Sunday, January 21, 2018

.
Breaking News

ஏற்றம் தரும் எலுமிச்சை! – 300 மரங்கள்… ஆண்டுக்கு ரூ 7 லட்சம்…

ஏற்றம் தரும் எலுமிச்சை! – 300 மரங்கள்… ஆண்டுக்கு ரூ 7 லட்சம்…

இ.கார்த்திகேயன் – பா.சிதம்பரபிரியா – படங்கள்: எல்.ராஜேந்திரன்

றுகாய், கலவை சாதம், பழச்சாறு, சர்பத் எனப் பல உணவுப்பொருள்கள் தயாரிக்கப் பயன்படும் எலுமிச்சை, உடலுக்கு உடனயாகச் சக்தியைக் கொடுக்கும் பழங்களில் ஒன்றாக இருக்கிறது. இப்படி அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருள்களில் முக்கியமானதாக இருப்பதால், விவசாயிகளுக்கு வருமானம் கொடுக்கும் பயிராகவும் இருக்கிறது எலுமிச்சை. சந்தையில் எலுமிச்சையின் தேவையைப் புரிந்துகொண்ட விவசாயிகள் பலர், எலுமிச்சைச் சாகுபடியில் ஈடுபட்டு நல்ல லாபம் ஈட்டி வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த நடராஜன்.
தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற நடராஜன், தற்போது முழுநேர இயற்கை விவசாயியாக இயங்கிவருகிறார். கடையம் எனும் ஊரிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மாதாபுரம் கிராமத்தில் நடராஜனின் எலுமிச்சைத் தோட்டம் இருக்கிறது. பாறைகள் மிகுந்த கரடுமுரடான இப்பகுதியிலும் செழுமையாக எலுமிச்சைச் சாகுபடி செய்துவருகிறார் நடராஜன். 

நாம் வருவதை முன்கூட்டியே தெரிவித்திருந்ததால் எதிர்பார்த்துக் காத்திருந்தார். நாம் சென்றதும் தலையில் கட்டியிருந்த தலைப்பாகையை அவிழ்த்தபடியே நம்மை வரவேற்றுக் கைகுலுக்கியவர், தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். 

“சின்ன வயசுல இருந்தே  எனக்கு விவசாயம் பரிச்சயம். நான் பழைய எஸ்.எஸ்.எல்.சி வகுப்பு வரை (11 ஆண்டு படிப்பு) படிச்சுட்டு ஆஃபிஸ் பாய், வாட்ச் மேன்னு கிடைச்ச வேலைகளைச் செஞ்சுட்டு இருந்தேன். என்னோட மாமா என்னை  டி.டி.எட் படிப்புல சேர்த்துவிட்டார். அதை முடிச்சுட்டுப் பெட்டிக்கடை வெச்சேன். அதே நேரத்துல லீவ் போஸ்டிங் டீச்சரா (ஆசிரியர் விடுமுறையின்போது பணிபுரிபவர்) தற்காலிக வேலை கிடைச்சது. அதிலெல்லாம் கிடைச்ச வருமானத்தைச் சேர்த்து வெச்சுதான் இந்த நாலு ஏக்கர் நிலத்தை வாங்கினேன். அதுக்கப்புறம் அரசுப்பள்ளியில்  வேலை கிடைச்சது. வாத்தியார் வேலையைப் பாத்துக்கிட்டே விவசாயம் செஞ்சுட்டு இருந்தேன். 

காலையில அஞ்சரை மணிக்குத் தோட்டத்துக்கு வந்து வேலை செய்ய ஆரம்பிச்சிடுவேன். வேலைகளை முடிச்சுட்டுத் தோட்டத்துலேயே குளிச்சுட்டுப் பள்ளிக்கூடம் கிளம்பிடுவேன். சாயங்காலம் பள்ளிக்கூடம் முடிஞ்சதும் நேரா தோட்டத்துக்குதான் வருவேன். இருக்கிற வேலைகளைச் செஞ்சுட்டு வீட்டுக்குப் போவேன். இப்படியே 23 வருஷத்தை ஓட்டிட்டேன்.
2007-ம் வருஷம் தலைமையாசிரியரா இருந்து ஓய்வு பெற்றேன். அதுக்கப்புறம் முழு நேரமாக விவசாயம் செஞ்சிட்டு வர்றேன்” என்று தன் பழைய நினைவுகளில் மூழ்கிய நடராஜன் தொடர்ந்து பேச ஆரம்பித்தார்…
“இந்த இடம் முழுக்கச் சரளை மண் நிறைஞ்ச பாறைநிலம். ஓர் அடி தோண்டினாலே பாறை தென்படும். விவசாயம் செய்ற அளவுக்கு நிலத்தைச் சரி செய்றதுக்கே ரொம்பக் கஷ்டப்பட்டேன். ஆரம்பத்துல புளியங்கன்னு நட்டு வெச்சேன். இதோட காட்டுப்பருத்தி போட்டேன். பாறைக்கிடங்குகள், பள்ளங்கள்ல தேங்கியிருக்குற தண்ணீரைக் குடத்தில் மொண்டுட்டு வந்து செடிகளுக்கு ஊத்துவேன். 1990-ம் வருஷத்துல எங்க பகுதியில சொட்டுநீர்ப் பாசனமெல்லாம் அறிமுகமாகல. நான் அப்பவே ஹோஸ் பைப்ல துளைபோட்டு, அதுல குளுக்கோஸ் ஏத்துற டியூபைச் செருகிப் பாசனம் பண்ணிருக்கேன். 

இந்த நிலத்துல காய்கறிகளையும் சாகுபடி செஞ்சிருக்கேன். வேலைக்குப் போய்கிட்டே காய்கறி விவசாயம் செய்றது கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. அதனால, எலுமிச்சைச் சாகுபடி செய்யலாம்னு முடிவெடுத்து நூறு கன்னுகளை நட்டு வெச்சேன். அடியுரமா குப்பை எருவைப் போட்டாலும் ரசாயன உரம், பூச்சிக்கொல்லினு பயன்படுத்தித்தான் சாகுபடி செஞ்சேன். பெரிசா சொல்லிக்கிற மாதிரி லாபம் இல்லைன்னாலும், பத்துக்கு ரெண்டு பழுதில்லாம வருமானம் கிடைச்சுட்டு இருந்துச்சு. 

நான் ஓய்வுபெற்ற சமயத்துல, ஒரு கடையில ‘பசுமை விகடன்’ புத்தகத்தைப் பார்த்தேன். பார்த்த உடனே வாங்கிப் படிச்சேன். அதிலுள்ள கருத்துகள் எனக்குப் பிடிச்சுப்போகவும் தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சேன். அதுக்கப்புறம்தான் எனக்கு இயற்கை விவசாயம் பத்தின ஒரு புரிதல் வந்து, இயற்கை முறைக்கு மாற ஆரம்பிச்சேன். பசுமை விகடன் மூலமாத்தான் புளியங்குடி அந்தோணிசாமியைப் பத்தித் தெரிஞ்சுகிட்டேன். அவரைப் பார்த்துப் பேசி எலுமிச்சைச் சாகுபடி பத்தி நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுகிட்டு, கூடுதலா எலுமிச்சைக் கன்னுகளை நட்டேன். எட்டு வருஷமா முழு இயற்கை முறையிலதான் விவசாயம் செஞ்சுட்டு இருக்கேன்” என்ற நடராஜன் தோட்டத்தைச் சுற்றிக் காட்டிக்கொண்டே பேசினார். 

“மூணு ஏக்கர் நிலத்துல 300 எலுமிச்சை மரங்கள் இருக்கு. அரை ஏக்கர் நிலத்துல நூறு வகை மூலிகைச் செடிகள், முருங்கை, கொய்யா, மா, நெல்லினு வீட்டுத்தேவைக்காக நடவு செஞ்சிருக்கேன். அரை ஏக்கர் நிலத்தை நெல் சாகுபடிக்காக விட்டிருக்கேன். இதுல எலுமிச்சையிலதான் நல்ல வருமானம் கிடைச்சுட்டு இருக்கு. எலுமிச்சை நட்டா ரெண்டு வருஷத்துல இருந்தே பலன் கிடைக்க ஆரம்பிச்சிடும். 

எலுமிச்சையை நட்டு ஒன்றரை வருஷம் ஆனபிறகு பூக்களைப் பிஞ்சாக விட்டா, ரெண்டாம் வருஷத்துல இருந்து காய்கள் கிடைக்கும். காய் கிடைக்க ஆரம்பிச்ச முதல் வருஷம், மரத்துக்குக் குறைஞ்சபட்சம் முந்நூறு காய்கள் வரை கிடைக்கும். முறையா பராமரிச்சா அதிகபட்சமா 600 காய்கள் வரை கூட பறிக்கலாம்.
நட்ட மூணாம் வருஷம் பார்த்தா ஒரே மரத்துல பூ, பிஞ்சு, காய், பழம்னு எல்லாமே இருக்கும். அதனால, வருஷம் முழுசும் காய் பறிக்கலாம். மூணாம் வருஷத்துல இருந்து ஒரு மரத்துல குறைஞ்சபட்சம் 1,200 காய்கள் கிடைக்கும். நல்லா ஊட்டம் கொடுத்துப் பராமரிச்சு, நோய்கள் ஏதும் தாக்காம இருந்தா 1,500 காய்களுக்கு மேல கிடைக்கும். ஒரு தடவை கன்னு நட்டு வெச்சா 14 வருஷங்கள் வரை பலன் கிடைக்கும். அதுக்கு மேலயும் காய் காய்ச்சதுனா லாபம்தான். நான் ஆறு வருஷமா காய்கள அறுவடை செஞ்சுட்டு இருக்கேன். 

கடையத்துல இருக்கிற மார்க்கெட்டில் எண்ணிக்கை கணக்குலதான் விற்பனை செய்றேன். இயற்கை முறையில் விளைஞ்சதுனு கூடுதல் விலையெல்லாம் இல்ல. அன்னன்னிக்கு மார்க்கெட்ல என்ன விலை போகுதோ அதுதான் எனக்கும் கிடைக்குது. எங்க பகுதியில குற்றாலச் சாரல் நேரத்துல விலை இறங்கிடும். மழை பெய்ஞ்சாலே இங்க விலை கிடைக்காது. வெயில் காலம், கோயில் திருவிழாக்கள், முகூர்த்த காலங்கள்ல விலை ஏறும்” என்ற நடராஜன் வருமானம் குறித்துச் சொன்னார். 

“ஒரு வருஷம் அதிகளவுல பழங்கள் கிடைக்கும். சில வருஷங்கள் மகசூல் குறையும். தட்பவெப்ப நிலையைப் பொறுத்து மகசூல் அளவு மாறும். போன வருஷம் 300 மரங்கள்ல இருந்து விற்பனைக்கேத்த தரத்துல மொத்தம் 3 லட்சம் பழங்கள் கிடைச்சது. ஒரு பழம், ஒரு ரூபாய்ல இருந்து நாலு ரூபாய் வரை விற்பனையாச்சு. சில நாள்கள்ல ஏழு ரூபாய் வரைகூட விலை கிடைச்சது. மொத்தமா கணக்குப் பார்க்கிறப்போ 3 லட்சம் பழங்களுக்கும் சேர்த்து 9 லட்ச ரூபாய் வருமானமாகக் கிடைச்சது. அதுல தொழுவுரம், பராமரிப்பு, பறிப்புக் கூலி, போக்குவரத்துனு எல்லாம் சேர்த்து 1,30,000 ரூபாய் செலவு. மீதி 7,70,000 ரூபாய் லாபமா நின்னுச்சு. ஒவ்வொரு வருஷமும் எப்படியும் இந்த அளவுக்கு லாபம் கிடைச்சுடும்” என்ற நடராஜன் நிறைவாக, 

“எலுமிச்சையை எங்க பகுதிகள்ல ‘தங்கப்பழம்’னு சொல்வோம். எங்களுக்குத் தினசரி வருமானம் கொடுக்குற பயிர் இது. குறைந்தளவு தண்ணி இருந்தாகூட ஓரளவு வருமானம் பார்த்துட முடியும்” என்று சந்தோஷமாகச் சொல்லிக்கொண்டே கை நிறைய எலுமிச்சம் பழங்களை அள்ளிக்காட்டினார். 

தொடர்புக்கு,


நடராஜன், செல்போன்: 
98650 07858

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *