Sunday, February 18, 2018

.

முத்தன் பள்ளம்! அதில் அமிழ்ந்த என் உள்ளம்!!… சங்கர சுப்பிரமணியன்.

முத்தன் பள்ளம்! அதில் அமிழ்ந்த என் உள்ளம்!!… சங்கர சுப்பிரமணியன்.
தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை மகாத்மா நகரைச் சேர்ந்த எழுத்தாளர்
திரு. அண்டனூர் சுரா அவர்கள் “முத்தன் பள்ளம்” என்ற நாவலை எழுதி வெளியிட்டிருக்கிறார்.
அந்நாவல் பற்றிய விமர்சனம் . அக்கினிக்குஞ்சு
ஆசிரியர் திரு. யாழ். பாஸ்கர் அவர்கள் என்னை தொடர்பு கொண்டு
விமர்சனம் எழுதும்படி கேட்டதைத் தொடர்ந்து இதோ அந்நாவலைப் பற்றிய என் பார்வை.
சமர்ப்பணத்திலிருந்து தொடங்குகிறேன். காலில் விழும் நாகரிகத்தை தமிழ்நாட்டில் தொடங்கி
வைத்தவன்மீது எனக்கு கொலைவெறியே இருக்கிறது. அதெல்லாம் சுயநலத்துக்காக தன்மானமிழந்து
உடல்கூனும் செயல். ஆனால் திரு. அண்டனூர் சுரா அவர்கள் ஒரு பொதுநலன் கருதி திருவடிக்கு…
என்று முடித்திருப்பது வேதனையின் தூண்டுதலால் உந்தப்பட்ட வேண்டுகோளாகவே எனக்கு
தெரிகிறது.
அடுத்ததாக அணிந்துரை வழங்கியிருக்கும் திரு. நாஞ்சில் நாடன் அவர்கள். சிலர் தமிழ் அழிந்துபோகும்
என்று ஆருடம் கூறுகிறார்கள். எத்தனையோ உயர்ந்த மொழிகள் என்று சொல்லப்பட்ட மொழிகள் அழிந்து
விட்டன. காரணம் பயன்பாடின்மை. ஒரு தொழிலோடு அதுவும் நலிந்து போயிருக்கும் தொழிலோடு
சம்பந்தபட்ட சொற்களைத் தேர்வுசெய்து அதை பயன்படுத்தியிருக்கும் திறன் கொண்ட திரு. நாஞ்சில்
நாடன் போன்றோர் இருக்கையில் இங்கு தமிழ் எங்ஙனம் அழிந்துபோம்? சமகால அரசியல், சமூகம்,
வணிகம், சாதியம் இவற்றின் பின்புலங்களை ஊடும் பாவுமாகக் கொண்டே இந்த நூல் புனையப்
பட்டுள்ளது என்று அவர் அணிந்துரையில் கூறியிருக்கும் ஊடும் பாவும் என்ற சொற்கள் என் உதிரத்திலும்
ஊணிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. தமிழ்காக்க இவர் போன்றோர் இருக்கும் திசைநோக்கி
தொழுவோம்.
இனி நாவல்பற்றி காண்போம். எழுத்தாளர். திரு. அண்டனூர் சுரா அவர்களின் எழுத்துக்கள் எனக்கு
அக்கினிக்குஞ்சு மூலம் பரிச்சயத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஒரு சிறந்த எழுத்தாளர் என்பதில்
சிறிதும் ஐயமில்லை. அவரின் நாவலை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்ததில் மகிழ்கிறேன். இந்த
நாவலைப்பற்றி இரண்டே வரிகளில் சொல்லிவிடலாம். வேதனைகளின் வெளிப்பாடு என்பதே அந்த
இரு வரிகள். அந்த அளவுக்கு முத்தன் பள்ளம் அவிரிடத்தே ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது
என்பதை அவரது நாவலோடு பயணம் செய்யும்போது மிக நன்றாகவே உணரமுடிகிறது.
விஞ்ஞான வளர்சியில் ஒரு அங்கமான போக்கிமான் துணைகொண்டு வட்டிக்காரர் மூலம் விஞ்ஞானத்தின்
சுவடுகளே இன்றி இயங்கிவரும் முத்தன் பள்ளம் என்ற ஊருக்கு அழைத்துச் செல்கிறார் ஆசிரியர். அவ்வாறு
அழைத்துச் செல்லும்போது என்னவற்றை எல்லாம் எதிர்கொண்டார் என்பதையும் அவ்வூரின் அவலத்தையும்
நமக்கு காட்டுவதே இந்நாவல். வட்டிக்காரரின் பயணத்தின் ஊடாக பல நிகழ்வுகளை எடுத்துச் சொல்லும்
போதே வரலாற்றுப் பதிவுகளையும் நம் மனதில் பதித்துவிட்டுச் செல்கிறார். ஒரு புதினத்தை கற்பனையை
மட்டும் வைத்துப் படைப்பது எளிது. ஆனால் கற்பனையுடன் வரலாற்றையும் கலந்து படைபதென்பது
அவ்வளவு எளிதல்ல. வரலாற்றைச் சிதைத்து விடாமல் படைக்க வேண்டுமானால் அதற்காக எடுத்துக்
கொள்ளப்படும் சிரமம், நேரம் மற்றும் முயற்சி எல்லாம் ஒருசிலருக்கே சாத்தியப்படும்.
தமிழ்நாட்டில் பதாகைகளின் ஆக்கிரமிப்புக்களையும் அவை ஏற்படுத்தும் அட்டூழியங்களையும் மிக
அழகாக பட்டியலிட்டிருக்கிறார். கண்ட கண்ட இடங்களிலெல்லம் பதகைகளை வைப்பது ஆக்கிரமிப்பு
என்றால் அவற்றை சிறந்த தலைவர்களின் சிலைகளையும் சாலைகளையும் மறைக்கும்படி வைப்பது
அட்டூழியம்தானே. எது எதற்குத்தான் பதாகை வைப்பது என்று வரைமுறை இல்லாமல் இருப்பது
அவரை மிகவே பாதித்திருக்கிறது. உண்மையும் அதுதானே. கையில நாலு காசு இருந்துவிட்டால்
எல்லவற்றுக்குமே பதாகை வைக்கலாம் என்ற எழுதாத சட்டம் இப்போது அரங்கேறி வருகிறது.
பிறப்புக்கும் பதாகை இறப்புக்கும் பதாகை. காதுகுத்துக்கும் பதாகை கருமாதிக்கும் பதாகை. பூப்படைந்தால்
பதாகை திருமணமென்றால் பதாகை பிள்ளை பெற்றாலும் பதாகை பெயர் வைத்தாலும் பதாகை என்று
எங்கு திரும்பினாலும் பதாகை. இன்னும் இரண்டே இரண்டுக்கும் மட்டும் பதாகை வைக்கவில்லை.
முதலிரவுக்கும் விவாகரத்துக்கும் மட்டும் பதாகை வைக்கவில்லை. கூடிய சீக்கிரம் அதையும் வைத்து
விடுவார்கள். இப்படி பதாகை என்றாலே ஒரு ஒவ்வாமை ஏற்பட்டு விட்டதால் இந்த நாவலிலும் முதல்
பகுதியில் பதாகைகளின் ஆக்கிரமிப்பு அதிகமிருப்பதால் நாவல் சற்று மெதுவாகவே நகர்கிறது.
இருப்பினும் பல இடங்களில் சமூகத்துக்கு உரைக்கும்படியும் நக்கல் நையாண்டியுடன் பலவற்றை பதிவு
செய்திருப்பதால் ஆரம்பத்தில் மெதுவாக நர்ந்து செல்வதை உணரமுடியாமல்  முதல் பகுதியை நகர்த்திச்
சென்றிருப்பது எழுத்தாளரின் திறமைக்கு சான்றாக அமைகிறது. ஒரு இடத்தில் “இத்தன நாளு நாம அள்ளி
கூட்டிப்பெருக்கி சுத்தப்படுத்தியத இப்ப அந்த ஊர் ஜனமே சுத்தப்படுத்திகணுமென பஞ்சாயத்தில் தீர்மானம்
போட்டிருக்காமே. இது கடவுளுக்கு அடுக்குமா…” என்று ஒருவர் கேட்க அதற்கு இன்னொருவர் “நல்லா
சொன்னேந்தே நீ. அப்படி தீர்மானம் வகுக்கிறவங்க அந்தந்த ஊர் கோயில அந்தந்த ஊர்க்காரங்களே பூஜை
செஞ்சிருக்கணுமெனத் தீர்மானம் போட வேண்டியதுதானே… ஏன் நாலூரு தாண்டி பூணூல் போட்டவன்ங்க
வரணும்..?” என்று சொல்லியிருப்பது சமூகத்துக்கு நல்ல சாட்டையடி.
இன்னொரு இடத்தில் தலித்மக்களுக்கு கிடைத்த உரிமையையும் உரிமை மறுப்பையும் விவரித்திருக்கிறார்.
கல்லாக்கோட்டையில் சிறப்புமிக்க தொண்டைமான் காலத்து மாரியம்மன் கோவிலுக்குள் சாதி மதம்
கடந்து வழிபடும் அதிகாரத்தை புதுக்கோட்டை சமஸ்தானம் கொடுத்திருந்தது. ஜமீன் காலத்தில் கட்டப்பட்ட
அரண்மனையும் கோவிலும் சேரி மக்களால் கட்டப்பட்டதால் அரண்மனைக்குள் சென்று மன்னனை சந்திக்கும்
அதிகாரமும் கோவிலுக்குள் நுழையும் உரிமையும் அவர்களுக்கு கிடைத்திருந்தது என்கிறார். அதே கல்லாக்
கோட்டை சராகத்தில் இருக்கும் மங்களாக்கோயிலில் பிடாரி அம்மன் கோவிலுக்குள் நுழையும் உரிமையும்
மரியாதையும் சேரி குடிகளுக்கு இல்லாததை பற்றிய வியப்பையும் கூறியிருக்கிறார். ஒருவேளை அரண்மனையும்
மாரியம்மன் கோவிலும் சேரிமக்காளால் கட்டப்பட்டிருக்காவிட்டால் அவர்களுக்கு அந்த உரிமை கிடைத்து
இருக்குமோ என்னவோ? அக்காலமும் சரி இக்காலமும் சரி தலித்மக்களை வேண்டும்போது பயன்படுத்திவிட்டு
தேவைப்படதபோது தூக்கி எரிவதும் நடக்கத்தானே செய்கிறது.
நாவலாசிரியரின் நக்கலும் நையாண்டியும் என்னை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. அப்பூதியாரை நினைத்தால்
கோபம் வருவதாக கூறுகிறார். அதற்கு அவர் கூறும் காரணம் பார்க்க, பயன்படுத்த கூப்பிட என அனைத்திற்கும்
ஒரேபெயரைச் சூட்டும் கலாச்சாரத்தை தொடங்கி வைத்தவன் அவன்தான் என்பதே. சிந்தித்துப் பார்த்தேன் பொருள்
விளங்கிற்று. நியாய விலைக்கடையில் பலபொருள்களோடு சிப்பங்களையும் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
அப்படி கொடுக்கப்பட்ட சிப்பங்களில் ஒருமுகம் இருந்தது என்கிறார். அங்கே விடுபட்ட பொருள்களை பக்கத்து
கடையில் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.  அங்கும் தொலைக்காட்சி, மின்விசிறி, சிறிய, பெரிய அறவை
எந்திரங்கள், சமையல் அடுப்பு, கையடக்க அலைபேசி என்று கொடுக்கப்பட்ட எல்லாவற்றிலும் அதே ஒருமுகம்
என்று அவர் சொல்லி இருப்பதில் இருந்து அவரது நக்கலையும் நையாண்டியையும் உணரமுடிந்தது.
நாவலின் இரண்டவது பகுதியை வாசிக்கையில் விடுதலையடைந்து எழுபது ஆண்டுகள் ஆகியும் இங்கே
இப்படிப்பட்ட கிராமங்களும் இருக்கத்தான் செய்கிறது என்பதை எண்ணும்போது இந்தியா வல்லரசு நாடாக
முன்னேறிக் கொண்டிருக்கிறது என்கிற அரசியல்வதிகளின் கூற்று கேலிக்கூத்தாகிறது. பத்து வயதுக்கும் குறைந்த
சிறுவர்கள் பள்ளி செல்வதற்காக தண்ணீரில் தத்தளித்து வரும் காட்சியை நாவலாசிரியர் விவரித்திருப்பதை
படிப்பவர்கள் மனம் சிறிதளவாவது கலங்காமலிருக்காது. அதையடுத்து பாம்பு கடித்த பெண்ணை கட்டிலில்
போட்டு தூக்கிகொண்டு தண்ணீரில் வேகமாக நடந்துபோகும் காட்சியும் அவர்களது பரிதவிப்பும் படிக்கும்
நமக்கே ஒருபதற்றத்தை உண்டாக்குகிறது. இந்த ஒரு இக்கட்டான சூழலிலும் அந்த இறுக்கத்திலிருந்து
விடுபடும் வகையில் ஆசிரியரின் நகைச்சுவை நம் மனதை சற்று இலேசாக்குகிறது. நாவலின் நாயகன் முள்
தைத்து தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கையில் யார் நீங்கள்?…. எந்த ஊர்…. என்றவாறு உதவிசெய்ய
வந்தவரிடம் “என்ன ஜென்மமய்யா நீங்கள்…..எப்படி இந்த ஊரில் வசிக்கிறீங்கள்….பிழைக்க வேற இடமே
இல்லையா…?” என்று கேட்கிறார். அதற்கு உதவிசெய்யவந்தவரோ “ஆமாம்… நாங்க வாழ்றோம்….தினம் தினம்
சாகுறோம்….! எல்லாம் பாட்டன் செய்த சித்தம்…” என்கிறார். அதற்கு இவரோ “யார்…பாட்டன்…?” என்று வினவ
“இந்த இடம் சிங்கப்பூர்னு நெனச்சி கால் வச்ச பத்து தலைமுறைக்கு முந்தைய மனுசன்….” என்று அவர் பதில்
சொன்னவிதம் நகைச்சுவைக்கு நல்ல எடுத்துக்காட்டு.
மனிதர்களுக்குள் உயர்வு தாழ்வு என்பதெல்லாம் இன்பத்திலும் துன்பத்திலும் அடங்கிவிடுகிறது. இந்நாவலில்
ஊர்த்தலையும் எடுபிடி வேலைசெய்யும் பாட்டனும் நடந்துகொள்ளும்முறை அதை உணர்த்துகிறது. ஊருக்குள்
வாடா போடா என்று பாட்டனை அழைக்கும் ஊர்த்தலை ஊரைத்தாண்டி விட்டால் வாப்பா…போப்பா
அழைப்பதுடன் ஒரேகுடத்தில் உள்ள கள்ளை இருவரும் வாய்வைத்து மாற்றி மாற்றி குடிப்பதிலிருந்தே
உண்மையான அன்பிற்கு முன் வேற்றுமையெல்லாம் வெற்றுவேட்டு என்பது உண்மையாகிறது.
ஒரு சமயம் காட்டிற்குள் ஊர்த்தலையும் பாட்டனும் நடந்துசெல்லும்போது நரிகள் விரட்ட அவைகளிடமிருந்து
தப்பியோடும் போது ஒரு நரி ஊர்த்தலைமீது பாய்கிறது. அப்போது போராடிப்பார்த்தும் பயனளிக்காதுபோக
ஊர்த்தலையை தோளில் தோக்கிப் போட்டபடியே வெகுதூரம் ஓடிவந்து அவரின் உயிரைக்காப்பாற்றுகிறான்.
அச்சமயம் திகைத்துப்போன ஊர்த்தலை பாட்னுடைய கைகளை இறுகப்பற்றி கண்களில் புதைத்துக்கொண்டு
அழத்தொடங்கினார். உடனே “அய்யா… என்ன இது! யாரும் பார்த்தால் உங்க குடிப்பெருமை என்னாவது…”
என்று பாட்டன் கேட்க அதற்கு ஊர்த்தலை, “என்னலே பெரிய வெங்காயக் குடிப்பெருமை. இந்த உசிரு நீ கொடுத்த
பிச்சை” என்று கண்களில் நீர்பெருகக் கூறியதுடன் “நீ என் பிள்ளையடா” என்கிறார். அத்தோடில்லாமல் “என்னை
விட்டு எங்கேயும் போயிடாதடா. இந்த ஊர்லயே இருக்கணும்…உன்னப் பார்க்கறப்பெல்லாம் நீ என்னைத் தூக்கி
கொண்டு ஓடிவந்தது ஞாபகத்துக்கு வரணும்…என்னையு அறியாம நான் கண் கலங்கணும்” என்று ஊர்த்தலை
சொல்ல அதற்கு பாட்டன் உங்கள விட்டு நா எங்க போகப்போறேன். எனக்கு உங்களயும் இந்த ஊரையும் தவிர
வேறேன்ன தெரியும் என்கிறான். அதற்கு ஊர்த்தலை “நீ சாதாரணப் பட்டவனல்ல. நீ வீரனடா. முத்தரையர்களின்
வீரத்தை நான் கேள்விப்பட்டிருக்கேன். இப்பதான் பார்க்கேன்” என்கிறார். இதன்மூலம் அன்பு, நன்றி போன்றவற்றிற்கு
முன் குலப்பெருமை உயர்வு தாழ்வு என்பதெல்லாம் தவிடுபொடியாகிவிடும் என்ற கருத்தை நாவலாசிரியர்
வலியுறுத்துவதுடன் முத்தரையர்களின் வீரத்தைப்பற்றியும் கோடிட்டுச்செல்கிறார்.
இப்படியெல்லாம் கூறி ஊர்த்தலை கண்கலங்கியதாக சொல்லும் நவலாசிரியர் ஊர்த்தலையின் பேரன் மூலம் நம்மை
கண்கலங்க வைக்கிறார். காலம் சுழல்கிறது. ஊர்த்தலையும் இறக்கிறார். ஊர்மக்களுக்கு பாட்டனின் நடவடிக்கைகளால்
ஊர்த்தலை உயிரோடிருக்கும்போதே பாட்டனைப் பிடிக்காது. இப்போது ஊர்த்தலையும் இல்லாததால் ஊர்த்தலையின்
பேரன்மூலம் பாட்டனை ஊரைவிட்டு வெளியேற்ற திட்டமிட்டு சிறுவனான பேரனைத் தூக்கிக்கொண்டு பாட்டானிடம்
வர அச்சிறுவனும் ஊர்மக்கள் சொல்லிக் கொத்திருந்தபடி “ஏலே பாட்டா… நீ சரிப்பட்டு வரமாட்டே…நீ ஊர விட்டே
போயிடு” என்கிறான். இதனை சற்றும் எதிர்பாராதா பாட்டன் பலவித உணர்ச்சிகளின் வெளிப்பாட்டோடு அச்சிறுவனின்
கண்களைப்பார்த்தபடியே “போயிடுறேன்…உங்களவிட்டே போயிடுறேன்” என்று வார்த்தைகள் தடுமாற கண் கலங்கிக்கூற
அச்சிறுவனும் கண்கலங்குகிறான்.  அதைப்பார்த்து “ஏண்டி தங்கம் அழுகிற” என்று பாட்டன் கேட்க அதற்கு சிறுவனும்
“நீங்க ஏன் மாமா அழுறீங்க” என்று கேட்க அதற்கு பாட்டனும் “ஒன்னுமில்லடி தங்கம்… கண்ணுல தூசி” என்றதும் “நானா
ஊதி விடட்டா” என்று சிறுவன் கேட்க, குடிசைக்குள் ஓடித்தேம்பத் தொடங்கிய பாட்டன் நம்மையும் தேம்பவைக்கிறான்.
இப்படி நம் கண்களில் கண்ணீரை வரவழைத்த நாவலாசிரியர் காதலையும் காட்டாமல் இல்லை. ஊரைவிட்டு வெளியேறிய
பாட்டன் அவனது அண்ணன் வாழ்ந்த ஊருணிக்காடு வருகிறான். பாட்டன் வந்ததில் அண்ணனுக்கு உடன்பாடு இல்லை.
அவர்களது பெற்றோர் வாழ்ந்த இடத்தையும் அவர்களது குலதெய்வத்தையும் விட்டுவிட்டு பாட்டன் வந்ததை ஏற்றுக்
கொள்ளாததால் பாட்டன் அண்ணன் வீட்டைவிட்டு புறப்பட்டு கால்போன போக்கில் நடக்கிறான். வழியில் தன்னந்தனியாக
இருந்த குடிசை தென்பட அங்குசென்று அக்குடிசையிலிருந்த  பெண்ணிடம் தண்ணீர் கேட்டு குடிக்கிறான். தண்ணீர் கொடுத்த
பெண்ணிடம் பசி தாங்கமுடியாமல் சோறு கேட்கிறான். அவன் கண்களில் பசியைக்கண்ட அப்பெண் உணவு சமைத்து
சோறிடுகிறாள். பசியாறிய பாட்டன் பக்கத்திலிருந்த பூவரசமரத்தடியில் படுத்து தூங்கிவிட்டான். அவளுக்குத்தான் தூக்கம்
வரவில்லை. தகப்பனோ வீட்டிலில்லை. அவனருகில் சென்று எழுப்பி அவனைச் சூடேற்றுகிறாள். இப்படியாக இறுகிய
சூழலிலும் இதமான சூழலையும் உலவவிட்டிருக்கிறார் நாவலாசிரியர்.
பாட்டன் பைரவத் தொண்டைமானிடம் நத்தம் என்ற இடத்திற்கு உரிமைப்பட்டயம் பெற்றதையும் அப்பட்டயம்
யார் பெயருக்கும் உரிமை இல்லாது அதில் புழங்குபவர்களுக்குமட்டும் என்று இருந்ததைப்பற்றியும் கூறுகிறார். அப்பாவியான
பாட்டன் அப்பட்டயத்தை பத்திரமாக வைத்திருக்கச்சொல்லி கல்லாக்கோட்டை ஜமீனிடம் கொடுக்க அதன்பின் நத்தம்
யாருக்குமற்ற நிலமாகப் போனதையும் விவரித்திருக்கிறார். பைரவத்தொண்டைமான் ஆஸ்திரேலியப் பெண்ணை திருமணம்
செய்துகொண்டது முதல் அவர் எப்படி தன் அரசபதவியை இழக்கிறார் என்பதுவரை மிகவும் விளக்கமாக சொல்லியிருக்கிறார்.
இறுதியாக முத்தன் பள்ளத்தையடைந்த வட்டிக்காரர் மூலம் அவ்வூரைப்பற்றி தெரியவரும்போது இந்த நூற்றாண்டில் இப்படி
ஒரு கிராமமா என்று வியப்படைவதைவிட வேதனையடையவைக்கிறது. பொதுவாக வட்டித்தொழில் செய்பவர்களிடம்
அன்பையோ இரக்கத்தையோ எதிபார்க்கமுடியாது. இந்த இப்புதினத்தின் நாயகனை எந்த அளவுக்கு முத்தன் பள்ளத்தின்
அவலங்கள் பாதித்திருக்கிறது என்பதை அவரது செய்கையிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
நான்கைந்துபேர் நீரோட்டத்தை கிழித்துக்கொண்டு நடந்துவருகிறார்கள். அவர்கள் யார் யாருடனும் பேசாது சோர்ந்துபோய்
வர ஒருவர் மட்டும் தனித்து வருகிறார். அவரை நோக்கி வட்டிக்காரர் நடக்கிறார். தனித்து வருபவர் தோளில் வேட்டியால்
சுற்றிய பொதி ஒன்று இருந்தது. அவரின் முகத்தில் துக்கம் தழம்பி கண்களில் வடிந்து கொண்டிருந்தது. பொதியைவாங்கி
தன் தோளில் கிடத்துகிறார். பொதிக்கு வெளியே இரு பிஞ்சுக்கால்கள். உடம்பு சில்லிட்டு உள்ளங்கைகளும் காள்களும்
வெளிர்த்திருக்க தலை தனியே தொங்கிக்கொண்டிருந்தது. அதை சுமந்தபடி அவர் தண்ணீருக்குள் காலடி எடுத்து வைக்கிறார்.
அவர் தண்ணீருக்குள் காலடி எடுத்து வைப்பது என் நெஞ்சின்மேல் யாரோ காலைவைத்து அழுத்துவது போன்ற வலியை
ஏற்படுத்தியது. இந்தவலியை யாராவது பதவியிலிருப்பவர்கள் உணர்ந்து அக்கிராம மக்களுக்கு ஏதாவது நல்லது செய்தால்
மானுடம் ஒரேயடியாய் இன்னும் மரித்துவிடவில்லை என்பது உண்மையாகும்.
நூலைப்படித்து முடிக்கும்போது மனம் கனத்து வலித்தாலும் அதனால் ஒரு இன்பமும் ஏற்படவே செய்தது. வரலாற்றுப்
புதினம்போல் பயணம் செய்யும் இந்நூல் முடிவில் ஒரு கிராமத்தின் இக்கால அவலநிலையைக்கூறி எல்லோருடைய
கவனத்தையும் ஈர்ப்பதால் இந்நூல் மூலம் நல்ல ஒரு பலன் கிட்டும் என்ற எதிர்பார்ப்பே அந்த இன்பம். பிறர் துன்பத்தை
அறிந்து அத்துயர் துடைக்கவேண்டி பொதுநலநோக்கோடு எழுதப்பட்ட அற்புதமான நூலாகவே இந்நூல்என்பார்வையில்
தெரிகிறது.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *