாகஅந்த காணிக்கு அடுத்திருந்த மற்றுமொரு வளவுக்குள் புதிதாய்க் கட்டியிருந்த ஒரு வீட்டை நோக்கி என்னை அழைத்துச் சென்றாள். அவள் பின்னே நான் செல்வதை முற்றத்தில் அமர்ந்திருந்த அத்தனைபேரும் சாப்பிடுவதை மறந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

அந்த வீட்டின் முன்வராந்தாவிலிருந்த குஷனில் செற்றியில் என்னை அமர வைத்து, ‘அது அக்காட வீடு.. அங்க நிறைய ஆக்களா இருக்கு.. அதுதான் இஞ்ச கூட்டி வந்தனான். இருங்க. ட்ரிங்ஸ் ஏதும் கொண்டு வாறேன்’ என்றவள் திரைச்சீலையை விலக்கி அங்கிருந்த ஒரு அறைக்குள் மறைந்தாள்.

சில நிமிடங்களின் பின்பு பெரிய கண்ணாடி க்ளாஸில் வெளிர் மஞ்சள் திரவத்தோடு அவள் மீண்டும் தோன்றியபோது தன்னை மேலும் அலங்கரித்திருப்பது தெரிந்தது.

‘விலாசினி, நீங்க வேணா போய் இடையில விட்டுட்டு வந்த வேலைகளைக் கவனிங்க.. எனக்கு ஒண்ணும் அவசரமில்ல..’ என்றேன்.

‘தேங்ஸ்! இதை குடிச்சிட்டிருங்க.. இந்தா உடனே வாறேன்’ என்று விரைந்து சென்றுவிட்டாள். நான் அந்த வீட்டைச் சுற்றிலும் நோட்டமிட்டேன். ஓட்டுக்கூரையிட்டு நேர்த்தியாகக் கட்டப்பட்டிருந்தஅந்த வீட்டின் சுவர்களை இந்துக் கடவுளர்கள் அலங்கரித்தனர். அங்கிருந்த தளபாடங்களில்

பெறுமதியான பலவெளிநாட்டுப் பொருட்கள் அழகுணர்வுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அங்குள்ள யாரோ ஒருவர் மத்தியகிழக்கு நாட்டில் இருந்திருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

இடையிடையே பெண்களும் சிறுவர்களும்நான் இருக்கும் புதிய வீட்டிற்குள்ளே நுழைந்து வாழைக்குலை, தேங்காய், பீங்கான்கள் போன்றவற்றை எடுத்துக்கொண்டு சென்றார்கள்.

‘என்ன யோசனை.. சாப்பிடுறீங்களா..?’ என்ற குரல்கேட்டு நிமிர்ந்தேன். கையில் எராளமான உணவு நிரம்பியபாத்திரங்களோடு புன்னகைத்தவாறு நின்றிருந்தாள் விலாசினி. அவளுக்கு உதவியாக பட்டுப்பாவாடை தாவணி அணிந்த சில சிறுமிகளும் வந்திருந்தார்கள்.அவர்கள் நொடிக்கொரு தடவை என்னைப் பார்ப்பதும் வெட்கப்படுவதுமாக நின்றிருந்தனர்.

‘உங்க வேலையெல்லாம் முடிஞ்சுதா, விலாசினி?’

‘ஓமோம்! அதெல்லாம் அக்காமாரிட்ட பொறுப்புக்கொடுத்திட்டேன்.. இனி ஃப்ரீதான்!’ என்றவாறு அங்கிருந்த மேசையில் சாப்பாட்டை ஒழுங்குபடுத்திவிட்டு சிறுமிகளை அனுப்பி விட்டாள்.

‘எங்க சமையல் உங்களுக்குப் பிடிக்குமோ தெரியல்ல.. கோழியிறைச்சியெல்லாம் உங்கட முஸ்லீமாக்களுக்கிட்டதான் எடுத்தனாங்க.. வாங்க வந்து சாப்பிடுங்க’ என்று அழைத்தாள்.

நான் மேசையில் அமர்ந்ததும் அருகில் நின்று உபசரிக்க ஆரம்பித்தாள்.

‘அட! இறைச்சியெல்லாம் ஆக்கியிருக்கிறீங்களா..? நான் நினைச்சேன் இன்னைக்கு மரக்கறிதானாக்கும் என்று’ என்றவாறு சாப்பிட ஆரம்பித்தேன்.

‘ரெண்டும் சாப்பிடறாக்கள் இருக்கு.. வேண்டியதைப் போட்டுச் நல்லாச் சாப்பிடுங்க நீங்க நேவியில எங்க வேலை செய்யுறீங்க..?’

‘ஆண்டவனே.. நேவியில இல்ல.. எயாபோர்ஸ்ல.. சைனா பே கேம்ப்ல!’

‘ஸொறி! கனகாலமா நீங்க சேர்ந்து..?’

‘ஏன், நீங்களும் வந்து சேரப்போறீங்களா..?’ என்றதும் கலகலவென்று சிரித்து, ‘திரும்பவும் நான் வெளிநாடு போகாட்டால் வந்து சேரலாம்தான்.. ஏ எல் படிச்சிருக்கிறன் போதுமா..?’

‘அப்படியென்டா.. நீங்கதான் வெளிநாட்டுல இருந்தீங்களா விலாசினி..?’

‘ஓமோம்.. அம்மாவுக்கு சீரியஸ் என்று மெஸேஜ் வந்தவுடனபொஸ் நோனாக்கிட்ட கெஞ்சிமன்றாடி டிக்கட் போட வச்சு வந்தனான்.. ஆனா என்ன பிரயோசனம்? அவவை கடைசியா உயிரோட பார்க்கேலாமப் பொயிட்டு’ அதுவரை அவளிடமிருந்த உற்சாகமும் புன்னகையும் மறைந்துபோய் விழியோரங்கள் கசிந்தன.

நான் சங்கடத்துடன் மௌனமானேன்.

கதையைத் திசை திருப்புவதற்காக, ‘எங்க சவூதியிலயா இருந்தீங்க..?’என்று கேட்டேன்.

‘இல்ல.. சார்ஜாவில’

‘ஓ.. அங்க பெரிய க்ரிக்கட் ஸ்டேடியம் ஒண்ணு இருக்கே.. இங்கருந்தெல்லாம் டீம் வந்து டூணமென்ட்ல விளையாடுவாங்களே..’ என்றதும் அவள் லேசாகச் சிரித்துவிட்டு, ‘நீங்க போட்டுச் சாப்பிடுங்க..!’ என்றாள்.

சாப்பிட்டு முடிந்ததும் மீண்டும் குஷனில் அமர்ந்தவாறுவீட்டைச் சுற்றிலும் பார்த்தேன்.

‘அம்மாவுக்கு என்ன வருத்தம் விலாசினி?’

‘அவவுக்கு ப்ரஷரும் லேசான சுகரும் இருந்தது. வழமையாசுகர் நல்ல கொண்ட்ரோல்லதான் இருக்கும். போன மாதம்தான் அது திடீரென்டு கூடிட்டுதாம். ஆஸ்பத்திரிக்கு கொண்டு போறதுக்குள்ள கோமா ஸ்டேஜுக்குப்போயிட்டாவாம்.. காப்பாத்தேலாமாப் போயிட்டுது..’ என்று லேசாக விசும்பினாள். ‘2008ல நான் வந்துபோன நேரத்தில கூட நல்லாத்தான் இருந்தா. அதுக்குப் பிறகுதான்.. என்னைப்பற்றிய கவலை அவவுக்கு.. அதையே நினைச்சு நினைச்சு மருந்துகளைக்கூட சரியா எடுக்காம இருந்திட்டா..’

‘அப்படி என்ன பிரச்சினை?’ என்று கேட்பதா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன். ஆனால் என் முகபாவனையே காட்டிக்கொடுத்து விட்டது.

‘பாயிஸ் அண்ணனுக்கு என்ட கதை எல்லாந் தெரியும்.. உங்களிட்டச் சொல்றதுக்கென்ன… நான் வெளிநாட்டில இருக்கும்போது என்னை அங்க இருந்த ஒருத்தர் விரும்பினாரு..அவர் பிறப்பால சிங்களம். ஆனா அவரைப் பார்த்தா யாருமே அப்படிச் சொல்லமாட்டாங்க.நானும்அவர விரும்புறதைபோன்ல சொன்னதும் வீட்லஎல்லோரும் முதல்ல ஏசினாங்க. யாருமேவிரும்பல்ல.. ஆனா அம்மா மட்டும் அவரை ஒருமுறை இங்க வரச்சொல்லிப் பாக்கணுமென்டா..பிறகு ஒருநாள் லீவுல ஊருக்கு வந்த நேரம் அவருஇங்க வந்திருந்தாரு.. அவரோடு இரண்டு மூணுநாள் பழகிப்பார்த்த பிறகு அவரை எல்லாருக்குமே பிடிச்சிப்போயிட்டுது..அந்தளவுக்கு நல்ல அருமையான மனிசன் என்ட விமல்..’ அதற்கு மேல் அவளால் பேசமுடியவில்லை.

நான் சிறிது நேரம் பேசாமலிருந்துவிட்டு, ‘பிறகு..?’

கண்ணீரைத்துடைத்தபடி, ‘முறைப்படி அவங்க வீட்டுக்குப்போய் கலியாண பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கறதுக்குத்தான் இருந்தாங்க. ரெண்டுபேரும் வெளிநாட்டிலருந்தது போதுமென்றுஅங்கருந்து எக்ஸிட் ஆகி இலங்கைக்கு வரக்கூட டிஸைட் பண்ணியிருந்தோம். முதல்ல அவருதான் எக்ஸிட்டாகி ஊருக்கு வந்தார். அப்பவும் நான் சார்ஜாவுலதான் இருந்தேன். நானும் ஊருக்கு வரலாமென்டு காத்திட்டிருந்தபோதுதான் திடீரென்டு ஒருநாள் அவருக்கிட்டருந்து கோல் வருது. ஊருல தனக்கு தொழில் எதுவும் சரிவரல்ல. அதனாலதான் ஆமியிலசேரப்போறதாக..’

‘அப்படியா?’

‘அந்த நேரத்தில யுத்தத்தால டெய்லிடெட்பொடிகள் வந்திட்டிருந்த நேரம்..அதனாலவேணாமென்டு எவ்வளவோ மன்றாடிப் பார்த்தேன்.. அவர் கேட்கவேயில்ல.. தனக்கு ஆமியில துவக்குத் தூக்கி யுத்தத்துக்கு போகிற வேலையெல்லாம் கிடையாது. அதனால அப்படியெல்லாம் ஆகாது என்று சமாதானஞ் சொன்னார்’

‘இது உங்க வீட்ல தெரியாதா..?

‘இல்ல.. எனக்கு மட்டுந்தானே தெரியும். தெரிஞ்சிருந்தா சம்பந்தமே வேணாமென்றிருப்பாங்க. அதனால தான் ஆமியில இருக்கிறதை யாரிட்டயும் சொல்ல வேணாமென்டு எனக்கிட்டச் சத்தியம் வாங்கியிருந்தார்.பிறகு

ஒருநாள் திடீரென்டு திரும்பவும் கோல் வருது இன்னும் ஒரு ரெண்டு மூணு வருஷத்திற்கு நீ எனக்காக காத்திருப்பியா என்று கேக்கிறார்.. ஏனென்று கேட்டேன்.. தனக்கு ஆமியில ரகசிய ட்ரெயினிங்ஒண்டு இருக்காம் அதை முடிச்சா நல்ல சம்பளமாம். அதிலருந்து இடையில வர்றதுக்கோ டெலிபோனில் பேசுறதுக்கோ விடமாட்டாங்களாம் என்று சொன்னார்.இரண்டு வருசமெல்லாம் அவரைப் பிரிஞ்சு ஊருக்கு வந்திருக்கறதை விட சார்ஜாவுலயேஇருந்து உழைச்சு அந்தநேரம் பாதியில் நின்டிருந்த இந்த வீட்டைக் கட்டலாமென்று முடிவுசெஞ்சேன். எங்கட வீட்லயும் அவர் ஏதோ ஒரு வெளிநாட்டுக் ஷிப்பிங் கொம்பனியில வேலசெய்யப்போகிறதாகச் சொல்லி உண்மையை மறைச்சிட்டேன்.’

‘பிறகுஊருக்கு வந்தீங்களா..?’

‘ஓம், 2009ல வந்தேன்.. அப்ப இரண்டு வருஷம் முடிந்திருந்தது.. விமலிடம் இருந்து எந்த தகவலும் கிடையாது. ஏதாவது ஒரு அவசரமென்றால் தகவலை மாத்திரம் எஸ்எம்எஸ் பண்ணலாம் என்று ஒரு நம்பர் தந்திருந்தார். அதற்குக்கூட அடிக்கடி அனுப்ப ஏலாது’

‘அவரிட்டருந்து தகவல் ஏதாவது வந்திருக்கா..?’

‘இல்ல.. ஆனா ஒரேயொரு தரம் வந்துது.. அது2009 மாசி மாதத்தில ஒரு நாள். அன்டைக்கு என்ட போன் நம்பருக்கு ஒரு எஸ்எம்எஸ் வந்திச்சுது. சிங்கள எழுத்தில ஆனா தமிழ் உச்சரிப்புல ‘இன்னும் ரெண்டொரு மாதத்தில என்னுடைய ட்ரெயினிங் முடிஞ்சிரும். நான் வந்திருவேன்’ என்று எழுதியிருந்தது. அந்த நம்பருக்கு நான் திரும்ப கோல் எடுத்துப்பாத்தன். ஆனா அது வேல செய்யல்ல. அது விமல்ற தகவலாகத்தான் இருக்க வேணும் என்று சந்தோசமாக இருந்தேன். ஆனா..’

‘ஆனா..?’

‘அதுதான் அவர்ட்ட இருந்து வந்த கடைசித்தகவல்.. ஊருக்கு வந்ததிலிருந்து நானும் ஆறுமாதமாகப் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து வெறுத்துப்போயிட்டேன். யுத்தமும் முடிஞ்சு எத்தனையோ மாசமாகியும் அவர் வராததால சந்தேகம் வந்திட்டுது.எத்தனைக்கு வீட்டாக்களுக்கிட்டயும் பொய் சொல்றது..? இந்தா வருவார்.. அந்தா வருவார் என்டு காத்திருந்து பார்த்தேன். ஆனா ஆள் திரும்பி வரவேயில்ல. ஒருநாள் நான் பயந்து போய்

வீட்டில எல்லா உண்மையையும் சொல்லி அழுதேன். எல்லாருமாச் சேர்ந்து ஏசிப்போட்டுவேன்புடிச்சு நேர கண்டில தென்னக்கும்புரவில இருக்கிற அவர்ட வீட்டுக்கே போய் பார்த்தோம். அவங்களுக்கும் எங்க நிலைமைதான்..பாவம் மகனைக்காணாம அவர்ட அம்மாவும் மத்தவங்களும் அழுது தவிச்சிட்டிருந்தாங்க..’

‘ஆமி ஹெட்குவார்ட்டசுக்கு போனீங்களா..?’

அங்கயும்தான் போனோம்.. விமல்ர குடும்பத்தோட சேர்ந்து எல்லாருமா போய் பெரிய பெரிய ஆமி ஒஃப்பிஸருக்கிட்டயெல்லாம் கேட்டுப் பார்த்தோம்..கடைசி யுத்தத்தில காணாமப்போன சோல்ஜர்கள்ற லிஸ்ட்ல அவருட பேரையும் பதிஞ்சு வச்சிருந்தாங்க..மிஸ்ஸிங் என்று லேசாச் சொல்லிட்டாங்க. விமலுக்கு என்ன நடந்தது என்று இன்டைக்கும் யாருக்குமே தெரியல்ல..ஆறு வருஷமாச்சு.. ரெண்டு தரம் சார்ஜாவுக்குப் போய் போய் வந்திட்டன். ஆனா என்னால அவர இன்னும் மறக்க முடியல்ல..’

அவளால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

இன்றுதான் அறிமுகமான யாரோ ஒருவனிடம் பாயிஸின் நண்பன் எனும் ஒரே காரணத்திற்காக உரிமையோடு தன்னுடைய சோகத்தை சொல்லிகண்ணீர்விடும் விலாசினிக்கு எந்தவகையில் ஆறுதல் கூறுவதென்றுதெரியவில்லை. அவள் தன்னைக்கட்டுப்படுத்தும் வரை காத்திருந்தேன்.

‘இனியும் உங்க விமல் வருவாரென்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்குதா விலாசினி..?’

‘எனக்குத் தெரியல்ல.. ஆனா’

‘சரி, வீட்ல இருக்கிற பெரியவங்க என்ன சொல்றாங்க..?’

‘அவங்க.. இனியும் வெளிநாட்டுல இருக்காம இங்க வந்துவிடச் சொல்றாங்க..வேற யாரையாவது மெரி பண்ணவும் சொல்லிட்டிருக்காங்க’

‘எனக்கும்அதுதான் சரியாப்படுது விலாசினி. அதுவும் இப்ப உங்க அம்மாவும் இல்லாத நேரத்தில தனியாருக்கிறது நல்லதில்ல..’

‘சரி, அப்படியே நடந்தாலும் அதுக்குப் பிறகு ஒருநாள் விமல் வந்திட்டாரெண்டால்..?’

‘உயிரோட விமல் இருந்தா இத்தனை வருசத்தில வந்து பாக்காம அல்லது போன்லயாவது பேசியிருக்காம ஏன் இருக்கணும்?’

‘அதுவும் சரிதான்.. ஆனா என்ட உள்மனம் அவர் எங்கேயோ இருக்கிறாரு என்றுதான் இன்னும் சொல்லுது!’அவளுடைய கண்களில் ஒரு நம்பிக்கை பளிச்சிடுவதை நான் பார்த்தேன்.

‘அப்படியென்டா சரி. ஆனா உங்களுக்கு எப்ப அந்த நம்பிக்கை இல்லாமப்போகுதோஅதுக்குப் பிறகாவது முடிவை மாத்திக்கொள்ளுங்க. மனதைக் குழப்பிக்காம சந்தோசமா இருக்கப்பாருங்க விலாசினி. நான் போய் வாறேன்’ என்றபடி எழுந்தேன்.

‘நீங்க வந்ததுக்கு மிச்சம் தேங்ஸ்.. என்ட சோகத்தைச் சொல்லி உங்களை கஷ்டப்படுத்திட்டன்.. ஸொறி!’

‘இற்ஸ் ஓகே. டவுனுக்கு வந்தா ஜுவலரிக்கு வாங்கசந்திக்கலாம். நான் ட்யூட்டி முடிஞ்சு ஃப்ரீ கெடைச்சா எப்பவும் பாயிஸோடதான் இருப்பேன்’

அப்பொழுதுதான் பாயிஸ் ஏதோ ஒரு சிறிய பொதியைத் தந்து விலாசினியின் தாயின் படத்திற்கு வைத்துவிட்டு வரச் சொன்னது ஞாபகம் வந்தது.

‘அதுசரி, உங்க அம்மா படம் ஏதுமிருக்குதா..?’

‘அட கடவுளே, மறந்தே போயிட்டன்! இந்த ரூமுக்குள்ள இருக்கு. இப்பிடி வாங்க’ என்று அழைத்துப்போனாள். அங்கிருந்த ஒரு மேசையில் குங்குமம், மஞ்சள் போன்றவற்றுடன் ஊதுபத்திகள் கும்பலாகப் புகைந்திருக்க, சந்தன மாலைக்குப் பின்னேயிருந்து மறாப்புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தார், விலாசினியின் தாய்.

சில வினாடிகள் படத்தின் முன் அமைதியாக நின்று பொதியைவைத்துவிட்டு திரும்பியபோது எதிர்ச்சுவரில் இருந்த ஒரு புகைப்படம் என்னைக் கவர்ந்தது. சட்டகம் போட்டு மாட்டியிருந்த படத்தில் விலாசினியும் ஓர் இளைஞனும் மார்பளவு தோற்றத்தில் புன்னகைத்தபடி அருகருகே நெருக்கமாக நின்றிருந்தார்கள்.

அதை நான் ஆர்வமாகப்பார்ப்பதைக் கண்டுவிட்டு, ‘அவர்தான் என் விமல். சார்ஜாவில் இருந்த நேரம் நாங்க எடுத்த படம்’ என்றாள் விலாசினி.

‘அப்பிடியா..?’ என்றபடி அதை மேலும் நெருங்கிச்சென்று உற்றுப்பார்த்தேன். விலாசினியை லேசாக அணைத்தவாறு நின்றிருக்கும் அந்தமுழுச்சவரம் புரிந்த இளைஞனை வேறு எங்கோ பார்த்தது போலிருந்தது. ‘அந்தக் கண்கள்.. புருவம்.. வாய்.. தாடை..’ குழப்பமடைந்து சில நிமிடங்கள் நான் அப்படியே நின்றிருக்க எனது பார்வை சட்டென படத்தின் அடியில் பொறிக்கப்பட்டிருந்த வாசகத்திற்கு இறங்கியது.

அதில், நிதின் விமலசூரிய – கவிதா விலாசினி என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.

-000-

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *