Sunday, January 21, 2018

.
Breaking News

கோடு…! ( நாவல் ) …. } அகிலா. — கோயம்புத்தூர்.

கோடு…! ( நாவல் ) …. }  அகிலா.  — கோயம்புத்தூர்.

‘ஏட்டி சம்முகம்..’

‘ஏட்டீ..’

ஆத்தாவின் இந்த குரலுக்கு ‘ஏன் ஆச்சி இந்த கூப்பாடு? அந்த பிள்ளதான் எதுக்கும் அசையாதுன்னு தெரியுமில்ல. ஆனாலும் அவளயே கூப்பிடறது. என்ன வேணும்னு சொல்லுங்க..’ என்றபடி வந்த சுசிலாவிடம், ‘சின்ன உலக்கையை எடுத்துட்டு வா, உக்காந்து அரிசி குத்த அதுதான் வாகாயிருக்கும்..’ என்றாள் ஆத்தா. ஆத்தாவிடம் உலக்கையைக் கொடுத்துவிட்டு நகர்ந்தாள் சுசிலா.

ஆத்தாதான் இந்த சண்முகசுந்தரம் காம்பௌண்டுக்கு எல்லாமே. சண்முகசுந்தரம் வேற யாருமில்ல, ஆத்தாவோட வீட்டுக்காரர்தான். எட்டுகட்டுல பெரிய வீடும், பின்னாடி தோட்டமும் அது தாண்டி வயலும் மாட்டு பண்ணையுமாக நல்ல வசதியை பிள்ளைகளுக்கு விட்டுட்டு போயிட்டார்.

சுசீலாவுக்கு இந்த வீடுதான் சொர்க்கம். படிதாண்ட ஆசைப்படமாட்டா. இவதான் ஆத்தாவோட இரண்டாவது மருமக, கணேசனோட மனைவி. முறைக்கு மகபிள்ள பேத்தியும்கூட.

இவ அக்காதான் முத்தவன் ராசுவோட மனைவி. ஆளுக்கு ரெண்டு ரெண்டு பிள்ளைங்க, சண்முகமும் செல்வமும் மூத்தவனுக்கும், பொன்னுவும் ராமனும் இளையவளுக்குமாய். மூத்த மருமகள் இறந்தபிறகு, சுசீலாதான் எல்லாமே இந்த பிள்ளைங்களுக்கு.

மூத்த பேத்திதான் சண்முகவல்லி. இவ பிறக்கும்போது ஆத்தாவோட வீட்டுக்காரர் சண்முகசுந்தரம் இறந்துட்டார். அதனாலே இந்த பெயர் இவளுக்கு வைக்கப்பட்டது. ஆத்தாவும் வீட்டுக்காரர் பெயரைக் கூப்பிட வெக்கப்படும்னு பார்த்தால், தினசரி அந்த பெயரையே கூப்பிட்டு அந்த பிள்ளை மேலேயும் ஒரு வாஞ்சையை வளர்த்துக்கிச்சு.

சம்முகத்துக்கு வயதுக்குதக்க அறிவு கிடையாது. பத்து வயசாச்சு, அஞ்சு வயசு பிள்ளை மாதிரி நடந்துக் கொள்வாள். இன்னும் ரெண்டாப்பு தாண்டல. ஆத்தாவுக்கு அதனாலேயே அந்த பிள்ள மேல கொஞ்சம்

கரிசனம் அதிகம். அதுவும் ஆத்தா இல்லாம எதுவும் செய்யாது. ஆத்தாவின் மடிப்பு கலையா துவைத்து மடித்து வைத்திருக்கும் நூல் சேலை விரிப்புக்குள்ளே தலையை வச்சுதான் தினமும் தூங்கும்.

வாணலியில் கடுகு போட்டுவிட்டு கருவேப்பில்லைக்காக அடுப்பு மேடையில் துளாவும் போது, சுசீலாவின் ஓரக்கண்களில் சம்முகத்தின் சின்ன உருவம் பட்டது. கதவினோரமாய் சாய்ந்து சுசீலாவையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சின்ன செப்பு உதடும், செதுக்கிய மூக்கும் பெரிய கண்ணுமாக சம்முகம் சுசீலாவின் அக்காவை அப்படியே உரித்து வைத்திருப்பாள். அதனாலேயே, சுசீலாவுக்கும் சம்முகத்தை ரொம்ப பிடிக்கும். பொன்னுவையும், ராமனையும், செல்வத்தையும் கோபித்துக் கொள்ளும் அளவுக்கு சம்முகத்திடம் கோபப்படமாட்டாள்.

சற்று அடுப்பை அணைத்துவிட்டு, அவளருகில் சென்று, ‘பால் கலக்கித் தரட்டுமாடி..’ என்கிற கேள்விக்கு, தலையாட்டினாள் சம்முகம்.

சுசீலா கொடுத்த பால் டம்பளருடன் பின்கட்டு பக்கம் நகர்ந்தாள் சம்முகம். ஆச்சியைப் பார்த்ததும், அருகே சென்று முந்தானையை அந்த பக்கமாய் தள்ளிவிட்டு அருகில் உட்கார்ந்துக் கொண்டாள். ஆச்சியின் சேலை முந்தானையில் வீசும் பால்வாடை மட்டும் அவளுக்கு பிடிப்பதில்லை. ஆத்தாவுக்கும் அது தெரியும்.

சண்முகத்தை இழுத்து அணைச்சுக்கிட்டு, ‘என்னை பெத்த ஆத்தா, ஏண்ட்டி இன்னைக்கு பள்ளிக்கூடத்துக்கு போல? ‘ ன்னு கேட்டாள்.

‘அந்த கண்ணன் இருக்காம்ல ஆச்சி, அவன் எல்லாத்துக்கும் முன்னாடி என்னை லூசுன்னு சொல்றான். அடிக்கான்.அங்கே கூட படிக்கிற ஒருத்திகளும் சரியில்ல. பயலுககிட்டே இளிச்சுகிட்டே இருக்காளுவ’

‘அட, கூறு கெட்டவளே, நீ படிச்சா தானே உன்னை நாளைக்கு எவனாவது கட்டிக்குவான். ஆயிரம் காரணத்தைச் சொல்லிக்கிட்டு தொட்டதுக்கெல்லாம் பள்ளிக்கூடத்துக்கு போகாம இருந்தா, எப்பிடிட்டி படிப்பே…’

‘இல்ல, நானு போமாட்டேன்..’

‘சரிட்டி, நாளைக்கு உன் சித்தப்பன் வந்து அந்த பயல நாலு சாத்து சாத்த சொல்றேன்..இனி ஒழுங்கா போணும், சரியா…’

‘சரி..’ என்றபடி நகர்ந்த சண்முகத்தைப் பார்க்கையில், இன்னும் ஒன்றிரண்டு வருஷங்களில் பெரியமனுஷி ஆயிருவாளே, அதுக்குள்ளே இவளுக்கு கொஞ்சமாவது விவரம் வரணுமேன்னு பதைச்சு போகுது ஆத்தாவுக்கு.

நீல சுடிதாருக்குள் தன்னை நுழைக்க பாடுபட்டுக் கொண்டிருந்தாள் சம்முகம். சாப்பாட்டு அறையில், ராசுவும் கணேசனும் சாப்பிட்டுக் கொண்டிருக்க, சுசீலா தண்ணி தெளிச்சு, இட்லி துணியை இட்லியிலிருந்து எடுத்துக் கொண்டிருந்தாள். தட்டுடன் அமர்ந்திருந்த தன் பிள்ளைகளுக்கு வைத்தாள்.

இன்னும் சம்முகத்தைச் சாப்பிட வரக்காணும், யூனிபார்மை போட்டாளோ என்னவோ..என்று நினைத்துக் கொண்டே கண்ணாடி அறைக்குள் எட்டிப் பார்க்க, தான் ஏற்கனவே பின் பண்ணி வைத்திருந்த துப்பாட்டாவை மேலே போட கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாள். அதைப் போட்டு கொடுத்துவிட்டு, அடுக்களைக்குள் புகுந்தாள் சுசிலா.

பொண்ணு, சண்முகத்தை விட இளையவள்தான், ஆனாலும் எல்லா வேலைகளையும் தானே செய்துக் கொள்கிறாள். இவளுக்கு பெட்டிகோட்டை இழுத்துவிடுவது முதல் தலைபின்னி ரிப்பன் வைப்பது வரை தானே செய்ய வேண்டியிருப்பதை நினைத்து எரிச்சல் வந்தது.

சில நேரங்களில் சற்றுக் கோபித்து கொள்வாள். உடனே சம்முகம் சாமியறையின் மூலையில் போய் உட்கார்ந்து கொள்வாள். அவளை எளிதில் அதிலிருந்து மீட்டுக் கொண்டு வருவது கடினம். சமாதானமே ஆகமாட்டாள். அதற்காகவே திட்டாமல் அன்பாய் பேசியே காரியம் சாதிப்பாள் சுசீலா.

ஒரு முறை அப்படித்தான் ஒரு கல்யாண ரிசெப்ஷனுக்கு வீட்டில் அனைவரும் கிளம்பிக் கொண்டிருக்க, இவள் மட்டும் சுசீலாவுக்காகக் காத்திருந்தாள் உடை மாற்றாமல். ஜிகுஜிகுன்னு இருப்பதை போடமாட்டாள் என்பதால், பார்த்து தேடி ஒரு சிம்பிளான பட்டுபாவாடை சட்டையை ஏற்கனவே எடுத்து வைத்திருந்தாள் சுசீலா.

சுசீலா அதை போட்டுவிட முனைந்தபோது ‘இது வேண்டாம்..’ என்றாள். இன்னொன்று இன்னொன்று என்று எல்லாவற்றையும் எடுத்தாகிவிட்டது. எனக்கு பட்டுபாவாடையே வேண்டாம் என்று அடம் பிடித்தாள். எல்லோரும் கிளம்பியாகிவிட்டது, அவளையும் சுசீலாவையும் தவிர.

ராசு வந்து முயற்சி செய்ய, அப்படியும் வேண்டாம் என்றாள். அடுத்து ஆச்சி, கணேசன் என்று யார் சொல்லியும் கேட்கவில்லை. அவளுக்கு போட்டுக்கொள்ள வைத்திருந்த நெக்லஸ், ஜிமிக்கி, மோதிரம் எல்லாவற்றையும் தட்டிவிட்டு அழுது அடம்பிடித்தாள்.

‘அப்பவே சொன்னேன், மதுரையில நல்ல டாக்டரா காமிப்போம்ன்னு..யார் கேக்கையோ, நான் சொல்றத…பெத்துப் போட்டுட்டு அவ பாட்டுக்கு போயிட்டா..’ என்று ராசு இயலாமையில் கத்த, ஆச்சி, ‘ நம்ம குலதெய்வம் பார்த்துக்கும்னு நம்பிட்டேன் அய்யா..’ என்று ஒப்பாரி வைக்க, சம்முகம் மட்டும் எதற்கும் சலிக்காமல் அப்படியே பிடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி பீரோவை ஒட்டி நின்னுகிட்டு இருந்தா.

ராசுவுக்கு கோபம் வந்து அடிக்க போக ஆத்தா தடுக்க வீடே களேபரமாகிப் போனது. கடைசியில், ஆத்தாவும் அவளும் வீட்டில் இருக்க, மற்றவர்கள் எல்லாம் கிளம்பிப் போனார்கள்.

அந்த நேரம் மட்டும்தான் அப்படி இருப்பா. மற்ற நேரம் சாதாரணமாய் மற்ற பிள்ளைகள் பேசுவதை சம்மணமிட்டு உட்கார்ந்து வாய்பிளந்து கேட்டுக் கொண்டும் சிரித்துக் கொண்டுமிருப்பாள். அவளைத் தொந்தரவு செய்யாமல் இருக்கும் வரை வீடு அமைதியாய் இருக்கும்.

ஆத்தாவும், எவ்வளவோ வேண்டுதல்கள் செய்து பார்த்துவிட்டது. ஒவ்வொரு முறை குலதெய்வம் அய்யனார் முன் நின்று, ‘பொட்டை பிள்ளையா கொடுத்திட்டியே. அதுவும் தாயில்லா பிள்ளையா இருக்கே. அறிவும் பக்குவமும் இல்லைன்னா நாளைக்கு எப்படி கட்டிக் கொடுக்கிறது..’ என்று உருகி அழுது வேண்டிக்கிட்டுதான் வரும். ஆனாலும் சம்முகத்துக்கு வயது ஏற ஏற, பிடிவாதமும் அடமும் பேசாமல் இருந்து தன் காரியத்தைச் சாதிப்பதும் அதிகமாகிக் கொண்டே போனது. சுசீலாவும் சடைந்து போகிறாள் சிலநேரங்களில்.

ராசுவுக்கும் மறுகல்யாணம் பண்ணலாமா என்று ஆத்தா நிறைய தடவை யோசனை செய்து கேட்டும் இருக்கிறது ராசுவிடம். ஒரே வார்த்தையில் ‘வேண்டாம்..’ என்று உக்கிரமாய் மறுத்துவிடுவான். கோவில்பட்டி பக்கம் எங்கோ அவனுக்கு ஒரு தொடர்பு இருப்பதாக புண்ணாக்கு போடவரும் கந்தையன் சொல்லிப் போனது ஆத்தாவுக்கு விசனம்தான். அதை பற்றி ராசுவிடம் கேட்க ஆத்தாவுக்கு விருப்பமும் இல்லை.

கீதா டீச்சர் ஆங்கிலப் பாடம் எடுக்கத் தொடங்கியிருந்தார். ஆங்கில வகுப்புக்களில் சம்முகத்துக்கு என்ன செய்வது என்பது தெரியும். அவள்

பாட்டுக்கு அவளுக்கு விருப்பமான கனவுக்குள் நுழைந்துவிடுவாள். மெல்லிசான உறுத்தாத நீள கவுன் போட்டு, பூக்களுக்கும் பட்டாம்பூச்சிகளுக்கும் இடையில் உலவிக் கொண்டிருந்தாள். யாரும் தன்னிடம் பேசாமல் தான்மட்டும் சுற்றிக்கொண்டே இருக்கும் இந்த உலகம் அவளுக்கு ரொம்ப பிடிக்கும்.

டக்குன்னு ஒரு வலி தொடையில். ஆவென்ற அலறலுடன் நினைவுக்கு வந்தாள். பக்கத்தில் மல்லிகா கண் உருட்டிக் கொண்டிருந்தாள்.

‘ஏன் பிள்ள கிள்ளுனே..’ என்று அவள் தலையில் நறுக்கென்று குட்டினாள்.

‘ஏட்டி, டீச்சர்…’ என்று அவள் தலையைத் தடவிக் கொண்டே சொல்ல, அப்போதுதான் கவனித்தாள், கீதா டீச்சர் கண்களை உருட்டிக் கொண்டு இவள் முன் நின்றிருந்தார்.

நாலு பிரம்பு அடி வாங்கிக் கொண்டு கிளாஸுக்கு வெளியே வந்தாள். சாயங்காலமாய் வீட்டுக்கு மல்லிகாவுடன் நடந்து வரும் போது, மல்லிகா இவளிடம், ‘ஏம்டி நீ இப்படி இருக்கே..’ என்று கேட்க, ‘நான் அப்படிதான்..’ என்றாள்.

படிக்காம, பேசாம இப்படி இருந்தா விளங்கமாட்டேன்னு இன்னுமாய் மல்லிகா பேசிக் கொண்டே போக, ‘நான் உன்கூட வரல்…நீ போ..’ என்றாள் மல்லிகாவிடம்.

‘நானும் இனி உன்கூட சேரமாட்டேன். நான்தான் உன்கிட்டே பேசுறேன்னு, உன்னாலே இன்னைக்கு நான் அடிவாங்கினேன் டீச்சர் கிட்டே..’ என்று சொல்ல, சண்முகம், ‘இனி நான் உங்கூட காய்..’ ன்னு சொல்ல, மல்லிகா இவளை விட்டு நடந்தாள்.

ரயில்வே கேட் கிட்டேயே நின்னுகிட்டு இருந்த சம்முகம், ரயிலின் சத்தம் கேட்கவும் ஸ்டேஷன் கம்பிகளுக்கு இடையில் நுழைந்து பிளாட்பாரத்தில் நின்று கொண்டாள். எப்போவாவதுதான் பாளையங்கோட்டை ஸ்டேஷனில் ரயில் போகும். பெட்டியை எண்ணத் தொடங்கினாள். அப்போதான் பக்கத்தில் ஒல்லியாய் ஒரு ஆள் நிற்பதை கவனித்தாள்.

‘எங்க பிள்ள போணும்?..’ என்ற கேள்விக்கு பதில் சொல்லாமல், பள்ளி பையுடன் திரும்பி கம்பிகிட்டே வந்தாள். அவனும் இவள் கிட்டே வந்து, ‘சத்தம் போடாம என் கூட வா, இல்லே உன்னை கொன்னுருவேன்..’என்று கையில் எதையோ காட்டி மிரட்ட, அழத்தொடங்கினாள். ‘உஷ்..’ என்று கையைக் காட்ட, அதில் சிறு கத்தி இருந்தது. இப்போதான் சம்முகத்துக்கு பயம் பிடிக்கத் தொடங்கியது.

ரயில் பெட்டிக்குள் இழுத்துக்கொண்டு போனான். நிறைய பேர் இருந்தனர். நுழைந்து சென்று கடைசியில், கதவு கிட்டே இழுத்து நிறுத்தினான். ரயில் போய்கிட்டே இருந்தது. இவள் ரயிலில் போனதே இல்ல. தடதடன்னு அது போறது இவளுக்கு பயமாய் இருந்தது. அவன் குனிந்து இவ முகத்துகிட்டே முகம் கொண்டு வந்தான். நாத்தமா இருந்தது அவளுக்கு. முகம் சுளித்தாள்.

கழுத்தில் கை வைத்து செயினின் கொக்கியை கழட்டும் போதுதான் இவளுக்கு ஆச்சி சொன்னது நினைவுக்கு வந்தது, செயினை எவனாவது களவாங்க வந்தான்னா, தள்ளிவிட்டுட்டு ஓடி வந்துரனும்னு. இவ அவனை தள்ளிட்டு பெட்டிக்குள் நின்றிருந்தவர்களுக்கு இடையே நுழைந்து ஓடினாள்.

அப்போதான் வண்டி நின்றது. எல்லோரும் இறங்கத் தொடங்கினார்கள். இவளும் இறங்கினாள். இருட்டி இருந்தது. இதுவும் இன்னொரு ஸ்டேஷன் மாதிரி இருந்தது, ஆனால் பெருசாக இருந்தது. திருடன் வந்துருவான்னு எங்கேயாவது ஒளிஞ்சிக்குவோம்னு ரெண்டு மூணு பேர் உட்கார்ந்திருந்த கல்லுபெஞ்சுக்கு பின்னாடி ஒளிந்துக் கொண்டாள்.

அப்படியே கண் அசந்துப் போனாள். நிறைய சத்தமும் ரயிலின் இரைச்சலும் கேட்க, கண் திறந்தாள். ஒரு ரயிலில் எல்லோரும் ஏறிக்கொண்டிருந்தார்கள். இதில் ஏறினால், பழையபடி வீட்டுக்கு போயிடலாம் என்று நினைத்து ஒரு பெட்டிக்குள் ஏறி, இரண்டு சீட்டுக்கு இடையில் அமர்ந்துக் கொண்டாள்.

வியர்த்து வடியும் நகை நிறைந்த கழுத்தைத் துடைத்தபடி ரயிலின் பெட்டிக்குள் ஏறினாள் பார்வதி. வரும் வழியெல்லாம் முணுமுணுத்துக் கொண்டே வந்தவள் பெட்டிக்குள் யாரும் இல்லையென்று தெரிந்தவுடன் சத்தத்தை இன்னும் அதிகமாக்கினாள்.

‘ஒரு ஏசி கோச் பண்ணாம, இப்படி சாதா கோச்சில வரணும்னு என்ன தலையெழுத்து எனக்கோ தெரியல, ரெண்டலுக்கு கார் எடுத்திருக்கலாம்’ என்ற அவளின் புலம்பல் அலுத்துப்போனது பெருமாளுக்கு. கோபத்தை மட்டுப்படுத்திக் கொண்டு பெட்டிகளைச் சீட்டுக்கு அடியில் தள்ளினார்.

இவரின் தாய்மாமனின் இழவுக்கு வந்திருந்தார்கள். அவளுக்கு ஒரு வகையில் சித்தியை கட்டிய சித்தப்பாவும் கூட. இல்லையென்றால் இந்நேரம் சென்னை மாநகரத்தை விட்டு இங்கே இந்த திருநெல்வேலிக்கு மகாராணி இறங்கி வந்திருக்கவேமாட்டாள் என்று நினைத்துக் கொண்டார்.

இரண்டு நாட்களாக சொந்தகாரர்களுடன் அனுசரித்து தங்க அவளால் முடியவில்லை. சென்னைக்குக் கிளம்பியாயிற்று என்பதே அவருக்கு நிம்மதியைக் கொடுத்தது. நாளை முதல் இவர் வேலைக்குச் சென்றுவிடலாம். அவளுக்கு கிளப், மீட்டிங், ஷாப்பிங், சினிமா என்று போகவர பணம் மட்டும் கொடுத்துவிட்டால் போதும்.

‘ஏங்க..’ என்ற சகபத்தினியின் வீரிடலுக்கு கண்ணைத் திறந்து, இப்போ என்ன பிரச்சனையோ என்று பார்த்தார். பார்வதி கைகாட்டிய திசையில் ஒரு சிறு உருவம் சைடு சீட் இரண்டுக்கும் நடுவில் முட்டியில் முகம் புதைத்து அமர்ந்திருந்தது. கொஞ்சம் இருட்டாக இருந்ததால், சரியாகத் தெரியவில்லை.

அருகில் சென்ற போது, ரயில் நகரத்தொடங்கியிருந்தது. யாரு என்ற கேள்வியுடன், அவர் முகம் நிமிர்த்த, செதுக்கிய மூக்குடன் அழகிய பெண் பிள்ளை. ‘அம்மா..’ என்றார் ஒருவித பரிதவிப்புடன். அருகே சென்று, யாரும்மா நீ என்றார். அவள் பதில் சொல்லாமல், அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். பயம் அதீதமாய் அப்பிக் கிடந்தது கண்களில்.

பார்வதி அருகில் வந்து பார்த்துவிட்டு, ‘ரொம்ப அழுக்காயிருக்காளே, ஆனால் தங்க சங்கலி போட்டிருக்காளே…ஒரு அஞ்சு பவுன் இருக்குமே..’ என்று சொல்லி முகத்தை ஒரு வெட்டு வெட்டிவிட்டு போய் அமர்ந்துக் கொண்டாள். அவர் அவளைத் தூக்கி நிறுத்தினார். தண்ணீர் பாட்டில் எடுத்துவந்து கொடுத்தார். இப்போது அவள் கண்களில் பயம் சற்று விலகியிருந்தது.

மறுபடியும், ‘எப்படிம்மா இங்கே வந்தே?, உங்க அம்மா எங்கே?’ என்று வரிசையாய் கேள்வி எழுப்ப, ‘ஆச்சி….’ என்று சொல்லி உதடு பிதுக்கி அழத்தொடங்கினாள். ‘சரி, நான் உன்னை ஒன்னும் கேட்கல, உன் பெயர் மட்டும் சொல்லு..’ என்றார்.

சம்முகம் என்று கண் விரித்துச் சொன்னாள். உங்க அப்பா பெயரா என்றார். மீண்டும் அழத் தொடங்கினாள். சாய்ந்து அமர்ந்துக் கொண்டார். அவர் பார்வதியிடம், ‘டிடிஆர் வரட்டும், பேசி அவரிடம் ஒப்படைப்போம்..’ என்றார்.

இவர்கள் இருவரைத் தவிர வேறு யாரும் அங்கு இல்லாததால், சம்முகம் சற்று அழுகையை நிறுத்திவிட்டிருந்தாள். ஆச்சியின் ஞாபகம் வந்தது. இந்நேரம் ஆச்சியின் அருகே இடுக்கிக்கொண்டு தூங்கியிருப்பாள். அப்பாவின் வண்டி சத்தமும் பேசும் சத்தமும் கேட்கும். அது ஒரு தாலாட்டு போலிருக்கும் அவளுக்கு. நினைத்தவுடனே அழுகை பீறிட்டுக் கொண்டு

வந்தது. மல்லிகாகிட்டே சண்டை போடாம இருந்தா, நாம இங்கே வந்திருக்க வேண்டாமோ எனக் குழம்பிப்போனாள்.

அவளைப் பார்த்துக்கொண்டிருந்த பார்வதிக்கோ நிறைய யோசனை ஓடியது. அவளுக்கு இருக்கும் வெளிவேலைகளையும், தன் இரண்டு பெண் பிள்ளைகளை சமாளிக்க திணறுவதையும், நினைத்த நேரத்தில் வேலைக்கு மட்டம் போடும் வேலைக்காரியையும் யோசித்துக் கூட்டி கழித்து ஒரு கணக்கு பண்ணிக்கொண்டிருந்தாள். மிகுந்த அலசலுக்கு பிறகு, பெருமாளின் விலாவில் விரல் கொண்டு நோண்டினாள்.

அவர் என்ன என்பது போல் எரிச்சலுடன் பார்த்தார். அவரிடம், சம்முகத்தைக் காட்டி, இந்த பொண்ணை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போலாங்க என்றாள். கேள்விக்குறியாய் அவர் புருவம் நெரிக்க, பார்வதி அதில் உள்ள நல்லது கெட்டதுகளை சொல்லத் தொடங்கினாள். பெருமாளுக்கு அது சரியென்றுப் படவில்லை. தங்கசெயின் எல்லாம் போட்டிருக்கே, பெரிய இடமாய் இருக்குமோ என்று பார்வதியிடம் கிசுகிசுத்தார்.

இருந்தா நமக்கென்ன, அதை கழட்டி வாங்கி வச்சிக்குவோம். அதுவும் ஒன்னும் பேசமாட்டேங்குது. நாமளும் விட்டுட்டு போயிட்டா, யாராவது பிள்ளையைப் பிடிச்சிட்டு போயிருவாங்க. அவங்க வீட்டில் இருந்து தேடி வந்தா பிள்ளையை ஒப்படைச்சிருவோம். இப்போ போலீஸ் கிட்டே போகவேண்டாம். கொஞ்ச நாளைக்கு நம்ம கூட உதவிக்கு இருக்கட்டும். நம்ம பிள்ளைங்க இரண்டும் பப்ளிக் எக்ஸாம் முடிக்க உதவியா இருக்கும் என்று அதை இதை பேசி, டிடிஆரிடம் சம்முகத்துக்கும் சேர்த்து பெருமாளை டிக்கெட் எடுக்க வைத்துவிட்டாள்.

யாரோ குலுக்கி தன்னை எழுப்புவதை அறிந்து, ‘ஆச்சி…’ என அழத்தொடங்கினாள். ஆச்சி இல்லாமல், எங்கோ இருப்பதை அறிந்து, பதறி எழுந்தாள்.

எழுந்தவள் ரயிலில் இருந்து அவசரமாய் கீழிறக்கப்பட்டாள். எங்கே பார்த்தாலும் கூட்டமாய் இருந்தது. ஒருத்தரை ஒருத்தர் இடித்துக்கொண்டும் தள்ளிக்கொண்டும் ஓடிக்கொண்டிருந்தனர். அவளுக்கு கூட்டத்தைப் பார்த்தாலே பிடிக்காது. கோமதியக்கா கல்யாணத்துக்கு கூட சித்தி கூட போயிட்டு அழுது பாதியிலே திரும்பியது ஞாபகத்தில் வந்தது.

இவ கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் அந்த அம்மாவின் அருகில் அண்டப் பார்த்தாள். அவரோ இவளைத் தள்ளிவிட்டு கையை மட்டும் பிடித்துக் கொண்டு அவசர நடையிட்டுக் கொண்டிருந்தார். இவள் உதடு பிதுக்கி அழத் தொடங்கும் முன் காரில் திணிக்கப்பட்டிருந்தாள்.

இலேசான கண்ணீருடன் காலை நகரத்தை பராக்கு பார்க்கத் தொடங்கினாள். ஜன்னல் வழியாய் தெரிந்ததெல்லாம் பெரிய பெரிய வீடாய் இருந்தது. நிறைய பஸ், கார் எல்லாம் ஓடிக் கொண்டிருந்தது.

தலையில் ஒரு குட்டு விழுந்ததும் வலியில் திரும்பினாள். பூசணிக்காய் மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு அந்த அம்மா இவளிடம் என்னமோ கத்திக் கொண்டிருந்தார். ஸ்கூலில் டீச்சர் பேசும் ஆங்கிலம் போல் இருந்தது அது. அப்போ இது நமக்கு புரியாது என்று வழக்கம் போல் நினைத்துக்கொண்டு மறுபடியும் வேடிக்கைப் பார்க்கத் திரும்பிவிட்டாள்.

அப்பா காரில் அடிக்கும் பெரிய ஹாரன் சத்தம் போல் இதிலும் அடிக்க, அப்போதுதான் வண்டியின் உள்பக்கம் பார்த்தாள். அப்பா வண்டி மாதிரி இல்லாமல் இது பெரியதாய் இருந்தது. குளுர்ந்துக் கொண்டிருந்தது. நல்லா குஷன் மாதிரியிருந்தது உட்காருமிடம். அப்பா வண்டியில் ஜன்னல் திறந்திருக்கும். வெளிக் காத்து அடிக்கும், அதில் வைக்கோல், சாணி, பெட்ரோல் எல்லாம் கலந்து ஒரு வாசனை மிதக்கும். அவளுக்கு அது ரொம்ப பிடிக்கும்.

அப்பா இவளை காரில் எங்கேயும் கூட்டிட்டுப் போகமாட்டார். செல்வம், ராமு மட்டுமல்லாமல் பொண்ணுவையும் கூட கூட்டிட்டுப் போவார். ஆச்சி வந்தா மட்டும்தான் இவள கூட்டிட்டுப் போவார். இவளும் ஆச்சிக் கூட மட்டும்தான் வெளியே போவா. ஆச்சி தான் ரொம்ப பிடிக்கும் இவளுக்கு. சித்தி கொடுக்கும் மாவை கையில் அமுக்கி ஒரு நிமிஷத்தில கொழுக்கட்டையாக்கி விடுவா ஆச்சி. இப்போ எங்கே இருக்கா ஆச்சி என்ற நினைப்பு வந்ததும் கண்ணில் கண்ணீர் கொட்டத் தொடங்கியது.

‘அய்யோ, இந்த சனியனோட…எதுக்கு திடீர் திடீர்னு அழுதுன்னே தெரியமாட்டேங்குது. ‘ என்று சலிப்புடன் தலையைச் சிலுப்பிக் கொண்டார் அந்த அம்மா. பார்க்க சம்முகத்துக்கு சிரிப்பாய் வந்தது.

கார் ஒரு பெரிய கேட் போட்ட வீட்டின் முன் நின்றது. ஒரு பச்சை யூனிபார்ம் போட்ட மாமா ஓடிவந்து கேட்டைத் திறந்தார். ‘இறங்கு..’ என்ற குரலுக்கு திறந்திருந்த வண்டி கதவைப் பிடித்து வெளிவந்தாள். கண் முன் அந்த வீடு பளபளன்னு பெரிதாய் இருந்தது. நம்ம வீடும் பெருசாய்

இருந்தாலும் ஏன் இப்படி வெள்ளையாக இல்லை என்ற யோசனை மனதுக்குள் ஓடியது.

அந்த அம்மாவின் பின்னேயே சென்றாள். எங்கு திரும்பி எங்கு போகிறோம் என்றே தெரியவில்லை அவளுக்கு. தரையெல்லாம் வழுக்கிக் கொண்டிருந்தது. வீட்டுக்குள் கோழி ஒண்ணும் இல்லாதது அவளுக்கு அதிசயமாய் இருந்தது.

ஒரு அறை சில்லுன்னும் இன்னொரு அறை சில்லுன்னு இல்லாமலும் இருந்தது. அவ வீட்டு கதவு மாதிரி அரக்கு கலரில் கதவுகள் இல்லை. வெள்ளையாய் பொம்மையெல்லாம் ஒட்டி இருந்தது. அறைக்குள்ளேயும் அப்படிதான். ஒரு கதவின் முன் நின்று அந்த அம்மா ஆங்கிலத்தில் ஏதோ கத்த, உள்ளேயிருந்தும் அதே போல் சத்தம் வந்தது. கதவை திறந்து தலை முடியெல்லாம் விரித்துப் போட்டு சினிமாகாரங்க மாதிரி ஒரு அக்கா வந்தாங்க. உள்ளே போனால், ஆம்பளைங்க போடுற குட்டை நிக்கர் போட்டுக்கிட்டு இன்னொரு அக்கா இருந்தாங்க.

அந்த அம்மா இவளைப் பிடித்து இழுத்து அவங்க முன்னாடி நிப்பாட்டி, என்னமோ ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு, இவளிடம், ‘இங்கே பாரு…ம்ம்..உன் பெயர் என்ன…’ எனக் கேட்க, ‘சம்முகம்..’ என்றாள்.

‘என்ன அப்பவேயிருந்து இந்த பெயரையேச் சொல்றே..’ என்று கேட்க, இவளும், ‘ அதுதான் எம் பேரு..’ என்று முனக, ‘ஒகே.. சம்முகம் கேளு, இவங்க இரண்டு பேரும் தான் என் பிள்ளைங்க. இவ பேரு ஷஷ்மிதா, அவ பேரு அனாமிகா..’என்று அந்த அம்மா சொல்ல, இவளுக்கு அந்த பேர் ஒன்றுமே தலைக்குள்ளே போகல.

அவங்களைப் பார்த்து அந்த அம்மா, ‘இவளுக்கு இங்கிலீஷ் தெரியாததாலே, இனி இந்த சம்முகத்துகிட்டே நீங்க, தமிழ்லதான் பேசணும்..’ என்று சொல்லும்போது, ‘அப்படியாவது உன் பிள்ளைங்க தமிழ் பேசட்டும் ..’ என்று சொல்லிக் கொண்டே அவர் வந்தார். அந்த அம்மாவுக்கு கோபம் வந்து மூக்கு புடைத்து, ‘எப்போ பார்த்தாலும் நம்ம குழந்தைங்களை குறை சொல்லிகிட்டே இருங்க..’ என்று கத்தினார். இவள் பயந்து கதவுகிட்டே போய் நின்றுக்கொண்டாள்.

அங்கே வீட்டுல யாருமே சத்தம் போட்டு பேசமாட்டாங்க. சத்தம் போட்டா ஆச்சிக்கு பிடிக்காது. ‘என்னை என் ஆச்சிக்கிட்டே கொண்டு விடுங்க..’ என்று அழத்தொடங்கினாள். அந்த அம்மா இவளின் அருகில் வந்து, ‘இனி எதுக்காவது அழுதே, அந்த பெரிய ரோட்டிலே பிடிச்சுத் தள்ளிருவேன்..எத்தனை பெரிய வண்டி போகுதுன்னு பார்த்தேல்ல..நசுங்கி

செத்துப் போயிருவே. அழுதே அவ்வளவுதான்..’ என்று சொல்லியபடி தலையில் ஒரு குட்டு வைத்தாள். அவள் உதடு நடுங்க அழுகையை நிப்பாட்டினாள். ‘இனி தனக்கு குட்டு விழாது..’ என்பதில் அனாமிகாவிற்கு சந்தோஷமாக இருந்தது,

‘ஷஷு, இனி நமக்கு ஒவ்வொரு தடவையும் அந்த லக்ஷ்மியைக் கூப்பிடவேண்டாம். அவ கிட்சன்லே வேலையிருக்கு, வரேன், வரேன்னு சொல்லி வராமயிருக்கவும் வேண்டாம். இந்த பிள்ளையை நம்ம அசிஸ்டன்ட்டாக வைச்சுக்குவோம்…’ என்றாள்.

‘இவ பார்த்தா போர்த்தோ பிப்தோ படிக்கிற மாதிரி இருக்கா. அப்போ ஏன் இங்கிலீஷ் தெரியல…’ என்று சொல்லிகிட்டே, சம்முகத்தின் அருகில் சென்றாள். அவளிடம் அழுக்கு நாற்றம் அடித்தது. ‘ பர்ஸ்ட் குளி, போ..’ என்றாள். அவள் அப்படியே நிற்கவும், ‘ உன் அம்மா எங்கே?’ என்றாள்.

‘சாமிகிட்டே..’

‘அப்போ உங்க அப்பா..’

‘ஆச்சி கிட்டே..’

‘அப்போ ஆச்சி..’

‘காணும்..’ என்று உதடு பிதுக்க, அனா உடனே, ‘இண்டர்வியூ போதும் ஷஷு, ஸ்கூல் பினிஷ் பண்ணிட்டு வந்து இவளைப் பார்த்துக்கலாம்..’ என்றாள். இருவரும் இவளை ஏதோ ஒரு ஜந்துவைப் பார்ப்பதுப்போல் பார்த்துக்கொண்டே நகர்ந்தார்கள்.

‘பாப்பா, வா..குளிச்சு டிரஸ் மாத்தலாம்..’ என்று சொல்லிக்கொண்டே வந்த லக்ஷ்மி அவளைக் கீழே கூட்டிச்சென்றாள்.

‘அம்மா..’ என்றழைத்த லஷ்மியை என்ன என்பதாய் பார்த்தாள் பார்வதி.

‘நீங்க கூட்டிக்கிட்டு வந்த பிள்ளை இருக்கே, ஏதோ பெரிய இடத்துப் பிள்ளையாயிருக்கும்மா. இந்த சோப்பு போடமாட்டேன், இந்த துண்டு வேண்டாம், நம்ம பாப்பாவோட பழைய டிரஸ்ஸில் கூட பார்த்து எடுத்து தாம்மா போட்டுது. இது வேலைக்கு ஆகாதும்மா. இப்போவும் ஜன்னல் கம்பியைப் பிடிச்சுகிட்டு வெளியே வேடிக்கை பார்த்துகிட்டு நிக்குது. சாப்பிட கூப்பிட்டா, எங்க ஆச்சி ஊட்டிதான் விடுவா, நீயும் ஊட்டிவிடுங்குதும்மா,,’என்றாள்.

‘லஷ்மி, நீ உன் வேலையைப் பாரு. அந்த பிள்ளையை ஊரிலிருந்து எதுக்கு கூட்டிட்டு வந்திருக்கேன்னு உனக்குத் தெரியுமா?.. நம்ம பாப்பாக்களுக்கு உதவிக்கு மட்டும்தான். உனக்கு வீட்டு வேலையும் பார்த்து, அவங்களையும்

பார்க்க முடியலதானே. அதுக்குதான். அவங்களுக்கு தண்ணி, வெண்ணி, சாப்பாடு, துணி எல்லாம் இந்த பிள்ளை கையில கொடுத்துவிடு. உனக்கும் மாடி ஏறி இறங்குற வேலை குறையும். அது மாதிரி ஷாப்பிங் போகும் போது, உன் வீட்டுக்காரன் காரை மட்டும் பார்த்துக்கட்டும். இந்த பிள்ளையை கூட அனுப்பிவை. அது எல்லாம் தூக்கிக்கிட்டு அவங்க கூட போயிட்டு வரும். உனக்கும் உன் வீட்டுக்காரனுக்கும் வேலை குறையுதில்ல..அப்புறம், அந்த பிள்ளை நம்ம பப்பாக்களுடைய ரூமிலேயே படுத்துக்கட்டும்..’ என்று சொல்லிவிட்டு நகர, லக்ஷ்மி, ‘எனக்கென்ன வந்தது, எங்க சம்பளத்தில் கைவைக்காம இருந்தா சரி.’ என்ற முணுமுணுப்புடன் கிட்சனுக்குள் நுழைந்தாள்.

காலையில் காரில் வரும் போது, சம்முகத்திடம் இருந்து கழட்டிய செயினை டிரஸரின் மீது வைத்தது ஞாபகத்துக்கு வர, அதை எடுத்து சேப் லாக்கரில் வைத்து பூட்டினாள் பார்வதி.

இரவில் படுக்க தயாராகும் போது, அவரிடம் ‘ நாளைக்கு எனக்கு லைன்ஸ் கிளப் வேலை இருக்கு. காலையில் என்னை டிராப் பண்ணிருங்க..’ என்றாள்.

‘உம்..அந்த பிள்ள எப்படி இருக்கு? அதுக்கு நம்ம வீடு பிடிச்சிருக்கா..’

‘என்னமோ தெரியல. பேசவே மாட்டேங்குது. சரியா சாப்பிடமாட்டேங்குது. பால்கனியில நின்னு, தோட்டத்துல நின்னு, கேட் கிட்டே நின்னுன்னு நல்லா வேடிக்கை மட்டும் பார்க்குது. அப்புறம் நம்ம பிள்ளைங்க வந்தபிறகு, அதுங்க பின்னாடியே அலையுது. கேட்டதெல்லாம் எடுத்துக் கொடுக்குது. சில நேரம் ஆச்சின்னு சத்தம் போட்டு அழுது..ம்ம்..’ என்றாள்.

அவரும், ‘ எனக்கு இது சரின்னு படல பார்வதி. பேசாம ஸ்டேஷன்லே சொல்லிருவோம். பின்னாடி பிரச்சனை ஆகிறக்கூடாது பாரு.’ என்றார்.

‘இல்ல, கொஞ்ச நாள் இருக்கட்டும். ரெண்டு பிள்ளைங்களுக்கும் இப்போ பப்ளிக் எக்ஸாம். +2 வும், 10த்தும். இன்னும் மூணு மாசம்தானே. இருக்கட்டும். அப்புறம் ஊரிலே போலீசில் கொண்டு விட்டுவிடுவோம்.’ என்றாள்.

வீடே அசாத்திய அமைதியுடன் காட்சி அளித்தது. ஆத்தா இன்னும் எழுந்துக் கொள்ளவேயில்லை. ராசு ஆத்தாவின் அறைக்குள் நுழைந்தான். அழுது

அழுது முகமே வீங்கியிருந்தது. வெறும் காப்பி தண்ணியிலேயே சாப்பாட்டை முடித்துக்கொண்டிருக்கிறாள் இந்த இரண்டு நாட்களாய்.

கட்டிலின் ஓரமாய் அமர்ந்து மெல்ல எழுப்பினான். மெதுவாய் கண் திறந்தவள் மகனைப் பார்த்ததும் அழுகுரல் எழுப்பினாள். சுசீலா சாப்பாட்டு தட்டுடன் வந்தாள் உள்ளே.

‘ராசா, போலீஸ் கண்டுபிடிச்சிட்டாங்களாய்யா நம்ம சம்முகத்தை..’ என்ற கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல், ராசுவின் கண்களில் கண்ணீர்.

புரிந்துப்போனது ஆத்தாவுக்கு. ‘ஆத்தா, அவ நம்ம சிவராஜ் மளிகைக்காரர் மக இருக்குல்ல, மல்லிகான்னு, அது கூடதான் நடந்து வந்திருக்கா. சண்டை போட்டுக்கிட்டு இரண்டும் தனித்தனியா வீட்டுக்கு கிளம்பிருக்குங்க. இவ எங்கே போனான்னு தெரியல. நம்ம ரயில்வே ஸ்டேஷன்கிட்டே தான் இது நடந்திருக்கு. நம்ம பாப்பு கோனார்தானே ஸ்டேஷன் மாஸ்டர். அவர்கிட்டேயும் கேட்டுட்டேன். அவரும் சம்முகத்தை காங்கலைங்கிறாரு..என்ன செய்றதுன்னு தெரியல ஆத்தா..’

‘ஆத்தா, கொஞ்சம் சாப்பிடுங்க. அய்யன் போன பிறகு, நீங்க நிமிர்ந்து நின்னுதான் இம்புட்டையும் எங்கள சாதிக்க வச்சிருக்கீங்க. இப்போவும் கொஞ்சம் தெம்பாய் இருந்தீங்கன்னா, நாங்க தேடிக் கண்டுபிடிச்சிருவோம்.. ’என்றான் ராசு.

இட்லி தட்டை ஆத்தாவிடம் கொடுத்த சுசீலாவைப் பார்த்து, ‘பிரோகுள்ளே அந்த செயின் இருந்துதான்னு பார்த்திட்டியா சுசி?..’ என்று கேட்டான்.

‘பார்த்துட்டேன் அத்தான். அங்கே இல்ல..’ என்றாள்.

‘சரி, அப்போ அது அவ கழுத்துலேதான் இருந்திருக்கணும். அதையும் ஒரு எட்டு ஸ்டேஷன் போய் சொல்லிட்டு வந்துர வேண்டியதுதான். அவங்களும் அந்த செயினுக்காகதான் அவளை யாராவது கூட்டிகிட்டுப் போயிருக்கனும்னு சொல்றாங்க..’ என்று சொல்ல, ஆத்தா, ‘ அய்யோ, அந்த பிள்ளைக்கு ஒரு விவரமும் தெரியாதே. யார் என்ன சொன்னாலும் புரிஞ்சுக்கவும் தெரியாதே.ஒண்ணுமே தெரியாத பிள்ளையை யார் என்ன செய்தாங்கன்னேத் தெரியலையே. என்னை விட்டு ஒரு எடம் நகராது. இப்படி ஒரு பிள்ளையை எங்களுக்குக் கொடுத்துட்டு ஏன் இப்படி காணாம அடிச்சிட்டே சாமி..’ ன்னு தொடங்க, சுசீலா அவளை சமாதானப்படுத்தத் தொடங்கினாள்.

ராசு கிளம்ப, ஆத்தா சுசீலாவிடம், ‘சுசி, நாம குலதெய்வம் கோயிலுக்குப் போய் ஒரு வேண்டுதல் வச்சிட்டு வருவோம்..ஏற்பாடு பண்ணச் சொல்லுத்தா..’ என்று சொல்ல, அவளும் தலையாட்டினாள்.

அனாமிகா சலித்துப் பார்த்து, ஒரு டாப்ஸுமே சரியில்ல என்று அலுத்துக்கொண்டாள் ஷஷுவிடம். திரும்பிப் பார்த்தால், அந்த பட்டிக்காடு லைப்ஸ்டைல் கடையில் இருப்பதையெல்லாம் பராக்குப் பார்த்துக்கொண்டிருந்தது.

‘யேய், கமான்..’ என்றாள். உடனே இவளிடம் வந்து ஒட்டிக்கொண்டாள். ‘இப்போ கொஞ்சம் இங்கிலீஷ் புரியுதுல இவளுக்கு..’ என்று சொல்லி இருவரும் சிரிக்க, சம்முகமும் சிரித்தாள்.

‘இவளுக்கும் ஒரு ஸ்கர்ட் எடுப்போம் ‘ என்றாள் ஷஷு. அடர்வண்ணத்தில் நிறைய வேலைபாடுகளுடன் கூடிய ஒரு ஸ்கர்ட் எடுத்து, சம்முகத்தை டிரையல் ரூம் கூட்டிப் போய் போடச்செய்து, அதையே வாங்கியும் ஆகிவிட்டது.

சாப்பிட புட் கோர்ட் போனால், கூட்டம் அதிகமாய் இருந்தது. சம்முகம் அனாவிடம் ஒண்டிக் கொண்டாள். அவள் உடனே, ‘யேய், என்ன செயறேப்பா. நீ பெரிய பொண்ணு. ஸ்டேன்ட் அலோன்..’ என்று ஒரு சிரிப்புடன் சொல்ல, இவளுக்கு வெட்கமாகப் போய்விட்டது. சரிக்கா என்று சொல்லி தள்ளி நடக்கத் தொடங்கினாள்.

இரண்டு பிளேட்டில் சாப்பாட்டுடன் சம்முகத்திடம் கொடுத்து ஓரிடத்தில் போய் உட்காரச் சொன்னார்கள். இவளுக்கு என்ன செய்ய என்றே தெரியவில்லை. உட்காரும் நாற்காலி எல்லாம் பளபளன்னு கூடை மாதிரி வளைந்திருந்தது. ஒரு டேபிளில் பிளேட்டை வைத்துவிட்டு அந்த பிளாஸ்டிக்கூடைக்குள் எப்படி உட்கார என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

நம்ம ஊரில் இதெல்லாம் ஏன் இல்லை, இருந்தால், நம்ம ஆச்சியை உட்கார வைக்கலாம் என்ற நினைத்ததும், அவளோட குண்டு ஆச்சி இதுக்குள்ளே தன்னை திணிச்சுக்கிட்டு உட்காரந்திருப்பதாகக் கற்பனை செய்தவுடன் சிரிப்பு வந்தது சம்முகத்துக்கு. கடகடன்னு வாய்விட்டு சிரிக்க, பின்னாடியே இன்னொரு பிளேட்டுடன் வந்துக்கொண்டிருந்த அனா, ‘யேய், வாட் ஆர் யு டுயிங்..கண்ட்ரோல் யுவர்ஸெல்ப்..’ என்று ஒரு சிரிப்புடன் சொல்ல, மறுபடியும் வெட்கப்பட்டுப் போனாள் சம்முகம்.

எப்போவும் யாராவது இவளை ஏதாவது சொன்னால் அழுதிருவா. இப்படி வெட்கப்படுதல் அவளுக்கே புதிதாய் இருந்தது. அவளுக்கு இந்த உலகம், இந்த ரெண்டு அக்காமார் எல்லாமே புதிதாய் இருந்தன.

வண்டியை விட்டிறங்கி, நிறுத்தியிருந்த வேன்கள் தாண்டி, கோவிலைப் பார்த்து நடக்கும்போது, கடா வெட்டுமிடம் ஆத்தாவின் கண்ணில்பட்டது. போனமுறை வந்தபோது, வேண்டுதலுக்காக கடா நிறைய நிறுத்தப்பட்டிருந்தன இங்கு.

ஆத்தாவும் சம்முகமும் அதை கடக்கும் சமயம், ஒரு கடாவை வெட்டிக் கொண்டிருந்தார்கள். வெட்டுவதைப் பார்த்ததுதான் தாமதம், அங்கே ஆரம்பித்த அழுகை வீடு வந்துசேரும் வரை ஓயவில்லை சம்முகத்துக்கு. ராத்திரி கனவு கண்டு பயந்து எழுந்தாள்.

அது சாமிக்கு நேந்துவிட்டது பிள்ள. அதை நாம அதுக்குதான் கொடுக்கணும்னு ஆத்தா சொன்னதெல்லாம் அந்த சின்ன தலைக்குள் ஏறவேயில்லை. ‘அது பாவம் ஆச்சி..’ என்று சொன்னதையேத் திருப்பி திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

கோவிலின் முன் அய்யனார் குதிரை வண்ணப்பூச்சுகளுடன் கம்பீரமாய் நின்றிருந்தது. வெயில் சூடு தாங்காமல், சம்முகம் அதற்கு அடியில் போய் நின்றுக்கொண்டது நினைவுக்கு வந்தது.

அய்யனார் முன் நிற்கும்போது, ஆத்தாவுக்கு கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ‘அய்யா, எம் பேத்தி பூ மாதிரி. எங்கே இருந்தாலும் எங்கிட்டே கொண்டு வந்துருப்பா. என்னிய விட்டுட்டு அவ இருக்கமாட்டா. கூட்டிக் கொண்டு வந்து எங்கிட்டே சேத்துரு அய்யா. அவளுக்கு பிடிக்காட்டியும் உனக்கு கடா வெட்டிக் காணிக்கை செலுத்துறேன்..அவள கூட்டிட்டு போனவன் எவனாயிருந்தாலும் விளங்காம போயிருவான். கை காலோட நல்லாயிருக்க மாட்டான்…’ என்று வாய்விட்டு புலம்பிக் கொண்டிருந்தவளைக் கைத்தாங்கலாய் சுசீலா அழைத்துவந்து ஓரிடத்தில் உட்கார வைத்தாள்.

கோவிலின் சுற்றுப் பிரகாரத்தில் பேச்சியம்மன் சாமி ஆராதனை ஏதுமற்று அமைதியாய் வீற்றிருக்க, ஆத்தா அந்த தெய்வத்திடம் மௌனமாய் பேசிக் கொண்டிருந்தாள். ‘நீ சம்முகத்தை என்கிட்டே சேத்துருவேன்னு. எனக்குத் தெரியும். ஆனால், என் மனசுக்குள்ளே ஒரு கோடு இருக்கு தாயி. தாயில்லா அந்த புள்ளையை உன் முன்னாடிதானே பொறுப்பேத்துகிட்டேன். அத பொத்தி பொத்தி வளத்துக்கிட்டு இருக்கேன்னு உனக்குத் தெரியும். அந்த

புள்ளைய நிமிர்க்கிற வரைக்கும் நான் இருக்கணும்னு ஒரு கோடு போட்டு வச்சிருக்கேன். இப்போ சம்முகத்தை தொலைச்சிட்டேன். நீ அவள எங்கிட்டே சேர்த்துருவேன்னு நம்புறேன். என் கோட்டை கலைச்சிராதே அம்மா. கூட்டிட்டுப் போனவன மட்டும் சும்மா விட்டுராதே அம்மா. அவன் பிள்ளைகுட்டிக்கும் இதே கதி வரணும்..’ என்றெல்லாம் மனதுக்குள் உக்கிரமாய் நேர்ந்துக் கொண்டிருந்தாள்.

சம்முகத்தைக் கூட்டிக்கொண்டு மளிகை சாமான் வாங்க, கடைக்குக் கிளம்பினாள் லக்ஷ்மி.

வீட்டு கேட்டைத் தாண்டுவது மிக அரிது லக்ஷ்மிக்கு. அவளுக்கும் அவள் வீட்டுக்காரருக்கும் இங்கே உள்ளேயே சின்ன வீடொன்று தோட்டத்தின் ஓரமாய் இருக்கிறது. பெரும்பாலும் வீட்டுக்குத் தேவையானதை அவனே வாங்கி வந்துவிடுவான். அய்யாவுக்குக் கருப்பட்டிக் காப்பி வேணும். கருப்பட்டி, சுக்கு இப்படி சில சாமான்கள் இவங்க காரில் போய் வாங்கும் பெரிய கடைகளில் கிடைப்பதில்லை. அதனால் கொஞ்சம் தள்ளிபோய் பக்கத்துத் தெருமுனையில் இருக்கும் நாடார் கடையில் வாங்குவது வழக்கம்.

பார்த்தவுடன் அண்ணாச்சி வாம்மா என்றார். பெரிய ஐயா, அம்மா எல்லாம் நல்லாயிருக்காங்களா என்று விசாரித்தார். லக்ஷ்மிகிட்டே இருந்து லிஸ்டை வாங்கும் போதுதான் கவனித்தார், ஒரு குட்டி பொண்ணும் கூட வந்திருப்பதை.

‘யாரும்மா இது. அவங்க வீட்டு விருந்தாளியா..’ என்றார்.

‘இல்ல..ஊரிலிருந்து கூட்டிட்டு வந்திருக்காங்க நம்ம வீட்டு பாப்பாக்களுக்கு உதவியா இருக்க. நானே எல்லா வேலையும் செய்ய வேண்டியதாயிருக்கே அதுக்குதான்..’ என்றாள்.

‘உன் பெயர் என்னம்மா..’ என்றார் சம்முகத்தைப் பார்த்து.

‘சம்முகம்..’ என்றாள். ‘அட, என்ன ஆம்பள பெயரா இருக்கு..’ எனக் கேட்டுச் சிரிக்க, ‘எங்க தாத்தா பேரு அது..’ என்றாள்.

இதைக் கேட்டவுடன் லக்ஷ்மி, ‘அட, இந்த பிள்ள இதுவரைக்கும் எங்ககிட்டே கூட சொல்லல, உங்களைப் பார்த்தவுடன் பேசுதே..’ என்று சிரித்துவிட்டாள்.

‘சரி அண்ணாச்சி, வரோம்..’ என்று பணம் கொடுத்துக் கிளம்பினாள்.

டவுனில் துணிக்கடை ஓன்று ஆரம்பித்து ஒரு வருடம் முடியப்போகிறது. பெரிதாய் கொண்டாட வேண்டும் என்று ஆத்தா சொல்லியிருந்தாள். அதுக்குள்ளே சம்முகம் காணாமல் போய்விட்டாள். கடைக்குள் நுழைந்து, அதன் அலுவலக அறைக்குள் நுழைந்தான் கணேஷ்.

அண்ணனும் ஜெயராஜ் அண்ணாச்சியும் பேசிக் கொண்டிருந்தார்கள். பொண்ணு கல்யாணத்துக்குத் துணியெடுக்க வந்ததாகவும், பொம்பளைங்க கடையில் துணி எடுத்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார். ‘நம்ம பிள்ளயைப் பத்தி ஏதாவது தெரிந்ததா..’ என்ற கேள்விக்கு, ‘இல்லை..மூணு மாசம் ஆச்சு..’ என்று முணுமுணுப்பாய் சொன்னான் கணேஷ்.

‘நானும் கொஞ்சம் சங்க வேலையில் பிசி ஆயிட்டேன். அதுதான் உங்களையும் உடனே கேட்டுக்க முடியல. இன்னைக்குக் கூட அந்த வேலையாதான் ராத்திரி நெல்லையைப் பிடிக்கிறேன். சென்னையில நாளைக்கு சங்க மீட்டிங். உங்க பிள்ள போட்டோ கொடுத்தீங்கன்னா, நான் கொஞ்சம் எங்க ஆளுங்ககிட்டே கொடுத்துத் தேடச்சொல்லுவேன்..என்ன சொல்லுதீக..’ என்றார்.

‘சரிங்க அண்ணாச்சி, தந்துவிடறோம்.’என்று டிரா திறந்து, சம்முகத்தின் நாலு போட்டோவைக் கொடுத்தான்.

அவர் கிளம்பியதும், இருவருக்குள்ளும் ஒரு மௌனம் நிலவியது. எந்த திசையில் தேடுவது என்றதான ஒரு புரியாத அழுத்தமான குழப்பம் ஒன்றே இப்போது இருக்கிறது அவர்களுக்கிடையில்.

மீட்டிங் முடிந்து, சங்க வேலைகள் சற்று ஒய்ந்த பின்தான் அவருக்கு சம்முகம் நினைவுக்கு வந்தாள். அங்கு வந்திருந்த சென்னையைச் சேர்ந்த மொத்த வியாபாரம் செய்யும் மூவரை அழைத்து, சம்முகம் குறித்து விலாவரியாக எடுத்துச் சொல்லி புகைப்படமும் கொடுத்தார்.

அவங்க சாமான் போடுற கடையில் எல்லாம் கொஞ்சம் போட்டோ காட்டிக் கேட்டுப்பார்க்குமாறும் ஏதாவது விவரம் தெரிந்தால், உடனே தனக்குப் போன் பண்ணுமாறும் சொன்னார்.

இனி கவிதாவின் திருமண அழைப்பிதழை இங்கிருக்கும் முக்கியமான உறவினர்களுக்குக் கொடுத்துவிட்டு ராத்திரி ரயிலைப் பிடிக்கணும் என்று எண்ணிக்கொண்டே கிளம்பினார்.

நகரத்திலிருந்து விலகியிருக்கும் அந்த நகருக்கு செல்வத்தின் மளிகை கடைக்காகவே வரவேண்டியிருக்கு மாணிக்கத்திற்கு. வண்டியை கடை முன் நிறுத்திவிட்டு, மூட்டைகளை இறக்கினார்.

‘இந்த முறை மிளகாய் வேண்டாமண்ணே, ஆந்திராவிலிருந்து காரமிளகாய் வந்திருக்கு. நிறைய பேர் அதை விரும்புறாங்க..’ என்று செல்வம் சொல்லிக் கொண்டிருக்கையில், ‘சரிப்பா, கொடுத்ததுக்கு மட்டும் கணக்கு இந்தா, காசு இப்போவா இல்ல வரவு வச்சுக்கவா..’ என்று மாணிக்கம் கேட்க, ‘வரவு..’ என்றார் செல்வம்.

‘கொஞ்சம் தண்ணி கொடுப்பா..’ என்று கேட்ட மாணிக்கத்திடம், ‘இன்னைக்கு கூட்டம் எப்படிண்ணே போச்சுது?’ என்று செல்வம் கேட்டார்.

‘எப்போவும் போலதான். சங்க தேர்தலுக்கு பதவி ஆசை. அடிச்சிகிறாங்க.’ என்றார்.

சரியென்று சொல்லிவிட்டு, கிளம்ப எத்தனிக்கும் போது, சட்டென்று நினைவுக்கு வந்தது ஜெயராஜ் அண்ணன் கொடுத்த அழகான அந்த சின்ன பெண்ணின் புகைப்படம். பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டு, அந்த புகைப்படத்துடன் செல்வத்தை அணுகினார்.

அவரிடம் ஜெயராஜ் சொன்ன விவரம் சொல்லி, சம்முகத்தின் போட்டோவைக் காட்டினார். அவனுக்கு இந்த குட்டிப் பொண்ணை எங்கேயோ பார்த்த நினைவு வந்தது. அந்த பெரிய வீட்டு லக்ஷ்மி கூட என்பது நினைவில் வந்தது.

உடனே அவரிடம் சொல்ல, அவர் ஜெயராஜை கூப்பிட்டுப் பேச, அவரும், ‘உடனே நாங்க வரோம் ஊரிலே இருந்து. வெளியே யார்கிட்டேயும் சொல்லவேண்டாம். நாளைக்கு காலையில் அங்கே இருப்போம். நீங்க ரெண்டு பெரும் ரெடியா இருங்க..’ என்று சொல்லி வைத்தவுடன், இருவர் முகத்திலும் ஒரு அனாயாசமான மகிழ்ச்சி.

‘ஆத்தா, சுசீலா, கணேஷ்…’ என்ற ராசுவின் பெரிய குரலில், ‘என்னப்பா..’ என்று ஆத்தாதான் முதலில் தள்ளாடி நடந்துவர, ‘ஆத்தா, நம்ம பிள்ள

கிடைச்சிட்டா..’ என்றான் கண்ணில் கண்ணீர் வழிய. ஆத்தா அப்படியே தரை தொட்டு கும்பிட்டா,’சாமி..’ என்று அரற்றியபடி.

இவன் அண்ணாச்சி சொன்ன விவரம் சொல்ல சொல்ல, எல்லோர் முகத்திலும் சந்தோஷம் பரவத் தொடங்கியது. உடனே கிளம்ப, கார் டிரைவருக்கு சொன்னான் கணேஷ்.

சுசீலா அதற்குள் பிள்ளைகளுக்கு எல்லாம் சொல்ல, கூச்சலும் கண்ணீருமாய் அந்த வீடு ஆனந்தப்பட்டது.

கடைக்காரன் செல்வம், மாணிக்கத்தை கடையில் இருத்திவிட்டு, அந்த பெரிய வீட்டை அடையாளம் காண்பிக்க மற்ற மூவரையும் அழைத்துச் சென்றான்.

ஹால் வாசலில் நின்று, ‘அம்மா..’ என்றான். அவனுக்கு அங்கு லக்ஷ்மியையும் அவள் வீட்டுக்காரரையும் தவிர, வேறு யாரையும் தெரியாது. பெரிய அய்யா, அம்மா எல்லாம் கண்ணாடி ஏற்றிய காரில் போவார்கள். அதனால் அவனால் தெரிந்துக்கொள்ள முடியவில்லை.

லக்ஷ்மி வந்தாள். அண்ணாச்சியையும் இன்னும் மூவரையும் பார்த்ததும், ‘என்ன அண்ணாச்சி..அய்யாகிட்டே ஏதாவது வேலையா..’ என்று கேட்டாள். ‘ஆமாம்மா, அய்யாவைப் பார்க்கணும்..’ என்றான். சிட்அவுட்டில் இருந்த சோபாவில் எல்லோரையும் உட்காரச் சொல்லிவிட்டு, உள்ளே போனாள்.

பத்து நிமிடம் ஆகியும் யாரும் வராததில் ராசுவுக்கு கோபம் வந்தது. ஜெயராஜிடம், ‘எதுக்குண்ணே காத்துகிட்டு இருக்கணும். உள்ளே போய் நம்ம பிள்ளையைக் கூட்டிகிட்டுப் போவோம்..’ என்று சொல்ல, கணேஷும் கோபத்துடன் எழுந்துக் கொள்ள, ஜெயராஜ்தான் ‘முதலில் உறுதிப்படுத்துவோம். அப்புறம் பேசுவோம்..’ என்று சொல்லி.

அமைதிபடுத்தினார்,

செருப்பு சத்தத்துடன், அந்த வீட்டின் பெரிய மனிதர் வந்தார். ‘வாங்க..’ என்று அவரும் அமர்ந்தார். ‘என்ன விஷயம்..’ என்று கேட்க, ஜெயராஜ்தான் பேசினார்.

‘இவங்க வீட்டு பிள்ள ஒண்ணு இங்கே இருக்கிறதா தகவல் தெரிந்து வந்திருக்கோம். அவள வரச்சொல்லுங்க..’என்றார்.

‘அப்படி யார் சொன்னது..’ என்றபடியே, பக்கத்தில் நிற்கும் கடைக்காரனைப் பார்த்தார். லக்ஷ்மி சொன்னவன் இவனாகத்தான் இருக்கும் என்று எண்ணினார்.

‘சரிங்க. ஒரு பிள்ளையை ஊரிலிருந்து நாங்க கூட்டிட்டு வந்தோம், அது எப்படி உங்க பிள்ளையாகும்?..’ என்றார். அவர்கள் கொஞ்சமாய் டென்ஷன் ஆவதை உணர்ந்தார். பார்வதி என்று உள்ளே குரல் கொடுத்தார், அவள் தன்னைவிட நன்றாய் சமாளிப்பாள் என்கிற நம்பிக்கையில்.

அவள் வந்ததும், விஷயத்தைக் கூறினார். பார்வதி கொஞ்சம் அரண்டு, ‘அது எங்க சொந்தக்காரப் பிள்ள..’ என்று இழுக்க, ராசு குரல் உயர்த்தி, ‘அதை நாங்க சொல்லணும்..’ என்று சொல்லிக் கொண்டே உள்ளே பார்த்து,’ சம்முகம்ம்ம்…’ என்று சத்தமாய் கூப்பிட்டான்.

அந்த குரலுக்கு, அப்பான்னு ஓடிவந்த சம்முகத்தை அப்படியே வாரிக் கொண்டான் ராசு.

‘நீங்க எல்லாம் எப்படி சார் சமுதாயத்தில பெரிய மனுஷனா இருக்கீங்க. ஒரு பிள்ளையைப் பார்த்ததும், அதை வீட்டுவேலைக்கு சேர்த்துக்கொள்ளும் எண்ணம் மட்டுமே எப்படி தோன்றுகிறது. அந்த குழந்தைக்கு அம்மா அப்பா இருப்பார்கள் என்பதும், குடும்பமே நிலைகுலைந்து போகுமே என்பதும் கூட உங்களுக்குத் தெரியாதா என்ன. போலிஸ்கிட்டே ஒப்படைக்கனும்ன்னு தோணாமல் சுயநலமாய் நடந்திருக்கீங்க. உங்க பிள்ளை தொலைந்து போய் இப்படி நிகழ்ந்திருந்தால், நீங்க என்ன செய்வீங்க…சொல்லுங்க..’ என்ற ராசுவின் அதட்டலுக்கு ஏதும் பேசவில்லை அவர்கள்.

‘என்னமோ நாங்க உங்க பிள்ளையைக் கடத்திகிட்டு வந்தா மாதிரி பேசுறீங்க. அனாதையா நின்னா, நாங்க கூட்டிட்டு வந்து பத்திரமா வச்சிருக்கோம்..’ என்று ஓங்கும் குரலில் தொடங்கி, ‘என்னது..’ என்று அதில் ஒருத்தர் நெருங்கி வந்ததும் கொஞ்சம் பயந்துப்போனாள் பார்வதி.

‘ஏதாவது பேசுனீங்க, என்ன செய்வோம்ன்னு தெரியாது. நாங்க ஏற்கனவே போலிசுக்கு சொல்லிட்டோம். உங்க பதிலை அங்கே சொல்லிகோங்க..’ என்று சொல்லிவிட்டு கிளம்பினார்கள்.

வண்டியை விட்டு இறங்கும் போதே, ஆச்சி என்று கூப்பிட்டுக்கொண்டே வந்தவளை, மடியிலிருத்தி, முத்தமாய் கொடுத்தாள் ஆத்தா. ‘ஆச்சி,

எச்சியாப்படுது. ப்ளீஸ் ஸ்டாப்..’ என்று சிரித்துக் கொண்டே சொன்னவளை ஆத்தா ஆச்சரியமாய் பார்த்தாள்.

‘அடியே சுசி, உம் பிள்ளையைப் பாரு. இங்கிலீஷ் எல்லாம் பேசுது..’ என்று சொல்ல, சுசீலா சந்தோஷமாய் சிரித்தாள்.

ராசுவும் கணேஷும் நடந்ததைச் சொன்னபோது, ஆத்தாவும், ‘அவங்களை விடக்கூடாது. நான் பேச்சியம்மன்கிட்டே வேண்டியது வீண்போகாது..’ என்று கோபமாய் சொன்னாள்.

மதிய சாப்பாட்டின் போது, அந்த பண்ணை வீட்டில் பணியாரங்களும் பாயசங்களுமாய் வலம் வர, ஆச்சி மட்டும் காலையில் இருந்தே, தன் பேத்தியைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இன்று சம்முகம் குளிக்கப் போனவள், கதவை உள்ளே தாளிட்டுக் கொண்டதும் மெல்லிய குரலில் பாடிக்கொண்டிருந்ததும் ஆத்தாவை ஆச்சரியப்படுத்தியது. முன்னே எல்லாம் இவளைக் குளிக்க அனுப்பிவிட்டு, சுசீலா அடுக்களைக்கும் குளியலறைக்குமாக அலைந்துக் கொண்டிருப்பாள்.

துணி மாற்றும்போது கூட, தானே பீரோவைத் திறந்து, ஒரு டிரெஸ்ஸை போட்டுக்கொண்டாள். அவள் வெளியே வந்தபோது, வீட்டில் எல்லோரும் வாயடைத்துப் போனார்கள். கல் வேலைப்பாடு செய்த அந்த பாவாடை சட்டையை போடமாட்டேன் என்று ஒரு காலத்தில் அடம் பிடித்தவள், தானே எடுத்து அதை போட்டுக்கிட்டு வந்திருக்கிறாளே என்று.

ராமு, இவளின் அருகில் வந்து, ‘கொஞ்சம் வெள்ளை ஆகிட்டே அக்கா..’ என்றதற்கு, அழகாய் கண் சிமிட்டி ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு, ‘தேங்க்ஸ்டா..’ என்றாள்.

சாப்பிடும்போது, வாயைச் சுற்றி எல்லாம் எச்சிலாக்கி சாப்பிடுபவள், இன்று சாப்பிட சாப்பிட வாய் இலேசாய் துடைத்துக் கொள்வதும், சிந்தாமல் சாப்பிடுவதையும் பார்த்த ஆச்சிக்கு சற்று வித்தியாசமாய் இருந்தது.

சாப்பாடு முடிந்ததும், ராசுவையும் கணேஷையும் கூப்பிட்டுவிட்டாள். அவர்களிடம், ‘அந்த குடும்பத்தை மன்னிச்சு விட்டுவிடலாம்.’ என்றாள். அதிர்ந்து போனார்கள் இருவரும். ‘முடியாது..’ என்றான் ராசு கோபமாக.

‘ராசா, கொஞ்சம் அமைதியாய் யோசி. உன்னை விட உக்கிரமாய் இருந்தேன் நான். ஆனா, இன்னைக்கு அவ வந்ததிலிருந்து கவனிச்சுப்

பார்த்தியா…அழவேயில்ல, பிடிவாதம் பிடிக்கவேயில்ல, யார்கிட்டேயும் தெறிச்சு பேசவேயில்ல, பேசாம இருக்கல, இங்கிலீஷ் வேற பேசுதா பிள்ள, நிறைய மாறியிருக்கா. அந்த வீட்டில் பொம்பள பிள்ளைங்க இருந்ததா சொன்னீங்க இல்லையா, அதுவும் ஒரு காரணமா இருக்கும். அவங்கள பார்த்து இவ தெளிஞ்சிருப்பா.

அதேபோல, அவங்க யாரைப் பற்றியும் அவகிட்டே புகாரே இல்ல. அவங்க இவள தங்களோட சுயநலத்துக்காகப் பயன்படுத்திகிட்டாலும் கூட, இவள அங்கே நல்லாத்தான் நடத்தியிருக்காங்க. நல்ல சாப்பாடு, நல்ல துணி, அந்த பிள்ளைங்க கூடவேதான் படுக்கை என்று நல்லாத்தான் பார்த்துகிட்டு இருந்திருக்காங்க.

இதுக்கும் மேல, நம்மாலே முடியாத ஒண்ணை, சரியாகாது என நாம நினைச்ச நினைப்பை, நம்ம பிள்ளையை சரிசெய்திருக்காங்க. ஒரு வேளை இப்படி நடக்கணும் இவ மாறணும்ன்னு பேச்சியம்மன் நினைச்சுதோ என்னமோ. அவுகளை நாம விட்டுருவோம்ப்பா. என் மனசுக்குள்ளே நான் போட்ட கோடு கலையாம இருக்கிறது இப்போ அந்த பேச்சியம்மனுக்கும் புரியும்..’ என்றபடி, கோவிலின் திசை நோக்கி கும்பிட்டாள்.

ஆத்தாவின் ஒவ்வொரு சொல்லிலும் இருந்த உண்மை இருவருக்குள்ளும் உரைக்க, கட்டுப்பட்டார்கள் தங்கள் தாயின் வார்த்தைகளுக்கு.

‘நான் இல்லாம எவ்வளவு மெலிஞ்சிட்டே ஆச்சி..’ என்ற சம்முகத்தை, மடியிலே இருத்தி உச்சி மோந்து, உள்ளே திரும்பி, ‘சுசி, நம்ம சம்முகத்தை பெரிய புள்ள ஆக்கின பேச்சியம்மனுக்கு நாளைக்கு ஒரு பொங்க வச்சிட்டு வருவோம், கடா வெட்டாம..’ என்று கண்ணெல்லாம் அழுகையும் சிரிப்புமாக சொன்ன ஆத்தாவின் மேல் சந்தோஷமாய் சாய்ந்துக் கொண்டாள் சம்முகம்.

………………………………………………

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *