Saturday, February 24, 2018

.
Breaking News

செல்போனில் படம் பிடித்து சசிகலா வீடியோவை விற்கும் கைதிகள்!

செல்போனில் படம் பிடித்து சசிகலா வீடியோவை விற்கும்  கைதிகள்!
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. (அம்மா) அணியின் பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதை அம்பலப்படுத்திய கர்நாடக சிறைத்துறை முன்னாள் டி.ஐ.ஜி. ரூபா, சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்த சத்திய நாராயணராவ் மீது குற்றம் சாட்டினார். இது தொடர்பாக 2 அறிக்கைகளையும் அவர் தாக்கல் செய்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால் சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவ், டி.ஐ.ஜி. ரூபா மற்றும் சில சிறை அதிகாரிகளை கர்நாடக அரசு கூண்டோடு மாற்றியது.
சிறையில் சசிகலாவுக்கு செய்து கொடுக்கப்பட்ட வசதிகள் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி கர்நாடக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. சிறையில் நடந்த முறைகேடுகள் பற்றி விசாரிக்க கர்நாடக அரசு அமைத்துள்ள ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையிலான உயர்மட்ட குழு, கடந்த 17-ந் தேதி பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்று விசாரணை நடத்தியது. டி.ஐ.ஜி. ரூபாவிடமும் இந்த குழு விசாரணை நடத்தி உள்ளது. பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த முன்னாள் துணை முதல்-மந்திரி ஆர்.அசோக் தலைமையிலான சட்டசபை பொதுக்கணக்கு குழுவின் முன்பு நேற்று முன்தினம் ஆஜரான கூடுதல் டி.ஜி.பி. மேகரிக், டி.ஐ.ஜி. ரேவண்ணா உள்ளிட்ட சிறை அதிகாரிகள், சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது உண்மைதான் என்பதை ஒப்புக்கொண்டனர்.
சசிகலா விவகாரத்தில் கர்நாடக மாநில காங்கிரஸ் அரசுக்கு தொடர்பு இருப்பதாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் பாரதீய ஜனதா புகார் அளித்து இருக்கிறது. மேலும் இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்துமாறு அக்கட்சி வற்புறுத்தி உள்ளது.
இதற்கிடையே பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை சசிகலாவின் விருந்தினர் மாளிகையாக மாறியது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறையில் சசிகலா சீருடை அணியாமல் நைட்டி அணிந்துகொண்டு நடமாடும் காட்சிகள் பதிவாகிய 2 நிமிட வீடியோவை ரூ.2 லட்சம் கொடுத்து ஒரு கன்னட சேனல் வாங்கி ஒளிபரப்பியதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
பெங்களூர் சிறையில் இருக்கும் முக்கிய தாதாக்கள், அவர்களின் அடியாட்கள் நடுவே கோஷ்டி பூசல் உள்ளது.
கோஷ்டி பூசல் காரணமாக வீடியோக்கள் எடுக்கப்படுகிறது. சிறையில் அடியாட்கள் எடுக்கும் வீடியோக்கள் லட்சக்கணக்கில் விற்பனை யாகிறது என தகவல்கள் வெளியாகி உள்ளது.
புதிய வீடியோக்களை வாங்க மீடியாக்கள் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. எப்படியாவது வீடியோவை வாங்கி வெளியேவிட வேண்டும் என்பதில் அரசியல் கட்சிகள் தரப்பிலும் ஆர்வம் காட்டப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. சமீபத்தில் வெளியாகிய வீடியோவில் சசிகலா மற்றும் இளவரசி ஷாப்பிங் செல்லும் காட்சிகள் இடம்பெற்று இருந்தது, இந்த வீடியோவுக்கு விலை ரூ.10 லட்சம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. கைதிகள் இடையே சசிகலா தொடர்பான வீடியோ வருமானம் கொழிப்பதாக பார்க்கப்படுகிறது.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *