Thursday, January 18, 2018

.
Breaking News

காவல் தெய்வம்!… (சிறுகதை) .. } சி.சதீஸ்.

காவல் தெய்வம்!…  (சிறுகதை) .. } சி.சதீஸ்.

 

இருபத்தியிரண்டு வருடங்களின் பின்னர் நோர்வேயிலிருந்து நேற்றுதான் அப்பாவின் செத்தவீட்டுக்காக யாழ்ப்பாணம் வந்திருந்தேன்..தறிகெட்ட போன நான் மனிதனாக வந்திருந்த எனக்கு எல்லாம் புதுமையாக இருந்தது

அப்பாவின் செத்த வீடு களைகட்ட தொடங்கியது

அப்பாவின் உடம்பு கோலில் வளர்த்தப்பட்டிருந்தது..பந்தலில் இருந்த இளவட்டங்கள் யாரையும் எனக்கு தெரியவில்லை. முதியவர்களை அடையாப்படுத்த முடிகின்றது.பத்துமணிக்கு ஜயர் வருவார் தம்பி; குளிச்சு விட்டு வேட்டியை கட்டுங்கோ என்றார் பரமசிவம் மாமா.

சரி மாமா,ஆனால் சித்தப்பவை இன்னும் காணவில்லை எப்படி அறிவிச்சனீங்கள் என்றேன்.

அம்மா உடனே எல்லாருக்கும் அறிவிச்சாச்சு வாறது என்டால் வந்திருப்பார்,யாரையும் வெற்றிலை வைச்சு அழைக்கமுடியாது ஊழ்வினை பயனை அனுபவிக்குதுகள் என்றபடி அப்பால் சென்றார்.

அப்பாவின் அலுவலகள் முடியும்வரை சித்தப்பா வரவில்லை.

எல்லாம் முடிந்து பந்தலில் இருந்து கதைத்துக் கொண்டிருந்தபோது வாசலில் சித்தப்பா வருவதைக்கண்டவுடன் சித்தப்பா என்று கத்தியபடி ஒடிச்சென்று கட்டிப்பிடித்து அழு அழு என்று அழுதேன்.அதுவரை அழாத எனக்கு எப்படி அழுகை வந்ததோ தெரியவில்லை.சித்தப்பா என்னை ஆசுவாசப்படுத்தி கதிரையில் இருத்தினார்.ஏன் சித்தப்பா வரவில்லை என்றேன்.இப்ப காலமை கிளிநொச்சி சந்தைக்கு வந்து பேப்பரை பார்த்துவிட்டு வாறேன் என்றார்.

உங்கடை ரெலிபோன் வேலை செய்யவில்லை,கிளிநொச்சி கந்தசாமியிடம் சொன்னனான் சொல்லவில்லையோ என்று அம்மா கேட்டார்.சித்தப்பா பதில் சொல்லாது தாடியை தடவியபடி இருந்தார்.

—00000————0000————–

போராட பல இயக்கங்கள் கிளம்பிய காலத்தில் சித்தப்பாவின் மகன் புலியிலும் நான் ஈ.பி,ஆர்.எல்.எவ் இயக்கத்தில் இணைந்திருந்தோம்.ஆரம்பத்தில் பிரச்சனையில்லை காலவோட்டத்தில் எதிர் எதிராக இருந்தோம். இந்தியன் ஆமி போகும்வரை பிரச்சனையில்லை,ஆனாலும்; சித்தப்பா மகன் இயக்க கட்டளைப்படி அடிக்கடி வீட்டை வருவதும் என்னை விசாரிப்பதாகவும் இருந்தான்.பின்னர் புலிகளுக்கும் எமக்கும் நேரடி சண்டை தொடங்கியது.எமது இயக்கம் இருந்த வீட்டை புலிகள் சுற்றி வளைத்து இரவு தாக்க தொடங்கினர்.நாங்கள் பின் வாங்கி ஒடத்தொடங்கினோம்.நான் துவக்கு எல்லாவற்றையும் எறிந்து விட்டு ஒரு வீட்டு கொடியில் காய்ந்த சாறத்தையும் சேட்டையும் மாற்றிவிட்டு வீட்டை நோக்கி நடக்கதொடங்கினேன்.

ஆனால் நடந்துகொண்டிருக்கும் போதே இயக்கமூளை வேலை செய்தது. வீட்டை எப்படியும் கண்காணிப்பார்கள,; போனால் பிடிப்பாங்கள் அதைவிட அக்கராயன் சித்தப்பா வீட்டை போவோம் வந்த வெங்காய லொறியை மறித்தேன்.. கிளிநொச்சி ஒரு செத்தவீடு வரலாமோ என பவ்வியமாக கேட்டேன் ஏற்றிச்சென்றார்கள்.

கிளிநொச்சி சந்தியில் இறங்கி அக்கராயன் நோக்கி நடக்கவும் பொழுதும் புலரத் தொடங்கியது.மக்கள் நடமாடத்திற்கு முன் விரைவாக நடந்துசென்று அருகில் உள்ள காட்டு வன்னிமரத்தில பொழுதுசாயும் வரை ஏறியிருந்தேன்.மீண்டும் பொழுதுபட அக்கராயன் நோக்கி நடக்க தொடங்கினேன்.

இரவு ஒன்பது மணி போல சித்தப்பா வீட்டை அடைந்தேன்.வீட்டில் தம்பி அல்லது வேறு இயக்கபொடியள் நின்றால் பிரச்சனை என்று யோசித்தபடி பின்பக்க வயல் பக்கமாக நடநதுசென்றேன்.வயல் காவல் பரணில் விளக்கெரிந்தது. கிட்ட சென்று சித்தப்பா என்றேன் சுரத்தில்லாமல்

ஜீவா என்றபடி சித்தப்பா இறங்கி வந்து என்னை கட்டிப்பிடித்தார்.நடந்த விடயங்களை கூறினேன்.

நீ பயப்படாதே தம்பி உனக்கு ஒன்று நடக்குமென்டால் அது என்ரை உயிர் போனபிறகு தான் என்றார்

கடகட என அடுப்பை மூட்டி கையில் சக்கரையுடன் தேநீர் தந்தார்.தேநீர் குடித்த பிறகே உசாரானது உயிர்பயத்தில் பசிக்கவில்லை என்பதும் ஞாபத்துக்கு வந்தது.

.நீ மேலை ஏறி பரணில் இரு நான் வீட்டை போட்டு வாறேன் என்றார்.

தண்ணீர் ஊற்றிய சோறும் மதிய கறிகளும் கொண்டு வந்தார்.சாப்பிட்டுவிட்டு படு தம்பி சாமம் பன்னிரண்டு மணி ஆகிவிட்டது என்றார்.;

வெயில் முகத்தில் சுள்ளென்று அடித்தது.கண்விழித்து பார்த்தபோது காலை பத்து பதினொரு மணியிருக்கும் என நினைத்தேன்.அருகில் தட்டுவத்தில் புட்டு வைக்கப்பட்டு மூடப்பட்டிருந்தது.

பசிக்கவில்லை அப்படியே படுத்திருந்தேன்.சிறுவயதில் சித்தப்பா தோளில் தூக்கி காவடி காட்டும் போது சரி போராட்ட பாதை தவறி வந்தபோதும் சரி சித்தப்பா மாறவில்லை.புட்டை சாப்பிட்டு விட்டு மீண்டும் படுத்திருந்தேன்.பொழுதுபட சித்தப்பா வந்தார். ஊர் நிலவரங்களை சொன்னார்.

மாற்று இயக்கத்தவர்களை சரணடையட்டாம் என்று கிளிநொச்சி மக்கள் கூட்டத்தில் அறிவித்தவங்களாம் என்றார். நான் என்ன் செய்ய என்றேன்

தம்பி நீ சரணடைவதும் ஒன்று சாகிறதும் ஒன்று தான் என்றார். இங்கை வரமாட்டாங்கள் நீ பயப்படாதே என்றார்.நான் அண்ணரிடம் போய் கதைத்துபோட்டு வாறேன் என்றவர் பிறகு யோசித்துவிட்டு எப்படியும் நான் அங்கை போனால் உவங்கள் சந்தேகப்படுவாங்கள் அதைவிட நாங்கள் வேறை ஏற்பாடு செய்வோம் என்றார்.

சித்திக்கு தெரியுமா என்றேன்.இல்லை பக்கத்து காவல்காரனுக்கென்றே சாப்பாடு கொண்டு வந்தனான் என்றார்.

காலையில் எழுந்த சித்தப்பா நான் கிளிநொச்சிக்கு போட்டு வாறேன் அதற்கு முதல் நீ இப்ப கீழை போய் முகம் கழுவி அடிவளவுக்கு போட்டு மேலே வா என்றார்.காலை எட்டுமணி போல சித்தப்பா சவாரி மாட்டு வண்டிலுடன் போவது தெரிந்தது.நான் பரணிலேயே இருந்தேன்.

மாலையில் வந்த சித்தப்பா நிலமையள் அவ்வளவு சரியில்லை நாங்கள் கொழும்பு போவோம் என்றார்.

அதிகாலையில் எழுந்து தேநீரை குடித்துவிட்டு மல்லாவி போகிற காடுகள் ஊடாக நடக்கத் தொடங்கினோம்.சித்தப்பாவுக்கு காடுகள் அத்துப்படி,விலங்குத்தடங்கள்,யானை இலத்திகளை ஆராய்ந்தபடி வந்தார்.இடையில் வேட்டைதுவக்குகளுடன் ஒரு குழுவினரை சந்தித்தோம். அவர்களை சித்தப்பாவுக்கு தெரிந்திருந்துது.அவர்கள் எமக்கு ரொட்டியும் தேநீரும் சாப்பிட தந்தனர்

சாப்பிடும்போது தொலைக்கோ பயணம் என்று ஒருவர் கேட்டார்.மாடுகள் ஆடுகள் வீட்டில் தங்குதில்லை அதுதான்; புதூர் கோயிலில் ஒரு காவல் செய்வோம் என்று மகனும் நானும் வெளிக்கிட்டனாங்கள் என்றார் சித்தப்பா.

சிறிது நேரத்தில் நடக்கதொடங்கினோhம். மாலையளவில் புதூர் கோயிலிலையடைந்து இரவு தங்கிவிட்டு அடுத்த நாள் விடிய மீண்டும் காடுகள் ஊடாக நடந்து ஈச்சங்குளம் கிராமத்தை அடைந்தோம், ஈச்சங்குளத்தில் குளித்துவிட்டு புதிய உடுப்பை மாற்றிகொண்டு பஸ்சில் ஏறிவவுனியா நகரை அடைந்தோம்.கடையில் சாப்பிட்டு விட்டு சிந்தாமணி பிள்ளையார் கோவில் மண்டபத்தில் படுத்திருந்தோம் பிரயாண களைப்பினால் நித்திரையாகிவிட்டேன்.கண் விழித்தபோது சித்தப்பா கோயில் ஜயருடன் கதைத்துக்கொண்டிருந்தார்

இனி என்ன செய்பிறது சித்தப்பா என்றேன்.

நாங்கள் இரவு ரெயினில் கொழும்பு போவோம் என்றார்.இங்கையும் நிலமை சரியில்லை என்றார்.

ரெயினில் அவ்வளவு சனம் இல்லை.

நீ இலங்கையில் இருப்பது ஆபத்து உன்னை வெளிநாட்டுக்கு அனுப்புவம்.சரத் முதலாளியோடை கடையில் போய் தங்கி அலுவலகளை பார்ப்போம்.அஙகை தங்கிறதுதான் பாதுகாப்பு என்றார்.

யாழ்ப்பாணத்தில் வெங்காயம் எடுக்க வரும் காலத்தில் இருந்து சித்தப்பாவுக்கு சரத் முதலாளியை தெரியும். எங்களை கண்டவுடன் வாங்க வாங்க தாடியர் என்றபடி எழுந்து வரவேற்றார்.

இரண்டு மூன்று நாள் தங்கவேணும் முதலாளி ஒரு இடம் ஒழுங்கு செய்து தாங்கோ என்றார் சித்தப்பா.

பிரச்சனையில்லை எங்களுடைய கடை மாடி அறையில் தங்கலாம். இப்ப போய் ஒய்வெடுங்கோ பிறகு கதைப்போம் என்றார்.நீ மாடிக்கு போ தம்பி, நான் கொஞ்சம் கதைத்துப் போட்டு வாறேன் என்றார்.

அடுத்த நாளே பாஸ்போட் எடுத்தோம், சித்தப்பா ஏஜென்சிக்காரனுக்கு ஜம்பதாயிரம் கட்டினார்.அடுத்த நான்கு நாட்களில் நோர்வே வந்து சேர்ந்தேன்.

வந்து சேர்ந்த தகவலையும் சொல்லி சித்;தப்பா உங்களை மறக்கமாட்டேன் உங்கடை உயிரான சவாரி மாடுகளை வித்து என்னை அனுப்பியது எனக்கு தெரியும் எப்படியும் காசு விரைவாய் அனுப்புவேன்; என்று விக்கினேன்…

ஒரு பிரச்சனையையும் இல்லை நீ கடிதத்தை வீட்டை போடு நான் அண்ணரிடம் வாற கிழமையளவில் போய் கதைக்கிறேன் ,நீ வேறை சோலியளுக்கு போகமால் உங்கை கவனமாக இரு என்றார்.

அடுத்த கிழமைக்கு பின்னர் வீட்டை போன சித்தப்பாவை கண்ட அம்மா பெருங்குரலில்.உன்ரை மகன் தான் என்ரை பிள்ளையை சுடத் திரியுpறான் அதை நீ பார்க்க வந்தனியோ ஒலமிட்டார்.அதன் பின் யாரும் வெளியில் வராததால் இரவுபொழுதை நண்பர் வீட்டில் தங்கிவிட்டு அடுத்தநாள் அப்பாவின் அலுவலகத்துக்குச் சென்றார்.

இதுவரைக்கும் பிள்ளை பற்றி ஒரு தகவலும் இல்லை.உயிரோடு இருக்கிறானோ இல்லையோ தெரியாது.ஆனால் இயக்ககாரங்கள் எங்கடை வீட்டை ஓரே நோட்டமிடுகிறார்கள் மகன் வரும்வரைக்கும ஓரு நேர சாப்பாடு என இவளும் சோறு சாப்பிடுகிறது இல்லை என்று அப்பா உடைந்தார்.உன்ரை மகனைதான் தேட அனுப்புகிறார்கள் அதுதான் அவளுக்கும் அவளின்ரை ஆட்களுக்கும் சரியான கோபம் என்றார்.

ஜீவா என்னட்டைதான் வந்தவர் என்று தொடங்க ஜயையோ அறிஞ்சால் சுடப்போகிறார்கள் என்று அப்பா பரபரக்க சித்தப்பா ஆசுவாசப்படுத்தி முழுக்கதையையும் சொன்னார். ஜீவா வருகிற கிழமையளவில் போடுகிற கடிதம் கிடைக்கும் அதுவரைக்கும் யாருக்கும் கதையை சொல்லவேண்டாம்.பிறகு என்ரை மகனையும் சந்தேகபடுவார்கள்,இந்த கதை எனக்கும் உங்களுக்கும் ஜீவாக்கும் தான் தெரியும் வேறு ஒருவருக்கும் தெரியவேண்டாம் என்றார்.

எனது கடிதத்தை வாசித்த அம்மா என்ரை இயக்கம்தான் என்னை இந்தியா கொண்டுபோய் அனுப்பியிருக்கவேணும் என்ற கதையே சொல்ல அதன் பின்னர் என்னை தேடுவது நிறுத்தப்பட்டது.

காலபோக்கில் எல்லாம் மறக்கப்பட்டுவிட்டது.

சித்தப்பாவின் மகனும்; இறுதி சண்டையில் காணாமல் போய்விட்டான்

………….ஃ000000——–

இவ்வளவு கதையையும் எல்லாருக்கும் சொல்லவேணும் அப்பதான் சித்தப்பாவின் அருமை தெரியும் என்று தொடங்கவும் தம்பி எல்லாம் போட்டது போட்டபடி நான் போட்டு நாளைக்கு வாறேன் என்று சித்தப்பாவெளிக்கிட்டார்.

நீங்கள் இல்லாமல் கொள்ளி வைத்துப் போட்டோம் என்றபோது

அது பிரச்சனையில்லை காணமாலபோனவையை இன்றுவரையும் தேடுகிற மக்கள் கூட்டத்தில் நானும் ஒருவன் என்றபடி சென்றுவிட்டார்.

என்னுடைய எல்லா கதையை கேட்ட அம்மா

அந்த மகராசன் இவ்வளவு காலமும் எங்கடை வசவுகளை தாங்கி எப்படித்தான் இருந்தானோ, ஒரு வாய் திறந்து ஒருகதை சொல்லவில்லை என்று அழுதார்

நான் நாளை வரும் சித்தப்பாவுக்காக காத்திருந்தேன்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *