Friday, February 23, 2018

.
Breaking News

கல்…புல்…காகம்….5 … .( நாவல் ) …. சங்கர சுப்பிரமணியன்.

கல்…புல்…காகம்….5 … .( நாவல் )  …. சங்கர சுப்பிரமணியன்.
ஆமா, ஆமா கொஞ்சம் தயாராத்தான் இருக்கணும். ஒன்னும் தெரியாத பச்சபுள்ள. வாயில விரலை வெச்சா கடிச்சுடும்.
உன்னைப்போல ஒரு பச்சமண்ண எங்கே தேடினாலும் கிடைக்காது. ரெம்பவும்தான் சீன் போடாமா போன வேலைய
ஒழுங்கா கவனி என்று சீண்டினாள். சரி சரி போனை வைக்கட்டுமா அம்மா வந்து வந்து போகிறார்கள் என்று சொல்ல
அவளும் “பை” சொல்லிவிட்டு போனை வைத்தாள்.
கைபேசியை துண்டித்துவிட்டு அம்மாவிடம் வந்து முக்கியமான ஒருவரிடம் இருந்து அழைப்பு வந்ததம்மா அதனால்
தான் தட்ட முடியவில்லை. நீயும் மரகதம் மாமியிடம் பேசிக் கொண்டிருந்ததால் அவர்கள் சென்றபின் உன்னுடன்
ஆறுதலாய்ப் பேசலாம் என்று நினைத்ததால் போனில் அழைத்தவருடன் கொஞ்சம் அதிக நேரம் பேசிவிட்டேன். சனி,
ஞாயிறு இரண்டு நாட்கள் வீட்டில் தானே இருக்கப்போகிறேன். அப்போது உன்னிடம்தானே அம்மா நாள்முழுக்கப்
பேசப்போகிறேன் என்று அம்மாவிடம் சொல்லி சமாளித்தான். அம்மாவிடம் அவனுக்கு எதுவும் ஒளிவு மறைவு
கிடையாது. கடையில் கடலைமிட்டாய் வாங்கி தின்றால் சொல்லிவிடும் அவன் காதல் வயப்பட்டதும் முழுப்பூசணிக்
காயை சோற்றில் மறைக்கும் அளவுக்கு பொய்சொல்ல கற்றுக் கொண்டான். என்னசெய்வது அம்மாவிடம் எதைச்
சொல்வது எதைச் சொல்லக்கூடாது என்றெல்லாம் இருக்கிறதல்லவா? காதல் என்ன கடலை மிட்டாயா வாங்கியதையும்
தின்றதையும் சொல்வதைப்போல காதலையும் சொல்ல. நேரம் பார்த்து பக்குவமாகத்தானே சொல்லவேண்டும்.
அம்மாவிடம் அவன் சொல்லி மழுப்புவதை புரிந்துகொண்ட தாய், என்னவோ அப்பா என்னென்னவோ சொல்ற.
பெரியவனாய் வளர்ந்துட்ட. நீசொல்வதை நான் கேட்டுத்தானே ஆகவேண்டுமென்றாள். அதற்கு மனோ அப்படியெல்லாம்
ஒன்றும் இல்லையம்மா என்று சொல்லி சமாளித்தான். அதற்கு அவளோ எனன அப்பபிடியில்ல நொப்பிடியில்ல விடிஞ்சா
போதும் உடனே உன் நண்பர்களெல்லாம் காக்கா கூட்டாம்போல வந்து விடுவாங்க. அப்புறம் அவர்கள் கூட கெளம்பி
போனா உனக்கு வீடுன்னு ஒன்னு இருப்பதே மறந்து போகும் என்றாள்.
“சரியம்மா சொல்லுங்க, ஏதாவது முக்கியமான விசயமா?”
“ஆமா முக்கியமான விசயம்தான். உனக்கும் கழுதைமாதிரி வயசு ஆகிட்டே போகுதுல்லா. அது அதை காலாகாலத்துல
செய்யுறதுதான நல்லது”
“அம்மா, சொல்றத வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு சொல்லுங்க.”
“சொல்றன். உன் கல்யாணத்தைப் பத்திதான். சேரன்மாதேவியில் இருந்து உன்மாமான் நேற்று இரவு அழைத்தான்.
வீணாவுக்கு மருத்துவ படிப்பு இன்னும் இரண்டு மாதத்துல முடிஞ்சுடுமுன்னு சொன்னான்”.
“எல்லாம் நல்லதுதானே. அடுத்து மருத்துவராக வேலைக்கு மூயற்சிகள் செய்யவேண்டியதுதானே”
“இவன் என்னடா கூறுகெட்டவனா இருக்கான். நான் என்ன சொல்றன். நீ என்ன சொல்ற?”
“படிச்சு முடிச்சா வேலைக்கு போகவேண்டியதுதானே? நான் என்ன இல்லாததையா சொல்லிபுட்டன்”
“ஆமாண்டா. அவ வேலைக்கு போயிதான் குடும்பத்த காப்பாத்துணுமாக்கும்?”
மனோவின் தாய்மாமா உலகநாதன் சேரன்மாதேவியில் பெரிய பண்ணையார். நிலபுலன்களுக்கு கூறைவில்லை.
தாமிரபரணி ஆறு பாயும் சேரன்மாதேவி நெல்விளையும் வயல்களில் கிட்டத்தட்ட பாதி அவருடையதுதான். போதா
குறைக்கு தென்னந்தோப்பு, மாந்தோப்பு என்று ஏகப்பட்ட தோப்புககளுக்கும் வாழைத் தோட்டங்களுக்கும் சொந்தக்காரர்.
அதுமட்டுமா கடைத்தெருவில் ஐந்தாறு கடைகளில் இருந்தும் வாடைகைக்கு விடப்பட்டிருக்கும் ஏழெட்டு வீடுகளில்
இருந்தும் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. இவ்வளவு சொத்துக்களுக்கும் வீணா ஒருத்தி மட்டுமே
வாரிசு. ஆதலால் அவள் வேலைக்கு போய்த்தான் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டுமென்ற அவசியமில்லை..
ஊரில் தன் கௌரவத்தை காப்பாற்றவே பாளையங்கோட்டையில் உள்ள மருத்துவகல்லூரியில் தன்மகளை
மருத்துவருக்கு படிக்க வைத்திருக்கிறார் உலகநாதன். அவர் கனவெல்லாம் மதுரையில் இருக்கும் தங்கையின் மகன்
மனோகரனுக்கு மகளைத் திருமணம் செய்து கொடுத்துவிட வேண்டும் என்பதே. உலகநாதனுக்கு தங்கைமேல்
கொள்ளைப்பிரியம். ஒரே தங்கையான அவளை மதுரையில் தாசில்தாராக இருந்த குணசேகரனுக்கு மிகவும்
விமரிசையாக திருமணம்செய்து கொடுத்தார் உலகாநாதன். அவர்களுக்கு இரண்டு ஆண்டுகளில் பிறந்தவன்தான்
மனோகரன். எதுவும் நன்றாக போய்க்கொண்டிருப்பது அப்படியே இருந்தால் உலகத்தில் எந்தப் பிரச்சனையும் இல்லை.
ஆனால் அப்படி நடப்பதும் நடக்காமல் இருப்பதும் இயற்கையின் கையில் அல்லவா இருகிறது. அதையே சிலர்
இறைவன் கையில் எங்கின்றனர். இன்னும் சிலர் அதையே ஊழ்வினை அல்லது விதி என்கின்றனர். எதுவோ ஒன்று
குணசேகரன் மனோன்மணி வாழ்க்கையிலும் அதன் வேலையைக் காட்டியது. அமைதியான ஆறுபோல் ஓடிக்
கொண்டிருந்த அவர்களது வாழ்க்கை காட்டாற்று வெள்ளம்போல் திரும்பியது.
(தொடரும்)

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *