Sunday, February 18, 2018

.

கல்…புல்…காகம்? – 3 – – (நாவல்)… …. சங்கர சுப்பிரமணியன்.

கல்…புல்…காகம்? – 3 – – (நாவல்)… …. சங்கர சுப்பிரமணியன்.
அன்று வெள்ளிக்கிழமை. காலை வழக்கம்போல் “ப” வடிவத்தில் அமைக்கப்பட்டிருந்த அப்பள்ளிக் கட்டிடத்தின்
மத்தியில் நடப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருந்தது. அந்த
கொடிக்கம்பத்தின் ஒருபுறம் தலைமை ஆசிரியரும் மறுபுறம் பள்ளியின் மாணவத் தலைவனும் நின்றிருந்தனர்.
அவர்களுக்கு எதிரே மாணவர்கள் வகுப்பு வாரியாக வரிசைவரிசையாக ஒருவர்பின் ஒருவரென நின்றிருந்தனர்.
மாணவத் தலைவன் தன் கையிலிருந்த விசிலை ஊதியதும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலும்
அது முடிந்தபின் இரண்டாவது விசிலைத் தொடர்ந்து கொடி வணக்கப் பாடலும் மாணவர்களால் பாடப்பட்டது.
பின் மாணவத் தலைவன் மூன்றாவது விசிலை ஊதியதும் மாணவர்கள் வரிசையாக நடந்து அவரவர் வகுப்புக்கு
செல்ல ஆசிரியர்களும் ஆசிரயர் அறைக்கு சென்றனர். அப்படி செல்லும்போது விமலா மட்டும் விளையாட்டு
மைதானத்தின் அருகேயிருந்த தன் அறையை நோக்கி சென்றுகொண்டிருந்த மனோவைப் பின் தொடர்ந்தாள்.
இதைப்பார்த்த மற்ற ஆசிரியர்கள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே மனதில் பேசிக்கொள்ள
வயதில் பெரிய சில மாணவமாணவியர் தங்களுக்குள் சிரித்துக் கொண்டார்கள். இதையெல்லாம் கவனித்து
வந்த தமிழாசிரியர் வைரவநாதன் உடன்வந்த இன்னொரு ஆசிரியரிடம்,
“பார்த்தீர்களா பார்த்திபன், காதலில் களவு காண்பது இலக்கிய மரபு என்று சொல்லும் நாம் தமிழ் இலக்கியத்தை
தூக்கிப் பிடிக்கின்றோம். ஆனால் அதே இருவர் காதலிக்க ஆரம்பித்துவிட்டால் ஏதோ தகாத செயலைச்செய்து
விட்டதுபோல் எண்ணத் தொடங்கிவிடுகிறார்கள்” என்று குறைபட்டார்.
“காதலிப்பதில் தவறொன்றுமில்லை நாதன். ஆனால் பாடம் சொல்லித்தர வந்திருக்கும் ஆசிரியர்கள் காதலில்
ஈடுபடுவதைத்தான் ஏற்றுக் கொள்ளமுடிவதில்லை”
“இதில் தவறென்ன இருக்கிறது. ஆசிரியர்கள் காதலிக்கக்கூடாதா? ஒரு ஆசிரியர் இன்னொரு ஆசிரியரை
காதலிப்பது தவறா? ஆசிரியர்கள் தன்னிடம் படிக்க வந்திருக்கும் மாணவர்கள் மீது காதல் கொள்ளவதுதான்
தவறு”
“என்ன சொல்கிறீர்கள் நீங்கள்? அவர்களைப்பார்த்து மாணவர்கள் கெட்டுப் போகமாட்டார்களா?”
“அதெல்லாம் வீணாக ஆசிரியர்கள் தன்னுடன் பணியாற்றும்  மற்ற ஆசிரியர்களைப் பற்றி வம்புபேசுவதற்காக
பயன்படுத்தும் வழிதான். வெளியே எத்தனையோ பேர் காதலிக்கிறார்கள். அதையெல்லாம் பார்த்து கெட்டுப்
போகாத மாணவர்கள் இவர்களைப் பார்த்துத்தான் கெட்டுப் போய்விடுவார்களா? சும்மா போங்க சார்”
“அப்படியென்றால் இவர்கள் காதலிப்பதில் தவறில்லையா?”
“தவறொன்றுமிலை. அவர்கள் கண்ணியமாகவே நடந்து கொள்கிறார்கள். மாணவர்கள் கெட்டு போகும்படி
அவர்கள் நடத்தை இல்லை. ஆண் ஆசிரியர்கள் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்வதில்லையா? ஒருவர்
மற்றவரை கிண்டல் செய்து நகைப்பதில்லையா? அதையே இவர்கள் செய்யும்போது மட்டும் ஏன் வித்தியாசமாக
பார்க்கிறீர்கள்? அப்படியே அவர்கள் காதலித்தாலும் காதலித்து விட்டு போகட்டுமே. அதனால் நமக்கு என்ன
நடந்து விடப்போகிறது?”
இவர்கள் இப்படிப் பேசிக்கொண்டிருக்க தன்னைப்பின் தொடர்ந்து வரும் விமலாவை பார்த்த்தும் மனோ
நிற்கவும் அருகில் சென்றவள் என்ன நாம் நேற்று பேசியது நினைவிருக்கிறதா என்றாள். ஏன் நினைவில்லாமல்
எல்லாம் நன்றாகவே நினைவிருக்கிறது. இன்று இரவே அம்மாவைப் பார்க்க மதுரை செல்கிறேன். திங்கள்
கிழமை பள்ளிக்கு வரும்போது நல்ல செய்தியுடன்தான் வருவேன் என்றான். நல்லது. நானும் அதைத்தான்
சொல்லவந்தேன். இன்றிரவு நானும் என் பெற்றோரிடம் இதைப்பற்றி பேசப்போகிறேன். திங்கள் கிழமை
நானும் உங்களுக்கு நல்ல செய்தி சொல்வேன் என்று சொல்லிவிட்டு திரும்பி அவள் பாடம் எடுக்க வேண்டிய
வகுப்பறை சென்றாள். 
வெள்ளிக்கிழமை என்றால் பள்ளியில் படிக்கும் மாணவர்கள்தான் குதுகூலம் அடைவார்கள். ஆனால் அந்த
குதுகூலம் இன்று மனோவைத் தொற்றிக்கொண்டது. மதிய உணவுக்குப் பிறகு அவன் கண்கள் தொடர்ந்து
மணிக்கட்டை கொஞ்ச நேரத்திற்கொருமுறை விடாது பார்த்து வந்ததால் கண்கள் இரண்டும் மிகவும்
சோர்வடைந்து கனக்கத் தொடங்கினன. எதற்கும் ஒரு அளவு இருக்கிறது. அது மணி பார்ப்பதற்கும் பொருந்தும்.
ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை மணிக்கட்டில் கட்டியிருக்கும் கைக்கடிகாரத்தைப் பார்த்தபடியே இருந்தால்
கண்கள் சோர்வடையாமல் வேறென்ன செய்யும்? பள்ளி எப்போது விடும் என்ற ஆர்வமே அதற்கு காரணம்.
ஒருவழியாக மின்சார மாணி பெரிதாக ஒலித்து பள்ளி நேரம் முடிந்துவிட்டதை அறிவித்தது. மணி ஒலித்ததுதான்
தாமதம் வில்லில் இருந்து பாயும் அம்பு போல் விமலாவிடம்கூட எதுவும் சொல்லாமல் பள்ளியை விட்டு
வெளியேறினான். தான் தங்கியிருக்கும் அறைக்கு வந்து கைகால் முகம் கழுவிக்கொண்டு வேறு உடையணிந்து
பயணப்பெட்டியில் வேண்டிய உடைகளை அள்ளித் திணித்து பெட்டியை மூடினான். வெளியே வந்து வேகவேகமாய்
கதவை மூடியவன் பூட்டை வைத்து பூட்டி சரியாக பூட்டியிருக்கிறோமா என்று இழுத்துப் பார்த்து சரிசெய்து
கொண்டான்.
(தொடரும்)

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *