Sunday, February 18, 2018

.

உங்கள் ஓட்டு யாருக்கு?… (சிறுகதை) — } சங்கர சுப்பிரமணியன். மெல்பேண் ..

உங்கள் ஓட்டு யாருக்கு?…  (சிறுகதை) — } சங்கர சுப்பிரமணியன். மெல்பேண் ..
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று கனியன் பூங்குன்றனார் சொன்னதின் பொருளை
வேறுவிதமாக புரிந்ததாலே என்னவோ நம்மவர்கள் இந்தியத்தமிழர், இலங்கைத்தமிழர்,
மலேசியத்தமிழர், சிங்கப்பூர் தமிழர் என்றெல்லாம் தம்மை அடையாளப்படுத்தி பெருமை
அடைகின்றனர். இந்த பண்பாட்டில் வந்த இந்தியத்தமிழரான சதாசிவம் டாண்டினாங்கில்
தனது வீட்டில் சன் டிவியில் ஓடிக்கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் மெய்மறந்து
இருந்தார். அழைப்புமணி காதில் ஈயத்தைக்காய்ச்சி ஊற்றியது போல் விழ எரிச்சலுடன்
எழுந்துசென்று கதவைத்திறக்கவும் அங்கே அவரது நண்பர் மூர்த்தி நின்று கொண்டிருந்ததை
கண்டதும் அப்படியே முகத்தை மாற்றி புன்முறுவலுடன்,
“அடடே! மூர்த்தியா வாப்பா, வா! எங்கப்பா போய்த்தொலைஞ்சே? ரெம்பநாளாய் ஆளைக்
காணோம்”
“அது ஒன்னுமில்லடா. பிக்பாஸ் வந்ததிலிருந்து அதோடு ஐக்கியமாயிட்டேன். அவ்வளவுதான்”
“வாரே வா! உனக்கும் அந்த தொற்றுநோய் பற்றிக்கொண்டதா?”
“ஏண்டா அப்படிச்சொல்ற! கமல் நல்ல நல்ல கருத்துக்களையெல்லாம் சொல்வது உனக்கு
தெரியலையா?”
ஆமா சொல்றாரு சொல்றாரு என்று சொன்னபடியே மூர்த்தியை வீட்டுக்குள் அழைத்துச்சென்று
இருக்கையில் அமரச்சொல்லிவிட்டு குடிக்க காபி கொண்டுவருவதற்காக அடுக்களைக்கு
சென்றவனிடம் அவனது மனைவியையும் மக்களையும் எங்கே எனக்கேட்டான் மூர்த்தி. மனைவி
கோவிலுக்கு போயிருப்பதாகவும் மகனும் மகளும் அவர்களது நண்பனொருவன் பிறந்தநாள்
பார்ட்டிக்கு சென்றிருப்பதாகச் சொன்னவன் தான் மனைவியுடன் கோவிலுக்கு செல்லாததற்கு
காரணம் உடல் சோர்வுதான் என்றும் அதனால் ஓய்வு எடுத்துக் கொண்டுடிருப்பதாகவும்
சொன்னான். உடனே அதுவும் வசதியாகப் போய்விட்டது இல்லாவிட்டால் நான் பேசவந்ததை
வெளிப்படையாக பேசமுடியாது. சும்மாவே உன்மனைவி என்னிடம் அண்ணே இவரையும்
உங்களைப்போல் சாமியாவது பூதமாவது என்று கேட்கும்படி மாற்றிவிடாதீர்கள் என்று என்னிடம்
கோரிக்கை விட்டபடியே இருப்பவள் இன்று நான் சொல்லவந்ததை கேட்டால் எப்படி நடந்து
கொள்வார்களோ தெரியாது என்றான். அப்படி எதைப்பற்றி பேசவந்தாய் என்று கேட்ட சதாவிடம்
தற்போது பேசப்பட்டு வரும் ஓரினத்திருமணம் சரியா தவறா என்பதை பற்றித்தான் என்றான்
மூர்த்தி. இதைப்பற்றி என்னடா பேசவேண்டும். அது முறையற்றது மற்றும் இயற்கைக்கு
புறம்பானது. பறவைகளும் மிருகங்களும் கூட இயற்கைக்கு புறம்பாக நடந்துகொள்ளாதபோது
ஆறறிவு படைத்த மனித இனம் இதற்கு துணைபோகலாமா என்று பொரிந்து தள்ளினான். அவன்
அப்படி பேசத்தொடங்கியதும்,
“இரு, இரு. உண்மையிலேயேதான் நீ இதை சொல்கிறாயா? நம்பமுடியலையே” என்றான் மூர்த்தி.
“முறையற்றதை தவறு என்றுதானே சொல்லவேண்டும். இதில் உனக்கு என்ன சந்தேகம்?”
“சந்தேகம் தான். ஏனென்றால் நீ பெரிய கடவுள் பக்தன் ஆயிற்றே எங்கே ஓரினத்திருமணத்தை
ஆதரிப்பாயோ என்று எதிர்பார்த்தேன்” என்றான் மூர்த்தி.
“டேய், அடங்குறியா? கடவுள் பக்திக்கும் ஆணும் ஆணும் சேர்ந்து வாழ்வதற்கும் என்னடா
சம்பந்தம்?”
“என்னடா சொல்ற நீ? தெரிந்துதான் பேசுறியா அல்ல தெரியாம பேசறியான்னு ஒன்றுமே
புரியலடா”
என்று சொன்ன மூர்த்தியிடம் ஐயா சாமி எல்லாம் தெரிஞ்சவரே சொல்ல வருவதை கொஞ்சம்
தெளிவா சொல்லு என்றான். அதற்கு மூர்த்தி சொல்கிறேன் என்று சொல்லி விபரமாக சொல்ல
ஆரம்பித்தான்.  இந்து மதத்தில் கடவுளரே இந்த ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார்கள் என்று
சொல்லி சிவனும் திருமாலும் சேர்ந்து தோன்றியவரே அய்யப்பன் என்று புரணங்கள் சொல்கிறது
என்றான். அதுமட்டுமா திருமாலும் நாரதரும் சேர்ந்து அறுபது குழந்தைகளைப் பெற்றுக்கொண்டதாகவும்
சொல்லப் படுகிறது. மகாபாரதப் போரில் பாண்டவர்கள் வெற்றிபெற நரபலி கொடுக்க நேர்ந்தது.
அப்போது அர்ச்சுணனுக்கும் உலுப்பி என்ற நாகநாட்டின் இளவரசிக்கும் பிறந்த அரவான் தானாக
முன்வந்து நரபலிக்கு சம்மதம் சொல்கிறான். ஆனால் அவனுக்கோ திருமணம் ஆகவில்லை.
ஆதலால் நரபலிக்கு முன் தனக்கு திருமணம் ஆகவேண்டும் என்ற கோரிக்கை வைக்கவே
திருமால் பெண்ணாகமாறி அரவானின் ஆசையை தீர்த்து வைத்ததாகவும் சொல்லப்படுகிறது.
அதன்பின் அரவான் நரபலி கொடுக்கப்படுகிறான். இதைத்தான் தமிழ்நாட்டிலுள்ள கூவகம் என்ற
ஊரில் கூத்தாண்டவர் கோவிலில் திருவிழாவாக கொண்டாடுகிறார்கள் என்றான். இப்படி நம்
மதத்திலேயே ஓரினச்சேர்க்கைக்கு எடுத்துக்காட்டு இருக்கும்போது உண்மையான மதநம்பிக்கையும்
கடவுள் பக்தியும் இருக்கும் நீ இதை ஆதரிக்க வேண்டாமா? மாறாக முரண்பாடு என்கிறாயே
அதனால்தான் சொல்வது நீதானா சந்தேகமாய் இருக்கிறது என்றான். மூர்த்தி இவ்வாறு சொல்லவும்
என்ன பதில் சொல்வதென்று சொல்லமுடியாமல் சிறிது தடுமாறியவன்,
“அதுசரி. அப்படி என்றால் மதநம்பிக்கையோ கடவுள் நம்பிக்கையோ கிடையாது என்று சொல்லிக்
கொண்டு திரியும் நீ ஓரினத்திருமணத்தை எதிர்க்கிறாயா?” என்றான்.
“என்னடா கேட்கிறாய். யாரைப்பார்த்து என்ன கேட்கிறாய்? நான் ஒரு பகுத்தறிவாளன். இயற்கையை
இறைவனாய் வணங்குபவன். இயற்கைக்கு முரணான ஓரினத்திருமணத்தை நான் எவ்வாறு ஆதரிக்க
முடியும்?” என்று பதில் சொன்னான் மூர்த்தி.
நண்பர்கள் விவாதித்துக் கொண்டிருக்கும்போது அழைப்புமணி அடிக்கவும் கோவிலுக்கு சென்றிருந்த
மனைவிதான் திரும்பி வைத்திருப்பாள் என்று சொல்லியபடியே கதவை திறக்கச்சென்ற நண்பனைப்
பின் தொடர்ந்த மூர்த்தி தனக்கும் நேரமாகி விட்டது வீட்டுக்கு செல்லவேண்டும் என்று  சொல்லியபடியே
விடைபெற்றான்.
-சங்கர சுப்பிரமணியன்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *