Thursday, February 22, 2018

.
Breaking News

மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் நினைவுகள்!

மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் நினைவுகள்!

தமிழ் ஊடகத்துறையில் அயராமல் இயங்கியவரின் மூச்சும் அடங்கியது.

முருகபூபதி

இலங்கை தமிழ்ப்பத்திரிகை உலகின் மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம். கோபாலரத்தினம் கடந்த புதன் கிழமை காலை மட்டக்களப்பில் காலமானார்.

1930 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி யாழ்ப்பாணம் கன்னாதிட்டியில் பெருமாள் கோவிலுக்கு அருகில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். இளம் பராயத்திலேயே தாயை இழந்திருக்கிறார். தந்தையாரும் நோயாளியாகிவிட்ட நிலையில் இவரது ஏழ்மையை கவனத்தில் கொண்டிருந்த யாழ். வைத்தீஸ்வரா கல்லூரி ஆசிரியர் சீனிவாசகம் என்பவரின் பராமரிப்பில் தமது கல்வியை தொடர்ந்தவர்தான் பின்னாளில் இலங்கை தமிழ்ப்பத்திரிகை உலகில் கோபு என நன்கு அறியப்பட்ட கோபாலரத்தினம்.

தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் சேணிய தெரு சன்மார்க்க போதனா துவிபாசா பாடசாலையிலும் பின்னர் இராமகிருஷ்ண மிஷன் பாடசாலையிலும் அதன்பிறகு யாழ்.வைதீஸ்வரா கல்லூரியிலும் கற்றிருப்பதாகவும் சில மாதங்கள் மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா வித்தியாலயத்திலும் படித்திருப்பதாகவும் தெரியவருகிறது.

தமது 23 வயதில் பத்திரிகை உலகில் பிரவேசித்திருக்கும் கோபு, வீரகேசரியில் 1953 இல் முதலில் ஒப்புநோக்காளராகவே இணைந்தவர். அதன் பிறகு அவருக்கு ஆசிரிய பீடத்தில் ஒரேசமயத்தில்அலுவலக நிருபர் வேலையும் துணை ஆசிரியர் பணியும் கிடைத்திருக்கிறது. இவருடைய வளர்ச்சியை அவதானிக்கும்போது, எமக்கு தமிழகத்தின் சிலம்புச்செல்வர் ம.பொ.சி., எழுத்தாளர்கள் விந்தன், ஜெயகாந்தன் ஆகியோர் நினைவுக்கு வருவார்கள்.

இவர்களும் ஆரம்பத்தில் அச்சகங்களில் அச்சுக்கோப்பாளர்களாகவும் ஒப்புநோக்காளர்களாகவும்

பணியாற்றிவிட்டுத்தான் எழுத்தாளர்களாகவும் பன்னூலாசிரியர்களாகவும் பிரகாசித்தனர்.

கல்லூரிப்படிப்பிற்குப்பின்னர் கோபாலரத்தினம், கிழக்கில் செங்கலடியில் காரியாதிகாரியாக ( அன்று D.R.O – தற்போது உதவி அரசாங்க அதிபர்) பணியிலிருந்த இலங்கையர்கோன் அவர்களிடத்திலும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தரும் சோதிடருமான கே. என். நவரத்தினம் அவர்களிடத்திலும் கடமையாற்றியிருக்கும் தகவலை மற்றும் ஒரு பத்திரிகையாளரான எஸ்.தி ( எஸ்.திருச்செல்வம்) 1984 இல் வெளிவந்திருக்கும் ஈழநாடு வெள்ளிவிழா சிறப்பிதழில் பதிவுசெய்துள்ளார்.

இங்கு குறிப்பிடப்படும் இலங்கையர்கோன் ஈழத்தின் மூத்ததலைமுறை படைப்பாளி என்பதும் குறிப்பிடத்தகுந்தது. கோபு வீரகேசரியில் இணைந்த காலத்தில் அவரது ஆரம்ப மாதச்சம்பளம் 72 ரூபாதான் என்பதை அறியும்போது எமக்கு ஆச்சரியம்தான்.

1960 காலப்பகுதியில் வீரகேசரியில் நடந்த வேலை நிறுத்தம் இவரது வாழ்வையும் புரட்டிப்போடுகிறது. அவர் தமது வேலையை இழந்தாலும் அங்கிருந்து பெற்ற அனுபவம் மூலதனமாகக் கிடைக்கிறது. அதனை ஆதாரமாக பற்றிக்கொண்டு, யாழ்ப்பாணம் வந்து ஈழநாடு பத்திரிகையில் இணைந்தார்.

கோபு, வீரகேசரி, ஈழநாடு, ஆகியனவற்றில் மாத்திரமின்றி ஈழமுரசு, தினக்கதிர், செய்திக்கதிர், ஈழநாதம், சுடரொளி முதலான பத்திரிகைகளிலும் பணியாற்றியவர்.

1960 முதல் 1981 வரையில் யாழ். ஈழநாடுவில் முதலில் செய்தி ஆசிரியராகவும் பின்னர் ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். அவரும் புனைபெயர்களில் பத்தி எழுத்துக்கள் எழுதியவர்தான்.

தேனீ, ஊர்சுற்றி, எஸ். எம்.ஜி. முதலன பெயர்களில் ஏராளமான கட்டுரைகளையும் பத்திகளையும் எழுதியிருக்கும் கோபு, படைப்பிலக்கியத்துறையிலும் கால் பதித்தவர்.

சில சிறுகதைகளை ஶ்ரீரங்கன் என்ற புனைபெயரில் வீரகேசரி, தினகரன், சுதந்திரன், ஈழநாடு முதலான பத்திரிகைகளிலும் எழுதியிருப்பதாகவும், ஈழநாடுவில் வாராசாரம் என்னும் தலைப்பில் வாராந்தம் காரசாரமான

அரசியல் பத்திகளை எழுதியிருப்பதாகவும், அவருடன் முன்னர் பணியாற்றியவரும் தற்பொழுது கனடாவில் தமிழர் தகவல் என்னும் மாத இதழை வெளியிடுபவருமான எஸ். திருச்செல்வம் ( எஸ்.தி) 1984 இல் எழுதியிருக்கும் ஒரு தகவல் குறிப்பு சொல்கிறது.

வட இலங்கை பத்திரிகையாளர் சங்கம் 12-02-1984 ஆம் திகதி யாழ்ப்பாணம் நகர மண்டபத்தில் ஈழநாடு வெள்ளிவிழாவை சிறப்பாக நடத்தியது. ஆய்வரங்கு, உரையரங்கு, கவியரங்கு, நூல் வெளியீடு முதலான அமர்வுகளில் நடந்த இவ்விழா யாழ்ப்பாணம் பத்திரிகைத்துறை வரலாற்றில் தடம் பதித்த மைல்கல் எனலாம்.

அச்சமயம் வட இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவராக இருந்தவர் கோபுவுடன் ஈழநாடுவில் பணியாற்றிய எஸ்.எஸ். குகநாதன்.

பேராசிரியர்கள் சண்முகதாஸ், கா. சிவத்தம்பி, பின்னாளில் வீரகேசரி, தினக்குரல் ஆகியனவற்றில் ஆசிரியராக பணியிலிருந்த ஆ. சிவநேசச் செல்வன் ஆகியோரும் எழுத்தாளர்கள் செங்கைஆழியான், டொமினிக் ஜீவா, கே. டானியல், த. சண்முகசுந்தரம், காரை செ. சுந்தரம்பிள்ளை, கல்வயல் குமாரசாமி, சேரன், பார்வதிநாத சிவம், மற்றும் பத்திரிகையாளர்கள் எஸ்.திருச்செல்வம், பெரி. சண்முகநாதன், ஐயா சச்சிதானந்தன், எஸ். சி. எஸ். சிதம்பரநாதன் தினகரன் ஆசிரியராகவிருந்த ஆர். சிவகுருநாதன் ஆகியோரும் குறிப்பிட்ட அமர்வுகளில் பங்கேற்றார்கள்.

இவ்விழாவில் கோபாலரத்தினமும் மூத்த இலக்கியப்படைப்பாளியும் ஒரு காலகட்டத்தில் ஈழநாடுவில் பணியாற்றியவருமான அ.செ.முருகானந்தனும் பாராட்டப்பட்டதுடன் பணமுடிப்பும் வழங்கப்பட்டு வாழ்த்தப்பட்டனர்.

இந்தத்தகவல் குறிப்பில் இடம்பெறும் சிலர் இன்று எம்மத்தியில் இல்லை. சிலர் தாயகம் விட்டு புலம்பெயர்ந்தனர். சிலர் இன்றும் ஊடகத்துறையில் இயங்கிவருகின்றனர்.

இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட 1987 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் தோன்றிய அரசியல் நெருக்கடி பற்றி புதிதாக எழுதுவதற்கு இல்லை எனச்சொல்லுமளவிற்கு பல நூல்களும் இலக்கியப்பிரதிகளும் வெளியாகியிருக்கின்றன. இலங்கை அரசியல் வரலாற்றின்

பக்கங்களில் அக்காலப்பகுதியில் அமைதிகாக்க வந்தவர்களினால் ஏற்பட்ட அன்றாட வாழ்வின் சீர்குலைவில் சிக்கிய பத்திரிகைகள், பத்திரிகையாளர்கள் பற்றியும் ஏராளமான பதிவுகள் இருக்கின்றன.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தையடுத்து இந்திய அமைதிப் படை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலைகொண்டவேளையில் யாழ்ப்பாணத்தில் கோபுவும் கைதாகி இந்தியப்படையினரால் சுமார் இரண்டு மாதங்கள் சிறைவைக்கப்பட்டார்.

தனது சிறை அனுபவங்களை ஜூனியர் விகடனில் தொடராக எழுதினார். ஈழமண்ணில் ஒரு இந்தியச்சிறை என்ற தலைப்பில் அவர் எழுதிய குறிப்பிட்ட தொடர் பிரான்ஸில் குகநாதன் வெளியிட்ட பாரிஸ் ஈழநாடு வார இதழிலும் மறுபிரசுரம் செய்யப்பட்டிருக்கிறது. தனி நூலாகவும் வெளியானது.

பத்திரிகை உலகத்தில் சோதனைகளையும் வேதனைகளையும் நெருக்கடிகளையும் சந்தித்துவந்திருக்கும் கோபுவின் அரைநூற்றாண்டு கால அயராத சேவையை கவனத்தில் கொண்டிருந்தது விடுதலைப்புலிகள் அமைப்பு.

04-06-2004 ஆம் திகதியன்று விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இவருக்கு தங்கப்பதக்கம் அணிவித்து கௌரவித்திருக்கிறார்.

இலங்கை – இந்திய ஆயுதப்படைகளுக்கும், ஆயுதம் ஏந்திய ஈழத்தின் விடுதலை இயக்கங்களுக்கும் இடையில் சிக்கியிருந்தவர்கள் தமிழ் ஊடகவியலாளர்கள்.

ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச்சொன்னால் முடவனுக்கு கோபம் என்பார்கள். இந்த நிலைக்கு இலங்கையில் ஆளானவர்கள்தான் தமிழ், சிங்கள, முஸ்லிம் ஊடகவியலாளர்கள். கொல்லப்பட்ட, காயப்படுத்தப்பட்ட, காணாமலாக்கப்பட்ட , நாட்டைவிட்டு தப்பிச்சென்ற ஊடகவியலாளர்கள் அநேகம்.

எழுத்துக்காக சிறைவைக்கப்பட்ட கோபாலரத்தினம், தாயகத்தைவிட்டு தப்பி ஓடவில்லை. தொடர்ந்தும் தனக்குத்தெரிந்த எழுத்தூழியத்தில் ஈடுபட்டார். அவர் எழுத்தையும், எழுத்து அவரையும் நேசித்தமையால் தமது அனுபவங்களையே தமது நூல்களில் பதிவுசெய்தார்.

ஏற்கனவே அவர் தாம் பணியாற்றிய பத்திரிகைகளில் பதிவுசெய்த ஆசிரிய தலையங்கங்களின் தொகுப்பாக ‘ அந்த ஒரு உயிர்தானா உயிர்’ என்ற நூலையும், பத்திரிகைப்பணியில் அரை நூற்றாண்டு, முடிவில்லாப்பயணத்தில் முடியாத வரலாறு ஆகிய நூல்களையும் வரவாக்கியுள்ளார்.

போர்க்காலத்தில் இயக்கங்கள் மற்றும் இலங்கை இந்திய படைகளுக்கு மத்தியில் பத்திரிகையாளர்கள் எத்தகைய இன்னல்களை அனுபவித்திருப்பார்கள்? என்பதை கோபலரத்தினத்தின் குறிப்பிட்ட நூல்கள் ஆழமாகப்பதிவு செய்துள்ளன.

ஈழநாதம், தினக்கதிர் முதலானவற்றில் அவர் எழுதிய பத்திகளும் குறிப்பிட்ட நூல்களில் இடம்பெற்றிருக்கின்றன.

இவருக்கும் இந்தப்பதிவை எழுதும் எனக்கும் இடையே முதல் அறிமுகம் ஏற்பட்டது 1975 ஆம் ஆண்டில். எனது முதலாவது நூல் வெளியீடு சுமையின் பங்காளிகள் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடந்தபொழுது, அதனை ஏற்பாடு செய்திருந்த மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவா, என்னை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து ஈழநாடு அலுவலகத்திற்கும் கூட்டிச்சென்றார்.

அங்குதான் கோபாலரத்தினம் அறிமுகமானார். குறிப்பிட்ட விழாச்செய்தியையும் ஈழநாடுவில் வெளிவரச்செய்தார். அங்கிருந்த பெருமாள், சசிபாரதி , யோகநாதன் முதலான பத்திரிகையாளர்களையும் எனக்கு அறிமுகப்படுத்தினார். 1960 முதல் 1981 வரையில் ஏறக்குறைய 21 ஆண்டுகள் ஈழநாடுவில் பணியாற்றியிருக்கும் அவர், அதன்பின்னர் குடாநாட்டில் மேலும் சில பத்திரிகைளில் தமது பணியை தொடர்ந்தவர்.

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு என அவர் வாழ்க்கை தொழில் நிமித்தம் ஓடிக்கொண்டே இருந்து, இறுதியில் மட்டக்களப்பில் அவரது மூச்சு அடங்கியிருக்கிறது.

ஒரு பத்திரிகையாளனாக பல நெருக்கடிகளை அவர் சந்தித்திருப்பதனாலும், அவரும் என்னைப்போன்றும் எனது நண்பர்கள் சி. எஸ்.காந்தி, வீரகத்தி தனபாலசிங்கம், சிவராஜா, பிரணதார்த்தி ஹரன், அற்புதானந்தன் ஆகியோரைப்போன்று தொடக்கத்தில் ஒப்புநோக்களாராகவும் பின்னர் பத்திரிகையாளராகவும் வளர்ச்சி கண்டிருப்பதனாலும் அவரிடத்தில் எனக்கு மிகுந்த மரியாதையிருக்கிறது.

2011 ஜனவரியில் கொழும்பில் வெள்ளவத்தை தமிழ்ச்சங்கத்தில் நாம் நடத்திய சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்காக 03-01-2010 ஆம் திகதி அதே மண்டபத்தில் அது தொடர்பாக முதற்கட்ட ஆலோசனைக்கூட்டம் நடத்தியிருந்தோம்.

இலங்கையின் நாலாபக்கங்களிலுமிருந்தும் வருகைதந்திருந்த நூறுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில்தான் கோபுவை நீண்ட காலத்தின் பின்னர் மீண்டும் சந்திக்க முடிந்தது. அச்சமயம் அவர் கொழும்பில் சுடரொளியில் பணியிலிருந்திருக்கவேண்டும்.

அவருடைய எழுத்திலிருந்த தீவிரத்தை பேச்சில் காணமுடியாது. அதிர்ந்துபேசத்தெரியாதவர்களில் அவரும் ஒருவர். 2103 இலும் இந்த ஆண்டு ஜூன் மாதமும் அவரை மீண்டும் மட்டக்களப்பில் சந்தித்திருக்கின்றேன்.

மட்டக்களப்பு நான்காம் குறுக்குத்தெருவில் அமைந்த அவருடைய மகள் ஒருவரின் இல்லத்தில்தான் இந்தச்சந்திப்புகள் நிகழ்ந்தன. அந்த இல்லத்தின் பெயர் பூம்புகார். வாசல் தூண்களின் மீது நிறைகுடம் இருக்கும். அதனை அடையாளம் வைத்துக்கொண்டுதான் மீண்டும் இந்த ஆண்டு அவரைப்பார்க்கச்சென்றேன்.

2013 இல் சந்தித்தபோது நீண்டநேரம் பேசினார். அவரதும் அவரது மகள் குடும்பத்தினரதும் விருந்துபசாரத்திலும் திழைத்திருக்கின்றேன். “பத்திரிகை உலக அனுபவங்கள் குறித்து இலங்கையில் எவரும் சிறுகதைகள், நாவல்கள் படைக்கவில்லை. நீங்கள் எழுதலாமே” எனக்கேட்டபொழுது, ” தான் பத்திரிகையாளனே தவிர இலக்கியப்பிரதியாளன் அல்ல, உங்களைப் போன்ற பத்திரிகை உலகிலும் ஆக்க இலக்கிய உலகிலும் கால் பதித்திருப்பவர்கள்தான் எழுதவேண்டும்” என்றார். அச்சந்தர்ப்பத்தில் 2011 மாநாடு தொடர்பாக நான் எழுதியிருந்த உள்ளும் புறமும் நூலின் பிரதியை அவரிடம் வழங்கினேன்.

இந்த ஆண்டு மட்டக்களப்பு சென்றிருந்தவேளையில் நண்பர் டான் தொலைக்காட்சி குகநாதன் என்னைத்தொடர்புகொண்டு, கோபு சுகவீனமுற்றிருக்கும் தகவல் தந்ததையடுத்து, நண்பர் எழுத்தாளர் செங்கதிரோன் கோபாலகிருஸ்ணனுடன் அவரைப்பார்க்கச்சென்றேன். அவருடைய மகளும் பேரன் ஊடகவியலாளர் சஞ்ஜீத்தும் அவரை கைத்தாங்கலாக வீட்டின் நடுக்கூடத்திற்கு அழைத்துவந்தார்கள். பேசுவதற்கு மிகவும் சிரமப்பட்டார். எமது உரையாடலை கூர்ந்து கவனித்தார். முதுமையும் தளர்ச்சியும் பேச்சை குறைத்துவிட்டிருந்தது.

கடந்த புதனன்று காலை அவரது இறுதி மூச்சும் அடங்கிவிட்டது. அவர் எம்மிடம் விட்டுச்சென்றிருப்பது அவர் பற்றிய நினைவுகளும் அவர் எழுதிய நூல்களும்தான் என்று மாத்திரம் சொல்லமாட்டேன். தனது வாரிசாக பேரன் சஞ்சீத் என்ற ஊடகவியலாளரையும் வழங்கியிருக்கிறார்.

நாம் கடக்கவிருக்கும் பாதையை கோபு கடந்துசென்றுவிட்டார்.

 

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *