Friday, February 23, 2018

.
Breaking News

சந்தேகம்!… ( நாவல் ) — } அனுராதா பாக்கியராஜா. களுவாஞ்சிகுடி…

சந்தேகம்!… ( நாவல் ) — } அனுராதா பாக்கியராஜா. களுவாஞ்சிகுடி…

அன்று காலைத் தபாலில் வந்திருந்த அந்தப் ‘போஸ்ட் கார்’டைப் படித்ததும் எனக்குச் சிரிப்புத்தான் வந்தது.

என் சிரிப்பைப் பார்த்ததும் என் மனைவி சுகந்தா என்ன நினைத்துக் கொண்டாளோ தெரியவில்லை. தான் கொண்டு வந்த டீக்கோப்பையை என்னிடம் தந்துவிட்டு “போயாவும் (பௌர்ணமி) முடிஞ்சு நாலைஞ்சு நாட்களாய்ப் போய்விட்டது. தபால்ல வந்த போஸ்ட்கார்ட்டையே பார்க்கிறதும் படிக்கிறதும் சிரிக்கிறதுமாய் இருக்கிறியள். என்னப்பா ஏதும் வித்தியாசமோ” கேலியாகக் கேட்டாள்.

“என்ன கிண்டலா? முதல்ல இதைக் கொஞ்சம் படிச்சுப் பாரப்பா. அப்பத்தான் நான் ஏன் சிரிக்கிறன் என்று உனக்குப் புரியும்” என்றேன் நான்.

என் கையில் இருந்த போஸ்ட் கார்ட் இப்போது அவள் கைக்கு மாறியது.

நிமிஷத்தில் அதை வாசித்து முடித்தவள் போஸ்ட்கார்ட்டை என் மடியில் போட்டுவிட்டு ஒரு முறைப்பு முறைத்தாள்.

அவள் முறைப்பின் அர்த்தம் எனக்குப் புரியவில்லை. எனவே என்ன சுகந்து உனக்குச் சிரிப்பு வரல்லையோ என்று கேட்டேன். ஆமா ரொம்ப நகைச்சுவை கொட்டிக் கிடக்குதாக்கும். இதில சிரிக்கிறதுக்குப் பெரிசா என்னங்க இருக்குது? பாவம் செத்துப்போன ஒரு மனுஷனுக்கு இதைவிட வேறு எப்படித்தான் கௌரவமளிப்பதாம்? வெகு சாதாரணமாகச் சொல்லிவிட்டு அவள் உள்ளே போய்விட்டாள்.

எனக்கு அவள் வார்த்தையில் உடன்பாடே கிடையாது. ஏனெனில் கண்டுமணிக் கிழவரைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும்.

தபாலட்டையைத் திரும்பப் படிக்கிறேன். எங்கள் ஆருயிர்த் தந்தையாரே….. எனதருமை ஆசைக் கணவரே உங்கள் பிரிவைத் தாங்கமுடியாது நாங்கள் அனலில் இட்ட புழுக்களைப்போல் அழுது துடிக்கிறோம். இனி எப்போது உங்கள் பூமுகங் காண்போமோ அன்பரே, அருமைத் தந்தையே ஆண்டவன் பாதத்தில் உங்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறோம்.

அருமை மனைவியும்

அன்பு மக்கள் அமுதன், குமுதன், கமலன்

என எழுதப்பட்டு,

அன்புடையீர்!

எங்கள் குடும்ப விளக்கின் முதலாம் வருட ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் மதியபோசனமும் எதிர்வரும் 3. 10. 2016ஆம் ஆண்டு நடைபெற இருப்பதால் தங்களையும் பங்குபற்றுமாறு அழைக்கிறோம்.

மனைவி, மக்கள்

எண்ணிப் பார்த்தால் ஒருவகையில் மனிதர்கள் விசித்திரப் பிறவிகள் என்றுதான் சொல்லவேண்டும். ஒரு மனிதன் உயிரோடு இருக்கும்போது அவனை உதாசீனப்படுத்துவதும் இறந்துபோனபின் அவனைப் புகழ்ந்து பாடுவதுமாக எத்தனை அழகாக நடித்து வாழ்கிறார்கள்.

நான்கு வருஷங்களுக்கு முன்னால் ஓர் நாள் முதன்முதலாக அந்தக் கிராமத்திற்கு வந்திருந்தேன் நான். அழகும் அமைதியும் நிறைந்த சிறு கிராமம். இங்கேதான் இனிவரும் நான்கு வருடங்களுக்கும் நான் பணிபுரியவேண்டும். இவ்வூர் விவசாயக் கந்தோரில் போதனாசிரியராக வேலை மாற்றலாகி வந்திருக்கிறேன்.

புதிய ஊர், அறிமுகமில்லாத மக்கள், எப்படியிருப்பார்களோ? மனதில் ஒருவித தயக்கத்தோடுதான் பஸ்ஸை விட்டு இறங்கினேன்.

மெயின் வீதியில் இருந்து ஒரு ஒற்றையடிப் பாதையூடாகச் சிலர் போய்க்கொண்டிருந்தனர். அதுதான் ஊருக்குள் போகும் வழி போலும்.

குளுகுளு என்று காற்று முகத்தில் விசிறியடித்தது. தென்னந் தோப்புக்கள் நிறைந்த ஊர். மணல் வீதியில் கால் புதைய நடக்கும் சுகம். சின்னச் சின்ன வீடுகள். வீட்டு முற்றங்களெல்லாம் படு சுத்தமாகக் காட்சியளித்தன.

ஒவ்வொரு வீட்டின் முன்னும் பவளமல்லிகை, குண்டு மல்லிகை, பத்திரி, பொன்னாவரை, துளசி என்று விதவிதமான மலர்கள் பூத்துக் குலுங்கின.

நான் போகவேண்டிய இடம் எதுவாயிருக்கும்? தெரியவில்லை. பெயர்ப் பலகைகூட இல்லையே… என்ன செய்யலாம்? யாரிடம் கேட்கலாம்….? என்

முன்னால் வயோதிபர் ஒருவர் போய்க்கொண்டிருந்தார். அவரிடம்தான் கேட்கவேண்டும். முடிவெடுத்தபடியே அவரை நோக்கி முன்னேறினேன்.

“ஐயா, கொஞ்சம் நில்லுங்களேன். என்குரல் கேட்கவில்லையோ?” மனிதர் பேசாமல் நடந்துகொண்டே சென்றார். “ஐயா! உங்களைத்தான் அழைக்கிறேன். கொஞ்சம் நில்லுங்களேன்.” ஊஹ{ம் மனுஷன் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.

எதிரே ஒரு சிறுவன் வந்துகொண்டிருந்தான். “தம்பி அவரைக் கொஞ்சம் நிற்கச் சொல்லடா” என்றேன்.

“ஏய் குஞ்சண்ணே உங்களைக் கூப்பிடுறாங்க”. அவர் கையைத் தட்டி விஷயத்தைச் சொன்னான் அவன்.

“ஆ…. குளிக்கப் போறியோ…. அதுக்கேனடா என்னைக் கூப்பிடுறாய்”. மனுஷன் பற்களால் நாக்கைக் கடித்தபடி பையனை விரட்டத் தயாரானார்.

பையன் சிரித்தான். சரியான செவிடையா இது என்றவன் “அந்தய்யா கூப்பிடுறாரெணை…. என்னெண்டு கேளு” என்று சொல்லிவிட்டு கிழவனின் கையில் பிடிபடாமல் ஒரே ஓட்டமாய் ஓடித்தப்பினான்.

நான் நெருங்கிவிட்டேன். ஒரு இராணுவக்காரனைப்போல் உயரமான கம்பீரத் தோற்றமும் மொட்டைத் தலையுமாக எழுபது வயதைத் தாண்டிய இளைஞனாக நிமிர்ந்து நின்றார் மனுஷன்.

“வணக்கம் ஐயா!” நான் தான் முதலில் பேச்சை ஆரம்பித்தேன்.

“தம்பி நீ ஆரெணையப்பு? ஊருக்குப் புதுசோ?” என்னை மேலுங்கீழுமாக உற்றுப் பார்த்தபடியே கேட்டார் அவர்.

“ஓம் ஐயா, ஊருக்குப் புதுசுதான். இந்த விலாசத்தில் உள்ள இடத்தையொருக்காக் காட்டிவிடுவியளோ?” கையில் இருந்த துண்டைக் கொடுத்தேன்.

துண்டை வாங்கி முன்னும் பின்னும் பார்த்த மனுஷன் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, “எனக்குத் தெரியாதடா தம்பி…” என்று சொல்லிபடியே மறுபடியும் நடக்கத் தொடங்கினார்.

நான் விடவில்லை. “அப்பு துண்டைத் தந்திட்டுப் போங்கோ.” இந்த ஊர்க்காரருக்கு எந்த இடம் என்று தெரியாவிட்டால் நான் இனி எங்க போய்த் தேடுவன்… என்று சலித்துக் கொண்டேன்.

“இந்தா இந்தா உன்ர துண்டு. அதுசரி …… உதையொருக்கா வாசி ஞாபகத்துக்கு வருகுதா எண்டு பார்ப்பம்….”

எனக்குப் புரிந்துவிட்டது. கிழவருக்கு காதும் கேட்காது, வாசிக்கவும் தெரியாது. அதுவும் இங்கிலிசில எழுதியிருக்கிறதை வாசிக்கத் தெரியாது. இதுதான் பிரச்சனை போலும். “ஓ! இதை அப்பவே சொல்லியிருக்கலாமே ஐயா! விவசாயக் கந்தோர், தாமரைக்குளம் வீதி, பாலாறு.”

“எடடட. என்ரை வீட்டுப் பக்கம்தான். விவசாயக் கந்தோரடி என்று நீ கேட்டிருந்தால் நான் சொல்லியிருப்பனல்லே. சரிசரி நானும் அங்கதான் போறன் என் பின்னாடியே வாரும் காட்டிவிடுறன்.”

கிழவர் குதூகலப்பட்டுப் போனார். நான் அவர் பின்னாலேயே சென்றேன்.

“அதுசரி தம்பி அங்கை ஆரைத் தேடிப் போறாயப்பு.”

“ஆரையும் தேடிப் போகையில்லையப்பு.”

“அப்ப…?” கிழவர் வியப்புடன் என்னை நோக்கினார்.

“இனிமேல் இந்த ஊர் விவசாயக் கந்தோருக்கு நான்தான் விவசாய உத்தியோகத்தராக வந்திருக்கிறன்.”

கிழவருக்கு ஆச்சரியமாக இருந்திருக்கவேணும்… “அது பெரிய வேலையெல்லே தம்பி…. என்ன சொல்லுறவை ஏஐஓஓஐயோ… கொஞ்சம் வயசு போனவைதானே பார்ப்பினம்.”

எனக்குச் சிரிப்புத் தட்டுக்கெட்டுக் கொண்டு வந்தது. அடக்கிக்கொண்டேன். “அது ஓஐ இல்லை ஐயா ஏஐ என்றுதான் சொல்லுவாங்க. அதாவது ‘அக்ரிக்கல்ச்சர் இன்ஸ்றக்றர்’ விவசாயப் போதனாசிரியர் என்று தமிழில சொல்லுவாங்கள். அதுக்குரிய படிப்புப் படிச்சா சின்னவங்களும் வேலை பார்க்கலாம்” என்றேன்.

“ஆருக்குத் தெரியும் மோனே. இஞ்ச வேலை பார்த்தவையனெல்லாம் நானறிய வயசுபோன கிழடுகள்தான். அதுதானணை கேட்டனான். இஞ்சபார்

இதுதான் தாமரைக்குளம் வீதி என்பாங்கள். அந்த மதில்போட்ட வீடுதான் நீ கேட்ட இடம். சரியே இனி உன்ரபாடு நான் வரட்டே…”

இடத்தைக் காட்டிவிட்டு மனுஷன் வேகமாக நடக்கத் தொடங்கினார்.

நன்றி ஐயா! பிறகு சந்திப்பம் என்ன என்று அவரிடம் இருந்து விடை பெற்றுக்கொண்ட நான் உள்ளே சென்றேன்.

ஏற்கனவே நான் அறிவித்தபடி என் வரவுக்காக ‘வாச்சர்’ பெடியன் வாசலில் காத்துக்கொண்டு நின்றான்.

ஐயா சரியான நாளை அறிவிச்சிருந்தால் நான் பஸ்ஸடிக்கே வந்திருப்பனல்லே என்றான் அவன்.

திடீரென்று வெளிக்கிட்ட நான் வரது பரவாயில்ல வந்து சேர்ந்திட்டன்தானே? கொஞ்சம் குளிச்சு ‘றெஸ்ற்’ எடுத்துப்போட்டுக் கதைப்பம் என்ன?

ஓம் ஐயா, கிணற்றில் குளிக்கப் போறீங்களோ, பாத்துறூமில குளிக்கப் போறீங்களோ…

கிணற்றில் குளிப்பேன்… நீ கொஞ்சம் டீ ஊற்றுவரது என்றேன்.

அதெல்லாம் தயாராய் இருக்குதையா. வாங்க கிணற்றைக் காட்டுகிறேன் என்றான் அவன்.

சும்மா சொல்லக்கூடாது. வீடு வாசல் வெளிமுற்றமெல்லாம் வரதன் படு சுத்தமாய்க் கூட்டிப் பெருக்கி வைத்திருந்தான். கந்தோரோடு சேர்ந்த குவார்ட்டஸ். புதிய கட்டடம். அதுவும் சுத்தமாய் அழகாய்த்தானிருந்தது. தனியான விசாலமான காணி. அடர்ந்த நிழல் மரங்களும் தென்னை மரங்களும் செழிப்பாக வளர்ந்திருந்தன. குவாட்டசின் பின்புறம் குளக்கட்டும் உயரமான வயல் வரப்புகளும் பரந்து கிடந்தது. பச்சைப்பசேல் என்று வளர்ந்திருந்த நெல்வயல்களுக்கப்பாலே தாமரைக்குளம் ரம்மியமாகக் காட்சியளித்தது.

மாலையில் சூரியன் மறையும் காட்சியை இங்கிருந்து பார்க்கவேணும் ஐயா நெருப்புக்குண்டு போல் சோக்காயிருக்கும் என்றான் வரதராசன்.

எனக்குச் சிரிப்பு வந்தது ‘சூரியன் சோக்காய்’ இருப்பானாம். வரதராசனின் ரசனையும் பேச்சுவழக்கும் என்னை ரசிக்கத் தூண்டியது.

தளதள என்று தயிர்போல் கிடந்த தண்ணீரை அள்ளி அள்ளி ஆசைதீரக் குளித்தேன். துலாக் கிணற்றுக்கு குளியல் சுகமாக இருந்தது.

ஐயா சாப்பாடு, டீ எல்லாம் ரெடி என்றான் வரதராசன். பசிக்களைப்பில் சாப்பிட்டு முடித்துவிட்டு முற்றத்து வேப்ப மரத்தடியில் கதிரையைப் போட்டுக்கொண்டு கொஞ்சநேரம் ஓய்ந்திருந்தேன்.

பயணக்களைப்பு, உண்ட மயக்கம், வேப்பங்காற்று எல்லாமாகச் சேர்ந்து என்னை மயக்கியடித்துக் கொண்டிருந்தது. பாதிக் கண்களை மூடிக்கொண்டிருப்பேன் அப்போதுதான் வெளிக்கேற்றைத் திறந்து கொண்டு யாரோ உள்ளே வருவது போல் இருந்தது. மெதுவாக எட்டிப்பார்க்கிறேன்.

என்ன மோனே எப்படி இடம் பிடிச்சிருக்குதோ? என்று கேட்டபடியே என் முன்னால் இருந்த சீமென்டுத்திண்டில் வந்து அமர்ந்து கொண்டார் அந்த மனிதர்.

காலையில் எனக்கு வழி காட்டிக் கொண்டு வந்தபோது கட்டைக் காற்சட்டையோடு வந்த மனிதன் இப்போது வேஷ்டி கட்டி ஷேர்ட்டுப் போட்டு நெற்றியில் விபூதிப் பட்டை சாத்தி குங்குமம், சந்தனம், பொட்டு வைத்து ஆகா என்ன அழகாயிருக்கிறார். நான் வியந்து போனேன்.

என்ன தம்பி பேச்சையே காணோம். நான்தான் கண்டுமணி வந்திருக்கிறன். அவர் சுய அறிமுகம் செய்யத்தொடங்கினார்.

ஒண்டுமில்லை ஐயா காலையில பார்க்கும்போது கட்டைக் காற்சட்டையோட வந்த நீங்கள் இப்ப நல்ல வடிவாய் இருக்கிறியள் அதுதான் பார்க்கிறன்.

என்னுடைய சமாளிப்பு கிழவருக்குச் சிரிப்பை மூட்டியிருக்கவேண்டும். ஓ அதுவா சங்கதி. இப்பிடித்தான் நேரத்துக்கு நேரம் மாறவேண்டியதுதான் தம்பி. அதுசரி இடம் பிடிச்சிருக்குதோ?

ஓ! நல்லாப் பிடிச்சிருக்குது ஐயா… இப்பதானே வந்திருக்கிறன். இனிப் போகப்போகத்தானே ஊர் எப்படி, ஊர்க்காரர் எப்படியென்றெல்லாம் தெரியவரும்.

“அதெண்டால் உண்மைதான் தம்பி…. ஆனாலும் பிரச்சனையில்லாத ஊர், யாழ்ப்பாணத்திலையிருந்து வெளிக்கிட்டு நான் இந்த ஊருக்கு வந்து பதினைஞ்சு வருஷமாச்சுது இதுவரைக்கும் ஒரு வில்லங்கமுமில்லையப்பன்.

நீ பயப்பிடாமல் இருக்கலாம். சரி நான் வரப்போறன் ஏதும் தேவையெண்டால் ஒரு சத்தம் வை ஓடி வருவன் என்ன” சொல்லியபடியே கிளம்பத் தயாரானார்.

ஏதும் தேவையெண்டால் உங்களை எங்கை ஐயா தேடுறது? எப்படிக் கூப்பிடுறது. ஒண்டும் சொல்லாமல் போறியள்.

ஓமடா தம்பி. உன்னைப் பற்றி விசாரிச்ச நான் என்னைப் பற்றிச் சொல்ல மறந்திட்டனல்லே.

இப்போது நான் சிரித்தேன்.

“உனக்கே சிரிப்பு வருகுது பார்த்தியா? சரி சொல்லுறன் கேளு…. அதோபார் உன்ரை கந்தோர் வேலியோட இருக்கிற சின்ன வீடுதான் என்ரை வீடு.”

“என்ன சின்ன வீடே ஐயா….?”

எட்டிப்பார் ஒருக்கா இரண்டறையோட சேர்ந்தது. சின்ன வீடுதானே. பின்ன பெரிய வீடா? நான் வேறமாதிரி நினைச்சிட்டன்.

எடடடா நினைப்புத்தானே பிழைப்பைக் கெடுக்குமென்பாங்கள்.

தம்பிக்கும் பகிடி விடத் தெரியுது என்ன.

சரிமோனே, நான் வாறன் ஏதும் தேவையெண்டால் ‘சுருட்டுக்கார ஐயா’ என்று ஒரு சத்தம் வை. ஓடி வந்திடுவன் சொல்லிவிட்டுக் கிழவர் போய்விட்டார்.

மறுபடியும் கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் என்று ‘ஈசிச் செயாரில்’ தலையைச் சாய்த்துக் கண்களை மூடப்போனேன்.

ஐயாவுக்கு இனித் தலையிடிதான். எங்கையிருந்தையா இந்த ஏழரையைப் பிடிச்சீங்க என்றவாறே என்முன்னே வந்து நின்றான் வரதராசன்.

என்ன வரது ஏழரை எட்டரை என்கிறாய்? வயசுக்கு மூத்த மனுஷனல்லே. மதியம் பஸ்ஸால இறங்கியதும் என்னை இங்க கூட்டிக்கொண்டு வந்து இடத்தைக் காட்டிவிட்டது அந்தாள்தானப்பா. அப்ப வந்த பழக்கம்தான். சும்மா விசாரிச்சிட்டுப் போக வந்தாராம் அவ்வளவுதான். விஷயத்தைச் சொல்லிவிட்டு நான் பேசாமல் இருந்தேன்.

எல்லாம் சரிதானய்யா ஆளோட பழகிற விஷயத்தில மட்டும் கவனமாயிருங்கோ. அவன் சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டான்.

ஏதோ உட்காரணம் இருக்கும்போல. ஆனாலும் அதெல்லாம் நமக்கெதற்கென்று பேசாமல் இருந்துவிட்டேன். வரதராசனையே எனக்கு இன்றைக்குத்தான் தெரியும். இங்கு வரமுதல் நாலைந்து தடவைகள் ரெலிபோனில் கதைத்திருக்கிறேன். அதுவும் இதற்கு முதல் இருந்த ஆபீசரின் அறிமுகம்தான்.

மறுநாள் புதிய ஆபீஸ், புதிய மனிதர்கள் வேலை தொடங்க ஆயத்தமானேன். கிராமம் என்றாலும் நாலா பக்கத்து ஊர்ச்சனங்களுக்கும் பெரிய கந்தோர் என்பதால் முதல்நாளே சனக்கூட்டம் ‘திமு திமு’ என்றிருந்தது.

எனக்குக் கீழே நான்கு உத்தியோகத்தர்கள் பணியாற்றினர். நான்கு பேரும் சந்தோஷமாக வரவேற்று உபசரித்துத் தங்களையும் அறிமுகப்படுத்திக்கொண்டனர். பட்டதாரி பயிலுனராக வந்த துளசியைத் தவிர மற்ற மூவரும் என்னிலும் வயதில் மூத்தவர்களாயிருந்தனர். அதுவே எனக்குப் பெரிய சங்கடமாயிருந்தது.

வந்த முதல்நாளே விவசாயம் சம்பந்தமான புகார்கள் தான் என்முன் வைக்கப்பட்டன. அந்தந்தப் பிரிவுக்குப் பொறுப்பானவர்களை அழைத்து நடவடிக்கை எடுக்கும்படி சொல்லிவிட்டு மீதி வேலைகளை நான் கவனிக்கத் தொடங்கினேன்.

கந்தோரில் களையெடுக்கவேண்டிய பிரச்சனைகள் பல இருந்தன. எல்லாவற்றையும் மெதுமெதுவாகத்தான் செய்யவேண்டுமென்று நினைத்துக்கொண்டேன்.

காலம் வேகமாகக் கரையத் தொடங்கியது. எப்படி ஒரு வருடத்தைக் கடத்தினேன் என்று எனக்கே தெரியவில்லை.

ஊருக்குள் என் சேவைகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக வரதராசன்தான் அடிக்கடி வந்து சொல்லுவான்.

நான் வந்த பிறகுதான் ஒழுங்காக வேலை நடக்கிறதாம் என்றும் அறிந்துகொண்டேன். ஏதோ நம்பணிகளும் பயன்பாடுகளும் மக்களைச் சென்றடையவேண்டுமென்பதுதான் எனது இலட்சியமாகும்.

என் குவாட்டஸ் இருந்த இடத்திலும் கந்தோரின் முன்புறமும் பெரிய நிலப்பரப்பு சும்மா கிடந்தது. அதைக்கொத்திப் பண்படுத்தி ஒரு பக்கம் வாழைத்

தோட்டமும் இன்னுமொரு பக்கம் மரக்கறித் தோட்டமும் முன்பக்கம் விதவிதமான பூந்தோட்டமும் அமைத்திருந்தேன்.

எல்லாம் அமோக விளைச்சலைத் தந்தது. காடாய்க் கிடந்த நிலத்தை ஏ.ஐ ஐயா தோட்டமாய் மாற்றிவிட்டார் என்று சிலரும் அவருக்கென்ன கந்தோர்ப் பசளைதானே ஓசியில் போடப் போடப் பயிர் வளரும்தானே என்று வேறு சிலரும் அபிப்பிராயம் சொல்லத் தொடங்கினர்.

எனக்குச் சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை. ‘வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்’ என்பார்களே அது போலத்தான் இதுவும்.

தோட்டக்கலைதான் என் பொழுதுபோக்கு. பின்னால் தென்னங்காணிக்குள் இரண்டு பசுக்களையும் ஒரு காளையையும் கூட வளர்க்கிறேன். எல்லாம் வரதராசுவின் பராமரிப்புத்தான்.

என் சமையல் தேவைக்கு எடுப்பதைத் தவிர மீதியெல்லாம் வரதராசனுக்கே கொடுத்துவிடுவேன்.

கந்தோரில் வேலை முடிந்த பிற்பாடு பொழுதைக் கழிப்பதற்காக தான் தொடங்கிய தோட்டவேலை எவ்வளவு பயன்படுகிறதென்பதை நினைக்கும்போது எனக்கே பெருமையாக இருந்தது.

கண்டுமணியரும் அடிக்கடி வந்து எதையாவது எடுத்துக்கொண்டு போவார். என்றைக்காவது ஓர் நாள் கடற்கரைக்கோ, சினிமா, கோயிலுக்கோ போய் வருவேன் அவ்வளவுதான். காலம் மட்டுமே என்னைக் கடந்து போய்க்கொண்டேயிருந்தது.

அன்றைக்கும் அப்படித்தான் வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு ஆறுதலாக இருந்தேன். வரதராசன் வீட்டுக்கும் போய்விட்டான்.

அன்றைய பத்திரிகையை விரிக்கும்போதே கண்டுமணியர் உள்ளே வந்துவிட்டார்.

“தம்பி தனிய இருக்கிறாப்போல….”

“தனிய வந்த நாங்கள் தனியத்தானே ஐயா இருக்கவேணும்” என்றேன்.

அதுவும் சரிதான் மோனே. அதுசரி தம்பி எந்த ஊர். அம்மா அப்பா எல்லாம் இருக்கினமோ? இருபத்தைஞ்சு இருபத்தாறு வயதாய் போட்டுது. கலியாணம் கார்த்திகையொண்டும் செய்யிறதா எண்ணமில்லையோ?

அப்பாடா மூச்சு விடாமல் கேட்டார் மனுஷன். நான் சிரித்தேன்.

என்ன மோனே சிரிக்கிறாய். இந்த ஊருக்கு வந்து ஒரு வருஷத்துக்கும் மேலாயிற்று. உதெல்லாம் கேட்கக்கூடாதெண்டுதான் இருந்த நான்….. என்ன செய்யிறது? மனம் பொறுக்காமல் கேட்டுப்போட்டன். கோபிக்காதையப்பா.

அவர் கேட்டதில ஒரு தப்புமில்லையென்பது எனக்கு நன்றாகப் புரிந்தது. ஆராயிருந்தாலும் இப்பிடிக் கேட்கிறது இயற்கைதானே.

என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன். ஊர் யாழ்ப்பாணம்தான் ஐயா. அப்பா சின்ன வயசில போட்டார். நானும் அக்காவுந்தான். அப்பாட பென்சனில அம்மாதான் படிப்பிச்சு வளர்த்து ஆளாக்கிவிட்டவ. அக்கா கலியாணங்கட்டி அமெரிக்காவில இருக்கிறதால் அம்மா அங்க போயிருக்கிறா. எனக்கு வயசு கூடிப்போனதால நான் போகமுடியாதுதானே. அமெரிக்கப் பொம்பிளை யாரும் பொருந்தினால் போகலாம். இல்லையெண்டால் இங்கை யாரையும் பார்க்கவேண்டியதுதான் என்றேன் நான்.

“ஓ! இவ்வளவு விஷயம் இருக்குதே….. ஏதோ காலாகாலத்தில எல்லாம் நல்லபடி நடந்தால் சரிதான் மோனே” என்றார் அவர்.

“அதுசரி ஐயாவின்ர குடும்ப வiலாற்றை எனக்குச் சொல்லிமாடடியளோ.” நான் வேணுமென்றே கேட்டேன்.

“என்னத்தையடா மோனே சொல்றது. பருத்தித்துறைதான் ஊர்… நான் பொலீசு வேலையிலயல்லே இருந்தநான்… பேந்து இடையில விட்டுப்போட்டு கலியாணம் முடிச்சன்… நல்ல வடிவான சிவத்தப் பொம்பிளையடா மோனே. பார்த்தால் பாவப்பழம்போல இருப்பாள். ஒரு வருசம் சந்தோஷமாய்த்தான் மோனே என்னோட வாழ்ந்தாள்.”

“பிறகு?”

கிழவரின் கண்களிலிருந்து கண்ணீர் வடியத் தொடங்கியது.

“ஐயா என்ன இது? ஏன் அழுகிறியள்? அழாதீங்கோ ஐயா…” ஒன்றுமே தெரியாமல் அவரைத் தேற்றினேன். தோளில் கிடந்த துண்டால் முகத்தையும் மூக்கையும் துடைத்துக் கொண்டவர். எப்படியோ தன்னைச் சுதாரித்துக் கொண்டவராய் மறுபடியும் பேசத் தொடங்கினார்.

“ஒரு நாள் கூட்டாளிப் பெடியன் ஒருவன்ர தோட்டத்துக்குத் தண்ணியிறைக்கப் போட்டு வீட்ட வந்து பார்த்தால் வீட்டில அவளைக் காணயில்லையடா மோனே. எங்கை போயிருப்பாள் எண்டு தேடாத இடமெல்லாம் தேடிப் பார்த்தன். கடைசியில ஒரு கடிதம் தானடாமோனே விஷயத்தைச் சொல்லியது.” மறுபடியும் மனுஷன் கண்களைத் துடைத்தார்.

“என்ன நடந்ததையா?”

“என்ன நடக்கையில்லயெண்டு கேளு… நான் என்னத்தையடா மோனே சொல்லுவன். பக்கத்து வீட்டில வாடகைக்கு குடியிருந்த பாலங்கட்டிற இஞ்சினியர்ப் பெடியனோட எல்லே ஓடிப்போயிட்டாள்.”

கிழவரைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. “சரிசரி விட்டுத் தள்ளுங்கோ ஐயா. சட்டை கிழிஞ்சு போட்டுதெண்டால் அதைத் தூக்கிப் போடுற மாதிரித்தான். போனவளை நினைச்சு நீங்கள் ஏன் அழவேண்டும்.” நான் சொல்லியதும் தலையை ஆட்டினார் அவர்.

“நீ சொல்லுறதும் சரிதானடா மோனே. அவள் என்னை விட்டுப்போய் ஐம்பது வருஷத்துக்கு மேலாயிட்டுது. அவள் போன ஐஞ்சாம் மாசமே இவள் அமிர்தத்தைக் கல்யாணம் பண்ணிட்டன் மோனே. இவளும் நல்ல வடிவான ஆள்தான். ஆனால் என்ன என்னைவிட இருபது வருஷம் குறைவானவள். மற்றப்படி பிரச்சனையொண்டுமில்லை.”

“ஐயாவுக்குப் பிள்ளையள் இருக்கினமோ?”

“மூன்று பெடியனுகள் இருக்கிறானுகள் மோனே” பதில் சலிப்புடன் வந்தது.

“அப்பிடியெண்டால் ஐயாவுக்கென்ன அதிஸ்டசாலிதான்… ராசா போல வாழ்க்கை என்னையா?” நான் தான் கேட்டேன்.

நல்லாய்ச் சொன்னாயடா மோனே. நல்ல கதைதான்.” ஆனால் நீளமில்லை. சொன்னவர் தோளில் கிடந்த துண்டால் கண்ணைத் துடைத்துக் கொண்டார்.

ஐயா என்னாச்சு திரும்பத் திரும்ப ஏன் அழுகிறியள். நான் ஏதும் சொல்லிப் போட்டனோ.

தேவையில்லாமல் இன்னொருத்தர் விஷயத்தில் மூக்கை நுழைச்சிட்டனோ என்று குற்ற உணர்வில் என் மனசு சஞ்சலப்படத் தொடங்கியது.

“இல்லையடா மோனே அப்பிடியொண்டுமில்லை. எல்லாம் என்ர தலைவிதியெண்டு நினைச்சுக் கொண்டுதான் அழுதன்.”

மறுபடியும் அவர் கண்களில் நீர் கசியத் தொடங்கியது. கிழவரைப் பார்க்க எனக்குப் பரிதாபமாய் இருந்தது. “எதுவானாலும் சரி ஒண்டுக்கும் யோசிக்காதையுங்கோ ஐயா கவலைப்படுவதால் மட்டும் வாழ்க்கையில் என்ன ஆகப் போகிறது” என்றேன் நான்.

“ஓமடா மோனே எல்லாத்தையும் உன்னட்டைச் சொன்னால்தான் எனக்கு மனசு ஆறும்.”

அவர் என்னைப் பார்த்தார்.

“சரி சொல்லுங்கோ” என்றேன்.

மூத்தவன் வஸ்கண்டக்டராயிருக்கிறான். ரெண்டாமவன் ஒரு ஒபிஸில பியனாய் இருக்கிறான். மூன்டாமவன் நல்ல கெட்டிக்காரன் மோனே. நல்லாய்ப் படிச்சுப் போஸ்ட் ஆபீசில கிளார்க்காய் வந்திட்டான். மூணு பேரும் தங்கட விருப்பத்துக்குத்தான் கலியாணமும் முடிச்சிற்றினம்.

“அப்பிடியெண்டால் உங்களையும் கவனிப்பினம் தானே ஐயா.

என்ன மோனே சொல்லுறாய். அவனுகள் கவனிச்சால் நான் ஏனடாப்பு இப்பிடி நாய்படாப் பாடுபடப் போறன். எல்லோரும் பொண்டாட்டி தாசனுகள் தானடா. எப்பவாவது இருந்துபோட்டு ஒரு நூறு இருநூறு ரூபாயைத் தந்துபோட்டுப் போவானுகள். அவ்வளவுதான். சரியப்பு நான் வரப் போறனடா மோனே. கிழவர் கிளம்பிவிட்டார்.

பெற்று வளர்த்து ஆளாக்கிவிட்ட பெற்றோரைப் பிள்ளைகள் புறந்தள்ளி விட்டால் அது பெரிய கொடுமைதான்.

உடல் அசதியான காலத்தில் உழைத்துச் சாப்பிடுவதென்பதும் சிரமமான வேலைதான். ஆனால் கிழவர் இந்த வயதிலும் புகையிலை வாங்கிச் சுருட்டுச்

சுற்றி வியாபாரம் பண்ணுவதும் அவர் மனைவி கடகம், பாய், நீத்துப்பெட்டி, சுளகு பின்னுவதும் மோர்மிளகாய், பாணிப்பனாட்டு செய்வதும் கிழவன் அவற்றை விற்குக் காசாக்குவதும் பாராட்டவேண்டிய விஷயம்தான். அதற்காகப் பல தடவைகள் நான் அவரைப் பாராட்டியிருக்கிறேன்.

அன்றைக்கும் அப்படித்தான் பழைய ‘ஹம்பர்’ பைசிக்கிள் ஒன்றில் பொருட்களை வைத்துக் கட்டிக்கொண்டு பைசிக்களைத் தள்ளியபடியே கிழவர் போய்க் கொண்டிருந்தார்.

பூந்தோட்டத்திற்குத் தண்ணீர் அடித்துக் கொண்டிருந்த எனக்கு அவரைப் பார்த்ததும் சரியான கவலையாயிருந்தது.

இந்த வயதிலும் இந்த மணுஷன் எவ்வளவு பாடுபட்டு உழைக்கிறார் பார்த்தியா வரது? மனசுக்கு ரொம்ப வருத்தமாயிருக்குதடா.

வரது நிமிர்ந்து என்னை ஒரு தடைவ பார்த்துவிட்டுத் தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டான்.

என்ன வரது சிரிப்பு?

நீங்க எதுக்கையா அந்தாளைப் பற்றிக் கவலைப் படுறியள். பாவம் என்ன பாவத்தோட வரப் போகுதென்று இன்னுங் கொஞ்ச நேரத்தில் பாருங்களேன் என்றான் அவன்.

அவன் எப்போதுமே இப்படித்தான் கிழவரைப் பற்றி அவனுக்கு நல்ல அபிப்பிராயமே கிடையாது. ஏதாவது இடக்குமுடக்காய் பேசிக்கொண்டுதான் இருப்பான்.

ஞாயிற்றுக்கிழமையென்பதால் வீட்டில் இருப்பதே எரிச்சலாயிருந்தது. எனவே வேலைகளையெல்லாம் முடித்துவிட்டுக் கடற்கரைக்குப் போய் வரலாமென்று தீர்மானித்தேன்.

வரது அக்கா வீட்டுக்குப் போய் வருவதாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டுவிட்டான். நான் கதவைப் பூட்டித் திறப்பை எடுத்துவிட்டு என் பைக்கின்மேல் ஏறும்போதுதான்

சார்…. எங்களுக்கு கொஞ்சம் பூக்கள் வேணும் தருவீங்களா? கேற்றுக்கு வெளியே இருந்து குரல்கள் வந்த திசையை நோக்கினேன்.

ஐந்து வண்ணத்துப் பறவைகள் ஒன்றாய்க் குரல் கொடுத்தன.

அடேயப்பா ஒவ்வொருத்தியும் என்ன அழகு. மனதிற்குள் நினைத்துக் கொண்டேன் நான். என் பதிலுக்காகக் காத்திருப்பதுபோல் திரும்பத் திரும்பக் கேட்டார்கள்.

ஏன் சத்தம் வைக்கிறீர்கள்? யார் நீங்கள்? என்ன வேண்டும் உங்களுக்கு? படியிறங்கிப்போய் நான்தான் கேட்டேன்.

எனக்குக் கொஞ்சம் ரோஜா வேண்டும் சார். அவளுக்குக் கொஞ்சம் கனகாம்பரம் வேணும், மற்றவளுக்கு மல்லிகை வேணும், அடுத்தவளுக்கு சாமந்தி, இவளுக்கு காடினியா வேணும் தருவீங்களா சார்?

மறுபடியும் எல்லோரும் சேர்ந்து ஹோரஸ் பாடினர்.

தரலாமே. ஆமா இவ்வளவு பூக்கள் எதுக்கு? நீங்களெல்லாம் யாரென்று சொல்லவில்லையே!

கண்டிப்பா சொல்லணுமா சார்?

கூட்டத்தில் மிக அழகாக உயரமாக நின்றவள்தான் கேட்டாள்.

ஆமா. கண்டிப்பாகச் சொல்லணும். சொன்னாத்தான் பூக்கிடைக்கும்.

நான் சொன்னதும் எல்லோரும் கொல்லென்று சிரித்தனர். பிறகு வாங்கடி போகலாம். நாம யாரென்று இவருக்குச் சொல்லணுமாம். பூக்கேட்டா விளக்கம் எதுக்காம். வாங்கடி போகலாம் அந்த அழகான உயரமானவள்தான் சொன்னாள். அவள்தான் அவர்களின் லீடராயிருக்கவேணும்.

என்னம்மா என் தோட்டத்துப் பூக்கள் வேணுமாம். நீங்க யாரென்று கேட்டால் மட்டும் சொல்ல மாட்டீங்களோ?

சார் நாங்கெல்லாம் சரஸ்வதி வித்தியாலய மாணவிகள் சார். நாளைக்கு எங்க ஸ்கூல் பரிசளிப்புவிழா. அதில நாங்கெல்லாம் டான்ஸாடப் போறம் அதுக்குத்தான் பூவேணும் சார்… யாரும் எதிர்பார்க்காமல் திடீரென்று சொன்னாள் ஒருத்தி.

“அப்பிடியா…!” பாவம் டான்சாடுற பிள்ளையளுக்கு பூக்கொடுக்கத்தான் வேணும். “சரி வந்து சீக்கிரம் பறிச்சிட்டுப் போங்க” என்றேன் நான்.

அவ்வளவுதான் கலகல என்று சிரித்தபடியே உள்ளே நுழைந்தவர்கள் இரண்டே நிமிடத்தில் என் பூந்தோட்டத்தை மொட்டையடித்துவிட்டுச் சென்றுவிட்டார்கள்.

என்ன இது? இப்படியா எல்லாப் பூக்களையும் பறிப்பீர்கள் என்று கேட்டேன்.

பூக்களைத்தானே சார் பறித்தோம் என்றாள் ஒருத்தி.

என்ன துணிச்சல் இவளுக்கு என்று நினைப்பதற்குள் காலையில் பூத்து மாலையில் வாடிவிடும் பூக்கள்தானே சார் என்றாள் இன்னொருத்தி. ஆனால் ஒருத்தி மட்டும் எதுவுமே பேசாமல் என்னையே பார்த்துக் கொண்டு நின்றாள். அவள் பார்வையில் என் மனசு லேசாக ஆடத் தொடங்கியது.

எனவே சரிசரி போயிட்டு வாங்க என்று அவர்களுக்கு விடை கொடுக்கும்போதே “வாழவேமாயம் வாழ்வேமாயம்” என்று பாடியபடி ரெண்டு காலில் ஆடிக்கொண்டு வந்து என் முன்னே நின்றார் கண்டுமணியர்

வரது சொன்னது சரிதான். தலைகெட்ட வெறி, சாராய நெடி வயிற்றைக் குமட்டியது.

நான் தள்ளி நின்று கொண்டேன். என்ன ஐயா இது? போகும்போது ஒழுங்காய்ப் போனீங்க வரும்போது இப்படி நாலுகாலில் நாட்டியமாடுறீங்க. ஏன் ஐயா… காசு கனத்துப் போச்சுதோ? நான்தான் வேண்டுமென்று கேட்டேன்.

காசு…. ஆமா….. காசு… கனத்துப்போச்சுதடா மோனே… அதுசரி… உன்ரை வீட்ட பெட்டையள் ஏன் வந்தவை. முதல்ல அதைச் சொல்லு பெட்டையள் ஏன் வந்தவை?

ஏன் ஐயா வரக்கூடாதா? பூப்பறிக்க வந்தாளவை. இதிலை என்ன தப்பைக் கண்டியள்?

தப்புத்தான் தம்பி. மஹா தப்புத்தான். உனக்குத் தெரியாதடா மோனே இவளவை இண்டைக்குப் பூப்பறிக்க எண்டுதான் வருவாளவை. பேந்து உன்னோட மனசையும் பறிச்சுக்கொண்டு போயிடுவாளவை சொல்லிப்போட்டன்.

அப்படியெல்லாம் சொல்லாதையுங்கோ அப்பு. பொம்பிளைப் பிள்ளையளைப் பற்றிக் கண்டபடி சொல்லக்கூடாது பாருங்கோ.

தம்பி ஏ.ஐ தம்பி. பெட்டையளைப் பற்றிச் சொல்லாமல் யாரைப் பற்றிச் சொல்லச் சொல்லுறாய். ஏதோ சொல்லுறதைச் சொல்லிப்போட்டன். எதுக்கும் கவனமாயிரு என்ன? சொல்லியவர் அப்படியே தடால் என்று விழுந்துவிட்டார்.

வெறி மயக்கம் மனுஷனுக்கு உணர்வு தெரியாதநிலை. மனுஷன் வாசலில் வாந்தியெடுத்துவிட்டார். வரதுவும் வீட்டில் இல்லை. இப்போ என்ன பண்ணுவது பலமாக யோசித்த நான் கடைசியில் ஒரு முடிவையெடுத்துவிட்டேன்.

முகத்தில் தண்ணீரையடித்துப் பார்த்தன் ஊஹ{ம் பேச்சு மூச்சேயில்லை. எனக்குப் பயம் வேறு தொற்றிக் கொண்டது.

தெருவில் போன ஒரு பையனை அழைத்து வந்து விஷயத்தைச் சொன்னேன். அவன் சிரித்தான்.

ஐயா இந்தக் கிழவன் இப்படித்தான் குடி முத்திப் போச்சுதெண்டால் கண்ட கண்ட இடங்களிலையெல்லாம் விழுந்து கிடப்பார். நீங்கள் ஒண்டுக்கும் பயப்படாதையுங்கோ என்றான்.

நீ சொல்றது சரிதான் தம்பி. ஆனால் என்ர வீட்டு வாசலிலையெல்லே இப்பிடிக் கிடக்கிறார். பேந்து நல்லதைப் போல பொல்லாப்பு ஏதும் வந்தால் எனக்கெல்லே பிரச்சனை.

ஓமையா… நீங்கள் சொல்லுறதும் சரிதான். ஒண்டு செய்வமே… பக்கத்து வேலியால அவர் மனுஷியைக் கூப்பிட்டுச் சொல்லுவம். வந்து கூட்டிக்கொண்டு போகட்டும்.

நீ சொன்னால் நம்பமாட்டாயடா தம்பி. பக்கத்து வீட்டில மனுஷியிருக்கிறாளென்று கிழவன் சொன்னதுண்டு. ஆனால் இன்றுவரைக்கும் அந்த மனுஷியைக் நான் கண்ணால் கூடப் பார்த்ததில்லையடா.

வீடு பின்னால இருக்கிறதால மனுஷி முன்னால வாறதில்லையாக்கும் ஐயா. அதுபோக இன்னுமொரு ரகசியம் சொல்லட்டே.

அப்படி என்ன ரகசியம் சொல்லுப்பா. ஆர்வத்தோடு கேட்டேன் நான்.

கிழவருக்கு மனுஷி மேல சரியான சந்தேகம் ஐயா. அதனால பாவம் வீட்டை விட்டு அந்த மனுஷி வெளியில் எங்கேயும் போறதும் இல்ல. ஆம்பிளையளோட கதைக்கிறதுமில்லை.

என்ன தம்பி சொல்லுறாய் நீ!

அதுதான் உண்மை சார்… எங்கட வீட்டுக்கு முன்னாலதானே இவையின்ர வாசல் மதில் என்றபடியால உங்களுக்கு ஒன்றும் தெரியாதாக்கும். தப்பித்தவறி ஆரோடயன் மனுஷி கதைச்சிட்டுதென்றால் போதும் அன்றைக்கு திருவிழாத்தான். அடிஅடியென்று அடிச்சே போடுவான் மனுஷன்.

பையன் சொன்ன கதையைக் கேட்க எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இப்படியும் ஒரு மனுஷனா! அதுவும் இந்த வயசுபோன காலத்தில. நான் மறுபடியும் யோசிக்கத் தொடங்கினேன்.

அப்போதுதான் வரது வந்துகொண்டிருந்தான். “என்ன சார் கிழவன் வேலை வைச்சிற்றானா? இதை அண்ட வையாதீங்க என்று நான்தான் சொன்னேனே. இப்போ என்ன செய்யப் போறீங்க…?

வரதுவைக் கண்டதும் எனக்குக் கொஞ்சம் ஆறுதலாயிருந்தது. வா வரது. நீங்கள் ரெண்டு பேருமாய்ச் சேர்ந்து கிழவரின்ட வீட்டில விடுங்கப்பா. நான் வாந்தியெடுத்த இடத்தைக் கழுவி விடுறன் என்றேன்.

ஐயோ சாமி எங்களை விட்டிடுங்கோ ஐயா. கண் விழிச்சாரெண்டால் மனுஷன் எங்களை மட்டுமல்ல மனுஷியையும் போட்டுத் துவைச்செடுத்திடுவார்.

என்ன இது வரதுவும் இப்படிச் சொல்லுகிறானே! என்று நினைத்த நான், விடுங்கோ நானே இழுத்துக்கொண்டு போகிறேன் என்றேன்.

இது விஷப் பரீட்ஷை ஐயா. எங்க கொண்டு முடியுமோ தெரியாது. சரி வாடா தம்பி… வாறது வரட்டும் என்றபடியே கிழவனைக் கைத்தாங்கலாகக் கொண்டு சென்றனர்.

மறுநாள் பொழுது விடிந்தது. வரது வாசலைக் கூட்டிக்கொண்டு நின்றான். நான் பூங்கன்றுகளுக்குப் பசளை தூவிக் கொண்டு நின்றேன்.

எங்கேயோ பாத்திரங்கள் உருளும் சத்தமும் யாரோ அழும் குரலும் துல்லியமாகக் கேட்டது.

ஐயா திருவிழாத் தொடங்கிட்டுது. கேக்கல்லையா ஐயா என்றான் வரது.

இப்ப என்ன சொல்ல வாறாய் வரது என்றேன் நான்.

நான்தான் நேற்றே சொன்னேனே. கிழடு கண் விழிச்சிட்டுதுபோல மனுஷியைப் போட்டு அடிக்கிறான் பார்த்தியளே.

உண்மைதான். யாரடி வந்தவன் இங்க சொல்லுடி… சொல்லமாட்டியா? என்னடி நடந்தது… இஞ்ச வந்தவன் ஆரடி? எங்கை ஓடுறாய். நீ எங்க ஓடினாலும் விடனடி. மனுஷி ஓடஓட கிழவன் துரத்தித் துரத்தி அடிக்கிறான் போல.

என் மனசுக்குப் பெரிய சங்கடமாயிருந்தது. ஐயோ ஐயோ அடிக்கிறானே! அடிக்கிறானே! என்று மனுஷி அழுவதும், பொத்தடி வாயை என்று மனுஷன்; வாய்த்தர்க்கப்படுவது நன்றாகக் கேட்டது.

அவ்வளவு அமளிக்கும் ஒரு மனுஷர்கூட விலக்குப் பிடிக்கப் போகையில்லை என்பதுதான் எனக்குப் பெரிய அதிசயமாயிருந்தது.

இப்ப மழை அடங்கிப்போகும். நீங்கள் மரத்தைப் பார்த்துப் பசளையைத் தூவுங்கோ என்றான் வரது. அவனது பேச்சில் நக்கல் நன்றாகத் தெரிந்தது. நம்மாலும் ஒன்றும் செய்ய முடியாதென்றளவில் நானும் மௌனித்துப் போனேன்.

கடற்கரைப் பயணம் கனவாய்ப் போனது. மறுநாள் திங்கட்கிழமை. ஆபீசில் வேலை கனதி. எல்லாவற்றையும் முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பும்போது நேரம் ஐந்தைத் தாண்டிவிட்டது.

வரது டீக் கோப்பையுடன் வடையும் கொண்டு வந்து வைத்தான். அவனுடைய அம்மா வடை, பற்றீஸ், கட்லட், கேசரி எல்லாம் ஓடர் எடுத்துச் செய்வாளாம். அதிலிருந்து எனக்காகவும் இரண்டு மூன்றைக் கொண்டுவந்து தருவது வழக்கம்.

மாதம் முடிய ஒரு கணக்கைப் பார்த்துக் காசாகக் கொடுத்து விடுவேன். வரது வேண்டாம் என்றுதான் சொல்லுவான். ஆனாலும் நான் விடுவதில்லை.

வடையை எடுத்து வாயில் வைக்கும்போதே சார் இன்றைக்கும் கொஞ்சம் பூக்கள் வேண்டும் சார் என்றபடியே மதிலுக்கு வெளியே இருந்து குரல்கள் கேட்டதும் நிமிர்ந்து பார்த்தேன்.

நேற்று வந்த அதே கூட்டம். குறும்புக்காரிகளின் நடுவே அவளும் நின்றிருந்தாள். நீல நிறத்தாவணி பாவடை, தலையில் நிறையப் பூவுடன் இமைகள் படபடக்க என்னையே பார்த்துக் கொண்டு நின்றாள்.

மறுபடியும் என் மனசு ஆடத் தொடங்கியது. ஆமா நேற்றுத்தானே பூமரங்களை மொட்டையடித்தீர்கள். இன்றைக்குமா என்றேன் நான்.

ஏன் சார் பூத்தானே கேட்டோம் அதற்கு ஏன் மொட்டைகிட்டை என்றெல்லாம் குழப்புறீங்க.

நானா குழப்புறேன். இன்றைக்குப் பரிசளிப்பு விழா என்றுதானே நேற்றுப் பூக் கேட்டிங்க. நாளைக்கு என்ன விழாவோ?

நாளைக்கு நாடக விழா சார்.

அந்தக் குறும்புக்காரிகளில் ஒருத்திதான் சொன்னாள். பூவேணுமென்றால் ஒவ்வொருத்தியா வந்து உங்க பெயர்களைச் சொல்லிவிட்டுப் பறிச்சுக்கோங்க என்றேன் நான்.

அப்படியா! ராதா, ருக்மணி, ரோஜா, ரமணி, மரியா, மனோன்மணி… மூச்சு விடாமல் ஒப்புவித்தாள் ஒருத்தி.

எனக்குத் தெரியும் எல்லாமே பொய் என்று எனக்குத் தெரியும். ஆனாலும் சரிசரி பாவமாயிருக்கிறது பூக்களைப் பறியுங்கள் என்றேன்.

அவ்வளவுதான் கூடைகளை நிரப்பிக்கொண்டு எல்லாரும் ஓடி மறைந்தார்கள். என் தோட்டம்தான் வெறுமையானது.

ஆனால் அவளின் பார்வை மட்டும் என்னைக் கொல்லாமல் கொன்றது. என்ன வேடிக்கை.

பெரியதொரு பூச்சட்டியைத் தூக்கமுடியாமல் தூக்கியவாறே வரது வந்துகொண்டிருந்தான்.மஞ்சள் நிற ரோஜாப் பதியனை நடவேண்டும். எங்காவது பெரிய சட்டியிருந்தால் வாங்கி வா என்று என்றைக்கோ நான் சொன்னதை ஞாபகம் வைத்துக்கொண்டு அவன் வாங்கி வருவது எனக்குச் சந்தோஷமாய் இருந்தது.

என்ன வரது மூச்சு வாங்குதா? சரி சரி இறக்கி வைத்துவிட்டு போய் டீ குடி என்று சொல்லி விட்டுத் திரும்புகிறேன். கண்டுமணிக் கிழவர் விடுவிடென்று என் வீட்டை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தார்.

அவரைக் கண்டதும் வரது உள்ளே போய்விட்டான். இவன் ஏன் ஓடுகிறான் புரியாமல் கிழவரை நோக்கினேன்.

“ஏ.ஐத் தம்பி இவன் வரதுப் பெடியன் வந்தவனல்லே…. எங்க போட்டான். ஒருக்காக் கூப்பிடுங்கோ அவனை” என்றார் அவர்.

“ஏன் ஐயா ஏதும் பிரச்சனையோ?” நான்தான் கேட்டேன்.

“பிரச்சனை ஒண்டுமில்லைத் தம்பி நேற்று இவன் வரது என்ர வீட்டுப் பக்கம் வந்திட்டுப் போனவனாமே. அதுதான் கொஞ்சம் விசாரிக்கவேண்டிருக்குது.”

“கூப்பிடுமோனே ஒருக்கா” என்றார் அவர். இப்போது எனக்குப் புரிந்துவிட்டது.

“ஓ விஷயம் இவ்வளவுதானா? வரது மட்டுமில்லை ஐயா இன்னுமொருவரும் கூடத்தான் உங்களின்ர வீட்டுக்குப் போனவை. அவையள் ரெண்டுபேரையும் அனுப்பி வைச்சதே நான்தான்.”

கிழவர் விறைத்துப்போனார். நான்தான் அனுப்பினேன் என்பதை அவரால் நம்பNவு முடியவில்லை.

“என்ன தம்பி நீதான் அனுப்பினியோ உதென்ன வெட்கங்கெட்ட வேலை பண்ணியிருக்கிறாய். அதுவும் புரியனுமில்லாத நேரத்தில பெண்பிள்ளை தனியாயிருக்கிற வீட்டுக்கு அனுப்பியிருக்கிறாயே. உது நல்ல வேலையே சொல்லு.”

இப்போது கிழவரின் கோபமெல்லாம் என்மீது திரும்பியது.

அவரை நினைத்து அழுவதா சிரிப்பதா என்றே எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் அவருக்கு விஷயத்தைச் சொல்லவேண்டுமென்று முடிவெடுத்துக்கொண்டேன் நான்.

“ஐயா வரது ஒன்றும் உங்கட வீட்டுக்கு ஆசைப்பட்டுப் போகையில்லை. எல்லாத்துக்கும் முதற்காரணமே நீங்கள் தான் புரிஞ்சுக்கோங்க” என்றேன் நான்.

“நீ என்ன தம்பி சொல்லுகிறாய்? எல்லாத்துக்கும் மூலகாரணம் நானோ? நல்லாய்ச் சொன்னாய் பார். என்ரை மனுஷி மட்டுந்தான் வீட்டில தனியாய் இருக்கிறவள்… உனக்குத் தெரியுமா? எந்த ஆம்பிளையாளையும் நான் வீட்டுக்குள்ள ஒருநாளும் உள்ளெடுக்கமாட்டனப்பு புரியனுமில்லாத நேரத்தில இவையள் உள்ள போயிருக்கினம்.”

“புருஷன் இல்லாட்டி என்ன ஐயா? புருஷன் புருஷன் மாதிரி இருக்கவேணுமே! அதுதானே முக்கியம்.”

“தம்பி… நீ… தப்பாய்ப் பேசுறீர் கல்லுப்போல நானிருக்கிறன். உந்தக் களவாணியள் எல்லாம் ஏன் போகவேணும்?”

விதண்டாவாதம் பேசினார் அவர். எனக்குக் கோபம் தாங்கமுடியவில்லை. “என்னையா சொல்றீங்க? நேற்று நீங்கள் என்ன நிலையில் இருந்தீங்களெண்டு உங்களுக்குத் தெரியுமா? நல்லாத் தண்ணியில போட்டிட்டு இங்க வந்து, கண்மண் தெரியாம சத்தம் போட்டு, என் வீட்டு வாசல் படியில் வாந்தியெடுத்து மூச்சுப்பேச்சில்லாமல் கிடந்தீங்களே ஞாபகமிருக்குதா?”

கிழவர் பேந்தப் பேந்த விழித்தார். “என்ன விழிக்கிறீங்க ஐயா’ இந்த நிலையில் உங்களைத் தூக்கிக்கொண்டு போக என்னால முடியுமா? அதுதான் தெருவில் போற ஒருத்தனைக் கூப்பிட்டு வரதுவோட சேர்த்து உங்களைத் தூக்கிக் கொண்டு போய் உங்க வீட்டில போட்டம். அவ்வளவுதானய்யா….”

கிழவரின் மௌனம் தொடர்ந்தது.

“ஏன் ஐயா தெரியாமல்தான் கேட்கிறன்? உங்க வீட்டில குமர்ப் பிள்ளையள் யாரும் இருக்கினமோ?”

“எனக்குப் பொம்பிளப் பிள்ளையளே கிடையாது. குமர்ப்பிள்ளையள் எப்படியடா மோனே வரும்?”

“அப்பிடியெண்டால் ஏன் பயப்பிடுறியள்?”

கிழவர் ஒரு மாதிரி நெளிந்தார்.

“குமர்ப்பிள்ளையளும் இருந்தால் இந்த ஊரில இளசுகள் நாறிப்போகும் சார்” என்றபடியே வெளியே வந்தான் வரது.

கிழவர் அவனை முறைத்தார்.

“என்ன ஐயா வரதுவைக் கேட்டியள். இதோ வந்திட்டான். பிரச்சனையைச் சொல்லுங்கோ” என்றேன் நான். அப்போதும் அவரின் மௌனம் தொடர்ந்தது.

“அவர் பேசமாட்டார் சார். நான் சொல்லுறன் கேளுங்க. இந்தாளுக்குப் பொண்டாட்டி மேல சந்தேகம்… சந்தேகம் எண்டால் கொஞ்சமில்லை ஐயா…. சரியான சந்தேகம். ஆராவது ஆம்பிளயள் போனால் தன்ர மனுஷியைக் கூட்டிக்கொண்டோடிடுவாங்கள் என்று பயம்” என்றான்.

“அவ்வளவுதான்… ஓமடா எடுபட்ட பயலே. எனக்குப் பயம்தான்.நீ எதுக்கு என்ரை வீட்டுப்பக்கம் போனநீ…” என்றபடி சண்டைக்குக் கிளம்பினார் மனுஷன்.

“சரி சரி போதும் கிளம்புங்க ஐயா. சண்டை வேண்டாம் கிளம்புங்க. இனிமேல் இங்க வாறதெண்டால் குடிக்காமல் வாங்கோ என்ன” சமாதானம் பேசி ஒருபடியாக மனுஷனை அனுப்பி வைத்துவிட்டேன்.

வரது சிரித்தான். “இதுக்குத்தான் ஐயா நான் போகமாட்டன் எண்டு சொன்னனான். இந்த கிழடோட நான் அனுபவப்பட்டிருக்கிறன். அது திருந்தாது” என்று சொல்லிவிட்டுத் தெருவைப் பார்த்தான்.

அவன் வார்த்தையில் ஏதோ மர்மம் இருப்பது புரிந்தது. “ஏன் வரது முன் அனுபவம் இருக்குதென்கிறாயே! எனக்குஞ் சொல்லனப்பா. நானும் கவனமாக இருக்கலாமல்லே!” என்று பொடிவைத்துப் பேசினேன் நான்.

“அதுக்கென்ன ஐயா சொல்லிற்றாப் போச்சுது. அதுக்கு முதல் தெருவைப் பாருங்களேன். உங்களின்ர ‘கஷ்டமர்கள் வந்திருக்கிறாங்கள் காணையில்லையே…” என்று என்னை வம்புக்கிழுத்தான் அவன்.

என்னடா கஷ்டமர்ஸ் அது இது என்கிறானே என்று எண்ணியபடியே நிமிர்ந்து தெருவைப் பார்த்தேன்.

“ஓ! பூக்காரக் கஷ்டமர்களா? இது என்ன வில்லங்கம்? ஒவ்வொரு நாளும் பூக்கேட்டு வருகிறார்கள்” மனசுக்குள் நினைத்துக்கொண்ட நான், வரது “என்ன வேண்டும் என்று கேட்டு ஆட்களை அனுப்பிவிடு” என்று சொல்லிவிட்டு நான் உள்ளே சென்று மறைந்துகொண்டேன்.

“என்னம்மா என்ன தெருவில வரிசை கட்டிக்கொண்டு நிற்கிறீங்க என்னவேணும்?” வரது தான் சத்தமாகக் கேட்டான்.

ஒன்றுமில்ல வரதண்ணே… இன்றைக்கு எங்களுக்குப் பூ வேண்டாம்.

அப்ப கத்தரிக்காய், வெண்டிக்காய், பச்சைமிளகாய் வேணுமோ?

வரதுவுக்கும் பகிடி நல்லா வரும்போல இளவயசுப் பெட்டைளோட எப்பிடிச் சரிக்குச் சரி பேசிறான் என்று எனக்கே புதினமாய் இருந்தது.

“கத்தரிக்காய், வெண்டிக்காயும் கொடுப்பீங்களோ?” கூட்டத்தில் நின்ற ஒருத்தி கேட்டாள்.

“ஓ கொடுப்போம் கொடுப்போம். எவ்வளவு கிலோ வேணுமெண்டு சொன்னால் அதுக்குரிய காசை வேண்டிக்கொண்டு கொடுப்போம். அது சரி இண்டைக்கு என்ன வேணும்?”

“இந்தப் பூக்கன்றுகள், பயிர்க்கன்றுகள் எல்லாம் எப்படிப் பயிரிடுவது பராமரிப்பது என்று ஏ.ஐ ஐயாவைக் கேட்கவேண்டும். அதுதான் வந்த நாங்கள்” எல்லோரும் ஒன்றாய் கூறினர்.

“ஐயையோ அவர் ஊருக்குப் போட்டாரே! திரும்பிவர ஒரு வாரமாகும் பாருங்க தங்கங்களே…” என்றான் அவன்.

“ஓ! ஐயா ஊருக்குப் போட்டாரா வரதண்ணே. பொய்யச் சொன்னாலும் பொருந்தச் சொல்லவேண்டாமா? ஐயாவின்ர உடுப்புக்கள் காயுதே கொடியில. ஐயாவின்ர செருப்பு கிடக்குது வாசலில ஐயா உள்ள போனமாதிரிக் கிடந்தது… வரதண்ண… நாங்கள் உள்ள வரவோ…” என்றாள் ஒருத்தி.

வரதுவுக்குத் திண்டாட்டமாய்ப் போய்விட்டது. ஆரது சோமண்ணையின்ர மகளோ பேசினது. இருஇரு அப்பாவைக் காணட்டும் மாலை பட்டுப்போச்சுது எல்லோரும் வீட்டுக்குப் போங்க.

அப்போ ஏ.ஐ ஐயாவை இன்றைக்குப் பார்க்கமுடியாதா அண்ண?

பார்க்கமுடியாது. ஓடுங்க ஓடுங்க எல்லோரும். அவன் வார்த்தைக்குக் கட்டுப்பட்டார்கள்… நான் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன்.

வாங்கடி போகலாம்… என்று வாயாடிப் பெண்ணொருத்தி சொல்ல அவள் பின்னே எல்லோரும் விரைந்தனர். ஆனால் அந்த நீலத் தாவணி மட்டும் என்னைக் கண்டுவிட்டது. நான் சிரித்தேன். அவள் தலையை அசைத்தாள்.

இமைகள் படபடக்க ஒரு புன்னகையை இதழில் படரவிட்டு திடீரென்று கூட்டத்தில் மறைந்துவிட்டாள்.

நல்லவேளை வரது இதைக் காணவில்லை. கண்டிருந்தால் அவ்வளவுதான். என்னைச் சீண்டிச் சீண்டியே அவன் காலத்தை ஓட்டி விடுவான்.

அவள் பெயர் என்னவாயிருக்கும்?

நான் வெளியே வந்தேன். தெரு வெறுமையாயிருந்தது. என்ன வரது போய்விட்டார்களா?

அவர்களைப் போக வைப்பதற்குள் போதும்போதுமென்றாகிவிட்டது சார்.

ஏன் என்ன பண்ணினார்கள்?

உண்மையாகத் தெரியாதா சார்?

தெரியாது வரது.

அப்போ தூங்கினீங்களா?

ஆமா தூங்கினேன்.

சார்… அவன் சிரித்தான். அதில் ஏதோ கள்ளம் தெரிந்தது.

சொல்லு. அந்தப் பொண்ணு உங்களைத் தேடிச்சுது சார்.

எந்தப் பொண்ணுடா?

அந்த நீலத் தாவணி பாவடை

யார் வரது அவ… என்ன பெயர்? எங்க இருக்கிறா? சொல்லு சொல்லு நான் அவசரப்படுத்தினேன்.

ஆ… ஆ…. ஆர்வமாய் கேட்கிறீங்களா? ஆசையாய்க் கேட்கிறீங்களா?

இரண்டுந்தான் என்று இவனிடம் எப்படிச் சொல்லுவது? நான் ஒன்றுமே சொல்லாமல் மௌனமாய் நின்றேன்.

“என்ன சார் மௌனமாயிட்டீங்க.” வரது தான் என்னை கேட்டான்.

“என்ன வரது யாரோ என்னைத் தேடியதாக நீதானே சொன்னாய். யாரென்று கேட்டேன்? பெயரென்ன என்று கேட்டேன்? இதிலென்ன தப்பிருக்கிறது. சொல்லையில்லையென்றால் விடு அவசியமில்லை” என்றேன் நான்.

நாகராஜா எஞ்சினியரோட இளைய பொண்ணு. இந்த ஊரிலே தான் இருக்கிறா. அல்லிக்குள வீதியில இருக்கிற பெரிய கல்வீடுதான் இருப்பிடம். ஆனால் பெயர் மட்டும் தெரியாது சார்.

சரிசரி அதைவிடு. அவன் சொல்லச் சொல்ல எனக்கு மனசுக்குள்ள பட்டாம்பூச்சி ஊர்வது போல் இருந்தது. சார் அவையும் யாழ்ப்பாணத்தாக்கள் தான்சார். அவன் வேண்டுமென்றே சொல்லிச்சொல்லி என் மனசை அறிய விரும்பினான். என் மனசைத் திறப்பதங்கு நான் என்ன பைத்தியக்காரனா? எனவே வரது கிழவரோடு உனக்கென்ன பிரச்சனை முதல்ல அதைச் சொல்லனப்பா என்றேன் நைஸாக.

அது பெரிய பிரச்சனை சார். அவன் நழுவப் பார்த்தான். நான் விடவில்லை.

பிரச்சனை பெரிசாகட்டும் சிறுசாகட்டும்… நீ சொல்லேன் கேட்கிறது நான்தானே என்றேன்.

ஒருநாள் எங்களின்ர கிணத்துக்குள்ள பூனையொன்று விழுந்து போச்சுது சார். நேரம் இருட்டிப் போனதால முதல் இருந்த ஐயாதான் பக்கத்து வீட்டில கொஞ்சம் தண்ணீர் எடுத்துவா வரது. காலையில தண்ணீரை இறைச்சு விடுவம் என்றார்.

நானும் வாளியை எடுத்துக்கொண்டு போய் தண்ணீ கேட்ட நேரம் அவயளின்ர வாளி கிணற்றுக்குள்ள விழுந்து போட்டுது.

கிழவற்ற மனுஷி மட்டும் தான் வீட்டில இருந்தா. கொழுக்கித் தடி கட்டி வாளியை வெளியே எடுக்க நேரம் போச்சுது.

“கெதியாய்த் தண்ணீரை மெண்டுகொண்டு ஓடு தம்பி” என்று அந்த அம்மா என்னை அவசரப்படுத்திக் கொண்டிருந்தா. எனக்கு அது ஒன்றும் பெரிய விஷயமாய்த் தெரியவில்லை சார். ஆனாலும் ஏனம்மா என்று கேட்டேன்.

“அதெல்லாம் சொல்லக்கூடாதடா தம்பி. என்ர மனுஷனுக்கு ஆரும் வந்தாலும் சரி வாறவை என்னோட கதைச்சாலும் சரி பிடிக்காது.

சரியானதொரு சந்தேகப்பேய்… இப்ப உன்னைக் கண்டால் போதும் சன்னதம் கொண்டாடும். கெதியாய்ப் போடா தம்பி” என்று கெஞ்சினா.

அவவவைப் பார்க்கவே பாவமாய் இருந்தது… “சரி அம்மா” என்று சொல்லிவிட்டு நான் வாளியைத் தூக்கிக்கொண்டு வெளியேறவும் கிழவர் உள்ளே வரவும் நேரம் சரியாய் இருந்தது சார்.

“என்னைக் கண்டதுதான் தாமதம் கிழவன் சன்னதம் கொண்டு ஆடத்தொடங்கிவிட்டுது ஐயா.

என்ன வரது அடிச்சுப் போட்டாரா? விட்டுவிடுவேனா சார்? சும்மா பின்னிடமாட்டேன்.”

“பின்னுவாய் பின்னுவாய். அப்புறம் என்னாச்சுது?”

என்ன ஆகல்லையெண்டு கேளுங்கள் சார். உன்னை யாரட என்ர வீட்டுக்குப் போகச் சொன்னது? ஆம்பிளையில்லாத நேரம் பார்த்துப் பொம்பள பிடிக்கப் போனீயோ? அது இதென்று அசிங்கம் அசிங்கமாகப் பேசத் தொடங்கி விட்டாரு சார். அக்கம் பக்கத்தாரெல்லாம் வேடிக்கை பார்க்கிறாங்க. எனக்கு வெக்கம் ஒரு பக்கம் ஆத்திரம் ஒரு பக்கம் ரொம்ப அவமானமாய்ப் போய்விட்டது. அன்றைக்கே அவரை அடிச்சுத் துவைச்சிருப்பேன் என்ன செய்யிறது. வயசுபோன கிழடு குடிச்சுப்போட்டு வேற கத்;தினதால பேசாமல் வந்திட்டன். அன்றைக்குப் போனவன்தான் அப்புறம் நான் அந்தத் திசைக்கே போறதில்ல சார். இதுதான் நடந்தது என்றான் அவன்.

ஓ! இவ்வளவு நடந்திருக்குதா? இப்போ என்னால இரண்டாந்தரமும் அவமானப்பட்டுப் போனாய்… என்னை மன்னிச்சிடு வரது… இதை நீ முன்னமே சொல்லியிருந்தால் நான் அனுப்பியிருக்கவே மாட்டேன் என்றேன். உண்மையில் அவனைப் பொறுத்தவரை அது ஒரு அவமானமான விஷயம்தானே.

இந்த விஷயத்துக்குப் பிறகுதான் கிழவரை நான் ஆழமாக அவதானிக்கத் தொடங்கினேன்.

வரது சொன்னது சரிதான். கிழவரின் வீட்டில் இருந்து அவருக்கும் அவர் மனைவிக்குமிடையில் அடிக்கடி சண்டை அடிதடிச் சத்தம் கேட்கத் தொடங்கியது.

வரதுவிடம் இது பற்றிக் கேட்டபோது, அவன் சிரித்தான். பிறகு, சார் இவ்வளவு நாளும் நீங்கள் மயக்கத்திலிருந்திருக்கிறீர்கள்போல… இதென்ன புதுமை சார். தினந்தினந்தான் அந்தக் கூத்து அரங்கேறுதே கேட்கிறதில்லையா? என்றான்.

சத்தியமாய் வரது என் றூமில் இருந்தால் புத்தகம் வாசிப்பது, ரி.வி. பார்ப்பது என்று நேரமே போய்விடும். நீ ஹாலுக்குள் தூங்குவதனால் கேட்குதோ என்னவோ. அதுசரி கிழவரின்ர மனுஷி எப்படியடா இளம் பொம்பிளையோ? இது எனது கேள்வி.

சும்மா சொல்லக்கூடாது சார். நாற்பது நாற்பத்தைஞ்சு வயசுதான் இருக்கும். வடிவெண்டால் உண்மையில வடிவுதான்சார்… நீங்கள் ஒருநாளும் காணயில்லையே. அவன் நம்பமுடியாமல் கேட்டான்.

உண்மையில நான் காணயில்ல வரது. கண்டிருந்தாலும் அவரோட மனைவியென்று தெரிய நியாயமில்லைதானே என்றேன் நான்.

நாட்கள் வேகமாகக் கரைந்து கொண்டிருந்தன. அன்றைக்குத் தபாலில் வந்திருந்த கடிதங்களைப் படித்துக் கொண்டிருந்தேன்.

இரண்டு மாசத்தில் என் தாயார் அமெரிக்காவில் இருந்து வரப் போகிறாவாம். வந்த கையோடு எனக்குத் திருமண ஒழுங்கு செய்யப்போறாவாம்.

வரதுவிடம் சொன்னபோது ரொம்ப நல்ல விஷயம் சார். ஊருக்குள்ள அருசல்புரசலா உங்களைப் பத்தியும் ஒரு பேச்சு அடிபடுகிறது சார் என்றான் அவன்…

என்ன வரது? புதுக்கதை சொல்லுறாய்? என்ன பேச்சு? யார் சொன்னாங்க? எனக்கு ஒரு மாதிரியாய் இருந்தது.

ஒன்றுமில்லை சார். பயப்படாதீங்க. நீங்கள் அருமையான மனுஷராம். இந்தப் பெட்டையள்தான் உங்களைக் குழப்புகினமாம் என்றொரு கதை. அவ்வளவுதான். யோசிக்காதீங்க என்றான்.

அப்பாடா மூச்சு வந்தது எனக்கு. “இனிமேல் யார் வந்தாலும் கேற்றை லொக் பண்ணிவிடு வரது” என்றேன்.

ஏன் சார் அந்தப் பொட்டச்சியளைக் கண்டால் இவ்வளவு பயமா உங்களுக்கு… நீலத் தாவணி… அவன் என்னை உசுப்பேற்றினான்.

“ஆளை விடு சாமி. நீலத்தாவணியும் வேண்டாம், பச்சைத் தாவணியும் வேண்டாம். நீ வேலையைப் பாரு. செடிகளுக்கு நீரிறைக்க வேணும். பசளை போட வேணும். களை பிடுங்கவேணும்.”

ஆ… சொல்ல மறந்திட்டேன் சார்…

என்ன சொல்லு?

அந்த நீலப்பாவாடைக் கூட்டத்துக்கு உங்களிடம் தோட்டக்கலை படிக்கவேணுமாம் சார்.

“எனக்காக நீ சொல்லிக் கொடேன்.”

“வந்தால் சொல்லிக் கொடுப்பேன். ஆனால் அவர்கள் உங்களிடம் தானே படிக்கவேணுமாம். சரி என்று சொல்லவா?”

“சொல்லு சொல்லு. அவங்க அப்பா அம்மாவோட வந்தால் கிளாஸ் எடுப்பேன் என்று சொல்லிவிடு.”

“சரி சார். சொல்லிடுறேன்…”

சுரத்தில்லாமல் வார்த்தைகளை விட்டான் அவன்.

அன்றைக்கு வெள்ளிக்கிழமை… நான் கோயிலுக்குப் போயிற்று வாறன் வரது. நான் வரும் வரைக்கும் இங்கேயிரு என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டேன்.

போகும் வழியில் பிள்ளையாரைக் கும்பிட்டுவிட்டு என் இஷ்ட தெய்வமான விஷ்ணு கோவிலுக்குச் சென்றேன். சனக்கூட்டம் பெரிதாக இல்லை. என் தோட்டத்தில் வளர்ந்த துளசி மாலையை ஐயரிடம் கொடுத்துவிட்டு பூசை கண்டு புறப்படும்போதுதான் பார்த்தேன்.

அவள் தேவதைபோல் நின்று கொண்டிருந்தாள். தோழியருக்குப் பதிலாக அப்பாவும் அம்மாவும் கூட வந்திருக்கிறார்கள்போல.

வீட்டுக்குத் திரும்பும்போதுதான் அவர் வந்து கதைத்தார்…. “இத்தனை நாளாக இங்கே வேலை பார்க்கிறீர்கள். ஒரு நாள் கூட உங்களைச் சந்திக்கக் கிடைக்கவில்லை. எப்படித் தம்பி எல்லாம் வசதியாயிருக்கிறதா?”

“பிரச்சனையில்ல. நான் நல்லாயிருக்கிறேன். உங்களைப் பற்றி”

“நான் நாகராஜா மெரெயின் எஞ்சினியராய் கப்பல்ல வேலை பார்க்கிறேன். இவள் என் மனைவி, ஒரு பையனும் பொண்ணுந்தான். மகள் கம்பஸ்க்காக வெயிற் பண்ணிக் கொண்டிருக்கிறாள். வீடு பக்கத்திலதான். ஒரு தடவை வந்திட்டுப் போங்களேன்.”

அவராகவே சொல்லிவிட்டார் கண்டிப்பாக “வருவேன் சார்” என்றேன் நான்.

“இரண்டு மாச லீவில் வந்திருக்கிறன். மகள்தான் உங்களைப் பற்றிச் சொன்னாள். தோட்டமெல்லாம் போட்டிருக்கிறீர்களாம். ஒரு நாளைக்கு வந்து பார்க்கலாம் என்றிருக்கிறன் வரலாமோ?” சிரித்தபடி கேட்டார் அவர்.

“ஓ! ஷ{வர்… கண்டிப்பா வாங்க. சரி தம்பி… நாங்க வாறம்…. வரதுவிடம் கேட்டால் வீடு சொல்லுவான். நான் போறத்துக்கிடையில வாங்க…”

அவர்கள் போய்விட்டார்கள். நான் காலாற நடந்து கொண்டிருந்தேன். நல்ல நிலவு நேரம். குளிர் காற்று முகத்தில் சுகமாகத் தடவியது. ஏனோ என்னையறியாமலே மனசு சந்தோஷத்தில் திளைத்தது.

நீலத்தாவணியை மறக்க முயன்றாலும் முடியவில்லை. அடிக்கடி அவள் என்னைக் குழப்பிக் கொண்டிருந்தாள்.

வீட்டுக்குப் போகும்போது மணி ஏழாகிவிட்டது. வரது வாசலில் காத்துக்கொண்டிருந்தான்.

“சார் அண்ணா வீட்டுக்குப் போயிட்டு ஓடி வாறன். கதவைச் சாத்திக்கோங்க” என்று சொல்லிவிட்டு அவன் கிளம்பிய கையோடு “ஏ.ஐ தம்பி” என்றவாறே என்முன்னே வந்து நின்றார் கண்டுமணிக் கிழவர்.

“அவர் இப்போதெல்லாம் அடிக்கடி வருவதில்லை. எனவே… வாங்க ஐயா என்ன கனநாளாய் இந்தப் பக்கம் உங்களைக் காணயில்ல” என்றேன் நான்.

“எங்க தம்பி. சுருட்டுச்சுற்றி வியாபாரத்துக்குப் போனால் இப்பிடித்தான் நேரம் போயிடும். வந்து படுத்தால் சரி.”

“ஏன் ஐயா இந்த வயசிலையும் உழைக்கவேணுமே? சைக்கிள் உழக்கிறதெண்டால் சும்மாவே. மூன்று ஆம்பிள மக்களும் உழைக்கினம் உதவமாட்டினமோ?”

“நான் நேற்றும் போய் உதவி கேட்டுப்போட்டுத்தான் தம்பி வந்த நான். இவன் மனுஷிக்கு பிறஷர் சோதிக்கவேணும். மாசாமாசம் ஏதும் கொடுங்கடா” என்று கேட்டன்.

“என்ன சொன்னவை?”

“என்னத்தைச் சொல்லுறது தம்பி. அவையளுக்கும் பிள்ளை குட்டியள் இருக்கிறதால ஒரு சதமும் தரேலாதாம். கடைசியில நூறு நூறு ரூபாயைத் தந்து போட்டு முதியோர் மடத்தில போயிருக்கட்டாமென்கிறானுகள் பாரன்…”

கிழவர் பாவம். நான் பரிதாபப்பட்டேன்.

“இப்ப என்ன இருட்டு நேரத்தில வந்திருக்கிறியள்” என்றேன்.

“இல்லையெண்டு சொல்லாமல் ஒரு ஐநூறு ரூபாய் கைமாத்தாய்க் கொடெணையப்பு. மனுஷியை ஆசுப்பத்திரிக்குக் கூட்டிக்கொண்டு போகவேணும்” என்றார் அவர்.

“அது பிரச்சனையில்லை ஐயா. குடிக்கிறத்துக்கெண்டால் தரமாட்டன்” என்றேன் நான்.

“ச்சீ… உண்மையாய் உன்னாணைச் சொல்லுறன். காலையில போகவேணுமாம் கூட்டிக்கொண்டு போகத்தான் கேட்கிறன்.”

“அவ தனியப் போகமாட்டாவே?”

“இவளவையை நம்பலாமே தம்பி? நான் ஒரு சதத்துக்கும் நம்பன். பொம்பிளையளை நம்மட கண்காணிப்பில வைச்சிருக்க வேணும் ராசா.”

கிழவர் மேல் எனக்குக் கோபம் பற்றிக் கொண்டு வந்தது. ஆனாலும் அடக்கிக் கொண்டேன். “உது சரியில்லை ஐயா. அவ யார் உங்கட மனுஷிதானே? உங்களை நம்பி வந்தவவை இத்தனை வயசுக்குப் பிறகும் இப்படிச் சந்தேகப்படலாமா ஐயா.”

“அது சொல்ல முடியாது தம்பி. ஆள் கொஞ்சம் சிவப்பும் வடிவுமாயிருக்கிறாள். முதலும் ஒருத்தி எனக்குத் துரோகம் செய்தவளல்லே. இவளையெப்படி நம்புறது. அதுதான் கூட்டிக்கொண்டு போட்டுக் கையோட கூட்டி வரவேணும்… காசு தருவியோ?”

“அது பிரச்சினையில்லை ஐயா… ஆனால் நீங்கள் உங்கட எண்ணங்களை மாத்திக்கொள்ளவேணும். ஒரு நாளும் சந்தேகப்படக்கூடாது. அதுவும் கட்டின பொண்டாட்டியைச் சந்தேகப்பட்டால் வாழ்க்கையில என்ன சுகம் ஐயா கிடைக்கும்” என்றேன் நான்.

“அதென்னமோ தம்பி நான் கடுகளவும் நம்பன்… பெடியளும் பார்… பெற்ற தகப்பனென்று என்னை மதிக்கிறானுகளே. இனிமேல் தங்களிட்டை வரக்கூடாதெண்டு சொல்லிப்போட்டானுகள் பாரன்.”

கிழவரின் புலம்பல் சகிக்க முடியவில்லை. நான் ஐநூறு ரூபாயைக் கொடுத்தேன். வாங்கிக் கொண்டு போனவர் மறுபடியும் திரும்ப வந்தார்.

“என்ன ஐயா… என்னாச்சு?” நான்தான் கேட்டேன்.

“தம்பி இந்தப் பூப்புடுங்க வாற பெட்டையளோட கவனமாயிரெணை… ஊரில நல்லாய்க் கதைக்கமாட்டினம். இவங்களையெல்லாம் நம்பக்கூடாது. ஓடும் புளியம்பழமுமாய்ப் பேசவேணும் மோனே” எனக்கு அறிவுரை கூறிவிட்டு நடக்கத் தொடங்கினார். எனக்கு வாய்விட்டுச் சிரிக்கவேண்டும்போல் இருந்தது.

இது நடந்து இரண்டு மாதங்கள் ஓடிவிட்டது. சொன்னபடி அம்மா வந்துவிட்டா. வந்தது முதல் எனக்குப் பொண்ணு பார்ப்பதில்தான் முனைப்பாயிருந்தாள்.

இந்த வரது நானில்லாத வேளையில் எதையாவது உளறிக் கொட்டிவிட்டானோ என்னவோ. அம்மா அடிக்கடி அந்த நீலத்தாவணியைப் பற்றித்தான் விசாரிக்கத் தொடங்கினாள்.

கடைசியில் என்ன நடந்ததோ எப்படி நடந்ததோ… ஒன்றுமே தெரியவில்லை. திடீரென்று ஓர் நாள் அந்த எஞ்சினியர் குடும்பத்தினர் தங்கள் மகளுக்கு என்னை மாப்பிள்ளை கேட்டு வந்துவிட்டனர்.

எங்கம்மாவுக்கு ரொம்ப சந்தோஷமாய்ப் போய்விட்டது. உடனேயே சம்மதம் கூறிவிட்டா.

இப்போதெல்லாம் நானும் அவளும் பேசிப் பழகிக் காதலிக்க ஆரம்பித்துவிட்டோம். அதனால் தானோ என்னவோ என் தோட்டத்தில் பூப்பறிக்கும்போது யாருமே அனுமதி கேட்பதில்லை.

இந்தச் சங்கதியெல்லாம் கண்டுமணிக் கிழவருக்குத் தெரிந்துவிட்டது போலும் திடீரென்று ஓர் நாள் என் வீட்டுக்கு ஓடி வந்தவர். “என்ன தம்பி ஊருக்குள்ள ஏதோ எல்லாம் பேசிக்கொள்ளுறாங்கள். உண்மையா தம்பி” என்று என்னைக் கேட்டா.

என்ன விஷயம் என்று சொன்னால்தானே ஐயா எனக்கு விளங்கும் என்றேன் நான்.

“உனக்கும் இஞ்சினியர் மகளுக்கும் கலியாணம் நடக்கப் போகுதாமே? அதைத்தான் கேட்கிறேன்.”

“சரி இப்போ அதுக்கென்ன ஐயா?”

பாத்தியோ நான் சொன்னன். எப்பிடி மாப்பிளை பிடிச்சிட்டாளவையென்று விளங்கியிருக்குமே.

“நீங்கள் நினைப்பது போல அவையள் என்னை மயக்கி மாப்பிள்ளையா எடுக்கையில்ல ஐயா. நான்தான் அவளை விரும்பினன். அவ்வளவு தான். இனி இந்தக் கதையை விடுங்கோ.”

“இவளவையை உள்ள விடாதையெண்டு நான் அப்பவே சொன்னேன்தானே. நீதான் கேட்கையில்ல. பூப்பறிக்கிறன் பூப்பறிக்கிறன் என்று உன்ரை மனசையுமல்லே பறிச்சுப் போட்டாளவை.”

“அதைப்பற்றி நீங்கள் ஏனையா கவலைப்படுகிறியள். உதுகளைப் பற்றி யோசித்து உங்கட மனசைக் குழப்பாதீங்கோ. பிறகு சொல்லுங்கோ என்ன புதினங்கள்? குடும்பம் எப்பிடி ஓடுது?” பேச்சைத் திசைதிருப்புவதற்காக வேண்;டுமென்றே அவரைச் சீண்டினேன் நான்.

“என்னடா மோனே உப்புச் சப்பில்லாத வாழ்க்கைதான். என்ரை மனிசியைத்தான் கண் ஒப்பறேசனுக்காக வாட்டில விட்டுப்போட்டு வந்த நான் விடியப்போக வேணும் இதுதான் புதினம்” என்றார் அவர்.

“எட தனிய விட்டிட்டு வந்திட்டியள்? அதிசயமாயிருக்குது.” மறுபடியும் வேண்டுமென்றே கேட்டேன்.

“ஆஸ்பத்திரியல்லே அதுவும் பொம்பிள வார்ட்டில நிற்கிறதுக்கு விடுவினமே? மாலையாகினா எனக்குங் கண்பார்வை சரியான மங்கலடா தம்பி அதுதான் வந்திட்டன். விடியத்தான் நேரத்துக்கெழும்பி ஓடவேணும்.”

நானும் அவரும் கதைக்கத் தொடங்கி ஒரு பத்து நிமிடம்தான் ஓடியிருக்கும். கண்டுமணி மாமோய் கண்டுமணி மாமோய் இஞ்ச ஓடியாருங்கோவன். ஒரு விஷயம் சொல்லுறன் என்று வாசலில் நின்று யாரோ சத்தம் வைத்தான்.

யாராயிருக்கும்? சன்னல் திரையை விலத்திப் பார்த்தேன். யாரென்று புரியவில்லை. எனவே ஐயா உங்களைத்தான் யாரோ கூப்பிடுகினம். போய்ப் பாருங்கோ என்றேன்.

“யாரும் சுருட்டுக் கடன் கேட்டு வந்திருப்பினம். பேசாமல் இரடாப்பா” என்றாரவர்.

கூப்பிட்டுப் பார்த்தவன் கடைசியில் என்னையே கூப்பிடத் தொடங்கினான்.

“என்னப்பா என்ன வேணுமுனக்கு? கொஞ்சம் அதட்டலாக நான் கேட்டதும் ஒன்றுமில்லை ஐயா. கண்டுமணி மாமாவையொருக்கா வரச் சொல்லுங்கோ. அவசர விஷயமொண்டு சொல்லவேண்டும்” என்றான் அந்த மனுஷன்.

“போங்கையா என்ன விஷயமெண்டு விசாரிச்சுப் போட்டு வாங்கோ” என்று பிடிவாதமாக மனுஷனை போக வைத்தேன்.

கிழவர் போய் ஒரு நிமிடந்தான் ஓடியிருக்கும். “ஐயோ நான் ஏமாந்து போனேனே. கடவுளே உனக்குக் கண்ணில்லையா? கடவுளே” என்று ஏதோ புலம்பினவர். “தம்பி நான் வாறனடா அப்பு. நாளைக்கு வாறன்” என்றவர் ஓடத் தொடங்கினார்.

வந்தவனை கூப்பிட்டு “என்னப்பா என்ன விஷயம்? அந்தாள் தலைதெறிக்க ஓடுது. என்னாச்சுது?” என்று விசாரித்தேன்.

“அதொண்டுமில்லை ஐயா அமிர்தமக்கா யாரோ ஒரு ஆளோட சைக்கிள்ல போறா. அதுதான் சொன்னனான்.”

“லூசு மனுஷன் ஆரோட போறாள் எவனோட போறாள் என்று விசாரிச்சுப்போட்டுப் போறான்” என்றான் அவன்.

“நீ ஏனப்பா சொன்ன நீ பாவம் கண்ணும் புகைச்சல் என்று சொன்ன மனுஷன் இப்ப எங்க முடடி மோதப் போகுதோ தெரியாதடா” என்று கவலைப்பட்டேன்.

அன்றைக்குப் போன மனுஷன்தான் அதற்குப் பிறகு வரவேயில்லை.

அமிர்தம் அம்மா வீட்டுக்கு வந்து இரண்டு நாளாச்சுது. கணவரின் வருகைக்காகக் காத்திருந்துவிட்டு அந்தம்மா திடீரென்று என் வீட்டுக்கு வந்தாள். ஐயா, கிழவரோட பெண்டாட்டி வாறாள் பாருங்க என்றான் வரது.

நான் வெளியே சென்று வரவேற்றேன்.

வரது சொன்னது சரிதான் இந்த வயசிலும் இளமையும் அழகும் மனுஷியைத் முப்பது வயதுக்காரிபோல் காட்டியது. அத்தனை அழகாக இருந்தாள் அந்தம்மாள்.

“சொல்லுங்கம்மா என்ன விஷயம்? இல்ல ஐயா, இரெண்டுநாளாய் அவரைக் காணையில்ல… உங்களுக்கேதும் தகவல் தெரியுமோ என்று கேட்க வந்தேன்” என்றாள் அவள்.

அழுது சிவந்திருந்த கண்களோடு பரிதவித்தவளைப் பார்க்கவே பாவமாய் இருந்தது.

“இல்லையேம்மா. இரண்டு நாட்களுக்கு முன்னால் ஆறுமணிபோல வந்தவர் யாரோ ஒரு பையன் வந்து நீங்கள் யாரோ ஒருவருடன் சைக்கிளில் போவதாகச் சொல்லவும் உங்களைத் தேடிக்கொண்டு வந்தவர் என்பது மட்டுந்தான் எனக்குத் தெரியும்” என்றேன் நான்.

“ஐயோ கடவுளே அவ்வளவும் போதும் சந்தேகப்பேய் எங்கெல்லாம் தேடியலையுதோ? நான் என்ன செய்வேன்” என்று வேதனைப்பட்டாள்.

“அப்ப நீங்க யாரோட போன நீங்களம்மா?” விசாரித்தேன் நான்.

“ஆசுபத்திரியால ரிக்கற்று வெட்டிப்போட்டினம் ஐயா. பொழுதாய்ப் போட்டுது. இருட்டிப் போனதால என்ர சின்னம்மா பையன்தான் விடிய பஸ் ஏத்திவிடுறன் என்று கூட்டிக்கொண்டு போனவன் அதுக்குள்ள பாருங்களன் – அந்தச் சந்தேகப் பிராணிக்கு வந்த அவசரத்தை.” சொல்லியபடியே வீட்டை நோக்கிப் போனாள் அவள்.

அரைமணித்தியாலம் சென்றிருக்கும் வீட்டு வாசலில் பொலீசார் நின்றனர். ஒப்பாரிச்சத்தம் வேறு கேட்டது. நான்தான் போய் விசாரித்தேன். கண்டுமணிக்கிழவர் எரிந்துகொண்டிருந்த உமிக் குவியலில் விழுந்து கருகிச் செத்துப் போனாராம் என்றார்கள்.

கடவுளே இதென்ன கொடுமை – எல்லாம் கிழவனுக்குப் பிடிச்ச சந்தேகத்தின் முடிவுதான் என்பதைப் புரிந்துகொண்டேன் நான். “மாலைக் கண்” என்று தெரிந்தும் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டதன் விளைவுதான் இந்தச் சாவு என்று நினைத்தபோதுதான் ஒரு கணம் ஆடிப் போனேன்.

இந்தக் கிழவனுக்கு இவள் எப்படி வாய்த்தாள் என்று வரதுவிடம் கேட்டபோது தான் சொன்னான் -அவளோட அப்பா கடன் வாங்கின காசுக்காக இவளை அவருக்குக் கட்டி வைச்சிட்டாராம் ஐயா. அவருக்குக்கிடைத்த அதிஷ்டம்தான் – இந்த அமிர்தவல்லி என்றான் அவன்.

“அப்ப அவளைப் பொக்கிஷமாகப் பார்க்கவேண்டியது தானே வரது” என்றேன்.

“எப்பிடி ஐயா? முந்தினவளும் ஓடிப்போய் விட்டாள். இவளும் ஓடிப்போய் விடுவாளோ என்ற பயந்தான். கட்டுப்பாட்டை இறுக்கிப்போட்டு வதைத்தார்.”

மனுஷன் இருக்கும் வரைக்கும் நாய் பூனைபோல் இருந்தவர்கள். இன்றைக்குச் செத்து ஒருவருஷப் பூர்த்தியை என்னென்னமோ சொல்லி சிரத்தையோடு ஆராதிக்கிறார்களாம். இதுதான் உண்மை. கிழவரின் சந்தேகத்தால் அவர் வாழ்க்கையே அழிந்துவிட்டதே! வேதனையோடு அந்த அழைப்பிதழை மறுபடியும் படித்தேன் நான்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *