Saturday, February 24, 2018

.
Breaking News

கலைஞர் திரு.இராசா ஐயா!.. — } ஏலையா க.முருகதாசன்.

கலைஞர் திரு.இராசா ஐயா!.. — } ஏலையா க.முருகதாசன்.

கலை என்றால் அது ஒரு அறிவு, அது ஒரு அழகியல்.அழகை நாம் எல்லா இடமும் பார்க்க முடியும்.

ஒழுங்காக முற்றத்தை கூட்டி துப்பரவாக வைத்திருந்தாலே அது பார்ப்பதற்கு அழகாகத்தான் இருக்கும்.

பிரபலங்கள் என்பவர்கள் எமக்கு பத்திரிகை வாயிலாகவும் தொலைக்காட்சி வானொலி ஊடாகவும் மேடைகளில் பொன்னாடை போர்த்திக் கொண்டவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை.

எமது அயலவர்களாக, நாம் நாளாந்தம் பார்க்கும் மனிதர்களாகக்கூட இவர்கள் இருப்பார்கள்.எமது உன்னிப்பான கவனத்தை அவர்கள் மீது செலுத்தாமல் இருப்பதனால் அவர்களுடைய கலை உணர்வை நாங்கள் அறியாமல் இருந்திருக்கலாம் அதனால் நமது கவனத்திற்கு உட்படாதவர்களாககூட இருக்கலாம்.

இந்தப் பதிவில் இடம்பெறப் போகும் இராசா ஐயாவைப் போன்று பல மனிதர்களை எனது முகநூல் நண்பர்களும் பெற்றிருப்பார்கள்.

இராசா ஐயா.இவர் எங்கள் அயலவர்.

இவருடைய பெயர் இராசா. இவர் அன்றாடம் ஒரு ஒழுங்குமுறையாக செய்யும் செய்கைகளால் இவர் மீது எனக்கு மதிப்பு உண்டாயிற்று.

அவரை நாமெல்லோரும் இராசா ஐயா என்றே அழைப்போம். இவர் மகாஜனக் கல்லூரியில் கல்வி கற்பித்த திருமதி.இ.பாக்கியத்தின் கணவராவார்.

இவருடைய இளமைக் காலத்தில் பிரித்தானிய இராணுவத்தில் ஏதோ ஒரு பணியாளராக பணியாற்றியதாக சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

இவர் அளவெட்டி பண்டத்தரிப்பு வீதியில் கூத்தன்சீமா(சந்தைகூடுவதற்கு அருகாமையில்) சைக்கிள்களைத் திருத்தும் கடை வைத்திருந்தார்.

இவருடைய அன்றாட செய்கைகள் அலாதியானவை, இரசிக்கத்தக்கவை.

இவருடைய வீடு பெரிய கல்வீடு. அந்த வீட்டில் இரண்டு குடும்பம் இருந்தது. இவர்களுடைய வீட்டுக்கு வடக்குப் பக்கமும் தெற்குப் பக்கமும் பெரிய முற்றம் இருந்தது.

காலை ஐந்து மணிக்கு நித்திரையை விட்டெழும் இராசா ஐயா முதலில் பல் துலக்கி முகம் கழுவிவிட்டு மனைவி கொடுக்கும் தேநீரைக் குடிப்பார். அதற்குப் பிறகு வடக்குப் பக்கத்திலும் தெற்குப் பக்கத்திலுமுள்ள முற்றங்களையும் வீட்டின் கிழக்:கு மேற்குப் பக்கத்திலுமுள்ள இடங்களையும் கூட்டுவார்.

இப்படிக் கூட்டும் போதும் சிறிய கற்களை தனது கால் விரல்களின் இடுக்குகளினால் கவ்விப் பிடித்து ஒரு குறிப்பிட்ட இடத்தை நோக்கி கால்களினால் வீசுவார்.

இது நாளாந்தம் நடக்கும் செயலாததால் அந்தக் குறிப்பிட்ட இடத்தில் கற்கள் ஒவ்வொன்றாகச் சேர்க்கப்பட்டு கற்குவியல் ஒன்று ஏற்படும்.
கால்களினால் கற்களை தூரத்தைக் கணித்து வீசுவதை பலமுறை அவதானித்திருக்கிறேன்.கொஞ்சம்கூட முன்னோ பின்னோ விழாது. அச்சொட்டாக அந்த இடத்திலெயே விழும்.

அதற்குப் பிறகு ஆடுகளுக்கு குழைவெட்டி தூக்குவார். ஆடுகள் பசியினால் கத்தவே கூடாது.அங்கிருந்து கிணற்றை எங்கள் குடும்பம் உட்பட நான்கு குடும்பம் பாவித்து வந்தது.

கூட்டிக் கொண்டிருக்கும் போது யாராவது அந்தக் கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தால் தென்னை மரங்களை நோக்கிப் பாயும் குளிக்கும் தண்ணீரை வாய்க்காலில் ஏதாவது இலைகள் தடுத்து நின்றால் அதனை எடுத்து விடுவது மட்டுமல்ல தண்ணீர் புறத்தில் வழிந்தோடாமல் இருப்பதற்காக மண்வெட்டியால் மண்ணை வெட்டி அழகாக அணைப்பார்.

அதற்குப் பிறகு குளிப்பார்.குளித்து முடிந்ததும் அடுப்படிக்கு முன்னால் இருக்கும் சிறிய விறாந்தையில் கீழே பலகை போட்டு இருந்து சிறிய பெட்டியைக்; கவிட்டுப் போட்டு அதற்கு மேல் வாழையிலை போட்டு காலைச் சாப்பாட்டைச் சாப்பிடுவார்.

அவர் சாப்பிட உட்கார்ந்ததும் அந்த நேரம் பார்த்து கோழிகள் எங்கிருந்தாலும் அந்த இடத்திற்கு வந்துவிடும். சாப்பாட்டிலிருந்து சிறிய அளவை கோழிகளை நோக்கி வீச காகங்களும் பறந்து வந்து அந்தச் சாப்பாட்டுக்குச் சொந்தம் கொண்டாடும்.
தேநீர் கொடுப்பது உணவு கொடுப்பது எல்லாம் அவர் மனைவியான பாக்கியம்மா ரீச்சர்தான். ‘பாக்கியம்’ என்ற சொல் அவர் வாயிலிருந்து அடிக்கடி வரும்.

பிறகு அவர் தனது பணியான சைக்கிள் கடைக்குப் போய்விடுவார்.மத்தியானச் சாப்பாட்டுக்காக வீட்டுக்கு வரும் அவர் முதல் வேலையாக ஆடுகளுக்கு தண்ணீர் வைப்பார்.
வீட்டில் உள்ள மற்றவர்கள் தண்ணீர் வைத்தார்களா இல்லையா என்பதை அவர் கவனிக்கமாட்டார்.

ஆனால் வாயில்லா ஜீவனுக்கு கேட்கத் தெரியாது நாங்கள் அவற்றை உணர வேண்டும் என்பார்.
மத்தியானச் சாப்பாடும் காலை போலவே நடக்கும். மீண்டும் சைக்கிள் கடைக்குப் போகும் அவர் மாலை வீடு வந்ததும் தேநீர் இரவுச் சாப்பாடு என வழமை போல நடக்கும்.

அவருக்கு கதிர்காமத்தம்பி என்ற நண்பர் இருந்தார்.அவர் பன்னாலை தெல்லிப்பழையைச் சேர்ந்தவர்.தெல்லிப்பழை பல நோக்கக் கூட்டுறவுச் சங்கத்தில் பணிபுரிந்தவர். சில நாட்களில் இராசா ஐயாவின் வீட்டுக்கு வந்து பேசிக் கொண்டிருப்பார்.இருவரும் சைக்களில் படம் பார்க்கப் போவதுண்டு.

இராசா ஐயாவிற்கு பத்திரிகை படிக்கும் பழக்கம் உண்டு.வீரகேசரிப் பத்திரிகை அவர் வீட்டுக்கு வரும்.

நான் சில வேளைகளில் பொழுதுபடுகிற நேரம் அவர் வீட்டுக்குச் சென்றால் பத்திரிகையை வாசிக்கச் சொல்லுவார். நானும் வாசிப்பேன்.

இராசா ஐயாவின் நாளாந்த வாழ்க்கை நடவடிக்கைகள் செம்மையாக, நேர்த்தியாக இருக்கும்.

கூட்டிய நிலத்தைப் பார்த்தால் அழகாக இருக்கும்.

மண் அணைத்த வாய்க்காலைப் பார்த்தால் அழகாக இருக்கும்.

கற்கள் குவிந்திருக்கும் இடத்தையோ கூட்டிய குப்பையை போட்டிருக்கும் இடத்தையோ பார்த்தால் அந்தச் செம்மையும் நேர்த்தியும் அழகாக இருக்கும்.

தன்னைச் சுற்றிய சூழலை அழகாகவும் தன்னைச் சுத்தமாகவும் வைத்திருந்தாலே அது அலாதியான அழகுதான்.

கலை உணர்வு உள்ளவர்களாலேயெ இவை சாத்தியப்படும்.

அழகின் அடித்தளமே சுத்தந்தான்.

எங்கள் அயலவரான எங்கள் மதிப்புக்குரிய திரு.இராசா ஐயா ஒரு கலைஞர்தான்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *