Thursday, February 22, 2018

.
Breaking News

ஈரோஸ் தலைவர் தோழர் பாலகுமார் கண்ட கனவு நனவாகின்ற காலம் கனிந்து விட்டது!

ஈரோஸ் தலைவர் தோழர் பாலகுமார் கண்ட கனவு நனவாகின்ற காலம் கனிந்து விட்டது!

ஈரோஸ் அமைப்பின் தலைவர் தோழர் பாலகுமார் கண்ட கனவு நனவாகின்ற காலம் கனிந்து உள்ளது, எந்தவொரு போராட்டமாக இருந்தாலும் அந்த போராட்டத்தின் சூத்திர கயிறாக மக்கள் இருந்தால் மாத்திரமே அப்போராட்டம் வெற்றி பெறும் என்று அவர் அடிக்கடி கூறுவது வழக்கம், காணாமல் போன உறவுகளை கண்டு பிடித்து தர கோரியும், நிலங்களை விடுவிக்க கோரியும் அரசியல்வாதிகளை நம்பாமல் அரசாங்கத்துக்கு எதிராக தமிழ் மக்கள் அவர்களாகவே போராட்டங்களை முடுக்கி விட்டு இருப்பது நம்பிக்கை ஊட்டுகின்ற முன்னேற்றகரமான விடயம் ஆகும் என்று ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் செயலாளர் இராஜ. இராஜேந்திரா எமக்கு வழங்கிய சிறப்பு பேட்டியில் தெரிவித்தார். இவருடனான நேர்காணல் வருமாறு:-

கேள்வி:- உங்களை பற்றியும், நீங்கள் ஈரோஸ் அமைப்பில் இணைந்த பின்னணி குறித்தும் கூறுங்கள்?

பதில்:- நான் யாழ்ப்பாணத்தில் நல்லூரை சொந்த இடமாக கொண்டவன். மானிப்பாய் இந்து கல்லூரியில் ஆரம்ப மற்றும் இடைநிலை கல்வியை மேற்கொண்டேன். அக்காலத்தில்தான் யாழ்ப்பாணத்தில் தமிழர்களின் உரிமைக்கான போராட்டங்கள் முகிழ்த்து கொண்டிருந்தன. அதே போல இடதுசாரி சிந்தனைகள் பெரிதும் செல்வாக்கு பெற்று கொண்டிருந்தன. இந்நிலையில் 1974 ஆம் ஆண்டு இடம்பெற்ற தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகள் எனது மனதில் ஆறாத வடுக்களாக பதிவாகின. அதே போல தமிழர் விடுதலை கூட்டணியால் மல்லாகத்தில் நடத்தப்பட்ட மாபெரும் மாநாடு போராட்ட சிந்தனையை தூண்டியது. ஆசிரியராக எனது சகோதரி கடமையாற்றி வந்த நிலையில் அவர் அன்றைய மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்முனையை சேர்ந்த கார்மேல் பாற்றிமா கல்லூரிக்கு இட மாற்றம் பெற்று வர நேர்ந்தபோது நானும் அவருடன் வந்து முதலில் அப்பாடசாலையிலும், பின்னர் அக்கரைப்பற்று மத்திய கல்லூரியிலும் உயர்நிலை கல்வியை பயின்றேன். 1979 ஆம் ஆண்டு கொழும்பில் வீரகேசரி பத்திரிகையில் இணைந்து உதவி ஆசிரியராக பணியாற்றினேன். நான் பணியாற்றிய காலத்தில் வீரகேசரியின் பிரதம ஆசிரியராக சிவஞானமும், செய்தி ஆசிரியராக டேவிட் ராஜும், உதவி செய்தி ஆசிரியராக நடராஜாவும் விளங்கினர். டி. பி. எஸ். ஜெயராஜ் சக பத்திரிகையாளராக மாத்திரம் அன்றி எனது அறை தோழனாகவும் இருந்ததை நினைவு கூருகின்றேன். ஆயினும் 1983 கலவரத்துக்கு முன்னதாக நான் ஜேர்மனி சென்றேன். இருப்பினும் இக்கலவரத்தின் கோரங்கள் கடுமையான தாக்கங்களை எனக்குள்ளும் ஏற்படுத்தின. 1986 ஆம் ஆண்டு முதல் ஈரோஸ் அமைப்பின் தத்துவார்த்த பத்திரிகையாக வெளிவர தொடங்கிய தர்க்கீகத்தை படித்து ஈரோஸ் அமைப்பின் சித்தாந்த கோட்பாடுகள், போராட்ட அணுகுமுறைகள் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டேன். தோழர் பாலகுமாரை போலவே ஈரோஸ் அமைப்பின் இன்னொரு தலைவரான தோழர் சங்கர் ராஜி அப்போது லண்டனில் இருந்து செயற்பட்ட நிலையில் புலம்பெயர் நாடுகளில் ஈரோஸ் அமைப்பின் செயற்பாடுகளை விஸ்தரித்து வந்தார். நான் இவருடன் தொடர்புபட்ட நிலையில் என்னை நேரில் வந்து சந்தித்து பேசினார். இவரால் ஈரோஸ் அமைப்பின் ஜேர்மன் அமைப்பாளராக நியமிக்கப்பட்டு இதன் முழுநேர செயற்பாட்டாளராக இயங்கினேன். இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பலனாக 1987 ஆம் ஆண்டு தோழர் சங்கர் ராஜியும், அவரோடு இணைந்து செயற்பட்டு கொண்டிருந்த தோழர்களும் நாட்டுக்கு திரும்பி வந்தபோது நானும் உடன் வந்தேன். ஈரோஸ் அமைப்பின் திட்டமிடல் பிரகடன மாநாடு அடுத்த வருடம் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டது. இதில் ஈரோஸ் மத்திய குழு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டேன். மேலும் கிழக்கு மாகாணத்தோடு எனக்கு ஏற்கனவே இருந்த தொடர்பு காரணமாக கிழக்கு மாகாணத்தில் எனது செயற்பாடுகளை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டேன். பிற்பாடு எனது வாழ்க்கையை கிழக்கு மாகாணத்திலேயே அமைத்து கொண்டேன் என்பதும் எமது மக்கள் துன்பப்பட்டு கொண்டு இருக்கின்றபோது நாம் மாத்திரம் வெளிநாடு சென்று தப்புவது முறை அல்ல என்கிற ஒரே ஒரு காரணத்துக்காக எனக்கு கிடைத்த பல வாய்ப்புகளையும் உதறி தள்ளி விட்டு இங்கேயே எமது மக்களுடன் வாழ்கின்றேன் என்பதும் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

கேள்வி:- ஈரோஸ் ஜனநாயக முன்னணியை அமைத்து செயற்பட நேர்ந்தது ஏன்?

பதில்:- ஈரோஸ் அமைப்பின் வெகுஜன பிரிவாக ஈழவர் ஜனநாயக முன்னணி விளங்கியது. இது 1989 ஆம் ஆண்டு பொது தேர்தலில் சுயேச்சைக் குழுவாக வெளிச்ச வீட்டு சின்னத்தில் போட்டியிட்டு 13 ஆசனங்களுடன் பாராளுமன்றத்துக்கு சென்றது. பின்னர்தான் அதே வருடம் ஈழவர் ஜனநாயக முன்னணி பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக தேர்தல்கள் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டது. இதன் செயலாளர் நாயகம் தோழர் பாலகுமார் ஆவார். இதன் சின்னம் ஏர் ஆகும். ஆனால் 1990 ஆம் ஆண்டு விடுதலை புலிகளை தேசியத்தின் குரலாகவும் தமிழருடைய பாதுகாப்பின் குறியீடாகவும் தோழர் பாலகுமார் பிரகடனப்படுத்தியதோடு தேசியத்தின் குரல் மழுங்கடிக்கப்பட கூடாது என்கிற காரணத்தால் ஈரோஸ் அமைப்பை கலைக்கின்ற தீர்மானத்தையும் அறிவித்தார்.

முள்ளிவாய்க்காலில் 2009 ஆம் ஆண்டு விடுதலை புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பை தேசியத்தின் குரலாக ஏற்று ஈரோஸ் தோழர்கள் செயற்பட தொடங்கினார்கள். ஈரோஸின் முன்னாள் எம். பியான தோழர் சௌந்தரராஜன் 2010, 2015 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற பொது தேர்தல்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் மட்டக்களப்பில் போட்டியிட்டார். தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டு கிழக்கு மாகாண சபைக்கு எமது தோழர் நாகேஸ்வரன் தெரிவானார். ஈரோஸ் அமைப்பின் ஆரம்ப கால போராளிகளில் ஒருவரான தோழர் எஸ். புஷ்பராசா தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டுதான் நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளராக தெரிவாகினார் என்பதையும் இவ்விடத்தில் சொல்லி வைக்க விரும்புகின்றேன். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஈரோஸ் அமைப்பை சேர்ந்த எமது தோழர்களை உதிரி ஆட்களாக தமிழ் தேசிய கூட்டமைப்பில் சேர்த்து தேர்தல்களில் வெற்றிக்காக பயன்படுத்துவதில்தான் ஆர்வம் காட்டியதே ஒழிய ஈரோஸின் தனித்துவத்தை, அடையாளத்தை ஏற்று கொள்ளவோ, அங்கீகரிக்கவோ இல்லை. ஈரோஸ் அமைப்புக்கும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கும் இடையில் வரலாற்று தொடர்பு காணப்பட்ட நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் எமக்கான தனித்துவம், அடையாளம், அங்கீகாரம் ஆகியன வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கல்முனையில் தோழர் சுரேஸ் பிரேமச்சந்திரனுடன் 2012 ஆம் ஆண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். அதற்கு பிந்திய சில மாதங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரனுடன் அக்கரைப்பற்றில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். ஆயினும் அப்பேச்சுவார்த்தைகள் எவையும் வெற்றி பெறவில்லை.

நிலைமை அவ்வாறு இருக்க மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு சுவிற்சலாந்தில் இருந்து திரும்பி வந்த தோழர் இ. பிரபாகரன் ஏதோ ஒரு வகையில் ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயலாளர் நாயகம் ஆகினார். ஈரோஸின் அடிப்படை கொள்கைகளுக்கு இணக்கமாக அவருடைய ஈழவர் ஜனநாயக முன்னணி நடந்து கொள்வதாக இல்லை என்று நாம் கண்டு கொண்டோம். இருப்பினும் இவருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தினோம். ஆயினும் அவை வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகியவற்றை சேர்ந்த எமது தோழர்களை அடிக்கடி சந்தித்து பேசினோம். எமக்கான தனித்துவம், அடையாளம், அங்கீகாரம் ஆகியவற்றுடன் கூடியதாக ஈரோஸ் ஜனநாயக முன்னணியை ஸ்தாபித்து நாம் செயற்பட வேண்டும் என்பதே தோழர்களின் அபிப்பிராயமாகவும், ஆலோசனையாகவும், அபிலாஷையாகவும் இருந்தது. இந்நிலையில் தோழர் சௌந்தராஜனை தலைவராகவும், என்னை செயலாளர் நாயகமாகவும் கொண்டு 2016 ஆம் ஆண்டு ஈரோஸ் ஜனநாயக முன்னணி மலர்ந்தது. மட்டக்களப்பில் ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பிரகடன மாநாட்டை நடத்தினோம். ஈரோஸ் ஜனநாயக முன்னணி கல்முனையை தலைமையகமாக கொண்டு செயற்பட்டு வருகின்றது. இவ்வருட ஆரம்பத்தில் மலையக தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரிக்கைக்கு ஆதரவாக நாம் கல்முனையில் பேரணி நடத்தினோம். ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் மே தின ஊர்வலத்தை மலையகத்தில் நடத்தினோம். மேலும் அக்கரைப்பற்றில் சாகமம் பகுதியில் உள்ள வட்டமடு மேய்ச்சல் தரை காணி கபளீகரத்தால் பாதிக்கப்பட்டு உள்ள பால் பண்ணையாளர்களுக்கு நீதியை பெற்று கொடுக்க போராடி வருகின்றோம். இவ்வாறாக மக்களுக்கான ஜனநாயக செயற்பாடுகள் பலவற்றையும் ஈரோஸ் ஜனநாயக முன்னணி மக்களின் வாழ்வாதாரம், கல்வி, அபிவிருத்தி என்று இன்னோரன்ன பல துறைகளிலும் மேற்கொண்டு வருகின்றது.

கேள்வி:- நல்லாட்சி குறித்து என்ன சொல்கின்றீர்கள்?

பதில்:- இரு பேரினவாத கட்சிகளின் கூட்டு ஆட்சியே நடக்கின்றது என்று கூறுவதே சால பொருத்தமானதாக இருக்கும். மக்கள் எதிர்பார்த்து இருந்த மாற்றங்கள் கொண்டு வரப்படாமல் ஏமாற்றங்கள்தான் மிஞ்சி உள்ளன. தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை. மக்களின் காணிகள் விடுவிக்கப்படவில்லை. இளைஞர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்த சட்டம் உண்மையில் ஆனை பசிக்கு கிடைத்த சோள பொரியே ஆகும். அதைகூட தட்டி பறிப்பதற்காகவே மாகாண சபைகள் திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.அரசியல் தீர்வு இழுத்தடிப்பு செய்யப்படுகின்றது. ஆகவேதான் மக்கள் மாற்றங்களை வேண்டி இந்த அரசாங்கத்துக்கு எதிராக போராட நேர்ந்து உள்ளது. மனித உரிமைகள் சம்பந்தமாக சொல்வதாக இருந்தால் நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற இந்த ஆட்சி வந்த பிற்பாடு சித்திரவதைகள், காணாமல் போதல்கள், கடத்தல்கள் ஆகியவற்றுக்கு உட்பட்டார்கள் என்று புலம்பெயர் நாடுகளுக்கு வந்து உள்ள சுமார் 50 இற்கும் அதிகமான இலங்கையர்கள் தெரிவித்து உள்ளார்கள் என்று அமெரிக்காவில் இருந்து இயங்குகின்ற உலக பிரசித்தி வாய்ந்த அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது.

கேள்வி:- ஈரோஸ் ஜனநாயக முன்னணி எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுமா?

பதில்:- வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகியவற்றில் நாம் நிச்சயம் போட்டியிடுவோம். தேர்தல் கூட்டு சம்பந்தமாக சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றோம். சில இடங்களில் ஈரோஸ் ஜனநாயக முன்னணி அதன் தனித்துவத்தை முன்னிறுத்தி சுயேச்சை குழுவாக போட்டியிட உள்ளது. உதாரணமாக ஒரு காலத்தில் அக்கரைப்பற்று ஈரோஸ் அமைப்பின் கோட்டைகளில் ஒன்றாக திகழ்ந்தது. இங்கு உள்ள எமது தோழர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நாம் எமது தனித்துவத்தை முன்னிறுத்தி இங்கு போட்டியிட வேண்டும் என்றே விரும்புகின்றனர். இவர்கள் விருப்பத்துக்கு மதிப்பு கொடுத்து ஆலையடிவேம்பில் எமது கட்சி அலுவலகம் ஒன்றை வருகின்ற மாத ஆரம்பத்தில் திறந்து வைக்க உள்ளோம்.

கேள்வி:- அமைச்சர் றிசாத் பதியுதீனை தலைவராக கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸால் மகளிர் அலுவலகம் ஒன்று ஆலையடிவேம்பில் அமைக்கப்பட்டு இயக்கப்படுகின்றதே?

பதில்:- யாரும், எங்கும் அரசியல் செய்ய முடியும். அது அவர்களின் ஜனநாயக உரிமை ஆகும். தமிழ் – முஸ்லிம் உறவை நாம் ஒருபோதும் புறம் தள்ள முடியாது. அனைத்து சமூகங்களும் புரிந்துணர்வுடனும், நல்லிணக்கத்துடனும் ஐக்கியமாக வாழ வேண்டும் என்பதே எமது கட்சியின் பார்வை ஆகும். குறிப்பாக வடக்கு, கிழக்கு இணைந்த சுயாட்சியில் தமிழ் – முஸ்லிம் உறவு பிரதான பங்களிப்பு செலுத்துகின்ற விடயமாக இருக்கும். ஆனால் அக்கரைப்பற்றை தளமாக கொண்டு அரசியல் செய்து வருகின்ற தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாவுக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீனுக்கும் இடையிலான அரசியல் பகைமைக்கு பலிக்கடாக்களாக தமிழர்கள் ஆக்கப்பட மாட்டார்கள் என்கிற உத்தரவாதம் தேவைப்படுகின்றது.

தமிழ் பேசும் மக்களுக்கான பிரச்சினைகள் என்றே எல்லா பிரச்சினைகளையும் ஈரோஸ் அமைப்பு பார்த்தது. ஈரோஸ் அமைப்பில் கணிசமான அளவில் இஸ்லாமிய சகோதரர்களும் இணைந்து போராடினார்கள். ஈரோஸ் அமைப்பின் ஆரம்ப கால தலைவர்களில் ஒருவரான தோழர் பஷீர் சேகுதாவூத் இவர்களில் குறிப்பிடத்தக்கவர்.. ஈரோஸ் அமைப்பின் தேசிய பட்டியல் மூலமாகவே இவர் பாராளுமன்றத்துக்கு முதன்முதல் பிரவேசித்தார்.

  – ரி. தர்மேந்திரன் –

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *