Thursday, February 22, 2018

.
Breaking News

மாவீரர் குடும்பங்கள் மதிப்பளிக்கும் நிகழ்வு!

மாவீரர் குடும்பங்கள் மதிப்பளிக்கும் நிகழ்வு!

அண்மையில் மாவீரர் குடும்பங்கள் மதிப்பளிக்கும் நிகழ்வு தாயகத்தில் ஜனநாயகப்போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்றிருந்தது யாவரும் அறிந்ததே. இந்தநிகழ்வில வணக்கத்திற்கு வைக்கப்பட்டிருந்த மாவீரர்களின் திருவுருவப்படங்கள் விடுதலைப்புலிகளின் இராணுவச்சீருடையான வரிச்சீருடையைத்தவிர்த்து சாதாரண சிவில் உடையில் அந்த மாவீரர்களின் திருவுருவப்படங்கள் வைக்கப்பட்டது தொடர்பாக சமூகவலையத்தளத்தில் பலரும் பலவாறான விமர்சனக்கருத்துக்களை முன்வைத்துவருகின்றனர். ஜனநாயகப்போராளிகள் கடசியினர் மாவீரர்களின் திருவுருவப்படங்களை சிவில் உடையில் வடிவமைத்து அவர்களின் குடும்பத்தவர்களுக்கு கொடுப்பது தொடர்பாகவும் எனது ஊடகநண்பர் ஒருவர் தனது அதிருப்தியை என்னிடம் தெரிவித்து என்னுடன் வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட்டிருந்தார். ஆகவேதான் இதுசம்பந்தமாக ஒரு தெளிவான விளக்கமான பதிவை முகநூலில் பதிவுசெய்யவேண்டிய கடப்பாடு எனக்கு ஏற்பட்டதையடுத்து இந்தப்பதிவை இங்கு பதிவிடுகின்றேன்.

ஜனநாயகப்போராளிகள்கட்சியிலுள்ளவர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா? கோத்தபாயவின் ஆட்களா? இராணுவப்புலனாய்வாளர்களா? என்ற விவாதங்களுக்கு நான் வரவில்லை. அந்த விடயங்களை அலசுவது இப்பதிவின் நோக்கமல்ல. அது ஒருபுறம் இருக்கட்டும்.

மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு வரிச்சீருடையைத்தவிர்த்தது சரியா? தவறா? சமகாலச்சூழ்நிலைக்கு அது பொருத்தம்தானா? என்பதை ஆராய்வதே இப்பதிவின் நோக்கமாகும். இதை ஆராய்வதற்காக நாங்கள் பதினைந்து ஆண்டுகள் பின்னோக்கிப்போவோம். அதாவது 2002-ம்ஆண்டுமுதல் 2005-ம் ஆண்டுகாலப்பகுதிகளுக்குச்செல்வோம். 2002-ம்ஆண்டு சமாதானமும் போர் நிறுத்தமும் அமுலுக்கு வந்த காலப்பகுதியில் தமிழீழத்தின் அனைத்து மாவட்டங்களிலும் (அரசபடையினரின் கட்டுப்பாட்டுப்பகுதிகள் உட்பட) விடுதலைப்புலிகள் தமது அரசியல்ச்செயலகங்களைத்திறந்து தமது அரசியல் வேலைத்திட்டங்களை முன்னெடுத்தனர். புரிந்துணர்வு ஒப்பந்த சரத்தின்படி அரசபடையினரின் கட்டுப்பாட்டுப்பகுதிகளுக்கு அரசியல்ப்பணிகளை மேற்கொள்வதற்கு செல்கின்ற போராளிகள் விடுதலைப்புலிகளின் இராணுவச்சீருடையான வரிச்சீருடையை தவிர்த்து சாதாரண சிவில் உடை அணிந்தே செல்லவேண்டும். இராணுவ உபகரணங்களான ஆயுதங்கள் மற்றும் தொலைத்தொடர்புசாதனங்கள் கொண்டு செல்வதை தவிர்த்தல் வேண்டும். இவ்வாறான விதிமுறைகளை ஏற்றுக்கொண்டுதான் அன்றையநாட்களில் விடுதலைப்புலிகள் அரசியல்ப்பணிகளை முன்னெடுத்தனர்.

அந்த சமாதானகாலப்பகுதியிலும் சில போராளிகளின் வீரச்சாவுச்சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. அந்த மாவீரர்களின் வித்துடல்கள் படைக்கட்டுப்பாட்டுப்பகுதியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் விதைக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் சிவில் சீருடை அணிவித்து மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்படாமலும்தான் வித்துடல்கள் விதைக்கப்பட்டன. உதாரணமாக கடற்புலிகளின் தாக்குதலணிப்பொறுப்பாளர்களில் ஒருவரும் கடற்புலிகளின் நிதிப்பொறுப்பாளருமாகிய மேஜர் தயாநந்தன் முன்னர் சண்டை ஒன்றில் தலைப்பகுதியில் காயமடைந்து குண்டுச்சிதறல் தலைப்பகுதியில் புதைந்திருந்தது. அது அவருக்கு பலசந்தர்ப்பங்களில் கடுமையான உபாதைகளுக்கு உட்படுத்தியிருந்தது. இதன் விளைவாக 2005-ம்ஆண்டு பெப்ரவரிமாதம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அதற்கான சத்திரசிகீச்சையின்போது மேஜர் தயாநந்தனாக சாவைத்தழுவிக்கொண்டார். அவரது பெற்றோர்கள் யாழ்ப்பாணத்தில் நிலையாக வசித்துவந்ததால் அவரது வித்துடல் கோப்பாய் அல்லது எல்லங்குளம் என நினைக்கிறேன் இரண்டில் ஒரு மாவீரர் துயிலுமில்லத்தில்த்தான் சாதாரண சிவில் உடை (சிவில் ரவுசர் சேட்) அணிவித்துத்தான் விதைக்கப்பட்டது. லெப் கேணல் மறவன்மாஸ்ரர் சுகவீனம் காரணமாக சாவடைந்தபோது அவரது வித்துடல் யாழ்ப்பாண மாவட்டமெங்கணும் மக்களின் இறுதி வணக்கத்திற்காக கொண்டுசெல்லப்பட்டபோதும் தியாகசீலத்தில் வைத்து அவரது வித்துடலுக்கு சிவில் உடை அணிவித்துத்தான் யாழ்ப்பாணமெங்கும் அவரது வித்துடல் மக்களின் இறுதி வணக்கத்திற்காக கொண்டுசெல்லப்பட்டது. பின்னர் பளைக்கு கொண்டுவந்து அங்கு வைத்துத்தான் நீலவரிச்சீருடை அணிவித்துத்தான் வன்னிமக்களின் இறுதிவணக்கமும் உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் வித்துடல் விதைப்புநிகழ்வும் இடம்பெற்றது. இவற்றை வைத்து மாவீரர்களான தயாநந்தனையும் மறவன்மாஸ்ரரையும் சிறுமைப்படுத்தியதாகவோ அன்றி அவர்களை கொச்சைப்படுத்தியதாகவோ ஒருபோதும் அமைந்துவிடலாகாது. அவ்வாறு ஒருபோதும் கருதிவிடவும் முடியாது. அன்றைய காலத்தின் சூழ்நிலைகளுக்கேற்றவாறு செயற்படுத்திக்கொண்ட விடயங்கள் அவை.

2003-ம்ஆண்டு யாழ்ப்பாணம் மானிப்பாயில் ஒரு சம்பவம் நடந்தது இலகுவில் மறந்திருக்கமாட்டடீர்கள் என நம்புகின்றேன். மகளீர்ப்போராளிகள் யீன்ஸ் சேட்டுடன் இடுப்புப்பட்டி (பெல்ற்) அணிவது வழக்கம். இராணுவக்கட்டுப்பாட்டுப்பிரதேசங்களுக்கு அரசியல்ப்பணிகளை முன்னெடுக்கச்சென்றிருந்த மகளீர்ப்போராளிகளும் இந்த இடுப்புப்பட்டியை அணிந்துதான் சென்றிருந்தனர். இந்த இடுப்புப்பட்டி முன்புறமாக பூட்டும் பகுதி உலோகத்தகட்டினாலானது. 2003-ம்ஆண்டு மானிப்பாயில் அரசியல்ப்பணிகளை முன்னெடுப்பதற்காக வீதியால் சென்றுகொண்டிருந்த மகளீர்ப்போராளிகளை சிறிலங்கா இராணுவத்தினர் வழிமறித்து அந்த உலோகத்திலாலான பூட்டைக்கொண்ட இடுப்புப்பட்டி இராணுவச்சீருடை (மில்ற்றி பெல்ற்) வகையைச்சேர்ந்தது எனக்கூறி மகளீர்ப்போராளிகளில் கைவைத்து அந்த இடுப்புப்பட்டிகளை வலுக்கட்டாயமாக கழற்றி எறிந்தனர். வழக்கமாக மகளீர்ப்போராளிகளை யாராவது தாழ்த்திக்கதைத்தாலே கோபத்தின் உச்சிக்கே சென்றுவிடும் தேசியத்தலைவர்அவர்கள் குறித்த இந்த மகளீர்ப்போராளிகள் அரசபடையினரால் அவமானப்படுத்தப்பட்ட பாராதூரமான சம்பவத்தையும் பொறுமையாக கையாண்டார். போர்நிறுத்த ஒப்பந்தத்தை விடுதலைப்புலிகள் மீறிவிட்டார்கள் என்ற சர்வதேசத்தின் பளிச்சொல்லுக்கு ஆளாகாமல் இருப்பதற்கும் விடுதலைப்புலிகளுக்கு சமாதானத்தின்மீதுள்ள ஆழமான பற்றுறுதியையும் சர்வதேச சமூகத்திற்கு வெளிக்காட்டும் நோக்குடனும் படையினரின் அந்த பாரதூரமான ஒப்பந்த மீறலையும் தேசியத்தலைவர்அவர்கள் பொறுமை காத்து மகளீர்ப்போராளிகளின் இடுப்புப்பட்டிப்பிரச்சினைக்கும் மாற்றுத்தீர்வொன்றை முன்வைத்தார். அதாவது இடுப்புப்பட்டியிலுள்ள உலோகத்தகட்டை தவிர்த்து ஒட்டும் முறையிலாலான இடுப்புப்பட்டியை அறிமுகப்படுத்தி இராணுவக்கட்டுப்பாட்டுப்பகுதிகளுக்கு அரசியல்ப்பணிகளை மேற்கொள்ளும் மகளீர்ப்போராளிகளை அந்த இடுப்புப்பட்டியையே அணிந்துகொள்ளுமாறும் அறிவுறுத்தியிருந்தார். இதுவெல்லாம் இயக்கத்தின் விதிமுறைகளுக்கு மாற்றீடாக அன்றைய காலச்சூழ்நிலைக்கு ஏற்றவாறு எடுக்கப்பட்ட மாற்று முடிவுகளாகும். இதைவைத்துக்கொண்டு விடுதலைப்புலிகள் தங்களது உடை பாவனை விதிமுறைகளை மீறிவிட்டார்கள் என்று கூறமுடியுமா?

வரிசீருடை அணிவித்த மாவீரர் திருவுருவப்படங்களை வைத்து ஏன் வணக்கம் செலுத்தவில்லை என்று கேட்கின்ற நீங்கள் ஏன் தமிழீழத் தேசியக்கொடியான புலிக்கொடியை ஏற்றி நிகழ்வுசெய்யவில்லையென்று ஏன் கேட்கவில்லை?

தம்பிமாரே அண்ணன்மாரே பயங்கரவாதத்தடைச்சட்டம் நீக்கப்படாதவரைக்கும் தாயகத்தில் வரிச்சீருடை அணிவித்த மாவீரர்களின் திருவுருவப்படங்களை வைத்து வணக்கம் செலுத்துவதென்பது சாத்தியப்படாத விடயமே. எதிர்காலச்சந்ததிக்கு வரலாறுகள் பரப்பப்படவேண்டுமென்பதில் எனக்கு மாற்றுக்கருத்து கிடையாது. அதற்குத்தான் தற்போது எல்லோரிடத்திலும் இணையவசதிகள் உள்ளன. அனைவரிடத்திலும் முகநூல் உள்ளது. இணையத்தளத்திலும் சமூக வலைத்தளங்களிலும் மாவீரர்களின் வரிச்சீருடையுடனான திருவுருவப்படங்களையும் அவர்களது வரலாறுகளையும் பதிவிட்டு அவற்றிற்கு ஊடாக எதிர்காலச்சந்ததிக்கு அவர்களது வரலாறுகளை பரப்புரை செய்வோம்.

விடுதலைப்புலிகளின் அடையாளங்களை தவிர்த்தே மாவீரர்நாளையும் தியாகதீபம் திலீபன் நினைவுநாளையும் அனுஸ்டிக்குமாறு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது. பயங்கரவாதத்தடைச்சட்டத்திலுள்ள சரத்தின்படி இலங்கையரசு எந்தவேளையிலும் தாயகத்தில் இந்த நிகழ்வுகளை தடுக்கலாம். நீங்கள் நினைக்கலாம் ஐக்கியநாடுகள் சபைக்கும் சர்வதேசத்திற்கும் பயந்துதான் மைத்திரிஅரசு மாவீரர்நாள் அனுஸ்டிக்க அனுமதித்திருக்கிறார்களென்று. ஒருபோதும் அப்படியல்ல. மைத்திரிஅரசு சர்வதேசத்திற்கு தனது நரித்தனத்தை மறைத்து நல்லபிள்ளையாக நடிக்கும் வேசமேயன்றி வேறொன்றும் அன்று. மற்றும்படி இதயசுத்தியோடு இந்த அனுமதியை அரசு தரவில்லை. ஆகவே பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குவதற்கு நாம் நிலத்திலும் புலத்திலும் முழுமூச்சாக செயலாற்றவேண்டும்.

மாவீரர்களின் சிவில்ப்படங்களை வணக்கத்திற்கு வைத்தமையை விமர்சித்த புலத்தில் வாழும் உறவுகளே உங்களுக்கு ஒன்று கூறுகின்றேன். நீங்கள் செயலாற்றும் தளம் புலம் அல்ல. அது நிலமேயாகும். நீங்கள் தாயகத்திற்குச்செல்லுங்கள். தாயகத்தில் உங்களது துணிச்சலான தேசியச்செயற்பாட்டை முன்னெடுங்கள்.

இதுபோன்று வரிச்சீருடை தவிர்த்து சிவில் உடையில் மாவீரர்களின் படங்களை வணக்கத்திற்கு வைத்ததை விமர்சித்து தாயகத்திலும் பலர் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர். அந்த தாயகத்து உறவுகளுக்கு ஒன்று கூறுகின்றேன். வரும் 27-ம்திகதி மாவீரர்நாளன்று தமிழீழத்தின் அனைத்து மாவட்டங்களிலுமுள்ள தலைநகரங்களின் மத்தியிலும் பெரிய தகரக்கொட்டகைகள் அமைத்து வரிசிசீருடை அணிவித்த மாவீரர்களின் திருவுருவப்படங்கள் வைத்து வீதிகளில் ஒலிபெருக்கி பொருத்தி மாவீரர்பாடல்களை ஒலிபரப்பி காலை 8.00மண்க்கு தமிழீழத்தேசியக்கொடியேற்றி படங்களுக்கு சுடரேற்றி இரவுவரைக்கும் அந்த நிகழ்வுகளை உங்களால் சுமூகமாக நடாத்த முடியுமென்றால் உங்கள் கருத்தோடு நான் உடன்படுகின்றேன். அதைவிடுத்து வாய்க்குவந்தபடி விமர்சனங்களை முன்வைப்பது ஆரோக்கியமானதன்று.

இன்னுமொருவிடயத்தையும் குறிப்பிடுகின்றேன். 2009இற்குமுன்னர் மாவீரர்பணிமனையிடம் இருந்த ஆவணங்களின்படி 1989-ம்ஆண்டிற்குமுன்னர் வீரச்சாவடைந்த கணிசமான மாவீரர்களின் திருவுருவப்படங்கள் சிவில்ப்படங்களாகவே இருந்தன. 2008-ம்ஆண்டுவரைக்கும் மாவீரர் எழுச்சிநாட்களில் மாவீரர் மண்டபங்களில் மேற்குறித்த மாவீரர்களின் கணிசமான படங்கள் சிவில்ப்படங்களாகவே வணக்கத்திற்கு வைக்கப்பட்டன.

ஆகவே வரிச்சீருடை அணிவித்த மாவீரர்களின் படங்கள்தான் அவர்களை கௌரவப்படுத்தும். சிவில் உடை அணிவித்த மாவீரர்களின் படங்கள் அவர்களை கொச்சைப்படுத்தும் என்று கூறுபவர்கள் சிந்தனைக்குறைபாடும் வரலாறு தெரியாதவர்களுமேயாவர். தாயமண் விடிவிற்காக உயிர்த்தியாகம் செய்த அனைத்து மாவீரர்களும் கண்கண்ட காவல்த்தெயவங்களே.

உறவுகளே தமிழீழ சுதந்திரப்பயணத்தின் சாட்சிகளாக எமது மாவீரச்செல்வங்களை நெஞ்சில் நிறுத்தி காலத்தின் சூழ்நிலைகளுக்கேற்றவாறு எமது போராட்டத்தின் வடிவங்களை மாற்றிக்கொண்டு காலம் இட்ட கட்டளைப்படி வரலாறுவிட்ட வழியில் எமது சுதந்திரப்பயணத்தை முன்னெடுப்போமாக…….

Manoharan Thanapalasingam

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *