Monday, February 19, 2018

.

ஈழத்து தமிழ் இலக்கிய களத்தில் “எஸ்பொ” ஒரு சகாப்தம்!

ஈழத்து தமிழ் இலக்கிய களத்தில் “எஸ்பொ” ஒரு சகாப்தம்!

இன்று எஸ்பொ அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவுநாள்.
என் மதிப்புக்கும்,மரியாதைக்கும்,அன்புக்குமுரிய
எஸ்.பொன்னுத்துரை அவர்களின் எழுத்துப் பாசறையில் இருந்தவன் என்ற பெருமிதத்தில்
அவரை இன்று நினைவுகூருகின்றேன்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும், சென்னை கிறிஸ்த்தவ கல்லூரியிலும் உயர்கல்வி பயின்றார்.
நைஜீரியாவில் ஆங்கிலத்துறையில் தலைவராக பணியாற்றிய இவர் மட்டக்களப்பில் ஆசிரியராகவும் அதிபராகவும் பணியாற்றினார்.ஏறக்குறைய இரண்டரை சகாப்தங்களுக்கு மேலாக எனக்கும் அவருக்கும் இடையில் இலக்கிய உறவு இருந்தது.அதைவிட என் மைத்துணர் இரா.தெய்வராஜனின் சம்பந்தியும் கூட. அதனாலும் எங்களுக்குள் அதிக நெருக்கம் இருந்தது.
இன்றைய திகதிக்கு ஈழத்து இலக்கியபடைப்பாளிகளில்,எழுத்தாளர்களில்,விமர்சகர்களில் மிக மூத்தவராக மட்டுமல்லாது ஒரு சிறந்த தரமான பதிப்பக உரிமையாளராகவும் இருந்தார்.நான்கு தலைமுறை கண்ட ஒரு ஓர்மம் மிக்க படைப்பாளி.அறுபதுகளில் ஈழத்து மேட்டுக்குடி பேராசிரியர்களுக்கு தன் எழுதுகோல் மூலம் சாட்டையடி கொடுத்த துணிச்சல்காரர். தனக்கென்று ஒரு எழுத்துநடை,
தனக்கென்று ஒரு சொல்லாட்சி,தைரியமாக தான் நினைப்பதை,எழுதக்கூடியவரும்,மேடையில் பேசக்கூடியவராகவும் இவர் திகழ்ந்தார்.தமிழ் நாட்டில் உள்ள அனைத்து சிறந்த எழுத்தாளர்களும்,விமர்சகர்களும் இவரின் எழுத்தை ,இவரின் கருத்தை,மிகவும் விருப்போடு படித்தார்கள்,சுவைத்தார்கள்,தமிழும்,ஆங்கிலமும்,இவருக்கு தண்ணிபட்ட பாடு.அதனால் இவரது எழுத்துக்களில் ஆழமான சொல்லாடல்கள் பரிமளிக்கும்.சிலேடையாக சில விடயங்களை சொல்வதில் இவருக்கு நிகர் இவரேதான். எனக்காக இவர் பதிப்பித்த எனது “இல்லாமல் போன இன்பங்கள்” நூலுக்காக ஆறுபக்க முன்னீடு ஒன்றை எழுதி இருந்தார். அதில் முதல் இரண்டு பக்கங்களில் எழுதி இருப்பது அவருக்கு மட்டுமே புரியும்.அதில் தனக்கே உரித்தான பாணியில் கருணாநிதியையும்,
சோனியாவையும் சாடி எழுதிவிட்டே என்னைப்பற்றி எழுதியுள்ளார்.”ஏனப்பா என்று நான் அவரிடம் கேட்கமுடியாது.
அவரிடமிருந்து ஒரு நல்ல விமர்சனம் கிடைப்பதென்பது மிக அரிது.முகஸ்துதிக்கு விமர்சனம் செய்பவரல்ல.ஒரு காலத்தில் ஈழத்து சிறுகதை உலகில் மிக உச்சத்தில் நின்ற ஒரு ஜனரஞ்சக எழுத்தாளர்.அந்தவகையில் என் நூல்களுக்கு அவர் கையால் எழுதி தந்த காத்திரமான
முன்னீடுகளுக்கு நல்ல பாராட்டுகளும்,
விமர்சனங்களும் கிடைத்தன. பல நாடுகளில் என் நூல் அறிமுகம் செய்யப்பட்டபோது நூல் பற்றி பேசிய பேராசிரியர்கள்,ஆய்வாளர்கள் குறிப்பிட்டார்கள்,.”எஸ்பொ அவர்களிடமிருந்து அவ்வளவு இலகுவாக ஒரு படைப்பாளி நல்ல விமர்சனம் ஒன்றை பெறமுடியாது.கோவிலூருக்கு அது கிடைதிருகின்றது” என்று. .அது எனக்கு மகுடம் சூட்டியதுபோல் இருந்தது.
இப்படிப்பட்ட ஓர் எழுத்துப் பிரமாவுக்கு அவர் மறைவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் கனடாவில் “இயல்”விருதும்.தமிழ்நாட்டில் இவரது பவள விழாவில் ஒட்டுமொத்த தமிழக படைப்பாளிகளும் சேர்ந்து அளித்த வாழ்நாள் சாதனையாளர் விருது.மற்றும் இவரது ஐரோப்பிய விஜயத்தின்போது கிடைத்த பல விருதுகள் இவரின் ஆளுமைக்கு கட்டியம் கூறி நிற்கின்றன எட்டு வருடங்களுக்கு
முன்னர் இவரின் சரிதத்தை “வரலாறில் வாழ்தல் “என்ற 2000 பக்கங்கள் கொண்ட பிரமாண்டமான இரண்டு நூல்களாக படைத்து அசத்தியிருந்தார்.ஈழத்து எழுத்தாளர்களுக்கு ஒரு முன்னோடியாக,ஒரு முன்மாதிரியாக,ஒரு அடையாளமாக என்றும் இவர் இருப்பார் என்பதில் ஐயமில்லை.இந்த தனித்துவமான எழுத்து பிரமாவுடன் ஒரு தத்துக்குட்டியாக அன்று நானும் அவர் பின்னால் நின்றேன் என்ற பெருமை எனக்கு உண்டு.
நான் அன்போடு அப்பா என்று அழைத்த அவர் நாமம் என்றும் வாழ்க அவர் ஆத்மா சாந்தி அடைந்து அமைதி கொள்ளட்டும்.ஓம் சாந்தி

கோவில்லூர் செல்வராசன்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *