Thursday, January 18, 2018

.
Breaking News

நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கு இடமில்லை!

நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கு இடமில்லை!

நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கு இடமில்லை; போட்டியிலிருந்து விலக மாட்டோம் என நடிகர் விஷால் சேலத்தில் வியாழக்கிழமை தெரிவித்தார்.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வரும் 18-ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இதில், சரத்குமார் – ராதாரவி தலைமையிலான அணியும், விஷால் – நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் போட்டியிடுகின்றன. இரு அணியினரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில், விஷால் அணியினர் சேலத்தில் வியாழக்கிழமை நாடக நடிகர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினர்.
முன்னதாக, நடிகர் விஷால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நடிகர் சங்கத் தேர்தல் முறையாக நடக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம். தேர்தலில் உறுப்பினர்கள் அனைவரும் சென்னைக்கு நேரில் வந்து வாக்களிக்க வேண்டும.
தற்போது தயாரிப்பாளர்கள் சங்கத்தினரும், இயக்குநர்கள் சங்கத்தினரும் எங்களிடம் சமாதானத்துக்கு வந்துள்ளனர். அவர்களின் முயற்சியை நான் மதிக்கிறேன். நடிகர் சங்கத் தேர்தலில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. தேர்தல் நடக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். போட்டியிலிருந்து நாங்கள் விலக மாட்டோம்.
பாண்டவர் அணி தேர்தலில் போட்டியிடுவது, நடிகர்களை பிளவுபடுத்துவதற்காக அல்ல. மேலும், எங்களது குடும்பத்தை வலுப்படுத்துவதற்காகத்தான்.
எனது தனிப்பட்ட பிரச்னைக்காக இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை. தேர்தல் நடந்து முடிந்த பிறகும், நாங்கள் ஒற்றுமையாகவே இருப்போம். எங்களுக்குள் பிளவில்லை. நாடக நடிகர்களுக்கு நிச்சயம் நல்லது செய்வோம். விஷால், கார்த்தியால் சங்க நிர்வாகத்தை நல்ல முறையில் நடத்த முடியும். எங்களை யாரும் தூண்டிவிடவில்லை.
தயாரிப்பாளர்கள் சங்கம் உள்ளிட்ட அனைத்து சங்கங்களுக்கும் தேர்தல் நடக்கிறது. அதேபோல, நடிகர் சங்கத் தேர்தலும் ஜனநாயக முறையில் நடக்க வேண்டும்.
நடிகர் சங்கத்தில் சிம்பு ஒரு உறுப்பினர். நானும் ஒரு உறுப்பினர். அந்த அடிப்படையில் தேர்தலில் போட்டியிடுகிறேன். தமிழக முதல்வரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். தேர்தலில் முதல்வர் வாக்களித்தால் வரலாற்றில் அது மறக்க முடியாத நிகழ்வாக அமையும் என்றார் விஷால்.
பேட்டியின்போது, நடிகர்கள் ராஜேஷ், கருணாஸ், ஜூனியர் பாலையா, சாந்தனு, பசுபதி, நடிகைகள் கோவை சரளா, ரோஹிணி, குட்டி பத்மினி, சுகன்யா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

About The Author

Related posts