Friday, February 23, 2018

.
Breaking News

அப்பாவும் வீடும்!..… (சிறுகதை) — } ஏலையா க.முருகதாசன்.

அப்பாவும் வீடும்!..… (சிறுகதை) — }   ஏலையா க.முருகதாசன்.

“டேய் ரஜன் அப்பாவைக் காணவில்லையடா, டேய் எழும்படா. துளசி அப்பாவைக் காணவில்லையடி எழும்படி”

தனக்குப் பக்கத்தில் படுத்திருந்த கணவரைக் காணவில்லையென்ற பதைபதைப்புடன் வீடு முழுக்கத் தேடிய சகுந்தலா மகனின் அறைக்கதவையும் மகளின் அறைக்கதவையும் வேகமாகத் தட்டுகிறாள்.

மகனும் மகளும் அவசரமாக” அப்பாவைக் காணவில்லையா” எனச் சொல்லியவாறு ஒரே நேரத்தில் கதவைத் திறக்கிறார்கள். தாயின் கண்களிலிருந்து கண்ணீர் புகுபுகுவெனக் கொட்டுகிறது.

“அம்மா வீடு முழுக்கத் தேடினீங்களா, துளசி கேட்க, “எல்லா இடத்திலையும் தேடிப் போட்டன் ஒரு இடத்திலையும் இல்லையடி” இந்த மனுசன் எங்கை போச்சுதோ தெரியேலையே இப்ப நான் என்ன செய்வேன் கடவுளே” சகுந்தலா ; வாய்விட்டு அழுதபடி படியிறங்கி கூடத்துக்கு வர “அழதையம்மா அப்பா சில நேரம் நடக்கப் போயிருப்பார்” என ரஜன் சொல்ல “இந்த இரவு பன்னிரண்டு மணியிலோ நீ போய் ஒருக்கா காருக்குள்ளை பார்” என தாய் சொல்ல. போன வேகத்திலேயே திரும்பி வந்து ” அங்கையும் இல்லை”என்கிறான்.

“அவரை எங்கை போய் தேடுவன்” என அழுதபடியே தாய் இருக்க மகனும் மகளும் தாயின் இரு பக்கத்திலும் போய் இருக்கிறார்கள்;.”எல்லாம் இவனாலைதான் வந்தது” “இவன் என்னம்மா செய்தவன் டேய் அப்பாவோடை சண்டை போட்டியா” எனத்; துளசி கேட்க”இல்லை” என அவன் சொல்ல,”கொண்ணன் பொய் சொல்கிறான், இவ்வளவு காலத்திலை கொப்பா அழுது பார்த்தது இல்லை. படுத்தபடி கண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தார்.அழாதையுங்கோ எனச் சொல்லியும் அழுதாரடி” “அப்பா அழுமளவுக்கு சண்டை போட்டியா சொல்லடா சொல்லாட்டி அண்ணன் என்றுகூட பார்க்காமல் அடிப்பன் சொல்லடா”துளசி கண்கலங்கிக் கேட்க எதுவுமே சொல்லாது கண்கலங்கியபடி குனிந்த தலை நிமிராது ரஜன் இருந்தான்.

தாய், அன்று மாலை நடந்த சம்பவத்தைத் சொல்லத் தொடங்கினாள்.”கொப்பா கார் திருத்தினாரல்லோ அதாலை 300யூரோ வீட்டுக்குக் கட்ட குறைந்ததாலை இவனிட்டை பயிற்சிக் கல்லூரியில் கொடுக்கும் சம்பளக் காசிலிருந்து 300 யூரோ கடனாகத் தரும்படி கேட்க, உங்களை யார் வீடு வாங்கச் சொன்னது, எங்களை நம்பி ஏன் வீடு வாங்கினனீங்கள். என்னிடம் காசு இல்லை” இவன் சொல்ல, “எல்லாம் உங்களுக்காகத்தான் வாங்கினாங்கள் ” என்று அவர் சொல்ல,இவன் “நாங்கள் கேட்டனாங்களே வீடு வாங்கச் சொல்லி எல்லாரும் வீடு வாங்கினம் என்று கௌரவத்திற்குத்தானே வீடு வாங்கினனீங்கள்” என்று இவன்

சொல்ல” நன்றி கெட்ட பிள்ளைகள்” அவர் சொல்ல, “பிள்ளைகளைப் பெறாமல் விட்டிருக்க வேண்டும்” என்று இவன் சொல்ல வாய்த்தர்க்கம் முற்ற இடையிலை நான் வந்து தடுக்க “கொப்பா இனிச் செத்தாலும் இவனிட்டடை ஒரு சதமும் வாங்கமாட்டன்” என்று சொல்ல இரண்டு பேரையும் சும்மா இருங்கள் என சமாதானப்படுத்தினன். இதுவரையில் கொப்பா இவனிட்டை ஒரு சதமும் வாங்கினது இல்லை காசு இல்லையென்றால்; இல்லையப்பா என்று ஒற்றைச் சொல்லில் சொல்லியிருக்கலாம்.இவ்வளவு கதை கதைக்க வேண்டிய அவசியமே இல்லை.காசு இல்லையென்று சொல்லியது அவருக்குக் கவலை இல்லை கொண்ணன் கதைத்த விதந்தான் பிழை”தாயார் சொல்லி முடிக்க முந்தி ” ஏண்டா அப்படிக் கதைத்தனி அவர் ஒரு தெய்வமடா, தனக்கென்று இதுவரையில் ஏதாவது வாங்கியிருக்கிறாரா?. போடுறதுக்கு ஒரு நல்ல காற்சட்டை இல்லை. இரண்டு காற்சட்டையும் மூன்று சேர்ட்டுந்தான் வைத்திருக்கிறார். பத்து வருசமாக அதைத்தான் அதைத் தோய்த்துத் தோய்த்து போடுகிறார்.அவரோடு போய் வாய் காட்டியிருக்கியே நீ எனக்கு அண்ணன,; எனக்குப் புத்தி சொல்ல வேண்டியவன் நீ, ஆனால் நான் உனக்கு புத்தி சொல்றன் என்று துளசி பொரிந்து தள்ளினாள்.

“நாங்கள் எங்களுக்கென்றொரு சொந்தமான வீட்டில் சநதோசமாக இருக்க வேண்டுமென்பதற்குத்தான் வீடு வாங்கினார். இந்த வீட்டைப் பார், இது வீடு இல்லை எங்கடை அப்பா, தண்ணியும் சிமெந்தும் கலந்து பூசவில்லை அப்பாவின் வியர்வையைக்

கலந்துதான் இந்த வீடு கட்டப்பட்டிருக்கு. வேலைக்குப் போட்டு வந்து ரெஸ்டோறன்றுக்கு ஓடுகிறார். சனி ஞாயிறு வேறு வேலைக்குப் போகிறார். ஒருநாளாவது ஓய்வு எடுத்து இருக்கிறாரா இல்லையே. ஒரு கலியாண வீட்டிலோ வேறை நிகழ்விலோ அரைகுறையாகச் சாப்பிட்டுவிட்டு வேலைக்கு ஓடுகிற அப்பாவைத்தான் நான் பார்த்து வருகிறன். ஆனால் நீ………., நாங்களிருவரும் சந்தோசமாய் இருக்க வேண்டும் என்பதுதான் அப்பா அம்மாவின் வாழ்வு, அப்பாவை இந்த நேரத்திலை வெளிக்கிட்டுப் போகுமளவிற்கு செய்துவிட்டியே. உனக்கு அப்பாவைவிட 300யூரோ பெரிசாகப் போயிட்டுது. ஆனால் நான் வேலை செய்கேக்கிலை இப்படிக் கேவலமாக நடக்க மாட்டன் முழுக்காசையும் கொடுப்பன். அவர் எப்படி வாழ்கிறார் என்றது எனக்குப் புரியுது உனக்குப் புரியேலை” துளசி சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒரு கார் வந்து நிற்கிறது.

அதிலிருந்து அப்பாவும் அவரின் நண்பர் தர்மபாலனும் இறங்கி வருகின்றனர். நேரம் இரவு இரண்டு மணி. தகப்பன் வருவதைக் கண்டதும் மூவரும் கதவடிக்கு ஓடுகின்றனர்.

கணவனைக் கண்டதும் சகுந்தலாவிற்கு நின்றிருந்த அழுகை மீண்டும் வர போன உயிர் திரும்பி வந்ததாக உணருகிறாள்.” அப்பா ” என அழுதபடி தந்தையின் கைகளை துளசியும் ரஜனம் பிடிக்கிறார்கள்.

உள்ளே வந்த தர்மபாலனிடம் “இவரை எங்கையண்ணை இருந்தவர்;. இவர் சொல்லாமல் இரவு வெளிக்கிட்டுப் போயிட்டார். நாங்கள் பட்ட பாடு கடவுளுக்குத்தான் தெரியும். ஏதாவது மொக்குத்தனமான முடிவெடுத்திட்டாரோ என்று என்னுடைய உயிர் என்னிட்டையே இல்லை. ஏனப்பா இப்படிச் செய்தனீங்கள்” என்று மனைவி கேட்க எதுவுமே பேசாது வந்து அமர்கிறார் துளசி போய் தந்தைக்கு அருகிள் அமர்கிறாள்.

தர்மபாலனை இருக்கச் சொல்லியும் இருக்கவில்லை.”என்ன இன்னும் காணவில்லையென்று மனுசி தேடிக் கொண்டிருக்கும் “என்றுசொல்லியவாறு கனகராஜாவை எங்கு கண்டனான் என்பதைச் சொல்லத் தொடங்கினார்.

வேலை செய்யிற இடத்திலை மேலதிக நேர வேலை செய்துவிட்டு வேகமாக வந்து கொண்டிருந்தன்.உங்கடை வீட்டிலை இருந்து இரண்டு கிலோ மீற்றர் தூரத்திலை ஒரு பூங்கா இருக்குதே அதைக் கடந்து வந்து கொண்டிருக்கையில் றோட்டோர வாங்கில் ஒரு ஆள் இருப்பதை என் கடைக்கண் கண்டுவிட்டது. அது கனகராஜா மாதிரி இருக்க..ச்சே…அவர் ஏன் இந்த நேரத்திலை இங்கிருக்கிறார் என எண்ணிய நான், ஒருக்கா இவர்தானோ என ஐமிச்சப்பட்டு காரை றிவேர்ஸ் எடுத்துக் கொண்டு போய்ப் பார்த்தால் இவர்தான் இருந்தார் ”

“இந்த நேரத்திலை ஏன் இங்கை இருக்கிறியள் என்று கேட்டன்.”சும்மாதான் இருக்கிறன்”என்றார். நான் எதையும் விபரமாகக் கேட்க விரும்பமில்லை.இரவு ஒன்றரை மணிக்கு ஒருவர் பூங்காவில் வந்து ஊட்கார்ந்திருக்கிறார்,ஏதோ பிரச்சினை இருக்கிறது எனக்குப் புரிந்துது. எழுப்பிக் காரில் கூட்டிக் கொண்டு வரும் போது நடந்ததைச் சொன்னார்”

“என்னதான் இருந்தாலும் கனகராஜ் வீட்டைவிட்டு வெளிக்கிட்டிருக்கக்கூடாது, அங்கை பார் அந்த மூன்று பேரின்ரை முகத்தையும், என்னவெல்லாம் நினைச்சுப் பதறியிருப்பார்கள்”

“அண்ணை இவர் தனியக உழைக்கிறாரே நானும் உதவியாக இரப்பம் என்று நானும் ஏதாவது வேலைக்குப் போகப் போறன் எண்டு சொல்ல அதொன்றும் வேண்டாம், மாடு மாதிரி வீட்டு வேலைகளைச் செய்கிறாய் தாய் வீட்டிலை இருந்தால்தான் பிள்ளைகளுக்கு தாய் தகப்பனிலை பாசம் வரும் பிள்ளைகள் வெளியிலை போட்டு வரும் போது”அம்மா” என்று கூப்பிட்டுக்

கொண்டு வரும் போது தாய் குரல் கொடுத்தால் பிள்ளைகளுக்கு நிம்மதியாக இருக்கும். தாயின்ரை கையாலை சாப்பாடு கொடுத்தால் எவ்வளவு சந்தோசப்படுவார்கள், நீ ஒன்றும் வேலைக்குப் போக வேண்டாம், நான் உனக்காகவும் பிள்ளைகளுக்காகவும் எவ்வளவும் கஸடப்படுவன் என்றவர்.அதுதான் ரஜன் அப்படிச் சொன்னதும் அவராலை தாங்க

முடியாமல் போய்விட்டுது…”

“சரி..சரி…இளம்பிள்ளையள் என்றால் அப்படி இப்படி இருக்கத்தான் செய்வினம்…….சரி…இனி அதைப்பற்றி யோசிக்காமல் போய்ப் படுங்கோ என்று சொல்லிவிட்டு தர்மபாலன் போய்விடுகிறார்.

எதுவுமே பேசாது தான் செய்த தவறை உணர்ந்து அமைதியாகக் கண்கலங்கி இருந்த ரஜன், ஓடிச் சென்று முழங்காலில் இருந்தபடி தந்தையின் முழுங்காலில் தலை வைத்தபடி குலுங்கிக் குலுங்கி அழுதபடி “அப்பா தயவு செய்து என்னை மன்னியுங்கள்…….தயவு செய்து மன்னியுங்கள் அப்பா…..நான் உங்களோடை அப்படிக் கதைச்சது பிழைதான்……நீங்கள் எங்களுக்காக எவ்வளவோ கஸ்டப்படுகறீர்கள். நான் அதை உணராமல் சொல்லிப் போட்டன். என்ரை காசிலை இனி ஒவ்வொரு மாதமும் தருவன்” அவன் சொல்ல, அவனை எழுப்பி தனக்கருகில் இருத்தி அவனின் தலையை தனது தோளோடு அணைத்து “ரஜன் நீ உழைக்கிற காசு உங்களுக்குத்தான், நீங்கள் இளம்பிள்ளைகள் உங்களுக்கும் நிறைய ஆசைகள் இருக்கும். எனக்கு நீங்கள் தரவேண்டாம். எப்பவாவது ஏதாவது காசு தேவையென்றால் உதவி செய் அது போதும். நானும் அவசரப்பட்டு வெளிக்கிட்டுப் போயிட்டன். நீ சொன்னது மனதிலை குத்திப் போட்டுது. சரி…..போய்ப் படுங்கோ….என்று

சொல்லியவாறு கனகராஜா எழுகிறார்.

படுக்கையில் கணவனின் தலையை தனது மார்பில் வைத்து அணைத்தபடி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள் மனைவி சகுந்தலா.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *