Sunday, January 21, 2018

.
Breaking News

கல்…புல்…காகம்…6…..நாவல்!… .( நாவல் ) …. சங்கர சுப்பிரமணியன்.

கல்…புல்…காகம்…6…..நாவல்!… .( நாவல் ) …. சங்கர சுப்பிரமணியன்.
குணசேகரனும் மனோன்மணியும் ஐந்து வயது சிறுவனான மனோகரனுடன் சேரன்மாதேவிக்கு வந்து கொண்டிருந்தார்கள்.
வரும் வழியில் திருநெல்வேலியில் மனோன்மணியின் மாமாவீட்டுக்குசெல்ல முடிவு செய்திருந்தார்கள். அவர்கள் வந்த
கார் திருநெல்வேலியை நெருங்கிக் கொண்டிருந்தபோது சங்கர்நகர் சிமெண்ட் கம்பெனி அருகே வரும்போதுதான் அந்த விபத்து
நடந்தது. எதிரே அந்துகொண்டிருந்த லாரி கண்சிமிட்டும் நேரத்தில் அவர்கள் வாகனத்தின் மீது நேருக்குநேர் மோத வாகனத்தில்
இருந்த குணசேகரன் வெளியே தூக்கி வீசப்பட்டு இரத்த வெள்ளத்தில் மிதந்தான். சிறுவன் எவ்வித காயமுமின்றி காரினுள்
அழுது கொண்டிருக்க மனோன்மணி காரின் கதவுதிறந்து பாதி உடல் காரினுள்ளும் பாதி உடல் தரையிலுமாக தலையில்
அடிபட்டுமயங்கிக் கிடந்தாள். காரின் முன்பகுதியும் வலதுபக்கமும் மிகவும் மோசமாக நசுங்கிப் போய் வாகனஓட்டி அந்த
இடத்திலேயே இறந்துபோனான்.
பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் மருத்துவவமனையில் அறுவை சிகிச்சைக்குப்பின் இலேசாக கண்திறந்து பார்த்த
மனோன்மணி அதன் பிறகு இரண்டு நாளாகியும் சுயநினைவின்றி கிடந்தாள். குழந்தை மனோ அம்மா அம்மா என்று அழுது
கொண்டே இருந்தான். மருத்துவவமனையின் உள்ளும் வெளியிலும் உறவினர்கள் நண்பர்கள் என ஏகப்பட்டோர் நின்றிருந்தனர்.
குணசேகரனை அவசரசிகிச்சை பிரிவில்வைத்து சிகிச்சை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. சிகிச்சையளித்துக்
கொண்டிருந்த மருத்துவர்கள் தங்களுக்குள் அந்த சிகிச்சைபற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.
இப்படி மருத்துவர்கள் கூடி நின்று தங்களுக்குள் விவாதித்துக் கொண்டிருப்பது அங்கிருந்த உறவினர் முகத்தில் துக்கத்தையும்
கேள்வியையும் பிரதிபலிக்க அவர்களும் தங்களுக்குள் விவாதத்தை தொடங்க ஆரம்பித்துவிட்டனர். அவர்களில் மிகவும்
வயதான ஒருவர் அருகில் இருந்தவரிடம்,
“என்னவே மாப்பிள டாக்டருங்க இப்பிடி கூடி நின்னு பேசுறத பாத்தா நெலம கொஞ்சம் மோசமாத்தான் இருக்கும்
போல கிடக்கு”
“அத்தான் கொஞ்சம் சும்மா இருக்கேளா. யாருக்கு என்ன ஆவுமோன்னு எல்லாரும் கதிகலங்கியிருக்யில நீரு உம்பாட்டுக்கு
எதையாவது சொல்லி வெக்காதியும்” என்றார் அருகிலிருந்தவர்.
“அது இல்லவே மாப்பிள, டாக்டருங்க ஒன்னுமே சொல்லாம அவங்களாகவே கூடி நின்னு பேசுறதது எதையதையோ
நினக்க தோனுதுல்லா. நெருப்புன்னு சொன்னா வெந்தாவே போயிடும்”
“சும்மா போங்கத்தான். நீங்களும் ஒங்க சொலவடையும். அவங்க அவங்க என்னவோ ஏதோ ஒன்னும் தெரியலயேன்னு
ஈரக்கொலய கையில புடிச்சிக்கிட்டிருக்கயில நீங்க ஒருபக்கம் அபசகுணம் மாதிரி எதையாவது சொல்லிக்கிட்டு
திரியாதிங்க”
என்று அருகில் இருந்தவர் சொல்லவும் பெரியவர் அமைதியானார். அப்போது வேகமாக வெளியேயிருந்து வந்த உலகநாதன்
அங்கே கூடிநின்று விவாத்துக் கொண்டிருக்கும் மருத்துவர்களை அணுகி தற்போதைய நிலவரத்தை அறிய முயலும்போதே
அங்கிருந்த அறுவைசிகிச்சை நிபுணர்,
“எங்களால் முடிந்த அளவுக்கு எல்லா முயற்சிகளையும் செய்து கொண்டுதான் இருக்கிறோம். இப்போது எதையு சொல்ல
முடியாது. உங்கள் மகள் ஒருமுறை கண்திறந்து பார்த்தாலும் இன்னும் சுய நினைவின்றித்தான் இருக்கிறாள்”
“வேறு ஒன்றும் பயப்பட வேண்டியதில்லையே, டாக்டர். மருமகனின் நிலை என்ன டாக்டர்? ஏதவது முன்னேற்றம் தெரிகிறதா?”
:இருவரின் உயிருக்கும் எந்தவித கெடுதலுமில்லை. இருவருமே பிழைத்துவிடுவார்கள். உங்கள் மருமகனுக்கு மட்டும்……”
என்று சற்று நிறுத்தியதும் பதறிப்போன உலகநாதன்,
“என்ன ஆச்சு டாக்டர்? என்னவென்றாலும் தாங்கிக்கொள்வோம். உண்மையை சொல்லுங்கள், டாக்டர்”
“ஒன்றும் பதறாதீர்கள். உயிருக்கு ஆபத்து ஒன்றுமில்லை என்று சொன்னேன் அல்லவா? காரிலிருந்து வெளியே தூக்கி
எறியப்பட்டதால் தலையில் பலத்த அடிபட்டு ரத்தம் கட்டியிருந்தது. அதை சரிபண்ணிவிட்டோம். ஒரு காலில் மட்டும்
பிரச்சினை உள்ளது” என்றார்.
“என்ன பிரச்சினை டாக்டர்?”
“இதற்குமேல் எதையும் தயவு செய்து கேட்காதீர்கள். இன்னும் நாற்பத்தியெட்டு மணி நேரம் கழித்துத்தான் எதையும்
உறுதியாய் சொல்லமுடியும்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
-சங்கர சுப்பிரமணியன்.
(தொடரும்)

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *