Friday, February 23, 2018

.
Breaking News

ஆட்சியாளர்களைக் கிலிகொள்ள வைக்கும் சமூக ஊடகங்கள்!

ஆட்சியாளர்களைக் கிலிகொள்ள வைக்கும் சமூக ஊடகங்கள்!
நாட்டில் தேசிய ஒருமைப்பாட்டினை உருவாக்குவதற்கு முகநூலும் சமூக ஊடகங்களும் பெருந்தடையாக உள்ளதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா அண்மையில் தெரிவித்துள்ளார். தீவிரவாதக்குழுக்கள் இந்த மாதிரியான ஊடகங்களைப் பயன்படுத்தி நாட்டில் குழப்பத்தை உருவாக்க முயற்சிப்பதாகவும் எல்லோரும் இந்த நிலையை விளங்கிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியிருக்கிறார். இலங்கை ஜனாதிபதி மாத்திரமல்ல, உலகிலுள்ள பல நாடுகளிலுள்ள ஆட்சியாளர்களுக்கும் இதே கருத்து உள்ளன. ஆனால் இந்த மாதிரியான ஆட்சியாளர்கள் நாட்டில் தேசிய ஒருமைப்பாட்டினை வளர்ப்பதற்கு சமூக வலைத்தளங்களை எப்படிப் பயன்படுத்து என்பதைப்பற்றி ஆழமாகச் சிந்திக்காமல், சமூக வலைத்தளங்களுக்கு எதிராக இப்படி போர்க்கொடி தூக்குவது ஜனநாயக விரோதச் செயற்பாடே.
இணையமென்பது தவறான கணிப்புடன் பார்க்கப் படவேண்டிய ஒன்றல்ல. இது உலகத்தை விரல் நுனிக்குக் கொண்டு வரும் ஒரு சிறப்புமிக்க தொழில்நுட்பச் சாதனை. இணையப் புரட்சியில் Social Media (சமூக ஊடகம்) எனும் Social Netwoks  (சமூக வலைத்தளங்கள்) இன் பங்கு அளப்பரியது. கணனியைக் கையாளத் தெரிந்த அனைவர் மத்தியிலும், சமூக வலைத்தளம் என்பது இன்று பரந்துபட்ட, பரவலாகிவிட்ட ஒரு ஜனநாயக தகவல் சாதனம். அத்தோடு இது ஒரு புதிய ஊடக மேடை. பாரம்பரியமான வெகுஜன ஊடகம் போலல்லாமல், சமூக வலைத்தளம் ஒவ்வொரு தனிநபருக்கும் அல்லது சிறிய சிறியக் குழுக்களுக்கும் அவரவர் கருத்துகளை தணிக்கையின்றி ஒரு பெரிய மக்கள் திரளிடம் கொண்டு செல்ல வாய்ப்பளிக்கின்றது. ஆனால் அவ்வாறு செய்வதற்கு மிகப்பெரிய முதலீடு தேவையில்லை, உரிமம் பெற வேண்டியதில்லை, அதற்கான கட்டமைப்புகளையும் உருவாக்க வேண்டியதில்லை.
சமூக வலைத்தளத்தளங்களில் வெளியாகும் கருத்துக்களை வைத்தே மக்களின் கைநாடி பிடித்துப் பார்க்கப்படுகின்றது. மிகப் பெரிய ஊடகங்களே தற்பொழுது சமூக ஊடகங்களின் போக்கின் அடிப்படையிலேயே தங்களின் செய்திகளை தயாரிக்க வேண்டிய நிலையில் உள்ளன. இன்று சமூக வலைத்தளத்தளங்களில் மிகவும் பிரபல்யமானதும் பெருந்தொகையினரால் பயன்படுத்தப்படுவதும் முகநூல்ஆகும். 2004 ஆண்டு பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டமுகநூல் 2017 ஆண்டின் முதற்கால் பகுதியில் உலகில் 1.94 பில்லியன் பாவனையாளர்களைக் கொண்டுள்ளது.
ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போலவே சமூக வலைத்தளங்கள் நன்மை, தீமையென இரு பக்கங்களைக் கொண்டன. சமூக வலைத்தளங்களின் போக்குகள் மிகப் பெரிய அளவில் வலதுசாரிக் கருத்துகளிலேயே நிரம்பியுள்ளன என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. இந்தியாவைத் தற்போது ஆட்சி செய்யும் பாரதிய ஜனநாயகக்கட்சியின் தேர்தல் வெற்றிக்கு சமூக வலைத்தளம் பெரிதும் உதவி  புரிந்ததாகக் கூறப்படுகின்றது. மத அடிப்படைவாதக் கருத்துகளும் தீவிர தேசியவாதக் கருத்துகளும் சமூக வலைத்தளங்களின் ஊடாகப் பரப்பப்பட்டு  வருகின்றன. அதேவேளை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, உலகமயமாதல் எதிர்ப்பு, யுத்த எதிர்ப்பு மற்றும் இடதுசாரிக் கருத்துக்கொண்ட குழுக்களும்  சமூக வலைத்தளங்களை திறம்படப் பயன்படுத்தி வருகின்றன.
கால் நூற்றாண்டுக்கு மேல் நீடித்த இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில், இலங்கை அரசினதும் தமிழீழ விடுதலைப்புலிகளினதும் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்துவதில் சமூக வலைத்தளங்கள் பெரும் பங்காற்றின என்பதை எவராலும் மறுக்க முடியாது. குறிப்பாக புலிகளின் அராஜகம் இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் கோரத்தாண்டவமாடிய பொழுது அதனை எதிர்த்துக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தது சமூக வலைத்தளங்களே. அதேபோல இலங்கை அரசும் புலிகளும் தத்தமது பிரச்சார நோக்கங்களுக்கும் சமூக வலைத்தளங்களை தாரளமாகப் பயன்படுத்தினர். 2009 ஆண்டு முள்ளிவாய்க்கால் இறுதியுத்தம் தொடர்பான செய்திகளை சமூக வலைத்தளங்களின் வாயிலாகவே முழுமையாக அறியக்கூடியதாக இருந்தது. யுத்தம் முடிந்த பின்னரும் யுத்தத்தில் நிகழ்ந்த அவலங்களை அணையாதிருக்கும் வகையில் இன்று வரைக்கும் சொல்லிக் கொண்டிருப்பதும் சமூக ஊடகங்களே.
அண்மையில் வடக்கு மாகாணசபையில் முதலமைச்சருக்கும் தமிழரசுக்கட்சியினருக்கும் இடையில் நடந்த மோதல்களை சமூக வலைத்தளங்கள் உடனுக்குடன் வெளியிட்டன. இரு தரப்பினரும் ஊடகவியலாளர்களை சந்தித்த பொழுது, சமூக வலைத்தளங்களில் வெளியான கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டே ஊடகவியலாளர்கள் பல கேள்விகளைத் தொடுத்தனர். இதனால் இரு பகுதியினருமே அசௌகரியத்திற்குள்ளானதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இலங்கையின் இன்றைய நல்லாட்சியில் நம்பிக்கையிழந்துள்ள அனைத்துத்தரப்பட்ட மக்களின் போராட்டங்களையும் சமூக ஊடகங்களே பதிவு செய்து வருகின்றன. ஓன்றுபட்ட எதிர்க்கட்சியினரின் காலிமுகத்திடல் மேதின ஊர்வலத்தினை ஏராளமான சமூக வலைத்தளங்கள் நேரடி ஒளிபரப்பு செய்தன. ஒட்டு மொத்த இலங்கை மக்களின் சுபீட்சமான எதிர்காலத்திற்கு முற்போக்கான சமூக ஊடகங்கள் பெரிய பங்கினை வகிக்கலாம் என்பதை நம்பலாம்.
வானவில் இதழ் 78

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *