Monday, February 19, 2018

.

என்பார்வையில் சொல்லவேண்டியதை மறைக்காத “சொல்லவேண்டிய கதைகள்”

என்பார்வையில் சொல்லவேண்டியதை மறைக்காத “சொல்லவேண்டிய கதைகள்”
வறுமையென்பது கொடியது. அதிலும் இளமையில் வறுமை மிகவும் கொடியது.
வாழ்க்கையில் பலர் வறுமையை சந்தித்திருக்க மாட்டார்கள். அப்படி சந்தித்து
இருந்தாலும் இளமையில் வறுமையை சந்தித்திருப்பார்களா என்பது தெரியாது.
ஒருவேளை இளமையில் வறுமையை சந்தித்திருந்தாலும் அவர்கள் வாழ்வில்
வளம்பெற்றபின் அவர்கள் இளமையில் அனுபவித்த வறுமையின் கொடுமையை
வெளியில் சொல்வார்களா என்பதும் நமக்கு தெரியாது. அப்படி ஒருவரைப்பற்றி
நான் தெரிந்ததும் மிகவும் வியப்படைந்தேன்.
ஒரு கவிஞர் தனது இளம்வயதில் வாழ்வு தேடி சென்னை வந்தார். எவ்வளவு
முயன்றும் வாழ்வில் முன்னேறத்தைக் காணமுடியாமல் வறுமை வாட்டி வதைத்தது.
தற்கொலைக்கு முயன்றவேளை ஏதோ ஒன்று தடுக்க தற்கொலை முயற்சியை
கைவிட்டார். பின் அவருக்கு ஒருவர் கைகொடுத்து உதவினார். வறுமையை வென்று
வாழ்க்கையில் எட்டமுடியா உயர்த்தை தொட்டு சாதனைகள் படைத்தார்.
அவருக்கு பாராட்டுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மக்கள் கடல் அலையென
வந்திருந்தனர். கூட்டத்தில் எல்லோரும் அவரைப் பாராட்டி வாழ்த்தினார்கள். அவர்
பேசும் நேரமும் வந்தது. அப்போது அப்பெரிய கூட்டத்தில் தான் இளமையில்
அனுபவித்த வறுமையைப் பற்றி வெளிப்படையாக பேசினார். வறுமையின் உச்சத்தில்
தற்கொலை செய்து கொள்ள மெரினா கடற்கரை சென்றதையும் அப்போது அவர்
காதில் ஒரு திரைப்படப் பாடல் விழுந்ததைப்பற்றியும் சொன்னார். அப்பாடல்
“மயக்கமா கலக்கமா… மனதிலே குழப்பமா…வாழ்க்கையில் நடுக்கமா…” என்ற பாடல்
தான். அவருக்கு கைகொடுத்து உதவியவர் வேறு யாருமல்ல. எம்.எஸ்.விஸ்வநாதன்
அவர்கள்தான். பின் எம்.எஸ்.விஸ்வநாதனைப்பற்றி குறிப்பிடுகைகையில் அவர்
எனக்கு போட்ட பிச்சைதான் இந்த வாழ்க்கை என்று உண்மையை கொஞ்சமும்
தயக்கமின்றி சொன்னார். எத்தனை பேருக்கு இந்த மாதிரி சொல்லும் துணிவு வரும்.
இப்படி சொன்னவர் வேறு யாருமல்ல. அவர்தான் பெருங்கவி. வாலி.
அதுபோன்ற ஒரு துணிவை ஒருவரிடம் நான் சமீபத்தில் வாசித்த ஒரு புத்தகத்தின்
ஊடாக காணநேர்ந்தது. அப்புத்தகமே ரஸஞானி திரு. முருகபூபதி அவர்கள் எழுதி
சமீபத்தில்வெளியிட்ட “சொல்ல வேண்டிய கதைகள்” என்ற அனுபவங்களின் தொகுப்பு.
அந்த துணிச்சல்காரர் வேறு யாருமல்ல. அதுவும் திரு. முருகபூபதி அவர்களே.  அவர்
கடந்து வந்த பாதை பஞ்சு மெத்தையல்ல முற்படுக்கை என்பதை அந்நூலை வாசிக்கும்
போதே தெரியவருகிறது.
“போலீஸ்காரன் மகள்” என்ற தலைப்பின்கீழ் அவர் தன்தாயை “போலீஸ்காரன் மகள்”
என்று குறிப்பிட்டிருப்பது அவர் குடும்பத்தினரின் நகைச்சுவைஉணர்வுக்கும் அவரின்
தாய்வழி தாத்தாவின் கண்டிப்புக்கும் எடுத்துக்காட்டாக நிற்கிறது. அவருக்கு அறுவை
சிகிச்சை நடந்ததையும் அச்சமயம் அவரின் தாய் இலங்கையில் மறைந்ததையும் தாயின்
முகத்தை கடைசியாக ஒருதடவை பார்க்கமுடியாமல் போனதற்காக வருந்தியதையும்
படிக்கும்போது நெஞ்சைப் பிசைந்தது.
அடுத்ததாக “குலதெய்வம்” என்ற அனுபவத்தொகுப்பின் கீழ் “செய்யும் தொழிலே தெய்வம்
அதில் திறமைதான் நம் செல்வம்” என்ற தாரகமந்திரத்தின் வெளிப்பாடு தெரிகிறது.
இதில்தான் அவர் இளமையின் வறுமையைச் சொல்லியிருப்பார். அவர் அதில் அந்த
வறுமையின் கொடுமையை விவரித்திருக்கும் விதம் என் கண்களை குளமாக்கின.
எனக்கும் இதுபோல் இளமையில் கொடிய வறுமையை அனுபவிக்கும் நிலைமை வந்தது.
இதைப்பற்றி நான் “மெல்லினம்” இதழில் எழுதியிருந்த சிறுகதையில் எழுதியிருக்கிறேன்.
இளமையில் வறுமை எத்தகைய கொடியது என்பதை நான் முற்றாக உணர்ந்ததினால்
அவரின் எழுத்து என்னுள் பெரிய தாக்கத்தையே ஏற்படுத்தியது.
வெகு நாட்களுக்கு பிறகு நான் வாசித்த நூல்களில் இந்த “சொல்ல வேண்டிய கதைகள்”
கற்பனைக் கலப்பின்றி யதார்த்தத்தைப் பேசியதால் என்னுள் இந்நூல் ஒரு தாக்கத்தை
ஏற்படுத்தியது என்றால் அது மிகையாகாது.
-சங்கர சுப்பிரமணியன்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *