Sunday, February 18, 2018

.

வைரக் குவியல் கிடைக்கும்வரை வருமானவரித்துறையின் பாய்ச்சல் அவ்வப்போது தொடரும்!

வைரக் குவியல் கிடைக்கும்வரை வருமானவரித்துறையின் பாய்ச்சல் அவ்வப்போது தொடரும்!
187 இடங்கள், 1800 அதிகாரிகள் டீமுடன்  தமிழகம் இதுவரை இப்படி ஒரு ரெய்டை சந்தித்ததில்லை. சசிகலாவின் சாம்ராஜ்ஜியத்தையே ஒடுக்குகிற அளவுக்கு நடந்திருக்கிறது மோடி அரசின் ஐ.டி. ரெய்டு! ஆனாலும் டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட சசி தரப்பினர் மீடியாக்களிடம் இயல்பாகவே காட்டிக்கொண்டனர்.
ரெய்டு நடத்திய வட்டாரங்களில் விசாரித்தபோது, “”கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக 1000, 500 நோட்டுகள் செல்லாது என அறிவித்ததால், 1 லட்சத்து 4 ஆயிரம் கோடி ரூபாய் கறுப்புப் பணம் வெளியே வரும் என எதிர்பார்த்தார் மோடி. ஒரு வருட முடிவில், வெறும் 35 ஆயிரம் கோடி ரூபாய் கறுப்புப்பணம்தான் பிடிபட்டது என்கிறது அரசு. ரிசர்வ் வங்கியிடம் இதற்கான உறுதியும் கிடைக்கவில்லை. நாடு தழுவிய விமர்சனத்தை எதிர்கொள்ள முடியாத மோடி அரசு,  15 நாட்களுக்கு முன்பு நிதியமைச்சக அதிகாரிகள் கூட்டத்தை நடத்தியது. பிரதமர் அலுவலக அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
அப்போது,  கறுப்புப் பண பதுக்கலில் தமிழகம்தான் முதலிடத்தில் இருக்கிறது. ஜெயலலிதா ஆட்சி இருந்ததால், அரசுத் துறைகள் மூலம் சுமார் 22 ஆயிரம் கோடி ரூபாய் மாற்றப்பட்டிருக்கிறது. தவிர, 20 ஆயிரம் கோடி ரூபாய் வைரங்களாக உருமாற்றம் செய்யப்பட்டுவிட்டன என சொல்லியிருக்கிறார்கள் (இதனை இரு மாதங்களுக்கு முன்பு, “வைரங்களாக மாறிய ஜெ. கஜானா’ என்கிற தலைப்பில் நக்கீரனில் பதிவு செய்திருக்கிறோம்). இவற்றை மீட்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்துவிட்டு கூட்டத்தை முடித்தனர்.
பொதுவாக, 2011-16 ஜெ. ஆட்சியில், சசிகலா தரப்பினர் சொத்துகளாக வாங்கிக் குவித்தனர். ஜெ.வோ ஓட்டுக்குப் பணம் தேவைப்படுவதைக் கருதி, கார்டனுக்கு வந்து சேரும் தொகையில் 60 சதவீதத்தை லிக்கியூட் கேஷ்ஷாக சேமித்தார். அவை ரகசிய அறைகள் உட்பட சில முக்கிய இடங்களில் பதுக்கப்பட்டன. ஜெயலலிதா பெங்களூரு சிறையில் இருந்த போது ஒரு வி.வி.ஐ.பி. கொடுத்த யோசனையின்படியும், ஜெயலலிதாவின் நட்புக்குப் பாத்திரமான தேசத்தின் முக்கிய பதவியில் இருக்கும் ஒருவரின் யோசனையின்படியும் பணத்தை வைரங்களாக மாற்றினார் ஜெயலலிதா. வைரங்களை பதுக்குவதும், இடம் மாற்றுவதும், பணமாக மாற்றுவதும் மிக மிக எளிது என்பதே இதற்கு காரணம். ஜெ.வின் மறைவுக்குப் பிறகு அவை சசிகலாவின் குடும்ப உறவுகளிடம் கைமாறி பதுக்கப்பட்டன.
அந்த வைரங்களைத் தேடியே இந்த ரெய்டுக்கு திட்டமிடப்பட்டது. அரசியல் காரணங்களுக்காக முடக்கப்பட வேண்டுமாயின் சி.பி.ஐ. ரெய்டுகள் நடத்தியோ, புதுப்புது வழக்குகள் பதிவு செய்தோ சசிகலா தரப்பை ஒடுக்கிவிடலாம். ஐ.டி. ரெய்டின் மூலம் ஒருவரை பெரிய அளவில் முடக்கிப்போட்டுவிட முடியாது. ஆனாலும், பதுக்கி வைக்கப்பட்ட வைரங்களைத் தேடித்தான், ஒட்டுமொத்த சசிகலா குடும்ப உறவுகள், ஆதரவாளர்கள், நண்பர்களின் வீடுகள், அலுவலகங்களை குறி வைத்தனர். சசிகலா குடும்பத்தின் நெருங்கிய உறவுகள் உஷாராகியிருக்கும் என்பதால் சசிகலா தொடர்புடைய, அதிக பரிச்சயமில்லாத உறவினர்கள்-நண்பர்கள்-பினாமிகளின் முகவரிகளை சேகரித்து வைத்துக்கொண்டு ஒரே சமயத்தில் வளைத்திருக்கிறது. 20,000 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரங்களையும் 22 ஆயிரம் கோடிகளுக்கான சொத்து ஆவணங்களையும் தேடியே இந்த ரெய்டு” என சுட்டிக்காட்டுகிறார்கள் அதிகாரிகள்.
அதிகாரிகள் தரப்பில் இப்படி சொன்னாலும்,  அரசியல் காரணங்களே இதில் புதைந்திருக்கிறது என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள். வழக்கறிஞரும் அரசியல் ஆய்வாளருமான ரவீந்திரன் துரைசாமியிடம் நாம் விசாரித்தபோது, “”சொத்துக் குவிப்பு வழக்கில்தான் ஜெயலலிதா முடக்கப்பட்டார். அதேபோல, அண்மை வருடங்களில் வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் சேர்த்துள்ளதாக சசிகலா குடும்ப உறவுகள் மீது பல புகார்கள் இருக்கவே செய்கின்றன. அவற்றை வெளியே கொண்டு வருவதன் மூலம் நிதி ஆதாரங்களை முடக்க முடியும் என்பது மத்திய அரசின் திட்டமாக இருக்கிறது. மேலும் ஃபெரா வழக்கில், தினகரனுக்கு  பாதகமான தீர்ப்பு வரும் பட்சத்தில் சொத்துக்களை முடக்கமுடியும். அதனை கண்டறிந்து அட்டாச் பண்ணுவதற்கு வசதியாக இது நடத்தப்பட்டிருக்கலாம்”’என்கிறார்.
ஜெயா டி.வி. அலுவலகத்தில் ரெய்டின்போது அதிகாரிகளோடு கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு தகராறு செய்த தினகரனின் ஆதரவாளரான தென்சென்னை வடக்கு மாவட்ட துணைச்செயலாளர் வைத்தியநாதன், “”இரட்டை இலை சின்னம் பெற பணம் கொடுத்ததாக சொல்லப்பட்ட குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாமல் தடுமாறுகிறது மோடி அரசு. கட்சியிலிருந்தும் சசிகலா, தினகரனை அப்புறப்படுத்துவது கடினமாக இருக்கிறது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கும் தினகரனுக்கே சாதகமாக இருக்கிறது. இதனால் டென்சனாகியுள்ள மோடி அரசாங்கத்தினர் ரெய்டு மூலம் மிரட்டிப் பார்த்தாலும் முடங்கிப்போகிறவர்கள் அல்ல நாங்கள்!” என்கிறார் ஆவேசமாக.

-இரா.இளையசெல்வன்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *