Sunday, February 18, 2018

.

கற்க அதற்கு தகா!… … (சிறுகதை) — } சங்கர சுப்பிரமணியன். மெல்பேண் ..

கற்க அதற்கு தகா!… … (சிறுகதை) — } சங்கர சுப்பிரமணியன். மெல்பேண் ..
அம்பாசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்வி அதிகாரியின் சோதனை இன்னும் இரண்டு
நாட்களில் நடக்க இருக்கிறது. அதனால் ஆசிரியர்களும் தலைமை ஆசிரியரும் மிகவும் துரிதமாக
இயங்கிக் கொண்டிருந்தனர். தலைமை ஆசிரியர் எல்லா ஆசிரியர்களையும் ஆலோசனை
அறைக்கு வரவழைத்து மாணவர்களை ஆசிரியர்கள் எவ்வாறு தயார்செய்து வருகிறார்கள் என்பது
பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார். ஆசிரியர்களும் மாணவர்களை கல்வியதிகாரி கேள்வி
கேட்கும் போது எப்படி பதில் அளிக்கவேண்டும், நடந்துகொள்ள வேண்டும் என்பதுபற்றியும் சொல்லிக்
கொடுத்திருப்பதைப் பற்றி விளக்கிகினர்.
ஒருவழியாக அந்தநாளும் வந்தது. கல்வி அதிகாரி திரு. சோமசுந்தரம் அன்று முன்பகல் பத்து
மணியளவில் வந்துசேர்ந்தார். இரண்டு நாட்கள் சோதனைக்காக வந்தவர் தலைமை ஆசிரியர்
அறையில் அரைமணி நேரம் உரையாடிவிட்டு பதினொரு மணியளவில் தலைமை ஆசிரியர் மற்றும்
உதவி தலைமை ஆசிரியருடன் ஒவ்வொரு வகுப்புக்காக செல்ல ஆரம்பித்தார். ஒவ்வொரு வகுப்பிலும்
அந்தந்த வகுப்பாசிரியர் அவர்களை எதிர்கொண்டு அழைக்க வகுப்பிற்குள் சென்றனர். முதல் நாளில்
எந்தவித இடையூறும் இன்றி கல்வியதிகாரியின் சோதனை நல்லபடியே சென்று கொண்டிருந்தது. அன்று
பள்ளி முடிந்ததும் கல்வியதிகாரி அன்று நடைபெற்ற சோதனையில் தனது திருப்தியைத் தெரிவித்தார்.
தலைமை ஆசிரியர் மற்றும் இதர ஆசிரியர்களின் முகத்தில் தென்பட்ட மகிழ்ச்சி அவர்களுக்கு ஒரு
தெம்பை கொடுத்தது. இதுபோல் மறுநாளும் எவ்வித அசம்பாவிதமும் நடக்காதிருக்க வேண்டும் என்று
எல்லோரும் உள்ளிக்குள் எண்ணினர்.
மறுநாள் காலை ஒன்பது மணிக்கு கல்வியதிகாரி வந்தார். தலைமை ஆசிரியர்களுடன் எட்டாம்
வகுப்பு “சி” பிரிவுக்குள் நுழைந்த கல்வியதிகாரியை வகுப்பாசிரியர் சற்குணம் வரவேற்று
அழைத்துச்சென்றார். அவர்கள் வகுப்புக்குள் நுழைந்ததும் மாணவர்கள் எல்லோரும் எழுந்து நிற்க
தலைமையாசிரியர் அவர்களை உட்காரும்படி சொல்லிவிட்டு கல்வியதிகாரியை மாணவர்களுக்கு
அறிமுகப்படுத்தி அவரது வருகையின் நோக்கத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூற மாணவர்கள்
திரும்பவும் எழுந்து நின்று கல்வியதிகாரிக்கு வணக்கம் கூறி அமர்ந்தனர்.
தலைமையாசிரியர் கல்வியதிகாரியிடம் மாணவர்களை சோதிக்குமாறு கேட்டுக்கொண்டதைத்
தொடர்ந்து கல்வியதிகாரி பேசத்தொடங்கினார்.
“மாணவர்களே! உங்கள் அனைவருக்கும் வணக்கம். இப்போது நீங்கள் எப்படி படிக்கிறீர்கள் என்பதை
உங்களிடம் பாடசம்பந்தமாக சில கேள்விகளைக்கேட்டு அறிய விரும்புகிறேன். நீங்கள் யாரும் எந்த
வித பதட்டமும் அடையத்தேவையில்லை. நான் கேட்கும் கேள்விகளுக்கு பதிலைமட்டும் தெரிந்தால்
சொல்லுங்கள்” என்று சொன்னவர் இரண்டாம் வரிசைப்பெஞ்சில் இருந்த ஒரு மாணவனைச் சுட்டிக்
காட்டி,
“உன் பெயர் என்ன?” என்று கேட்டார், அதற்கு மாணவனும் தன்பெயர் குமரன் என்று பதிலளித்தான்.
“விஞ்ஞானத்தில் பிராணவாயு தயாரிக்கும்போது பயன்படுத்தும் கிரியா ஊக்கியின் பெயரென்ன?” என்றார்.
“மங்கனீஸ்-டை- ஆக்சைட், சார்”
“வெரி குட், நெக்ஸ்ட்” என்றவுடன் அடுத்த மாணவன் எழுந்து நின்றதும்,
“அசோகச் சக்கரவர்த்தி செய்த நற்செயல்கள் என்னென்ன?” என்று கேட்டார்.
“அசோகர் குளங்கள் வெட்டினார். சாலைகள் அமைத்தார். சாலையோரம் நிழல்தரும் மரங்களை நட்டார்”,
என்றதும் மகிழ்ந்துபோன கல்வியதிகாரி,
“மிக மிக நன்றாய் சொன்னாய்” என்று பாராட்டி விட்டு வகுப்பசிரியரைப் பார்த்து, “நீங்கள் தமிழ்ப்பாடத்தில்
ஏதாவது மற்ற மாணவர்களைக் கேளுங்கள்” என்றார். அதற்கு வகுப்பாசிரியர் சற்குணம் சரியென்றபடியே,
“கோதண்டராமா! திருக்குறளில் கடவுள் வாழ்த்தில் வரும் இரண்டாம் குறளைச் சொல்” என்றார்.
“கற்க கசடற கற்க கற்றபின் நிற்க அதற்கு தகா” என்றான்.
அவன் அப்படி சொன்னதும் தலைமை ஆசிரியரும் கல்வியதிகாரியும் ஒருவரையொருவர் பார்க்க தலைமையாசியர்
வகுப்பாசிரியரைப் பார்த்தார். உடனே வகுப்பாசிரியர் கோதண்டராமனைப் பார்த்து குறளை ஒழுங்காகச் சொல்
என்றார். திரும்பவும் அவன் குறளை முதலில் சொன்னபடியே சொன்னான். அப்போது இடைமறித்த கல்வியதிகாரி
“தகா” என்று குறளை முடித்திருக்கிறாயே “தக” என்பதே சரி. “தகா” என்பதன் பொருள் தெரியுமா என்று கேட்க
அவனும் ‘தகா” என்றால் தாகாது என்று பொருள் என்றான். கற்பதை நன்றாக கற்க. கற்றபின் அதன்படி நடக்காதே
என்பதே குறளின் பொருள் என்றான்.
“ஏன் அப்படி தவறாக பொருள் சொல்கிறாய்?” என்றார் கல்வியதிகாரி.
“நடப்பதைத்தான் சொல்கிறேன், சார்” என்றான்.
கல்வியதிகாரி, தலைமையாசிரியர் மற்றும் வகுப்பாசிரியர் மூவரும் ஒருவரையொருவர் பார்த்து ஆச்சரியத்துடன்
குழம்பியபடியிருக்க என்னதான் சொல்ல வருகிறாய் என்று அம்மாணவனைப் பார்த்து அதிகாரி கேட்டார். அதற்கு
அம்மாணவனும் சிறிதும் பதட்டமோ பயமோயின்றி விளக்கினான். சார், கடந்தவாரம் விஞ்ஞான ஆசிரியர் வெங்கட்
பாடம் நடத்தினார். பூமியில் ஒருபகுதி வெளிச்சமாக இருக்கும்போது மறுபகுதி இருட்டாய் இருக்கும் என்பதை
எங்களையெல்லாம் சோதனைச்சாலை அழைத்துசென்று அங்கு மெழுகுவர்த்தியின் உதவியோடு கிரகங்கள்
ஒன்றையொன்று சுற்றிவருவதையும் அப்போது மெழுகுவர்த்தின் ஒளியில் சூரியனை நோக்கி இருந்த பூமியின் பாகம்
வெளிச்சமாகவும் அதற்கு மறுபுறம் இருளாக இருந்ததையும் புரியும்படி விளக்கிக் கூறினார். ஆனால் அதற்கு மறுநாள்
வந்த தமிழாசிரியர் அபிராமிப்பட்டர் என்பவர் தான் தவறுதலாக மன்னனிடம் அன்று பௌர்ணமி என்று சொன்னதற்காக
அபிராமி அம்மன் மீது பாட்டுபாடி அமாவாசையன்று முழுநிலவை வரவழைத்தாகக் கூறினார். இது எவ்வாறு
சாத்தியமாகும்? அதுமட்டுமா கணக்கு ஆசிரியர் வாரத்திற்கு ஏழு நாட்களென்றும் மாதத்திற்கு நான்கு வாரம் என்கிறார்.
அப்படியானால் மாதத்திற்கு இருபத்தியெட்டு நாட்கள்தானே வரவேண்டும். ஆனால் சிலமாதங்களுக்கு முப்பது
நாட்களென்றும் சிலமாதங்களுக்கு முப்பத்தியொரு நாட்கள் என்கிறார். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு
மாதத்தில் இருபத்தியெட்டு நாட்களும் இருபத்தியொன்பது நாட்களும் மாறிமாறி வரும் என்கிறார். இதெல்லாம்
படிப்பதற்கும் நடப்பதற்கும் தொடர்பின்றி இருக்கிறதல்லவா என்றான்.
கோதண்டராமனின் தைரியத்தை பாராட்டிய அதிகாரி சிலவற்றை நாம் கேள்வி கேட்கமுடியாது. சிலவற்றை நடை
முறையில் இருப்பதை அப்படியே நாம் பின்பற்றியே ஆகவேண்டுமென்றார். அதற்கு அவன் அப்படியானால் சிலவற்றை
நாமும் கேள்விகேட்கமுடியாது. உதாரணத்துக்கு மனிதர்கள் மிருகங்களை துன்புறுத்துவதை நாமும் கேள்வி கேட்க
முடியாது. காரணம் சிறிய சுண்டெலியை விநாயகர் வாகனமாகவும் சிறுபருந்தை கிருஷ்ணர் வாகனமாகவும் கொண்டு
கடவுளரே மிருகங்களை துன்புறுத்தியிருப்பதற்கு முன்னுதாரணமாக இருந்திருக்கிறார்கள். அடுத்ததாக நடைமுறையில்
இருப்பதை அப்படியே பயன்படுத்த வேண்டும் என்பதும் தவறென்றான். அதற்கும் சில உதாரணங்களை சொல்கிறேன்.
வெகுகாலமாக நடை முறையில் இருந்த பர்லாங்க், மைல் என்றிருந்தை மீட்டர், கிலோமீட்டர் என்று மாற்றியிருக்கிறோம்.
பவுண்ட் என்று இருந்ததை கிலோகிராமாக மாற்றியுள்ளோம். அங்குலம், அடி என்று இருந்தை சென்டிமீட்டருக்கு
மாற்றியாயிற்று.  அணா, ரூபாய் என்றிருந்ததை பைசா, ரூபா என்றும் பாற்றிவிட்டோம். இப்படியெல்லாம் மாற்றம்
செய்திருக்கும்போது ஆண்டுக்கு முந்நூற்று அறுபத்திநான்கு நாட்கள் என்றும் பதின்மூன்று மாதமென்றும் ஒவ்வொரு
மாதத்துக்கும் இருபத்து எட்டு நாட்கள் என்றும் மாற்றினால் என்ன? என்றான். இவ்வாறு சொன்ன அம்மாணவன் அருகில்
சென்ற அதிகாரி அவன் முதுகில் தட்டிக்கொடுத்து உன் கருத்தை எவ்வித பயமுமின்றி தைரியமாக முன் வைக்கிறாய்.
எதிர்காலத்தில் நாட்டில் பலமாற்றங்களைக் கொண்டுவருவாய் என்று பாராட்டியதோடு சரி வாங்க அடுத்த வகுபறைக்கு
செல்லலாம் என்றுகூறி தலைமையாசிரியர்களை அழைத்தபடியே எட்டாம் வகுப்பு “சி” பிரிவு வகுப்பாசிரியரிடம் விடை
பெற்று அடுத்த வகுப்பறைக்கு சென்றார்.
அன்று மாலை எல்லாவகுப்பு மாணவர்களையும் சோதனை செய்து முடித்தபின் எல்லா ஆசிரியர்களையும் அழைத்து
அவர்களின் ஒத்துழைப்புக்கு நன்றி பாராட்டிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.
கல்வியதிகாரி சென்றபின் அவர் தம்பள்ளியைப் பற்றி அரசாங்கத்துக்கு எப்படி அறிக்கை அனுப்புவாரோ என்ற
கேள்வி தலைமையாசிரியர் உட்பட எல்லா ஆசிரியர்களையும் துளைத்தெடுத்துக் கொண்டிருந்தது. என்னதான் அதிகாரி
கோதண்டராமனை முதுகில் தட்டி பாராட்டிச் சென்றாலும் அதைவைத்து பள்ளிமேல் நடவடிக்கை எடுத்துவிடுவார்களோ
என்ற எண்ணமும் எல்லோர் மனதிலும் இருந்தது. இரண்டு மாதங்களுகுப்பின் கல்வி இலாக்காவிடமிருந்து அறிக்கை
வந்தது. அதில் கல்வியதிகாரி நடத்திய சோதனையில் மாணவர்களின் தரம் சிறப்பாக இருந்ததைப்பற்றி குறிப்பிட்டு
இருந்தார்கள். குறிப்பாகா மாணவர்கள் துணிச்சலாக கருத்தை முன்வைத்ததுபற்றியும் அவர்களின் முற்போக்கு
சிந்தனையை கல்வியதிகாரி பாராட்டியிருந்தது பற்றியும் அக்கடிதத்தில் குறிப்பிட்டு வாழ்த்தியிருந்தார்கள். அன்று
தலைமையாசிரியர் உட்பட ஆசிரியர்கள் மாணவர்களென எல்லோரும் கோதண்டராமனை தேடிவந்து பாராட்டினர்.
தமிழாசிரியரோ “உச்சிமீது வானிடிந்து வீழ்ந்துவிட்ட போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே”
என்று சொன்ன இன்னொரு பாரதியப்பா நீ என்று பாராட்டினார். ஆனால் தேர்வு எழுதும்போது “கற்க அதற்கு தக”
என்ற பொருள்பட எழுது என்று அறிவுரையும் வழங்கிவிட்டுச் சென்றார்.
அன்றுமாலை பள்ளிமுடிந்து இரு ஆசிரியர்கள் மட்டும் வேறுமாதிரி பேசிச் சென்றார்கள். “சண்முகம், நல்லகாலமாப்
போச்சுய்யா. வந்த அதிகாரி நேர்மையானவர். அதனால்தான் கோதண்டராமன் தைரியத்தையும் அவன் கருத்தையும்
பாராட்டி சென்றதுடன் நம்பள்ளியைப் பற்றியும் நல்ல விதமாக அரசாங்கத்துக்கு அறிக்கையும் சமர்ப்பித்திருக்கிறார்”
என்றார் ஒருவர்.
“ஆமாம்யா, கோவாலு. உள்ளதத்தான் சொன்னீரு. வேற எவனாவது வெளங்காவதவன் வந்திருந்தா மதபயங்கர
வாதத்தையும் சமூகசீர்கேட்டையும் சிறுவயதிலேயே தூண்டும்படி நடப்பதால் இவன் மற்ற மாணவர்களையும் கெடுத்து
விடுவான் என்று சொல்லி கோதண்டராமனை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்ந்துபடிக்கும்படி ஏதாவது நடவடிக்கை
எடுக்க அரசாங்கத்து சிபாரிசு செஞ்சிருப்பான். அத்தோடு விடாமா நம்ம பள்ளிக்கூடத்தின் மீதும் ஏதாவது  நடவடிக்கை
எடுக்கும்படி செஞ்சிட்டு போயிருந்தாலும் போயிருப்பான்” என்றார் மற்றவர்.
“நீ சொல்வது முழுக்க முழுக்க சரி” என்று முதலாமவர் சொல்ல அவர்கள் செல்ல வேண்டிய பேருந்து வரவும் அதில்
ஏற இருவரும் ஆயத்தமாயினர்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *