Friday, February 23, 2018

.
Breaking News

தமிழீழத் தேசியத்தலைவர் எடுத்த மனிதாபிமான முடிவு!

தமிழீழத் தேசியத்தலைவர் எடுத்த மனிதாபிமான முடிவு!

அன்று சிங்கள பொலிஸ் அதிகாரிகளின் உணவுத்தவிர்ப்புப்போராட்டமும் தமிழீழத் தேசியத்தலைவர் எடுத்த மனிதாபிமான முடிவும்.
இன்று தமிழ் அரசியல்க்கைதிகளின் உணவுத்தவிர்ப்புப்போராட்டமும் மைத்திரி அரசின் கள்ள மௌனமும் கல்நெஞ்சமும்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல்க்கைதிகள் ஒரு மாதகாலமாக உணவுத்தவிர்ப்புப்போராட்டத்தில் ஈடுபட்டுவருவது யாவரும் அறிந்ததே. அவர்களது உடல்நிலை மிகவும் மோசமான கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில் வைத்தியசாலையில் சிகீச்சைகளுக்கு உட்படுத்திவிட்டு மீண்டும் சிறைச்சாலைக்கே அவர்களைக்கொண்டுசெல்லப்படுகின்றமையை யாருக்குச்சொல்லியழ? இதற்கு முன்னரும் பலதடவைகள் தமிழ் அரசியல்க்கைதிகள் இலங்கைச்சிறைச்சாலைகளில் தம்மை விடுதலை செய்யக்கோரி உணவுத்தவிர்ப்புப்போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். அந்தச்சந்தர்ப்பங்களிலெல்லாம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் இந்நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேனாவும் கொடுத்திருந்த உறுதிமொழிகளையிட்டு அந்தச்சந்தர்ப்பங்களிலெல்லாம் அந்த உணவுத்தவிர்ப்புப்போராட்டங்கள் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தன.

ஆனாலும் இப்போது அரசியல்க்கைதிகள் முன்னெடுத்துவரும் உணவுத்தவிர்ப்புப்போராட்டத்தை அலட்சியப்படுத்திவருவதையும் அத்தகைய அரசிற்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் முண்டுகொடுத்துவருவதையும் விமர்சித்து (திட்டி) எழுதுவதற்கு எனது அகராதியில் நல்ல வார்த்தைகள் இல்லாதபடியால் இத்துடன் இதற்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டு இனி நான் சொல்லவந்த விடயத்திற்கு வருகின்றேன்.

1994-ம்ஆண்டுகாலப்பகுதியில் குறிப்பிட்ட தொகையிலான சிங்களப்பொலிஸ் அதிகாரிகள் விடுதலைப்புலிகளால் கைதுசெய்யப்பட்டு விடுதலைப்புலிகளின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தனர். 1994-ம்ஆண்டு ஆவணிமாதம் 16-ம்நாள் நடைபெற்ற பாராளுமன்றத்தேர்தலில் சந்திரிக்கா குமாரதுக்க தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சிபீடம் ஏறியிருந்தது. இந்தக்காலப்பகுதியில் குறித்த இந்த சிங்கள பொலிஸ் கைதிகள் தங்களை விடுதலை செய்வதற்கு சந்திரிகாஅரசு விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தவேண்டுமென அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்து அவ்வவ்ப்போது உணவுத்தவிர்ப்புப்போராட்டங்களில் ஈடுபட்டுவந்திருந்தனர். அவ்வவ்ப்போதெல்லாம் சில உறுதிமொழிகளையடுத்து அந்த உணவுத்தவிர்ப்புப்போராட்டங்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தன.

1994-ம்ஆண்டு ஐப்பசிமாதம் விடுதலைப்புலிகளுக்கும் சந்திரிகா அரசிற்குமிடையிலான முதலாவதுகட்ட சமாதானப்பேச்சுக்கள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றன. அதேயாண்டு கார்த்திகைமாதத்தில் நடைபெற்ற ஜனாதிபதித்தேர்தலில் சந்திரிகா குமாரதுக்க அமோகவெற்றியீட்டி ஜனாதிபதியானார். அதனைத்தொடர்ந்து 1995-ம்ஆண்டு தைமாதம் 08-ம்நாள் விடுதலைப்புலிகளுக்கும் அரசபடையினருக்குமான மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது. அதையடுத்து இரண்டாம்கட்ட சமாதானப்பேச்சுக்களும் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றன. சமாதானப்பேச்சுக்களின்போது தமது தடுப்புக்காவலில் உள்ள சிங்கள பொலிஸ் கைதிகளின் விடுதலை தொடர்பாக பேசுவதற்கு விடுதலைப்புலிகள் தயாராகவிருந்தனர். ஆனாலும் அரசபிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நிகழ்ச்சிநிரலில் அதனை உள்ளடக்கவில்லை. சுருங்கக்கூறினால் அரசபிரதிநிதிகள் தமது சமூகத்தைச்சார்ந்தவர்களையே மாற்றான்தாய்ப்பிள்ளைகளாகவே நோக்கினர். சிங்களப்பொலிசாரின் கோரிக்கைகளை சந்திரிக்காஅரசு எள்ளளவிலும் கவனத்தில் எடுக்கவில்லை.

1995-ம்ஆண்டு பங்குனிமாதம் மூன்றாவது அல்லது நான்காவது வாரமென நினைக்கின்றேன். அதாவது தியாகத்தாய் அன்னை பூபதிஅவர்களின் உண்ணாநோன்பு நினைவுநாட்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த நாட்களவை. அந்தக்காலப்பகுதியிலும் குறித்த இந்த சிங்களப்பொலிஸ்கைதிகள் தம்மை விடுதலை செய்வதற்கு அரசாங்கம் விடுதலைப்புலிகளுடன் பேச்சுக்களை நடாத்தவேண்டுமென கோரிக்கை முன்வைத்து உணவுத்தவிர்ப்புப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்களது உடல்நிலை மோசமான கட்டத்தை அடைந்தது. அவர்களது நிலைமைகள் தொடர்பாக சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் ஊடாக அரசாங்கத்திற்கு உடனுக்குடன் அறிவிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. ஆனாலும் சந்திரிகாஅரசிடமிருந்து எந்தவிதமான பதில்களும் கிடைக்கவில்லை. இந்தச்சூழ்நிலையில்த்தான் தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன்அவர்கள் போராளிகளும் பொதுமக்களும் சற்றும் எதிர்பார்க்காத ஒரு முடிவை எடுத்திருந்தார். அதாவது தமது தடுப்புக்காவலில் உணவுத்தவிர்ப்புப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அனைத்து சிங்களப்பொலிஸ் கைதிகளையும் எந்தவிதமான நிபந்தனையுமின்றி சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தினர் ஊடாக உடனேயே விடுதலை செய்திருந்தார். அதைத்தொடர்ந்து ஒரு ஊடக அறிக்கையையும் விடுதலைப்புலிகள் வெளியீட்டிருந்தனர். அந்த அறிக்ககையில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்கள் தற்போது நினைவில் இல்லாதுவிட்டாலும் அதன் சாராம்சம் இப்படியாக அமைந்திருந்தது. அதாவது தியாகதீபம் லெப் கேணல் திலீபன் தியாகத்தாய் அன்னை பூபதி ஆகியோர் அகிம்சைப்போர் தொடுத்து ஈகைச்சாவடைந்த இந்த மண்ணில் அகிம்சைப்போருக்கு மதிப்பளிக்கின்றோம் எனப்பொருள்படவே அந்த ஊடகஅறிக்கை அமைந்திருந்தது.

சிங்களப்பொலிஸ்கைதிகள் உணவுத்தவிர்ப்புப்போராட்டத்தில் ஈடுபட்டு சிலநாட்களிலேயே அவர்களது உடல்நிலைகண்டு மனம் நெகிழ்ந்து அவர்களை எந்தவிதமான நிபந்தனையுமின்றி விடுதலைசெய்த தமிழீழத் தேசியத்தலைவரும்

தமிழ் அரசியல்க்கைதிகளின் உணவுத்தவிர்ப்புப்போராட்டத்தில் குதித்து ஒருமாதத்தை எட்டுகின்ற நிலையில் அவர்களது உடலநிலை மிகவும் மோசமான கட்டத்தையடைந்திருக்கின்றநிலையிலும் கைதிகளின் பெற்றோர்கள் கொழும்பில் மைத்திரியைச்சந்தித்து அழுது மன்றாடியும் கள்ள மௌனம்காத்து கல்நெஞ்சமாகவிருக்கும் கயவன் மைத்திரியும். அந்தக்கல்நெஞ்சக்காரனுக்கு முண்டு கொடுக்கும் சம்பந்தன் சுமந்திரனும்.

உண்மைமாமறவன் எங்கள் தலைவன்போல் உலகில் ஒருபிள்ளை பிறக்குமா?
உணர்ச்சிக்கவிஞர் காசியானந்தன்.

Manoharan Thanapalasingam

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *