Sunday, January 21, 2018

.
Breaking News

தாய் மடி..! (சிறுகதை) — } அண்டணூர் சுரா. … புதுக்கோட்டை மாவட்டம்.

தாய் மடி..! (சிறுகதை) — } அண்டணூர் சுரா. … புதுக்கோட்டை மாவட்டம்.

வீட்டு வாசலில் நின்ற ஒரு புளியமரத்தில் ஆந்தை ஒன்று அலறப்போய் ‘திடுக்’கென விழித்திருந்தார் அம்மா. அவர் ஆழ்ந்து தூங்கி ஒரு வாரமாகிவிட்டிருந்தது. அவர் மீதான என் கவலை அவர் சாப்பிடாததை விடவும் தூங்காததன் மீதேதான் இருந்தது. இன்றைக்கேனும் அம்மா ஒரு துக்கம் தூங்கி விழிப்பார் என நினைத்திருந்தேன். ஒரு ஆந்தை அம்மாவின் துக்கத்துடன் கூடிய நிம்மதியை வேரோடு அறுத்திருந்தது.

ஆந்தையின் முதல் அலறலியே வாறிச்சுருட்டிக்கொண்டு எழுந்திருந்தார் அம்மா. ‘ அய்யோ…….ஆந்தை வேற அலறுதே….என் பிள்ளைக்கு என்னாச்சனே தெரியலையே…..’ என அழத்தொடங்கினார். அவர் விழிகள் இரண்டும் இடுங்கி குழிக்குள்ளாக ஆழ்ந்துக்கிடந்தன. கரு விழிக்குள பசி மயக்கம் தெரிந்தது. உதடுகள் இரண்டும் காய்ந்து வறண்டு தவித்தன.

தலைவிரிக்கோலமாக உட்கார்ந்திருந்தார் அம்மா. கால்களை நீட்டியிருந்தார்.. பாவாடையுடன் கூடிய சேலை முழங்கால்கள் வரைக்கும் ஏறிக்கிடந்தன. அம்மா எப்பொழுதும் அப்படியாக உட்கார்பவர் அல்ல. கணுக்கால்களுக்கு மேலாக ஆடைகளை விலக்கியதில்லை. மாராப்பு மடிப்புகளை சரிசெய்வதற்கென்றே ஒரு கையை விட்டு வைத்திருப்பவர். மாராப்பு விலகி மார்புகளுக்கிடையில் ஓடிக்கிடந்தது. மார்புகள் சூம்பிப்போயிருந்தன. வயிறு சுருண்டு மடிந்து மடிப்புகளாக இருந்தது. வயிறு இருக்குமிடத்தில் ஒரு பெரிய பள்ளம் இருந்தது.

அம்மா காலடியில் நான் உட்கார்ந்திருந்தேன். அம்மாவின் முதுகைத் தாங்கியபடி அக்காள் உட்கார்ந்திருந்தாள். இடது பக்கம் அப்பா. அப்பாவை அடுத்து மாமா உட்கார்ந்திருந்தார். தட்டில் அம்மாவிற்கென்று போட்டசோறு அப்படியாகவே இருந்தது. சோறு பிசையக்கூடவில்லை. பருக்கைகள் உலர்ந்து, காய்ந்துபோயிருந்தன. பகலாக இருந்தால் ஈக்களாகவது அதில் மொய்த்திருக்கும். கோடை இரவு என்பதால் ஊற்றிய ரசம் காய்ந்து உலர்ந்து தட்டில் வெறும் பருக்கைகளாக மட்டும் இருந்தன.

‘அம்மா….சாப்பிடும்மா… ஒரு வாய் வாங்கிக்கோம்மா…..’

அக்கா கெஞ்சிப்பார்த்தாள்.. சோற்றைப் பிசைந்து அம்மா வாய்க்கருகே கொண்டுப்போனாள். தலையைச் சிலுப்பிக்கொண்டார் அம்மா. தலை மயிர்கள் முகத்திற்கு முன்னால் சரிந்து விழுந்தன.. மயிர்களுக்கிடையில் நான் அம்மாவைப் பார்த்தேன். ஒற்றை

மயிற்றைப்போல கண்ணீர் ஒழுகி கன்னத்தில் வழிந்தது. கண் குழிகளுக்கு கீழுள்ள எலும்புகளில் கண்ணீர் தேங்கி விரவியது.

‘ ஏன்ம்மா இப்படி அழுதுக்கிட்டே இருக்கே…. அண்ணனுக்கு ஒன்னும் ஆகாதும்மா….விசாரணைக் கைதியாத்தான்மா அண்ணனைப்பிடிச்சி வச்சிருக்காங்க…உண்மையானக் கொலைகாரனை போலீஸ் தேடிக்கிட்டிருக்காங்கம்மா…..அண்ணன் அப்பிராணிம்மா….அக்கொலைய பண்ணிருக்க மாட்டான்ம்மா. அவனுக்கு நாளைக்குள்ள எப்படியும் ஜாமீன் கிடைச்சிரும்மா. வக்கீலைப்பார்த்து பேசிட்டேன்ம்மா…நீ சாப்பிடும்மா…..’

அம்மா ஏறிட்டு என்னைப் பார்த்தார். அக்காள், அம்மாவின் முகத்தில் விரவிக்கிடக்கும் தலைமுடிகளை வாறி அள்ளி பின்பக்கமாகக் கொண்டையிட்டாள். நெற்றியில் சரிந்துக்கிடக்கும் ஒன்றிரண்டு முடிகளை விரல்களால் நீவி எடுத்து தலை முடிகளோடு சேர்த்தாள். அம்மா முகத்தில் வழிந்திருந்தக் கண்ணீரை தன் முந்தாணையால் துடைத்து விட்டாள்.

‘ அம்மா….அம்மா….’ அம்மாவின் தோளினைப் பற்றிக் குலுக்கினேன். அவரது தலை அப்படியும் இப்படியுமாக சரிந்து விழுந்தது. அக்காள், அம்மா தலையை இரு பக்கமாகப் பிடித்தாள். நின்றுகொண்டு அவளது தொடைகளுக்கிடையில் தலையைச் சாய்த்துகொண்டாள்.

‘ ஒரு மொடக்கு தண்ணீக் குடிம்மா….’ நான் தண்ணீர் குவளையை எடுத்து அவரது வாய்க்கு அருகில் கொண்டுப்போனேன். வாயைத் திறந்தார் அம்மா. மேல், கீழ் அன்னங்களுக்கிடையில் நூலிழை அளவிற்கு எச்சில் ஓடிக்கிடந்தது. அவர் வாயைத் திறக்கையில் அழுகையும் சேர்ந்து திறந்தது.

‘ என் புள்ள சாப்பிட்டானோ என்னவோ….’ வயிற்றில் அடித்துகொண்டார் அம்மா. நான் அவரது கைகளைப் பிடித்தேன். கைகளை விசும்பி நீட்டியிருக்கும் கால்களுக்கு கைகளைக் கொடுத்து தலை குனிந்தாள். முழங்கால்களுக்கு தலையை முட்டுக்கொடுத்தாள்.

‘ அம்மா….அவன் சாப்பிட்டிருப்பாம்மா….நீ சாப்பிடும்மா….’

‘ எனக்கு ஏ புள்ளய நெனைச்சா பயமாக இருக்கே…’

‘ ஜெயில்ல பாதுகாப்பாதான்ம்மா இருக்கான்…’

‘ நீ பார்த்தீயா….’

‘ நான் பார்க்கலம்மா…நம்ம வக்கீல் சொன்னார்ம்மா…’

‘ அவர் பார்த்தா சொன்னாரு….?’

‘ ஜெயில் வார்டனும் சொன்னார்ம்மா….ஜெயில்ல இருக்கிற கைதிகளும் சொன்னாங்கம்மா…’

அப்பா முகவாய்க்கு கையைக் கொடுத்து நொறுங்கிப்போய் உட்கார்ந்திருந்தார். அவர் சாப்பிட்டாரோ என்னவோ….! வக்கீலுக்கு சாப்பாடு வாங்கிக்கொடுக்கையில் சாப்பிட்டிருப்பார். மகன் மீது விழுந்திருக்கும் கொலைப்பலியை மனதில் ஏந்திக்கொண்டு அவரால் சாப்பிட்டிருக்கவா முடியும்…? வக்கீல் ஓட்டலில் சாப்பிடுகையில் அப்பாவை விட்டுவிட்டா சாப்பிட்டிருப்பார்…? ஒரு டீயையாவது இருவரும் சேர்ந்து சாப்பிட்டிருப்பார்கள்… அப்பாவால் ஒரு நாழிகை பீடி பற்ற வைக்காமல் இருக்க முடியாது. பீடியை பற்ற வைத்து புகையை பசி அடங்க விழுங்கியிருக்கவாவது செய்திருப்பார். எப்பொழுதும் புகையிலையை அதக்கும் அப்பா அதன் சாயம் ஓரளவு பசியை ஆழ்த்திருக்கவே செய்யும். பீடிப் புகை கொஞ்சம். புகையிலை சாயம் கொஞ்சம். இவை இரண்டும் அப்பா பசியை ஒரு சில நாழிகைப் பொழுதாவது தாங்கியிருக்கும்.

அம்மா என்ன அப்படியா…? அவர் ஒரு வாரமாகவே எதையும் சாப்பிடவில்லை. பச்சைத் தண்ணீரை இன்னும் வாயினில் வைக்கவில்லை. நேற்றையத்தினம் காலையில் அவர் சிறுநீர் கழிக்க எழுந்தது. உட்கார்ந்த இடத்தை விட்டு ஓரடி நகரவில்லை. கால்களை நீட்டுவதும், மடக்குவதுமாக இருக்கிறார். சுவற்றில் சாய்கிறார். கண் அயர்கிறார். திடுக்கென விழிக்கிறார். அழுகிறார்.

‘ மாமா….நீங்களாவது சொல்லுங்களே. அம்மாவ ஒரு வாய் சோத்த வாங்கிக்கிற சொல்லுங்க….’

மாமா எழுந்து அம்மாவிடம் வந்தார். அம்மாவின் தோளினைப்பற்றி குலுக்கினார்.. ‘ஆத்தா….அவனுக்கு ஒன்னும் ஆகாது….இப்பதான் நானும் மச்சானும் பார்த்திட்டு வந்தோம். ஜெயில்ல அவன் நல்லா தைரியமாத்தான் இருக்கான்…நீ சாப்பிடாத்தா….’

‘ என் புள்ள மேல இப்படி கொலை பலி விழுந்திருச்சே….’

‘ கொலை பலியெல்லாம் விழல….சந்தேகத்தின் பேர்ல கைது செய்து வச்சிருக்காங்க.. நாளை, நாளை மறுநாள்குள்ள கோர்ட் ஜாமீன் கொடுத்திரும். புள்ளய அழைச்சிட்டு வந்திரலாம்…..’

‘ டீவியெல்லாம் ஏ புள்ள முகத்தையே காட்டுதே….’

‘ சந்தேகத்தின் பேர்ல காட்டுறாங்க….உண்மையானக் கொலைகாரன் கிடைச்சதும் நம்ம புள்ளயக் காட்ட மாட்டாங்க….’

‘ என் புள்ளைய விடுற மாதிரி தெரியலையே… அத்தனை டீவியும் ஏ புள்ளைய கொலைக்காரன் மாதிரில காட்டிக்கிட்டிருக்கு… அவனுண்டு அவன் வேல உண்டுனு

இருக்கிறவனாச்சே…அவன் ஏன் பெரிய எடத்து புள்ளைய கொலை செய்யப்போறான்… ஏ புள்ளைய நான் அப்படியா வளர்த்திருக்கேன்….ஏ புள்ளைய ஜெயில்லருந்து மீட்டுக் கொண்டுவர என்க்கிட்ட என்ன இருக்கு…..கழுத்தில தொங்கிற தாலிக்கூட இல்லையே…அதை .வித்து அழிச்சி அவனைப் படிக்க வச்சிட்டேனே…’

‘ ஆத்தா…நீ ஏனாத்தா கவலைப்படுற….நான் இருக்கேன்ல….கவலைப்படாதேத்தா….’

‘ நீ இருக்கத்தானே ஏ புள்ளைய போலீஸ்காரங்க அழைச்சிக்கிட்டு போனாங்க….’

‘ சரி ஆத்தா….நான் என்ன அவனை விடுவிக்க முயற்சி பண்ணாமலா இருந்தேன்…..’

‘ போலீஸ்காரங்களுக்கும், வக்கீலுக்கும் கொட்டி அழ என்க்கிட்ட ஒன்னுமே இல்லையே….’

‘ அட விடு ஆத்தா…. நம்ம சாமி நம்மல கை விடாது….’

‘ நாம கையெடுக்கிற சாமீ புள்ளய மீட்டுக்கொடுத்தாலும் அவன் பொறந்திருக்கிற சாதி அவன மீட்டுக்கொடுக்காதே….இந்த ஈனசாதியில பொறந்திருக்கிற ஏ புள்ள கொலை செய்யவா பொறந்திருக்கிறான். அப்படியா அவன நான் வளர்த்திருக்கேன்…’ வயிற்றில் குத்திக்கொண்டாள் அம்மா. தலையில் அடித்துக்கொண்டார். முடிகளைப் பிய்த்துகொண்டார். ஓலமிட்டு அழுது தீர்த்தார். திறந்த வாய் திறந்த படியே இருந்தது. வாயைத் திறக்கையில் அவளுக்கு இருந்த பலம் மூடிக்கொள்ளும்போது இல்லை.

‘ ஆத்தா…நீ…சாப்பிடாட்டியும் பரவாயில்ல…..கொஞ்ச நேரத்துக்கு அழாமே இரு ஆத்தா….’

திறந்திருந்த வாயை மூடிக்கொண்டார் அம்மா. சுவற்றோரமாக உட்கார்ந்திருந்த அக்காளின் மடியில் தலை வைத்து படுத்தார். நான் அம்மாவின் கால்களை நேராக நீட்டி விட்டேன். முழங்கால்களுக்கு மேலாக விலகிப்போயிருக்கும் சேலையை எடுத்துவிட்டேன். அக்காள் அம்மாவின் மாராப்பு சேலையை நீவிவிட்டாள். தூரத்தில் விலகிக்கிடக்கும் கைகளை எடுத்து அவளது வயிற்றின் மீது வைத்தாள். தோளில் கிடந்த துண்டினை எடுத்து வீசி விட்டுக்கொண்டிருந்தார் மாமா.

மணி இரவு பனிரெண்டைத் தாண்டியிருந்தது. அம்மாவை சூழ்ந்திருக்கும் அத்தனைப் பேர் கண்களிலும் பசி மயக்கம். தூக்கம் கண்களைத் தழுவியது. தூக்கம் உட்கார்ந்திருக்கும் அத்தனைப்பேர் தலைகளையும் அறைந்து சாய்க்கும் வேலையைச் செய்திருந்தது.

சுவற்றில் சாய்ந்தவாறு தூங்கத் தொடங்கினாள் அக்காள். கால்களை நெஞ்சோடு அணைத்து முழங்கொட்டாச்சிக்கு முகவாய்க்கட்டையைக் கொடுத்திருந்தார் அப்பா. மாமா தரையில் படுத்து ஒரு கையை தலைக்குக்கொடுத்து ஒரு பக்கமாகச் சரிந்து படுத்திருந்தார்.

நான் சுவற்றில் சாய்ந்துகொண்டு தூக்கம் வராமல் அம்மா, அப்பா, அக்கா, மாமா முகங்களைப் பார்த்தவாறு உட்கார்ந்திருந்தேன். அம்மா தூங்குவதைப் பார்க்கையில் எனக்கு ஆத்மத் திருப்தி. அம்மா அரை மண நேரம் தூங்கிவிட்டிருந்தார்.

சுவற்றுப் பல்லி ‘ கீச்…கீச்….’ என்றது. திடுக்கிட்டிருந்தார் அம்மா. அவரது திடுக்கிடல் அக்காவின் மேனியை ஒரு குலுக்குக் குலுக்கியது. அப்பா உடம்பு சட்டென விடைத்தது. மாமாவின் தலை கையிலிருந்து எழுந்தது.

அம்மா பழைய படி அழத்தொடங்கியிருந்தார். பல்லி கீச்சிடுவதைக் கேட்டு ‘சகுனம் சரியில்லையே…இந்த இடத்தில பல்லி கத்தக்கூடாதே….என் புள்ளைக்கு என்னவோதான் ஆச்சு….’ என்றவாறு தேம்பத் தொடங்கினார்.

அப்பா, மாமா இருவரும் சுவற்றினை ஏறிட்டுப்பார்த்தார்கள். காலனி வீடு அது. வீட்டு மேற்க்கூரையின் கான்கிரீட் வெடித்து ஓரிடத்தில் சொட்டையாக விழுந்துவிட்டிருந்தது. கான்கிரீட் கம்பிகள் துருப்பிடித்து அம்மாவின் கால்களைப்போல சூம்பிப்போயிருந்தன. அம்மாவின் நெற்றியில் அழிந்து போயிருந்த பொட்டைப்போலதான் மேற்க்கூரையின் விரிசல் இருந்தது. அதற்கு அருகில் இரண்டு பல்லிகள் வாலைத்தூக்கிக்கொண்டு மெல்ல ஊர்ந்துகொண்டிருந்தன.

‘ ஏங்க….புள்ளய அடைச்சிருக்கிற ஜெயிலப் பார்த்தீங்களா….?’

‘ ஜெயில பார்க்க விடமாட்டாங்க….வக்கீலக்கேட்டுதான் தெரிஞ்சிக்கிறணும்…’

‘ புள்ளய அடைச்சி வச்சிருக்கிற ஜெயில் அறையில் மின் ஒயர் எதுவும் தொங்குதானு கேட்டீங்களா…., மின் ஒயர் எதையும் கடிச்சிடுறானோ என்னவோ….’

‘ நீ நினைக்கிற மாதிரி இல்ல ஆத்தா…ஜெயில் நல்ல பாதுகாப்பா இருக்கு….’ மாமா அம்மாவிற்கு சிரத்தை எடுத்து விளக்கிக்கொண்டிருந்தார்.

‘ஜெயில் பாதுகாப்பாக இருந்தா ஒரு விசாரணைக் கைதி எப்படியாம் மின் ஒயரைக் கடிச்சி செத்துப்போனூச்சாம்….’

‘ ஆத்தா…. நம்ம புள்ள பத்திரமாக இருக்கான்….’

‘ உசரத்தில் கம்பிக எதுவும் நீட்டிக்கிட்டு இருக்கப்போவுது. அதில நம்மப்பிள்ளைய கொன்னு தொங்கவிட்டுட்டு தற்கொலைன்னு சொல்லிடப்போறான்க……’

‘ அப்படியெல்லாம் எதுவும் நடக்காதுனு வக்கீல் சொல்லிருக்காரு….’

‘ டெல்லியில ஒரு கைதிய சக கைதிய விட்டு அடிச்சுக்கொன்னமாதிரி என் புள்ளையையும் அடிச்சிக்கொன்னுடப் போறாங்க……’

‘ அப்படியெல்லாம் ஒன்னும் நடக்காதாத்தா….வீணா மனசைப்போட்டு குழப்பிக்கிடாதே……ஜெயில் வார்டனைக் கேட்டேன். நம்ம புள்ள அறையில கூட ஒரு சின்னப்பையன அடைச்சி வச்சிருக்கோமெனச் சொன்னாரு…..’

‘ எனக்கு என்னவோ புள்ள திரும்பி வருவான்கிற நம்பிக்க எனக்கு இல்ல….’

‘ ஆத்தா….என்ன பேசுற நீ….பேசாம வாய மூடிக்கிட்டு கொஞ்சம் நேரம் படு…விடியட்டும்…வக்கீலைப் போய் பார்த்திட்டு வாறேன்…’ – மாமா அம்மாவை அரட்டியதும் அம்மாவிடமிருந்து பேச்சு மூச்சு இல்லை. தொண்டைக்குள் ஒப்பாரி வைத்து மெல்லத் தூங்கத் தொடங்கியிருந்தார். அம்மா தூங்கியதும் அக்காளும் தூங்கியிருந்தாள். அடுத்தடுத்து அப்பா, மாமா தூங்கியிருந்தார்கள்.

நான் ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்த அம்மாவை இதற்கு முன் எழுப்பிய பல்லியை முறைத்து பார்த்தபடி இருந்தேன். அம்மா எப்படியேனும் இரண்டு மணி நேரமாவது தூங்க வைத்திட வேண்டும் என்பதில் நான் குறியாக இருந்தேன். மேற்க்கூரையை ஒட்டியிருந்த இரண்டு பல்லிகளும் மெல்ல ஊர்ந்துகொண்டிருந்தன. அப்பல்லிகளை இத்துடன் விட்டுவிட முடியாது. ஒருவேளை அப்பல்லிகள் மறுபடியும் கீச்சிட்டால் என்ன செய்வதாம்….? ஒரு குச்சியினை எடுத்து அதன் முனையில் ஒரு துண்டினைக் கட்டி பல்லியை நசுக்கி வெளியே விட்டெறிந்தேன்.

அரை மணி நேரம் தூங்கியிருப்பார் அம்மா. அவர் ஆழ்ந்து தூங்கியதைப் பார்க்கையில் என்னையும் அறியாமல் என் கண்களைத் தூக்கம் தழுவியது. இரு கால்களையும் நீட்டியபடி சுவற்றில் சாய்ந்தவாறு தூங்கத்தொடங்கினேன்.

திடுக்கென விழிப்பு வந்தது. எழுந்து பார்க்கையில் அம்மாவைச்சுற்றி அத்தனைப்பேரும் உட்கார்ந்திருந்தார்கள். அம்மா பெருங்குரலெடுத்து அழுதுகொண்டிருந்தார். அப்பா, அம்மாவிடம் பலதையும் சொல்லி சமாதானப்படுத்தி தோற்றுக்கொண்டிருந்தார். அக்கா அம்மாவின் கண்களை துடைப்பதும் அவளுடன் சேர்ந்து கண்ணீர் சொரிவதாக இருந்தாள். நான் மாமாவிடம் கேட்டேன். ‘ அம்மா….எப்படி முழிச்சாளாம்….?’. மாமா வாசல் பக்கமாக ஒரு பார்வைப்பார்த்துவிட்டு சொன்னார் ‘ நாய் ஊளையிடுது…’

நான் தலையை ஒரு பக்கமாகச் சாய்த்து காதினை வாசல் பக்கம் திருப்பிக் கேட்டேன். ஒரு நாய் பயம் கலந்த குரலில் நீண்டு இழுத்து பெரிதாக ஊளையிட்டுகொண்டிருந்தது. அதைக் கேட்கையில் எனக்குள் ஒரு விதமான பயம் துளிர்விட்டது.

‘ ஊளையிடுறது நம்ம வீட்டு நாய் மாதிரி இருக்கு….?’

மாமா மெல்ல தலையை ஆட்டி ‘ ஆமாம் மாப்ள…’ என்றார்.

‘ இதுநாள் வரைக்கும் அந்த நாய் ஊளையிட்டதில்லையே…’

‘ இல்லைதான்….ஆனா இன்னைக்கு ஊளையிடுது….’

நான் அம்மாவைப்பார்த்தேன். அம்மா நாய் ஊளையிடுதலுடன் அண்ணனை வளர்த்த வளர்ப்பைச் சொல்லி அழுதுகொண்டிருந்தார். நான் மாமாவிடம் கேட்டேன் ‘ எவ்ளோ நேரமா ஊளையிடுது….’

‘ ரொம்ப நேரமா…?’

‘ ரொம்ப நேரம்னா…?’

‘ அரை மணி நேரமாக இருக்கும்…’

‘ நாய தூரத்துக்கு விரட்டி விட்டிருக்கலாம்ல…..?’

‘ விரட்டினேன்…விரட்ட விரட்ட ஊளையிட்டுக்கிட்டே இருக்கு….’

மாமா பயம் கலந்த மிரட்சியில் என்னைப்பார்த்தார். மாமாவை சூழ்ந்திருந்த பயம் என்னையும் கவ்வத் தொடங்கியது.

அம்மா அப்படியும் இப்படியுமாக இரண்டு மணி நேரம் தூங்கியிருப்பார். இன்னும் இரண்டு மணி நேரமாவது அவர் தூங்கியாக வேண்டும். இல்லையேல் மகன் பற்றிய நினைப்பில் ஆழ்ந்து பைத்தியம் ஆனாலும் ஆகிவிடுவார். இப்பொழுதே அவர் ஒரு நிதானமுமில்லாமல் கண்டதைச் சொல்லி உளறிக்கொண்டிருக்கிறார். இன்றைய நாள் தூக்கத்தையும் தொலைத்தார் என்றால் அவ்வளவேதான்! அவருக்கு இப்போதைக்கு தேவை ஆறுதல் அல்ல. தூக்கம்தான்.

நான் மெல்ல எழுந்தேன். மாமா கேட்டார் ‘ என்ன செய்யப்போறீங்க மாப்ள….?’

‘ நாயை தூரத்துக்கு விரட்டி விடபோறேன் மாமா…’

‘ வேண்டாம் மாப்ள….இருட்டு. அமாவாசை வேற. வேணாம்….’

‘ அம்மா தூங்க வேணுமே….’

மாமா, அப்பாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு என்னுடன் வந்தார். நான் கற்களை பொறுக்கி எடுத்து வீசி நாயை தூரத்திற்கு விரட்டினேன். நாய் போகும் தூரமெங்கும் ஊளையிட்டுக்கொண்டே இருந்தது. ஆங்காங்கே நின்று நீண்ட நேரம்தொட்டு ஊளையிட்டு பிறகு வீட்டுப் பக்கமாகத் திரும்பி வந்தது.

நான் நாயினை ’இச்’கொட்டிக்கூப்பிட்டேன். நாய் வாலாடிக்கொண்டு என் அருகினில் வந்தது. என் மீது தாவிவிழுந்தது. என்னைச்சுற்றி சுற்றி வந்தது. நாயின் ஒரு காதினைப் பிடித்து இழுத்துகொண்டு தூரத்திற்குச் சென்றேன். ஆனால் ஊளையிடுதல் மட்டும் நின்றபாடில்லை. ஓரிடத்தில் கற்பாறை ஒருந்தது. அந்த இடத்தில் நாயினைக் கொஞ்சி அதன் இரண்டு பின்னங்கால்களையும் ஒரு சேரப்பிடித்தேன். ஒரேத் தூக்கு, பாறையின் மீது ஒரே அடி.

‘ வீல்….’ என்றது நாய்.

இன்னொரு அடி,….தலையில் ஓங்கி ஒரு மிதி…

வீட்டிற்குத் திரும்பினேன். மாமா கேட்டார். ‘ நாய் எங்க மாப்ள….?’

‘ கொன்னுட்டேன் மாமா….’

‘ ஏன் மாப்ள….?’

‘ அம்மா தூங்கணும்….’

வீட்டிற்கு வந்தேன். அம்மா, அக்காள் மடியில் தலை வைத்து படுத்திருந்தார். அண்ணன் பெயரைச்சொல்லி அழுதபடியிருந்தார். நான் அம்மாவின் கால்களைப் பிடித்துவிட்டேன். ‘அண்ணன் ரொம்ப நல்லவன்ம்மா.. கொலை செய்ற அளவுக்கு அவன் தைரியசாலி இல்லம்மா…. அவனுக்கு எப்படியும் ஜாமீன் கிடைச்சிறும்மா…. நீ தூங்கும்மா……’

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *