Monday, February 19, 2018

.

எடப்பாடியை வீழ்த்துவதில் தினகரன் தோற்றுவருவதாக அவரது ஆதரவாளர்களிடமே முணுமுணுப்புகள் அதிகரித்து வருகின்றன!

எடப்பாடியை வீழ்த்துவதில் தினகரன் தோற்றுவருவதாக அவரது ஆதரவாளர்களிடமே முணுமுணுப்புகள் அதிகரித்து வருகின்றன!
எடப்பாடியை வீழ்த்துவதில் தினகரன் தோற்றுவருவதாக அவரது ஆதரவாளர்களிடமே முணுமுணுப்புகள் அதிகரித்து வருகின்றன. கட்சியைக் கைப்பற்றுவதில் சறுக்கிவிட்டார் என்கிற குற்றச்சாட்டும் வேகமாக எதிரொலிக்கிறது.
ஸ்லீப்பர் செல்களாக இருந்த அமைச்சர்கள் தரப்பில் நாம் பேசியபோது, “”மதுரையில் தினகரன்  நடத்திய கூட்டத்துக்கு, ஸ்லீப்பர் செல்களாக இருந்த அமைச்சர்கள்தான் ஆட்களையும் வாகனங்களையும் கணிசமான நிதிஉதவியையும் செய்தனர். இதில் எல்லாவகையிலும் அதிகமாக செய்தது அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. இப்படிப்பட்ட  நிலையில், ஓ.பி.எஸ்.சை கட்சியில் இணைக்கச் சொல்லியும் அதற்குத் தோதாக சசிகலா-தினகரனுக்கு எதிராக தீர்மானம் போடவேண்டுமெனவும் எடப்பாடிக்கு நெருக்கடியைத் தந்தது டெல்லி. இதனையறிந்து எடப்பாடியை அமைச்சர்கள் சந்தித்து கோபம் காட்ட… டென்ஷனானார் எடப்பாடி.
அப்போ… “இதோ பாருங்க… அவர்களுக்கு எதிரா செயல்படணும்னு எனக்கென்ன ஆசையா? விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரெய்டில், அங்கு சிக்கிய டைரியிலிருக்கும் குறிப்புகளை வைத்து என்னை உட்பட 120 பேர்ல ஃபைல் ரெடி பண்ணியிருக்கு டெல்லி. எல்லா அமைச்சர்களின் பெயர்களும் இருக்கு. என்னையே அரஸ்ட் பண்ணுவோம்ங்கிறாங்க. என்னை அரெஸ்ட் பண்ணிட்டா உங்களையெல்லாம் விட்டுடுவாங்களா? அந்தளவுக்கு டெல்லியில போட்டு வைத்திருக்கிறார் ஓ.பி.எஸ். இதெல்லாம் தெரியாம ஆளாளுக்கு குதிச்சா எப்படி?  டெல்லியை சமாதானப்படுத்துங்கன்னு தினகரன் சொல்றார். நாங்களும் முயற்சி செய்துட்டு, “ஆறு மாசம் டைம் கொடுங்க; எல்லாத்தையும் சரி பண்ணிடலாம்’னு சொன்னேன். ஆனா, “ஒரு வாரத்துல முடி… ஒரே வாரத்துல முடி’ன்னு  தினகரன் அவசரப்படுத்தினா எப்படி முடிக்க முடியும்? “எனக்கு எதிரா டெல்லி எடுத்த நடவடிக்கையை சரிசெய்யவே 4 மாசம் ஆச்சு. அதனால பொறுமையா இருங்க’ன்னு சொன்னா  கேட்கமாட்டேங்கிறாரு. “டெல்லியை நீங்களே ஆஃப் பண்ணுங்க’ன்னு சொன்னாலும் ஏத்துக்கமாட்டேங்கிறாரு தினகரன். நீங்க போய் வலியுறுத்துங்க. நம்ம குடுமி அவங்ககிட்டே இருக்கிற வரையிலும் தலையை இப்படியும் அப்படியும் ஆட்டித்தான் ஆக வேண்டியிருக்கு” என ஒரே போடாகப்போட்டார் எடப்பாடி.
ஸ்லீப்பர் செல்களான  அமைச்சர்கள்  இதனை தினகரனிடம் சொல்லியும் அவர் தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை. அமைச்சர்களுக்கு அதில் வருத்தம். அப்படிப்பட்ட சமயத்தில்தான் ராஜேந்திரபாலாஜியிடமிருந்து மா.செ. பதவியை பறித்து எம்.எல்.ஏ. சுப்பிரமணியனிடம் தருகிறார் தினகரன். இதில் ராஜேந்திரபாலாஜிக்கு செமகடுப்பு. அதேபோல, அமைச்சர்களிடமிருந்த பதவிகளைப் பறித்தும், அந்த இடத்தில் புதிதாக வேறு நபர்களை நியமித்தும் அறிவிப்பை வெளியிட… ஒட்டுமொத்த அமைச்சர்களிடமும் அதிருப்தி அதிகரிக்கத் துவங்கியது.  அதனால்தான், பொதுக்குழுவில் சசிகலாவை நீக்கியதற்கு அமைச்சர்கள் எதிர்ப்பு காட்டவில்லை.
தனக்கு அதிகாரமிருப்பதாக அமைச்சர்கள் உள்ளிட்ட சீனியர்கள் தொடங்கி பலரையும் கட்சியிலிருந்து நீக்கியும் சேர்த்தும் தினகரன் நாள்தோறும் அறிவித்தது யாருக்குமே பிடிக்கவில்லை. எடப்பாடியிடமிருந்தாலும் தினகரன் ஆதரவாளர்களாக செயல்பட்ட ஸ்லீப்பர் செல்கள், தினகரன் ஆதரவு நிலையிலிருந்து மாறினார்கள். இது, தினகரனுக்கு விழுந்த பெரிய அடி. கட்சியைத் தனது பிடியில் வைத்திருக்க தினகரன் நினைத்திருந்தால், சசிகலா சிறைக்கு சென்றதிலிருந்து தினமும் தலைமைக்கழகம் வந்து கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு,  திகாரிலிருந்து வந்ததும் “2 மாசம் டைம் தருகிறேன்; அதற்குள் இணைப்பை நடத்த வேண்டும்’ என கொடுத்த இடைவெளி தினகரனுக்கு எதிராகத் திரும்பியது. இதுதான் முதல் தவறு” என்று சுட்டிக்காட்டினார்கள்.

மேலும் நாம் விசாரித்தபோது, “”தினகரனின் மனமறிந்து ஜால்ரா போடும் கூட்டத்துக்குத்தான் முக்கியத்துவம் தருகிறாரே தவிர, தவறுகளைச் சுட்டிக்காட்டும் நபர்களை எட்டிக்காயாக பார்க்கிறார். அவரது வளர்ச்சியில் அக்கறைகொண்ட உண்மையான நபர்கள் பலர் இருந்தும், டெல்லி பிரதிநிதி பதவியில் தளவாய்சுந்தரத்தை நியமித்தார். தளவாயின் உதவியாளரும் அவரது வரவு-செலவுகளை கவனித்துக்கொள்பவருமான லஷ்மிநாராயணன், எடப்பாடிக்கும் நெருக்கமானவர். தான்  எடுக்கும் பல ரகசிய முடிவுகள், திட்டமிடும் ஆலோசனைகள், நிதி விவகாரங்கள் அனைத்தையும் லஷ்மிநாராயணனிடமும் தளவாயிடமும் விவாதிப்பார் தினகரன். அவைகள் அனைத்தும் எடப்பாடிக்கு கிடைத்துவிடும். அதன்படி தினகரனின் மூவ்களை அறிந்து அதற்கேற்ப செக் வைத்தபடியே இருந்தார் எடப்பாடி.  தினகரன் நம்பிய தளவாயும் லஷ்மியும் இப்போ எடப்பாடியின் ஆதரவாளர்கள்.
அதேபோல, இப்போது தினகரனுக்கு மிகநெருக்கமாக இருக்கிறார் முன்னாள் அமைச்சர் செந்தமிழன். தென்சென்னை (கி) மா.செ.வாகவும், தேர்தல் பிரிவு செயலாளராகவும் இவரை நியமித்துள்ளார். வன்னியர் சமூகத்துக்கு முக்கியத்துவம் தருவதற்காக அவரை நியமித்திருப்பதாக சொல்கிறார் தினகரன். ஆனால், செந்தமிழன் வன்னியர் அல்லங்கிறது தினகரனுக்கு தெரியுமா?  முன்னாள் கவுன்சிலரும் வட்டச்செயலாளருமான ஏ.பழனி, செந்தமிழனின் வலதுகரம். சென்னை கார்ப்பரேசனில் ஹெல்த் கமிட்டியிலும் இருந்தார் பழனி. இப்போ எடப்பாடிக்கும் சில முக்கிய அமைச்சர்களுக்கும் காண்ட்ராக்ட் விசயத்தில் பழனிதான் முக்கியமானவர். பழனி மூலமாக அரசாங்கத்தில் நடக்கவேண்டிய காரியங்களை சாதித்துக்கொள்கிறார் செந்தமிழன்.  தினகரனின் மூவ்கள் இப்போ பழனி மூலமாக எடப்பாடிக்கு கிடைக்கிறது.  இதெல்லாம் தினகரனுக்குத் தெரியுமா?
கடந்த சட்டமன்றத் தேர்தலில் சைதை தொகுதியில் பொன்னையனை நிறுத்திய ஜெயலலிதா, அவரது வெற்றிக்காக 4 கோடியே 60 லட்சம் ரூபாயை செந்தமிழனிடம் கொடுத்தார். ஆனாலும் பொன்னையனை செந்தமிழனால் ஜெயிக்க வைக்க முடியவில்லை. செந்தமிழன் பாகத்திலேயே 49 வாக்குகள் அ.தி.மு.க.வுக்கு மைனஸாக விழுந்தன. தோல்விக்குப் பிறகு ஜெயலலிதாவை சந்தித்த பொன்னையன், “தேர்தல் செலவுக்கு நீங்கள் கொடுத்ததை செந்தமிழன் முழுசா செலவு செய்திருந்தால் ஜெயிச்சிருக்கலாம்’னு  சொல்ல…  “தப்பா சொல்றீங்க பொன்னையன், அவர் ஒரு பைசா கூட செலவு செய்யலைன்னு உளவுத்துறை ரிப்போர்ட் தந்திருக்கு’ன்னு ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். அப்படிப்பட்டவருக்குத்தான்  தேர்தல் பிரிவு செயலாளர் பதவியை தந்திருக்கிறார் தினகரன். சசிகலா நீக்கத்தைக் கண்டித்து வேளச்சேரி ப.செ. சரவணன், எடப்பாடி-ஓ.பி.எஸ். கொடும்பாவியை எரித்தார். மாவட்ட நிர்வாகிகள் பலரும் அதில் பங்குகொள்ள மா.செ.வான செந்தமிழன், எடப்பாடிக்குத் தெரிந்தால் வருத்தப்படுவார்ங்கிறதுனால, “இதற்கும் எனக்கும் சம்மந்தமில்லை’ என்பதுபோல 200 அடி தள்ளி தூரமாக நின்றுகொண்டார்.
அதேபோல, முன்னாள் கொறடா திருச்சி மனோகரனை மா.செ.வாகவும் அமைப்பு செயலாளராகவும் நியமித்திருக்கிறார் தினகரன். ஒருவருக்கே இரண்டு முக்கிய பதவிகளை தரவேண்டிய அவசியமென்ன? வேலூர் மா.செ. பதவி எம்.எல்.ஏ. பார்த்திபனுக்கும், அமைப்புச் செயலாளர் பதவி  அவரது அப்பா கோபாலுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. முக்கிய பதவிகளை ஒரே குடும்பத்திடம் கொடுக்கலாமா? இதனால், தினகரனை தூக்கிப் பிடித்த அ.தி.மு.க. நிர்வாகிகள், எடப்பாடிக்கு ஜே. .போடத் துவங்கிவிட்டனர்.
இந்தநிலையில், தினகரனின் மா.செ.க்களிடம், “நாங்கள் சொல்கிற நபர்களுக்கு பதவி கொடுங்கள்’ என டாக்டர் வெங்கடேஷ், இவரது மாமனார் பண்ணைவயல் பாஸ்கர், திவாகரன், திவாகரனின் மகன் ஜெய்ஆனந்த் ஆகியோர் டார்ச்சர் கொடுத்து வருகிறார்கள். இதனால், ஒவ்வொரு மாவட்டத்திலும்  கொந்தளிப்புகள் அதிகரித்துள்ளன. தினகரனின் கட்சி நடவடிக்கைகள் இப்படி இருப்பதால்தான்  அமைச்சர்கள் உள்ளிட்ட சீனியர்களிடம் அவருக்கான ஆதரவு குறைந்துவருகிறது. இதேநிலை நீடித்தால் அவரை நம்பியிருக்கும் மிச்சசொச்ச நபர்களும் பறந்துவிடுவார்கள். அதற்கேற்ப தூண்டில் வீசியபடியிருக்கிறார் எடப்பாடி.
“அ.தி.மு.க.வை, முக்குலத்தோர் சமூகம்தான் பாதுகாக்கிறது’ என சொல்லிச் சொல்லியே முக்குலத்தோர்களை மட்டுமே வளர்த்துவிட்டனர். ஆனா, இன்னைக்கு இவர்களுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களெல்லாம்  முக்குலத்தோர்கள்தான். அம்மையப்பனை சுத்திச் சுத்தி வந்த பிள்ளையாருக்கு பழம் கிடைத்தது. உண்மையாக உலகத்தை வலம் வந்த முருகனுக்கு அல்வா கிடைத்தது. அதேபோலதான் உண்மையானவர்களையும், உழைப்பவர்களையும் தினகரன் மதிப்பதில்லை. அவரது மனதை குளிரவைக்கும் ஜால்ரா கூட்டத்திற்கு மட்டுமே மதிப்பு கிடைப்பதால், அரசியலில் தினகரன் தோற்றுக்கொண்டிருக்கிறார்” என்று விரிவாக தங்களது குமுறல்களைக் கொட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
குற்றச்சாட்டுகள் குறித்து செந்தமிழனிடம் கேட்டபோது, “”நான் மா.செ.வாக இருந்த சமயத்தில் தென்சென்னைக்கு உட்பட்ட 8 தொகுதிகளில் 7-ல் அ.தி.மு.க.வை ஜெயிக்க வைத்தேன். அதனால்தான் 2015-ல் என்னை மீண்டும் மா.செ.வாக்கினார் ஜெயலலிதா. 2016 தேர்தலில் வேட்பாளராக இருந்த பொன்னையனிடம்தான் பணம் கொடுக்கப்பட்டது. என்னிடம் யாரும் தரவில்லை. சைதை தொகுதியில் கணிசமாக இருக்கும் அரசு ஊழியர்களிடத்தில் எஸ்மா, டெஸ்மா சட்டத்தின் மூலம் நம்மை பழிவாங்கியவர் பொன்னையன்தான்ங்கிற கோபம் இருந்தது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சைதை தொகுதியை அன்றைக்கு மேயராக இருந்த சைதை துரைசாமி கண்டுகொள்ளவில்லை. இவைகளால்தான் பொன்னையன் தோற்றார். சமீபத்தில் நடந்த வன்னியர் பெருமகனார் ராமசாமி படையாச்சியாரின் நினைவுநாளில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் தினகரன். அதற்கு காரணம் நான். அன்றைக்கு வந்த வன்னியர் சமூகத்தினர் என்னைப் பாராட்டி மகிழ்ந்தது நான் வன்னியர் என்பதற்கு அத்தாட்சி. பழனி என்பவருக்கும் எனக்கும் சம்மந்தமில்லை. என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை. என் வளர்ச்சியை பொறுக்க முடியாத துரோகிகள்தான் எனக்கு எதிரான வதந்திகளை பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்” என்கிறார் மிகஅழுத்தமாக!
-இரா.இளையசெல்வன்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *