Sunday, February 18, 2018

.

ஹீசைனின் உறுதியும் தமிழரசு கட்சியின் தளம்பல் போக்கும். – (யதீந்திரா)

ஹீசைனின் உறுதியும்  தமிழரசு கட்சியின் தளம்பல் போக்கும். – (யதீந்திரா)

இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் போது இலங்கையின் மீதான அமெரிக்க பிரேரணை ஜ.நா.மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்பின்றி ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் செய்தி வெளியாகியிருக்கிறது. இது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் ஏனெனில், மேற்படி பிரேரணையின் திருத்தப்பட்ட நகலை இலங்கை அரசாங்கம் நிராகரிக்கவில்லை எனவே அதற்கான வாக்கெடுப்பும் அவசியமில்லாமல் போனது.

30ம் திகதி குறித்த பிரேரணை தொடர்பான விவாதங்கள் ஆரம்பித்த வேளையில் ஜக்கிய நாடுகள் சபையின் (ஜ.நா) மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் ஹீசைன் தனதுரையில் தெரிவித்திருந்த விடயங்களையே இப்பத்தி பிரதானமாக எடுத்துக் கொள்கிறது. 2014ம் ஆண்டு அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணையில், பிரிந்துரைக்கப்பட்ட மனித உரிமைகள் பேரவையின் விசாரணை; அறிக்கை தொடர்பான ஊடகவியாளர் சந்திப்பின் போது பேசிய ஹீசைன், இலங்கை தொடர்பில் எவ்வாறானதொரு நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தாரோ, அதனை மீளவும் நினைவுபடுத்தும் வகையிலேயே அவரது மேற்படி உரையும் அமைந்திருந்தது.

சிறிலங்காவின் குற்றவியல் சட்டமுறைமை சுதந்திரமானதும் மற்றும் நம்பகமானதுமான விராணையொன்றை முன்னெடுப்பற்கு போதுமானதல்ல அதே வேளை, மனித உரிமைகள் பேரவை கோரும் பொறுப்புக் கூறலை வழங்கவும் சிறிலங்காவின் நீதித்துறை போதுமானதல்ல என்பதை வலியுறுத்தியிருந்த ஹ_சைன், மேலும் குறிப்பிட்டிருக்கும் விடயமொன்று முக்கியமாக கவனிக்க வேண்டியது அதாவது, இந்த ஆண்டு ஜனவரிமாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் பின்னர் கருத்துச் சுதந்திரம் கொழும்பிலாவது ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது ஆனால் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் சித்திரவதைகள், இராணுவ புலனாய்வு சேவையின் கண்காணிப்பு மற்றும் தலையீடுகள் இடம்பெற்றுவருவதாக அறிவிக்கப்படுகிறது, என்பதையும் அவர் சுட்டிக் காட்டியிருக்கின்றார்.

இந்த அடிப்படையில் சிறிலங்காவின் நீதித்துறை மற்றும் பாதுகாப்புத் துறை ஆகியவை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியிருக்கின்றார். அவ்வாறில்லாது போனால், சிறிலங்காவிற்குள் இடம்பெறும் விசாரணைகளால் எவ்விதமான பிரயோசனமும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கப் போவதில்லை என்பதுதான் அவர் கூறியதன் சாராம்சம். எனவே இதிலிருந்து ஒன்று வெள்ளிடைமலை அதாவது, சிறிலங்காவின் நீதித்துறையை மட்டும் உள்ளடக்கிய ஒரு பொறிமுறையின் கீழ் தமிழ் மக்களுக்கான நீதி என்பது கானல்நீர்தான். இந்த அடிப்படையில்தான் சிறிலங்காவின் நீதித்துறையும், சர்வதேச நீதிபதிகளும் பங்குகொள்ளக் கூடிய கலப்பு நீதிமன்ற முறைமை தொடர்பில் முன்னர் ஆணையாளர் ஹீசைன் பரிந்துரைத்திருந்தார்.

அந்த பரிந்துரையை அமெரிக்கா கருத்தில் கொண்ட போதிலும் கூட, பின்னர் சிறிலங்கா அரசாங்கத்தின் எதிர்ப்பை தொடர்ந்து அது நீக்கப்பட்டது. பின்னர் அதற்கு பதிலாகவே பொதுநலவாய நாடுகளின் நீதிபதிகள் மற்றும் ஏனைய வெளிநாட்டு நீதிபதிகள், வழக்கறிஞர்கள் ஆகியோரை உள்ளடக்கும் பொறிமுறை என்றவாறு விடயம் திருத்தப்பட்டது. ஆனால் எப்படியான பொறிமுறையாக இருக்கும், அதற்கான பொறுப்புடையவர்கள் யார் போன்ற விடயங்கள் தெளிவற்ற வகையில் இருக்கிறது என்பதே பொதுவான கருத்து. சொற்கள் எவ்வாறு இருந்தாலும் இறுதியில் பிரேரணை ஒரு உள்ளக பொறிமுறையதை;தான் அழுத்தியிருக்கிறது என்று வாதிடுவோரே அதிகம்.

அதே வேளை இதுவும் ஒரு கலப்பு நீதிமன்றத்தைத்தான் பரிந்துரைத்திருக்கிறது என்று தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர்கள் வாதிடுகின்றனர். மேலும் “ஏனைய வெளிநாடுகளின் நீதிபதிகள், வழக்கறிஞர்கள்” என்னும் சொற்தொடர் மூலம் அமெரிக்கா உள்ளடங்கலாக ஏனைய ஜரோப்பிய நாடுகளும் அதனுடைய சட்டத்துறை வல்லுனர்களை உள்நுழைக்கும் ஏதுநிலையும் உள்ளது. எவ்வாறிருந்த போதும் முன்னைய அரசாங்கம் கடைப்பிடித்த ஏமாற்று நாடகத்தை தற்போதைய தேசிய அரசாங்கம் செய்ய முடியாத புறச்சூழலும் காணப்படுகிறது. ஆனால் இந்த விடயங்கள் ஒரு காலவறையறைக்குள் முன்னேற்றகரமானதாக இடம்பெறுமா அல்லது இதில் தொய்வுநிலைகள் ஏற்படுமா என்பது தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமைகளில்தான் தங்கியிருக்கிறது. ஆனால் இலங்கை தமிழரசு கட்சியின் தன்னிச்சையான செயற்பாடுகள் அவ்வாறானதொரு நிலைமை உருவாகும் என்பதில் கேள்விக்குறையை இடுகிறது எனலாம்.

இன்று ஜ.நா.மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் காண்பிக்கும் உறுதியைக் கூட தமிழரசு கட்சி காண்பிக்கவில்லை. சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் செயற்பாடுகளும் தமிழரசு கட்சியின் செயற்பாடுகளுக்கும் இடையில் என்ன வித்தியாசமுண்டு? இவ்வாறு ஒருவர் கேட்குமளவிற்குதான் நிலைமைகள் காணப்படுகின்றன. அமெரிக்காவின் பிரேரணை வெளிவந்து ஒரு மணித்தியாலம் முடிவதற்கு முன்பாகவே தமிழரசு கட்சி அதனை வரவேற்று அறிக்கை வெளியிட்டிருந்தது. அவ்வாறானதொரு வரவேற்பு அறிக்கையை மங்கள சமரவீரவும் வெளியிட்டிருந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்துவரும், கடந்த நாடாளுமன்ற தோதலின் போது மக்கள் ஆணையைப் பெற்ற ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களை தங்கள் வசம் கொண்டிருக்கும் ஏனைய மூன்று கட்சிகளுக்கும் மேற்படி அறிக்கை தொடர்பில் எதுவும் தெரியாது. இது தொடர்பில் அவர்கள் மூவரும் இணைந்து ஒரு ஊடக அறிக்கையும் வெளியிட்டிருக்கின்றனர். அதில் அமெரிக்க பிரேரணையை வரவேற்று தமிழரசு கட்சி வெளியிட்ட அறிக்கை தொடர்பில் தங்களுடன் கலந்துரையாடப்படவில்லை என்றும், உள்ளக பொறிமுறை ஒன்றின் மூலம் மட்டும் விடயங்களை கையாளுவதில் தங்களுக்கு நம்பிக்கையில்லை என்றும், அதில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதற்கு முன்னரும் கூட குறித்த கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளான டெலோ, புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து சர்வதேச விசாரணைக்கு ஆதரவாக கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தன. குறித்த அறிக்கை வெளியாகியதை தொடர்ந்து வவுணியாவில் கூட்டமொன்றில் பேசிய தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, மேற்படி மூன்று கட்சிகளும் கூட்டாக அறிக்கை வெளியிட்டிருந்ததை விமர்சித்திருந்தார். உண்மையில், தமிழரசு கட்சியின் தன்னிச்சையான செயற்பாடுகளால்தான் ஏனைய கட்சிகள் தனியான அறிக்கைகளை வெளியிட வேண்டியேற்படுகிறது, என்பதே ஏனைய கட்சிகளின் பதிலாக இருக்கின்றது. இன்று தமிழரசு கட்சி அமெரிக்க பிரேரணையை ஆதரித்து அறிக்கைவிடும் முடிவை எடுத்த போது, ஏன் ஏனைவர்களுடன் கலந்துரையாடவில்லை? அவர்களின் கருத்தறிந்து செயற்பட வேண்டுமென்று சிந்திக்கவில்லை?

இலங்கையின் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விசாரணையானது, ஒரு கலப்பு நீதிமன்றம் மூலம்தான் இடம்பெற வேண்டுமென்று ஹ_சைன் பரிந்துரைத்த போது, தமிழரசு கட்சி அதுதான் சரியானது அதனைத்தான் நாங்களும் வரவேற்கிறோம் என்று குறிப்பிட்டது. பின்னர் அந்த யோசனையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்த போது தமிழரசு கட்சி அது தொடர்பில் மௌனம் சாதித்தது. அரசாங்கத்தின் எதிர்ப்பை தொடர்ந்து கலப்பு நீதிமன்றம் என்பதற்கு பதிலாக பொதுநலவாய நாடுகளின் அலுவலகத்தின் மற்றும் ஏனைய வெளிநாட்டு நீதிபதிகளின், வழக்கறிஞர்களின் ஆலோசனை என்னும் புதிய சொற்தொடர் இணைக்கப்பட்ட போது, அதனை சிறிலங்கா அரசாங்கம் அதனை தாம் ஆதரிப்பாக தெரிவித்தது. உடனே தமிழரசு கட்சியும் அதனை ஆதரித்து, அதற்கு விளக்கவுரைகளும் வழங்கியது.

கலப்பு நீதிமன்றம் என்று குறிப்பிட்டால் அது தெற்கிலுள்ள சிங்கள மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்திவிடும், இதனால் இலங்கை நீதித்துறையுடன் தொடர்புடைய பொதுநலவாய நாடுகளை இணைப்பதன் வாயிலாக, இப்படியான சங்கடங்களை தவிர்க்கலாம் என்றவாறு, தமிழசு கட்சி விளக்கமளித்தது. அப்படியான விளக்கமொன்றை சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் கூட வழங்கியிருக்கவில்லை. இந்த விடயங்களை தொகுத்து நோக்கினால், இலங்கை தமிழரசு கட்சி, தமிழ் மக்களின் சார்பில் செயற்படுகின்றதா அல்லது ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைத்திரிபால கூட்டிலான தேசிய அரசாங்கத்திற்கு சேவகம் செய்கின்றதா என்னும் கேள்வி ஒரு சமான்ய தமிழ் குடிமகனுக்குள் ஏற்படுவது இயல்பே.

தமிழசு கட்சியின் அண்மைக்கால செயற்பாடுகளை உற்று நோக்குபவர்கள் மத்தியில் பிறிதொரு சந்தேகமும் எழுகிறது. இது பற்றி தமிழ்த் தேசிய ஆர்வலர்கள் சிலர் இப்பத்தியாளரிடமும் கேட்டிருக்கின்றனர். தமிழசு கட்சியின் செயற்பாடுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்தும் உள் நோக்கம் கொண்டதாக இருக்கலாமா? .இதற்கு பின்னால் ஏதேனும் தென்னிலங்கை சக்திகளின் திரைமறைவு செயற்பாடுகள் இருக்கலாமோ? ஏன் இப்படியான சந்தேகங்கள் எழுகின்றன என்று கேட்டால், அவர்கள் அதற்கு பதிலாக மேலும் சில கேள்விகளை என்னிடம் கேட்கின்றனர்.

இனப்படுகொலை தொடர்பிலும் வலுவாக பேசிவரும் வடக்கு முதலமைச்சர், நீதியசரர் விக்கினேஸ்வரன் தொடர்பில் கூட்டமைப்பின் எந்தவொரு கட்சியும் விவாதிக்கவில்லை மாறாக தமிழரசு கட்சி மட்டுமே அவருக்கு எதிராக தங்களது கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற முற்பட்டது. இத்தனைக்கும் விக்னேஸ்வரன் தமிழரசு கட்சியின் அங்கத்தவரும் அல்ல மாறாக அவர் கூட்டமைப்பிலுள்ள அனைத்து கட்சிகளதும் ஆதரவோடு வடக்கின் முதல்வராக கொண்டுவரப்பட்டவர். மேலும் ஒரு வேளை விக்கினேஸ்வரன் தொடர்பில் பேச வேண்டுமென்றால் கூட, அது தொடர்பில் அனைத்து கட்சிகளினதும் தலைவர்களோடும் கலந்தரையாடப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு நிகழவில்லை. மாறாக, தமிழரசு கட்சியின் தலைவரான மாவை சேனாதியின் தலைமையில், ஒரு சிலர் இணைந்து விக்கினேஸ்வரனுக்கு எதிராக செயற்படுகின்றனர்.

மாவை ஏன் விக்னேஸ்வரனுக்கு எதிராக செயற்படுகின்றார்? இதற்கு பின்னால் இருக்கின்ற திரைமறைவு சக்திகள் யார்? ஏற்கனவே விக்கினேஸ்வனுக்கும், ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் முரண்பாடுகள் இருக்கின்ற சூழலில் ஏன் விக்கினேஸ்வரனுக்கு எதிராக மாவை உள்ளிட்ட தமிழரசு கட்சியினர் செயற்படுகின்றனர்? இப்படியான கேள்விகளை சில தமிழ்த் தேசிய ஆர்வலர்கள் இப்பத்தியாளரிடம் கேட்டனர். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு என்னிடம் பதிலில்லாவிட்டாலும் கூட, இது பதில் தேட வேண்டிய கேள்வி என்பதில் இப்பத்தியாளரிடம் இருகருத்தில்லை.

ஆனால் தமிழரசு கட்சியின் தன்னிச்சையான செயற்பாடுகள் பெரும்பாலும் எதிர்காலத்தில் கூட்டமைப்பிலிருந்து விலகி, தனித்து செல்வதற்கான தயாரிப்பாகவும் இருக்கலாம் என்னும் சந்தேகமும் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகள் மத்தியில் எழுந்திருக்கின்றன. ஒரு வேளை அவ்வாறானதொரு நிலைமை அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலின் போதும் நிகழலாம் என்றும் மேற்படி கட்சிகளின் முக்கியஸ்தர்கள் கருதுகின்றனர். ஆக மொத்தத்தில் தமிழரசு கட்சியின் செயற்பாடுகள் உண்மையிலேயே தமிழ் மக்களின் நலன்களை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படுகிறதா அல்லது தமிழரசு கட்சியிலுள்ள ஒரு சிலரது நலன்களை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படுகிறதா என்னும் கேள்வி, தமிழரசு கட்சிக்குள்ளும் ஒலிக்கத் தொடங்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

நன்றி:
தினக்குரல் புதியபண்பாடு.

About The Author

Related posts