Sunday, February 18, 2018

.

பரிசோதனை….! (சிறுகதை) — } லதானந்த்.

பரிசோதனை….!  (சிறுகதை) — }  லதானந்த்.

கடந்த சில மாதங்களாகவே மாதப்பனுக்கு அந்த நெருடல் இருந்துவருகிறது. துளிகூட விகல்பம் இல்லாமல் போய்க்கொண்டிருந்த அவனது மணவாழ்க்கையில்தான் அந்த சந்தேகக் கோடு. சில சமயம் நினைத்துப்பார்த்தால் வெட்கமாகக்கூட இருந்தது அவனுக்கு. தான் நீலாவதியைச் சந்தேகப்படுவதை அவள் உணர்ந்தால் எவ்வளவு வேதனைப்படுவாள் என்றும் தவிப்பாக இருந்தது. அதே சமயம் தான் நினைப்பது உண்மையாக இருந்துவிட்டால்… இப்போது நீலாவதியின் நினைப்பே கசந்தது மாதப்பனுக்கு.

இரண்டு மாதமாகப் படுத்த படுக்கையில் இருக்கும் மாதப்பனுக்குப் பழைய பசுமையான ஞாபகங்களும், சமீபத்தைய கசப்புகளும் மாறி மாறி வந்து போயின.

சரியாக இரண்டு வருடம் முன்பு இணையத்தில் அறிமுகமானவள்தான் நீலாவதி. மாதப்பனுக்கும் அவளுக்கும் எண்ணங்கள் பல விதத்திலும் ஒரே அலைவாரிசையில் இருந்தன. மரபுக் கவிதை, தீவிர

இலக்கியம், நவீன சினிமா என்று அவர்களை ஒரே சரத்தில் பல மலர்கள் தொடுத்தன.

ஓராண்டு கணிப்பொறியே தூதானது. சந்திக்க ஒரு நாள் குறித்தனர். கோவை வனக் கல்லூரியில் நடைபெற்ற வன உயிரின வாரவிழா நிகழ்ச்சியில் இருவரும் கலந்துகொண்டனர். நேரில் பார்த்த அந்த முதல் நிமிடம்… அடடா ஓ! இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொள்ளவே இல்லை. மணிக்கணக்கில் இணையத்தில் கதைத்த நிமிடங்கள் என்னதான் ஆயின?

அன்னபூர்ணா உணவகத்தில் அவளுக்குப் பிடித்த பாசந்தியை வரவழைத்து ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டே உண்டு மகிழ்ந்தனர். பின்னர் சந்திப்புகள் தொடர்ந்ததும், இரு வீட்டார் எதிர்ப்பையும் மீறித் திருமணம் செய்துகொண்டதும் தனிக் கதை.

தனியார் நிறுவனத்தில் மாதப்பனும், தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றில் நீலாவதியும் பணிபுரிந்தனர். கோவை சுந்தரா

புரத்தில் எளிமையான வீடு. போக்குவரத்துக்கு இரு சக்கரவாகனம் என நிம்மதியாகத்தான் போய்க்கொண்டிருந்தது வாழ்க்கை – உதகைக்குப் போன வரைக்கும்.

உதகையில் காட்டிலாகா அதிகாரியாகப் பணிபுரியும் ஆனந்த், மாதப்பனுடன் கல்லூரியில் படித்தவர். அவரது அழைப்புக்கிணங்கத் தங்கள் முதல் சுற்றுலாவை அங்கே ஆரம்பித்தனர் மாதப்பனும் நீலாவதியும்.

அற்புதமான பருவநிலை; ஓங்கி உயர்ந்த மலைகள்; மலைகளில் இருந்து உருக்கிய வெள்ளி வழிவதைப்போல சின்னச் சின்ன நீரூற்றுகள்; வன ஓய்வில்லத்தின் கம்பீரமான பழமை; காட்டுப் பூக்களின் புது வித வாசம்… என்று மனதை வேறு சூழலுக்குக்கு அழைத்துச் சென்ற அந்த சுகானுபத்தில் மூழ்கியிருந்தனர் தம்பதியினர்.

“நீலா! இந்த மனோரம்மியமான வேளையில் நான் ஒண்ணு கேக்கட்டுமா?”

“கேளுங்க மாது”

“என்கிட்ட எப்பவும் இருக்க வேண்டிய குணம்னு நீ என்ன எதிர்பார்க்கிற?”

நீலாவதியின் முகம் அந்த மாலை வெயில் நேரத்தில் அசாத்திய ஒளியோடு விளங்கியதைப்போலத் தெரிந்தது மாதப்பனுக்கு. பலவிதமான உணர்ச்சிக் கலவைகளால் அவள் முகம் சிவந்து போனது.

“சொல்லு நீலா. ஏன் பேசாமல் இருக்கிற?”

நீலாவதி சகஜ நிலைக்குத் திரும்பினாள்.

“சொல்றேன் மாது. எந்த சந்தர்ப்பத்திலும் என்னை சந்தேகப் பட்டுடாதீங்க. இதைச் சொல்றதுக்கு ரெண்டு காரணம் இருக்குது. முதலாவதாக எங்க அப்பா, என்னோட அம்மாவை இன்னிக்கு வரைக்கும் சந்தேகப் பட்டுகிட்டே இருப்பாரு. அடிக்கடி அவங்களுக்குள்ள சண்டை இதனாலயே வரும். எனக்குத் தெரியாதுன்னு நினைச்சுகிட்டிருப்பாங்க. நானும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்க மாட்டேன். அது என் மனசில ஆழமாப் பதிஞ்சிட்டுது. அதனால கல்யாணமே பண்ணிக்கக்கூடாதுன்னுகூட நினைச்சிருக்கேன். ஆனாலும் உங்ககிட்ட

மாட்டிகிட்டேன்.” இப்போது நீலாவதின் பழைய சிரிப்பு அவள் முகத்தில் குடியேறியிருந்தது.

“இன்னொண்ணும் சொல்லணும். ஒரு முறை வாட்ஸப்பில பேசும்போது, ‘என்னை மாதிரியே உனக்கு ரொம்ப ஃப்ரண்ட்ஸ் இருக்காங்களா?’னு கேட்டீங்கல்ல… அப்பவே உங்களைத் தவிர்த்திடணும்னு நினைச்சேன். ஆனால் ’யதார்த்தமாத்தான் கேட்டேன்’னு நீங்க விளக்கம் கொடுத்ததும்தான் அந்த எண்ணத்தை மாத்திக்கிட்டேன்”.

நீலாவதி இப்போது கூடுதல் அழகாகத் தோன்றினாள். சராசரிப் பெண்களுக்கும் கூடுதலான உயரம். சின்னக் கண்கள்தான். ஆனால் ஜீவன் ததும்பும் விழிகள். உதடுகளும் சிறியவைதான். ஆனால் பல் வரிசையும், ஒரு சிங்கப்பல்லும் கூடுதல் கவர்ச்சியை அவளுக்குத் தூவிவிட்டிருந்தன. பணைத்த மார்பகங்களும் சிறுத்த இடையும் மிடுக்கான பின்புறமும் மாதப்பனைக் கிறங்கடித்தன.

இறுக அணைத்துக்கொண்டவன், “உன்னை எந்த நிலையிலும் சந்தேகப்படவேமாட்டேன்” என்று முணுமுணுத்தான்.

ஆனால் சந்தேகப்படும் அப்படிப்பட்ட சூழ்நிலை இவ்வளவு சீக்கிரம் வரும் என அவன் நினைக்கவேயில்லை.

ஊட்டி சுற்றுலாவின்போது மசினகுடி, மோயார் எனப் பல இடங்களிலும் வனங்களின் வினோதங்களைச் சுவைத்து மகிழ்ந்தார்கள். கடைசி நாள், அவலாஞ்சி என்ற அடர் வனப் பகுதிக்குச் சென்று கும்மாளமாகப் பொழுதைக் கழித்தார்கள். அப்போது ஓய்வில்லத்தின் தண்ணீர்க் குழாயில் இருந்து வந்த குளிர் நீர் மாதப்பன் மேனியில் பட்டதும் சொல்லொணா வேதனையை அடைந்தான். ஏறக்குறைய மயக்கமே வந்த நிலைக்குப் போய்விட்டான் மாதப்பன். கைகால்கள் இயங்கவில்லை. என்ன பிரச்னை என்று சொல்லவும் தெரியவில்லை. மனம் நினைப்பதை வாய் பேச இயலவில்லை. நீலாவதியும் என்னவோ விபரீதம் என்பதைப் புரிந்துகொண்டாள். உடனடியாக ஊட்டி திரும்பி, மருத்துவமனை ஒன்றில் பரிசோதித்தார்கள். ஓரிரு நாட்கள் மருத்துவமனையில் இருந்தும் எந்த

முன்னேற்றமும் இல்லாத நிலையில் கோவையிலேயே இருக்கும் பெரிய மருத்துவமனையில் சேர்த்தார்கள். பலவிதமான பரிசோதனைகளுக்குப் பிறகு நீலாவதியைத் தனியே அழைத்தார் மருத்துவர்.

“மேடம். சாருக்கு வந்திருக்கிறது ரொம்ப அபூர்வமான கோளாறு. Aroxysmal Cold Hemoglobinuria அப்படின்னு மருத்துவ மொழியில் சொல்லுவோம். குளிரோ அல்லது குளிர்ந்த நீரோ ரத்தத்தில் இருக்கும் சிவப்பணுக்களைச் செயல்படாமல் ஆக்கிவிடும். ரொம்ப அரிதான நோய் இது. திடீரென்று எப்ப வேண்டுமானாலும் தாக்கும். நீண்ட கால ஓய்வு தேவை. தொடந்ர்து மருந்து எடுத்துக்கொள்ளணும். ஓரளவு கட்டுக்குள் வெச்சிருக்க முடியும். ஆனா மருந்துச் செலவு அதிகமாகும். எந்தக் காரணத்தைக்கொண்டும் குளிர்ந்த தண்ணீர் மேல படாம பாத்துக்குங்க.”

நீலாவதியின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. இருந்தாலும் கட்டுப்படுத்திக்கொண்டாள்.

வீட்டுக்கு திரும்பினார்கள். மாதப்பன் பலவீனமாக இருந்ததால் படுகையிலேயே இருந்தான். நீலாவதி மட்டும் வேலைக்குச் சென்று வந்தாள்.

கொஞ்ச நாட்களாக அவள் வீடு திரும்பும் நேரங்கள் மாறின. சில நாட்கள் இரவில் நேரம் கழித்து வீடு திரும்பலானாள். சில விடுமுறை தினங்களிலும் மிகு ஒப்பனையோடு வெளியில் சென்று வரலானாள்.

மாதப்பனின் சிகிச்சைக்குத் தங்கு தடையின்றிச் செலவு செய்வதில் எந்தக் குறையும் வைக்கவில்லை.

ஆனால் எப்போதும் கண் நோக்கிப் பேசும் அவள், மாதப்பனின் முகம் நோக்குவதையே தவிர்த்தாள். இதெல்லாம்கூட மாதப்பனுக்கு எந்த ஐயத்தையும் ஏறபடுத்தவில்லை. ஒரு நாள், “தன்னார்வத் தொண்டு நிறுவனம் சார்பில், மூன்று நாட்கள் கொல்லிமலையில் முகாம் இருப்பதாகச் சென்றபோதுதான் சந்தேக வித்து மாதப்பன் மன நிலத்தில் ஊன்றியது.

நீலாவதியின் செல்ஃபோனை மறந்துவைத்துவிட்டுப் போய்விட்டதைக் கவனித்த மாதப்பன், நீலாவதியின்

அலுவலகத்தின் தொலைபேசி எண்ணுக்குத் தொடர்புகொண்டான். இதுதான் முதல் முறை நீலாவதியின் அலுவலக எண்ணுக்குப் பேசுவது.

“வாலன்டியர் நீலாவதி இருக்காங்களா?” என்று கேட்டதுமே, “சார்! அவங்க மூணு நாள் லீவு” என்று பதில் வந்தது.

மீண்டும் தொடர்புகொண்டு, “கொல்லிமலை டூர் யாரெல்லாம் போயிருக்கிறார்கள்?” என்று விசாரித்தான் மாதப்பன்.

“கொல்லிமலையா? டூரா? அப்படி ஏதும் புரோகிராம் இல்லையே? நீங்க யாருங்க?” என்று ஆச்சரிமாய்க் கேட்ட குரலுக்குப் பதில் ஏதும் சொல்லாமல் தொலைபேசி இணைப்பைத் துண்டித்தான் மாதப்பன்.

’டூர் போவதாக ஏன் பொய் சொல்ல வேண்டும்? ஏன் வேளைகெட்ட வேளையில் வெளியில் செல்கிறாள்? தன்னுடைய மருத்துவச் செலவுக்குத் தாராளமாக செலவு செய்ய எங்கிருந்து நீலாவதிக்குப் பணம் வருகிறது?’ கேள்விகள் மாதப்பனைக் குடைந்தன.

தன்னுடைய உடலநலத்தின் பொருட்டேயானாலும் பாதை மாறுகிறாளா நீலாவதி? பல்லிடுக்கில் சிக்கிய பருக்கையாய் அந்த நினைவு உறுத்திக்கொண்டேயிருந்தது.

மூன்று நாள் கழித்து நீலாவதி வந்திருந்தாள். முகம் வாட்டமாகவும், பொலிவு குன்றியும் இருப்பதாக மாதப்பனுக்குப் பட்டது.

“டூரெல்லாம் எப்படி இருந்துச்சு?”

”நீலாவதி எங்கோ பார்த்துக்கொண்டு பதில் சொன்னாள். “ ம்ம்ம். வழக்கம்போலத்தான். குழிவளவு ஆதிவாசிக் குடியிருப்பில்தான் தங்கியிருந்தோம். சுகாதார முறைகளைக் கற்றுக்கொடுத்தோம்.”

சொல்லிவிட்டு விறுவிறுவென்று கிளம்பி எங்கோ சென்றுவிட்டாள் நீலாவதி.

மெல்ல அவளது கைப்பையைத் திறந்து பார்த்தான் மாதப்பன்.

“மூன்று நாட்களுக்கு முன்னர் மும்பைக்குச் சென்று, இன்று காலை திரும்பிவந்த விமானப் பயணச்சீட்டுகள் இருந்தன. கூடவே 50,000 ரூபாய் பணமும்!

மாதப்பனுக்கு உடல் வேதனையையும் தாண்டி உள்ளம் கொதித்தது.

‘மும்பையில் அவளுக்கு என்ன வேலை? என்னிடம் ஏன் மறைக்கணும்? கைப்பையில் கட்டுக்கட்டாக அவ்வளவு பணம் எப்படி வந்தது?’

ஏற்கனவே பலவீனப்பட்டுப்போயிருந்த உடல், மன வேதனையில் இன்னும் மோசமானது. ஒன்றும் தோன்றாமல் மீண்டும் படுக்கையில் வீழ்ந்தான்.

இதை முழுவதும் தெரிந்துகொள்ளாமல் எதுவும் நீலாவிடம் கேட்கக்கூடாது என்று முடிவு செய்தான் மாதப்பன். அதன்படியே எதுவும் கேட்கவும் இல்லை. ஆனால் தனது கண்காணிப்பைத் தீவிரப்படுத்தினான்.

இடையிடையே நீலாதிக்கும் உடல் நிலை சரியில்லாமல் போனது. மூன்று மாதத்தில் மிகவும் இளைத்துவிட்டாள். இரண்டுமுறை மிக அதிகச் செலவு செய்து மாதப்பனின்

உடல் ரத்தம் முழுவதையும் மாற்றுவதற்கும் ஏற்பாடு செய்திருந்தாள்.

மெல்ல அவனது உடல்நிலையில் முன்னேற்றம் தெரிந்தது. எல்லாம் தொடர்ந்து அளிக்கப்பட்டுவரும் உயர் சிகிச்சையின் விளைவுதான்.

“மாது! சீக்கிரம் நீங்க நார்மலாயிடுவீங்க. ஆனா எந்தக் காரணம்கொண்டும் மழையில் நனைஞ்சிடாதீங்க. பச்சைத் தண்ணி சொட்டுக்கூட மேல பட்டிடக்கூடாது. அப்புறம் இத்தனை நாள் பட்ட பாடெல்லாம் வீணாயிடும்” செல்லமாக மாதப்பனின் கன்னத்தில் தட்டிவிட்டு வெளியே புறப்பட்டாள் நீலாவதி.

மனதின் ஓரத்தில் இருந்த கறை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போனது மாதப்பனுக்கு.

ஒரு நாள். பேரூர் தாண்டி இருக்கும் போலாம்பட்டி அருகே நண்பர் மருதநாயகத்தைப் பார்ப்பதற்காகப் பேருந்தில் போய்க்கொண்டிருந்தான் மாதப்பன். வழி நெடுகிலும் புதிது புதிதாக பிரமாண்டமான கட்டிடங்கள் முளைத்திருந்தன;

கல்விச் சாலைகள் பெருகியிருந்தன; கார்பொரேட் மருத்துவமனைகளும் அநேகம்!

அப்போதுதான் வெளியே பார்த்த மாதப்பனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

நீலாவதி ஒரு நீக்ரோ இளைஞனிடம் என்னவோ கோபமாகப் பேசிக்கொண்டிருந்தாள். பேருந்து அந்த இடத்துக்குப் பக்கத்தில் ஒரு நிறுத்தத்தில் நின்றிருந்தது. அந்த நீக்ரோ இளைஞன் தனது கைப்பையில் இருந்து கற்றையாக்கப் பணம் எடுத்துக்கொடுத்ததைப் பார்த்தான் மாதப்பன். நீலாவதி திருப்தியுடன் அதைப் பெற்றுக்கொண்டு, கால் டாக்சி ஒன்றில் ஏறிப் பறந்தாள்.

மாதப்பனுக்கு நெஞ்சு கனத்தது. வீட்டுக்குத் திரும்பினான், இப்போதும் நீலாவதியை ஏதும் கேட்கத் தோன்றவில்லை. காரணம் தனது உடல்நிலைக்காகத்தானே நீலாவதி இப்படிச் செய்கிறாள் என்ற எண்ணம் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் நீலாவதியின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு உருக்குலைந்து போயிருந்ததும்தான்.

அடுத்த நாள்…

நீலாவதி படுக்கையில் இருந்து எழுந்திரிக்கவில்லை. அவளது தலைமாட்டில் ஒரு கடிதம் இருந்தது.

“அன்பு மாது! கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்காக இன்றுவரை எதுவுமே என்னைக் கேட்கவில்லை. வேண்டுமென்றே செல்ஃபோனை வைத்துவிட்டு மும்பை சென்றேன். அலுவலகத்தில் விசாரித்த நீங்கள் என்னிடம் கேட்கவில்லை. போலாம்பட்டிப் பேருந்தில் இருந்து நீங்கள் பார்த்ததையும் கவனித்தேன். அப்போதும் நீங்கள் ஏதும் என்னைக் கேட்கவில்லை. நானே சொல்லியிருக்கலாம். ஆனால் சொல்லாததற்கு ஒரு காரணம் இருந்தது. இப்போது சொல்கிறேன். தாங்கள் தயாரிக்கும் சில மருந்துகளை மனிதர்கள்மீது பரிசோதிக்கத் தடை இருப்பது பல மருந்துக் கம்பெனிகளுக்கு இடையூறாக இருக்கிறது. ஆனால் அந்தப் பரிசோதனைக்கு ஆளாகும் நபர்களுக்கு பணம் தரவும் தயாராக இருந்தார்கள். எனக்கு நீங்கள் உயிரோடு இருக்க வேண்டும் மாது. அதற்காகத்தான் இந்த விபரீதப் பரிசோதனைக்கு ஒத்துக்கொண்டேன். அதிதீவிர நோய்க் கிருமிகளை எனது உடலில் செலுத்தி, மாற்று மருந்துகளையும் சாப்பிட்டு வந்தேன். அவ்வப்போது

இதற்காகப் பெருந் தொகையும் கிடைத்தது. மருந்துக் கம்பெனியே என் உயிரை இன்ஷூர் செய்தும் உள்ளார்கள். அதன் பாலிசி என் பெட்டியில் இருக்கிறது. சமீபத்தில் நான் எடுத்துக்கொண்ட மருந்து அதி வீரியமானது. எனக்கு எப்போது வேண்டுமானாலும் மரணம் சம்பவிக்கலாம். எனவே நள்ளிரவில் இதை எழுதிவைக்கிறேன். நாளை நான் கண்விழித்தால் இதைக் கிழித்துவிடுவேன். இல்லையென்றால் காப்பீட்டுத் தொகையைப் பெற்று உங்கள் சிகிச்சையைத் தொடருங்கள். நீங்கள் பூரண குணம் அடையப்போவது உறுதி. ஆனால் குளிர்ந்த நீர் படாமல் பார்த்துக்கொள்ளுங்கள் மாது.

என்றும் உங்கள்,

நீலா”

நீலம் பாரித்த நீலாவதியின் சடலத்தைப் பார்த்துக் குலுங்கிக் குலுங்கி அழுதான் மாதப்பன்.

நேராகச் சென்று ஃப்ரிட்ஜைத் திறந்து அங்கிருந்த ஐந்து பாட்டில்களில் வைக்கப்பட்டிருந்த குளிர்ந்த நீரைத் தன்

தலையில் கொட்டிக்கொண்டு நீலாவதியின் அருகிலேயே தள்ளாடி வந்து மயங்கி வீழ்ந்தான்.

************

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *