Monday, February 19, 2018

.

கல்…புல்…காகம்? – 2 – (நாவல்)… …. சங்கர சுப்பிரமணியன்.

கல்…புல்…காகம்? – 2 – (நாவல்)… …. சங்கர சுப்பிரமணியன்.
“என்ன? பழைய பாடல் நினைவு வருகிறதா? அப்படி என்ன அந்த பழையபாடல்?”
“சொல்கிறேன், கேள். என்னருகே நீயிருந்தால் இயற்கையெல்லாம் சுழலுவதேன்? உன்னருகே நான்
இருந்தால் உலகமெல்லாம் மாறுவதேன்?” என்று பாடவே ஆரம்பித்து விட்டான்
“சரி, சரி போதும். விட்டால் கையணைத்த வேலையிலே கண்கள் ரெண்டும் மயங்குவதேன் என்று
பாடி மின்சரம் பாய்வதுபோல் மேனியெல்லாம் நடுங்க வைத்து விடுவீர்கள்” என்று சொல்லி சிரித்தாள்.
“சிரித்தால் தங்கப்பதுமை…அடடா…அடடா… என்ன புதுமை  என்று மனதில் நினைத்துகொண்டே,
“சிரித்தது போதும். வா போகலாம். இன்னும் கொஞ்சநேரத்தில் காவலாளி வந்து விடுவான் அறையை
பூட்டுவதற்கு” என்றான்.
உடற்பயிற்சி ஆசிரியரின் அறையானது பள்ளியின் பெரிய கட்டிடத்திலிருந்து சற்று தொலைவில்
விளையாட்டு மைதானத்தின் அருகில் இருந்தது. ஆதலால் காவலாளி விளயாட்டு மைதானத்தின்
அருகே இருக்கும் உடற்பயிற்சி ஆசிரியரின் அறையை முதலில் மூடிவிட்டு அதன்பின் பெரிய கட்டிடம்
சென்று அங்கே மூடவேண்டிய அறைகளை மூடுவதை வாடிக்கையாக செய்துவந்தான். ஆதலால் அவன்
வந்து அவர்களை அனுப்புவதைவிட தாமே சென்றுவிடுவது மரியாதையாய் இருக்கும் என்பதால் அவளை
புறப்படும்படி சொன்னான். அவர்கள் அப்படி புறப்பட்டு செல்லும்போது ஏதாவது ஒரு இடத்தில் இருந்து
பேசவேண்டியதைப் பேசலாம் என்பதால் ஒரு ரெஸ்டாரண்டைத் தேர்வு செய்து அங்கே சென்று அமர்ந்தார்கள்.
அவர்கள் அமர்ந்ததும் உபசரிப்பவர் வந்து என்ன சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டார். மனோ விமலாவை
பார்த்து என்ன சாப்பிடுகிறாய் என்று கேட்டதும் ரவாதோசை வேண்டுமென்றாள். தனக்கும் அதையே
கொண்டுவரும்படி இரண்டு ரவாதோசை கொண்டுவரச் சொன்னான்.
உபசரிப்பவர் சென்றதும் பேசவேண்டும் என்று சொன்னாயே இப்போது சொல் என்றான். மனோ எனக்கு
வயது இருபத்தியைந்து ஆகிவிட்டது என்பது உனக்கே தெரியும். திருமணத்தில் ஈடுபாடு இல்லாதிருந்த
நான் உன்னைச் சந்தித்தபின் தான் நம் நட்பு காதலாக மாறியது. காதலித்த நாம் திருமணம் செய்து
கொள்ளலாம் என்றும் முடிவு செய்தோம் என்றாள். ஆம் முடிவு செய்தோம் அதில் எந்த மாற்றமும்
இல்லையே என்றான். முடிவில் மாற்றமில்லைதான். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளகவே என்
பெற்றொர் உன்னுடன் படித்த பெண்களுக்கெல்லாம் திருமணமாகி குழந்தை குட்டி என்று வாழ்கிறார்கள்.
நீ இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி ஒற்றைக் குரங்கு மாதிரி இருப்பாய் என்று அலுத்துக் கொண்டார்கள்.
கடந்த சில தினங்களாக அவர்கள் திரும்பவும் என் திருமணப்பேச்சை எடுத்ததும் என் மனதில்
என்னையறியாமல் ஒரு மகிழ்ச்சி பொங்க அதை என்முகம் அவர்களுக்கு காட்டிக் கொடுத்துவிட்டது.
அந்த நொடியில் அப்படியொரு ஆனந்தத்தை அவர்கள் முகத்தில் என்னால் காணமுடிந்தது. எப்படியோ
நாம் திருமணம் செய்து கொள்வது என்பதை உறுதிசெய்து விட்டோம். ஆதலால் நாமும் வாழ்க்கையை
தொடங்கலாமே. அதைப்பற்றி பேசவே உன்னை நான் அழைத்தேன் என்றாள்.
அதற்குள் அவர்கள் சொல்லிய ரவாதோசை வந்தது. தன் தட்டில் இருந்த தோசையில் ஒருதுண்டை
பிய்த்து எடுத்து அதை சட்னியில் தோய்த்து மனோவின் வாயில் ஊட்ட அதைப்போன்றே மனோவும்
தோசையில் ஒருதுண்டைப் பிய்த்து சாம்பாரில்முக்கி அவளுக்கு ஊட்டியவாறே;
“சரி, சொல். இனி நம்காதலை நம் பெற்றோரிடம் சொல்லி அவர்களின் சம்மதத்தை பெறுவோம். சரிதானே”
என்றான்.
“சரிதான். எனக்கொன்றும் பிரச்சினை இல்லை. முதலில் காதலுக்கு என் பெற்றோர் ஓருவேளை தடை
போடலாம். அதன்பின் இதுவரை திருமணத்துக்கு செவிசாய்க்காது இருந்த நான் திரும்பவும் திருமணத்துக்கு
ஒப்புக்கொள்ளாது போய்விடுவேனோ என்ற பயத்தில் மனம்மாறி ஒப்புக்கொள்வார்கள் என எண்ணுகிறேன்”
“அப்படியென்றால் பாதி பிரச்சினை முடிந்தமாதிரிதான்”
“மீதி பிரச்சினையை நீ எப்படி சமாளித்து முடிக்கப்போகிறாய்?”
என்பிரச்சினை நீ அறிந்தது தானே. என்மாமன் மகள் மாலதியைப்பற்றி உன்னிடம் ஏற்கனவே சொல்லி
இருக்கிறேன். எனக்கு அவளைத் திருமணம் செய்ய விருப்பம் இல்லாவிட்டாலும் என் அம்மா எப்படியாவது
தன் அண்ணன் மகளை எனக்கு திருமணம் செய்துவைத்து விடவேண்டும் என்பதில் உறுதியாக
இருக்கிறார்கள் என்றான். இதை எப்படி சமாளிக்கப் போகிறாய்? என்று கேட்டவள் ஒருவேளை உன்தாய்
சம்மதிக்காவிட்டால் என்னை கைவிட்டு விடுவாயா என்றாள். நிச்சயம் உன்னை விட்டுவிட மாட்டேன்.
என்னை நீ நம்பலாம். இப்போதிருந்தே அதற்கான முயற்சியில் நாம் இருவரும் ஈடுபடவேண்டும். என்றான்.
ஆவிபறக்க அவர்களின் முன் மேசையில் இருந்த காபியை  குடித்தவர்கள் அங்கிருந்து புறப்பட்டார்கள்.
ரெஸ்டரெண்டிலிருந்து வெளிவந்ததும் அவரவர் திசையில் திரும்பி வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாலும்
மனம்மட்டும் சிறகடித்துப் பறந்து அவரவர் வீட்டில் இதை எப்படி தெரியப்படுத்தப் போகிறோம் அப்படி
தெரியப் படுத்தும்போது எப்படியெல்லாம் பிரச்சினை தோன்றும் அதை எப்படி சமாளித்து பெற்றோரிடம்
சம்மதத்தைப் பெறுவது என்பதையே சிந்தித்துக் கொண்டிருந்தது.
(தொடரும்)

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *