Saturday, February 24, 2018

.
Breaking News

வடக்கு கிழக்கில் வட்டியால் அழியும் குடும்பங்கள்!…. செ.துஜியந்தன்.

வடக்கு கிழக்கில் வட்டியால் அழியும் குடும்பங்கள்!…. செ.துஜியந்தன்.

இன்று வடக்கு கிழக்கில் மக்களை புற்றுநோய் போல் கொன்று கொண்டிருக்கும் ஒரு வித யுத்தம் பற்றி சொல்லப்போகிறேன். கிழக்கில் மட்டுமல்ல வடக்கிலும் தலைவிரித்தாடும் வட்டி எனும் அரக்கனால் வளமான வாழ்க்கையை தொலைத்துவிட்டு வறுமையும் வெறுமையும் தனிமையுமாய் வாழும் குடும்பங்களின் சோகங்கள் சொல்லிமாளாதவை. வட்டி என்னும் இப்பிசாசினால் வடக்கு கிழக்கு மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. இது இன்று மலையக மக்களின் வாழ்வியலுக்குள்ளும் புகுந்துள்ளமை அதனைவிடக் கொடுமையாகும்.
கடந்த 30 வருடகால யுத்தம் ஒய்ந்துவிட்ட போதிலும் அது ஏற்படுத்திச் சென்ற வலிகளும் வடுக்களும் இன்னும் மக்களின் மனங்களை விட்டு அகலவில்லை. இந்நிலையில் தமிழ் சமூகத்திற்குள் புற்றுநோய்போல் இருக்கும் வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்கும் செயற்பாடு காரணமாக பல குடும்பங்கள் தற்கொலை செய்து கொண்டு மாண்டுபோகும் அளவிற்கு நிலமை மோசமடைந்துள்ளது.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் தாயும், பிள்ளைகளும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை விதைத்துச் சென்றது. இதே போன்று மட்டக்களப்பு தாளங்குடா பகுதியில் நிறுவனம் ஒன்றில் நுண்கடன் பெற்ற குடும்பப்பெண் ஒருவர் வட்டி கட்டமுடியாத நிலையில்  தூக்கிட்டு தற்கொலை செய்த துயரச் சம்பவம் நடந்தேறியிருந்தது. நாளொரு வண்ணமாக வட்டியால் அழியும் குடும்பங்கள் பெருகிவிட்ட இக்காலத்தில் இதனைக்கட்டுப்படுத்த நாம் என்ன செய்யப்போகிறோம்?!
கடந்த வருடம் கூட பல சம்பவங்கள் நடைபெற்றிருந்தன. இதில்  வட்டிப்பணம் கட்டமுடியாத ஒரு பெண் வவுனியாவில் கிணற்றில் வீழ்ந்து தற்கொலை செய்துகொண்ட துயரச்சம்பவம் இடம்பெற்றிருந்தது. வடக்கு  கிழக்கில் இவ் வட்டிப்பிரச்சினை என்பது உக்கிரமடைந்த ஒன்றாகவேயுள்ளது. அத்துடன் சமூகச்சீரழிவிற்கும் காரணமாகவும் அமைந்துள்ளது. வடக்கு, மட்டக்களப்பு அம்பறை ஆகிய மாவட்டங்களில் தினம் நடக்கும் தற்கொலைச் சம்பவங்களும் குடும்பவன்முறைகளும் இதனை எடுத்துக்காட்டுகின்றன.
வட்டி உயிரைப்பறிக்கும் வட்டி குட்டிபோடும் வட்டி வாழ்க்கையைப் பாழாக்கும்  வட்டி குடும்பத்தையே நடுத்தெருவிற்கு கொண்டுவரும் என கூறப்பட்டபோதிலும் வட்டிக்குப் பணம் கொடுப்பவர்களதும் அதனைப்பெற்றுக் கொள்பவர்களதும் செயற்பாடுகள் குறைந்தபாடாக தெரியவில்லை.
ஒரு காலத்தில் அவசரதேவைக்கு பணம் தேவையெனில் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் கைமாற்றுக்கு பணம்வாங்கி விட்டு அதனை இரண்டொரு நாட்களில் திரும்பக்கொடுத்து பரஸ்பரம் புரிந்துணர்வுடன் உறவுகளை வளர்த்தனர். ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அவசரத்தேவைக்கு பணம் தேவையென்றால் கூட வட்டிக்குப் பணம் கொடுப்பவர்களேயுள்ளனர். வட்டி அந்தளவிற்கு ருசியாகவுள்ளது. இது மக்களை வாட்டி வதைத்தும் வருகின்றது. வடக்கை விட தற்போது கிழக்கிலுள்ள கிராமங்களில் வட்டிக்குப் பணம் பெறுவது என்றால் ஒரு லட்சம் ரூபாவிற்கு 6ஆயிரம் தொடக்கம் 10ஆயிரம்ரூபா வரை மாதந்த வட்டி அறவிடப்படுகின்றது. இது தவிற நாளாந்த வட்டிக்கொடுமையும் இங்கு அரங்கேறி வருகின்றது.
ஒருவரிடம் அவசரமாக பணம் பெற்றால் குறிப்பாக 1000ரூபா பெற்றால் அதற்கு ஒரு நாளைக்கு 100ரூபாய் வட்டி செலுத்தவேண்டும். இந்நிபந்தனைக்கு கட்டுப்பட்டால் மட்டுமே வட்டிக்குப் பணம் கொடுக்கின்றனர். அண்மையில் கல்முனைப் பிரதேசத்தில் 1000ரூபாய் பணத்தினை வட்டிக்குப் பெற்ற ஒருவர் மூன்று மாதகாலமாக (90)நாட்கள் கழிந்து அதனை திருப்பிக் கொடுத்த போது குறித்த நபர் அதற்கு நாள் வட்டிக்கணக்குப்பார்த்து. 9000 ஆயிரம் ரூபாவினை வட்டிப் பணமாக வசூழ் செய்திருந்தார். இது உண்மைச் சம்பவம். வட்டி கட்டியவர் வட்டிக்காரரை தெருத்தெருவாக திட்டித்திரிந்த சம்பவமும் நடைபெற்றிருந்தது.
வட்டிக்குப் பணம் பெறுபவர்கள் முன் பின் யோசிக்காது தமது தற்போதைய தேவை நிறைவேறினால் போதும் என்ற நினைப்பிலே பணம் பெறுகின்றனர். இதனாலே சிக்கலில் மாட்டிக்கொள்கின்றனர். கிழக்கிலுள்ள பொலிஸ்நிலையங்கள் மற்றும் மத்தியஸ்த சபைகள் நீதிமன்றங்களில் கொடுக்கல் வாங்கல் வட்டிப்பிரச்சினைகளே அதிகம் பதிவாகின்றமை குறிப்பிடத்தக்கது. தனிப்பட்டவர்களிடம் வட்டிக்குப் பணம் பெற்றவர்கள் அதனை மீளச்செலுத்த முடியாத காரணத்தினால் தமது வீடுவாசலை விட்டும் கிராமத்தை விட்டும் தலைமறைவாகியுள்ளனர். வேறு சிலர் கடன் சுமையினால் தற்கொலை செய்தும் கொண்டுள்ளனர்.
கிழக்கில் சுனாமிக்குப் பின்னர் பல தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஏராளமான லீசிங் கம்பனிகளும் தமது செயற்பாடுகளை விஸ்தரித்துள்ளதினால் இவற்றிலும் கடன்களைப் பெற்றுக்கொள்ளும் மக்கள் தனி நபர்களிடம் பெற்றுக்கொண்ட பணக்கஷ;டத்தைவிட அதிகமான உள பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.  மக்களின் வாழ்வாதாரத்தை உயர்துவதற்க்கு சுயதொழில் முயற்ச்சிக்கு கடன் வழங்குவதாக சொல்லிக்கொள்ளும் தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள். அப்பாவி மக்களை ஏமாற்றி அதிக வட்டிக்கு பணம் கொடுத்து இதனை வசூலிப்பதையே கண்ணும் கருத்துமாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றனர்.
இங்கு தனியார் நிறுவனங்கள் கடன்களை வழங்கும் போது ஆங்கிலத்தில் நிரப்பப்பட்ட விண்ணப்ப படிவங்களில் ஜம்பது இடங்களுக்கு மேல் கையெழுத்தைப் பெற்றுவிட்டு 20000 ஆயிரம் தொடக்கம் ஒரு லட்சம் ரூபாய் வரை முதற்கட்டமாக அதிக வட்டிக்கு பணம் வழங்கிவருகின்றனர். அவைபற்றி தெரியாத மக்களும் ஏதோ பணம் கிடைத்தால் போதும் என நினைத்து அந் நிதி நிறுவனங்கள் விரிக்கும் கடன் வலையில் சிக்கிக்கொள்கின்றனர். வாங்கிய கடனை அடைக்கமுடியாது இறுதியில் தற்கொலை செய்துகொள்ளும் பரிதாபகரமான சம்பவங்கள் இங்கே நடந்தேறி வருகின்றன.
மட்டக்களப்பு பிரதேசத்தில் தனியார் நிறுவனங்களில்;; கடன்பெற்ற ஐந்து பெண்கள் அந்நிறுவனம் கொடுத்த அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவங்கள் கடந்த காலங்களில் பதிவாகியிருந்தன மட்டக்களப்பில் நடைபெற்றிருந்தது. இதில் அழுத்தம் காரணமாக உயிரிழந்த 49 வயதுடைய குடும்பப்பெண்ணிண் கணவன் இவ்விடயம் தொடர்பில் தனது கருத்தையும் கடந்த வருடம் தெரிவித்திருந்தார்.  மட்டு-அம்பறை மாவட்டத்தில் தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் லீசிங் கம்பனிகள் ஏட்டிக்குப்போட்டியாக செய்துவரும் இவ்வியாபார தந்திரத்தில் அப்பாவி மக்கள் சிக்கித்தவிக்கின்றனர்.
குறிப்பாக பெண்களை மையமாகவைத்தே நிதி நிறுவனங்கள் தமது நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்கின்றன. இதன் காரணமாக கணவன் மனைவிக்கும் இடையில் வாய்த்தர்க்கங்களும் அதிகரித்துள்ளன. கடன்களை வழங்கிய நிறுவனத்தின் ஊழியர்கள் சிலர் பணம் அறவீடு செய்வதில் காடடுகின்ற கடினத்தன்மையினால் கடன் பெற்றோர் மன அழுத்ததிற்குள்ளாகி வருகின்றனர். வீடுகளுக்குச் செல்லும் சிலர் அவ்வீட்டுச் சூழலை பயன்படுத்தி தனிமையில் இருக்கும் பெண்களிடம் பாலியல் லஞ்சம் கேட்கின்றனர். வாங்கிய கடனை நான் இரத்துச்செய்கின்றேன். என்னோடு ஒரு நாள் தனிமையில் இருப்பாயா? என வெளிப்படையாகவே  பெண்களிடம் கேட்டசம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றன. இது தொடர்பான பல சம்பவங்கள் வெளிவந்திருப்பதுடன் இன்னும் வெளிவராமல் மூடிமறைக்கப்பட்டவை பலவாகும்.
மேலும் தவணைப்பணம் கட்டாதவர்களை தொலைபேசியிலும் மற்றும் நேரிலும் அழைத்து தரக்குறைவாக பேசுதல் திட்டுதல் போன்றவற்றிலும் அவர்களை அச்சுறுத்தும் தொனியில் வீடு வாசலை பறிமுதல் செய்வதையும் செய்யப்போவதாக விரட்டுவதையும் செய்கின்றனர். இதனால் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்கின்றனர். எது எப்படி இருந்தபோதிலும் பிரச்சினைகளுக்குத் தற்கொலை ஒரு தீர்வாகாது.
பிpரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வாழ்க்கையை சவாலாக வாழவேண்டும் அப்போதுதான் வாழ்க்கை இனிக்கும். இதேவேளை மக்களை அதிகவட்டிக்குப் பணம் கொடுத்து அவதிக்குள் தள்ளும் கந்து வட்டிக்காரர்கள் மற்றும் தனியார் நிதிநிறுவனங்கள் தொடர்பிலும் அனைவரும் விழிப்போடு செயற்பட வேண்டும்.
வடக்கிலும் கிழக்கிலும் பீடித்துள்ள வட்டி எனும் அரக்கனை விரட்டியடிக்கவேண்டும். அதற்கு அனைவரும் ஆக்கபூர்வமான நடவடிக்கையினை முன்னெடுக்க முன் வரவேண்டும்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *