Sunday, February 18, 2018

.

தனிமனிதன், சமூகம், அரசியல்!… ஏலையா க.முருகதாசன்.

தனிமனிதன், சமூகம், அரசியல்!…  ஏலையா க.முருகதாசன்.
ஒன்றிலிருந்து இன்னொன்றாக நீட்சியடைவதுதான் பரிணாமம். காடுகளில் வாழ்ந்த மனித இனம் படிப்படியாக தனக்கொரு தலைவனைத் தேவை கருதி தேர்ந்தெடுத்த போதே அது தனிமனிதனின் தேவைக்கான நிர்வாகக் கட்டமைப்பாக நீட்சி பெற்று  இன்று அரசியல் என்ற ஒற்றைச் சொல்லுக்குள் அடங்கியுள்ளது.
அரசியல் என்றவுடனும் அரசியல் பற்றி பேசுவதும் மக்கள் சமூகத்திற்கு அந்நியமானவை எனப் பலர் நினைத்துக் கொள்கின்றார்கள்.
‘அரசியலா’ வேண்டாம் எனப் பலரிலும் பலர் நினைத்துக் கொண்டு ஒதுங்கிக் கொள்கிறார்கள்.
கோப்பிக்கடையிலிருந்து கோப்பி குடித்துக் கொண்டிருக்கும நண்பர்கள் ஒரு கோப்பிக் கடையின் பெயரைச் சொல்லி அந்தக் கோப்பிக்கடையில் கோப்பி மலிவு இந்தக் கோப்பிக்கடையில் விலை அதிகம் என்கிறார்கள்.இரண்டு கோப்பிக்கடையிலும் உள்ள விலை வித்தியாசத்திற்குள் நுகர்வோர் அரசியல் இருப்பது அறியாது அரசியல் வேண்டாம் வேறு ஏதாவது பேசுவோம் எனச் சொல்லிவிட்டு தவிர்க்க முடிந்தும் தவிர்க்க முடியாது தாங்கள் செய்யும் தொழிற்சாலைகளில் கொடுக்கப்படும் சம்பளங்களின் வித்தியாசங்களை; பற்றிப் பேசுகிறார்கள்.
சம்;பள வித்தியாசங்களுக்கக் காரணம் அந்தந்த தொழிற்சாலைகள் எதிர்நோக்கும் தொழில்சார் அரசியல்தான் என்பதை அவர்கள் அறியாமலிருக்கலாம். வருடத்திற்கொருமுறை நடைபெறும் தமது உற்பத்தி, வருமானம் சம்பந்தப்பட்ட அறிக்கைகளை தொழிலாளர்களுக்கு விளங்கப்படுத்தும் கூட்டங்களில் தமக்கு ஏற்படும் இலாப நட்டங்களுக்கு தொழில்சார் அரசியல்தான் காரணம் என்பதையும் அந்த நாடு எதிர்நோக்கும் பொருளாதார கட்டமைப்புந்தான் காரணம் என்பதை அவர்கள் கூறும் போது இவர்கள் அவதானிக்காமல்கூட இருந்திருக்கலாம்.
அரசியல் என்றால் என்ன என்பதை அதன் முதல் தொடக்கத்திலிருந்து இன்:றுவரை உள்ள ‘உலகமய அரசியல்’ வரை விரிவாக விளங்கப்படுத்துவதானால் அது மிகவும் நீண்டதொரு கட்டுரையாகிவிடும்.
அரசியல் என்பது எங்கிருந்து ஆரம்பிக்கிறது, அது எவ்வாறு சமூகம் சார்ந்து, சமூக அரசியலாகவும் பின்னர் நாடு தழுவிய அந்த நாட்டின் நிர்வாக கட்டமைப்பு அரசியலாகவும்   மாறுவதையும் விளங்கிக் கொள்ள முடிகின்றது.
அரசியல் என்பது தனிமனிதனிலிருந்தே ஆரம்பிக்கிறது.தனிமனிதன் என்பவன் யார் என்ற கேள்வியூடாகவும் இனப்பரம்பல் எவ்வாறு இன்றைய சமகாலம் வரையும் வந்தது என்பதையும் கூர்ந்து கவனித்தால் அரசியலை மிகவும் எளிதாக விளங்கிக் கொள்ள முடியும்.
சமூகம் என்பது ஒவ்வொரு தனிமனித அலகினாலும் ஏற்படும் குழுமமே. சமூகம் இனமாக மாறும் போது அது தனக்கென வாழ்விடத்தை தேடிக் கொண்டு  அது தனது நாடென உரிமை கொண்டாடி வாழும் போது அந்த இனத்தின் தனிமனிதனின் ஒவ்வொரு தேவையையும் நிவர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பின் வடிவமாக ஒரு அதிகாரம் கொண்ட அரசாக மாறுகின்றது.
இந்த அரசு ஒவ்வொரு தனிமனிதனின் பல்வேறுபட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பல அமைச்சுகளை ஏற்படுத்தி அதற்குரிய அமைச்சர்களை நியமிக்கின்றது.
ஒவ்வொரு தனிமனிதனின் தேவையும் உணவு,வீட்டு வசதி,கல்வி,மருத்துவம், போக்குவரத்து எனப் பெரும்பகுதிகளைக் கொண்டதாகவும் அவை ஒவ்வொரு தனிமனிதனின் தேவைக்கான அடிப்படையில் பல கிளைகளாக பல அலகுகளாக பிரிந்து செல்கின்றன.
காடுகளில் திரிந்த மனித இனம் தனக்கெனத் தலைவனைக் கொண்டு பின் அந்த காட்டு மனிதர்களின்; தேடுதலாலும் சிந்தனையாலும் அவனால் சனப்பரம்பலை ஏற்படுத்திக் கொண்ட இடங்களெல்லாம் வசிப்பிடங்களாக, கிராமங்களாக, நகரங்களாக பரிணாமம் பெற்று தனக்கென ஒரு நாட்டை உருவாக்கிக் கொண்டான்.
அரசியல் என்பது மிகவும் எளிமையானது எம் உடலோடு சங்கமித்து இருப்பது.
காடுகளில் வாழ்ந்த மனிதகூட்டம் தனக்கென ஒரு தலைவனை, அவன் விலங்குகளுடன் போராடி தம்மைக் காக்கக்கூடிய பலம் கொண்டவன் எனக் கருதி தமக்குள் ஒருவனைத் தலைவனாகக் கொண்டனர்.
இது காடுகளில் ஆங்காங்கே வாழ்ந்த மனிதகூட்டத்தின் ஒருமித்த தெரிவென்பதற்கப்பாலும் தலைவன் தனது உடல் பலத்தை நிரூபித்துக் காட்டி தானாகவே தலைவனானவர்களும் உண்டு.
இந்நிலை படிப்படியாக நாடு நகரங்கள் என்ற வளர்ச்சியை நோக்கி வளர்ந்த போதே சமநிலையாக குழுக்கள் தோன்றின. இது காட்டு வாழ்க்கையிலும் பார்க்க பாரிய வித்தியாசத்தைக் கொண்டதாக இருந்தன. மனிதனின் சிந்திக்கம் திறன் படிமுறையில் படிமங்களாக முன்னேற முன்னேற பல்வேறு தேவைகளையொட்டி, அத்தேவைகளைப் பூர்த்தி செய்யவென கூட்டமைப்பும் அதற்குத் தேவையான நிர்வாகக் கட்டமைப்பும் தோன்றின.
காட்டில் வாழ்ந்த மனிதனுக்கு அத்தியாவசி தேவையாக முதலிடம் வகித்தது உணவுத் தேவையே. தனது பசியைப் போக்குவதற்காக காய்களை,பழங்களை, கிழங்குகளை உண்ட காட்டு மனிதன் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் வேட்டையாடிய மிருகங்களின் இறைச்சியை உண்ணத் தொடங்கிய போதுதான் அவனின் மூளை சிந்திக்கும் திறனைப் பெற்றது. இது ஆராய்ச்சியாளர்களின் ஆய்வின் முடிவு.
ஒரு மனிதனின் உணவுத் தேவைக்கப்பால் அவனுக்கான பாதுகாப்பிடமும் தனக்குத் தேவையென அவன் எண்ணிய போது வீடு தோன்றியது. வீட்டின் தேவை பூர்த்தியடைந்தவுடன் தனக்கு அடுத்த தேவையை பெருக்கிக் கொண்டான். உடை இன்னும் பல தேவைகளாக ஒரு தனிமனிதனின் தேவை அதிகரித்துக் கொண்டே போனது. அதேயளவு சமாந்தரமாக நிர்வாகக் கட்டமைப்புக்கு ஊடாக தான் வாழும் நகர அபிவிருத்தி நோக்கிச் சிந்திக்கத் தொடங்கினான்.
சிறு சிறு குழுக்கள் அவர்கள் வாழும் நிலங்கள் காலப் போக்கில் கிராமங்களாக நீட்சியடையவும் அதிலிருந்து நாகரித்தின் பரிணாம வளர்ச்சி நகரமாகவும் பின்னர் நகரங்கள் nபுரம் நிலப்பரப்பைக் கொண்ட நாடுகளாக தோற்றம் பெற்றன.
இந்தப் பூமியில் பல்வேறுபட்ட இனக்குழுமங்கள் தங்கள் உடல் வல்லமையாலும் அறிவு வல்லமையாலும் இயல்பாகவும் போராடியம் தமக்கான நாடுகளை உருவாக்கிக் கொண்டனர்.
ஒரு நாட்டின் நிர்வாகம் என்பது தமக்கும் தமது மக்களக்குமிடையிலான தொடர்பானது தாம் கொண்டுள்ள மக்களின் தேவையை பூர்த்தி செய்வதில்தான் தங்கியுள்ளது.
ஒரு  தாயிடமிருந்து பிறக்கும் சிசுவில்  தொடங்கி அச்சிசு பலவயதுப் படிகளைக் கடந்து அதனூடான பருவ மாற்றங்கள் ஊடாக உடல் உள நிலைகளைச் சந்தித்து சந்ததிகளை உற்பத்தி செய்து மூப்படைந்து இறந்து போகும் வரை அந்த மனித உடலுக்குப்  பல தேவைகள் இருக்கின்றன.
ஒவ்வொரு தனிமனிதனும் தனது தேவைகளில் முக்கியமானவையான  உணவு உடை வசிப்பிடம் போன்றவற்றைப்   பூர்த்தி செய்வதில் அவரவர் கவனம் செலுத்திய போது உணவுத் தேவையும் உடைத் தேவையும் பண்டமாற்று முறையில் கையாளப்பட்டன.
அந்த பண்டமாற்று முறை படிபபடையாக இல்லாத போது பணப்பரிமாற்றம் மூலம் பொருட்களை வாங்கவும் விறகவும்;  மனிதகுலம் பழகிக் கொண்டது.
இந்த மக்களின் தேவைக்காக மக்களினால். தோற்றுவிக்கப்படும் ஒரு குழு அரசாங்கம் எனப் பெயர் பெறுகிறது. இந்தக் குழுவே மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அவர்களின் தேவைகளையொட்டி ஒரு கட்டமைப்பை உருவாக்கிக் கொள்ளுகின்றது.
உணவு உடை வசிப்பிடம் என்ற தேவைகளோடு மட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்த மனிதன் தனது தேவைகளை அதிகரிக்கச் செய்த போது அரச நிரவாகமும் அததற்கென்ற தனித்தனியாக தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பதற்காக தனித்தனி பணியாளர்களை நியமித்தது.
காலப்போக்கில் அரசநிர்வாகம் மத்திய அரசு என்கின்ற அதிகார மையமாக வடிவு பெறவும், பணியாளர்கள் அதிகாரம் பொருந்திய அமைச்சர்களாகத் தோற்றம் பெற்றனர்.
ஒரு தனிமனிதன் என்பதை சிசுவிலிருந்து சிசுவின் தேவை என்ன என்பதை பார்ப்போமானால் (1) சிசுவாக்கான உணவு (2) சிசுவுக்கான உடை (3) சிசுவுக்கான மருந்து என இன்ன பிற தேவைகள் அதிகரிக்கத் தொடங்குகின்றன.
இது சிசுதானே என எவரும் அல்லது ஒரு அரசு அக்கறையற்றோ அலட்சியத்துடனோ இருக்க முடியாது. ஒவ்வொரு சிசுவும் படிப்படியாக வளர்நிலை கொண்டு பல பருவங்களைத் தாண்டி நாட்டின் குடிமகனாக உருவாகிவிடுகிறான்.
ஒரு நாட்டினுடைய அதிகார நிர்வாக மையமும் தனிமனிதனும் எந்நேரமும் தொடர்புடையதாகவே இருக்கும். முந்தைய இரண்டு பாகங்களிலும் அரசியல் என்பது வியப்புக்குரியதல்ல சிந்தித்துப் பாரத்தால் அதன் ஆணிவேர் எது என்பது தெளிவாகப் புரியும் என்பது காட்டப்பட்டிருந்தது. சமகாலத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் உலகளாவிய அரசியலைப் பார்த்து மலைக்க வேண்டிய அவசியமே இல்லை.
எனவே,
ஒரு தாயின் வயிற்றிலிருந்து பூமியை வந்தடைந்த சிசுவின் முதல் அறிமுகத்திலேயே அரசியல் ஆரம்பித்து விடுகின்றது. சிசுவுக்கு முதல் அந்தச் சிசுவைப் பெற்ற  பெற்றொர் ஆரம்பத்தின் நீட்சிதானே எனக் கேள்வி எழலாம்.
ஆனால்,
அரசியல் என்பது மிக மிகச் சாதரணமானது எல்லோருக்கும் புரியக்கூடியது என்பதற்காக சிசுவின் பிறப்பிலிருந்து ஆரம்பிக்கிறது என்பதை வலியுறுத்தவே இதனை ஆரம்ப இடமாகக் கொண்டுள்ளேன். ஒரு சிசுவிற்குத் தேவையானவற்றை பெற்றோர் எப்படிப் பெறுகிறார்கள் என்பதைக் கவனிப்போம். சிசுவின் உடல்நலத்திற்கு தேவையான உணவை எங்கிருந்து பெறமுடிகிறது. அந்த உணவானது விசேடமான கடைகளிலிருந்தும் சாதரண கடைகளிலிருந்தும் பெறப்படுகின்றது.
சிசுவிற்கு நோய் ஏற்படும் போது, சிசுவைப் பராமரித்து நோயைக் குணப்படுத்தவதற்கு மருத்துமனை, மருத்துவர்கள் மருந்துகள் தேவைப்படுகின்றன. உணவைப் பெறுகின்ற கடைகள், சிசுவிற்கான உடைகளைப் பெறுகின்ற கடைகள் மருத்துவமனைகள் மருத்துவர்கள் மருந்துகள் என இவை யாவும் ஒரு கட்டமைப்பாக மொத்த விநியோக வியாபாரம் சில்லறை வியாபாரம் என வகுக்கப்பட்டு அந்த ஒழுங்கமைப்பின் கீழ் பாவனையாளர் அல்லது வாங்குவோரைச் சென்றடைகின்றன.
இந்த வாங்குவோரில் இக்கட்டுரைக்காக  எடுத்துக் கொண்ட பெற்றோரும் அடங்குவர்.இனி மேலே குறிப்பிட்ட உணவு உடை மருத்துவம் போன்றவற்றின் அடிப்படைப் பொறுப்பாளர்கள் யார் யார் எனக் கவனித்தால் அது ஒரு நாட்டினுடைய மத்திய அரசின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் உணவு உடை மருத்துவம் என்ற பிரிவிற்கென ஏற்படுத்தப்பட்ட அமைச்சகங்களே  பொறுப்பாகும்.
இந்த அமைச்சங்கள் நேரிடையாகச் சிசுவுடன் தொடர்பு இல்லாவிட்டாலும் , அந்த சிசுவுடன் உற்பத்தியாளர் சந்தைப்படுத்துவோர் விநியோகிப்போர் மொத்த வியாபாரி சில்லறை வியாபாரிகள் என்ற தொடுக்கப்பட்ட இணைப்புக்கூடாக தொடுக்கப்படுகின்றது.
எனக்கும் அரசாங்க நிர்வாகத்திற்குமடையில் எவ்விதமான தொடர்புமில்லை, எனது வாழ்நாள் தேவைகளை அரசாங்கமா பூர்த்தி செய்கின்றது என்ற கேள்வியை எழுப்புவோர் தமது சிந்தனையை, ஒரு பொருளை கையிலெடுத்தவுடன் இந்தப் பொருள் ஒரு உற்பத்திப் பொருள், எது எங்கு உற்பத்தியாக்கப்பட்டிருக்கும், இந்தப் பொருளை வாங்கிய கடைக்கு யார் கொடுத்திருப்பார்கள், இது விநியோகத்திற்கு உட்பட்டதா சந்தைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதா நான் வாழும் நாட்டின் அரசிற்கும் என் கையில் இருக்கும் இந்தப் பொருளுக்கும் என்ன தொடர்பு இருக்கலாம் எனப் பரவவிட்டால், கையில் இருக்கும் பொருள் அரசோடு தொடர்புடையது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
ஒரு சிசு குழந்தையாக, சிறுவனாக,இளைஞனாக, வேலை செய்வோனாக  திருமணம் செய்தவனாக தந்தையாக பெற்றோராக வயதானவனாக பருவம் மாற்றமடையும் ஒவ்வொரு வயதிலும் அரசோடு பின்னிப் பிணைந்தே அவன் வாழ்வு அமைகிறது.
ஒரு மனிதனின் வாழ்நாள் தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்கும் பூர்த்தியாளனாக இருப்பது அரசு என்பதை உணர்தல் முக்கியம்.
அந்த உணர்தல் மூலமாக சிந்தனையை விரிவடையச் செய்வதன் மூலம் உதாரணமாக பெற்றோர் பால்போத்தலில் பாலை ஊட்டும் போதே இந்தப் பால் எப்படி எனக்குக் கிடைத்தது,பாலை சிசுவிற்கு ஊட்டிய கொள்கலனான இந்த போத்தல் எப்படிக் கிடைத்தது என்று சிந்தனையைப் பரவவிட்டால் வாங்கிய கடையிலிருந்து மொத்த வியாபாரி, விநியோகித்தர், சந்தைப்படுத்துவோர்,உற்பத்தியாளர் என தொட்டுத் தொட்டுச் சென்று தொடர் நிலையின் ஆரம்பமாக, இவற்றுக்கு அடிப்படைப் பொறுப்பாளராக இருக்கும் அரசையும் அதற்குரிய அமைச்சரையும் சென்றடையும்.
எனவே ஒவ்வொரு தனிமனிதனும் ஒரு அரசை உருவாக்குவதில் பங்காளனாக இருக்கிறான் என்ற தெளிவு ஆரம்பமாகிறது.
அவன் கையில் வைத்திருக்கும் நெல்மணியை உழவன்தானே கொடுத்தவன் என ஒரு புறம் சிந்தனை ஓடினாலும் அதற்குரிய நிலம், நீர் விதை நெல் பசளை போன்றவை ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்புக்கூடாகவே நெல்மணி பாவனையாளனான ஒரு நாட்டின் குடிமகனை வந்தடைகிறது என்பதை உணரலாரம்
சிசுவை சிறுவனாக்கி, இளைஞனாக்கி, வாழ்வாதாரத்திற்காக அவனை வேலை செய்பவனாக்கி, திருமணம் செய்த தம்பதியராக்கி, பெற்றோராக்கி, வயதானவனாக்கிப் பார்க்கின்ற போது ஒரு அரசிற்கும் அதன் பல்வேறு கிளைகளாக தனிமனிதனை அரவணைத்து நிற்கின்ற அமைச்சகங்களுக்கும் உள்ள கட்டமைப்பை அறிய முடியும்.
ஒரு அரசிற்குக் கீழ் இயங்கும் அமைச்சகங்கள் இவை.
1.உள்ளுராட்சி அமைச்சு.2.போக்குவரத்து அமைச்சு.3நிதி அமைச்சு.4.பொருளாதார அமைச்சு5. தபால் விநியோக அமைச்சு 6.உணவு மற்றும் உடை போன்றவற்றுக்கான அமைச்சு 7.தொழிற்சாலைகளுக்கான அமைச்சு.8.காவல்துறைக்கான அமைச்சு 9.இராணுவ பாதுகாப்பு அமைச்சு 10. சமூக சேவைக்கான அமைச்சு.10. தொழில்சார் அமைச்சு 11. பெண்களுக்கான அமைச்சு.12. இளைஞர் விவகாரத்திற்கான அமைச்சு
மேலே குறிட்ட அமைச்சுக்கள் யாவும் பெரும் பிரிவுகளே. இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பல்வேறு பிரிவுகள் உண்டு. சிசு தொடங்கி வயதாகும் வரை ஒரு மனிதனுக்கும் மேலே கூறிய அமைச்சுக்களுக்கும் என்ன தொடர்பு என்பதை அடுத்த தொடரில் பார்ப்போம்.
ஒரு சிசுவின் தேவைகளை சுகாதர அமைச்சு, உணவு அமைச்சு, ஏற்றுமதி இறக்குமதி மற்றும் பொருள் உற்பத்தி – வணியாபாரம்  போன்ற அமைச்சுக்கள் கவனித்து வருகின்றன.
சுகாதர அமைச்சின் கீழ் மருந்துத் திணைக்களம்,மருத்துவ நிலையத் திணைக்களம்,மருத்துவர்கள் அதில் பணிபுரிபவர்கள்  என அனைவரும் உள்ளடக்கப்படுவார்கள்.நேரடியாக இத்திணைக்களங்கள் ஒரு சிசுவின் தேவைகளோடு தொடர்பினைப் பேணாது.
அந்தந்த அமைச்சுகளின் பிரிவுகளுக்கூடாகவும் அதிகாரிகளுக்கூடாகவும் சிசுவின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன.
சிசுவின் உணவுத் தேவையை உணவு அமைச்சும்,சிசுவின் மருத்துவம்-மருந்துகள் போன்றவற்றை சுகாதார அமைச்சும், சிசுவின் உடை மற்றும் தேவைகளை வியாபார அமைச்சும் கவனித்துக் கொள்கின்றன. ஒவ்வொரு அமைச்சுக்கு கீழும் செயல்களை துரிதப்படுத்துவதற்காக நூற்றுக்கணக்கான பிரிவுகளைக் கொண்டு அவை இயங்குகின்றன.
எனவே ஒரு பூமிக்கு ஒரு சிசுவின் வருகையிலிருந்து, அந்தச் சிசு சிறுவனாக, இளைஞனாக, வாழ்வாதார ஊதியத்திற்காக வேலை செய்பவனாக குடும்பஸ்தனாக இறுதியில் மூப்படைந்து இறக்கும் வரை அமைச்சுகளும் அதற்குப் பொறுப்பான அரசும் தனது நாட்டில் வாழும் பிரஜையின் வாழ்விற்கு தேவையானவற்றை பொறுப்பெடுத்துக் கொள்கின்றது.
ஒரு சிறுவனுக்கு தேவையான கல்வி,உடல்நலம், உடை போன்றவற்றுக்கு அந்தந்த அமைச்சுகளின் பிரிவுகள் பொறுப்பெடுத்துக் கொள்கின்றன. சிறுவனின் பெற்றோர் சிறுவனுக்கு தேவையான அனைத்துக்கும் பணம் செலவழிக்கின்றனர். பணம் செலவழிப்பது என்பது உற்பத்திச் செலவை ஈடுகட்டவும்,அதனூடாகக் கிடைக்கும் வரி மூலம் நாட்டை அபிவிருத்தி செய்யவுமே.
ஒரு மனிதனின் உடல் வளர்நிலையிலும் அறிவின் வளர்நிலையிலும் அந்தந்தப் பருவ நிலைகளின் தேவைகளுக்கான தேவைகளில் பாரிய வேறுபாடுகள் இருக்கின்றன.
சிறுவர்கள்தானே என அரசு அலட்சியம் செய்ய முடியாது. சிறுவர்கள் என்பவர்கள் நாளைய முதிர்ச்சியடைந்த மனிதர்கள்.
முதிர்ச்சி என்பது உடல்சார்ந்ததும் அறிவு சார்ந்ததுமாகும். சிறுவர்களின் தேவை என்ன என்பதை, பெற்றோரின் சிந்தனையை அந்தந்த அமைச்சுக்கள் மூலம் நிவர்த்தி செய்யப்படுகின்றன.
பெற்றோருக்கு சிறுவர்கள் பிள்ளைகள் எனினும் அவர்கள் அரசின் பெறுமதிமிக்க சொத்துக்களாகும்.
பெற்றோருக்கு சிறுவர்களை வளர்த்தெடுக்க தேவையான உணவை, அ , அவர்களுக்கான கல்வியை, அவர்களுக்கான மருத்துவத்தை அந்தந்த அமைச்சுகளின் கீழ் இருக்கும் பல படிநிலைப் பிரிவுகள் மூலம் சென்றடைய வைக்கின்றன அந்தந்த அமைச்சுக்கள்.
கடையில் ஒரு பொருளை வாங்கும் போதும் வாங்கிய பொருளும் கடையும் வியாபர அமைச்சினதோ தொழிற்சாலைகளுக்கு பொறுப்:பான அமைச்சினதோ என்ற இறுதி நிலையாகவே இருக்கும்.
மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அரச நிர்வாகம் தன் நாட்டிற்குள்ளேயே பல பிரிவுகளை ஏற்படுத்தி மக்களுக்கான தனது கடமையைச் செய்கின்றது இந்த கடமைக்கு  நவீன உலகம் கொடுத்த பெயர்தான் அரசியல்.
தனிமனிதனின் தேவைக்காக ஏற்படுத்த அரசியல் நடவடிக்கை குழுத்தன்மையுடையதாக படிமுறையூடாக பரிணாமம் பெறுகின்றது.
ஒரு நாடு தன்னுடைய நாட்டு மக்களுடன் நின்றுவிடாது அயல்நாடுகளுடனும் நட்பைக் கொண்டிருக்கின்ற கட்டாய நிலைக்கு உள்ளாக்கப்படுகின்றது.
மிக எளிமையாகச் சொல்வதானால் அயலவர்களுடன் நட்புக் கொள்ளுதல் ஒற்றுமையாக இருத்தல் என்பதாகும்.
ஒரு நாடு தனது மக்களின் பாதுகாப்பை காவல்துறை கடட்மைப்பை ஏற்படுத்தி மக்களைப் பாதுகாக்கின்றது.
அது போலவே மற்றைய நாடுகளிடமிருந்து தனது நாட்டையும் குடிமக்களையும் பாதுகாப்பதற்காக இராணுவத்தை, ஆகாயப்படையை, கடல் படையை ஏற்படுத்துகின்றது.
அயலவர்களுடன் ஒற்றுமையாகவிருக்கும் நிலை பிறழ் நிலை அடையும் போது  பகைமை ஏற்படுகின்றது.இப்பகைமையானது சண்டை சச்சரவுகளையும் முரண்பாடுகளையும் அயலவர்களுடன் தோற்றுவிப்பது போல அண்டை நாடுகளுடன் வெளிநாட்டுக் கொள்கை பிறழ் நிலை அடையும் போது வெளிப்படையான பகைமையோ பனிப்போர் என்ற பகைமையோ ஏற்படுகின்றது.
இந்தப பகைமையைத் தீர்த்து வைப்பதற்கு முப்படையும்கூட தேவைப்படுகின்ற சூழ்நிலை உருவாகின்றது, நாடுகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தை அல்லது புரிந்துணர்வுப் பேச்சுவார்த்தையை நாடுகள் நடத்திக் கொண்டன அல்லது போரை ஏற்படுத்திக் கொண்டன.
உலகம் தழுவிய நாடுகளுடனான தொடர்பினைக் கொள்வதற்காக வெளிநாடுகளுடனான அரசியல் கோட்பாடுகளை ஒவ்வொரு நாடும் அமைத்துக் கொண்டன.
ஒவ்வொரு நாட்டினதும் அரசியல் கோட்பாடுகளாகட்டும் அந்தந்த நாடுகளுடன் எற்படுத்திக் கொள்ளும் அரசியல் அணுகுமுறையாகட்டும் ஒன்றுக்கொன்று வித்தியாசமானவையாகவே இருக்கும்.
ஒவ்வொரு நாட்டினதும் மக்களின் சமூக பண்பாட்டு அடையாளங்களைப் பொறுத்தேதான் அந்நாடுகள் தமக்கான சட்டங்களை இயற்றுகின்றன.
மற்றைய நாடுகளுடனான தொடர்புகளைப் பேணுவதில் மக்களின் பண்பாடுகளுக்கு ஏற்ப தொடர்புனை ஏற்படுத்திக் கொள்ளுகின்ற நுட்பமான இராஜதந்திர நகர்வுகளையே சில நாடுகள் மேற்கொண்டு வருகின்றன.
கண்டக் குழுமங்களாகவும், பிராந்தியக் குழுமங்களாகவும் அணி சேர்ந்து ஒவ்வொரு நாடும் தத்தமது வெளிநாட்டு அரசியலை பேணுகின்றன.
இன்றைய உலகம் வணிக உலகமாக மாற்றம் பெறு;றுள்ளது. பொருளாதாரக் கட்டமைப்புக்கு ஏற்றுமதி இறக்குமதி என்பது தவிர்க்க இயலாத பொருளாதாரத் தேவையாக மாறியுள்ளது.
இந்நிலையானது உலக நாடுகள் ஒன்றக்கொன்று இயைந்து போக வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.
அணிசேர் நாடுகளாகவும் அணிசேரா நாடுகளாகவும் இருக்கின்ற நிலையில் பகைமை கொண்ட நாடுகளாகவும் பல நாடுகள் இருக்கவே செய்கின்றன.
இந்தப் பகைமையானது முரண்பாடுகளையும் முறுகல் நிலையையும் ஏற்படுத்தி பேர்ருக்கான வழியையும் ஏற்படுத்தி விடுகின்றன.
ஒவ்வொரு நாட்டினதும் காத்திரத்தைக் கணிப்பது அந்ததந்த நாட்டினது உள்ளீடான பொருளாதாரக் கட்டமைப்பேயாகும். நிலம், நீர், கனிவளம், விவசாயம், அறிவார்ந்த சமூகம்,கல்வியின் மேன்மை நிலை,மருத்துவ மேம்பாடு, வறுமையற்ற நிலை, முப்படைகளின் வளம், காவல்துறையின் வளம், துரிதமான அபிவிருத்திகள், விஞ்ஞான நிலைப்பாடுகள், பல்வேறுபட்ட பொருட்களை உற்பத்தி செய்தல், ஏற்றுமதி செய்தல்  என இன்னோரென்ன தகமைகள் ஒரு நாட்டினை உயர்நிலைக்கு உயர்த்தி நிற்கின்றன.
பகைமையும் நட்பும் அந்தந்த நாடுகளின் வெளிநாட்டு அரசியலைப் பொறுத்தே இடம் பெறுகின்றது.
ஒரு கற்பனையாக ஒரு நாட்டில் ஒரு கோடி மக்கள் இருக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். அந்த ஒரு கோடி மக்களின் தேவைகள் அனைத்தையும் செய்து கொடுக்க பல்வேறு அமைச்சுக் கொண்டு இருபத்தைந்து அமைச்சர்கள் இருக்கிறார்கள் என வைத்தக் கொள்வோம்.அந்த நாட்டில் இருப்பதாகச் சொல்லப்பட்ட ஒரு கோடி மக்களையும் அந்த நாட்டில் இருந்து அகற்றினால் மிஞ்சி இருப்பது இருபத்தைந்து அமைச்சர்கள் மட்டுமே. அவர்கள் யாருக்காக? மக்கள் இல்லாத இடத்தில் அவர்களுக்கு என்ன வேலை?.
எனவே ஒரு கோடி மக்கள் என்பது ஒவ்வொரு மனிதன் என்ற தனி அலகேதான். தனி மனிதன் என்ற தனி அலகேதான் ஒரு நாட்டிற்கான காரணகர்த்தாவாகின்றான். இந்த தனி மனிதான் அலகின் தேவைக்கு வைக்கப்பட்ட பொதுப்பெயர்தான் அரசியல் என்ற சொற்பதம். தனிமனிதனே தனது நாட்டின் உள்ளரசியலுக்கும், தன் நாடு கொண்ட வெளிநாட்டு அரசியலுக்கும் தளமாகிறான்.
அரசியல் என்ற பொதுப்பெயருக்குள் பொதியப்பட்டுள்ள பல்வேறு பிரிவுகளுக்குள் பலவாயிரம் பிரிவுகள் உண்டு. அத்தனைக்கும் தளமாக இருப்பவன் தனி மனிதனே.
எனவே தனி மனிதன், சமூகம், அரசியல் என்பது தனிமனிதனைச் சார்ந்தே நிற்கும்.அரசியல் என்பது எளிமையானது, இனிமையானது எல்லோரினதும் உரிமை, எல்லோராலும் பேசப்பட வேண்டியதே. எங்கும் எவரிலும் நீக்கமற நிறைந்து நிற்கின்றது அரசியல்.
(முற்றும்)

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *