Friday, February 23, 2018

.
Breaking News

போ …! ( சிறுகதை ) — } -கவிபேராசான்நடராசா கண்ணப்பு (இலண்டன்)

போ …! ( சிறுகதை ) — } -கவிபேராசான்நடராசா கண்ணப்பு (இலண்டன்)
ஆசைப்பிள்ளை ஏற்றம் அந்த ஏற்றத்திற்கு அப்படி ஒரு ஆசையான பெயர். அந்த ஏற்றத்தைத் தாண்டி..
கல் ஒழுங்கைக்குள் திரும்பிப் பின்னர் பத்தைகளைக் கூறுபோடும் ஒற்றைப்பாதைகளில் ஓடி நடந்து..புதைமணல் பாதைக்கு இறங்கிக் கொண்டிருக்கிறாள்.
ஒரு கடின காலத்தைக் கடந்து நடந்த மெல்லிய கால்கள் …விரல்களைக் கவ்விய பாறைப்பிளவாய் சதையைக் கிண்டிக்கொண்டிருக்கும் நகங்கள் …
மணலைக் கீறியபடி நடை..இன்னும் கூப்பிடுதொலைவில் வீடு..
பற்றை ஒருபக்கமாய், மறுபக்கமாய் அழகர் காணியைப் பிரிக்கும் பத்தை அலம்பல் வேலி அடைப்பு, இரவு வரப்போகுது..மாலை கருக்கலுக்குள்.
“ஆர் என்னை நினைப்பார்?”
“ஆர் நான் வரும் வரை வாசல் வரை வந்து நிற்பார்?”
அவள் ஏதோ புறு புறுத்துக் கொண்டு வருகிறாள்.
சந்தடியற்ற அந்த வண்டில் மணல் பாதை மங்கல் வெளிச்சத்தில் வீடு திரும்புகிறாள்..
கொடிவிட்டுப் படர்ந்த தாய் மரம்..உறவு மூச்சில் குழந்தை குட்டி மாமி மச்சாள் அண்ணை தம்பி இளையவள் மூத்தவள் என உயிர்த்து, எல்லாரையும் சாதி சனமென்று ஏதோ உணர்வோடிய இறைக்கைகளால் இறுக்கிக் கொண்டவள்..
விடிய விடிய உழைத்தும் விடியா வாழ்வை ருசித்துக்கொண்டு..
இருக்கும் வரை அடிச்சுக் கொடுக்கப்பிறவி எடுத்தவள்…
கிழவி…கிழவி… மருமகன் வசையாயும் வாய்க்கு வந்தமாதிரியும்..பென்சாதியின்ர கோபத்தில மாமியாரைப் பேசிறது ஞாபகத்துக்கு வர நடை நோகிறது..
வீடு ஒரு மலைக்கப்பால இருக்கிற மாதிரி அவளுக்கு..
“கால் மடக்கி முதுகு வலிக்க ஓலைபின்னி ..சதம் சதமாய் உழைச்சு..ஐயா நாச்சியாரென்று இரந்து..இந்த ஒரு வயிறு சோற்றுக்கு..
சாகும் வரை உழைச்சுச் சாவம்..”
அடிபட்டுப் போனாள் அவள்..
ஆரை நோக? பழகிப்போன பற்றை வாசம்..
“அலம்பல் கட்டோட ஆர் போறது,,?”
மங்கலாய் தெரியும் அந்த உருவத்தைப் பாக்கிறாள்..
“அவன் முருகு..என்ணோட்டை வயசு என்ன வீச்சாய்ப் போறான்..
“உழுந்து வாசம்..புடையன் பாம்பு..உங்கினேக்க கிடந்து கொத்தினாலும் தெரியாது..எட்டி நடப்பம்..”
புதைந்து எழுகிறது கால்..மணல் சூடாறிக்கொண்டிருக்கிறது..
நிழல் பகுதிகளை விலத்தி விலத்தி காலைக் குறுக்கும் மறுக்குமாய் வைத்து செல்லர் காணியைக் கடந்து தன் வீட்டு வேலி தெரிகிற தூரத்துக்கு வந்து விட்டாள்…
மீன் குழம்பு வாசம் ..
“அவங்களுக்கென்ன ஆளணி.. சந்தைக்குப் போய் ..கறியைப் புளியை வாங்கிச் சமைக்கிறாங்கள்..”
“அதுக்குள்ள இருட்டிப் போச்சோ..ச்சா..இந்தக் கண் கோதாரி .. ஆரோ படலைக்குப் பக்கத்தில ..ஆர் இந்த நேரம்.?அவன் குடிச்சுப் போட்டு வந்திருப்பான் பிள்ளைதான் வந்திருக்கும்..வேகமாய் எட்டிப் போய்ப் பாப்பம்..”
“அம்மா ஏன் பிந்திப் போச்சு?”
“பின்னின ஓலையல எண்ணிப் பாத்து கொடுத்திட்டு வாறன்..காசு கேட்டனான்..அவர் முதலாளி வரப் பிந்திப்போச்சு..பழையபடி ஏதோ செக்கிங்காம்…எங்க பிள்ளையைக் காணேல்ல..”
“அவன் அப்பான்ர செல்லம்..அங்க அவரோட விளையாடிக் கொண்டிருக்கிறான்..”
“என்ன சமையல் இண்டைக்கு?”
“கத்தரிக்காய் வத்தல் குழம்பு..சொதி…”
“ஏன்டி அவர் சந்தைக்குப் போகல்லயே..கறிகிறி வாங்கிச் சமைக்கிறதுதானே..”
“அவர் கொஞ்ச நாளா வேலைக்குப் போகேல்ல..காசு இல்ல..அதுதான் உங்கிட்ட இருக்கோ? நாளைக்குச் சந்தைக்குப் போறார்…சாமான் வாங்கிறதுக்கு..”
“உள்ளுக்க வாடி பிள்ளை .. என்ன தேத்தண்ணி குடியன்.”
“இல்ல அம்மா அவர் பாத்துக்கொண்டு நிப்பார் நான் கெதியா போக வேணும்..”
“பொறு வாறன்..எவ்வளவு வேணும்?”
“இந்தா இதில ஆயிரம் ரூவாய் இருக்குக் காணுமோ?”
“வெங்காயம் கிலோ 300 விக்குதாம்…முதலாளி சொன்னவர்…”
“அதுகாணும்..சமாளிப்பம்..பேந்து தாறன்..வாறன் அம்மா..”
“கவனமாய்ப் போ பிள்ளை…”
“இந்த வளவு ..வேலி..கூரை ..வளை..அந்த மனிசனின்ர வியர்வையும்
ரத்தமும்..”
அழுது அழுது அவரைத் தொழுதுகொள்ளத்தான் முடிகிறது..
“முருங்கையாய் ..தென்னையாய் அவர் ..
கிழுவையாய்..அலம்பல் அடைப்பாய் அவர் .
இன்னமும் செத்தும் சொத்தாய்..அவர் போட்ட வேலியில ஒரு ஊரே வாழுது..வேலிக் கிழுவையில ஆட்டுப்பட்டியும், இன சனமெல்லாம் அள்ளிக் கொண்டு போனவை, அவர் போனாப் பிறகு..உழைக்காமல் சும்மா இருக்கேலுமோ..ஓலை பின்னி அதில எத்தினை பேரை சமாளிக்கவேனும்.”
“இந்த வளவு அந்த மனிசனின் உழைப்பு..எல்லாம் பங்கு போட்டு..
இந்தக் குசினியை எனக்கு விட்டிருக்கினம்.
கையேந்தாமல் கடனில்லாமல்..பிள்ளையள் வாழவேண்டுமென்று இருக்கும் வரை எவ்வளவு கஸ்டப்பட்டவர்.
இந்தப் பிள்ளையள் இப்படியாயப் போச்சுதுகள்.”
“தோட்டம் நிலமென்று அண்டைக்கு உழைப்பும் ஊருமாய்…
ஊர்சனத்தோட..வாழ்ந்தனாங்கள்..இப்ப ஊர் ஊராய் ஓடிகினம்..
இந்தக் கிழவியிட்ட வருகினம்..ம்..ம்..
எப்பத்தான் இந்தப்பிள்ளையளுக்கு ஒரு விடிவு வரப்போகுது?”
“வளவும் நிலமும் வறண்டு போச்சு….நாலு மரவள்ளிக் கட்டைய வச்சாலும் ..”
“தென்னங்கண்டு அவற்ற கைராசி ..தேங்காய்க்குப் பஞ்சமில்ல..
நானில்லாத நேரம் உவங்கள் பிடுங்கிப் போடுறாங்கள்..”
தொப்பென்று ஒரு பழுத்த தேங்காய்..
“நல்ல காலம் தலை தப்பினது.. ம்..ம்..நாளைக்குக் கறிக்குக் காணும்..”
அடுத்த மகள் கனகம் வந்து நின்றாள்.
“வாவன் படலைக்க நிண்டு என்ன செய்யிறாய்?”
“தேங்காய் இல்ல…உந்த மரத்தில காய்ச்சிருக்கு..”
“நல்ல நேரத்தில வந்திருக்கிறாய்..இப்பத்தான் ஓரு தேங்காய் விழுந்தது ..
நிலத்தை வைச்சுக் கொண்டு என்ன செய்யிறியள்?
உந்தப்பெரிய காணியில நாலஞ்சு தென்னையள வைக்கலாம் தானே…
சும்மா..”
மரங்கள் காவாத மண்ணின்மடி மலட்டு மடி …..இந்தப் பத்தைகளும் ஆரும் வைச்சுப் பராமரிக்காத அலம்பல் காடும், ஈச்சம் செடியும் இலையாய்க்
குளையாய் ..இவை எல்லாம் மண்ணை வளப்படுத்தும் , காற்றை ஈரப்படுத்தும்.
கண்டுகள் வைச்சு தின்னத்தெரியாத மனிசரை என்னெண்டு சொல்லுறது ?
“அவளுக்குத் தென்னங்காணியைக் குடுத்து..
எனக்கு மட்டும் உந்த பத்தைக் காணியைத் தந்து கலைச்சுப் போட்டியள்.
அவரை அடிச்சுக் கொண்டாப்பிறகும்..இரண்டு பெண் பிள்ளையளையும்
நான் வளர்க்கப் பட்ட பாடு, அந்தப் பத்தைக் காணியைத் தந்திட்டு எனக்கு இப்ப அதை வை இதை வையென்று வேலை சொல்லுறீங்கள்,
வெளிநாட்டில இருக்கிற ஒரு நாயள் எங்களுக்கு இரங்கேல்ல,
பொம்பர் அடிக்கையும் நாங்கள் உயிரைப்பிடிச்சுக்கொண்டு இந்தப் பிள்ளையளை வளர்க்கப்பட்ட பாடு…….. “
“பிள்ளை அழாதை..என்ன சாகேக்கை இதுகளைக் கொண்டுபோகப்
போறோமோ…”
“நான் இருக்கும் மட்டும் இந்தத் தாய் மனை இருக்கட்டும்,
எல்லாரும் வந்து ஆறிப்போற இடம் நான் இருக்குமட்டும் பொதுவாய்
எல்லாப் பிள்ளையளும் வந்து போகட்டும்..”
தேங்காயோடு அவள் போய்விட்டாள்,ஆனால் அவள் போட்டுவிட்டுப் போன பெரும் பாரம் தாங்க முடியவில்லை ..அழுதபடி…..ஏதோ யோசித்தவளாய்.எழுந்து கொண்டவள் எட்டிப்பார்த்தாள்,அலம்பல் படலை திறந்து அவன் பேரன் உள்ளே வருகிறான்.
சந்தோசத்தைக் கொண்டு வரும் கள்ளச் சிரிப்பழகன் அவன். பேத்திக்கிழவிக்கு அவனை உச்சி மோந்தால் உலகைக் கையகப்படுத்திய நிறைவு.
“வா மோனை…..ஏன் வெளியாக்கள் மாதிரி அங்க நிக்கிறாய்.”
இவனுக்கு எல்லா நேரமும் பசிக்கும் பேத்தி கையால ஒரு பிடி சாப்பிடாட்டி பொச்சமடங்காது
“இந்தா சாப்பிடு..என்ன வெக்கப்படுறாய் ..”
குழையலின் மேல் ஒரு சிறு மீன் துண்டு கண் கலங்கக் கலங்க சாப்பிட்டுகொண்டிருந்தான்……..
பேரனை பக்குவமாய் வழியனுப்பியவள், பானைத் தண்ணீரின் குளிர் சுகத்தில் வாய் வயிறு நனைத்துப் பாயை விரித்தாள்.
அந்த பித்தளை விளக்கின் திரியின் நுனியில் சுவாலை மெல்ல ஆடிக்கொண்டிருந்தது.
விளக்கை அணைத்துவிட்டு படுக்கப் போனவளை அந்த குண்டு விமானத்தின் இரைச்சல் குழப்பியது.
“எத்தனை பேரைப் பலியெடுத்த பறக்கும் பசாசு அது.
அவனவனுக்கு உரியதை பிரிச்சுக் கொடுத்தால் எல்லாரும் நிம்மதியாய் இருக்கலாம்.ஒருவர் சொத்தை இன்னொருவர் பறிச்சால் ஆர் தான் விடப் போகினம்? உந்த விஷயத்தைத் தீர்க்காமல் விட்டுட்டு, இவங்கள் ….கடன் வாங்கிக் குண்டு வாங்கி குடிமக்கள் மேல போடுறாங்கள்..ஒரு தாய் மாதிரி அரசு இருக்க வேணும்..இப்பிடி எதிரி மாதிரி அடக்கி ஆள நினைச்சால்..ஆர்தான் ஒத்துக்கொள்ளுவினம்..?
இந்தப் படிப்பறிவில்லாத ஒரு கிராமத்துக் கூலிக்கு விளங்கிற விஷயம் இந்த பெரிய படிப்பெல்லாம் படிச்சு நாட்டை ஆளுறவங்களுக்கு விலங்கேல்லேயோ? எத்தனையாண்டாய் எங்கடை வாழ்வைக் கசப்பாக்கிப் போட்டாங்கள்..ஏழை அழுத கண்ணீர் கூரிய வாள் …
என்ரை கதிரைமலைக்கந்தா …இவங்களுக்கு மேல …
திட்டக்கூடாது ..ஆனாலும் இவங்களைத் திட்டாமல் இருக்கேலாது..இதுவும் ஒரு எதிர்ப்புத்தான் ..
இந்த ஏழையல முடிஞ்சது இதுதான்.
“எல்லாரும் நல்லாய் சமாதானமா இருக்க நீ நாசமாய்ப் போ..”

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *