Sunday, January 21, 2018

.
Breaking News

கமலை குறிவைக்கும் மோடி!

கமலை குறிவைக்கும் மோடி!
ரசியலில் இறங்குவதை உறுதி செய்திருக்கிறார் கமல்ஹாசன். அது குறித்து தனது பிறந்த நாளையொட்டிய நிகழ்வில் கமல் பேசியதற்கு, உடனடியாக ரியாக்ட் செய்த அமைச்சர் ஜெயக்குமார், “30 கோடியில் கட்சி துவங்குவது கமலைத் தவிர வேறு யாருமில்லை’ என்றார். கமலின் 30 சி பட்ஜெட் அரசியல் கட்சி பல தரப்பிலும் விமர்சனத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், அவரது டார்கெட்டை மையப்படுத்தி அவர் சார்ந்த விசயங்களை தோண்டத் துவங்கியுள்ளது மோடி அரசு.
“கமலின் அரசியல் பிரவேசத்திற்கும், மலேசியாவில் நடக்கவிருக்கும் நட்சத்திர விழாவுக்கும் தொடர்பிருக்கிறது. இதனை விசாரித்தால் பல பூதங்கள் கிளம்பும் என  சமீபத்தில் மத்திய நிதித்துறைக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் ரகசிய விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார் பிரதமர் மோடி’ என்கிறார்கள் உளவுத்துறை அதிகாரிகள். இதனையறிந்து நாம் விசாரித்தபோது, “”மலேசியாவில் வரும் ஜனவரி மாதம் நட்சத்திர கலைவிழா நடத்த அண்மையில் முடிவு செய்தது நடிகர்கள் நாசர்-விஷால் தலைமையிலான தென்னிந்திய நடிகர் சங்கம். மலேசியாவைச் சேர்ந்த சாகுல் என்பவரிடம் இதற்கான அசைன்மெண்ட்டை ஒப்படைத்தது. கமலின் நண்பரான ஐசரிகணேஷ் மற்றும் நடிகர் சூர்யாவின் மாமாவும் தயாரிப்பாளருமான ஞானவேல்ராஜாவின் பின்னணியில் ஒரு அக்ரிமெண்டும் போட்டுக்கொள்ளப்பட்டது. ஏற்கெனவே சில சினிமா நிகழ்ச்சிகளை நடத்திய அனுபவம் சாகுலுக்கு உண்டு.
அக்ரிமெண்ட்படி, தற்போதைய நட்சத்திர கலைவிழாவுக்கான ஏற்பாடுகளில் சாகுல் மும்முரமாக இருந்தபோது, “மலேசியாவிலுள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களின் பணத்தை நட்சத்திர கலைவிழாங்கிற பேரில் சுரண்டுவதற்கு அனுமதிக்கமாட்டோம்’’என முன்னாள் அமைச்சர் டத்தோ சாமுவேலின் மகன் வேல்பாரி கடுமையாக எதிர்த்தார். இது மலேசியாவில் வலிமையாக எதிரொலிக்க, விழாவே ரத்தாகும் சூழல் எழுந்தது. அந்த நிலையில், மலேசியாவில் இருக்கும் உள்நாட்டுக் கலைஞர்களின் நலன்களுக்காக சில நிதி உதவிகளை செய்வதாக சாகுல் தரப்பில் சொல்லப்பட்டபோது ஓரளவுக்கு சமாதானமானது. ஆனாலும் எதிர்ப்புகள் முழுமையாகக் குறையவில்லை.
இந்த நிலையில், மலேசியா அரசின் தலையீடு இல்லாமல் விழாவை நடத்துவது கடினம் என உணர்ந்து, அமைச்சர் டத்தோ சரவணனை சந்தித்து விவாதிக்கிறார் சாகுல். அப்போது, மலேசிய அரசின் விளையாட்டுத்துறையும் சுற்றுலா துறையும் இணைந்து விழாவை நடத்துவது என முடிவாகிறது. அதற்கேற்ப, கலை விழா என்பது மட்டுமல்லாமல் கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாட்டுகளை சினிமா நட்சத்திரங்கள் விளையாடுவது என புதிய ஐட்டங்களும் சேர்க்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு,  “நட்சத்திர விழா-2018′ என பொதுப் பெயரைச் சூட்டினர்.
நட்சத்திரங்களின் போக்குவரத்து மற்றும் தங்கும் செலவுகளை அரசே ஏற்றுக்கொண்டிருக்கிறது. இதற்கான ஒப்பந்தம் மலேசியாவிலுள்ள மிகப்பெரிய ஸ்டேடியமான (60 ஆயிரம் சீட் கெப்பாசிட்டி) தேசிய புக்கிட் ஜலில் ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் தென்னிந்திய நடிகர்சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, கருணாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தென்னிந்திய நடிகர்களின் நடசத்திர விழாவில், மலேசியா பிரதமர் நஜீம் கலந்துகொண்டு பேசவிருக்கிறார். அடுத்த வருடம் நாடாளுமன்றத் தேர்தல் வரவிருப்பதால் அதற்கான பிரச்சாரக்களமாக இதனை பயன்படுத்த திட்டமிட்டே அரசு சார்பில் விழா நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. காரணம், இந்தியர்களின் பெரும்பான்மை ஆதரவில்லாமல் யாரும் வெற்றிபெற முடியாது. அதனால், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் ஒரே இடத்தில் கூடுவதை ஆளும்கட்சியான “பரிஷான் கூட்டணி’ பயன்படுத்த நினைக்கிறது. இப்படிப்பட்ட பின்னணியைக் கொண்ட விழா குறித்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில்தான் கமல்ஹாசனுக்கு மத்திய அரசு பொறி வைத்துள்ளது”‘ என்கிறார்கள் மத்திய நிதித்துறையோடு தொடர்புடைய டெல்லியிலுள்ள தமிழக அதிகாரிகள்.
நடிகர் சங்கத்தின் ஊழல்களைத் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருபவரும் இந்திய மக்கள் மன்றத்தின் தலைவருமான வாராகி வைக்கும் குற்றச்சாட்டுகள் அதிர வைக்கின்றன. “”ரஜினி, கமல் உள்ளிட்ட உச்சபட்ச நடிகர்கள், நடிகைகள் பலரும் விழாவில் கலந்துகொள்ளும் வகையில் திட்டமிடப்படுகிறது. விழாவின் மூலம் டி.வி. ரைட்ஸ் தொகை 30 கோடி கிடைக்கும் என நிர்ணயித்தும், அதனை தென்னிந்திய நடிகர் சங்கம் எடுத்துக்கொள்ளலாம் எனவும் பேசி முடிக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், விழாவில் கலந்துகொள்ளும் நட்சத்திரங்களுக்கு சன்மானம் கிடையாது. ஆனால், கமல், ரஜினி போன்ற உச்ச நட்சத்திரங்கள் கலந்துகொண்டால் அவர்களுக்கு 10 கோடி ரூபாய் கொடுக்க ஒப்புக்கொள்ளப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்டிருக்கிறது மத்திய நிதித்துறை.
இந்த நட்சத்திர விழாவின் மூலம் பல கோடி ரூபாய் கறுப்புப் பணம் தமிழகத்தில் நுழையவிருக்கிறது. சினிமாவில் கறுப்புப் பணம் வாங்காத நட்சத்திரமான கமலின் அரசியல் பிரவேசத்தை காரணமாக வைத்து நட்சத்திர விழா கறுப்புப் பணத்தை  வெள்ளையாக்க ஒரு டீம் ரெடியாகியுள்ளது. ரசிகர்களிடமிருந்து நிதி திரட்டி அரசியல் கட்சி துவக்குவேன் என கமல் சொல்லியிருப்பதன் பின்னணியில் இந்த கருப்பு-வெள்ளை விளையாட்டு மறைந்திருக்கிறது என வருவாய் புலனாய்வுத் துறையினர் தெரியப்படுத்தியுள்ளனர்”’என்கிறார்.
இந்த நிலையில், சென்னையிலுள்ள மத்திய அரசின் அமலாக்கத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, “”அரசியல் கட்சி துவங்க ரசிகர்களிடம் நிதி திரட்டுவேன்” என கமல்ஹாசன் அறிவித்த நிலையிலேயே, மத்திய நிதித்துறை விழித்துக்கொண்டிருக்கிறது. ரசிகர்களிடமிருந்து அவ்வளவு பணத்தை திரட்டிட முடியாதுங்கிறது எங்களுக்குத் தெரியும். அதனால், கமலின் யோசனையில் மலேசியாவில் (ஜனவரி-6) நடக்கும் நட்சத்திர விழாவை கண்காணிக்கும்படி எங்களுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டிருக்கிறது. எங்கள் அமலாக்கத்துறையினரும் வருவாய் புலனாய்வுத் துறையினரும் மலேசியாவிலுள்ள தூதரக அதிகாரிகள் மற்றும் ரா அதிகாரிகள் மூலம் ரகசிய விசாரணையை துவக்கியிருக்கிறார்கள்.
விழாவை முன்னின்று நடத்தும் சாகுல் என்பவரின் பின்புலம் குறித்தும் சில தகவல்கள் கிடைத்திருக்கின்றன. தீவிரவாத குழுக்களுக்கு நிதி உதவி செய்யும் சில ஏஜெண்ட்களோடு அவருக்கு தொடர்பிருப்பதாக கிடைத்துள்ள தகவல் உண்மையானதா, பற்ற வைக்கப்படுகிறதா என ஆராய்கிறோம். அந்த ஏஜெண்டுகள் மூலம் சாகுலின் வழியாக தென்னிந்திய நடிகர்களுக்கு பணப்பரிமாற்றம் நடக்கப் போவதாகவும் அதற்கு நட்சத்திர விழாவை பயன்படுத்த திட்டமிடுவதாகவும் இன்ஃபார்மர்களிடமிருந்து தகவல்கள் கிடைக்கின்றன. குறிப்பாக, கமலின் அரசியல் பட்ஜெட் டார்கெட்டின் பின்னணியில் மலேசிய நட்சத்திர விழா இருக்கிறது. இந்த விழாவின் மூலம் திரைத்துறையினர் பலர் சிக்கப்போகிறார்கள்”‘என்கிறது.
நம்மிடம் மீண்டும் பேசிய வாராகி, “”தமிழகத்தில் வலிமையாக உள்ள தி.மு.க.-அ.தி.மு.க. இரண்டையும் எதிர்கொண்டு தேர்தலில் வெற்றிபெற ஒரு பூத்துக்கு 1 லட்சம் செலவாகும். அந்த வகையில் ஒரு தொகுதிக்கு இரண்டரை கோடி ரூபாய் என 234 தொகுதிக்கும் கணக்கிட்டால் கிட்டத்தட்ட 600 கோடி வேண்டும். இதைத்தாண்டிய பிரச்சார செலவுகள் தனி. இப்படிப்பட்ட பட்ஜெட்டை போட்டுவைத்துக்கொண்டுதான் நிதி திரட்டும் பணிகளில் குதித்திருக்கிறார் கமல். குறிப்பாக, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, ஐசரி கணேஷ் தலைமையிலான ஒரு டீம் இந்த வேலைகளில் இறங்கியுள்ளது. ஆக, கமலின் நிதித்துறை (ஃபைனான்ஸ் டீம்) திரட்டும் பணிகளில் ஒன்று மலேசிய நட்சத்திர விழா”‘என்று சுட்டிக்காட்டுகிறார்.
கமல் தரப்பிலோ, “”நவம்பர் 5 சென்னையில் நடைபெற்ற ரசிகர் சந்திப்பு விழாவில், 30 கோடி ரூபாய் அளவுக்கு ரசிகர்கள் நற்பணி செய்திருக்கிறார்கள். கட்சிக்கு பணம் தேவையென்றால் அதை என் ரசிகர்கள் தந்து விடுவார்கள். எனக்கு பயம் இல்லை என்றும்தான் கமல் சொன்னார். அதை பலவிதங்களில் திசை திருப்புகிறார்கள். எதற்கும் பயப்பட மாட்டோம்” என்கிறார்கள்.
இந்து தீவிரவாதம் பற்றி கமல் பேசியுள்ள நிலையில், அவரை நோக்கி இந்துத்வா அமைப்புகள் அம்புகளை பாய்ச்சத் தொடங்கியுள்ளன. இந்துத்வாவின் தலைமையகமான ஆர்.எஸ்.எஸ். அட்வைஸ்படி செயல்படும் மோடி அரசு, கமலை டார்கெட் செய்து, அவரது இமேஜை நொறுக்கி, அரசியல் கனவைத் தகர்க்கப் பக்காவாகத் திட்டமிட்டுள்ளது.
-இரா.இளையசெல்வன்
படம் : எஸ்.பி.சுந்தர்
 மத்தியில் பாதுகாப்பு!
ட்விட்டரிலிருந்து நேரடிக் களம் நோக்கி வந்த கமல் தனது கட்சி அறிவிப்பைத் தாமதப்படுத்தினாலும் “மையம் விசில்’ என்ற ஹேஷ்டாக் வெளியிட்டு, ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறார். விரைவில் அதற்கான செயலி வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார். மாநில ஆட்சியாளர்களை விமர்சிக்கிற அளவு மத்தியில் உள்ளவர்களை கமல் விமர்சிக்கவில்லை என்கிற கருத்துகள் பரவிய நிலையில், இந்து தீவிரவாதம் பற்றிப் பேசினார். பின்னர் அதற்கு மென்மையான விளக்கமும் தந்தார். தமிழக அரசியலில் கவனம் செலுத்தும்போது மத்தியில் பாதுகாப்பு வேண்டும் என தெரிவித்திருக்கும் கமலின் ஆலோசகர்கள் பலரும் மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வேண்டியவர்களாம்.

-பரமேஷ்

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *