Sunday, January 21, 2018

.
Breaking News

இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் வளர்ச்சியில் மற்றும் ஒரு அங்கம்!

இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் வளர்ச்சியில் மற்றும் ஒரு அங்கம்!

அவுஸ்திரேலியாவில் 1988 ஆம் ஆண்டு முதல் இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் 29 ஆவது ஆண்டுப்பொதுக்கூட்டம் கடந்த 11 ஆம் திகதி சனிக்கிழமை மெல்பனில், வேர்மண்ட் தெற்கு சமூக மண்டபத்தில் நிதியத்தின் தலைவர் திரு. விமல் அரவிந்தன் தலைமையில் நடைபெற்றது.

இலங்கையில் நீடித்த போரில் பெற்றவர்களை அல்லது குடும்பத்தின் மூல உழைப்பாளியை இழந்த ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவிவரும் இந்நிதியத்தின் உறுப்பினர்கள் – உதவி பெறும் மாணவர்கள் தொடர்பாகவும், மாணவர் நிதிக்கொடுப்பனவு – உறுப்பினர் நிதி வரவு முதலான விபரங்களை நவீன முறையில் பதிவுசெய்யும் வகையிலும் நிதிக்கணக்குகளை MYOB முறைக்கு மாற்றுதல் தொடர்பான தகவல் அமர்வும் இக்கூட்டத்தில் இடம்பெற்றது.

இலங்கையிலும் உலகின் பலபாகங்களிலும் போர்களினாலும் இயற்கை அநர்த்தங்களினாலும் உயிரிழந்த மக்களுக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலியுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.

நிதிக்கணக்குகளை MYOB முறைக்கு மாற்றுதல்

நிதியத்தின் பரிபாலன சபைக்கூட்டங்களில் ஏற்கனவே ஆலோசிக்கப்பட்டவாறு நிதிக்கணக்குகளை மாற்றுவது தொடர்பான தீர்மானம் பற்றிய விபரங்களை விமல் அரவிந்தன் உறுப்பினர்களுக்குத் தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், ” நிதியத்தின் சகல கணக்குகளையும் ஒப்பிட்டுச்சரிப்படுத்தி, இலத்திரோனிக் முறையொன்றிற்கு மாற்றியமைக்கும் பாரிய வேலையையும் குழுவினர் மேற்கொண்டுள்ளனர். இப்படிச்செய்வதால், நிதிநடவடிக்கைகளையும் பதிவுகளையும் சிரமமின்றியும் சிக்கனமாயும் நிர்வகிப்பது சாத்தியமாவதுடன், நிருவாகச்செலவுகள் குறையவும் வழியேற்படுகிறது.

கணக்குகளை ஒப்பிட்டுச்சரிபார்க்கும் பணிகளோடு உதவிப்பொறுப்பேற்போர்,தமது கொடுப்பனவை முன்னரே தரும் முறைக்கு மாற்றவும் முயல்கையில், பலர் உதவிக்கொடைகளைத்தரத்தவறியிருப்பதும் அவர்களிற் சிலரது விபரங்கள் சரிவரச்சேர்க்காமலிருப்பதும் தெரியவந்தன. அவர்களோடு தொடர்புகொண்டு நிலுவைகளைப்பெறவும் குழுவினர் முயன்றுகொண்டிருக்கின்றனர்.” என்றார்.

ஆதரவாளர்களின் நிதிக்கொடுப்பனவு

” கல்வி நிதியம் பொறுப்பேற்கும் மாணவர்களுக்கு நிதிக்கொடுப்பனவு வழங்குவது நிதியத்தின் கடமையாகும். உதவி பெறும் மாணவர்களுக்கு தரப்படும் நிதிக்கொடுப்பனவுகளுக்கு நிதியத்தின் உறுப்பினர்கள் வழங்கும் நிதியுதவியைத்தவிர வேறு வழிகள் இல்லை. உறுப்பினர்கள் தமது நிதியுதவியை நிதியத்திற்கு அனுப்புவதற்கு தாமதித்தாலும் அல்லது நிதியத்திலிருந்து விலகினாலும் மாணவர்களுக்குரிய நிதிக்கொடுப்பனவை நிறுத்துவதில்லை என்பதை அறிவீர்கள்.

உதவும் அன்பர்களான நிதியத்தின் உறுப்பினர்கள் தமது உதவியை தாமதப்படுத்தும்போது மாணவர்களுக்கும் உதவி தாமதமாகும் நிலையேற்படுகிறது. ஒவ்வொரு காலாண்டின் தொடக்கத்திலேயே மாணவர்களுக்கு நிதிக்கொடுப்பனவை வழங்கவிரும்புகின்றோம். உதவும் அன்பர்களினால் நேர்ந்துவிடும் தாமதங்களினால் உதவியை எதிர்நோக்கியிருக்கும் மாணவர்களும் நிதியத்தின் மாணவர் தொடர்பாளர்களும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர். ஒரு நாள் தாமதமும் ஏழை மாணவர்களுக்கு வீண் சிரமங்களைத்தருகின்றது. அத்துடன் தொலைதூரத்திலிருக்கும் உதவும் அன்பர்களை தொலைபேசி ஊடாக நினைவூட்டுவதற்கு மேற்கொள்ளும் பிரயத்தனங்களினால் வீண் செலவுகளையும் நிதியம் எதிர்நோக்குகிறது.

எமது கல்வி நிதியம் தற்போது MYOB நடைமுறைக்கு மாறியிருப்பதனால், அன்பர்களின் கொடுப்பனவு விபரங்களை முற்கூட்டியே தெரிவிப்பதை

சாத்தியமாக்கியிருக்கிறது. எனவே உங்களது ஆறுமாத நிதிக் கொடுப்பனவுகளை ஒவ்வொரு வருடமும் ஜனவரி அல்லது ஜூலை மாதங்களின் தொடக்கத்தில் நிதியத்திற்கு அனுப்பி உதவுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம். அவ்வாறு நிதியுதவி கிடைக்கும் பட்சத்தில் மாணவர்களுக்கும் உரியவேளையில் உதவி கிடைப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளமுடியும்.” எனவும் தெரிவிக்கப்பட்டது.

2016 -2017 நிதியத்தின் ஆண்டறிக்கையையும் நிதியறிக்கையையும் நிதிச்செயலாளர் திருமதி வித்தியா ஶ்ரீஸ்கந்தராஜா சமர்ப்பித்தார்.

கன்பரா இலங்கைத்தமிழ்ச்சங்கம், கல்வி நிதியம் ஊடாக இலங்கையில் சம்பூர் மகாவித்தியாலயத்தில் மூன்று தொண்டர் ஆசிரியர்களுக்கு மாதாந்தம் சம்பளம் கொடுக்க முன்வந்திருப்பதையிட்டு, கன்பரா தமிழ்ச்சங்கத்திற்கும் இதுதொடர்பாக ஆக்கபூர்வமாக உதவ முன்வந்திருக்கும் குறிப்பிட்ட சங்கத்தின் நடப்பாண்டு தலைவர் திரு. தளையசிங்கம் ரவீந்திரன் அவர்களுக்கும் இக்கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

நிதியத்தின் பதிவுகளை MYOB நடைமுறைக்கு மாற்றுவதற்கு உதவிய நிதியத்தின் உறுப்பினர் திரு. தர்மரத்தினம் ரவீந்திரன் அவர்களுக்கும் இக்கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

இலங்கையிலிருந்து மேலும் பல ஏழைத்தமிழ் மாணவர்களின் கோரிக்கை விண்ணப்பங்கள் நிதியத்திற்கு கிடைத்துள்ளமையால் உதவும் அன்பர்களின் ஆதரவு எதிர்பார்க்கப்படுகிறது.

kalvi.nithiyam@yahoo.com www.csefund.org

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *