Sunday, January 21, 2018

.
Breaking News

விரக்தியின் உச்சத்தில் இருக்கும் சசிகலா சொந்தங்கள்!

விரக்தியின் உச்சத்தில் இருக்கும் சசிகலா சொந்தங்கள்!
மொத்தம் 365 வருமானவரித்துறை புலனாய்வு அதிகாரிகளின் டீம் இதுவரை சசிகலா குடும்ப அங்கத்தினர்கள் மற்றும் உறவினர்கள் என 500 பேரை விசாரித்துள்ளது. வருமானவரித்துறை அதிகாரிகளை இயக்கிய டெல்லி வட்டாரத்திடம் கேட்கும்போது, “”அனைத்தும் நரேந்திர மோடியின் நேரடி கண்காணிப்பில் நடக்கிறது. அருண் ஜெட்லிக்கு கூட முழுமையாகத் தெரியாது” என்கிறார்கள்.
இந்தியாவின் நிதித்துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியா. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இவர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபொழுது அவரது இணைச் செயலாளராக இருந்திருக்கிறார். அசோக் லாவாசா என்கிற ஜெட்லிக்கு நெருக்கமான நிதித்துறை செயலாளர் ஓய்வு பெற்ற பிறகு ஹஷ்முக் ஆதியாவை மத்திய நிதித்துறை செயலாளராக்கினார் மோடி. அதன்பிறகு மோடி மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஜி.எஸ்.டி. வரி எல்லாவற்றிற்கும் ஆதியாதான் குரு. அவர்தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது திடீரென முளைத்து பிறகு வாலை சுருட்டிக் கொண்ட சசிகலாவின் பினாமி கம்பெனிகள் (ஷெல் கம்பெனிகள்) மீது நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டவர்.
இந்நடவடிக்கை ஜெ. உடல்நிலை சரியில்லாமல் அப்பல்லோ மருத்துவமனையில் படுத்துக் கிடந்தபோதே தொடங்கியது. “ஜெ., இறப்பை நோக்கி பயணிக்கிறார் என சசிகலா வகையறாக்களுக்கு தெரிந்தபோது அவர்கள் போயஸ் கார்டனிலும் சிறுதாவூரிலும், கொடநாடு எஸ்டேட்டிலும் உள்ள ரகசிய அறைகளை உடைத்தார்கள். போயஸ் கார்டனுக்கு ஜெ. திரும்ப வந்தால் அவரை படுக்கையுடன் கொண்டு செல்வதற்காக ஒரு புதிய லிப்டை உருவாக்குகிறோம் என கண்டெய்னர்களை கார்டனுக்கு கொண்டு வந்தார்கள். போயஸ் கார்டனில் இருந்தும் சிறுதாவூரில் இருந்தும் பணம், நகை ஆகியவற்றையும் கொடநாட்டில் இருந்து சொத்து ஆவணங்களையும் கொண்டு சென்று திவாகரனுக்கு சொந்தமான டெல்டா மாவட்டத்து இடங்களில் அடுக்கினார்கள். (இதுகுறித்து ஜெ.வின் அப்பல்லோ நாட்களிலேயே நக்கீரன் கவர் ஸ்டோரி வெளியிட்டது).
இதை மோப்பம் பிடித்த மத்திய அரசின் உளவுத்துறை… போயஸ் கார்டனிலிருந்து மட்டும் சுமார் 20,000 கோடி ரூபாய் டெல்டா மாவட்டங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டது என ரிப்போர்ட் அனுப்பியது. அந்த ரிப்போர்ட் பற்றி அமைச்சர்களிடம் பேசிய மோடி, “”ஜெ.வை பிழைக்க வைக்க சசிகலா முயற்சி செய்யாமல் அவர் சம்பாதித்த பணத்தை கொள்ளை அடிப்பதில் கவனம் செலுத்துகிறார்” எனக் கூறியுள்ளார். இதுதான் சசிகலா மேல் மோடிக்கு ஏற்பட்ட முதல் கோபம். அதற்குப் பிறகு சென்னைக்கு வந்த அருண் ஜெட்லி, ராஜ்நாத்சிங் உட்பட பலர் சசிகலாவுக்கு எதிராக தங்களது வேலைகளை காட்ட ஆரம்பித்தனர். சசிகலாவை அ.தி.மு.க.விலிருந்து தனிமைப்படுத்துவதில் வெற்றி பெற்றாலும் சசிகலாவின் பணபலத்தை அவர்களால் ஒடுக்க முடியவில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது சசிகலாவின் போலி கம்பெனிகள் வசமாக சிக்கவே அந்த கம்பெனிகள் மீது பாயும்படி நிதித்துறை செயலரான ஹஷ்முக் ஆதியாவுக்கு உத்தரவிட்டார். அவர் கடந்த ஓராண்டாக இதற்கான வேலைகளை செய்தார்.
சசிகலாவை எதிர்த்து பிரிந்து வந்த ஓ.பி.எஸ். அணியை சேர்ந்தவர்களின் மூலம் மத்திய உளவுத்துறை விவரங்களை சேகரித்து வந்தது. அதனடிப்படையில் சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு ஓட்டலில் இதேபோல் ஆயிரக்கணக்கான வருமானவரித்துறை அதிகாரிகளை அழைத்து வந்து சசிகலா குடும்பத்தின் மீது பாய தயாராக இருந்தது. இந்த தகவல் திவாகரன் தரப்புக்கு வருமான வரித்துறை உயர் அதிகாரி மூலமாகவே போனதை டெலிபோன் டேப்பிங் மூலம் மத்திய உளவுத்துறை கண்டுபிடித்து சொன்னதால் ரெய்டு நடவடிக்கை தள்ளிப் போனது.
தற்பொழுது காலம் கனிந்துவிட்டது என மைத்ரேயன் எம்.பி. ஹஷ்முக் ஆதியாவிடம் விளக்கிச் சொன்னதால் அடுத்த சில நாட்களில் மத்திய உளவுத்துறையின் செல்போன் டேப்பிங் உதவியுடன் களத்தில் குதித்துவிட்டார் ஹஷ்முக் ஆதியா. எடப்பாடி, சசிகலா அணியிடம் பேசுகிறார் என தகவல்கள் வருகின்றன. அந்தத் தகவல் உறுதி செய்யப்பட்டால் ஏற்கனவே எடப்பாடியிடம் கோபமாக உள்ள மோடி, எடப்பாடி வீட்டுக்கும் ஹஷ்முக் ஆதியா மூலம் வருமான வரித்துறை அதிகாரிகளை அனுப்புவார் என்கிறார்கள் இந்த ரெய்டுகளின் சூட்சுமங்களை நன்கு அறிந்த டெல்லி அதிகாரிகள்.
“புதன்கிழமை வரை அங்குமிங்குமாக ரெய்டுகள் தொடரும். இந்த ரெய்டுகளில் கைப்பற்றப்படும் விவரங்கள் பற்றி எந்த செய்தியும் லீக் ஆகிவிடக்கூடாது’ என்ற கவனத்துடன் பிரதமரின் நேரடிப் பார்வைக்கு அனுப்பப்படுகிறது. முழுவதும் ரெய்டுகள் முடிந்தபிறகே வருமானவரித்துறை முடிவுகளை வெளியிடும். ஆனால் தற்பொழுது கிடைக்கும் விவரங்கள் அடிப்படையில் போயஸ் கார்டனிலிருந்தும் சிறுதாவூரிலிருந்தும் திவாகரன் பொறுப்பில் டெல்டா மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்ட கண்டெய்னர்களில் இருந்த கரன்சிகளை சசிகலா குடும்பத்தார் மறைக்க முடியவில்லை. அதை வருமானவரித்துறை தொட்டு விட்டது. அதை முழுமையாக வெளிக்கொண்டு வரும்.
அத்துடன், “”சசி குடும்பத்தின் டெல்டா மாவட்ட தளபதியான திவாகரன், இளவரசியின் மகனான விவேக், அவரது சகோதரி கிருஷ்ணப்ரியா உட்பட பத்துக்கும் மேற்பட்டவர்களை சட்டவிரோத பணப் பரிமாற்றம் வழக்கில் கைது செய்யவும் அதற்காக அடுத்த கட்டமாக அமலாக்கத்துறையையும், சி.பி.ஐ.யையும் களமிறக்க மத்திய அரசு திட்டமிடுகிறது” என்கிறார்கள் மத்திய அரசு வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.
“”இதெல்லாம் எங்களுக்கு புதுசா… மூன்று மாதங்களுக்கு முன்பே வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடவடிக்கை என அணி திரள்கிறார்கள் என்ற செய்திகள் வந்தபோதே நாங்கள் உஷாராகிவிட்டோம். அனைத்து ரெக்கார்டுகளையும் நாங்கள் அப்புறப்படுத்தி விட்டோம். சசிகலா உறவினர்கள் தமிழ்நாட்டில் மட்டும் தொழில் செய்யவில்லை. இந்தியாவின் பல மாநிலங்களில் தொழில் செய்கிறார்கள். அவர்களின் உண்மையான முதலீடுகள் எல்லாம் பல ஆயிரம் கோடிகளில் வெளிநாடுகளில் இருக்கிறது. அந்த வெளிநாட்டு முதலீடுகளை மோடி அரசால் ஒன்றும் செய்ய முடியாது” என சவால் விடுகிறார்கள்.
“”ஜெ. உயிருடன் இருந்தபோது உயில் ஒன்றை எழுதினார். அதை கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த தொழிலதிபரிடம் கொடுத்து வைத்தார். அதை எடுக்கத்தான் இந்த ரெய்டு என செய்திகள் வெளியாயின. அத்துடன் ஜெ. சிகிச்சை பெற்ற நேரத்தில் வீடியோக்கள் எடுக்கப்பட்டன. அந்த வீடியோக்களையும் ஜெ.வின் உயிலையும் தேடித்தான் ரெய்டு நடத்தப்படுகிறது” என்கிறார்கள் மன்னார்குடி குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள்.
ரெய்டுக்குப் போன அதிகாரிகள் தரப்பில், “”பெங்களூருவில் உள்ள புகழேந்தியின் வீட்டுக்கு சென்ற அதிகாரிகள் பெரிதாக தேடியது, புகழேந்திக்கும் இரட்டை இலை பெற தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகருக்கும் தினகரனுக்கும் உள்ள தொடர்பு பற்றிய ஆவணங்களைத்தான். அத்துடன் அந்த வழக்கில் டி.டி.வி. தினகரனுக்கு பண உதவி செய்த பெங்களூர்க்காரரான ஆஸ்திரேலியா பிரகாஷ் என்ற நபருக்கும் டி.டி.வி. தினகரனுக்கும் உள்ள தொடர்பு பற்றி ஆராய்ந்திருக்கிறார்கள். சசிகலாவுக்காகவும், ஜெ.வுக்காகவும் சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜரான நாமக்கல் செந்தில் ஒரு காலகட்டத்தில் ஜெ.வுக்கு நெருக்கமான பினாமியாக மாற்றப்பட்டார். ரெய்டு நடவடிக்கைகளின் போது டெல்லியில் இருந்து அவரை வருமானவரித்துறை அதிகாரிகள் நாமக்கல்லுக்கு அழைத்து வந்தார்கள். அவரது வீட்டில் பல சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. வக்கீல் வீட்டில் ஜெ. உயில் இருக்கிறதா எனவும் அலசப்பட்டது. அவரை சென்னைக்கு அழைத்துச் சென்று விசாரிக்க இருக்கிறார்கள்.
ஜெயா டி.வி. அலுவலகத்தில் சோதனை தொடங்கிய முதல் நாளே ஜெயா டி.வி.யின் ஜெனரல்  மேனேஜர் நடராஜன் மற்றும் நிர்வாக அதிகாரி ஆத்மநாதன் ஆகியோரை அழைத்துச் சென்று அவர்களது வீடுகளில் சோதனை போட்டார்கள். ஜெயா டி.வி.க்கு இரண்டு கணக்குகள் உண்டு. சமீபத்தில் ஜெயா டி.வி.யிலிருந்து 200 பேரை வீட்டுக்கு அனுப்பினார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் 3 லட்ச ரூபாய் கொடுத்ததாக கணக்கு எழுதி 6 கோடி ரூபாய் சுருட்டப்பட்டதை கண்டுபிடித்தனர். உடனே ஜெயா டி.வி.யின் அக்கவுண்ட்ஸ் பிரிவில் வேலை செய்யக்கூடிய 25 பேரையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள். ஜெயா டி.வி.யின் ஆவணம், கணக்கு வழக்குகள், ஊழியர்களின் எண்ணிக்கை, வழங்கப்படும் சம்பளம் ஆகியவை குறித்து கணக்கு வழக்கு பிரிவின் நான்கு மேலாளர்களிடம் விசாரணை செய்தார்கள்.
2011-ம் ஆண்டு முதல் நஷ்டத்தில் ஜெயா டி.வி. செயல்பட்டு வருவதாக கூறப்பட்ட நிலையில், விளம்பரம் மூலம் எவ்வளவு வருமானம் வந்தது என விசாரித்தார்கள். சசிகலாவின் போலி கம்பெனிகள் என கண்டுபிடிக்கப்பட்ட பேன்சி ஸ்டீல், இந்தோ தோஹா பார்மசூட்டிக்கல்ஸ், ரெயின்போ ஏர், சுக்ரா கிளப் போன்ற கம்பெனிகளிடமிருந்து நமது எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயா டி.வி.க்கு பணம் வந்துள்ளதா என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.
ரெய்டுக்கு வரும் நேரத்தில் சசிகலாவை சிறையில் சந்தித்துவிட்டு வந்த விவேக் ஓட்டி வந்த காரில் கைச் செலவுக்காக 2 லட்சம் ரூபாயை வைத்திருந்தார். அந்த இரண்டு லட்ச ரூபாய்தான் வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றிய முதல் கேட்ச். தினகரனின் மனைவி அனுராதா ஜெயா டி.வி.யையும் நமது எம்.ஜி.ஆரையும் தனக்கு தருமாறு கேட்டிருந்தார். அதை சசிகலா, இளவரசியின் பிள்ளைகளான விவேக் மற்றும் கிருஷ்ணப்ரியாவுக்குதான் தந்தார்.  அந்த டாக்குமெண்டுகளை தேடி கண்டுபிடித்தனர். விவேக்கின் மனைவி போட்டிருந்த நகைகளை கைப்பற்றியதுடன் அவர் உருவாக்கியுள்ள புதிய டிரஸ்ட் பற்றிய டாகுமெண்டுகளை ரகசிய இடத்திலிருந்து எடுத்தனர்.
திவாகரன் மகள் மாதங்கி வீட்டில் புதிதாக வாங்கப்பட்ட வெளிநாட்டு கார் பற்றிய விவரங்களை சேகரித்தார்கள். விவேக்கின் மாமனார் வீட்டில் இரண்டரைக் கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. அதை அவர் சமீபத்தில் நடந்த ஒரு திருமணத்தில் கிடைத்த மொய் என கணக்கு சொன்னார்.
திவாகரன் வீட்டில் தங்கமும், வைரமும் கைப்பற்றப்பட்டது. செங்கமலத்தாயார் கல்லூரியில் 25 லட்ச ரூபாய் பணம் பிடிபட்டது என திவாகரனுக்கு நெருக்கமானவர்களே ஒத்துக் கொள்கிறார்கள். விவேக் நடத்தும் ஜாஸ் சினிமா தியேட்டர் எப்படி வாங்கப்பட்டது என அந்த தியேட்டரை ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்ற சத்யம் தியேட்டர் நிறுவனத்திடம் இருந்து வாக்குமூலம் வாங்கியது வருமான வரித்துறை” என்கிறார்கள் அந்த ரெய்டில் ஈடுபட்ட அதிகாரிகள்.
“”ஜெ.வின் சொத்துக்குவிப்பு வழக்கின்போதே சசிகலா வகையறாக்களுக்கு சொந்தமான 36 கம்பெனிகள் போலி கம்பெனிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது. அந்த கம்பெனிகளில் ஒன்றுதான் இந்தோ தோஹா பார்மசூட்டிக்கல்ஸ். அந்த கம்பெனி பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது உயிர் பெற்று, ரூபாய் நோட்டுகளை மாற்றும் போலி கம்பெனிகளில் ஒன்றாக தற்பொழுது பரிணமித்துள்ளது.
இதுதவிர, விவேக் ஜாஸ் தியேட்டர் வாங்கும் போதே சசிகலா குடும்பத்தினர் 38 கம்பெனிகளில் ஊழல் பணத்தை முதலீடு செய்து நடத்துகிறார்கள் என 2015, நவம்பர் 04 இதழிலேயே நக்கீரன் வெளியிட்டது. இந்த எண்ணிக்கை தற்பொழுது 100-ஐ தாண்டுகிறது. “”திவாகரன், அவர் மகன் ஜெய் ஆனந்த், இளவரசி பிள்ளைகள் விவேக், கிருஷ்ணப்ரியா, ஷகிலா, நாமக்கல் செந்தில், ஆறுமுகசாமி, வீடுகளில் சசிகலாவின் பணம் எப்படி புழங்குகிறது என கண்டுபிடித்துள்ளோம். கம்ப்யூட்டர், ஹார்ட்டிஸ்க்குகள், பல உண்மைகளை சொல்லி இருக்கிறது. தங்கம், வைரம், சொத்துக்கள் என வருமான வரித்துறை மூலம் சசிகலா வகையறாக்களை செயலிழக்க வைத்துள்ளது. சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கான வரி ஏய்ப்பு நடந்துள்ளது. பினாமிகளின் ரியல் எஸ்டேட் உட்பட சுமார் 1200 கோடிக்கான முதலீடுகளை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். எங்களிடம் உள்ள விவரங்கள் அடிப்படையில் இந்த ரெய்டின் புலனாய்வு வெளிநாடுகளில் நீள்கிறது” என்கிறார்கள் அதிகாரிகள்.
வருமானவரித்துறை இதை ஒழுங்காக செய்யுமா? கடந்த பத்தாண்டுகளில் இதுபோல நடத்தப்பட்ட எந்த ரெய்டும் முழுமை அடைந்ததில்லை என்கிற விமர்சனப் பார்வையும் உயர் மட்டங்களில் வெளிப்படுகிறது.
“”96-97-ம் ஆண்டு போயஸ் கார்டனிலும், ஜெ.வின் ஆடிட்டர் ராஜசேகர் வீடு உட்பட மூன்று இடங்களில் நடந்த ரெய்டுதான் 20 ஆண்டுகளாக அமலாக்கத்துறை வழக்கு, காபிபோசா கைது, சொத்துக்குவிப்பு வழக்கு என எங்களை வாட்டியது. இந்த ரெய்டு எங்கு போய் முடியுமோ என்ற பதைபதைப்பில் இருக்கிறோம்” என்கிறார்கள் மன்னார்குடி வகையறாக்கள்.
 

-தாமோதரன் பிரகாஷ் 
-சிவசுப்பிரமணியன், ஜீவாபாரதி, அருண்பாண்டியன்

 பணத்தை வைரமாக்கிய ஜுவல்லரி!
ரெய்டு நடவடிக்கைகளில் எதிர்பாராதவிதமாக இருந்தவை, புதுச்சேரி அம்பலத்தடையார் மடத்து வீதியில் உள்ள ஸ்ரீலட்சுமி ஜுவல்லரியிலும், அவர்களின் துணை நிறுவனமான சில்வர் ஜுவல்லரி, மணி டிரான்ஸ்பர் அலுவலகம் மற்றும் இ.சி.ஆரில் ஓசன் ஸ்பிரே ஹோட்டல் மற்றும் அவர்களின் கிளை நிறுவனங்கள் உள்ள சிதம்பரம், காரைக்கால், கடலூர் நகைக்கடைகளிலும் நடைபெற்ற சோதனைகள். 11-ஆம் தேதி வரை சோதனை தொடர்ந்தது.  தங்க நகை நிறுவனத்தின் முதலாளி நவீன் பாலாஜியிடமும், மேலாளர் தென்னரசுவிடமும் கிடுக்கிப்பிடி கேள்விகளால் விசாரித்துள்ளனர். கடலூரிலுள்ள தென்னரசுவின் வீட்டிலும் சோதனை நடத்தினர்.
இந்த நகைக்கடை மூன்று தலைமுறைகளாக இயங்கி வருகிறது. சம்பாதித்த பணத்தை வைத்து புதுச்சேரி இ.சி.ஆர். சாலையில், மஞ்சக்குப்பம் பகுதியில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் “ஓசன் ஸ்பிரே’ என்ற 5 ஸ்டார் ஹோட்டலை நவீன் பாலாஜி கட்டியுள்ளார். கையிருப்பு பணத்துடன் கடன் வாங்கியும் ஹோட்டலை கட்டியவருக்கு வியாபாரம் டல்.
கடன் நெருக்கடி அதிகரிக்க அந்த ஹோட்டலை தினகரன் குரூப்பிற்கு விற்றுள்ளார். 300 சி கைமாறியதாம். அதேசமயம் “டாகுமென்ட் அனைத்தும் உங்கள் பெயரிலேயே இருக்கட்டும்’ என்று கூறி வாங்கியிருக்கிறது மன்னார்குடி குரூப். முதலாளி நவீன் பாலாஜி நிர்வாக பங்குதாரராகியிருக்கிறார்.
அவரது துணையுடன், மணி டிரான்ஸ்பர் மூலம் தினகரனின் ஹவாலா கரன்சிகள் மாற்றப்பட்டிருக்கலாம், பணக்கட்டுகள் தங்க, வைர நகைகளாக மாற்றப்பட்டிருக்கலாம் என்பதால்தான் 3 நாட்களுக்கும் மேலாக துருவித் துருவி விசாரித்தனர் வருமான வரித்துறையினர்.  நவீன்பாலாஜியும், மேலாளர் தென்னரசுவும் அப்ரூவராக மாற வேண்டும் என்றும் நிர்பந்திக்கப்பட்டனராம்.

-சுந்தரபாண்டியன்

 பேப்பர் மில்லில் நோட்டு மாற்றம்!
 
தொடர்ந்து இரண்டு நாள்களாக ரெய்டு நடந்த இடம், ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் உள்ள செந்தில் பேப்பர் அண்ட் போர்டஸ் மில். இந்த காகித ஆலை கோவையில் உள்ள மணல் குத்தகைதாரரான  ஓ.ஆறுமுகசாமியின் குடும்பத்தைச் சேர்ந்தது. இது அவரது மகன் செந்தில் பெயரில்தான் இயங்குகிறது. ஆரம்பத்தில் சிறுமுகையைச் சேர்ந்த ஒருவர் நடத்தி வந்த இந்த மில்லை கடந்த மூன்று வருடங்களுக்கு முன்புதான் ஆறுமுகசாமி விலைக்கு வாங்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் TNPL காகித ஆலைக்கு அடுத்தபடியாக தினமும் 500 டன் உற்பத்தியை இந்த மில் செய்து வந்துள்ளது. சுமார் 4 ஆயிரம் பேர் இதில் பணிபுரிந்து வந்துள்ளனர். இடையே கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன் மில்லில் ஏற்பட்ட நட்டத்தால் 60 பேர் பணிபுரியும் சிறிய யூனிட் ஒன்றை மட்டும் இயக்கிக் கொண்டு வேலையாட்கள், உற்பத்தி என அனைத்தையும் நிறுத்தி விட்டார் ஆறுமுகசாமி. கடந்த ஆண்டு நவம்பரில் 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற மோடியின் அறிவிப்புக்கு பிறகு மன்னார்குடிக்கு அழைக்கப்பட்ட ஆறுமுகசாமியிடம் மில் விலை பேசப்பட்டுள்ளது.
கோவை வருமான வரித்துறை அதிகாரிகள் 8 பேர் TN 33 B.E.9868 என்ற “ஸைலோ’ காரில் 9-ந் தேதி காலை 6 மணிக்கு மில்லுக்குள் நுழைந்தனர்.
பொது மேலாளர் உட்பட நான்கு பணியாளர்களின் செல்போன் மற்றும் தொலைபேசிகளை அணைத்த அதிகாரிகள், மில், குடோன், கார் ஷெட், ஆபீஸ் என ஒவ்வொன்றாக துருவ ஆரம்பித்தனர். ஒன்றரை வருடங்களுக்கு முன்பே நிறுத்தப்பட்ட மில்லில்… சென்ற டிசம்பர் மாதம் நான்காயிரம் பேருக்கு நிலுவைத் தொகையாக ஆறு மாத சம்பளம் என சுமார் 100 கோடி ரூபாய் பழைய நோட்டுகள் பட்டுவாடா செய்யப்பட்டதாக கணக்கு இருந்துள்ளது.
சென்ற நவம்பர் மாத இறுதியில் சுமார் 500 கோடி பழைய நோட்டுகள் கொடுக்கப்பட்டு சசிகலா குடும்பத்திற்கு மில் கை மாற்றி விடப்பட்டுள்ளது. ஆனால் பெயர் மாற்றம் உட்பட எதுவும் நடைபெறவில்லை. இதுதொடர்பான ஆடிட் கணக்கு மன்னார்குடி குடும்பத்தைச் சேர்ந்தவரிடம் இருந்துள்ளதை கைப்பற்றியுள்ளனர். 10-ந் தேதி மாலை 6 மணிக்கு ரெய்டு முடித்து கிளம்பியபோது, சசிகலா குடும்பத்தினர் 600 கோடி ரூபாய் கறுப்புப் பணம் இங்கு வெள்ளையாக்கப்பட்டிருப்பதை ஆதாரத்துடன் அள்ளியுள்ளனர் வருமான வரித்துறையினர்.

– ஜீவாதங்கவேல்

 பண்ணை வீட்டு மர்மம்!
 
புதுச்சேரி அருகே தமிழக எல்லையான விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே பொம்மையார்பாளையம் பகுதியில் அமைந்துள்ள  டி.டி.வி. தினகரனுக்கு சொந்தமான பண்ணைத் தோட்டத்தில் நடந்த சோதனையில் பாதாள அறை கண்டுபிடிக்கப்பட்டதாக திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
பண்ணைத்தோட்டம் எட்டு ஏக்கர் பரப்பளவில்  இருந்தாலும் இதனருகில் சுமார் 100 ஏக்கர் அளவிற்கு செம்மண் நிலங்களை வளைத்து போட்டிருக்கிறது தினகரன் குரூப்.  அதற்கு மேல் நிலங்கள் கிடைக்கவில்லையாம். 2 ஏக்கர் பரப்பளவில் 6 வீடுகள் தனித்தனியாக கட்டப்பட்டுள்ளன. முந்திரி தோப்புகளுக்கு நடுவே உள்ள ஒரு சொகுசு பங்களாவில் தினகரன்  அவ்வப்போது வந்து தங்கிச் செல்வது வழக்கம்.  தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை முதலில் இங்கேதான் தங்கவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பின்னர் அத்திட்டம் மாறியது.
கடந்த 09-ஆம் தேதி காலை 7 மணிக்கு விழுப்புரம் வருமான வரித்துறை அலுவலர் செங்குட்டுவன் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் காரில் இங்கு வந்தனர். அங்கிருந்த காவலாளி கர்ணனிடம் பங்களாவின் கதவை திறக்க சொல்லி சோதனையில் ஈடுபட்டனர். அங்கிருந்த தோட்ட தொழிலாளர்களிடமும் தினகரன் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். இரவு 9 மணியளவில் சோதனை முடிவுற்ற நிலையில் சில ஆவணங்களை எடுத்துக்கொண்டு, ஓர் அறைக்கு மட்டும் பூட்டி சீல் வைத்து சென்றனர். தினகரனுக்கு ஆதரவாகத் திரண்ட தொண்டர்கள், பிரதமர் மோடிக்கு எதிராக குரல் எழுப்பி, மீடியாக்களுக்கு தீனி தந்தனர்.

-எஸ்.பி.சேகர், சுந்தரபாண்டியன்

வருமானவரித்துறை ரெய்டு பற்றி தொடர்ச்சியாக நக்கல் கமெண்ட் அடித்துவரும் டிடிவி.தினகரன், கடந்த 11-ந்தேதி மாலை திடீரென தனது மனைவி, மகளோடு திருவண்ணாமலை வந்தார். அவரது வருகை தினகரனின் நீண்டகால நண்பரும், பா.ஜ.க.வுடன் நெருங்கிய உறவில் இருப்பவருமான ஹோட்டல் அதிபர் மற்றும் தினகரன் அணி மா.செ எஸ்.ஆர்.தர்மலிங்கத்துக்கு மட்டுமே தெரியும்.
ஹோட்டல் அபர்ணாவில் தங்கிய தினகரன் இரவு 7 மணிக்கு திருவண்ணாமலையை அடுத்துள்ள கீழ்நாச்சிப்பட்டில் சசிகலா கட்டிய வாராகி அம்மன் கோயிலுக்கு சென்றார். அங்கு சிறப்பு பூஜை செய்துவிட்டு, இரவு 8:30 மணிக்கு அண்ணாமலையார் கோயிலுக்கு சென்றார். கோயில் ஜே.சி. உட்பட முக்கிய ஊழியர்கள் அனைவரும் எஸ்கேப்பாகிவிட்டனர். அண்ணாமலையாரை தரிசித்துவிட்டு பிரம்ம தீர்த்தம் அருகேயுள்ள காலபைரவர் சன்னிதிக்கு சென்று அவரை வணங்கினார். “எதிரிகளை அழிக்க வேண்டும்’ என வேண்டிக்கொண்டு ஒத்த ரூபாய்க்கு கற்பூரம் ஏற்றி வைத்து வணங்கினால் காலபைரவர் எதிரியை மெல்ல மெல்ல முடக்கிவிடுவார் என்பது ஐதிகம்.
அண்மைக்காலமாக அதிகம் நம்பும் மூக்குப்பொடி சித்தரை சந்திக்க முயன்றார் தினகரன். அவரை இரவெல்லாம் தேடி கோயில் அருகேயுள்ள ஒரு டீ கடையில் உட்கார்ந்திருப்பதை கண்டுபிடித்து,  நைசாக பேச்சுக்கொடுத்து அழைத்தனர். அவரோ வரமறுத்துவிட்டார். இதை தினகரனிடம் ஆதரவாளர்கள் கூற, “காலையில் பார்த்துடலாம்’ என்றார். முன்னாள் அமைச்சர் பழனியப்பன், திருச்சி மா.செ. சீனுவாசன் ஆகியோர் தினகரனை சந்தித்து இரவு 11:45 வரை பேசிவிட்டு சென்றனர்.
12-ந்தேதி காலையும் மூக்குப்பொடி சித்தரை சந்திக்க முயன்றார் தினகரன். “முடியாது’ என பிடிவாதமாக மறுத்துள்ளார் சித்தர். விரக்தியோடு திருவண்ணாமலையில் இருந்து தினகரன் கிளம்பினார். சென்னை செல்லும் வழியில் செஞ்சி அருகே தினகரன் கட்டியுள்ள செம்மேடு பிருத்யங்கராதேவி கோயிலுக்கு சென்று திருச்சியில் இருந்து வந்திருந்த பூமாலையை கொண்டு பூஜை செய்தார். அதன்பின் ஓ.பி.எஸ். அணி ஆதரவாளரான திருவண்ணாமலை தொகுதி எம்.பி. வனரோஜாவின் சம்பந்தி மற்றும் மருமகன் பழனி இருவரும் சந்தித்து சால்வை அணிவித்து தினகரனிடம் தனியே 5 நிமிடம் பேசிவிட்டு சென்றனர்.

–    து.ராஜா

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *