Monday, February 19, 2018

.
Breaking News

காதல் மழை…. ( நாவல் ) …} விஸ்வநாத் ராவ்….

காதல் மழை…. ( நாவல் ) …} விஸ்வநாத் ராவ்….

1. அறிமுக மழை

வானம் பொழிய

பூமி நனைய

இடியின் இடையில்

மின்னல் ஒளியில்

வருபவள் யாரவள் ?

என்நெஞ்சில் காதல் விதைத்தவள்

என்னைச் சரிபாதியாய்ப் பகுத்து

என்னுள் புகுந்து நிறைந்தவள்

இனி இவளே

என்னவள்;

பயிர்களை வளர்க்கும் மழை – இதோ

இங்கு வளர்க்கிறது எங்கள் காதலை;

பூக்களைப் பாதங்களில் வைத்து பிள்ளையாரை மனதுள் வணங்கி, சரஸ்வதிதேவியை நமஸ்கரித்து, பள்ளியுள் நுழைந்தாள்.

சோமசுந்தரனார் நினைவு உயர்நிலைப் பள்ளி

சென்னை.

‘எக்ஸ்க்யூஸ் மீ, வணக்கம்’

இதுதாங்க நம்ப திலோத்தமா, திலோன்னு கூப்டுவோமே. புதுஇடம் புதுமக்கள் என்றக் கூச்சம் கொஞ்சம் இருந்தபோதும், கூடவே ஒரு குறுகுறுப் பார்வை. வெட்கம் இருந்தாலும் நடையில் ஒரு வீரம். அழகு இருந்தாலும் ஆணவம் இல்லாத ஒரு உருவம். இப்படி ஒரு பெண், அவதாங்க நம்ப திலோ.

‘எஸ் யங் லேடி, ஹொவ் கேன் ஐ ஹெல்ப்’

இந்த ரோமியோ தாங்க நம்ப ராஜ். ரோமியோன்னு சொன்னவுடனே பல பெண்கள் பின்னாடி அலைவானோன்னு தயவு செய்துத்தப்பா நெனச்சிராதீங்க. நம்ப திலோத்தமா பின்னால மட்டு அலையப்போற, ரொம்ப நல்லப் பையன்.

‘12-A கிளாஸ்க்கு எப்படிப் போகனு ?’

‘’இந்தப் பக்கம், மாடி, மொத க்ளாஸ்’

‘தேங்க்யூ’

‘வெல்கம் மேம்’

வகுப்பறையில்,

‘மாணவச்செல்வங்களே இன்று நம் வகுப்பில் ஒரு புது மலர், ஒரு புது மாணவி திலோத்தமா வருகை புரிந்திருக்கிறார். ஆதலால் எல்லோரும் கைதட்டி உங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்ளவும்’.

மாணவ மாணவியரின் கைத்தட்டல் திலோத்தமாவை வரவேற்றது.

‘நன்றி ஐயா’ என்ற திலோத்தமாவின் பதில் கைதட்டலை அதிகரித்தது.

‘அதுவொண்ணுமில்லே திலோத்தமா பயப்படாதே, இந்தப் பயபுள்ளைங்க எப்பொவு இங்கிலீஷ்லேயே பேசுவாங்க. நீ ‘நன்றி ஐயா’ ன்னு தூயத்தமிழ் ல பேசிட்டியா அதா அவங்களுக்கெல்லா குஷி வந்திருச்சு’.

மீண்டும் கைதட்டல்.

“போதும்பா, போதும். மத்த வகுப்புபெல்லா நடக்குதில்ல. நாம ஏதாச்சு செய்யறோமோ இல்லியோ, ஆனா மத்தவங்க செய்யற ‘நல்ல’ செயலுக்கு ஒருபோதும் இடைஞ்சலா இருக்கவே கூடாது. ஒங்க அறிமுகத்தையெல்லா அப்புறம் வச்சிக்கோங்க, நேத்து எந்தப் பாடத்துல எங்கே விட்டோ? ” – வகுப்பு தொடர்ந்து நடந்தது.

பள்ளி இடைவேளையில் அறிமுகம் நடந்தது. எதுஎது எவ்வெப்பொழுது நடக்கவேண்டுமோ அதுஅது அவ்வப்பொழுது நன்றாகவே நடந்தேறியது. எதையும் தடுக்கவோ தொடங்கவோ நமக்கதிகாரம் இல்லை. நடப்பதை கூட இருந்து சாட்சியாய்க் கண்டு அனுபவிக்க மட்டுமே நாம் அனுப்பி வைக்கப்பட்டோம்.

‘திலோத்தமா, நா கல்பனா’

‘ஹாய் கல்பனா, திலோன்னு கூப்பிடுவாங்க’

‘ஸ்வீட் நேம் ‘

‘தேங்க்ஸ்’

‘என்ன கல்ப்ஸ் …. புதுசா ?’ என்று ராஜ் இடைமறிக்க

‘திலோ, ராஜ், நம்ப கேன்ங் ரோமியோ’

‘என்னது ரோமியோவா ? யாரப் பாத்து என்ன சொல்லிட்டே ? டேய் ரமணி எங்கடா போயிட்டே?’

‘ராஜ் இங்கே தாண்டா இருக்கே, புதுசா இருக்கு?’

‘காலைலேயே பாத்தேல்ல, ரொம்ப தேங்க்ஸ் ராஜ்’

‘தேங்க்ஸ் அப்போவே சொல்லிட்டீங்களே திலோ… த்தமா’

‘தட்ஸ் ரைட் …திலோன்னு கூப்பிடலா’

‘திலோ, இவ ரமணி; ராஜ் ரமணி – இவங்க ரெண்டு பேரு ஓட்டிப் பொறக்கலியே தவிர, எல்லா எடத்துலேயு சேந்தே சுத்துவாங்க’

‘ஹலோ ரமணி’

‘திலோத்தமா – பேரு ரொம்ப சின்னதா இல்லே?’

‘திலோத்தமா தில்லைநாதன் முழுப்பேரு – சுருக்கமா திலோன்னு கூப்பிடுங்க’

‘திலோ, பாக்க இந்தப் பூனையு பாலக் குடிக்குமான்னு இருப்பாய்ங்க, ஆனா கொஞ்சம் இடம் குடுத்தா அவ்ளோதா’ என்று கல்பனா சொல்ல,

‘கல்ப்ஸ் அந்த சிகப்பு சாண்ட்ரோ ஒன்னத் தேடிக்கிட்டிருந்தா, போய் பாக்கலே ?’ என்று ராஜ் ஞாபகப்படுத்த,

‘டேய் போதுண்டா, ஒரு மேட்டர் கெடச்சிட்டா அதையே நோண்டுவீங்களே, நாங்க மத்த ப்ரெண்ட்ஸ்ஸையு பாத்துட்டு அப்பாலிக்கா வரோ , பை’ எனச்சொல்லி கல்பனா நகர,

‘பை திலோ’ – என்று ராஜ் சொல்ல கல்பனா முறைக்க

‘எடத்த காலி பண்றது’ – என்று ரமணி தொடர

இருவரும் நகர,

‘ஒரு நிமிசம் ‘ என்று திலோ கல்பனாவிடம் சொல்லிவிட்டு, ராஜிடம் திரும்பி வந்து ‘அந்த சாண்ட்ரோ மேட்டர் அப்புறம் சொல்லு’ எனச் சொல்லி கண்ணடித்துச் சென்றாள் .

எங்கோ மின்னல் அடித்து, மழை பொழிய ஆரம்பித்தது.

♡♡♡

பள்ளி முடிந்து எல்லோரும் அவரவர் வழி செல்ல, திலோவும் ராஜூம் பேசிக்கொண்ட நடந்தனர். ‘சோ, திலோ எங்க வீடு ?’

‘பக்கத்துல தான், ஆர் கே மட் ரோடு’

‘ஓஹ் நானு, வீட்டுல – யாரு யாரு இருக்காங்க ?’

‘அம்மாவு நானு, அப்பா இறந்திட்டாரு, ஒரு வருசம் ஆச்சி’

‘ஐம் சாரி …’

‘அதா அங்க ஊருலேயே இருந்தா அந்த ஞாபகமே வரும்னு அம்மா சென்னைக்கு வந்துட்டாங்க’

‘இங்கே வேற யாரு இருக்கா ?’

‘அம்மாவோட அண்ணே தம்பி எல்லா இருக்காங்க, எனக்கு மாமா’

‘நைஸ்’

‘ராஜ் வீட்டுல ?’

‘அம்மா டாக்டர், க்ளீனிக் வச்சிருக்காங்க, அப்பா இல்லே , இறந்துட்டாரு, 4 வருசம் ஆச்சி’

‘ஐம் சாரி …’

‘ஒங்க அம்மா வேலைக்குப் போறாங்களா ?’

‘இல்லே, ஊருல நிலபுலன்கள் இருக்கு, சொந்த வீடு இங்கே; அப்பா பென்ஷன்; நண்பன் நீ பக்கத்துலயே, வண்டி ஓடுது’

‘ஹஹ்ஹா, சூப்பர், தேங்க்ஸ்’

‘இதா வீடு, வா உள்ளே’

‘இன்னொரு நாள், நாளைக்கு, அவனையு அழைச்சுக்கிட்டு வரே’

‘யாரு ரமணியா ?’

‘ஆமா, வரலால்லே ?’

‘கண்டிப்பா, ஒய் நாட், ராஜ் வீடு எங்கேயிருக்கு ?’

‘நெக்ஸ்ட் லெஃப்ட், தி பர்ஸ்ட் வன்’

‘க்ரேட், நாளைக்கு பாப்போமா, பை’

‘பை’

தனக்குப் பின் ஒரு ஒளி வட்டம் தோன்றியிருப்பதாய் உணர்ந்தான். தனக்குத் தானே சிரித்துக் கொண்டான். தன் பின் தலையில் அடித்துக்கொண்டான். ஏனோ திலோ தன்னைப் பார்த்துக் கொண்டிருக்காளோ என்ற எண்ணம் வர, தன்னுள் எழுந்து நிற்கும் இந்தப் படபடப்பை என்னென்று சொல்ல, எப்படி விவரிக்க என்று எண்ணிக்கொண்டே தன் வீடு வந்துசேர்ந்தான்.

♡♡♡

2. நட்பு மழை

நனைந்தபடி நீ …

யமஹாவில் நான்

‘வரியா ? சீக்கிரம் போயிடலாம்’ என்றேன்

ஏறிக்கொண்டாள் …. சீறிப் பாய்ந்தேன்;

‘அழைத்தவுடன் எறிவிட்டாயே

மறுப்பாயோ என்றெண்ணினேன்’ என்றேன்.

முதுகில் குத்தினாள்

சிரித்தேன்

மீண்டும் குத்தினாள்

மீண்டும் சிரித்தேன்.

பெண்மை

மெல்லப் பேசியது

வெல்லச் சுவையது,

உள்ளம் திறந்தது

உண்மை தெரிந்தது

காதல் வளர்ந்தது

காவல் தொடர்ந்தது;

அவளை வீட்டில் இறக்கிவிட்டு

அரை மனதோடு திரும்பி வந்தேன்,

வாயில் சிரிப்போடு,

வண்ணக் கனவுகள் பலவோடு;

இதே மழை நாளில் தான்

ஒரு நாளில்.

ராஜ் இரவு முழுதும் தூக்கம் வராது புரண்டு புரண்டுக் கிடந்தான். தினம் விடிய இத்தனை நேரம் ஆகுமா என்ன என்ற எரிச்சலும் அதே சமயம் ஆச்சரியமும் அடைந்தான். திலோ என்ன செய்துகொண்டிருப்பாள் என்று எண்ணத்தொடங்கினான். அவளைத் தான் கவர என்ன செய்யவேண்டும் என்று யோசிக்கத் தொடங்கினான். ‘படிப்பு ஒண்ணுதா கவர்ச்சி’ என்று தன் அன்னை அடிக்கடி சொல்வது அந்த நேரத்தில் அவனுக்கு நினைவுக்கு வந்தது.

சீக்கிரமே தன் வேலைகளை முடித்துவிட்டு காலை உணவையும் உண்டு விட்டு பள்ளிக்குக் கிளம்பினான் ராஜ். எத்தனை முறை எழுப்பினாலும் ‘இதோ, இதோ, ஜஸ்ட் டூ மோர் மினிட்ஸ்’ என்று ஏதாவது காரணம் சொல்லிப் படுக்கையில் புரண்டுக் கிடப்பவன், இன்று தான் எழுப்பாமலேயே பள்ளி செல்லத் தயாராய் இருப்பதை அவன் அன்னை கவனிக்கத் தவறவில்லை.

♡♡♡

‘ஹாய் ராஜ் குட் மார்னிங்’

‘ஹாய் திலோ, சாக்லேட்ஸ்’ என்று அவள் கையில் திணித்தான்.

‘என்ன ஸ்பெஷல் இன்னிக்கு?’

‘சும்மா சந்தோசமா இருந்தா சாக்லேட்ஸ்’

‘நைஸ், அப்டி என்ன சந்தோஷம்’

‘சாக்லேட்ஸ் இருக்கே அந்த சந்தோஷம் தா’

‘ஒருவேளை எனக்காகத்தா சாக்லேட்ஸ் ன்னு நெனச்சே?’

‘அப்டியு சொல்லலாம்’

சிரித்துக்கொண்டனர்.

‘ஒரு சின்னக் கவிதை’

‘உன் உதடுகள் வார்த்தைகளை உச்சரிக்கட்டுமே,

என் செவிகள் அதைக் கேட்டு ரசிக்கட்டுமே,

அட இரு உள்ளம் தான் சிரித்து மகிழட்டுமே’

‘திலோ கவிதையெல்லா எழுதுவாளோ? ‘

‘திலோவுக்கு கவிதை பிடிக்கும். கவிதை எழுதுறவங்கள இன்னு பிடிக்கும், உன் கவிதை சொல்லேன்’

‘அன்பு கால் கிலோ,

அடக்கம் கால் கிலோ,

அறிவு கால் கிலோ,

அழகு கால் கிலோ

இவையெல்லாம் சேர்ந்துச் செய்த,

கலவைதானோ

திலோ ?’

‘வாவ்’ – சத்தம் வராது கைதட்டி ‘வெரி நைஸ் தேங்கயு’ சொல்லிப் பாராட்டினாள்.

மழை பெய்து

இடி இடித்து

அவர்களுக்கு ஒத்தூதியது.

♡♡♡

மதிய இடைவேளை பொழுது

‘ராஜ் சாப்பிட போலாமா?’

‘நா வீட்டுக்குப் போய் சாப்டுவேனே, எடுத்துட்டு வரலே’

‘ஓஹ், நீ இங்கே சாப்பிடுவேன்னு நெனச்சே’

‘நாளைலேர்ந்து எடுத்துக்கிட்டு வரேனே ?’

‘ஓகே, பட் லெட்ஸ் ஷேர் ன , வா’

‘வாப்பா நண்பா, எங்களோட சாப்பிடு’ என்று ரமணியும் அழைக்க

‘சரி வாங்க சாப்பிடுவோம்’

‘பட் நண்பா’ – ரமணி தொடர்ந்தான். ‘இதுக்கு முன்னால எவ்ளோவோ தடவை நா சாப்பிடவான்னு கூப்ட்டிருப்பே, எல்லாத்துக்கு நேரம் வரணும், இல்லையா கல்பனா?’ என்று அவளைக் கோர்த்துவிட

‘கோச்சிக்காத நண்பா, அதா சாப்டுவோம்னு சொல்லிட்டேனே அப்புறமென்ன’

‘தட்ஸ் ஃபைன் ராஜ், ரமணி என்ன சொல்றான்னா இப்போ இங்கே சாப்ட ஓகே, அப்போ சாப்ட வை நோ ஓகேன்னு கேக்குறே?அதானேப்பா ரமணி?’

‘என்ன நண்பா ரெண்டு பேரும் இப்புடி ஓட்டுறீங்க என்னை’

‘நண்பா க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் நா என்ன அர்த்தம் தெரியுமா நண்பா ?’

‘எங்கேயாச்சு ஏதாச்சு படிச்சிட்டு வந்திருப்பே, நீயே அதை சொல்லிரு நண்பா’

” ‘நல்லா இருக்கியா’ன்னு கேக்குறவ நண்பன். பட் ‘மாப்ளே இன்னு நீ சாவுலியா’ன்னு கேக்குறா பாரு – அவன்தா உயிர் நண்பன்'”

‘கலக்கிட்ட நண்பா’ என்று ராஜ் பாராட்ட நால்வரும் சிரித்திக்கொண்டே சாப்பிட அமர்ந்தனர்

‘மூணு சாப்பாடு, நாலு பேருக்கு – பத்துமா ?’

‘பசியாறப் பார்வை போதுமே, பரிமாற வார்த்தை போதுமே’

‘வாவ், திலோ நீ கவிதையெல்லா எழுதுவியா ?’ என்று ரமணி கேட்க

‘ ராஜ் அளவுக்கு இல்லே பட் எழுதுவே’

‘ஹலோ, இவ வாலி வைரமுத்து புக்கெல்லா படிச்சிட்டு அப்டியே அடிச்சிவிடுறா’ என்று ரமணி கலாய்க்க

‘நடுவுல மானே தேனே பொன்மானே சேத்துவுடுறா அவ்வளவே அம்மணி’ என்று கல்பனா தொடர

‘ஹலோவ் நீங்களு அந்தமாதிரி படிச்சி எழுதவேண்டியதுதானே, அதுக்கெல்லா க்ரைன் வேணு மக்களே’ என்று ராஜ் தன் பின்தலையில் தட்டி சொல்ல

ஒரே சிரிப்பு மழைதான் அங்கே.

♡♡♡

மாலை பள்ளி முடிந்தபின் நண்பர்கள் அனைவரும் திலோவின் வீட்டிற்குச் சென்றனர். திலோ தன் தாயிடம் நண்பர்களை அறிமுகப்படுத்தினாள். பேச்சு சிரிப்பு கும்மாளம் என்று ஆட்டம் போட்டபின் அவரவர்கள் அவரவர் இடத்துக்குத் திரும்பினர். அதன்பின் ஒருநாள் ராஜ் திலாவைத் தன் வீட்டிற்கு அழைத்துச்சென்று, தன் தாயிடம் அறிமுகம் செய்துவைத்தான்.

திலோவும் ராஜ்ம் எப்பொழுதெல்லாம் முடியுமோ எப்பொழுதெல்லாம் பாடத்தில் சந்தேகம் எழுமோ அப்பொழுதெல்லாம் சேர்ந்தமர்ந்தே பாடம் படித்தனர். அவ்வப்பொழுது ரமணியும் கல்பனாவும் சேர்ந்து பாடம் பாட்டு ஜோக்ஸ் என்று இடைபுகுந்து நேரம் போவது தெரியாமல் ஒன்றோடொருவர் இணைந்திருந்தனர்.

♡♡♡

‘திலோ போனவருசம் இன்சிடென்ட் ஒன்னு’

‘சொல்லு கல்பனா’

‘சொல்லு சொல்லு கேப்போ’ என்று ரமணியும் சேர்த்துக்கொள்ள

‘டேய் ஒன்னோட இன்சிடென்ட் தாண்டா சொல்லப்போறே’

‘கல்ப்ஸ், வேணா அவ டென்ஷன் ஆகிடுவா’ என்று ராஜ் கமண்ட, ‘டேய் மாப்ள நா எதுக்கு டென்ஷன் ஆகனு, தப்பு ஒம்மேல நண்பா’ என்று ரமணி பதிலுரைக்க, ‘ஓக்கே சைலண்ட் பாய்ஸ்’ என்று கல்பனா சொல்லத்தொடங்கினாள்.

“அதாவதுப்பா, போன வருஷம், க்ளாஸ் நடந்துகிட்டு இருந்துச்சி நம்ப நண்பர் ரமணி எப்பவுபோல க்ளாஸ்ல தூங்கிக்கிட்டிருந்தாரு. ‘அதென்ன எப்பவுபோல, நீ எவ்ளோ தடவை பாத்திருக்கே. நா க்ளாஸ்ல தூங்கறத?’ என்று ரமணி இடையில் கொக்கி போட, ‘திலோ இவ க்ளாஸ்ல தூங்குறால்ல ?’ என்று கல்பனா கேட்க, ‘ரமணி தியானம் பண்ணிருக்கலா, ஆழ்ந்த சிந்தனைல இறங்கிருக்கலா, அத தூக்கம்ன்னு ஏன் சொல்லனு?’ என்று திலோ உரைக்க, எல்லோரும் சிரிக்க, கல்பனா தொடர்ந்தாள் .

‘சாரு பையனை எழுப்பி தம்பி அடுத்த பாராவை படின்னாரு, நண்பர் கிட்ட கையில முன்னால புக்கு கெடையாது’, ‘இங்கே ஸ்டாப் ப்ளீஸ், சரி நாந்தா தூங்கிக்கிட்டிருந்தே, பக்கத்துல இந்த பக்கி கைல

புக்கோட இருந்துச்சி’, ‘யாரு ராஜ் ஆ?’ என்று திலோ இடைமறிக்க, ‘வேற யாரு, வேற யாராச்சு இருந்தாதா நா இன்னு நல்ல மார்க் எடுப்பேனே ‘ என்று ரமணி உரைக்க, ‘ஆடத் தெரியாதவ மேடை கோண ன்னு சொன்னாளா’ என்று ராஜ் கலாய்க்க, ரமணி தொடர்ந்தான்.

‘கைல புக்கோட ஒக்காந்திருக்கே நாயி ஒருவேளை பாடத்தை கவனிக்குதோ ன்னு எனக்கு சந்தேகம் வேற, சரி எந்த பாரா படிக்கனுன்னு இவன்ட கேட்டா பேந்தப் பேந்த முழிக்குது, அப்போதா எனக்குப் புரிஞ்சது இவ சும்மா கவனிக்கறமாதிரி ஆக்ட் குடுக்கறான்னு. மத்தப் பசங்கல்லா, டேய் 32வது பக்கம் ரெண்டாவது பாராடான்னு சொன்னாங்க. இந்த பக்கி 73வது பக்கத்த தொறந்து வச்சிக்கிட்டு ஒக்காந்திருக்கு. ‘வெளில வா ஒனக்கு இருக்குடி’ன்னு மொறச்சா, கிக்கீபீக்கின்னு சிரிக்குறா.

நண்பர்கள் அனைவரும் வயிறு குலுங்க சிரித்தனர். ‘செமையா இருக்கு, நா மிஸ்பண்ணிட்டேனே’ என்று திலோ சொல்ல,

‘இன்னு முடிலே’

‘அட அதுக்கப்புறோ 32வது பக்கம் படிக்கவேண்டியது தானே’ ன்னு திலோ கேக்க, ‘கரெக்ட் திலோ, 32வது பக்கம் தேடி எடுத்து 2வது பாரா படிச்சா’ வாத்தி ‘வெளில போ’ன்னு சொல்லிட்டாரு’

‘ஏன்’

‘ஏன்னா ? தமிழ் பீரியட்ல – இங்கிலிஷ் புக்லேர்ந்து 32வது பக்கம் 2வது பாரா படிச்சா சும்மா இருப்பாரா, அதா வெளில போன்னு சொல்லிட்டாரு’ என்று ராஜ் சொல்ல,

‘நாயி நடக்கறது தமிழ் பீரியட் ன்னு கூட தெரியாம நீ இங்கிலிஷ் புக்க தொறந்து வெச்சிக்கிட்டு என்ன சொல்றே, பன்னாடை’ என்று ரமணி முடிக்க

மீண்டும் நண்பர்கள் அனைவரும் வயிறு குலுங்க சிரித்தனர்.

♡♡♡

ஒருநாள் திலோவைப் பார்க்க ராஜ் அவள் வீட்டுக்கு வந்தான்.

‘திலோ கெமிஸ்ட்ரி அசைன்மெண்ட் செஞ்சிட்டியா ?’

‘காப்பி பண்ணணுமா ? இங்கேயே ஒக்காந்து எழுதிட்டுத் தரியா ?’

‘சரி தா’

தான் எழுத வேண்டியதை எழுதி விட்டுக் கிளம்பினான்.

‘திலோ கெளம்பட்டா?’

‘எழுதிட்டியா?’

‘யெஸ் , தேங்க்ஸ், நாளைக்கு பாப்போ ‘

‘சாப்டுட்டு போயேம்பா ?’ என்று திலோவின் அம்மா சொல்ல,

‘இல்லேம்மா, இன்னொரு நாள் கட்டாயமா வரே’ என்று சொல்லி விட்டு, திலோவுக்கு இன்னொரு முறை நன்றி சொல்லிவிட்டு வீட்டுக்குச் சென்றான்.

அடுத்த நாள் காலை பள்ளியில் திலோ ராஜ்க்காக காத்திருந்தாள். முதல்நாள் தன் வீட்டிற்கு வந்தவன் பிசிக்ஸ் அசைன்மென்ட் நோட்டை மறந்து வைத்துவிட்டு சென்றுவிட்டதையும், இன்று அதை சப்மிட் செய்யவேண்டுமென்பதையும் நினைவூட்டக் காத்திருந்தாள்.

‘ரமணி, ராஜ் இன்னு வரலே ?’

‘அவனா ? பிசிக்ஸ் அசைன்மெண்ட் மறந்துட்டு வந்துட்டு, இப்போ எடுத்துட்டு வர வீட்டுக்குப் போயிருக்கா’

‘அடப்பாவி’

ராஜ் வேர்க்க விறுவிறுக்க ஓடி வந்து, ‘திலோ பிசிக்ஸ் அசைன்மெண்ட் எங்கே வச்சேன்னு தெரிலே, இன்னிக்கா அதையு சப் மிட் பண்ணணு?’ என்று அவசரஅவசரமாய்க் கேட்க,

‘டேய் நேத்து எங்க வீட்டுல வச்சிட்டு போய்ட்டேடா, இந்தா’

‘சே, செம டென்ஷன்பா, தேங்க்ஸ், நேத்து கெ மிஸ்டரியோட இதையு சேத்து எடுத்துட்டு வந்திருப்பே ? இதுல மூணு படம் வேற வரையணும்பா’

‘அதெல்லா நா வரைஞ்சிட்டே, பாத்துக்கோ’

‘ஒஹ் தேங்க்யு, தேங்க்யு திலோ, ரொம்ப தேங்க்ஸ்பா’

‘தட்ஸ் ஓகே, எனிதிங்க் பார் யு ராஜ், போ போய் மூஞ்ச கழுவிக்கிட்டு வா மொதல்ல, பெல்லு அடிக்கப்போவுது ‘

வகுப்பில் ராஜ் ‘நன்றி’ என்று கையில் எழுதிக் காட்ட, ‘வெல்கம்’ என்று திலோ பதிலுக்கு எழுதிக்காட்ட

நட்பு அங்கே புதியப் பரிமாணம் எடுத்தது.

♡♡♡

3. நட்பு மழை

‘ராஜ் எக்ஸாம் வருது, மேத்ஸ் பண்ணுவோமா ?’

‘ஓஹ் எனக்கே கணக்கு பண்ண சொல்லித்தரியா ?’

‘நண்பர் இதுவரைக்கு எவ்ளோ பேர கணக்கு பண்ணியிருக்கிய?’

‘ஹிஹிஹி, சும்மா டபுள் மீனிங்கு’

‘டேய் தெரியும்டா, நீ ஒரு பயந்தாங்கொள்ளி , வா கணக்கு பண்ணுவோ’

‘…’

‘டேய் வாடா … ப்ராபபிலிட்டியா கால்குலஸ் ஆ – ஏது ?

‘…’

‘என்ன ராஜ்’

‘திடீர்னு ஒரு கவிதை தோணிச்சி’

‘ஐ லவ் டு ஹியர், சொல்லு’

‘காற்று மெல்ல முத்தமிட

தலையாட்டி அதை ஏற்றுக்கொள்கிறதே நாற்று

தேனீ தன் விரலால் நீவிட

தேனெடுத்துத் தருகிறதே பூக்கள்

அலை ஆசையில் ஒடி வருகையில்

அணைத்துக் கொள்கிறதே கரை’

‘ராஜ், கம்’

‘சொல்’

‘எந்திரி’

‘…’

திலோ அவனை மெல்லக் கட்டியணைத்து நெற்றியில் முத்தமிட்டாள்.

‘இப்போ ஓகே ராஜ்?’

‘தேங்க்யு ‘

‘ராஜ் கான்செண்ட்ரேட் பண்ணி படிக்கனு, இல்லேனா நம்ப கனவுகள் எப்பவுமே கனவாவே போயிடு, இஷ்டப்பட்டு கஷ்டப்படலேன்னா எதுவுமே நடக்காது ராஜ்’

‘ஸுர் , கம், மேக்ஸ ஒருகை பாப்போ ‘

‘தட்ஸ் யு , மை பிரெண்ட்’

♡♡♡

நாட்கள் நகர்ந்தன

வாரங்கள் உருண்டன

மாதங்கள் பறந்தன

மனதுக்குப் பிடித்தவர்

நம்கண்முன்னே இருக்கையில்

நாட்காட்டி

மின்விசிறியாய் ஓடாதோ ?

படிப்பு படிப்பு என்று பயின்றனர். காலையா மாலையா என்பதை மறந்தனர். உண்டோமா உறங்கினோமா அனைத்தையும் துறந்தனர். போவது யார் வருவது யார் எதையும் சட்டை செய்யாது கருமமே கண்ணாய்க் கல்வி கற்றனர். பொதுத்தேர்வை நன்றாகவே எழுதி முடித்தனர். நல்ல மதிப்பெண் கிடைக்கும் என்றே நம்பினர். கிடைத்தது. சந்தோசத்தில் துள்ளிக் குதித்தனர்.

ராஜ்ன் வீடு

அவன் தாயைச் சந்தித்து மதிப்பெண் சொல்லி வாழ்த்துப் பெற திலோ வந்திருந்தாள்

‘வா வா திலோ … நல்லா மார்க் வாங்கிருக்கேம்மா, ராஜ் சொன்னா, கங்கிராட்ஸ் ‘

‘தேங்க்ஸ்மா’

‘அம்மா … என்னோட அவ மார்க் கம்மி’

‘ராஜ் மார்க்குல என்னடா இருக்கு ? இட் ஆல் மேட்டர்ஸ் ஹவ் மச் நாலெட்ஜ் யு கெய்ன் ப்ரம் எஜுகேஷன், அதுதா முக்கியம்’

‘அப்போ 1080 மார்க் ஒன்னு பெருசு இல்லேங்கறீங்களா?’

‘ராஜ் … ஒரு சின்ன டெஸ்ட் … மயிலாப்பூர்லேர்ந்து தாம்பரம் நீ எப்டிப்போவே ?’

‘ஒரு ஆட்டோ புடிச்சா … ஜஸ்ட் 200 பக்ஸ்’

‘அடப்பாவி’ என்று திலோ இடைபுக

‘திலோ நீ என்ன பண்ணுவே?’ என்று ராஜின் அம்மா கேக்க

’21ஜி, இல்லே லோக்கல் ட்ரெயின், பெஸ்ட் அண்ட் ஸ்ட்ரெஸ் பிரீ’

‘ராஜ் ஒனக்குப் புரியுது? பணம் கையில இருந்தா அறிவு வேலை செய்யாது, ஆட்டோல போறது இல்லே ப்ரச்சனை, ஒனக்கு மத்த வழிமுறைகளும் தெரியனு, தட் ஈஸ் நாலெட்ஜ் ‘

‘காசு இருந்தாலும் கஷ்டப்பட்டு முட்டி மோதி முன்னேறணும்னு சொல்றீங்க ?’

‘கண்டிப்பா, ஐம் எ கைநாகோலேஜிஸ்ட், நீங்க வளர்ந்தப் பசங்க, நேரடியாவே சொல்றே; ஈவென் தொவ் ஒரு ஆணின் விந்துல லட்சக்கணக்கான உயிரணுக்கள் இருந்தாலு, அதுல ஒண்ணே ஒண்ணுதா வெற்றி இலக்க அடையுது. முட்டல் மோதல் அங்கேயே அப்போவே தொடங்கிடுச்சி மை டியர் சில்றன், டோன்ட் கிவ் அப் யுவர் நேச்சுரல் பேசிக் பிஹேவியர்’

இருவரும் தாயின் கருத்தை ஆமோதிக்க

‘ஐம் ஸூர் திலோவுக்கு வாழ்க்கை பத்தி இன்னு நல்லாத் தெரியு, டாக் டு ஹர், யு வில் அண்டர்ஸ்டாண்ட் பெட்டெர் மை பாய்’

‘என்னம்மா ஒங்க அளவுக்கெல்லா எனக்கென்ன தெரியு’ என்று திலோ மறுத்துரைக்க

‘தேவையில்லாம எல்லாத்துக்கு பின்னால போகாதே, ஒனக்கு வேணும்னு தோணிச்சின்னா போராடத் தயங்காதே, எதற்கு அவசரப்படாதே, இதுதா என்னோட அறிவுரை, காட் பிளஸ் போத்’

♡♡♡

‘திலோ இன்ஜினியரிங் சேருவோமா ? அப்ளிகேஷன் வாங்கிட்டுவரட்டா ?’

‘ராஜ் நீ இன்ஜினியரிங் படி ராஜ், ஒனக்கு மட்டு ஒரு அப்ளிகேஷன் வாங்கிட்டுவா, எனக்கு இன்ஜினியரிங் இஷ்டமில்லை’

‘வாட் ஈஸ் திஸ் திலோ, நீ 1020 மார்க்ஸ் வாங்கிருக்கே?’

‘பட் ஒன்னோட கம்மி தானே’

‘ஓகே, ஐம் சாரி, நா அப்டி சொல்லியிருக்கக்கூடாது … அபாலஜைஸ்’

‘ராஜ் நா ஒன்ன என்னிக்குமே தப்பா நெனைச்சதில்ல … டோன்ட் ஒரி மேன்’

‘சரி இன்ஜினியரிங் சேருவோமா ? அப்ளிகேஷன் வாங்கிட்டுவரட்டா ?’

‘நா ஆர்ட்ஸ் யோகா படிக்கலான்னு இருக்கேப்பா’

‘பட் யு ஸ்கோர்ட் 1020 மார்க்ஸ்’

‘சோ ?’

‘வாட் சோ? எல்லாரு இன்ஜினியரிங் படிக்கனு, படிக்கனு ம்னு அலையறாங்க, ஒனக்கு … நமக்கு கண்டிப்பா சீட்டு கிடைக்கு திலோ’

‘ராஜ் காலைலேதா நாம அம்மாகிட்டேர்ந்து பிலாசபி படிச்சோ, திரும்ப அதே லைன்ல நானு பேசுனா ஒனக்கு பிடிக்குமோ பிடிக்காதோ ?’

‘புரியலே, வை நாட் இன்ஜினியரிங்?’

‘ வை இன்ஜினியரிங்? இன்ஜினியரிங் படிச்சி நா என்ன பண்ணப் போறே ராஜ்?’

‘வேலை, IT, பணம் சொகுசான வாழ்க்கை – வேறென்ன வேணும் ?’

‘ராஜ் நம்ப கல்ச்சர் ட்ரெடிஷன் எப்டிப் போகுதுன்னா கணவன் அதாவது ஆண் வேலைக்கு போய் பணம் சம்பாதிச்சா, மனைவி அதாவது பெண் அந்தப் பணத்தைக்கொண்டு குடும்பம் நடத்தி குழந்தைகளைப் பெத்து வளர்த்து ஆளாக்கணு, ஹௌ இன்ஜினியரிங் ஆர் ஆர்ட்ஸ் மேட்டர்ஸ் ஹியர் – ஒரு பெண்ணான எனக்கு? வை நாட் ஆர்ட்ஸ்?’

‘ஓகே பட் வை நாட் இன்ஜினியரிங் மை டியர் ப்ரெண்ட்?’

‘ராஜ் இப்போ 1020 வாங்கிட்டோமேன்னு இன்ஜினியரிங் படிச்சி, இன்ஜினியரிங் படிச்சிட்டோமேன்னு வேலைக்கு போயி, சம்பாதிச்சு, பணம் வருதேன்னு லோன் வாங்கி வசதியா வாழ ஆசைப்பட்டு, லோன் கட்ட இன்னு நல்ல சம்பளம் தேடி, டோன்ட் யு திங்க் திஸ் ஈஸ் கோயிங் இன் எ சைக்கிள்?’

‘சோ ஆண் வேலைக்குப் போயி கஷ்டப்பட்டு சம்பாதிக்கணு, பெண் வீட்டுல ஜாலியா இருக்கனு ரைட்?’

‘இக்கரைக்கு அக்கறை பச்சை ராஜ், வீட்டுல அமைதி இருந்தா மனைவி குழந்தைகள் சந்தோசமா இருந்தா வேலை க்குப் போறது ஆணுக்குக் கஷ்டமா இருக்கவே இருக்காது, குழந்தைகளும் கணவனும் சந்தோசமா இருந்தா ஒரு பெண்ணுக்கு வேறென்ன வேணும்?’

‘திலோ நீ படிச்சதெல்லா வேஸ்ட் ஆகலையா திலோ ? இந்த வருஷம் எவ்ளோ கஷ்டப்பட்டு படிச்சோ?’

‘எங்க வேஸ்ட் ஆச்சி ராஜ்? நீ 1080 மார்க் வாங்கலே ? இப்போ இன்ஜினியரிங் சேரப் போறே, இதெல்லா கஷ்டப்பட்ட தாலேதானே கெடச்சது?’

‘வாட் அபௌட் தட் 1020?’

‘பூவோட சேர்ந்த நாறும் மணத்தது’

♡♡♡

ராஜ்ம் ரமணியும் இன்ஜினியரிங் அப்ளை செய்ய, திலோ யோகா ஆர்ட்ஸ்க்கு அப்ளை செய்தாள். கல்பனா வேறொரு கோர்ஸ்க்கு அப்ளை செய்தாள். நண்பர்கள் ஒன்றாகப் பயிலவில்லையெனினும் சமயம் கிடைக்கும்பொழுதெல்லாம் ஒன்றாகவே எங்கும் சுற்றுத்திரிந்தனர். வார விடுமுறைகளில் சினிமாவும் ஹோட்டல் தீனியும் இன்றியமையாததாய் ஆனது. முடியும்போதெல்லாம் ராஜ் வீட்டிற்குத் திலோ செல்வதும், திலோ வீட்டிற்கு ராஜ் வருவதும், தன் பாடத்தை அவளோடு விவாதிப்பதும் அவள் சில பல யோகா அதிசயங்களை ராஜ்க்கு கற்றுத் தருவதுமாக நாட்கள் நகர்ந்தன.

திலோ தனது மூன்று வருட பட்டயப்படிப்பை முடித்துவிட்டு யோகா ஆசிரமத்தில் இன்ஸ்ட்ரக்டராக பணியில் சேர்ந்தாள். அடுத்தத் தலைமுறைக்கு யோகாசனமும் மனவளர்ச்சிப் பயிற்சியும் அளித்துவந்தாள். தன் முதல் மாதச் சம்பளத்தில் தாய்க்கு புடவையும் ராஜ்க்கு கைக்கடிகாரமும் பரிசளித்தாள். நண்பர்கள் மூவரையும் ஹோட்டல் அழைத்துச்சென்று பார்ட்டியும் கொடுத்தாள்.

அடுத்து ராஜ் இன்ஜினியரிங் முடிப்பதற்காகக் காத்திருந்தாள். அந்த நாளும் வந்தது. ராஜ் ம் ரமணியும் முதல்வகுப்பில் இன்ஜினியரிங் முடித்து தங்கள் சுற்றங்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தினர்.

♡♡♡

4. காதல் மழை

நெஞ்சம் உன்னைக் கண்டவுடன்

இன்னும் கொஞ்ச நாள் துடிக்கட்டுமே;

உனைக் காணாது வருந்துமென் இதயம்

இன்னும் கொஞ்ச நாள் வருந்தட்டுமே;

என் கனவில் நீ வருவதும்

உன் கனவில் நான் வருவதுமாய்

எனக்குக் கனவு வருவதும்

இன்னும் கொஞ்ச நாள் வந்துவிட்டுப் போகட்டுமே;

உன்னருகே அமர்வதற்கும்,

நீ விரும்பும் புத்தகம் படிப்பதற்கும்

ஏங்குமென் இதயம்

இன்னும் கொஞ்ச நாள் ஏங்கட்டுமே;

ப்ளீஸ் சொல்லாதே

ஐ லவ் யு என்று;

‘திலோ’

‘சொல்லு ராஜ்’

‘எவ்ளவோ பேசிருக்கே ஒன்னோட, சிரிச்சிருக்கே பட் என்னவோ ஒரு ….’

‘நா ஒன்னை எருமை பக்கி நாயின்னெல்லா கூப்பிட்டிருக்கே , அதையு சேத்துக்கோ’

‘சினிமாலயெல்லா வருமே இந்த – இந்த ஆயிரம் பட்டாம்பூச்சி பறக்குது, ஒரே சமயத்துல ஆயிரம் வயலின் ஓசை – அப்டியெல்லா வசனம் வருமே, அதெல்லா பொய், அப்டியெல்லா ஓன்னு இருக்காது ன்னு நெனைப்பே, பட்’

‘ராஜ் எதுவும் நமக்கு நடக்கும்வரை எல்லாமே சும்மாதான் ராஜ்’

‘திலோ’

‘சொல்லு ராஜ்’

‘அது – ஐஸ்க்ரீம் சாப்டுவோமா ?’

‘ராஜ் இப்போதா நாம ஹோட்டல்ல ஃபுல் மீல்ஸ் சாப்டுட்டு, டெஸெர்ட் சாப்டுட்டு வந்திருக்கோ’

‘ஆமால்லே’

‘ஒனக்கு வேணும்னா, ஐ கேன் ஆல்வேஸ் கிவ் எ கம்பெனி, எனிதிங்க் பார் யு ராஜ்’

‘யெஸ் யெஸ் சாப்டோல்ல … பட்’

‘ராஜ் நாலு லைன் பேசிட்டு மூணு தடவை பட் சொல்லிட்டே’

திலோ நா …. ஒன்னு சொல்ல நெனைக்குறே, பட்’

‘அந்த வார்த்தை வெளில வரமாட்டேங்குது, கரெக்டா ராஜ்’

‘…’

‘ஒக்காரு ராஜ்’

‘நா ஒக்காந்துதானே … ஓஹ் நின்னுட்டிருக்கேனா …. சாரி … நா’

‘இப்டி சம்மணம் போட்டு உட்கார் ‘

‘வஜ்ராசனமா?’

‘இல்லே, லீவ் தட், ராஜ், நல்லா மூச்சு இழு … இன்ஹேல் … இன்னு’

‘…’

‘இப்போ மூச்சு விடு’

‘….’

‘மறுபடி இழு … இன்னு … இன்னு’ ‘…’

‘இப்போ மூச்சு விடு’

‘….’

‘இப்போ சொல்லு ராஜ்’

‘இல்லே, அது, நீ’

‘ராஜ்’

‘….’

‘ராஜ் ஐ லவ் யு ‘

‘அது வந்து எப்டி சொல்றதுன்னு …’

‘ராஜ் … ஐ … லவ் … யு ‘

‘ஐ … சாரி’

‘…’

‘திலோ நீ என்ன சொன்னே ?’

‘ராஜ்’

‘ப்ளீஸ் கம் அகைன்’

‘ராஜ் … ஐ செட் … ஐ .. லவ் .. யு ‘

‘ஓஹ், திலோ, ஐ டூ, ஐம் சாரி, நீ இல்லே … வேணான்னு சொல்லிருவியோன்னு ஒரு பயம் …’

‘ராஜ்’

‘தேங்க் யு திலோ, ஐ … ஐ லவ் யு டியர்’

‘இப்போ சாதாரணமா ஆயிடுச்சா ?’

‘யெஸ் ஐ லவ் யு’

‘நார்மல் ?’

‘யெஸ் யெஸ் ஐ லவ் யு திலோ, ஐம் சின்சியர்களி இன் லவ் வித் யு’

‘பக்கி பொறுக்கி எருமை ஐ லவ் யு டூ மை மேன்’

‘திலோ அது என்னவோ அப்டி வந்து நெஞ்ச அடச்சிக்கிட்டு …’

‘அது ஆம்பளைங்களுக்கே இருக்குற ஒரு பய உணர்ச்சி, தோத்துருவோமோங்கற நெனப்பு. விழுந்தா எந்திருக்கமுடியுமாங்கற சந்தேகம். தோல்வியத் தாங்கிக்க முடியாத ஒரு கோழைத்தனம்’

‘தப்புத்தா, மன்னிச்சிரு’

‘ராஜ் நா ஒரு ரெண்டு வருசத்துக்கு முன்னாலேயே எதிர்பார்த்தே’

‘எதை?’

‘நீ என்கிட்ட ஐ லவ் யு சொல்வேன்னு … ஐ வெயிடட் பார் யு ராஜ், இந்த நாளுக்காக நான் காத்திருந்தேன்’

‘சாரி டு மேக் யு வெய்ட் டியர், இன்ஜினியரிங் முடிச்சிட்டு பேசுனா நல்லாயிருக்கும்னு தோணிச்சி’

‘பக்கி’

‘பசிக்குது, ஒனக்கு ? சாப்பிட போலாமா ?’

‘ராஜ், இப்போதா நாம ஹோட்டல்ல ஃபுல் மீல்ஸ் சாப்டோ ‘

‘எனக்குப் பேசிக்குதே’

‘வா காஃபி குடிப்போ, சினிமா போலாமா?’

‘நீதானே என் பொன்வசந்தம்?’

‘தெரியும், எந்த சினிமாவுக்கு போவோம் ?’

‘நீதானே என் பொன்வசந்தம்?’

‘ஆமா, எந்த சினிமாவுக்கு போவோம் ?’

‘நீதானே என் பொன்வசந்தம்?’

இருவரும் சிரித்து கட்டியணைத்துக்கொண்டனர்.

வெளியில் மழை

அருகில் துணை

வேறேதேனும் உண்டோ இதற்கு இணை ?

♡♡♡

‘ஹாய் திலோ … கூப்டே’

‘வா … உள்ள வா … உட்கார் ‘

‘(மெதுவான ஒலியில்) மாமியார் இல்லியா ?’

‘அம்மா இப்போதா கோவிலுக்குப் போயிருக்காங்க’

‘ஓஹோ, அதா கூப்டியா …’

‘சீச்சீ … கைய எடு; இப்போ வந்துருவாங்க, சும்மா இரு, கதவு வேற தொறந்திருக்கு; ‘

‘அப்போ கதவு சாத்தியிருந்தா சம்மதமா ? ‘

‘அய்ய, உறுப்புடற வழியப் பாப்பியா, ஹெச்சிஎல் கம்பெனில பிரெஷர்ஸ் ரெக்ரூட்மெண்ட்ஸ் நடக்குது, பேப்பர்ல வந்திருக்குது; அப்ளை பண்ணு’

‘மெயில் ஐடி இருக்கா ? ‘

‘இதோ இங்கே பார் இருக்கு’

‘நீயே அனுப்பிடே என்னோட ஐடிலேர்ந்து’

‘அய் ஒன்னோட லைஃப், வேலை வேணும்னா நீ அனுப்பு’

‘சாரி ? ‘

ஒன் … ஓகே, சாரி, ஐம் சாரி, நம்ப லைப், நா இன்னிக்கு அப்ளை பண்ணிடறே, ஆல் தி பெஸ்ட் நண்பா’

‘தேங்க்ஸ் தோழி; ஒரு … ‘

‘நோ, நோ, அம்மா வந்துருவாங்க’

‘டேய், ஒரு டம்ளர் தண்ணி கேக்கவந்தேப்பா, தப்பாவே நெனைக்குறே பத்தியா’

‘பொய் சொல்லாதே; பொய் சொன்னா போஜனம் தண்ணி முத்தம் எதுவும் கெடைக்காது’

‘முத்தம் நீகுடு, தண்ணிய நா வீட்டுல போய் குடிச்சிக்கறே’

‘பக்கி, போ, போய் நம்ப வாழ்க்கையில நீ முன்னேறுற வழியப் பாரு; ஹெச்சிஎல் ல ஒன்னோட பிரெண்ஸ் யாராச்சு இருக்காங்களா ? ‘

‘ரமணியோட பிரெண்ட் ஒருத்த இருக்கா, வரியா போய் பாப்போ’

‘நா எப்புடிடா வர்றது ? நியூ ரமணியு போய் பாத்துட்டு வாங்க’

(பேசிக்கொண்டிருக்கையில் திலோவின் அம்மா வர)

‘வணக்கம்மா’

‘வாப்பா ராஜ், நல்லா இருக்கியா ? ‘

‘இருக்கேம்மா, நீங்க நல்லா இருக்கீங்களா ? ‘

‘என்னப்பா திடீர்ன்னு வந்திருக்கே ?

‘ஜாப் ரெக்ரூட்மெண்ட்ஸ் வந்திருக்கு, அதா திலோவா அப்ளை பண்ண சொல்லலாம்னு வந்தேம்மா’

யார யாரு அப்ளை பண்ண சொன்னா, பொய் சொல்றே – என்பது போல் திலோ முறைக்க

‘அவ தா ஏற்கனவே ஒரு வேலைக்கு போய்ட்டிருக்காளேப்பா’

‘அதாம்மா நானு சொல்லிக்கிட்டிருந்தே, நீயு வந்திட்டே’ என்று திலோ இடைபுகுந்தாள்.

‘சரி ஓகே; திலோ குடிக்க தண்ணி கொஞ்சம்’ – ராஜ் கண்ணடிக்க,

‘காஃபி போட்டுக் குடும்மா’ என்று அவள் அம்மா அறிவுறுத்த,

‘திலோ போடுற காஃபி தண்ணி மாதிரிதா இருக்கு, அதனால ஏதாச்சு ஒன்னு போதும்’ என்று ராஜ் சொல்ல,

கண் எதிரிலேயே டிகாஷனை அள்ளிப்போட்டு கடுங்காப்பி ஒன்று கலந்து ‘குடி’ என்று நீட்டினாள் திலோ.

மழை தரும் கருமேகம்

வெயில் வரையும் நிழலோவியம்

கானமிசைக்கும் கருங்குருவி

ஆதவன் நுழையா அடவி,

நிலவு வரும் இரவு,

இரவு தரும் கனவு,

….

எனக்குப் பிடித்த

இவை எல்லாமே கருப்பு தான் …

என்னுயிர்த் தோழி,

நீ தந்த இந்தக் காஃபி போலவே;

ராஜ் கவிதை படிக்க, அதைக் கேட்டு திலோ மகிழ்ந்து தான் கொஞ்சம் காஃபி குடித்துவிட்டு, ‘எச்ச பட்ட து, வே…ணுமா ? வே… ணாமா? எனக்கேட்க …

♡♡♡

ராஜ்ம் ரமணியும் வேலைக்கு அப்ளை செய்தார்கள். நேர்முகத்தேர்வுக்கு சென்றுவந்தார்கள். வேலை கிடைக்கும் என்று நம்பிக்கையோடு சொன்னார்கள். எல்லாம் நல்லபடியாய் நடக்க திலோ, ஆண்டவனை வேண்டிக்கொண்டாள். நம்பிக்கை பலித்தது. வேண்டுதல் நிறைவேறியது. வேலை கிடைத்தது.

‘திலோ, வந்தாச்சா?’

‘பறந்து வந்திருக்கே, கங்கராஜூலேசன்ஸ் ராஜ்’

கட்டியணைத்து முத்தமிட்டுத் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்டாள் திலோ.

‘ஆஃபர் லெட்டர் இதோ’

‘வெரி நைஸ் ராஜ், 8 லாக்ஸ் பெர் ஆணம், சூப்பர், ரமணிக்கு வந்திருச்சா ஆஃபர் ?’

‘யெஸ் ‘

‘ஐம் ஹாப்பி ராஜ்’

ஏனோ திலோவின் கண்கள் ஈரம் கசிந்தன. ராஜ் அவள் கண்ணில் முத்தமிட்டு மெல்ல அணைத்துக்கொண்டான்.

‘பட் திலோ, இதுக்கெல்லா காரணம் நீ’

‘ராஜ் படிச்சது நீ, இன்டர்வியூ அட்டென்ட் பண்ணது நீ, கேள்வி கேட்டவங்களுக்குத் தேவையான பதிலத் தந்தவ நீ – ஹவ் கேன் ஐ டேக் தி கிரெடிட் ராஜ்?’

‘வேலைக்கு அப்ளை பண்ணது நீ’

‘படிச்சி மார்க் எடுத்தது நீ’

‘திலோ உன்னோட பெருந்தன்மைய இது காட்டுது – வேறென்ன சொல்ல’

‘எல்லாத்துக்கு நாந்தா காரணம் னு சொல்றே பாரு ராஜ் – அது உன்னோட பெருந்தன்மையக் காட்டுது’

‘லவ் யு திலோ’

‘ஐ லவ் யு ராஜ்’

கட்டியணைத்துக் கொண் டு, முத்தமழை பொழிய, வான்மழை அதைக்கண்டு ரசித்தது.

♡♡♡

வேலைக்குச் சேர்ந்து ஒருமாதம் ஆனது. சம்பளம் வந்தது. நண்பர்கள் பெரிய பார்ட்டி வைத்துக் கொண்டாடினர். சினிமா சென்றனர். ராஜ் திலோவை வீட்டில் விட்டு விட்டுக் கிளம்ப எத்தனித்தான்.

‘சோ திலோ, நாளைக்கு சனி ஞாயிறு என்ன ப்ளான் ?’

‘எனிதிங் பார் யு ராஜ்’

‘பாப்போம், இந்தா …’

‘இது என்ன?’

‘எ ஸ்மால் கிப்ட்’

‘அதா பார்ட்டி ஆச்சே ‘

‘அது ப்ரெண்டா பார்ட்டி, இது காதலனா கிப்ட்’

‘ஓ டபுள் ரோல்’

‘யெஸ் ப்ளீஸ் அக்சப்ட்’

‘தேங்க் யு ராஜ், பிரிக்கவா?’

‘இல்லே … அப்புறம் … நாளைக்கு … நா போனதுக்கப்புறம்’

‘ஓகே, பை, ஸ்வீட் ட்ரீம்ஸ்’

‘யு டூ, பை’

ராஜ் கிளம்ப, அப்படியென்ன கிப்ட், பிரிச்சி பாக்கறதுக்குல்ல பையன் ஓடிடா என்று ஒரே குறுகுறுப்பு திலோவின் மனதில். வீட்டிற்குள் நுழைந்து, தன் அறைக்குச் சென்றாள். ராஜ் தந்த பரிசுப் பெட்டியைத் திறந்தாள். அட்டைப்படமே வித்தியாசமாக இருக்க, ‘அடப்பாவி’ என்று மனதுள் எண்ணிக்கொண்டாள். சிரிப்பு கோபம் இரண்டும் சேர்ந்தே வந்தது. ‘நாளைக்கு இளிச்சிக்கிட்டு வருவால்ல , இருக்கு மகனே ஒனக்கு’ என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டாள். சிரித்துவிடக்கூடாது அவன்முன் என்று தனக்குள்

கட்டளையிட்டுக்கொண்டாள். ஏனோ தூக்கம் வராது தவித்தாள். காலை எப்பொழுது விடியும் என்றுக் காத்துக் கிடந்தாள். அவன் வரும்பாதை பார்த்துக்கிடந்தாள்.

ஆடு வந்தது.

தலையை வெட்டு வெட்டு என்று ஆட்டி வந்தது.

‘திலோ’ என்று அழைத்தது.

‘வா நாயே வா வா’

‘என்ன வரவேற்பே சரியில்ல ?’

‘ஏ இந்த நாய்க்கு மேளம் தாளம் கேக்குதோ ? மாப்பிள்ளைன்னு நெனப்பு’

‘இல்லியா பின்னே’

‘ம…’

‘கெட்ட வார்த்தை?’

ஏண்டா ஒரு கிப்ட் வாங்கணும்னா வாட்சு, புடவை, சுடி, ஒரு மொபைல், எவ்ளோ இருக்கு … நாயி வாங்கிட்டுவந்துருக்கு பாரு … கிப்ட்’

‘புடிக்கலையா?’

‘டேய் நாலு பேரு … வேணா … எங்கம்மா என்ன கிப்ட் வாங்கித்தந்தா ன்னு கேட்டங்கன்னா நா என்ன சொல்லுவே நாயே?’

‘என்னோட மாமியா அப்டில்லா கேக்கமாட்டாங்க’

‘சரி … அம்மா விட்டுத்தள்ளு … கல்பனா கேட்டா … அவளுக்கு தானே கிப்ட் … இரு, டேய் எருமை … இங்கவா’

‘என்ன?’

‘ஆமா இதெல்லா கடைக்குப்போய் வாங்க ஒனக்கு அவ்ளோ தைரியம் பாத்ததே, எப்டி நீ வாங்குனே?’

‘நா போய் வாங்கல’

‘பின்ன, கல்பனா வாங்கிட்டுவந்தாளா?’

‘இல்ல, ஆன்லைன் ல ஆர்டர் பண்ணே’

‘நாயி நாயி எருமை பன்னி’

‘புடிக்கலேன்னா திருப்பித்தா, ரிட்டர்ன் பண்ணிடலா’

‘அதெல்லா ரிட்டர்ன் எடுத்துக்கமாட்டாங்க’

‘ஒரு வாரத்துக்குள்ள ரிட்டர்ன் பாசிபிள்’

‘வேணா விடு, அடுத்த தடவை இந்தமாதிரி ஏதாச்சு வந்துச்சி, மவனே தொலைஞ்சே’

‘அந்த பாக்ஸ் எங்கே? ஐ கேன் ரிட்டர்ன் இட் ‘

‘யூஸ் பண்ணிட்டா ரிட்டர்ன் எடுத்துக்கமாட்டாங்கடா மண்டு ‘

‘அதெல்லா பாசி … நில்லு … யூசு … யூஸ் பண்ணிட்டியா காட்டு ?’

‘சீ போ’

‘ப்ளீஸ் ப்ளீஸ் காட்டே ‘

‘ஓடிரு அடி வாங்காதே’

‘வாங்கிக்கறே, காட்டு’

‘செருப்பு இங்கே ஒன்னு வச்சே, எங்கே அது’

‘இதோ இதையா தேடுறே’

‘கொண்டா கொண்டா அதை’

‘காட்டு, நா தரே ‘

‘செருப்பு வேணா, நீ கெளம்பு’

‘சரி பசிக்குது, தின்ன ஏதாச்சு இருக்கா?’

‘ஒனக்கு லட்டு தரலாம்னு எடுத்து வச்சிருந்தே …’

‘ஒன்னு தா’

‘லட்டு தானே?’

‘பின்ன கோபமா இருக்கே, முத்தமா தருவே?’

திலோ ராஜ் க்கு லட்டு ஊட்டிவிட்டாள் தன் வாயிலிருந்து, அவன் வாயினுள்.

‘சைஸ் சரியா இருக்கா ?’ லட்டு தின்று கொண்டே ராஜ் கேட்க, திலோ செருப்பை எடுத்து அவனை அடிக்க …

5. பிரிவு மழை

மழை

இதே மழை தான்

இந்த மழையில் தான்

ஒரு நாள் ….

வேலை நிமித்தமாக நான்

வெளிநாடு செல்லவேண்டிய நிர்பந்தத்தை

எடுத்துரைத்தேன்.

அழுதாள்,

அசுவாசப்படுத்தினேன்;

நீதான் போகவேண்டுமா என்றாள்,

சொன்னேன்;

போகவேண்டிய அவசியமென்ன என்றாள் ,

சொன்னேன்;

எப்போ வருவே என்றாள் ,

சொன்னேன்;

முத்தமிட்டாள்,

கட்டிக்கொண்டேன்;

விடைகொடுத்தாள்,

இறகொடிந்து பறந்துச் சென்றேன்

இதே மழை நாளில் தான்

ஒரு நாளில்.

‘திலோ’

‘என்ன ராஜ்? சொல்லு ‘

‘எனக்கு ஆன்சைட் ஒன்னு கிடைச்சிருக்கு, போறியான்னு கேக்கறாங்க?’

‘வா… எவ்ளோ நாளைக்கு?’

‘வேணான்னு விருப்பமில்லேன்னு சொல்லிராட்டா ?’

‘சே, போய்ட்டுவாப்பா, பட்’

‘ஒன் இயர்’

‘போய்ட்டுவாயே ஒரு வருஷம் தானே, ‘எந்த கண்ட்ரி மகனே, அதச் சொல்லு?

‘ஜெர்மனி’

‘எப்போ போகணும்?’

‘நா ஓகேன்னு சொன்னா … விசா ப்ரோசஸிங் நெக்ஸ்ட் வீக், வீக் எண்டு ப்லைட்’

‘ராஜ் மை பெஸ்ட் விஷ்ஷஸ் … டோன்ட் லுக் பாக் … போ போய் நாலு எடத்தப் பாரு, மத்த மக்களோடவும் பேசு பழகு, ஆல் த பெஸ்ட் ராஜ்’

‘அப்போ ப்ராசஸ் ஸ்டார்ட் பண்ண சொல்லிறட்டா ?’

‘டேபினெட்லி, வாட் அபௌட் ரமணி ?’

‘அவனுக்கு வேற ப்ராஜெக்ட், வேற கஸ்டமர், வேற சைட், போவா … சீக்கிரம்’

‘அப்போ அடுத்த வாரம் நீ ஜெர்மனி கெளம்பணுமா?’

‘யெஸ்’

‘ராஜ்’

‘சொல்லு திலோ’

‘என்னென்ன இங்கேர்ந்து எடுத்துக்கிட்டு போனு, சாப்பாடு, வெஜிடேரியன், …’

‘திலோ உன்கிட்ட பாஸ்போர்ட் இருக்கா?’

‘இல்…இல்லை’

‘ப்ளீஸ் நாளைக்கு அப்ளை பண்றியா பாஸ்போர்ட் ஆபீஸ் போவோமா ?’

‘….’

‘என்ன அப்ளை பண்ணணும்ல ?’

‘ஒன் இயர்ல நீ திரும்பி வந்திருவேல்ல ராஜ்?’

‘வந்திருவே, வந்து இந்த மகாராணிய கல்யாணம் பண்ணிகிட்டு, மறுபடி போகணும்னா ?’

‘அப்போ பாப்போ ராஜ் … ஆக்சுவலி எனக்கு இந்தியா விட்டு வெளில வர இஷ்டமில்ல ?’

‘ம்ஹும் … இன்ஜினியரிங் படிக்க இஷ்டமில்ல, இந்தியா விட்டு வர இஷ்டமில்ல ? என்னப்பா இதெல்லா, என்ன மட்டு மாட்டி விட்டுட்டே பத்தியா ?’

‘டேய் .. சீ … ஏ அப்டி சொல்றே?’

‘இன்ஜினியரிங் படிச்சி, இன்ஜினியரிங் படிச்சிட்டோமேன்னு வேலைக்கு போயி, சம்பாதிச்சு, பணம் வருதேன்னு லோன் வாங்கி வசதியா வாழ ஆசைப்பட்டு, லோன் கட்ட இன்னு நல்ல சம்பளம் தேடி, டோன்ட் யு திங்க் திஸ் ஈஸ் கோயிங் இன் எ சைக்கிள்? நீதானே சொன்னே ? இப்போ அப்டித்தானே ஆகுது ?’

‘ராஜ் நீ ஆண் … திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடணும் … ஒனக்காகவா ஓடுறே ? நமக்காக ராஜ் … நம்ப எதிர்காலத்துக்காக … ஓடு, உழை , களை , சம்பாரி, திரும்பி வா, நா உன்னோட களைப்பெல்லா போக்குறே, அதுக்கு நான் பொறுப்பு’

‘நானு ஒன்னோடயே இங்கேயே இருந்துடறேனே, பசங்களுக்கு எஞ்சினீரிங் சொல்லிக்குடுத்துக்கிட்டு, ஹெச்சிஎல் வேணா, ஜெர்மனியு வேணா என்ன சொல்றே’

‘ராஜ் இது கோழைத்தனம் ராஜ், போராடு ராஜ், போராடு, என்மேல இருக்குற காதல் ஒன்னை முன்னேற விடாமத் தடுக்குது ராஜ், ஒங்கம்மா சொன்னாங்கள்ல ஞாபகம் இருக்கா – ஒனக்கு வேணும்னு தோணிச்சின்னா போராடத் தயங்காதேன்னு’

“பட் நா வெளிநாடு போகணும்னு என்ன அவசியம் ? அம்மா ‘தேவையில்லாம எதையு தொரத்தாதே’ ன்னு இதையும் தானே சொன்னாங்க ”

“ராஜ் இப்போ சான்ஸ் கிடைக்கும்போது போகாம, அப்புறம் வருத்தப்பட்டு ப்ரயோஜனம் இல்லே ராஜ், நாளைக்கு ரமணியோ இல்லே வேற யாராச்சு ஆன்சைட் போயிட்டு வந்து ‘அங்கே ஊரு எப்டி இருக்கு தெரியுமா’, அப்டின்னு சொன்ன ஒனக்கு ஒரு ஏக்கம் வரலா; நாம போகலியேன்னு நீ வருத்தப்படலா,

போகமுடியாமப் போயிடுச்சேன்னு நெனப்பு வரலா; இந்த நெனப்பு கோவத்துல கொண்டுபோய் விடு; யாரால இது கைவிட்டு போச்சுன்னு நெனக்கத் தோணும்; இவளாலதானேன்னு ஒருவேளை மனசு அலைபாய்ஞ்சிருச்சின்னா, ஒருதடவை ஒடஞ்சிருச்சின்னா, பின்ன ஓட்றது கஷ்டம் ராஜ், இப்போ நோ கமிட்மெண்ட்ஸ், எதையு எப்புடி வேணும்னாலு மாத்திப் போட முடியும், பிரிவு வறுத்தும், தாங்கிப்போ, தனிமை துன்புறுத்தும், சகிச்சிப்போ, சாஞ்சிக்க தோள் இல்லையேன்னு எங்கும், காத்திருப்போம் ராஜ்’

♡♡♡

‘சரி, நா ஜெர்மனி போயிட்டா நீ என்ன பண்ணுவே;

‘நீ வரும்பாதை பாத்துக் காத்திருப்பேன், வேறென்ன;

‘ஒரு கவிதை சொல்லேன்’

‘கவிஞரிடம் கற்பனை வளம் தீர்ந்துவிட்ட தா இல்லை காட்டருவி போல் வார்த்தைகள் வந்து விழ காதலி

நானெதெனும் காரியம் செய்யவேண்டு மா ?’

‘ஒரு முத்தம் கொடு. கவிதை வருதா பார்க்கிறேன்’

தரப்பட்டது

‘ம்ம்ம் … ஒன்னு வரலே, நீயே கவிதை ஒன்னு சொல்லே’

‘அடப்பாவி முத்தம் மட்டு கேட்டு வாங்குனே’

‘வேணும்னா திருப்பு குடுத்துடுறே, 100 சதவிகிதம் வட்டி, எப்புடி வசதி ?’

‘குடுக்குறேன்னு சொல்லும்போது அதை ஏன் வேணாம்னு சொல்லனு, ரெட்டர்ன் இட் ப்ளீஸ்’

‘ரிட்டர்ன்ட் வித் இன்டரெஸ்ட் அண்ட் தேங்க்ஸ்’

தரப்பட்டது

‘உனக்காகக் காத்திருக்கும் கவிதை – இதோ

மாலை வேளையில்

மங்கை எனைக்காண

மன்னவன் நீ வருவாயெனக்

காத்திருப்பேன்;

மணம் வீசு

மலர் பல கொணர்ந்திம்

மங்கையின் கூந்தலில் சூடி

முகர்ந்து நீ மகிழ்வாயெனக்

காத்திருப்பேன்;

சிரிக்கையில்

உன்கன்னத்தில் விழும் குழியைத்

தொட்டு ரசிக்கலாமெனக்

காத்திருப்பேன்;

இங்கே பூச்சி

இது என்ன

என்றெதாவது சாக்கு போக்கு சொல்லி

எனைத் தொட்டுப் பேசி,

அந்தப் பரவசத்திற்காகக்

காத்திருப்பேன்;

இரவில் உறங்கவிடாது

உன்நினைவுகள் எனை வருத்தும்

சுகத்திற்காகக்

காத்திருப்பேன்;

உறங்காது,

சிவந்த என்கண்களைக் கண்டு

கேலிசெய்து சிரிக்கும்

தோழியரைப் புறக்கணித்து

தோழா, உனக்காகக்

காத்திருப்பேன்;

‘லவ்லி, எப்டி அருவி மாதிரி கொட்டுறே … கவிதை கவிதை …. ‘

‘எல்லா நீ சொல்லித்தந்தது தா … உன்னைப்பத்தி நெனச்சாலே … அதுவா வருது ‘

‘சூப்ப்ப்ப்ப்பர் ‘

‘கவிதைக்குப் பரிசு காதலரே ? ‘

‘அழகுத் தமிழில்

அழகியக் கவிதை படைத்த

அழகு ராணி திலோவின்

அதரங்களில்

ஆயிரம் முத்தங்கள் தரச்சொல்லி

ஆணையிடுகிறது இந்தக் காதல் கோர்ட்’

ஆணை நிறைவேற்றப்பட்டது.

அந்த மழை சாட்சியானது.

பணத்தின் வலிமை பெற்றவருக்கு, ஈகையின் வலிமை தந்தவருக்கு, முத்தத்தின் வலிமை பெற்றவர் தந்தவர் இருவருக்கும்.

♡♡♡

அடுத்த நாட்களெல்லாம் மிகவும் வேகமாக நகர்ந்தது. ஜெர்மனி பயணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகள் மும்முரமாக நடந்தேறியது. பெரிய பெட்டி, புது சட்டைகள், பேண்ட், குளிர்காலத்திற்கு வேண்டியத் துணிமணிகள், காலனி, ரெடி மிக்ஸ் வித் ரைஸ் ஐட்டங்கள், குக்கர் எல்லாம் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து பார்த்து பார்த்து வாங்கினர். ராஜ் ஜெர்மனிக்கு கிளம்ப வேண்டிய அந்த நாளும் வந்தது. ‘ மிட் நைட் ஒரு மணிக்கு ப்ளைட், பத்து மணிக்கு அங்கே இருக்கணும், எட்டு மணிக்கு முன் கிளம்புவோம், நான் பிக்கப் டிராப் பண்றே’ என்று ரமணி சொல்ல நண்பர்கள் ஒத்துக்கொண்டனர்.

மாலை ஆறு மணி. எட்டு மணிக்குக் கிளம்பவேண்டும். திலோ ராஜ் க்கு ‘ப்ரீயா இருந்தா வாயே பேசுவோம்’ என்று குறுஞ் செய்தி அனுப்பினாள்.

அடுத்த ஐந்து நிமிடத்தில் ராஜ் திலோவின் எதிரில்.

‘பிசியா இருந்தியாப்பா, டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?’

‘இல்லெல்லா, எல்லா சரியாஎடுத்து வச்சிருக்கேனான்னு செக் பண்ணிக்கிட்டிருந்தே’

‘கொஞ்சநேரம் பேசலான்னு கூப்டே, ஏர்போர்ட் ல அழ முடியாது, ஒன்ன கட்டிக்க முடியாது, முத்தம் குடுக்க முடியாது, அதெல்லா இங்கியே முடிச்சிட்டா கொஞ்சம் ப்ரீயா இருக்கு ‘

மெல்லிசையைக் கொஞ்சம் சத்தமாக அறையுள் பரவவிட்டாள்.

ராஜ் அவளை இழுத்து தன் மடியில் வைத்துக் கொண்டு, முத்தமழை பொழிந்தான்.

‘ஒருமணிக்கு கெளம்புனா எவ்ளோ மணிக்கு போய் சேருவே?’

‘டென் ஹவர்ஸ் ப்ளைட். காலை பதினோரு மணிக்கு லேண்ட் ஆகனு, டூ ஹவர்ஸ் அபார்ட்மெண்ட் போய் செட்டில் ஆக, அரௌன்ட் ரெண்டு மணிக்கு ஒனக்கு போன் பண்றே’

‘மறந்துறமாட்டியே ராஜ்?’

‘சீ எதுக்கு மறக்கணு ? ஒனக்கு பர்ஸ்ட் கால், அப்புறம் அம்மாவுக்கு, அப்புறம் ரமணி, அவ கல்பனாட்ட சொல்லிருவா’

‘எனக்கு மொதல்ல கால் பண்ணா நாம பேசிமுடிக்க லேட் ஆயிடு, நீ அம்மாவுக்கு ரமணிக்கு மொதல்ல பண்ணிடு, நாம அப்புறம் பேசுவோம்’

‘கரெக்ட், பட் யு ஆல்வேஸ்’

‘சோகமா இருக்கியா ராஜ்?’

‘ஆமான்னு சொன்னா நீ திரும்ப அழ ஆரம்பிச்சிருவே, அதனால சோகம் இல்லே’

‘பக்கி எருமை’

தடுக்கப்படும் என்றெண்ணிக்கொண்டே திலோவின் உடலெங்கும் பரவும் ராஜ்ன் விரல்களைத் தடுக்க மனமில்லாது மேயவிட்டாள் திலோ.

சிவபூஜையில் கரடியாய் ராஜ்ன் போன் சிணுங்கியது, அழைத்தது ரமணி, ‘நண்பா ஒரு பதினைஞ்சி நிமிசத்துல பிக்கப்கு வரே’ என்று தெரிவிக்க, ‘நண்பா நா இன்னு ரெடி ஆகலே, கிவ் மீ தர்ட்டி மினிட்ஸ் ப்ளீஸ்’ என்று ராஜ் பதிலுரைத்து போன் அழைப்பைத் துண்டித்தான்.

‘போவோமா?’

‘ராஜ் நீ முன்னால போ, நா அரைமணி நேரத்துல உன் வீட்டுக்கு வரே, அம்மாட்ட சொல்லிட்டுப்போ’

‘இப்போவே வாயே, போவோம்’

‘இல்லே நா இன்னுகொஞ்சம் நேரம் அழணும், ஏர்போர்ட் ல முடியாது, நீ போ ப்ளீஸ், போய் கெளம்பு’

உதட்டில் முத்தம் இட்டு, கட்டிப் பிடித்து, லவ் யு சொல்லிவிட்டு, ராஜ் மாடி இறங்கிப்போனான். திலோவின் தாயின் காலில் விழுந்து வணங்கி ‘போய்ட்டு வரேம்மா’ என்று சொல்லிவிட்டு திலோ இருக்கும் பக்கம் திரும்பாது தன் வீட்டிற்குச் சென்றான்.

♡♡♡

மாலை 7:45 க்கு நண்பர்கள் நால்வரும் ராஜ் ன் வீட்டில் ஒன்று கூடினர். ராஜ் தன் தாயின் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றான். குறித்த நேரத்திற்குள் விமானநிலையம் அடைந்தனர். சிறிது நேரம் அரட்டை, சிரிப்பு. 10.30 மணிக்கு ராஜ் மூவரிடமும் சொல்லிக்கொண்டு கை குடுத்து விடைபெற்று பத்திரமாய் வீடு போய் சேர அறிவுறுத்தி, வீடு சென்றவுடன் போன் செய்யுமாறு திலோவிடம் சொல்லிவிட்டு விடைபெற்று உள்ளே சென்றான்.

மழை பொழிந்தது.

தன் கண்ணில் வழியும் கண்ணீரை மழைத்துளியில் துடைத்து மறைத்துக்கொண்டாள் திலோ.

வீடு சென்றடைந்து ராஜ் க்கு போன் செய்து, அவன் விமானம் ஏறும் வரை பேசி, அழுது, சிரித்து, கவிதை கேட்டு, படித்து, ஒருவாறு விடைகொடுத்தாள் .

விமானத்தில் தன் இருக்கையில் அமர்ந்தான். கண்ணீர் கண்களை மறைக்க உறங்கியே சமாளித்தான். ஜெர்மனியின் ஃப்ராங்க்பர்ட் விமான நிலையத்தில் இறங்கினான். காதல் பின்னுக்கிழுத்தது, கடமை முன்னோக்கித் தள்ளியது. ஒரு டாக்சி வைத்துக்கொண்டு தன் இருப்பிடம் வந்துசேர்ந்தான். காண வேண்டிய நபரைக் கண்டுபிடித்து, தான் வந்துவிட்ட செய்தி சொல்லி, கிடைத்த உணவை உண்டு, காலிங் கார்டு வாங்கி தொலைபேசி நோக்கி ஓடினான்.

முதலில் திலோவை போனில் அழைத்தான். அவன் அழைப்பிற்காகவே காத்திருந்த திலோ தொலைப்பேசி சிணுங்கியவுடன் அழைப்பை ஏற்றாள் . தான் வந்து சேர்ந்ததைச் சொல்லிவிட்டு, அம்மாவிடமும் ரமணியிடமும் பேசிவிட்டு பின் மீண்டும் அழைப்பதாய்ச் சொல்ல, அவன் போனைத் துண்டிக்கும் முன் கேட்டுவிட வேண்டுமென்ற அவசரத்தில் ‘சாப்டியா…’ என்று இவள் கத்த , தன்னைக் கேட்கிறாளோ என்றெண்ணி ‘ஆச்சும்மா ‘ என்று தாய் கீழிருந்து குரல் தர … அதற்குள் போன் துண்டிக்கப்பட நாக்கைக் கடித்துக்கொண்டு, மளமளவென்று ராஜ் யிடம் என்னென்ன கேட்க வேண்டும் என்று ஒரு லிஸ்ட் தயார் செய்தாள் .

கேட்டாள் , பேசினாள் , சிரித்தாள், அவன் அனுபவங்களை தினம் விசாரித்து மீண்டும் பேசி, மீண்டும் சிரித்து …

♡♡♡

4. ஊடல் மழை

அவள் விரலோடு விளையாடிக்கொண்டே நான்

என் மடியில் தலைவைத்து படுத்துக்கொண்டு அவள்;

கவிதை ஒன்று சொல்லேன் என்றாள்;

‘இரு அற்புதக் கவிதைகளை

இறுக்கி பிடித்துக் கொண்டு

படிக்கவிடாத பாவையே…’

என்று ஆரம்பித்தேன்;

முதுகில் குத்தினாள்;

வேறு சொல் என்று கட்டளையிட்டாள்;

‘நர்த்தனம் ஆடும் விழிகள்;

நறுமணம் வீசும் மொழிகள்;

நிலவின் நகல் முகம்…’

ஆகா அற்புதம், அப்புறம் … என்றாள்

‘உண்மையைச் சொல்லடி’

சொல்லுகிறேன், மேலே சொல் என்றாள்;

‘உன் தங்கை மட்டும்

எப்படி இப்படி அழகாய் இருக்கிறாள்’

என்று முடித்தேன்;

கோபத்தில் என்னைக் கடித்து விட்டு

விருட்டென்று சென்றுவிட்டாள்;

திலோவின் தொலைபேசி அழைக்க, +49 அதில் தெரிய

‘ராஜ்ஜ்ஜ்’

‘ஹாய் செல்லம் ஸ்வீட்டி, என் புஜ்ஜி குட்டி’

‘எப்டி இருக்கே ? சாப்டியா ?’

‘ஒரு கவிதை, மின்னல் மாதிரி, திடீர்னு உருவாச்சி, சொல்லட்டா;’

‘ஜொள்ளு பட் மின்னல் அப்டியெல்லா திடீர்ன்னு உருவாகாது’

‘கவிதை என்பது கற்பனை, அதுல அறிவியல் சேக்கக்கூடாது என் சிநேகிதியே‘

‘ஐம் சாரி, ஓவர் டு கவிதை, என் செல்லச் சிநேகிதனே’

கண்ணோடு கண் மோதி

காலம் பல ஆயிடுச்சி !

‘நா அங்கே, நீ இங்கே பாத்துக்கமுடியாதில்ல ‘

நின் நெஞ்சோடு நெருங்கிப் பேசி

நாட்கள் பல ஓடிடுச்சி !

‘ஆமா கரெக்ட் தா ‘

வளையலோடு விளையாடி

வாரம் பல ஆயிடுச்சி !

‘வைட்டிங் ஃபார் ‘

வாராய் என் தோழி

‘பாஸ்போர்ட் இல்லேப்பா ‘

நெஞ்சில் கவிதை

நெறஞ்சி இருக்கு

‘கேட்க இரண்டு காதுகள் இருக்கு ‘

நானே சொல்கிறேன்

நானே எழுதுகிறேன்

‘அஃப்கோர்ஸ், சொல்ல நீ ரசிக்க மட்டுமே நான்’

நாளிதழ் வேண்டாம் – உன்

பூவிதழ் போதும்.

‘அவ்ளோ சின்னதா ? ‘

இதழில்

இதழால் !!!

‘வாவ் … இது இதுதா உன் டச், ஐ லைக் இட், லவ் யு பேபி ‘

‘என்ன ரிங் டோன் மாத்திட்டே போலிருக்கு ‘

‘நீதா அந்தப்பாட்டு நல்லால்லேன்னு சொன்னியே, அத்தா, ஒனக்கு பிடிக்கலேன்னா எனக்கு நோ நோ’

‘சாப்டியா ? தூக்கம் வந்ததா, தூக்கத்துல நா வந்தேனா ? ‘

‘சொல்றே, சொல்றே, நீ எப்டி இருக்கே ? சாப்டியா ? ‘

‘ம் ம் இருக்கே …. என்னவோ போகுது ‘

‘ஏம்பா அலுத்துக்கறே, என்ன ஆச்சி ? ‘

‘ஒன்னு ஆகல்லே, சரியா சோறு கெடைக்கமாட்டேங்குது, வெஜிடேரியன் பாரு ‘

‘ரைஸ் மிக்ஸ் பொடி இன்னும் வாங்கி அனுப்பட்டா ? ‘

‘அத்தவிடு நீ எப்டி இருக்கே, என்னோட மாமியார் எப்டி இருக்காங்க ? ‘

‘நல்லா இருக்காங்க, மாமா தா அடிக்கடி வந்து ரொம்ப தொல்லை பண்றாரு ‘

‘என்னவேணுமா அந்தாளுக்கு ? பணம் குடுத்துட்டேல்ல ? ‘

‘பொண்ண குடு, பொண்ண குடுன்னு நச்சரிக்கறாரு ‘

‘இன்னு வரதட்சணை எவ்ளோன்னு முடிவாக லே, கல்யாணம் நடக்கலே, அதுக்குள்ளே பொண்ணுன்னா என்னபண்றது ? ‘

‘வரதட்சணை ? நண்பா நாங்க வாங்கறதுமில்லே, கேக்கவு மாட்டோ; கட்டுன வேட்டி சர்ட்டோட நீங்க வந்தா போதும்பா’

‘ஓகே, குட், பட் கல்யாணம் நடக்கலியே, அதுக்குள்ள பொண்ண குடுன்னு அவசரப்பட்டா ? ‘

‘எருமை, அவரு என்னை பொண்ணு கேக்குறாரு ‘

‘ஓஹோ ‘

‘ஆமா … ட் யூப் லைட் ‘

‘ஒனக்கு ஓகே ன்னா கட்டிக்கவேண்டியதுதானே ‘

‘என்ன ?’

‘இல்லே, ஒனக்கு ஓக்கே ன்னா ……..’

‘எடு செருப்ப, நாயே, எப்போ எப்டி அத்துவிடலான்னு காத்திருக்க போலிருக்கு ‘

‘சும்மா, ஹிஹிஹி ‘

‘நீ ஜெர்மனி போறேன்னு சொன்னப்போவே நெனச்சேண்டா … ‘

‘ஹிஹிஹி ‘

‘அங்கே ஒசரம் ஒசரமா வெள்ளையு ஜொள்ளையுமா பொம்பளைங்கள பாத்தவொடனே இந்த நெனப்பு வந்திருக்கில்ல ‘

‘சேச்சே ‘

‘பின்ன ? ‘

‘இந்தியாலேர்ந்து கிளம்பும்போதே அந்த நெனப்பு இருந்துச்சி ‘

‘தெரியும்டா தெரியும் … எல்லா ஆம்பளைங்களு ஏண்டா அலையறீங்க, கிளி மாதிரி காதலி இருந்தாலு … கொரங்கோட கூத்தடிக்கத் தோணுது ல்ல ‘

‘போதும்டி, சும்மா விளையாட்டுக்கு சீண்டிப் பாத்தே’

‘நீ வருவேல்ல இங்கே, வா மகனே, சோத்துல வெசத்த கலந்து குடுத்துடறே, வா வா ஐம் வைட்டிங்’

‘ஓக்கேப்பா ஐம் சாரி, மன்னிச்சிக்கோ’

‘டேய் ஒன்னோட மனசுல இல்லாம அதெப்புர்ரா அப்டி ஒரு வார்த்தை வரு ? ‘

‘என்னோட மனசுல நீ மட்டுதா இருக்கே’

‘வேணாசாமி வேணவே வேணா, அங்கியே யாராச்சு செகண்ட் ஹாண்ட் வெள்ளைகாரிய கூட வெச்சிக்கிட்டு நாசமாப்போ’

‘இப்போவே அடுத்தப் ப்ளைட்டப் புடிச்சி நேரா வந்து நின்னு … ஒன்னோட … ‘

‘இன்னு 2 மணி நேரம் இருக்கு’

‘எதுக்கு? ‘

‘நெக்ஸ்ட் ப்ளைட் டு சென்னை, கெளம்பு நண்பா’

‘அப்போ விளையாட்டுக் கோபமா?’

‘ஆமா நீ என்னச் சீண்டும்போது நா ஒன்ன சீண்டக்கூடாதா? அதையுதவிர ஒனக்கு அவ்ளோல்லா தைரியம் கெடையாதுடா, நீ ஒரு பயந்தாங்கொள்ளி’

‘நல்லவேளை சமாதானமாயிட்டே, இல்லேன்னா … ‘

‘இல்லேன்னா ? ‘

‘உன்னை சமாதானப்படுத்த புடவை வாட்ச் இந்தமாதிரி ஏதாச்சு வாங்கித்தரணு ‘

‘ஆய் அஸ்க்கு புஸ்க்கு … ஒன்னோட ரேஞ்சே மாறிடிச்சி மகனே; இனிமெல்லா புடவை வாட்ச் ல வேலை நடக்காது ஆமா ‘

‘பின்ன ? ‘

‘இன்னு பெருசா, ஒரு நெக்லஸ் வளையல் … ‘

‘அதெல்லாதா ஏற்கனவே எக்ஜிபிஷன்ல வாங்கித் தந்திருக்கேனே ‘

‘தங்கத்துல தம்பி, தங்கத்துல ‘

‘வரும்போதுதானேக்கா வாங்கியாரானு ? ‘

‘வந்தாதானேன்னு மனசுல நெனைக்கறேல்ல ‘

‘வராம எங்கே போகப்போறே ‘

‘சரி வைக்கட்டா ‘

‘வேணா ‘

‘நீ இன்னு சாப்பிட்டுருக்கமாட்டே, ஒனக்கு பசிக்கும்பா ‘

‘நீ இப்டி சொன்னதே போதும், பசியாறப் பார்வை போதும், பரிமாற வார்த்தை போதும்’

‘ வாவ் … ராஜ் ஞாபகம் இருக்கா ஒனக்கு ? ‘

‘இருக்கு’

‘நா என்னன்னே சொல்லலே, ஞாபகம் இருக்குன்னா என்ன அர்த்தம் ?’

‘பசியாறப் பார்வை போதுமே, பரிமாற வார்த்தை போதுமே – அதானே’

‘எப்புடிப்பா’

‘சிலபல விஷயங்கள் உயிர் போகும்வரை மறக்காது, முக்கியமா இதுதான் காதலான்னு தெரியாமலேயே பழகிய அந்தத் தருணங்கள் மறக்காது, மறக்க முடியாது ‘

‘அப்போ நா …?’

‘நீ ஸ்கூல்ல ஜாயின் பண்ண இரண்டாவது நாள் ‘

‘இந்த உலகம் ஏதோ ஒரு ஈர்ப்புல ஓடுதுன்னா, அது இந்தக் காதலே தவிர வேறென்ன ராஜ், என்ன சொல்றே?’

‘காதல்ங்கறது கடவுள் பூமிவாழ் மக்கட்கு தந்த வரம், அதப் புரிஞ்சிக்காம இல்லே தப்பாப் புரிஞ்சிக்கிட்டு தானு கொழம்பி மத்தவங்களையு கொழப்பி கஷ்டப்படுத்துறவங்களுக்கு காதல்ங்கறது கடவுள் தந்த சாபமாப் படுது’

‘நைஸ் லைன்ஸ், ஃபோன வைக்கட்டா’

‘வேணா’

‘போய் சாப்டு போ; என்ன மாகி நூடுல்ஸ்ஆ ? ‘

‘ஆமா ‘

‘அதுல ரெண்டு காரட்டு பீன்ஸ் கட் பண்ணி போட்டு சாப்டுப்பா ‘

‘ஓகேப்பா ‘

‘வைக்கட்டா ? ‘

‘வேணா ‘

‘மாமா தொல்லை பண்றாரு, சொன்னேல்ல ?’

‘ரொம்ப படுத்தறாரா ? ‘

‘ஆமா, பேசாம போயி போலீஸ்ல கம்ப்ளெயிண்ட் குடுத்துரட்டா ? ‘

‘நா வேண்ணா ஒருதடவை வந்துட்டு போகட்டா ? ‘

‘வான்னு கூப்பிட மனசுக்கு ஆசையா இருக்கு, திரும்பிப் போகும்போது தான் கஷ்ட ….. ‘

‘என்ன ? ‘

‘…. ‘

‘அழுவுரியா ? ‘

‘நா சொல்றே … அப்புறம் வா … வைக்குறே’

‘பை, ஸ்வீட் ட்ரீம்ஸ்’

‘யூ டூ … பை’

‘பை’.

♡♡♡

இப்படியாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் திலோ ராஜ் ன் காதல் செழித்து வளர்ந்தது. எட்டு மாதங்கள் தங்கள் பிரிவை உணராமலேயே தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் காதல் கவிதைகள் ஒருவரோடொருவர் பகிர்ந்து கொண்டனர். இவ்வாறிருக்கையில் ஒருநாள் …

6. துயர மழை

‘என்ன நண்பா, call urgent ன்னு மெயில் குடுத்துருந்தே ?’

‘ராஜ்’

‘என்ன சொல்லு?’

‘திலோ அம்மா இறந்துட்டாங்கடா ‘

‘டேய் என்னடா சொல்றே ? எப்போ ?’

‘இப்போதா, டூ ஹவர்ஸ் ஆச்சி, ஆஸ்பிடல்ல ப்ராட் டெட் ன்னு சொல்லிட்டாங்க’

‘மை காட், நா கெளம்பி வரே; திலோட்ட சொல்லிடு’

‘ஓகே பை’

போனைத் துண்டித்தான்; ஏர்லைன் அலுவலகத்தை அணுகி அடுத்த சென்னை விமானத்திற்கு புக் செய்தான். அலுவலகத்திற்கு பத்து நாட்கள் விடுப்பு அறிவித்தான். அதற்கப்புறம் என்னசெய்தான் எது செய்தான் என்றெதுவும் ஞாபகத்திலில்லாது சென்னை வந்து, திலோ வீட்டிற்கு ஓடினான்.

அவனைப்பார்த்தவுடனேயே “ராஜ்ஜ்ஜ்” என்று கத்திக்கொண்டே மேலே வந்து விழுந்தவளைத் தாங்கிக் கொண்டான். அழுதழுது முகம் வீங்கிக் கிடந்தவளை ஆறுதல் படுத்தினான்.

‘திலோ எழுந்திரு, என்னதிது ? ‘

‘ராஜ்’

‘ஏதாச்சி சாப்டியா ? ‘

‘நேத்து இரண்டு இட்லி, நா கம்பெல் பண்ணி குடுத்தே, காலைலேர்ந்து வேற ஒன்னு இல்லே’ என்று கல்பனா சொல்ல

‘திலோ என்னப்பா, அம்மா இறந்துட்டாங்க சரி, என்ன பண்ண முடியு சொல்லு’

கல்பனா இரண்டு கப் காபி கொண்டு வர

‘இந்தா இதக் குடி, ப்ளீஸ்’

‘ராஜ் … ராஜ்’

‘கம் ஆன், கெட்டப்’

‘ராஜ் … அம்மா … மாமா தள்ளிவிட்டு … ‘

‘சரி பேசுவோ … இந்தா இதக் குடி மொதல்ல’

‘வேணா …ப்ளீஸ்’

‘எனக்குப் பசிக்குதுப்பா … … கம் ஆன்;

ராஜ் திலோவை வற்புறுத்தி காஃபி குடிக்க வைத்து, அடுத்த வேலைகளைக் கவனிக்கப் போனான்.

தான் மாமியாராகவே நினைத்துப் பழகியவருக்கு எல்லாவித மரியாதைகளையும் அளித்து முன்னின்று இறுதிச் சடங்கு நடத்தினான். இடையில் ஒருமுறை தன் வீட்டிருக்குச் சென்று தன்தாயையும் அழைத்துவந்து திலோவிற்கு ஆறுதல் சொல்லச்செய்தான்.

திலோ – கதறி அழுவதும், ராஜ் அருகிலிருக்கையில் அவன் தோள்மேல் சாய்ந்துக் கொண்டு கண்ணீர் விடுவதும், அவன் தொந்தரவு செய்து ஊட்டினால் மட்டும் இரண்டு கவளம் உணவு உண்பதுமாய் – இரண்டு நாட்கள் கழிந்தது.

‘திடீர்ன்னு என்னாச்சி உங்கம்மாவுக்கு? ‘

‘என்னத்த ராஜ் சொல்வே, போன புதன் கிழமை அந்தக் குடிகாரப் பய வீட்டுக்கு வந்தா, மீண்டும் நச்சரிப்பு, பணம் குடு, பொண்ண குடு, அப்டின்னு; அம்மா எவ்ளோ தூரம் போராடுவாங்க, ‘முடியாது வெளில போடா நாயின்னு’ காத்திட்டு வெளக்கமாறு எடுத்திருக்காங்க; அந்தாளு குடிகாரப் பய – அவ ஆறு அடி, ஒரு தள்ளு தள்ளிருக்கா, அம்மா செவுத்துல முட்டி கீழ விழுந்துட்டாங்க’

‘நீ அப்போ வீட்ல இல்லியா ‘

‘அப்போதாப்பா வந்தே நா; உடனே கத்தி கும்மாளம் போட்டதுல பக்கத்து வீட்டுலேந்து ஆளெல்லா வந்து அவனை அடக்கி வெரட்டுனாங்க ‘

‘அம்…மா ‘

‘தலைல அடி பட்டதுலேயே இறந்திருக்கனு, தூக்கிட்டு ஹாஸ்பிடல் ஓடுனே, பட் …. ‘ திலோ அழத்தொடங்க

‘சாரி, ஐம் வெரி சாரி, மறுபடியு நீ மறந்திருந்ததா ஞாபகப்படுத்திட்டே, ஐம் வெரி சாரி’

‘நீ ஞாபகப்படுத்தலென்னா மறந்திடுமா ராஜ், ஆமா நீ எப்டி ஓடி வந்தே, ஒனக்கு யார் சொன்னா? ‘

‘ரமணி கால் பண்ணுன்னு மெயில் குடுத்தா, போன் பண்ணே, அவன்தா சொன்னா’

‘தேங்க்ஸ் ராஜ், தட் வாஸ் எ டைம்லி ஹெல்ப்’

‘வாஸின்ட் தட் மை டியூட்டி, ஸ்வி.. ? ‘

‘ம் … முடி அந்த வார்த்தைய’

‘ஸ்வீட்டி?’

‘நாயி பண்ணி எருமை’

ஓடிப்போய் ராஜைக் கட்டிக் கொண்டு அழத் தொடங்கினாள் திலோத்தமா. அழுது அடங்கும்வரை அசுவாசப்படுத்திக் காத்திருந்தான்.

‘வா வீட்டுக்குப் போவோ’

‘இப்போவா ? ‘

‘ஆமா அம்மா உன்னை சாப்பிட கூட்டிட்டு வரச்சொன்னாங்க’

‘குளிச்சிட்டு வரவா ? ‘

‘உதவிக்கு வரவா ? ‘

‘நீ கூட இருந்தாலே போதும், வேறென்ன வேணும், ஜஸ்ட் டென் மினிட்ஸ், சரியா ? ‘

‘ஐம் வைட்டிங்’

‘தேங்க்யூ டார்லிங்’

♡♡♡

‘வாம்மா … உட்கார்’

கண்ணில் நீர் கோர்க்க வந்து நின்ற திலோவை அணைத்துக்கொண்டாள்.

‘உக்காரு … ‘

‘….’

‘அடிக்கடி இங்கே வா … தனியா வீட்டுலேயே இருக்காதே, ஒரு சேன்ஞ் ஒனக்கு அவசியம்’

‘வரேம்மா’

‘காஃபி யா இல்லே சாப்டறியா ? ‘

‘ராஜ் ?’

‘அவனுக்கு காஃபி குடித்துட்டா தேவாமிர்தம்; சாப்பாடே வேணா’

‘இல்லேம்மா, சாப்டுருவோ; திலோ தூங்கட்டு சாப்டுட்டு’ – ராஜ் சொல்ல, திலோ சம்மதிக்க, உணவு பரிமாறி மூவரும் சேர்ந்து உண்டார்கள்.

‘ஒன்னு கேக்கட்டா – ரெண்டு பேருகிட்டையு ? ‘

என்ன என்பதுபோல் இருவரும் பார்த்தனர்

‘இவகிட்ட தனியாக் கேட்டா ஏதாச்சு சொல்லி மழுப்பிருவா, அதா, எனக்கு திடீர்ன்னு தோணிச்சி’

‘கேளுங்கமா’ என்று திலோ சொல்ல

‘நீங்க ரெண்டுபேரு எப்போ கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க ? ‘

ராஜ்ம் திலோவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள

‘அவளுக்கு இப்போ வேற யாரு துணைக்கு இல்லே, சீக்கிரம் பண்ணிக்கோ, எதுக்கு ஊருல்ல உள்ளவங்கள பேச வைக்கணு, நாம அதுக்கு வாய்ப்பு கொடுக்கக்கூடாது’

திலோத்தமா அழுதுகொண்டே ஓடிச்சென்று ராஜின் தாயின் காலில் விழுந்து வணங்கினாள்

‘எந்திரிம்மா, எந்திரி, சாப்டு, உட்கார், ராஜ் ஒனக்கு இன்னு எவ்ளோ நாள் லீவு இருக்கு’

‘ஆறு நாள்’

‘சரி, பாப்போ, ஆண்டவன் வழி’

‘சாப்பாடு போது எனக்கு’ என்று திலோத்தமா சொல்ல

‘பாயசம், சாப்டு, சந்தோசமான சமாச்சாரம் பேசிருக்கோ, சாப்டுப்பா’

‘பட், அம்மா, திடீர்ன்னு தோணிச்சின்னு சொன்னே, பாயசம்ல தயாரா வச்சிருக்கே’

‘நா பேசுனா நீங்க ரெண்டு பேரு மறுக்கமாட்டீங்கன்னு ஒரு நம்பிக்கை, அதா பாயசம் செஞ்சி தயாரா வச்சிருந்தா, ராஜ், தன் பசங்களோட மனசுல என்ன இருக்குன்னு ஒரு அம்மாவுக்கு தெரியும், தெரியணும். தன் மனசுல ஓடுறது உள்பட அம்மாவுக்கு எல்லா தெரியும்கறது பசங்களுக்குப் புரியாம இருக்கலா … பட்’

ராஜ்ம் திலோவும் தாயின் காலில் விழுந்து வணங்கினர்.

‘இங்கேயே படுத்துக்கோயே திலோ, காலைல போலாமே?’

இல்லேம்மா வீடு கொஞ்சம் க்ளீன் பண்ணலான்னு இருக்கே’

‘காலைல பண்ணிக்கோயேமா?’

‘அதுவுதவிர இப்போல்லா கல்பனா என்னோட படுத்துக்கறா, இன்னிக்கு வந்துருவா’

‘ஓகே ஆஸ் யு லைக்’

ராஜ் திலோவை அழைத்துக்கொண்டு அவள் வீட்டுக்குக் கிளம்பினான்;

7. இறுதி மழை

‘ ஏய் இன்னிக்கு சினிமா போலாமே?’

‘பாரதியார் அகாடமி ல ஆர்ட் எக்ஜிபிஷன் போட்டுருக்கா, அங்கே போலாமா?’

‘ டிரஸ் மெட்டீரியல்ஸ் சேல் – தீவுத் திடல்ல, போவோமா ? ‘

‘எருமை வாயத்தொறந்து எதாச்சி பேச, மௌன விரதமா இன்னிக்கு ?’

‘இல்லப்பா … ஒரு சந்தேகம்’

‘என்ன சந்தேகம் ?’

‘திருவிளையாடல் ல வருமே … பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே ….’

‘ஒரு மொழம்பூ வாங்கித்தர வக்கில்ல, இதுல சந்தேகம் சிந்தனை மண்ணாங்கட்டி‘

வண்டியை நிறுத்தி இரண்டு முழம் பூ வாங்கி சூட்டிவிட்டு

‘ என் சந்தேகத்தை இப்போ சொல்லவா?’

‘ ஜொள்ளு ‘

”அகநானுறு ல ஒரு பாட்டு ….அச்சு வெல்லம்…’

‘அச்சு வெல்லம் கசக்குதடி … அருந்தேன் கசக்குதடி, அன்பேயுன் அதரச்சுவை அறிந்தப்பின்னே….. அதானே’

‘ யப்பா … எப்புடிப்பா ?’

‘நாயி, போன வாரம் தானே இதே பாட்ட சொல்லி ஒத்தி ஒத்தி எடுத்தே, மறந்திட்டேல்ல?’

‘இன்னு சந்தேகம் எனக்கு தீராலே’

‘இல்லே, நா தெரியாமத்தா கேக்குறே …’

‘கேளு’

‘உன் பின்னே பிறந்து, முன்னே வளர்ந்தது என்னே செழுமையடி… ன்னு ஒரு பாட்டு வருதே … அதுலயெல்லா ஒனக்கு சந்தேகமே வராதா?’ என்றவள் எடுத்துக் கொடுக்க

திலோ தன் வீட்டிற்குள் நுழைந்துக்கொண்டே

‘உங்கம்மாவுக்கு எல்லா தெரிஞ்சிருக்குல்ல’

‘ஆமா எப்டியோ அவங்க சம்மதம்னு சொல்லிட்டாங்க’

‘ஐம் வெரி ஹாப்பி, அண்ட் யூ மிஸ்டர் ? ‘

‘அஃப்கோர்ஸ் டியர்’

‘மெதுவா, இதுதா சான்சுன்னு ஒட்டாதே’

‘சேச்சே நீ என்மேல கை வைக்காம இருந்தா போதாது ?’

‘என் புருஷன், நா கை வைப்பே … கட்டிப் பிடிப்பே … யாரு ஒன்னு சொல்லமுடியாது; என்னோட மாமியாரே ரைட் குடுத்தாச்சி’

‘நீ கை வைக்கும்போது என்னோட கை பூ பறிச்சிக்கிட்டு இருக்கணுமா ? ‘

‘பூ பறி, இல்ல புண்ணாக்கு தின்னு, எனக்கென்ன அதுபத்தி’

‘சரி … இப்போவாச்சு … ஜாலியா ஒரு ரவுண்டு … ‘

‘என்ன ? ‘

‘இல்லே பைக்குல ஒரு ரவுண்டு சுத்துவோ…மா…ன்னு’

‘போடா போடா பயந்தாங்கொள்ளி, எறக்கி விட்டுட்டு ஒடனே வான்னு மாமியார் சொல்லிருக்காங்க கெளம்பு நீ’

‘நீ எங்க வீட்டிலேயே தங்கியிருக்கலாம்‘

‘வீடு கொஞ்சம் க்ளீன் பண்ணலான்னு பாத்தேம்பா, பாரு, அன்னிக்கு அம்மா யூஸ் பண்ண அருவாமனை, பேப்பர் எல்லா அப்டி அப்டியே கெடக்கு‘

‘சரி அந்த குடி … எங்கே ஆளாக்காணு ? ‘

‘அந்த நாய இப்போ ஏன் ஞாபகப்படுத்தறே ?’

‘திடீர்னு அது வந்திருச்சின்னா ? ‘

‘ஏம்பா என்ன இப்டி பயமுறுத்தறே? ‘

‘நா பேசாம இங்கியே தங்கிராட்டா ? ‘

‘ஒன்னோட ஐடியா எனக்குத் தெரியு தம்பி, நீ கெளம்பு’ – என்று பேசிக்கொண்டேயிருக்கையில் கதவு தட்டப்பட்டது.

‘யாரு இப்போ‘

‘இரு நா தொறக்குறே‘

காதவைத்திருக்க – அங்கே சுகுமார் – திலோவின் குடிகார மாமா நின்றிருந்தார்.

‘என்னய்யா ஒனக்கு என்ன வேணு இப்போ ? ‘

‘என்ன டம்பி , என்னோட வீட்டுக்குள்ள இருந்துகிட்டு எனக்கு என்ன வேணும்னு கேக்குறே ? இவ வேணு, திலோ குட்டி வேணு’

‘குடிகார நாயே ஒன்னால எங்கம்மா செத்துட்டாங்கடா, ராஜ் போலீசுக்கு போன் பண்ணு, இவன அரெஸ்ட் பண்ண சொல்லுவோ’ என்று திலோ கத்த

‘டேய் இங்க பாரு, நீ ரொம்ப பிரச்சினை பண்றே; ஒனக்கும் இந்த இடத்துக்கும் திலோவுக்கும் ஒரு சம்பந்தமு கெடையாது, இனிமே இந்தப்பக்கம் வராதே சொல்லிட்டே’

‘இந்தப்பக்கம் வராதேன்னா – அப்போ சோத்துக்கு சுகத்துக்கு எங்கே போவட்டு, ஏதாச்சு ஆர்ஞ் பண்ணித்தா’

பளாரென்று சுகுமாரை அறைந்தான் ராஜ். அடித்த சொரணை கொஞ்சம் கூட இல்லாது போதையின் மயக்கத்தில் தள்ளாடி நின்றிருந்தான் அவன்.

‘ஒமேல நா ரொம்ப கோவத்துல இருக்கே, என்ன மிருகம் ஆக்காதே’ என்று ராஜ் காத்த

‘நா ஏற்கனவே மிருகம் தாண்டா மசுராண்டி, வா மோதிப் பாப்போ வா’

சுகுமார் ஒரே உதை ராஜின் மார்பில். இதை கொஞ்சம்கூட எதிர்பார்க்காத ராஜ் அப்படியே பின்னால் சரிந்தான்.

‘ராஜ்ஜ்ஜ் … ‘என்று அவனைப்பிடிக்க ஓட முனைந்த திலோவின் கூந்தலைப் பற்றி, தரதரவென்று அறைக்குள் இழுத்துச் செல்ல முயன்றான். வலியால் துடித்தாள். அவனிடமிருந்து தன்னை விடுவிக்க பிரயத்தனப்பட்டாள். கதறினாள்.

ராஜ் மிருகமாக மாறினான். தனைச் சுற்றி ஏதாவது கிடைக்குமா என்று தேடினான். சமையலறையின் வெளியே அருவாமனை கிடந்தது. எடுத்தான் அதை. ‘டாஆஆய்’ என்று கத்திக்கொண்டு பாய்ந்து சென்றான். திலோவின் கூந்தலைப் பற்றிக்கொண்டிருந்த சுகுமாரின் கையை ஒரே வெட்டு வெட்டினான். திரும்பிப்பார்த்தவன் தோளில் ஒரு வெட்டு.

‘வா வா, எங்கிட்டே வா’ என்று கூவிக்கொண்டே பின்னால் நகர்ந்தான் ராஜ். அவனை நோக்கி தள்ளாடிக்கொண்டே வந்தான் சுகுமார். அருகில் வந்தவுடன் அவன் இடுப்பில் ஒரு வெட்டு. நகர முடியாது கவுந்தவன் முதுகில் அருவாமனைச் சொருகினான். சுகுமார் பேச்சு மூச்சு இன்றிக் கீழே விழுந்தான்.

‘ராஜ்ஜ்ஜ்’ என்று திலோ ஓடிவந்து கட்டிக்கொண்டாள்.

சிறிது நேரங்கழித்து தம்தமது சுயநினைவுகளுக்குத் திரும்பினர்.

‘ஓ மை ……. ‘

‘என்னாச்சி திலோ?’

‘ஓ ஓ மை …….காட்’

‘என்னாச்சி, வலிக்குதா ? ‘

‘ராஜ்’

‘சொல்லு திலோ’

‘ராஜ் … என்ன ராஜ் … ‘

‘என்னாச்சி திலோ, கழுத்து வலிக்குதா ? பாவிப்பய ராஸ்கல்’

‘ராஜ் ஒருத்தன வெட்டிக் கொன்னுரு … க்கோ ராஜ்’

‘சோ ? உன்கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணால்லே, அதா, தீத்துட்டே’

‘ராஜ் … ராஜ் … டிட் யு அண்டர்ஸ்டாண்ட் ராஜ் ? சுய நினைவுலதா இருக்கியா ? ‘

‘சொல்லு ? என்ன சொல்லவரியோ சொல்லு ? ‘

‘ராஜ் ப்ளீஸ் நா சொல்றதைக்கேளு, இது கொலை போலீஸ் கேஸ்னு போகு, ப்ளீஸ், அவ எங்கம்மாவ கொன்னா, நா பழிக்குப்பழி வாங்கிருக்கே, ப்ளீஸ் ப்ளீஸ் நீ இப்டியே கெளம்பி வீட்டுக்கு போ; கமான் மேன், ப்ளீஸ் கமான்; கோ ரன்’

‘திலோ’

‘நாம அப்புறம் பேசிப்போ, ப்ளீஸ் இப்போ நீ கெளம்பு’

‘ஒன்ன கொலைப்பழி ல மாட்டி விட்டுட்டு … நா எங்கேயோ ஜாலியா …. ‘

‘ராஜ்ஜ்ஜ்’

ராஜ் ரமணிக்கு போன் செய்தான்

‘என்ன நண்பா ? ‘

‘ஒரு பிரச்சனை மாப்ளெ, சீக்கிரம் கெளம்பி திலோ வீட்டுக்கு வாயே’

அடுத்த பாத்தாவது நிமிடத்தில் ரமணி எதிரில்

‘என்ன மாப்ளெ, என்ன … ரத்தமா ? என்னடா என்ன ஆச்சி ? ‘

‘மாப்ளெ, அந்த குடிகார நாயி திலோ மேல கைய வச்சா, போட்டுட்டே, லோக்கல் போலீஸ் ஸ்டேஷன் நம்பர் தெரியுமா? ‘

‘டேய் என்ன பண்ணப்போறே ? ‘

‘என்ன பண்ணனுங்கறே ? ‘

திலோ இடைபுகுந்து – ‘ராஜ், நீ திரும்ப ஜெர்மனி போக முடியாது, ப்ளீஸ், இது என்னால வந்த பிரச்சனை, நா பழிய ஏத்துக்கறே; புரிஞ்சிக்கோப்பா ? ‘

‘நோ ஒன்ன இப்டி இந்த இக்கட்டுல மாட்டி விட்டுட்டு என்னால எங்கேயு போகமுடியாது. அப்டி போனா – நீ எப்பவோ சொல்லுவியா பயந்தாங்கொள்ளி ன்னு – அது உண்மைன்னு ஆயிடு’

‘ராஜ் நா ஒன்ன பயந்தாங்கொள்ளின்னு சொன்னதெல்லா சும்மா விளையாட்டுக்கு ராஜ், ப்ளீஸ் அதெல்லா இங்கே கொண்டுவந்து கொலம்பிக்காதே ராஜ்’

ரமணி தனக்குத் தெரிந்தவர் மூலம் போலீசுக்குத் தகவல் தெரிவிக்க, அடுத்த அரை மணி நேரத்தில் போலீஸ் வந்தது, கொலை நடந்த விவரம் பதிவு செய்யப்பட்டது, கைரேகைகள் சேகரிக்கப்பட்டது,

‘ராஜ்’ என்று மீண்டும் மீண்டும் கதறி அழுதவண்ணம் இருந்தாள் திலோ.

‘ரமணி அம்மாகிட்ட விசயத்த சொல்லிரு, நா போன் பண்றேன்னு சொல்லு; திலோ நீ எங்க வீட்டுக்கு போயிடு; ரமணி திலோவ எங்க வீட்டுல எறக்கி விட்டுடு – ப்ளீஸ்’

‘ராஜ், போலாமா?’ என்று இன்ஸ்பெக்டர் அழைக்க

‘சார் ஒரே ஒரு நிமிடம்’

‘திலோ’

‘…’

‘திலோ … ஒரு கவிதை

கண்டு

கல்வி பயின்று

கற்றுத்தந்து

காதலித்து

கல்யாணம் பற்றிச் சிந்திக்கையில்

கையில் விலங்குடன்

காதலன்

காதலியிடம் மன்னிப்பு கேட்க …… ‘

‘நேரமாச்சி, போலாமா ?’ என்றே போலீஸ் இன்ஸ்பெக்டர் துரிதப்படுத்த

அங்கே ஒரு கவிதை முற்றுப்பெறாமல் …

வெளியில் மழை,

பெரிய மழை

இடிமின்னலுடன் மழை

ராஜ் திலோவின் வாழ்க்கையில் நடந்த பல விடயங்களுக்கு சாட்சியாக இருந்த மழை,

இதே மழை தான்.

 

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *