Tuesday, January 16, 2018

.
Breaking News

சசி குடும்பத்திற்காக மோடியிடம் வாதாடியிருக்கிறார் சுப்பிரமணிய சாமி!

சசி குடும்பத்திற்காக மோடியிடம் வாதாடியிருக்கிறார் சுப்பிரமணிய சாமி!
சசிகலா குடும்பத்துக்கு சிம்மசொப்பனமாக இருந்த சாமி, ஜெ. மரணத்துக்குப் பிறகு ராசியானார். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலர் எடுத்த முனைப்புதான் இதற்கு காரணம். அவர்களிடம் பேசியபோது, “”சாமியின் அரசியல் எதிரியாக வர்ணிக்கப்படுபவர் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி. இவரது நிலைப்பாட்டுக்கு எதிராக காய் நகர்த்துவார் சாமி. எடப்பாடிக்காக மோடியிடம் பேசும் 6 வி.வி.ஐ.பி.க்களில் ஜெட்லி முக்கியமானவர். அதற்கு எதிர்நிலையில், “சசிகலாவை ஆதரிக்கணும்’னு சாமியிடம் நாங்க கேட்டப்ப ஒப்புக்கொண்டார். இரட்டை இலை சின்னம் உள்பட இக்கட்டான சூழல்களில் சசி பக்கம் நிற்கும் சாமி, இப்போது மிகப்பெரிய ஐ.டி.ரெய்டு நடத்தப்பட்ட நிலையில் சசி தரப்புக்காக பிரதமர் மோடியிடம் வாதாடியுள்ளார்”’என விவரித்தனர்.
“”அதிகார மட்டத்தோடு பல முனைகளிலும் நெருக்கமான சாமிக்கே, இந்த மெகா ரெய்டு தகவல் முன்கூட்டி கிடைக்கவில்லை. ஆனால், “எப்போது வேண்டுமானாலும் உங்கள் குடும்பம் குறி வைக்கப்படும். எச்சரிக்கையாக இருங்கள்’ என தினகரனுக்கு சில மாதங்களுக்கு முன்பே அட்வைஸ் செய்துவிட்டார் சாமி. தினகரன் தரப்பும் உஷாராக செயல்பட்டது. எடப்பாடி உள்பட அமைச்சர்கள் அனைவரின் ஊழல்கள் குறித்தும் பல தகவல்களை சேகரித்திருக்கும் சாமி, அக்டோபர் மாதம் இறுதியில் பிரதமர் மோடியை சந்தித்து, ’”இதைவிட  அதிக தகவல்கள் உங்களுக்குக் கிடைத்திருக்கும்.  எனக்கு கிடைத்திருக்கும் தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் இது. அப்படிப்பட்ட அரசைத்தான் நீங்கள் பாதுகாக்க நினைக்கிறீர்கள். எடப்பாடி பழனிச்சாமி தரப்பினரோடு உங்கள் அமைச்சரவை சகாக்கள் சிலர் வைத்திருக்கும் கூடா நட்பு உங்களையே பாதிக்கும்”’எனச் சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.
கடந்த 8-ந் தேதி சென்னை வந்த சாமி, மத்திய உளவுத்துறையில் அதிகாரிகளாக இருக்கும் தனது நண்பர்கள் இருவரை அழைத்து விவாதித்திருக்கிறார். அதில், தம்மிடமுள்ள தமிழக அமைச்சர்களின் ஊழல் விவகாரங்களில் சிலவற்றை விவரித்து, அவற்றை சரிபார்த்து தருமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். இந்நிலையில், 9-ந் தேதி சசிகலா குடும்பத்துக்கு எதிராக மெகா ரெய்டு நடத்தப்பட்ட சம்பவம் சாமியை அதிர்ச்சியடைய வைத்தது.

டெல்லியில் பிரதமரை 20 நிமிடம் சந்தித்த சாமி,’”ஒரே குடும்பத்தை மட்டும் குறிவெச்சு ரெய்டு நடத்தியிருப்பது உங்களுடைய க்ளீன் இமேஜுக்கு சாதகமாக இல்லை.  சசிகலா கும்பல் மீது ரெய்டு நடத்தினா பா.ஜ.க.வுக்கு மதிப்பு கூடும்னு உங்ககிட்டே நிதியமைச்சகம் தொடர்ந்து தப்பாவே சொல்லிக்கிட்டிருக்கு. சசிகலா கும்பல் நல்லவங்கன்னு நான் சொல்ல வரலை. ஆனா, அவங்களை விட கொள்ளையடிக்கிறது, வருமானவரித்துறையை ஏமாத்திக்கிட்டு வருவது தமிழ்நாட்டு அமைச்சர்கள்தான். சசிகலா குடும்பத்துக்குள் ரெய்டு நுழையும்போது மந்திரிகளின் வீடுகளுக்கும் போயிருந்தா ஐ.டி. டிபார்ட்மெண்ட் நேர்வழியில் செயல்படுதுன்னு இமேஜ் உருவாகியிருக்கும். ஐ.டி. டிபார்ட்மெண்ட்டை தவறாக பயன்படுத்துறோம்ங்கிற குற்றச்சாட்டுதான் இப்ப பா.ஜ.க. மீது இருக்கு’’எனச் சொல்லிவிட்டு, டெல்லியிலுள்ள தனது வீட்டுக்கு திரும்பினார் சாமி”’என்கிறார்கள் பிரதமர் அலுவலகத்திலிருந்தே கசிந்த உளவுத் தகவல்களை அறிந்த கோட்டையிலுள்ள அதிகாரிகளும் சாமிக்கு நெருக்கமானவர்களும்.
சுப்பிரமணியசாமி எடுக்கும் ஊழல் அஸ்திரத்தை அறிந்து கலக்கத்தில் இருக்கிறார்கள் தமிழக அமைச்சர்கள். அண்மையில் சென்னை வந்த மோடி, அமைச்சர்களின் ஊழல்கள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கடிந்துகொண்டு போயிருக்கும் நிலையில்… பிரதமரிடம் சாமி கொடுத்துவரும் அழுத்தம் அமைச்சர்களிடம் கிலியை ஏற்படுத்தியிருக்கிறது. “சசிகலா குடும்பத்துக்கு எதிரான நடவடிக்கைகள் முற்றுப்பெற்றதும், அமைச்சர்களை நோக்கிப் பாய்வதற்கான அனுமதியை டெல்லியில் கேட்கத் திட்டமிட்டிருக்கிறது வருமானவரித்துறை’’ என்கின்றனர் உயர்மட்டத்தில்.
-இரா.இளையசெல்வன்

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *