Sunday, January 21, 2018

.
Breaking News

அவள்…! (சிறுகதை) — } ஏலையா க.முருகதாசன்.

அவள்…!  (சிறுகதை) — } ஏலையா க.முருகதாசன்.

அவசரமாக வெளிக்கிட்டு வேகமாக கதவு வரையும் போன தர்சினியை “எங்கை அவசரமாகப் போகிறாய்” எனக் கேட்ட தாயின் குரல் தடுத்து நிறுத்துகின்றது.

“சகானா” அவசரமாகக் கதைக்க வேணுமாம் வரச் சொன்னவள் அதுதான் போய்க் கொண்டிருக்கிறன்” என்று போன போக்கில் சொல்லிக் கொண்டே தர்சினி பெருந்து நிலையத்தை நோக்கி வேகமாக நடக்கிறாள்.

தன்னை அவசரமாக வரச் சொன்ன சகானாவின் குரலில் வழமைக்கு மாறான பதட்டமும் சோகமும் இருப்பதை கைத்தொலைபேசியில் பேசிய தொனியிலிருந்து அறிந்து கொண்ட தர்சினி நிலை கொள்ளாமல் தவித்தாள்.

தர்சினியும்; சகானாவும் அவர்கள் இருவரும் வசித்து வந்த அனன்பேர்க் நகரில் ஒரே வங்கியில் வேலை செய்பவர்கள்.அதனால் சகானாவின் குணத்தை அவள் அறிந்து வைத்திருந்தாள் .சகானா எளிதில் உணர்ச்சிவசப்படுபவள், வேகமாக கோபப்படுபவள். பலமுறை அது அவளுக்குப் பாதமாகவே முடிந்திருக்கிறது.என்னவாக இருக்கும், அவசரமாக கதைக்க வேணும் என்று ஏன் வரச் சொன்னவள் என அவளுடன் பழகி வரும் நாட்களில் ஏற்பட்ட நிகழ்வுகளையும் நினைவுக்கு கொண்டு வந்து அதுவாக இருக்குமோ இதுவாக இருக்குமோ என எண்ணியவாறு பேருந்து நிலையத்திற்கு வந்தவள் புறப்பட கதவு பூட்டிய நிலையில் ஆயத்தமாயிருந்த பேருந்தின் சாரதிக்குக் கையைக் காட்டி நிறுத்தும்படி செய்து வேகமாக ஏறி மூச்சு வாங்கியபடி இருக்கையில் அமர்கிறாள்.

“நான் வந்து கொண்டிருக்கிறேன்” எனக் குறுஞ்செய்தியை அனுப்பிய தர்சினி யன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள்.அவளுக்கு என்ன நடந்திருக்கும் என்ற பதட்டத்துடன் அவள் வரச்சொன்ன இடத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் இறங்கியவள், இறங்கிய இடத்தில் உள்ள கடைத்தொகுதி சுணையின் படிக்கட்டில் சகானா உட்கார்ந்திருப்பதைக் கண்ட தர்சினி வேகமாக அந்த இடத்திற்கு போய்ச் சேருகிறாள்.அவளின் தோளில் கைவைத்தபடியே சகானாவின் அருகில்

உட்காருகிறாள்.தனது தோழியைக் கண்டதும் சகானா குமுறி அழுதபடி அவளின் தோளில் சாய்ந்து விம்மி விம்மி அழுகிறாள்.

“என்னடி சொல்லு ஏன் அழுகிறாய் ” என்று சொல்லியவாறு அவளின் தலையை நிமிர்த்துகிறாள். தான் இனி உயிரோடை இருக்கமாட்டன் எனச் சொல்லியவாறு தனது கைத்தொலைபேசியில் தனது பெயரில் இருக்கும் முகநூலைக் காட்டுகிறாள். சகானாவின் பெயரில் அவளின் அரைகுறை நிர்வாணப்படங்கள் இருக்கின்றன. வெவ்வேறு இளைஞர்களை கட்டியணைத்தபடி இருக்கும் படங்களும் இருக்கின்றன.

அதிர்ச்சியடைந்த தர்சினி “என்னடி இதெல்லாம்” என்று கேட்க, என்னுடைய படத்தை எங்கிருந்தோ எடுத்து யாரோ எனது பெயரில் முகநூலைத் திறந்து இப்படிச் செய்திருக்கிறார்கள்” என அழுதவாறு சொல்கிறாள். படங்களுக்குக் கீழ் ஜேர்மன் மொழியிலும், ஆங்கிலத்திலும், தமிழிலும் மிக மோசமான அருவருக்கத்தக்க கருத்துக்கள் இருந்தன.

“இது உன்னுடைய படமா” தர்சினி கேட்க,என்னுடைய முகத்தை எடுத்து யாரோ கிராபிக்கில் இதைச் செய்திருக்கிறார்கள். ஆனால் எந்த வித்தியாசமும் தெரியாமல் செய்திருக்கிறார்கள், இந்தப் படங்களை அழிப்பதற்கு நான் எவ்வளவோ முயற்சித்தும் முடியாமல் போய்விட்டது.அப்பா அம்மாவிற்கு இன்னும் தெரியாது, தெரிந்தால் என்ன நடக்குமோ தெரியவில்லை.

“நான் உனக்குக் கனநாளாய்ச் சொன்னனான் தெரியாதவர்களை முகநூலில் இணைக்க வேண்டாம் என்று.நிறைய லைக்குகள் கிடைக்க வேண்டுமென்ற பேராசையாலை அறியாதவர்கள் எல்லாரையும் இணைத்து இப்ப பார் எங்கை போய் முடிஞ்சிருக்கு என்று, பொலிசிலை போய் அறிவித்தியா” என தர்சினி கேட்க இல்லை என்கிறாள்.”சரி வா என்னுடன,; பொலிசிலை போய் முறைப்பாடு கொடுத்தால் அவர்கள் யாருடைய கொம்பியூட்டரிலிருந்து இந்த முகநூல்

செய்யப்பட்டது என்று கண்டுபிடித்துச் சொல்வார்கள் வா”என தர்சினி சகானாவின் கையைப் பிடித்து எழுப்புகிறாள்.”தர்சினி வேண்டாம் வேண்டாம் அது எல்லாருக்கும் தெரியவந்திடும் வீட்டுக்கும் தெரிந்திடும்” என அவளைத் தடுக்கிறாள். மீண்டும் அவள் பக்கத்தில் உட்கார்ந்த தர்சினி” உன்னட்டை ஒரு விசயம் கேட்கிறன் மறைக்காமல் சொல்லு, உன்னை யாரையாவது காலித்து நீ அவனை வேண்டாம் என்று அவனுக்கு சொல்லியிருக்கியா” எனக் கேட்க, கொஞ்சம் தடுமாறிய சகானா “இல்லை இல்லை அப்படி யாரையும் நிராகரிக்கவில்லை”என்கிறாள்

சகானாவின் பதிலில் திருப்திப்படாத தர்சினி. “நீ எதையோ மூடி மறைக்கிறாய் முகமே காட்டுது” எனச் சொல்ல, “தர்சினி சொன்னால் நம்பு அப்படி ஒன்றும் இல்லை” என்கிறாள்.மனதைப் போட்டுக் குழப்பாதை, கோபத்தைக் குறைத்துக் கொள், உணர்ச்சிவசப்படாதை உன்னுடைய குணம் எனக்குத் தெரியும், வீட்டிலை போய் அமைதியாக இரு. இதை யார் செய்தது என்பதைக் கண்டுபிடித்துவிடலாம்” எனச் சொல்லியவாறு அவளையும் அழைத்துக் கொண்டு பேருந்தில் ஏறி இருவரும் போகிறார்கள். சகானா தான் இறங்க வேண்டிய இடம் வந்ததும் இறங்கி தனது வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தாள்.

தர்சினி வீட்டின் கதவைத் திறந்ததும்” தாய் பதட்டத்துடன் சகானாசை; சந்திச்சியா” என்கிறாள்” ஓமம்மா” என்கிறாள். “அங்கை ஏதோ பிரச்சினையாம் சகானாவை தகப்பன் அடிக்கப் போக அவள் கோபத்திலை நிலம் கழுவிற தண்ணியை எடுத்துக் குடிச்சிட்டாளாம். ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனவை ஒரு ஆபத்தும் இல்லையாம்” எனத் தாய் சொல்ல அதிர்ச்சியடைந்த தர்சினி”யாரம்மா சொன்னது” எனக் கேட்க, பக்கத்து வீட்டு சகுந்தலா சொன்னவள்” என்கிறாள்.வந்த வேகத்திலே தர்சினி சகானா இருக்கும் ஆஸ்பத்திரிக்கு ஓடுகிறாள்.

சகானாவை ஆஸ்பத்திரியில் பார்த்திட்டு வந்ததன் பின் தர்சினி அமைதியாக இல்லை. தனது தோழியின் தற்கொலை முயற்சிக்கு யார் காரணமாக இருக்கும் எண்ணியபடியே இருந்தாள்.

அன்றிரவு தனது லப்ரப் பழுதடைந்துவிட்டதால் தனது அண்ணனின் கொம்பியூட்டருக்கு முன்னால் இருந்து, ஒரு ஆய்வுக்கட்டுரையை பதிவு செய்வதற்காக பதியாத பென்றைவ் இருக்குதா என ஒன்றை எடுத்து கொம்பியூட்டரில் பொருத்தி கிளிக் செய்தவளுக்கு பெரும் அதிர்ச்சி. சகானாவின் முகநூலில் இருந்த அவளின் அரைகுறை நிர்வாணப்படங்கள் அத்தனையும் இருந்தன.சகானாவின் போலியான முகநூலும் அதில் இருந்தது.கோபத்தின் உச்சிக்கே போய்விட்டாள் தர்சினி.வேகமாக கூடத்திற்கு வந்த தர்சினி அங்கே தாயும் தகப்பனும் தனது அண்ணனும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருப்பதை; கண்டதும்” டேய் நீதானா அந்தக் கேவலமான வேலையைச் செய்தனி” என்று கோபத்துடன் அவன் சட்டையைப் பிடித்துக் கொண்டே, அவன் முகத்துக்கு நேரே பென்றைவ்வைப் பிடித்தபடி “இது என்ன” பல்லை நெருமினாள்.

அண்ணா அண்ணா எனப் பாசமாக அழைப்பவள் பத்திரகாளியாக டேய் என்று சொல்லி நின்றதைப் பார்த்து தகப்பனும் தாயும் திகைத்து நிற்க , சகானாவின் அரைநிறை நிர்வாணப் படங்களைப் போட்டு முகநூல் செய்தவன் இவன்தானப்பா, அவள் தற்கொலை செய்யப் போனதற்கும் இவன்தானப்பா காரணம், இனி எப்படி அவளின்ரை முகத்திலை விழிப்பன் என விக்கி விக்கி அழுது கொண்டே எல்லாவற்றையும் சொல்ல, “ஏனடா இந்த வேலையைச் செய்தனி” என அடிக்க கையோங்கிய கணவனைத் தாய் தடுத்து” சொல்லு ஏன் இப்படிச் செய்தனி சொல்லு, நீதான் இதைச் செய்தனி என்று மற்றைவை அறிந்தால் எங்களைக் காறித் துப்புவினமே, சொல்லடா ஏன் செய்தனி எனக் கேட்க” அவன் தலையைக் குனிந்தபடியே “அவளை நான் விரும்பினன், அதை அவளிட்டைச் சொன்னன், அதற்கு அவள் “உன்ரை மூஞ்சைக்கு நீ என்னை விரும்பிறியா” என்றாள் அதுதான்…” ” அதற்காக இப்படிக் கேவலமாகவா செய்வாய” என்ற தந்தை ;. இது பாரதூரமான குற்றம்.அதுகள் பொலிசிலை

அறிவித்தால் மானம்மரியாதை எல்லாமே போயிருக்கும். உனக்கும் ஒரு தங்கச்சி இருக்கிறாள் அதை நினைச்சியா, சகானாவுக்கு உன்னிலை விருப்பமில்லையென்றால் விட வேண்டியதுதானே. சகானாவின் அப்பா அம்மா எங்களுடைய குடும்ப நண்பர்கள். என்ரை கண்ணுக்கு முன்னாலை இப்ப எல்லாத்தையும் அழி…இப்ப அழிக்க வேணும்.. தந்தையின் கண்முன்னால் எல்லாவற்றையும் அழித்தான். இனி எப்படி அந்தக் குடும்பத்துடன் கதைக்க முடியும் எனக் கொலைக் குற்றவாளி போல நடுங்கி நின்றனர் தாயும் தகப்பனும். எனது அண்ணன்தான் இதையெல்லாம் செய்தான் என்று எப்படி என் தோழிக்குச் சொல்வேன் என எதுவுமறியாமல் தவித்து கண்ணீர் வழிய சோபாவில் ஒருக்களித்துப் படுத்திருந்தாள் தர்சினி.

 

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *