Tuesday, November 21, 2017

.
Breaking News

இன்பமாய் இருப்பீரென்றேன்!… } சங்கர சுப்பிரமணியன். மெல்பேண் ..

இன்பமாய் இருப்பீரென்றேன்!… } சங்கர சுப்பிரமணியன். மெல்பேண் ..

சாதி சாதியென்று சாகும்வரை விடாது இருந்தாலும்

மதம் மதமென்று மரணிக்கும்வரை
மறக்காதிருந்தாலும்
மொழி மொழியென்று தாய்மொழியை
தவிர்க்காதிருந்தாலும்
நாடு நாடென்று நாட்டின்மீது பற்றாய் இருந்தாலும்
இறப்பிற்கு பின்னால் இன்னொரு
பிறவியுண்டு என நீங்கள் நம்பினாலும்
ஒன்றைமட்டும் என்னால் உறுதிசெய்ய முடியலையே
மாண்டு போனபின்னே மறுபிறவி
உண்டென்றால்
அந்த மறுபிறவியிலும் மனித பிறவி கிடைத்திடுமா?
விரும்பியபடி மனித பிறவி கிடைத்தாலும்
நாம் பிறந்த அதே நாட்டினிலே பிறப்போமா?
நாம் விரும்பும் நாட்டினிலே
பிறக்கும் வாய்ப்பைப் பெற்றாலும்
தாய்மொழியாய் நம்மொழியும்
தானாக அமைந்திடுமா?
மானிடராய் பிறந்தபின்னே
மதமின்றி வாழ்தல் முறையோ
ஆதலினால் நம்மதத்தில் பிறக்கவும் வாய்ப்புள்ளதா?
உயிருக்குயிரான மதத்தினிலே பிறக்கும் வாய்ப்பு கிடைத்தாலும்
மதத்தினிலே பலபிரிவு இருப்பதனால்
நாம் சேர்ந்த மதப்பிரிவில் தடங்கலின்றி பிறப்போமா?
தடங்கலின்றி நாம் சேர்ந்த மதப்பிரிவிலே பிறந்தாலும்
தம் வாழ்நாளில் மாறிடாது காத்துநின்ற சாதியில் பிறக்கும் வாய்ப்பும் அமைந்திடுமா?
விருப்பம்போல் சாதியிலே பிறந்தாலும்
சாதியின் உட்பிரிவுதனில் நம் பிறப்பும் வாய்த்திடுமா?
இதுவெல்லாம் நிச்சயமாய் நடந்திடுமா என்று நான்கேட்க
இதையெல்லாம் விட்டுத் துறந்து
வீடுபேறு கிடைக்குமென்றார்
ஊருக்கு உபதேசம் சொல்லும் அந்த யோக்கிய சிகாகணியும்
அப்போது நான் சொன்னேன் ஐயா யோக்கிய சிகாமணியே
எப்போதோ கிடைக்கும் வீடுபேற்றுக்காய்
எல்லாம் துறக்க எண்ணும் யோக்கியரே
அவை யாவற்றையும் இப்போதே துறந்து நின்றால்
இங்கேயே கண்டிடலாம் வீடுபேற்றுக்கும் மேலான பெறும்பேறு என்று சொன்னேன்
ஏனோ மௌனியானார் எதுவுமே பேசாதிருந்தார்
இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்க
எண்ணுகின்றோம் என்பதையறிந்தாரா
கண்கெட்டபின் சூரியவணக்கம் எதற்கென உண்மை உணர்ந்தாரா?
ஆதலினால் அவரிடத்தே நான் சொன்னேன்
இவையெல்லாம் நன்றே நீவிர் உணர்ந்தால்
நம்முன்னோர் மூதறிவால் உணர்ந்து சொன்னதுபோல்
யாதும் ஊரே யாவரும் கேளிரென்று மட்டும்
எண்ணி இங்கு வாழ்வீரென்றேன்
இன்பமாய் இருப்பீரென்றேன்!

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *