Saturday, February 24, 2018

.
Breaking News

பிக்பொஸ் (BIG BOSS) …. } ஏலையா க.முருகதாசன்…. ஜேர்மனி.

பிக்பொஸ் (BIG BOSS) …. } ஏலையா க.முருகதாசன்…. ஜேர்மனி.

விஜய் தொலைக்காட்சி தமிழகத் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்திய நிகழ்ச்சிதான் பிக்பொஸ்.வெளிநாடுகளில் இந்நிகழ்ச்சி ஏற்கனவே வேறு வேறு பெயர்களில் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

பிக்பொஸ் நிகழ்ச்சியை நடிகர் சல்மான்கானைக் கொண்டு இந்தியில் நடத்தி முடித்துவிட்டார்கள்.ஜேர்மனியில் பிக் பிறதர் என்ற பெயரில் பலமுறை நடந்து முடிந்திருக்கின்றது.

நடிகர் கமலகாசனைக் கொண்டு விஜய் தொலைக்காட்சி இதனை நடத்தி வருகின்றது. வெளியுலகத் தொடர்பு எதுவுமே இல்லாது, வெளி மனிதர்களையே சந்திக்க வைக்காது, பத்திரிகைகளையோ, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையோ பார்க்க தடைபோட்ட சூழ்நிலையில் இந்நிகழ்ச்சியில் பங்கு கொண்டவர்கள் தாமாகவே விரும்பி இந்நிகழ்சிக்குள் உட்படுத்தியதாக சொல்லப்படுகின்றது.

நடிகர் கமலகாசனை ஒரு நடிகர் என்பதற்கப்பால் அவர் தன்னை ஒரு அறிவுஜீவி எனத் தொடர்ந்தும் அவரின் நடவடிக்கைகள் மூலம் இனங்காட்டி வரும் வேளையில் இந்நிகழ்ச்சியை நடத்துபராக இதில் ஈடுபட்டதை பலரும் விரும்பவில்லை.

தொலைக்காட்சி நிறுவனங்கள் வணிக நிறுவனங்கள்தான். கலையை பெரும்பகுதியாகவும் பல்வேறுபட்ட சமூக நிகழ்வுகளை கலைநயத்துடன் சொல்வதும் அதன் மூலம் வருவாயை ஈட்டுவதுமே இந்நிறுவனங்களின் தொழில்.கமலகாசன் நடத்துனராகப் பொறுப்பு ஏற்றுக் கொண்டதனால் அவர் வித்தியாசமான முறையில் அறிவு ரீதியாக இதனை நகர்த்திச் செல்வார் என்ற எதிர்பார்ப்பு இருக்கவே செய்கின்றது.

குடும்ப உறவுகளோடு வாழ்ந்த மனிதர்களை அதிலிருந்து விடுபடச் செய்து ஒரே வீட்டுக்குள் வேறு வேறு குடும்பங்களலிருந்து வந்தவர்களுடன் ஒன்றாக நூறு நாட்கள் இருக்கச் செய்து அவர்களின் சகிப்புத்தன்மையை அளவீடு செய்வதுதான் இந்நிகழ்ச்சியின் தாற்பரியம்.

இவர்கள் யாருமே இலவசமாக இதில் பங்கு கொள்ளவில்லை. ஒரு அங்கம்(எபிசோட்) என்ற அளவில் ஒவ்வொருவருக்கும் பணம் வேறு வேறு அளவீடுகளில் கொடுக்கப்படுகின்றது.நூறு நாட்கள் வரை இருந்து வெற்றியடைந்து வெளியேறும் ஒருவருக்கு பெருந்தொகையான பணப்பரிசு கிடைக்கவிருக்கின்றது.

அந்த வெற்றியாளர் தான்தான் என்பதை நிரூபிக்க இக்குடியிருப்பாளரில் பலர் போட்டி போடுகிறார்கள், சதி செய்கிறார்கள் தமது சுயரூபத்தையும் காட்டி வருகிறார்கள்.

எட்டாத உயரத்தில் இருக்கும் நட்சத்திரங்களாக தம்மை இரசிகர் எண்ண வேண்டும் என்ற நினைப்பில் வாழும், திரைப்படத்துறையல்லாத யூலியைத் தவிர்ந்த அனைவருமே தாங்களும் படுமோசமான மனிதர்கள்தான் தாங்கள் என்பதை நிரூபித்துவிட்டார்கள்.

கமலகாசன் இதில் வெற்றியடைந்துவிட்டார். நடிகர்களை உயரத்தில் தூக்கி வைத்துக் கொண்டாடி கனவுலகில் வாழும் முட்டாள்தனமான இரசிகர்களை நோக்கி, ‘இரசிகர்களே நடிகர்கள் யாருமே மனித உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட உயிரினம் அல்ல, அவர்களும் உங்களைப் போன்றவர்கள்தான், தான் என்ற அகங்காரம் கொண்டவர்கள்தான், தாங்கள் திரைப்பட நடிகர்கள் என்ற காரணத்தால் ஏற்பட்ட திமிர்காரணமாக அவர்களை அவர்களே தனித்துவமானவர்களாக நினைக்கலாம், அப்படி ஒன்றும் இல்லை, நீங்கள்தான் உயர்ந்தவர்கள் என்பது மட்டுமல்ல, நடிகர்கள் நடிப்புத் தொழிலைச் செய்கிறார்கள்.நகரசுத்தித் தொழிலாளி துப்பரவு வேலையைச் செய்கிறான் அவ்வளவுதான் வித்தியாசம் என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கின்றார்.நகரசுத்தித் தொழிலாளர்களும் நடிகர்களுமே சமமே என்பதை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல அவர் சொல்லியிருக்கிறார்.

இவர்களுக்குள் ஜல்லிக்கட்டுப் போராளிக்கே வெளியில் பெரும் ஆதரவு இருக்கின்றது. இங்கே குடியிருப்பவர்களுள்; புனிதமான தொழிலைச் செய்தவர் யூலி மட்டுமே.மனித குலத்திற்கு அத்தியாவசியமான அறம் சார்ந்த தொழில்களாக இருப்பவை விவசாயம்,ஆசிரியம்,மருத்துவம். இம்மூன்றில் நோய் தீர்க்கும் மருத்துவப் பணியின் தாதியாக இருக்கும் யூலிக்கு மருத்துவத் தாதி, ஜல்லிக்கட்டுப் போராளி இரண்டு நிலையிலும் மக்கள் மத்தியில் இவருக்கு ஆதரவு உண்டு.

அதனை அறிந்து கொண்டவர்களில் ஒருவரான காயத்திரி ராகுராம் அவரைச் சீண்டிக் கொண்டே இருக்கிறார். இக்குடியிருப்பாளர்களில் மோசமான காழ்ப்புணர்வு கொண்டவர் காயத்திரிதான்.இவர் ஆரம்ப நாட்களில் யூலியிடம் ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றி கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்.இவர் பாரதிய ஜனதாக் கட்சியின் ஆதரவாளர் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

யூலியை சீண்டிக் கொண்டிருப்பவர்களில் இன்னொருவர் ஆர்த்தி. யூலி தன்னை தற்காத்துக் கொள்ள வேண்டும். அளவோடு பேசுதல் தனது இறுக்கமான போக்கினை தளராது வைத்திருத்தல். வளைந்து நெகிழ்ந்து போதல் என்பதைத் தவிர்க்க வேண்டும்.

பரணி மீது ஏன் இந்த குடியானவர்கள் கோபப்படுகிறார்கள் என்பது புரியவில்லை.உடற்பயிற்நசி மிக முக்கியமானது. பரணி உடற்பயிற்சிக்காக அடிக்கடி நடப்பது மற்றவர்களுக்கு எவ்வாறு தொந்தரவாக அமைகிறது என்பது தெரியவில்லை.

நடத்துனர் கமலகாசன் நீங்கள் நீங்களாகவே இருங்கள் என்கிறார்.பரணி அவராகவே இருக்கிறார்.

கஞ்சாக்கருப்பு எந்த வேலையையும் ஒழுங்காகச் செய்வது இல்லை.ஒவ்வொருவரைப் பற்றியும் கிண்டலும் கேலியும் செய்வதே அவரது வேலை.நடிகர்களிடம் மரியாதையாகப் பேச வேண்டும் என்று யூலிக்கு புத்திமதி சொல்வதன் மூலம் கஞ்சாக்கருப்பின் அறியாமையை அறிய முடிகின்றது.
பங்குபற்றுபவர்களை மாணவர்களாக்கி தமிழத்தாய் வாழத்தினையும் நாபுரட்டுச் சொற்களையும் கற்றுக் கொடுக்க வைப்பதன் மூலம் கமலகாசன் இந்நிகழ்ச்சியை தரமானதாக்க முயற்சிக்கிறார் என்பது தெரிகிறது.

 

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *